Wednesday, June 26, 2013

ஃபிலிம் காட்டும் ஃபிலிம் இஸ்ட்டிடியூட்

“அண்ணா, கவர்மென்ட் ஃபிலிம் இஸ்ட்டிடியூட்ல சேரப்போறேண்ணா” என்றான் என்னுடைய கிராமத்தில் வசிக்கும் ஒருவன்.

“உனக்கு ஏன்டா இந்தக் கேடுகெட்ட புத்தி?” என்றேன்.

“அண்ணே... அங்க படிச்சா ஸ்கோப் இருக்குமாங்ண்ணே?” என்றும் கேட்டான்.


சென்ற வருடத்தின் ஒருநாள் தரமணி திரைக்கலூரிக்குச் சென்றிருந்தேன். உச்சி வெயில் கொளுத்திய மதிய நேரம். குடிப்பதற்கு ஒரு வாய் தண்ணீர் கூட இல்லை. வியர்த்து நனைந்ததில் கசகசப்பாக இருந்ததால் முகம் கழுவலாம் என்று தற்செயலாக பாத்ரூம் பக்கமாக ஒதுங்கினேன். ஒரு குழாயிலும் தண்ணீர் வரவில்லை. கக்கூஸ் சுத்தமாக இல்லை. இந்த ஹாஸ்டலுக்கு சிறைச்சாலையே தேவலாம் என நினைத்துக் கொண்டேன். வெளியில் சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து மொத்தக் கல்லூரியையும் சுற்றிப் பார்த்தேன். சொல்லொன்னா துயரம் மனதில் சூழ்ந்தது. கல்லூரி சிதிலமடைந்திருப்பது கூட எனக்கு இரண்டாம் பட்சம் தான். குடிப்பதற்கும், சுத்தப்படுத்திக் கொள்வதற்கும் கூட தண்ணீர் இல்லாத சூழல் என்னுடைய ரத்தக் கொதிப்பை ஏற்றியது. ஆகவே ஜூனியர் விகடனுக்கு தெரியப்படுத்திவிட்டேன். அவர்கள் கல்லூரியின் தவறையும், கவனக் குறைவையும் சுட்டிக்காட்டிவிட்டு “மொக்கை காலேஜ்” என்று தலைப்பிட்டுவிட்டனர். விகடன் கவரேஜ் கல்லூரி நிர்வாகத்தையும், அதன் தலைப்பு மொத்த மாணவர்களையும் ஒருசேர  கொதிப்படையச் செய்துவிட்டது. (ஜூனியர் விகடன் கவரேஜ் செய்த பிறகு ஹாஸ்டலில் ஆக்குவா பில்டர் தண்ணீர் வைத்து மாணவர்களின் தாகத்தைத் தனித்தார்கள். என்றாலும் வாட்டர் கேன்களுடன் அதே கல்லூரி வளாகத்தில் பிள்ளைகள் மீண்டும் அலைவதை சமீபத்தில் பார்க்க முடிந்தது.)

கனவுத் தொழிற்சாலையில் காலடி எடுத்துவைக்க நினைக்கும் எனது கிராமச் சிறுவனின் ஆழ்மன வேட்கைக்கு பின்னாலுள்ள யதார்த்தத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தின் குக்கிராமத்திலிருந்து பல சிறுவர்களும் இந்த ஆசையில் சென்னைக்கு வருகிறார்கள். சினிமா எல்லா தேசங்களிலும் காலூன்றி சமூக விழுமியத்தையும் கலாச்சாரத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் சினிமாவின் விதை முளைத்து வேர்விட்டதிலிருந்து, இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது வரையிலான நீண்ட கால வரலாற்றினை உற்று கவனித்து ஆராயும் அதே வேலையில், சினிமா சார்ந்த மத்தி\ய மற்றும் மாநில அரசுகளின் கல்வி சார்ந்த நிறுவனங்கள், திரைப்படக் கல்லூரிகள் – நீண்ட நெடிய நூற்றாண்டு கால சினிமா  வரலாற்றில் எதுபோன்ற பங்கினை ஆற்றியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.

மாநில அரசின் பொதுத்தேர்வு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஒரு பள்ளியில் 50% மாணவர்கள் 
மட்டும் தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். மீடியாக்காரர்கள் சும்மா இருப்பார்களா? பெற்றவர்களும் வாய் மூடிக்கொண்டு மௌனிப்பார்களா? இதே அளவுகோளில் சினிமா சார்ந்த பள்ளிகளை நூல் வைத்து அளக்க முடியாது தான். என்றாலும் அரிய துறை என்பதால் தான் பல கோடிகளை வாரி வழங்கி – ஆர்வம் இருக்கும் மாணவர்களின் கலையார்வத்தை வளர்த்தெடுக்க – அரசு திரைப்படக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அப்படியிருக்கையில் “அந்த அரசுக் கல்லூரி - மாணவர்களின் திறனை உண்மையிலேயே வளர்தெடுக்கிறதா?” என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டி இருக்கிறது. 

இந்தியாவிலேயே முதன்முதலில் துவங்கப்பட்ட திரைப்படக் கல்லூரிகளில் – சென்னை திரைப்படக் கல்லூரியும் ஒன்று என தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். “தொழின்முறையாக பயன்படுத்தப்படும் உயர்தர கேமரா முதல், எடிட்டிங் டெஸ்க், ஏசி ஷூட்டிங் ப்ளோர், கிரேன், டிராலி, சப்தத்தை பதிவு செய்யும் உயர்தர ஒலிப்பதிவுக் கருவிகள், இன்னும் இன்னும் எத்தனையோ” என சகல வசதிகளும் சென்னை திரைப்படக் கல்லூரியில் இருக்கின்றன. கேமராவின் விலை சில கோடிகள் மதிப்பு வாய்ந்தவை. “இயக்குதல், ஒளிப்பதிவு, ஒலிவடிவமைப்பு, படத்தொகுப்பு, பதப்படுத்துதல்” என ஏறக்குறைய ஐந்து பிரிவுகள் இந்தக் கல்லூரியில் இருக்கின்றது. ஒவ்வொரு பிரிவிலும் ஏறக்குறைய 14 நபர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆக, பதினாலு தனி குழுக்கள் ஒரு டீமாக பிரிக்கப்படுகிறார்கள். இந்தக் குழுக்கள் இறுதியாண்டில் செய்முறைத் தேர்வாக ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். பன்னிரண்டு பேரில் ஏழு நபர்கள் தான் தன்னுடைய குறும்பட செய்முறையை நிறைவு செய்கிறார்கள். மற்றவர்கள் என்ன ஆகிறார்கள் என்றே தெரியவில்லை.

இன்னொரு விஷயம் சார்ந்த ஐயமும் எனக்கிருக்கிறது. “தரமணி திரைக்கல்லூரி ஊழியர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?” என்று தெரியவில்லை. போலவே காலியாக உள்ள இடங்களுக்கும் ஆட்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்  மர்மமாகவே உள்ளது. "இந்தக் கல்லூரியில் யார் யார் வேலை செய்கிறார்கள்? அவர்களுடைய தகுதி என்ன?" போன்ற எந்தத் தகவல்களும் கூட இணையத்தில் இல்லை. ("Junior Sound Assistant" - என்ற போஸ்டிங்கிற்கு ஒரு வேக்கன்சி இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். எம்ப்லாய்மென்ட் ஆபீசில் பதிவு செய்திருந்தால் தான் இந்த வேலை கிடைக்கும். இந்த கலூரியில் படித்த மாணவர்களே கூட வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் அரசாங்க வேலையின் பின்னணி அரசியல் உலகம் அறிந்த ஒன்று என்பதையும் மறுப்பதற்கில்லை.)

சமீபத்திய ஒருநாளில் திரைக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். இயக்குனர் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவர் பகிர்ந்த விஷயம் திகிலளிப்பதாக இருந்தது. இயக்குனர் பிரிவில் துறைத் தலைவராக இருப்பவர் TNPSC தேர்வெழுதி, அரசாங்க ஊழியராக வந்தவராம். அவர் தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படித்தவராக இருப்பார் எனில் பரவாயில்லை. சினிமா சார்ந்து ஆராய்ச்சி செய்யும் மாணவராக இருந்தாள் கூடப் பரவாயில்லை.  அப்படியில்லாமல் கணக்குப் பதிவியலோ அல்லது உயிரியலோ படித்து, அரசுத் தேர்வெழுதி இந்த வேலைக்கு வந்திருப்பார் எனில் மாணவர்களின் நிலையை நினைத்தால் சங்கடமாகத் தான் இருக்கிறது. (‘ஆந்திரா, மலையாளம், தமிழ்’ ஆகிய மூன்று மொழி மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்வெழுதலாம்.)

“சிலபஸ்ல ஸ்க்ரீன் ப்ளே, வசனம், கதை உருவாக்கம் எல்லாம் வருமே” என்றேன் அவரிடம்.

“ஆமா... நாங்க அப்பப்ப எழுதுவோமே...” என்றார்.

“யாராச்சும் எழுத்தளரை உங்களுடன் விவாதிக்க கல்லூரி நிர்வாகம் அழைத்துக் கொண்டு வருமா?” என்றேன்.

“இல்லியே... அப்படி எல்லாம் நாங்க யாரையும் உள்ள விட மாட்டோம்.” என்றார்.

“சரி... பைனல் இயர் குறும்படம் எடுக்கணும்னா என்ன ப்ரோசிஜர்?” என்றேன்.

“இதுதான் கதைன்னு எழுதி... எல்லா டிபார்மென்ட் கிட்டயும் பர்மிஷன் வாங்கணும்... அவ்வளோதான்...” என்றார்.

திரைக்கல்லூரியின் பழைய ஸ்டுடியோ தளங்கள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப் பட்டு மென்பொருள் துறை நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. டைடல் பார்க், ராமானுஜம் டெக் போன்ற கட்டிடங்கலெல்லாம் அதற்க்கு உதாரணம். சமீபத்தில் கூட ஜப்பானிஸ் கார்டன் சுத்தமாக இடிக்கப்பட்டு சமதளமாக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. உண்மையிலேயே இது நல்ல கல்விக்கூடம் தானா? இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த இஸ்ட்டிடியூட் இருக்கும் இடமே கூட அடையாலமற்றுப் போகலாம். தொழில் நுட்ப பூங்காவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக கல்லூரியின் இடங்கள் தாரை வார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த முதல் இங்கு படித்த பெருந்தலைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கல்லூரியின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள சுமார் இத்தனை கிலோ மீட்டருக்குள் தான் படப்பிடிப்பும் நடத்த வேண்டும் என்ற ஏராளமான கட்டுப்பாடுகள் கூட மாணவர்களுக்கு இருக்கின்றன. இதுபோன்ற யதார்த்த சிக்கல்களை மனதில் இருத்தித் தான் மாணவர்களும் கதையைத் தேர்வு செய்து எழுதவேண்டி இருக்கின்றது.

2009 –ல் கல்லூரியில் நுழைந்து 2012 -ல் வெளிவரும் 14 டீம் மாணவர்களும், 14 குறும்படங்களைக் கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? அவ்வளவு கூட வேண்டாம். 10 குறும்படங்கள் என்ற அளவில் வெளி வந்திருந்தால் கூட ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால், இதுவரை ஐந்து குறும்படங்கள் தான் வெளிவந்திருக்கின்றன. கோவா உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதால் தான் அதுவும் தெரிய வருகிறது. மற்றவர்களுடைய வேலைகள் பாதியில் நிற்கின்றன என்பது துருதுஷ்டம். ஏன் இந்த நிலைமை? தொடர்ந்த பல வருடங்களிலும் இதுதான் நிலைமை. பலகோடி ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்ப உபகரணங்கள் இருந்தும் – அதனை நேர்த்தியாக பயன்படுத்தி திறமையை வெளிக் கொணர்வதில் மாணவர்கள் ஏன் சுணக்கம் காட்டுகிறார்கள்?

அரசாங்கம் சிலபல லட்சங்களை ஒவ்வொரு வருடமும் இந்த மாணவர்கள் குறும்படம் எடுத்து, அதன் மூலம் சினிமா பழக – மானியம் வழங்குகிறது. (ஏறக்குறைய 15 லட்ச ரூபாய் என்ற ஆதாரமில்லாத தகவல் கிடைத்திருக்கிறது.) ஆர்வம் இருந்து சினிமா படிக்க வரும் மாணவர்கள் – நேர்முகத் தேர்வு வைத்துத் தானே சேர்க்கப்படுகிறார்கள். இருந்தும் அவர்கள் பாதியில் விலகிக் கொள்வது ஏன்? சென்ற ஆண்டு மாணவர்களின் ஐந்து குறும்படங்கள் மட்டுமே கோவா உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருக்கின்றன. மற்ற மாணவர்களின் குறும்படங்கள் என்ன ஆனது?

மத்திய அரசின் பிராட்காஸ்டிங் அமைச்சகப் பிரிவின் கீழ் வரும் புனே திரைப்படக் கல்லூரியில் பட்டதாரிகள் மட்டுமே எந்த ஒரு பிரிவிலும் சேர்ந்து படிக்க முடியும். அங்கு படிப்பவர்களுக்கும் BFT சான்றிதழ் தான் வழங்குகிறார்கள். கோடை கால சிறப்பு வகுப்பாக “சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும்?” என்ற டிப்ளமோ கோர்ஸ் மட்டுமே அங்கிருக்கிறது. இந்தக் குறுகிய கால படிப்பிற்கு மட்டுமே அவர்கள் டிப்ளோமா சர்டிபிகேட் வழங்குகிறார்கள். நண்பர் கரு அண்ணாமலை இந்த வருடம் அதில் சேர்ந்து படிப்பதற்காகச் சென்றிருக்கிறார். ஆனால் தமிழக அரசின் பிராட்காஸ்டிங் அமைச்சகப் பிரிவின் கீழ் வரும் சென்னை எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கூட சேர்ந்து படிக்கலாம். ஆனால் எல்லா மாணவர்களுக்கும் டிப்ளமோ சான்றிதழ் மட்டுமே வழங்குவார்கள். இயக்குனர் பிரிவு மாணவர்கள் மட்டும் ஏதேனும் கல்லூரியில் படித்த இளநிலைப் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஆனால், இயக்குனர் பிரிவு மாணவர்களுக்கும் டிப்ளமோ சான்றிதழ் தான் வழங்குகிறார்கள். இதென்ன லாஜிக் என்றே தெரியவில்லை. +2 முடித்த மாணவர்கள் – ‘இலக்கியம், ஓவியம்’ என்று கலை சார்ந்து படிக்கும் பொழுது BA, BFA போன்ற இளநிலைப் பட்டங்களைக் கொடுக்கிறார்கள். இவர்கள் மேலே ஏதாவது படிக்க நினைத்தாலும் நேரடியாக முதுநிலை பட்டப்படிப்பு படிக்கலாம். ஆனால் சினிமா பயிலும் மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் மட்டுமே கொடுக்கிறார்கள். ஆகவே பலரும் படிப்பைத் தொடராமல் பாதியில் விட்டுவிடுகின்றனர். வேலைக்கான நேர்முகத்திற்குச் செல்லும் இடத்தில் கூட, இவர்கள் விஸ்காம் படித்த பட்டதாரி மாணவர்களுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது. வேலைக்கான உத்தரவாதம் இல்லாத படிப்பு என்பதால், இளநிலைப் பட்டத்தை வழங்கினால் ஏதேனும் மேற்படிப்பு படித்தாவது தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள்.

இந்த லட்சணத்தில் “அனிமேஷன் & கிராபிக்ஸ்” சார்ந்த மூன்றாண்டு டிப்ளோமா படிப்பை இந்தாண்டு முதல் துவங்க இருக்கிறார்களாம். கடவுளே...!

இவ்வளவு ஓட்டைகள் ஓடிசல்கள் இருக்கும் மேம்போக்கான ஒரு ஸ்தாபனத்தில் “சினிமா படிக்க சேரப்போறேண்ணா...?” என்று சொல்லும் ஒருவனிடம் என்னத்தைச் சொல்ல? பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

எம்ஜிஆர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் இந்நாள் & முன் நாள் மாணவர்களே. சினிமா ஆர்வலர்களே. உங்களின் மௌனத்தைக் கலைத்து ஓரிரு வார்த்தைகளை எனக்காகச் சொல்லுங்களேன்.

http://www.thehindubusinessline.in/2002/08/03/stories/2002080301931700.htm
http://www.hindu.com/2009/07/05/stories/2009070558850200.htm

2 comments:

  1. Highly pathetic. ஒரு காலத்தில் நான் இதற்குள் தினமும் உலவியிருக்கிறேன். (2004). டைடல் பார்க்வாசிகள் லஞ்ச் முடிந்தவுடன் உலவும், இளைப்பாறும் இடமாக உபயோகப்பட்டு வந்தது. அப்போதே சிதிலமாகத்தான் கிடந்தது. பிறகு ராமானுஜம் டெக் பார்க் வந்தவுடன் பெரும்பகுதி கபளீகரம் செய்யப்பட்டு காம்பவுண்ட் கட்டி பிரிக்கப்பட்டது. திரைப்படக் கல்லூரிக்கு இப்படி ஒரு நிலைமை வருத்தத்தை அளிக்கிறது.

    ReplyDelete
  2. என்ன செய்வது சித்ரன். திரைப்பட கல்லூரிக்கு 70 ஏக்கர் நிலம் இருந்தது என்று ஹிந்து நாளிதழ் எழுதி இருக்கிறார்கள். அவற்றில் பெரும்பகுதி நிலங்கள் - தொழில்நுட்ப பூங்காவிற்காகவும்,இதர கல்வி நிறுவனங்களும் சுரண்டிக் கொண்டன. வருத்தம் அளிக்கும் விஷயம் தான் இது.

    ReplyDelete