Sunday, June 16, 2013

ஜெமோ - தினகரன் கவர் ஸ்டோரி

தினகரன் வெள்ளி மலரில் வரும் சிவாண்ணனின் (கே. என். சிவராமன் / பதிவுலகில் பைத்தியக்காரன்) எழுத்துக்களை முடிந்த மட்டும் தவறவிடாமல் படித்துவிடுவது வழக்கம். இந்தமுறை ஜெயமோகனைப் பற்றி “14 மலையாளப் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதும் தமிழ் எழுத்தாளர்” என்ற கவர் ஸ்டோரி வெளியாகப் போகிறது என்பதால் ஆவலுடனும், பிரியத்துடனும் பக்கங்களைப் புரட்டினேன். உண்மையில் ஓர் எழுத்தாளனுக்கு இதுபோன்ற கௌரவம் அளிக்கப்படுவது சந்தோஷத்தையே அளிக்கின்றது. இந்தியர்களின், தமிழர்களின் அல்லது வட்டார ஆளுமைகளை – மொழி சார்ந்தும், இனம் சார்ந்தும் தொடர்புபடுத்தி தூபம் போடுவதே வெகுஜன இதழ்களின் தலையாய வேலை. அப்பொழுது தானே வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள். இந்த சூத்திரத்திலிருந்து தப்புவதற்கு “தினகரன் – வெள்ளி மலர்” மட்டும் விதிவிலக்கா என்ன?

2007 –ஆம் ஆண்டு Sify.com (தமிழ்) தீபாவளி மலரில் வெளியான மாலன் நாராயணின் “அசட்டுப் பெருமைக்கு ஓர் அளவு கிடையாதா?” என்ற கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது. இந்தியர்களின் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் உளவியல் கூறினை இந்தக் கட்டுரையில் ஆதாரப் பூர்வமாக எழுதியிருப்பார்.

“அமெரிக்கா மாகாணத்திலோ, கியூபாவிலோ, சிங்கப்பூரிலோ, இங்கிலாந்திலோ” – இந்திய வம்சாவளியினர் யாரேனும் குறிப்பிடும்படியான அதிகாரத்திற்கு வந்தாலோ அல்லது அதற்க்கு நிகரான சாதனையை செய்தாலோ – இந்திய மீடியாக்கள் அவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு களியாட்டம் ஆடுவதின் அபத்தம் குறித்து அலசி இருப்பார்.

படிக்க: http://jannal.blogspot.in/2007/11/blog-post.html

அல்லா ரக்கா ரகுமான் ஆஸ்கார் விருது பெற்ற போது கூட எல்லா மீடியாக்களும் இதையே தான் செய்தன. ஒரு நிருபர் கமலஹாசனிடம் மைக்கை நீட்டி “ஏ. ஆர். ரகுமான் ஆஸ்கார் விருது பெற்றதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்கிறார்.

“நம்ம நாட்டுக்கு வந்து அவங்க எடுத்த ஆங்கிலப் படத்துல நம்ம ஆளு வேல செஞ்சதுக்காக (ரகுமானுக்கு) இந்த ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதுவுமில்லாமல் ரகுமான் ஆஸ்கர் விருது கொடுத்து கௌரவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பிற்காக அதே ஆஸ்கர் விருது பெறுகிறார். நம்மாட்கள் ரசூல் பூக்குட்டியை பின்னுக்குத் தள்ளி ரகுமானை முன்னுக்கு இழுத்து செய்தியாக்கினார்கள். ஏனெனில் மீடியாக்களில் பிரபல ப்ராடக்ட்’கள் தானே ஜனரஞ்சகமாகப் பேசப்படும். (இவர்கள் இருவருக்கும் முன்பே சத்ய ஜித்ரே - ஏதோ ஒரு பிரிவின் கீழ் சிறப்பு ஆஸ்கர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.) ரசூல் பூக்குட்டி விருதுபெற்ற இருபது நிமிடங்கள் கழித்துத் தான் ரகுமான் விருது கொடுத்து கௌரவிக்கப்படுகிறார். அடிப்படையில் இசையமைப்பாளருக்குக் கீழ் பணிபுரியும் ஓர் ஊழியனாகத் தான் ஒலிகலப்பு செய்யும் தொழில்நுட்பக் கலைஞனை நம்மவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளனை விட பலமடங்கு முக்கியத்துவம் வாய்ந்தவன் ஒலி வடிவமைப்பாளன். ஒலி வல்லுனர்கள் ஃபைனல் மிக்ஸ் செய்யாமல் எந்தத் திரைப்படமும் வெளியில் வர சாத்தியமே இல்லை. (ஃபிலிம் இன்ஸ்டிடியூட் எதிலும் இசைக்கான ஒரு தனிப் பிரிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை).

பார்க்க: http://www.cinemablend.com/new/Oscar-Presentation-Order-Revealed-12100.html

ஆகவே ஜெயமோகனின் இந்த கவர ஸ்டோரியையும் ஜஸ்ட் லைக் தட் என்ற ரீதியில் கடந்து சென்றிருக்கலாம். என்றாலும் சில விஷயங்களைப் பொதுவில் விவாதத்திற்கு வைத்தால் தான் என்ன? என்று தோன்றியது. ஆகவே இதனை எழுதுகிறேன். கேணி சந்திப்பில் தான் ஜெயமோகனை முதன்முறையாக நேரில் சந்தித்தேன். சந்திப்பின் துவக்கத்திலேயே அழுத்தமாக ஒரு விஷயத்தை முன் வைத்தார். “தமிழ், தமிழ் எழுத்தாளர், தமிழினம்” என்ற அடையாளங்களுடன் தான் இங்கு பேச வந்திருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால், “நீங்கள் எல்லோரும் என்னை மன்னிக்கணும்...!?” என்ற தோரணையுடன் தான் பேசினார். முதல் வரிசையில் கே.என். சிவராமனும் அமர்ந்திருந்தார். அவர் சொல்லியதிலும் உண்மை இருக்கிறது தானே! ஜெமோ ஆங்கிலத்தில் சில கட்டுரைகள் எழுதி இருக்கிறார். மலையாளத்திலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார். மலையாளம் அவருடைய சொந்த மொழியும் கூட. தமிழில் சொல்லவே வேண்டாம். “புத்தகங்கள், இணையம், சினிமா” என்று எழுதித் தள்ளுகிறார். அப்படியிருக்க ஜெமோ-வை “தமிழ் எழுத்தாளர்” என்ற அடைப்புக் குறிக்குள் அடக்குவது கொஞ்சம் நெருடலாகவே இருக்கின்றது. இதனை மீறித்தான் கவர ஸ்டோரி சொல்ல வரும் விஷயத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது.மேலே கொடுக்கப்பட்டுள்ள பல தமிழ் படங்களிலும் வசனம் எழுதியவர், வர்த்தக ரீதியில் தோல்விகண்ட ‘கடல்’ படத்தின் திரைக்கதையை மணிரத்னமும் ஜெயமோகனும் சேர்ந்துதான் எழுதியிருக்கிறார்கள். மெட்ராஸ் டாக்கீஸின் ஆதாரப்பூர்வ தகவல்கள் அதைத்தான் தெரிவிக்கின்றன. (வேண்டுமெனில் டைட்டில் கார்டை பார்த்துக்கொள்ளுங்கள்.) இங்கு தேசிய விருது பெற்ற படமான “நான் கடவுள்” திரைப்படத்தை நினைவு கூற வேண்டியதும் அவசியம். இந்தப் படத்தின் வசனங்கள் முழுவதையும் ஜெயமோகன் மட்டுமே எழுதவில்லை. ஹிந்தி வசனங்களை யார் எழுதினார்கள் என்பது தெரியாது. ஆனால் மலையாள வசனங்கள் குறைவாகவே வந்தாலும், அவற்றை எழுதியது இசை விமர்சகர் ஷாஜி என்பது ஊரறிந்த விஷயம். “நீர்பறவை” திரைப்படத்தில் கூட வசனப் பங்களிப்பில் சீனு ராமசாமியின் பெயரையும் சேர்த்தே பார்த்ததாக ஞாபகம். 

ஊர் கூடித் தேரிழுப்பது போன்ற வேலை தான் சினிமா. மேலும் ‘சினிமா மொழி வேறு, இலக்கிய மொழி வேறு’ என்பது சினிமா பரிச்சியம் உள்ள எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இரண்டும் வேறு வேறு ஊடகங்கள். ஓர் எழுத்தாளனுக்கு 10% வேலைதான் சினிமாவில் இருக்கும். குறைந்த சதவீதம் தானே என்று குறைவாக மதிப்பிட முடியாது என்பதும் உண்மையே. இப்படிப்பட்ட பங்களிப்பைத் தான் ஜெயமோகன் சினிமாவில் செய்துகொண்டு வருகிறார். எல்லோரையும் போலவே ‘சில தோல்விகள், சில வெற்றிகள், சில தேசிய விருதுகள்’ என வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்டவர் மலையாள சினிமாவில் கால் தடம் பதிப்பதைத் தான் வெள்ளி மலரில் சிவாண்ணன் சிலாகித்து எழுதியிருக்கிறார். அதுவும் 14 திரைப்படங்களுக்கு எழுதுகிறார் என்பது தான் விசேஷக் காரணம். இந்தப் பட்டியலில் அடங்காத 4 தமிழ்த் திரைப்படங்கள் வேறு இருக்கின்றது. மலையாளத்தில் கட்டுரை எழுதும் ஒருவர், மலையாளப் படங்களுக்கு வசனம் எழுதுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது?(கன்னடத்தில் ஒரு வார்த்தை கூடத் தெரியாமல், கன்னட மெகா சீரியலுக்கு பா. ராகவன் தமிழில் வசனம் எழுதுகிறார். அதனை அவர்கள் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து கொள்கிறார்கள். பா ராகவனை வேண்டுமெனில் தமிழ் எழுத்தாளர் என்று முத்திரை குத்தலாம். தமிழைத் தவிர வேறந்த மொழியிலும் அவர் எழுதுவதில்லை.)

ஒரு படத்தின் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டால், அதன் பிறகு இயக்குனருக்கு க்ரியேட்டிவாக எல்லா வேலையும் முடிந்து விடுகிறது. அதன்பிறகு கிரியேட்டிவான மேஸ்திரியாகத் தான் அவர் இயங்க வேண்டி இருக்கும். 14 மலையாளப் பட இயக்குனர்களும் முழு ஸ்கிரிப்ட் எழுதும் பொறுப்பை ஜெயமோகனிடம் விட்டுவிட்டால் – அவர்களுடைய பங்குதான் அதில் என்ன? ஓர் இயக்குனரோ அல்லது இரண்டு இயக்குனரோ இது போன்று வேலை செய்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த சினிமா சமூகமே இதுபோன்று இயங்குவது மலையாள சினிமா கலைஞர்களின் கற்பனை வறட்சி மற்றும் அடிப்படை உழைப்பு சார்ந்த சந்தேகங்களை எழுப்புகிறது.

அய்யம் புரிபட ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் எனில், எப்பொழுதும் போலத் தான் ஜெயமோகன் சினிமாவில் வேலை செய்யப் போகிறார். ஆனால் மீடியாவிர்க்கு ஏதேனும் விஷயம் வேண்டுமே. அவர்களுக்குக் கிடைத்த அவலாக ஜெமோ பயன்பட்டிருக்கிறார். மீடியாவிலிருந்து வந்திருப்பவர்களிடம் பேசக் கிடைத்த வாய்ப்பை ஜெமொவும் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார். 


/--துண்டு துண்டான காட்சிகளை இணைத்து திரைக்கதையா மாத்துறாங்க...--/

தமிழ் சினிமாவில் காலங்காலமாக இருக்கும் ஸ்டோரி டிஸ்கஷன் பற்றியும் ஜெமோ தன்னுடைய பாணியில் நக்கலடித்திருக்கிறார். தமிழின் எல்லா விஷயங்களையும் கொஞ்சம் கூட யாசனையின்றி ஜெமோவால் எப்படித்தான் பழித்துப் பேச முடிகிறதோ தெரியவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட மலையாளப் படங்கள் அத்தனையும் ஸ்டோரி டிஸ்கஷன் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் தானா? காட்சிகளைத் துண்டு துண்டாக இணைக்கும் விஷயத்தைப் பற்றியும் சொல்லுகிறார். சினிமா என்பதே காட்சிகளை துண்டு துண்டாக வெட்டி ஓட்டுவது தானே. அதுவுமில்லாமல் துண்டாடப்பட்ட நிகழ்வுகளின் சுவாரஸ்யத் தொகுப்புகள் தானே ஒய் சினிமாவே...! அந்த ப்ராசசிங்கிற்கு ஏற்றால் போலத் தானே திரைக்கதை யோசிக்க வேண்டும். யாருக்கும் காணக் கிடைக்காத ஹாலிவுட் மெதேட் ஆக்டிங்கையும், இதர நுட்பமான விஷயங்களையும் அவதானிக்கும் சூழல் கிடைத்த ஜெமோவிற்கு – ஹாலிவுட்டிலும் இது போன்ற டிஸ்கஷன் இருக்கிறது என்று தெரியாத. உலகிலுள்ள எல்லா மொழி சினிமாவிலும் இந்த முறை இருப்பது தெரியாதா? அதெப்படி சுலபமாக அந்த காலத்து தயாரிப்பு நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுப் பேசுகிறார் என்று தெரியவில்லை.

கேரளா கஃபே என்ற படம் பத்து சிறுகதைகளை எடுத்துக் கொண்டு, அதனை பத்து இயக்குனர்கள் – ஒரு ஹோட்டலை மையமாக வைத்து மலையாலத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மம்முட்டி போன்ற பெரிய பெரிய நடிகர்கள் கூட அதில் நடித்திருந்தனர். இதோ ஹிந்தியில் கூட உலகப் புகழ்பெற்ற திரைப்படக்காரரான அனுராக் காஷ்யப் ஒரு பரிசோதனை முயற்சியை செய்கிறார். பல இயக்குனர்கள் பிட்டு பிட்டாக ஒரு படத்தினை எடுக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாதகாலமாக அதன் டிஸ்கஷன் சென்றுகொண்டிருக்கிறது. ஆரண்யகாண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாவும் அதில் ஒருவர். (இது போன்ற முயற்சியில் இயங்கும் பலரும் கலைப்படம் மற்றும் கமர்ஷியல் படம் சார்ந்த ஆளுமைகள் தான்.)

ஒரு கான்செப்ட் எடுத்துக்கொண்டு அதனை பேசிப்பேசி திரைக்கதையாக மாற்றுவது இந்தியா முழுவதும் எடுக்கப்படும் சினிமாவில் இருக்கும் ஒரு விஷயம் தானே. அதெப்படி ஆதிகால தயாரிப்பு நிறுவனங்களில் கதை இலாகாவுடன் மட்டும் ஜெயமோகன் ஒப்பிடுகிறார். நம்ம ஊர் நாளைய இயக்குனர்களை நக்கலடிக்கும் இதுபோன்ற செலப்ப்ரிட்டி இயக்குனர்கள் தான் – மலையாளம் மற்றும் ஹிந்தியில் பின்பற்றப்படும் அதே விஷயங்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதையும் நுட்பமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது.  


சினிமா ஆரம்பத்தில் யாருடைய ஆதிக்கத்தில் இருந்தது என்பது வினோதம் நிறைந்த வரலாறு. கேமரா கண்டு பிடிக்கப்பட்ட புதிதில் – கேமராவை இயக்கத் தெரிந்தவன் (Camera Man) தான் இன்டிபென்டன்ட் ஃபிலிம் மேக்கர் போல சுற்றி வந்திருக்கிறான். செல்வந்தர்கள் தான் கேமராவை வாங்கிப் பயன்படுத்த முடியும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆகவே கேமராவைத் தூக்க ஓர் உதவியாளன் வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறான். பின்னர் அந்த உதவியாளன் கற்பனை நிறைந்தவனாக இருக்கப் போக, உதவியாளன் இயக்குனராக அவதாரம் எடுக்க – கேமரா மேன் அவன் சொல்லும் வேலையை செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறான். இந்திய சினிமாவின் ஆரம்பத்தில் கூட, பல ஆங்கில தொழிநுட்பக் கலைஞர்களும் இப்படித் தான் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். பணத்திற்காக அவர்களும் வந்து வேலை செய்து கொடுத்துவிட்டுச் சென்றது வரலாறு. (இங்கிருந்து வெளிநாடு சென்று தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு வந்து சினிமா எடுத்தவர்களும் உண்டு.)

பின்னர் இயக்குனர்கள் – தமது பெயருடன் “கதை, திரைக்கதை, வசனம், இசை” அத்தனை துறைகளையும் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் கலாச்சாரமும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலங்கள் உண்டு. (சொல்ல மறந்த கதை என்ற தங்கர் பச்சன் எடுத்த படத்தில் “கதை” என்று யாருடைய பெயரைப் போடுகிறார்கள். பரதேசி படத்தில் கதை என்ற பிரிவில் யாருடைய பெயரைப் போடுகிறார்கள்.) போலவே எழுத்தாளர்களும், கவிஞர்களும் தன்னுடைய பெயருக்குப் முன்னால் “கதை, திரைக்கதை, வசனம்” ஆகியவற்றை போட்டுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் போல. அதற்கு ஜெயமோகனும் விதிவிலக்கா என்ன? எல்லோரும் மனிதர்கள் தானே!

ஏதோ தமிழன்னு சொல்லி யாராச்சும் ஒருத்தர் உலகத்தில் பிரபலமாக சுற்றி வந்தால் நமக்கெல்லாம் பெருமை தானே. ஏனெனில் நாமும் தமிழன் தானே....!

குறிப்பு: “நான் கடவுள்” – திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது ஊரறிந்த விஷயம். “கதை”-க்கான கிரெடிட்டில் ஜெமோ-வின் பெயரும் அதில் வருகிறது. அகோரிகளை தவறாக சித்தரித்த அந்தப் படத்திற்கு தேசிய விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள். தீவிர இந்துத்துவாவாக அறியப்படும் ஜெமோ – பாலாவுடன் கருத்தளவில் முட்டி மோதி வெளியில் வராமல் – கடைசி வரை எப்படி வேலை செய்தார்? எந்த விதத்தில் சமரசம் செய்துகொண்டார்.

ஓம்கார் சுவாமிகளின் நான் கடவுள் விமர்சனம்:

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_15.html

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_17.html

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_9628.html

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_19.html

(நண்பர்கள் அவசியம் இந்தச் சுட்டியை படிக்க வேண்டும். விவாதத்தை வேறு தளத்தில் நகர்ந்த அது உதவும்.)

 

No comments:

Post a Comment