Thursday, June 12, 2014

ஒரு நடிகை பேசுகிறாள் – ரோஹிணி

இரண்டு வருடங்களுக்கு முன்பு, பெசன்ட் நகர் “சந்திரலேகா ஸ்பேசஸ்” அரங்கில் நவீன நாடகம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. சீக்கிரமே சென்றுவிட்டதால் ஸ்பேசஸ் அரங்கின் முன்பிருக்கும் சிமென்ட் குட்டிச்சுவரில் உட்கார்ந்துகொண்டு, தொலைதூரக் கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளைச் சுடிதாரில் பக்கத்தில் ஒரு பெண்மணியும் உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நேரம் கழித்து தான் உரைத்தது அவர் “நடிகை ரோஹிணி” என்பது. அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லை. சிநேகத்துடன் மெல்லிய புன்னகையை வீசினார். நானும் சிரித்துவிட்டு அங்கிருந்து கொஞ்சம் விலகிச் சென்று அமர்ந்துகொண்டேன். பிரபலங்களுக்கு நம்மால் கொடுக்கக் கூடிய ஒரே நல்ல விஷயம் ப்ரைவசி தானே...! ஏற்கனவே சில புத்தக வெளியீடுகளில் அவரை தூரத்திலிருந்து பார்த்ததுண்டு. எனினும் கடந்த ஜனவரியில் ஏற்பாடாகியிருந்த “தி ஹிந்து லிட் ஃபார் லைப்” நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக நீண்டநாள் கழித்து ரோஹிணியை மறுபடியும் பார்க்க நேர்ந்தது. அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசியதும் அப்பொழுதுதான்.

தமிழ் பெண் கவிஞர்களும் நண்பர்களுமான “சல்மா, அனார், ஸர்மிளா சையத்” ஆகியோர் ஓர் அமர்வின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டதால் நானும் சென்றிருந்தேன். ஸர்மிளா சையத் ஒரு கேமராவைக் கொடுத்து “பிரபு... கொஞ்சம் போட்டோஸ் எடுத்துக் கொடுங்களேன்” என்றார்கள். எனக்கும் நிகழ்வினை ஒலிக் கோப்புகளாக ரெக்கார்ட் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், நிகழ்வினை கவனிக்கப் பணியமர்த்தப் பட்டிருந்த கல்லூரி மாணவர்கள், “எங்களுக்குக் கொடுத்துருக்குற இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இப்படிங்க சார்... நீங்க இங்க உட்காரக் கூடாதுங்க (தரையில) சார். நீங்க இங்க நிக்கக் கூடாதுங்க சார்” என்று படுத்தி எடுத்தார்கள்.

“யோவ்... நீங்க கூப்பிட்டு இருக்குற சீஃப் கஸ்ட் தான்யா போட்டோ எடுக்கச் சொன்னாங்க. இங்க உக்காந்தாத் தான்யா ரெக்கார்ட் பண்ண முடியும்...” என்று சொல்லிப் பார்த்தேன். “ஹூஹூம்... நாங்களா விடுவோம்... எங்களுக்குக் கொடுத்திருக்க இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இப்(பி)டீங் சார்... நீங்க இங்க உட்காரக் கூடாதுங்(க) (தரையில) சார். நீங்க இங்க நிக்கக் கூடாதுங்(க) சார்” என்று படிய பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடினார்கள். “போங்கடா... நீங்களும் உங்களோட எழவு ஈவன்டும்” என்று தூரப்போய் நின்றுகொண்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் ரோஹிணியைச் சந்தித்து “ஏங்க... இந்தப் பசங்க இப்படிப் படுத்தி எடுக்குறாங்க? பேஜார் பண்றாங்களே” என்றேன் எரிச்சலுடனும், கோபத்துடனும்.

“போயெட்ஸ் வேல்யூ அவங்களுக்கு என்னங்க தெரியும்...? நீங்க என்கிட்டே சொல்லி இருந்திங்கன்னா நான் அவங்கக்கிட்டப் பேசி உங்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பேனே...!?” என்றார். உண்மையில் வாய் வார்த்தைக்குக் கூட அப்படிச் சொல்லியிருக்கலாம். எனினும் அடுத்தவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மை எல்லோரிடமும் காணக் கிடைப்பதில்லை. ரோஹிணியிடம் அது நிறையவே இருக்கிறது. 

“மகளிர் மட்டும்” திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் பிணமாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார். கூடவே ரோஹிணியும் நடித்திருப்பார். நாகேஷ் அளவிற்கு ரோஹினியின் நடிப்பு இந்தக் காட்சியில் சிலாகிக்கப் படவில்லை. நினைத்துப் பார்க்கையில் ரோஹிணியின் அந்தப் பாத்திரம் தான் மனதில் பசுமையாக நிற்கிறது. நாகேஷுக்கு இணையாக அவரும் அதில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.

தமிழோ, ஆங்கிலமோ ரோஹினியின் உச்சரிப்பு ஸ்படிக சுத்தமாக இருக்கும். அவருடைய மொழியாளுகையும் அசத்தலாக இருக்கும். தமிழிலும், ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் வெளியாகக் கூடிய நவீன இலக்கியங்களைத் தேடிப் படிக்கிறார். இலக்கியப் பரிட்சயம் ரோகினிக்கு நிறையவே இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளப் திரைப்படங்களில் அரிதாரம் பூசியிருக்கும் இவர் - பச்சைக்கிளி முத்துச்சரம் உட்பட மூன்று திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் தியேட்டர் ஆர்டிஸ்டும் கூட. டப்பிங் ஆர்டிஸ்ட்டாக மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களுக்கு ரோஹிணிதான் தொடர்ந்து குரல் கொடுக்கிறார். தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என வெவ்வேறு தளங்களில் இயங்கிய ரோகினி தற்போது “அப்பாவின் மீசை” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். (இயக்குனர் சேரனின் தயாரிப்பு என்று நினைக்கிறன்.) கேணி சந்திப்பில் என்ன பேசப் போகிறார் என்ற ஆவல் நிறையவே இருந்தது. “இப்போ... இங்க பேசப் போற விஷயங்கள வேற எங்கயும் பேச முடியாது... அதனால அந்த விஷயங்கள இங்க பேசுறதுதான் சரியாவும் இருக்கும்...” என்று பாகிர்வைத் துவங்கினார்.

“ரெண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் தற்செயலாக அமைகிறது. ஒண்ணு, நாம ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது மூன்றாம் பாலினராகவோ பிறப்பது. இன்னொன்னு நாம பொறக்கற எடம். நேரமும் கூட அதை நிர்ணயிக்குது. நான் பெண்ணாகவும், நடிகையாகவும் ஆனது தற்செயலாக நடந்த விஷயங்கள். அதற்காக நிறைய வருத்தப்பட்டிருகிறேன். I was made to feel bad. சின்னச் சின்ன விஷயங்கள்ல அத புரிஞ்சிக்குனு இருக்குறேன்.” என மர்ம நாவலின் முதல் அத்யாயம் போலவே ரோஹினியின் ஆரம்பப் பேச்சு அமைந்தது. எனினும் திறந்த புத்தகம் போலத் தனது வாழ்வின் முக்கியமான தருணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உயிர்மை புத்தக வெளியீட்டில் (2005) எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தை வெளியிட, ரோகினி பெற்றுக் கொண்டிருக்கிறார். புத்தகத்தை வெளியிட்ட சுஜாதா “உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா...?” என்று கேட்டிருக்கிறார். படிச்சவங்க, அறிவாளிங்க முதல் சாமான்ய மக்கள் வரை “நடிகைன்னா இப்படித்தான் இருப்பாங்க... அவங்க படிக்கவே மாட்டாங்க” என்ற ஸ்டீரியோ டைப் பார்வை இருக்குதில்லையா, அதைப் பற்றித் தான் இன்னைக்குப் பேசலாம்னு இருக்குறேன். அசோகமித்திரன் எவ்வளோ பெரிய ரைட்டர், அவர் எழுதிய ‘கரைந்த நிழல்க’ளாக இருக்கட்டும், “மானசரோவர், தண்ணீர்” என எல்லா நாவல்களிலும் நடிகைகளை அவர் சித்தரித்திருக்கும் விதம் ஏற்புடையது அல்ல. அவர் மட்டும்தானென்று இல்லை. நடிகைகளைப் பற்றி எழுதிய எல்லோருமே ஒரு ஸ்டீரியோ டைப் மனப்பான்மையில் தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பில் ‘நல்ல போலீஸ், கெட்ட போலீஸ்’ என்று சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், நடிகை எனில் அவளுடைய சித்தரிப்பு ஸ்டீரியோ டைப்பில் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். கரைந்த நிழகள் நாவலின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் உள்ள குறையாக எனக்குத் தோன்றுவது இதுதான்.

மகளிர் தினத்தில் பேசுவதற்காக ஒரு கல்லூரிக்குப் பேச அழைத்திருந்தார்கள். ஒருமணி நேரம் “பெண்ணியம்” பற்றிப் பேசுவதற்கு ஏற்றார்போல தாயார் படுத்திக்கொண்டு சென்றிருந்தேன். நிகழ்ச்சியில் பேசி முடித்ததும் அவர்களிடம் கேட்டேன்: “நீங்க எதாச்சும் சொல்றதா இருந்தா சொல்லலாம்.”

“மேடம்... நீங்க எப்போ பேசுறத நிறுத்துவிங்கன்னு எதிர்பார்த்தோம்... எங்களோட பஸ்சுக்கு டயம் ஆகுது” என்றார்கள். ஒரு கல்லூரிக்கு எட்டு மணிநேரம் பயணம் செய்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். “இனிமே ப்ரிப்பர் பண்ணிட்டுப் போறதெல்லாம் வேஸ்ட். அடியன்ஸ்கிட்ட எதாச்சும் கேட்டுட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பேசலாம்” என “உங்களுக்கு எதைப் பத்திப் பேசணும்” என்று கேட்டேன்.

“அச அதிகம் வச்சி...” பாட்டுக்கு டேன்ஸ் ஆடுங்க என்றார்கள். என்னிக்கோ நான் ஆடுன ஒரு பாட்டுக்கான டேன்ச மேடையில ஆடச் சொன்னங்க. நாம பரிமாறிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்குது இல்லையா?

“நடிகைன்னா இப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு இதுமட்டும் தான் தெரியும்” என்று எல்லோரும் நினைகிறார்களோ? என்று பலநேரங்களில் நினைத்துக் கொண்டதுண்டு. அதனால் வருத்தமும் அடைந்ததுண்டு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தாலும், பதினைந்து வயதில் – என்னை விட இருபது வயது அதிகமுடைய நடிகருக்குக் கதாநாயகியாக ஒரு படத்தில் ஒப்பந்தமானேன். அந்த வயதிற்கே உரிய குழப்பங்கள், அந்த நடிகருடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது உண்டான குழப்பங்கள் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். “இந்தப் படத்திற்குப் பிறகு நீ இன்டஸ்ரியில இருந்த... நான் என் தொழிலையே விட்டுடறேன்” என புலியூர் சரோஜா கூட சொல்லியிருக்கிறார். டெக்னீஷியஸ் எல்லோரையும் அவ்வளோ படுத்தி இருக்கிறேன். சிறுவயதிலிருந்தே நடிக்க வந்துவிட்டதால், பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிக்கறதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் தான் இருந்தேன். மலையாள இயக்குனர் பரதன், பாலுமகேந்திரா போன்றவர்களுடன் வேலை செய்தபோதுதான், நடிப்பின் மீது ஆர்வம் வந்தது.

முதல் ஐந்து வகுப்புகள் வீட்டிலிருந்தே படித்தேன். ஒருவர் வீட்டிற்கு வந்து தெலுங்கு கற்றுக் கொடுப்பார். தமிழ் சரியாகப் பேச வராது. தேவையான விஷயங்கள தெலுங்கில் எழுதி வைத்துப் படிப்பேன். சான்ஸ் கேட்டுத் தேவரைப் பார்க்கச் சென்றபோதும், நான்கு வரிகள் எழுதிக் கொடுத்தார்கள். அதைத்தான் அவரிடம் சொன்னேன். அவருக்கும் என்னைப் பிடித்திருந்தது. ஒரு தெலுங்கு படத்துல கிருஷ்ணர் வேஷத்துல நடிச்சிருந்தேன். அந்த படத்த தேவர் பார்த்திருக்காரு. முருகன் வேஷத்துல நடிக்கறதுக்கு என்னோட முகம் சரியா இருக்கும்னு நெனச்சாரு போல. அதனால முருகர் வேஷத்துல நடிக்கறதுக்கு சேன்ஸ் கெடைச்சுது. அப்போ எல்லாம் லைவ் சவுண்ட் ரெக்கார்ட் பண்ணுவாங்க. “முருகன் அடிமை” என்ற படத்துல நடிக்க மூணு மாசம் டயம் இருக்குது. அதுக்குள்ளே தமிழ் சொல்லிக் கொடுங்க என்று தேவர் சொன்னார். அப்படித்தான் தெலுங்கு, தமிழ்ன்னு மத்த பாடங்களையும் ஆள வச்சி சொல்லிக் கொடுத்தாங்க. அப்பாவுக்குத் தமிழில் ஆர்வம் இருந்ததால், எனக்கும் தொடர்ந்து சொல்லிக் கொடுத்து ஆர்வத்தை ஏற்படுத்தினார். அப்படித்தான் தமிழ் மீதும் ஆர்வம் வந்தது. ஆர்வம் வந்து மேலும் மேலும் படிக்க ஆரம்பித்ததும் தான் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. வாழ்க்கையையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நாகேஷ காமெடியனா, குணச்சித்திர நடிகரா உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், நாகேஷ் தெலுங்குல ஒரு படம் டைரக்ட் செய்திருக்காரு. அந்தப் படத்துல நான் தான் சைல்ட் ஆர்டிஸ்டா நடிச்சேன். நாகேஷப் பொருத்தவரை அழுவர சீன்ஸ் வந்தா கிளிசரின் போட விடமாட்டாரு. காட்சிய சூட் பண்றதுக்கு முன்னாடி கூப்புடுவாறு, கண்ணையே உத்துப் பார்க்கச் சொல்லுவாரு. சில நொடிகள் அவரோட கண்ணையே பார்த்துட்டு இருந்தால் போதும். எங்கிருந்துதான் வரும்ன்னு தெரியாது. அடக்கமுடியாம அழுக பொத்துக்குனு வரும். உடனே சீன சூட் பண்ணிடுவாங்க. அழுவர சீன்ஸ் வந்தால், ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் எக்ஸ்ட்ரா கெடைகும்றதால எனக்கும் சந்தோஷமா இருக்கும். ரொம்பநாள் கழிச்சி தியேட்டர் நாடகங்களல்ல நடிக்கும் போது தான், நாகேஷ் சொல்லிக் கொடுத்த இந்த டெக்னிக்க அங்க யூஸ் பன்றத பார்த்தேன். அப்போதான் ஒண்ணு புரிஞ்சிது... எனக்கே தெரியாம நான் நெறைய ஸ்கூலுக்கு போயிருக்கேன். நான் யாருகிட்ட எல்லாம் நடிக்க போனேனோ அவங்ககிட்ட இருந்து நெறைய விஷயங்களைக் கத்துட்டு இருந்திருக்கேன்.

உலகம் எனக்கு அறிமுகமான பத்திரிகைகள் மூலம் தான். ஆனால் பத்திரிகைகள் நம்மைப் பற்றி “கவர்ச்சிக் கண்ணி, அது இதுன்னு” எழுதுறாங்க. ஆரம்பத்துல இதுல இருந்தெல்லாம் எப்படி தற்காத்துக் கொல்றதுன்னு தான் தோணுச்சி. பெண்னென்றாலே இரண்டாம் குடிகளாகத் தான் பார்கிறார்கள். அதனினும் தரம் குறைந்த இடத்தைத் தான் நடிகைகளுக்குக் கொடுக்கிறார்கள். அறிவார்த்த சமூகமான எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் இருக்கும் சூழலிலும் இது போன்ற விஷயங்களை நேரடியாகவே எதிர்கொண்டேன். நம்முடைய சமூகம் ஸ்டீரியோ டைப் சமூகமாகவே தான் இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணம். ஏதாவது பிரச்சனையில் பெண் கைதானால் “அழகி கைது” என்று பத்திரிகைகள் எழுதுகிறார்கள். “அப்போ அழகன் என்ன ஆனாரு?. அத பத்தி எல்லாம் எழுத மாட்டாங்க.”

இதையெல்லாம் யோசித்தபோது, ரெண்டு தற்செயலா நடந்த விஷயத்துக்காக I was made feel bad-னு சொல்லி இருந்தேன் இல்லையா?. Then, I took a decision. I was not going to feel bad. மாறாக நான் கூச்சப் படப்போவதில்லை. பெண்ணாகப் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன். அதிலும் நடிகையாகப் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் என்று என்னை நானே உந்திக் கொண்டேன். எனினும் பிரக்ஞையுடன் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் மலையாளத்தில் நான் செய்த படங்கள் தான். மலையாள நடிகர்களான வேணு, கோபி போன்றவர்களுடன் நடித்தது பெரிய அனுபவம். இயக்குனர் பரதனுடன் வேலை செய்த பிறகுதான் சினிமாவையே நேசிக்கக் கற்றுக் கொண்டேன் என்று கூட சொல்லலாம். அடிப்படையில் பரதன் ஓர் ஓவியர். அவருடன் பணியாற்றுவது பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு ஒப்பானது. அவங்க உங்களுக்குள்ள இருக்குற கிரியேடிவ் டேலண்ட வெளியைக் கொண்டு வருவாங்க. தமிழில் பாலுமகேந்திரா போன்றவர்களுடன் பணியாற்றிய போதும் அதுபோல உணர்ந்ததுண்டு.

நீங்க எவ்வளோ தான் தெறமையானவங்களா இருந்தாலும், நெறைய விஷயங்களைக் கத்துக்கிட்டாலும் – ஒரு நடிகைன்னா சொசைட்டியில மரியாத இருக்கறது இல்ல. இதையெல்லாம் நெனச்சி ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டப்பட்டதுண்டு. இவற்றிலிருந்தெல்லாம் என்னை மீட்டெடுப்பதற்கு துணையாக இருப்பது கலையும், இலக்கியமும், நண்பர்களும், தியேட்டரும் (நாடக ரங்கம்) தான். நான் இப்படி இருக்கேன்னு எதையும் சொல்லத் தெரியல. ஆனால் எதையெல்லாம் செய்வதில் எனக்கு இன்பம் கிடைக்கிறதோ, அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன். மற்றபடி நான் பேசியதில் ஏதாவது தவறிருந்து சுட்டிக் காட்டினால் அதைப் பற்றிப் பேசலாம். “இல்ல... தமிழ் ரைட்டர்ஸ் நல்ல படியாகவும் எழுதி இருக்காங்கன்னு மேற்கோள் காட்டினிங்கன்னா கொஞ்சம் சந்தோஷமா இன்னிக்கி வீட்டுக்குப் போவேன்.” என்று முடித்துக் கொண்டார்.

தண்ணீர் நாவலின் ஜமுனா கதாப்பாத்திரத்தை முன்வைத்தும், அரந்தை நாராயணின் இரண்டு படைப்புகளை, சினிமா நடிகையை மையப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு நாவல்களைக் குறித்தும் ஞாநி தனது பார்வைகளை முன்வைத்தார். அதில் ஒரு நாவலை ஞாநி தொலைக்காட்சித் தொடராகவும் எடுத்திருப்பதாகப் பகிர்ந்துகொண்டார். ஞாநி தனது அறிமுக உரையில் ரகுவரனைப் பற்றிய எந்தக் கேள்விகளையும் கேட்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். “ஐயையோ... ரகுவ பத்தி பேசறதுக்கு நெறைய விஷயங்கள் இருக்கு. தாராளமா கேட்கட்டும்” என்று ரோகினி உடனே ஞாநியின் ஆட்சேபனையை மறுத்துக் கூறினார். எனினும் யாரும் ரகுவரனைப் பற்றி இறுதிவரை வாய் திறக்காமல் இருந்தனர்.

“ஒரு படத்துல கமிட் ஆனவுடன் ரகுவரன் நிறைய ஹோம் வொர்க் செய்யவாறேமே...? அதப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்?” என்றார் ஒளிப்பதிவாளரும், ஆவணப்பட இயக்குனருமான அருள்மொழி.

ரோஹிணி: ஐயோ ஃபென்டஸ்டிக் கொஸ்டின்... ரகுவபத்தி கேக்கவே இல்லையேன்னு நெனச்சேன். ஒவ்வொரு படத்துக்கும் அவர் பண்ற ஹோம் வொர்க் பயங்கரமா இருக்கும். மொதல்ல ஒரு படத்துல கமிட் ஆனா காஸ்டியூம்ஸ் வாங்க ஆரம்பிப்பாருங்க. அதெல்லாம் பைத்தியக்காரத் தனமா இருக்கும். ஒவ்வொரு மெட்டீரியலையும் பார்த்துப் பார்த்து செலக் செய்வாரு. ஒவ்வொரு கடையா தேடி அலையுவோம். கேரக்டருக்கு ஏத்தா மாதிரி கண்ணாடி வேணும்னா... ஒவ்வொரு பழைய கண்ணாடி இருக்குற கடையா தேடி அலையிவாறு. இதெல்லாம் அவரோட ப்ராசஸ்னு புரிஞ்சிக்கிறதுக்கே ரொம்ப காலம் ஆயிடுச்சு. இதெல்லாம் கேரக்டர்குள்ள போறதுக்கான அவரோட ப்ராசஸ்.

அதே மாதிரி அவரோட போஷர்ன்ஸ் மொத்தத்தையும் சூட் பண்ணிட்டுத்தான் லஞ்சுக்குப் போவாரு. ரெண்டுமணி, மூனுமணி, ஆறு மணின்னு பார்க்கவே மாட்டாரு. இத்தனைக்கும் அவருக்கு டயபடிக் இருந்துச்சி. அல்சர் வேற இருந்துச்சு. இது மாதிரி இருக்குற ஒடம்ப வச்சிட்டு அவ்வளோ மெனக்கெடுவாறு. வெறும் டீயையும் சிகரட்டையும் வச்சிக்குனு ஒட்டுவாறு. சில டைரக்டர்ஸ் அத புரிஞ்சுக்குனு லன்ச் டயம் முடியறதுக்குள்ள அவரோட போஷர்ன்ஸ்ச சூட் பண்ணிடுவாங்க. ஆனா எல்லாரும் அது மாதிரி இருப்பாங்கன்னும் சொல்ல முடியாதுங்க இல்லிங்களா.

அதே மாதிரி ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி ரெண்டு மூணு முறை டையரக்டர்ஸ்ச கூப்பிட்டுப் பேசுவாரு. அவங்களுக்கு அவ்வளோ இன்புட்ஸ் கொடுப்பாரு. அவங்களுக்கும் அந்த பாயின்ட்ஸ் எல்லாம் எத்துக்குறா மாதிரி இருக்கும். இன்னும்கூட நெறைய சொல்லிக்கிட்டே போகலாம். 

கேணி வாசகர்கள் கேட்டப் பல கேள்விகளுக்குப் பொறுமையாகவும், தெளிவாகவும் ரோஹிணி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். நடிகைகளைக் குறித்த ஸ்டீரியோ டைப் கருத்தாக்கங்கள் வெளிப்படும் பல சம்பவங்களை ரோஹிணி பகிர்ந்துகொண்டு வருத்தப்பட்டார். இதுவரை கேணிக்குக் கைவீசிக் கொண்டுதான் சென்றிருக்கிறேன். ஆனால், வீட்டிலிருந்து இம்முறை கேணிக்குக் கிளம்பும்போதே மொழிபெயர்ப்புத் தெலுங்கு நாடகமான “சீதை ஜோசிய”த்தின் ஒரு பிரதியைத் தோழர் ரோஹிணிக்காக எடுத்து வைத்துக் கொண்டேன். கூட்டம் துவங்குவதற்கு முன்பே ரோஹினியை நெருங்கி “இந்தாங்க ரோஹிணி... உங்களுக்காக நான் எடுத்துட்டு வந்த புத்தகம் இது...” என்றேன்.

“என்ன புக் இது?” என்றார்கள்.

“ஒரு டிராமா ஸ்கிரிப்ட். தெலுங்கு மூலம்... தமிழில் சாகித்ய அகாடமி ரொம்ப நாளுக்கு முன்னாடி வெளியிட்டிருக்காங்க...” என்றேன்.

“தெலுங்கா... ரைட்டர் பேரு என்ன? புக் டைட்டில் என்ன? எப்போ வந்தது?” என்று புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆய்வாளர் வா.கீதா, எழிலரசி அக்கா, அரங்க நடிகை வினோதினி, கவிஞர் விஜயலட்சுமி போன்றவர்களுக்காக வாங்கியப் பிரதிகளில் ஒன்று மிஞ்சியிருந்தது. நடிகர் ரோகிணிக்காக அந்தப் பிரதியை எடுத்துச் செல்ல வேண்டுமென்று எனக்கு ஏன் தோன்றியது? புதிராகத் தான் இருக்கிறது...! இத்தனைக்கும் ரோஹிணி நவீன இலக்கியம் வாசிக்கக் கூடியவர், பாடல்களை எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

உலகம் ஸ்டீரியோ டைப் ஆட்களால் மட்டுமே நிரம்பியதில்லை. “நான் கொஞ்சம் அரொகென்ட் தான். ஆனால், ஸ்டீரியோ டைப் ஆளான்னு நீங்க தான் சொல்லணும்” போலவே, பெண்கள் சார்ந்த, நடிகை சார்ந்த எண்ணங்களைப் பொருத்தவரை உங்களுடைய மனநிலை என்ன என்பதையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் நாம் வாழ்வது ரத்தமும் சதையுமான உலகில்.

Tuesday, June 10, 2014

வார்த்தைகளும் அர்த்தங்களும்

ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் அதிசயித்து அதிர்ச்சியுடன் பார்க்கலாம். தமிழும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள், புரிதலுடன் கூடிய நமுட்டுச் சிரிப்புடன் இதனை அணுகலாம்.

பழைய காலத்தில் மருந்தானது புட்டிகளில் இருக்குமாம். அதனைக் காற்றுப் புகாமல் அடைக்கப் பயன்படும் ரப்பரால் ஆன மூடியை “காக்” என்பார்களாம். போலவே சேவலையும், ஆணுருப்பையும் கூட “காக் (COCK)” என்றே சொல்கிறார்கள். இந்த பிரியாணிக் கடை முதலாளி, ஒரு டிசைன் கம்பெனியை நம்பி பேனர் டிசைனிங் வேலையை ஒப்படைத்திருக்கிறார். டிசைன் கம்பெனியின் மொழி அறிஞர் தான் நூதனமாக COCK என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். வார்த்தைகள் கனமானவை தோழர்களே. தவறாகப் பயன்படுத்தினால் நாம் தான் கோமாளியாவோம், மோசம் போவோம் என்பதற்கு சாமான்ய உதாரணம் இது. டிவிட்டரில் தான் இந்தப் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இந்த விளம்பரத் தட்டியைப் பலபேர் நக்கலடித்து இணையத்தள சமூக ஊடங்களில் பகிர்ந்திருந்தார்கள். 

பகுத்தறியும் தன்மையில்லாத புலங்களில் தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன என்று நினைப்பீர்களானால், ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதி வேண்டுகிறேன். ஐந்து நிமிடங்கள் எனக்குப் போதுமானது தோழர்களே. சரியான உச்சரிப்பு “கொலேஜ் பஸ்” என்பதாக இருந்தாலும், சாதாரண உச்சரிப்பில் பயன்படுத்தும் அதே வார்த்தையான “காலேஜ் பஸ்” என்பதை Callage Bus என்று எழுதினால் என்னவாகும். அனர்த்தம் தானே மிஞ்சும். (Callage – கூப்பிடும் வயது. இதனர்த்தம் புரிகிறது தானே!.)

தமிழகத்தில் 589 அரசு மற்றும் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருப்பதாக உறுதிபடுத்துகிறார்கள். திருவள்ளூர் & காஞ்சிவரம் மாவட்டத்தில் தான் நிறைய தனியார் கல்லூரிகள் இருக்கும் வேண்டும் என்பதாக நினைக்கிறேன். பொன்னேரிக்கு வந்து, மாணவர்களை ஏற்றிச் செல்லும் பிரபல கல்லூரிகளின் பேருந்துகளைக் கடந்த ஒருவார காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். சென்னைக்குப் பயணப்பட நேர்கையில் கழுத்து வலிக்கத் திரும்பித் திரும்பி பேருந்துகளின் ஜன்னலுக்குக் கீழ் ஓரப்பார்வை பார்கிறேன். (கல்லூரி மாணவிகளை சைட் அடிக்கிறேன் என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். இன்னும் கூட ஆஞ்சநேய பக்தனாகத் தான் இருக்கிறேன் என்பதை நண்பர்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன்.)

ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தது 10 பேருந்துகளாவது ஓடுகிறது. எல்லாவற்றிலும் “College Bus” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. சிலர் பெயின்டால் கைப்பட எழுதி இருகிறார்கள். “College Bus” என்பதன் தமிழாக்கம் போலக் “கல்லூரி பேருந்து” என்று அதே ஸ்டிக்கரில் அச்சிடப்பட்டுள்ளது. அல்லது கைப்பட எழுதப் பட்டுள்ளது.

இங்கு “கல்லூரிப் பேருந்து” என்பதாகத் தானே இருக்க வேண்டும். ஒரு “ப்”-ல் என்ன குடிமுழுகி விடப்போகிறது? என்று தான் நானும் நினைத்திருந்தேன். ரஜினியின் கடித்ததிலுள்ள ஒற்றுப் பிழைகளைப் பற்றிப் பேசினால், மலிவான விளம்பரத்தைக் “கிபி” தேடுகிறான் என்கிறார்கள். தினசரி பத்திரிகைகளிலுள்ள ஒற்றுப் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் “இதெல்லாம் உனக்குத் தேவையா? வேலையப் பாரு...” என்கிறார்கள். “தமிழ், தமிழர், செம்மொழி, தமிழர் உணர்வு” என கொடி பிடிப்பவர்களிடம் ஒற்றுப் பிழைகளைப் பற்றிப் பேசினால் “இந்த காலத்துல யாருதான் ஒற்றுப் பிழையில்லாமல் எழுதுறாங்க? நம்ம தமிழர்கள் கொடி பிடிச்சி சாதிக்க வேண்டிய நெறைய விஷயம் இருக்குது...” என்கிறார்கள் அரசியல் உள்குத்துடன். 

பதிவுலக, சமூக இணையதள நண்பர்களிடம் பேசினால் “நீ போயி மொதல்ல உன்னோட ப்ளாக்கையும், மூஞ்சிப் புத்தக ஸ்டேடசையும் ஒருமுறை படிச்சிப் பாரு... ஆயிரம் மிஸ்டேக்ஸ் இருக்குது” என்கிறார்கள்.

என் போன்ற சாதாரண வேலையற்ற மனிதர்களால் “தமிழை இலக்கண சுத்தத்துடன் பயின்ற “பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்)” ஆட்களை நேர்முகம் செய்து வேலைக்கு எடுக்க முடியாது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள நட்சத்திர ஆளுமைக்கும், வர்த்தக பத்திரிக்கை நிருவனங்களுக்கும் என்ன கேடு?”

சரி... சரி... என்ஜினியரிங் காலேஜ் விஷயத்திற்கு வருவோம். அரசுக் கல்லூரிப் பேராசிரியரும், எழுத்தாளருமான – நண்பர் பெருமாள் முருகனிடம் ஒருநாள் முழுக்க நேரத்தைச் செலவழிக்க நேர்ந்தது. அவரிடம் கேட்டேன்:

“கல்லூரி பேருந்து, கல்லூரிப் பேருந்து – இரண்டில் எது சரிங்க அன்பான அழகான தோழரே?”

“ஹூம்... நீ மோசமான பையனாச்சே... கலியுக நாரதனாச்சே...! இந்த மாதிரி எதாச்சும் நீ கேள்வி கேட்டாலே... ஏதோ குட்டைய கொழப்பபோறேன்னு அர்த்தமேச்சே...! இங்கிருந்து ஓடிப்போயிடு பிரபு... எம்பக்கதுல வராத...! நேரத்த வீணாக்காத...!” என்றார்.

“ஒழுங்கா சொன்னீங்கன்னா நான் ஓடிப் போயிட்றேன். இல்லன்னா... இன்னிக்கிகெல்லாம் உங்க பின்னாடியே வந்து ஃபாலோ பண்ணுவேன். கேள்விமேல கேள்வி கேட்டு உங்கள டிஸ்டர்ப் பண்ணுவேன். வசதி எப்படிங்க என்னுடைய அன்பான, அழகானத் தோழரே...!?” என்றேன்.

“அப்படியாவது தொலைஞ்சி போவேன்னா... சந்தோஷம்தான்” என்று வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு “ரெண்டுமே சரிதாங்க பிரபு. எடத்துக்கு ஏத்த மாதிரி பயன்படுத்தணும்...!” என்றார் முருகன்.

“அடடே... கஷ்டமான கேள்வியா கேட்டுட்டேன் போல இருக்குது. சமாலிஃபிகேஷன்ஸ் செய்யிறாப் போலத் தெரியுதே...” என்றேன்.

“யோவ்... ஊராயா இது? பேருதான் சிங்காரச் சென்னை. ஊரு முழுக்க வெறும் காட்டுப் பூச்சிங்களா இருக்குமாட்டு இருக்கு...” என்றார் பக்கத்திலிருந்த சக எழுத்தாள நண்பரைப் பார்த்து.

“நீ கர்பூறம்டான்னு ஊரே என்னைப் பாராட்டுங்க முருகன். என்னோட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, தெனறித் தண்ணி குடிக்கணும் போல இருக்குதா?” என்றேன்.

“ஒன்னாப்பு, ரெண்டாப்பு, அஞ்சாப்பு, பத்தாப்பு வரைக்கும் - நீங்க என்னதான் படிச்சிங்க...? சுதந்திர தினத்துல மிட்டாய் கொடுப்பாங்களே... வாரத்துல ரெண்டுநாள் சத்துணவு முட்டை கூடப் போடுவாங்களே... அந்தப் பக்கம் ஒதுங்கனதே இல்ல போல... தெண்டத்துக்குன்னாலும் ஒரு பொறப்புன்னு...” என்றார் குத்தலாக.

“ஹூம்... கூட படிச்ச பொன்னுங்கக் கூட ‘டாடா டீடீன்னு’ கடலை போட்டுக்குனு இருந்தேன்...! ஒரு கேள்வியக் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லுவிங்களா? அதென்ன கவிதை வாசிச்சிக்கிட்டு...” என்றேன்.

“ஒருத்தங்க திட்டினா அது மனசுல ஒரைக்கணும்... அப்பறமேட்டு உணர்ந்து திருந்தனும்... சரி போகட்டும்... இந்த வார்த்தைய எங்க பார்த்து தொலைச்ச...!” என்றார்.

“காலேஜ் பஸ்ல முருகன்... காலேஜ் பஸ்ல... அதுவும் ஜன்னலுக்குக் கீழ...” என்றேன்.

“ஒஹ்... அது தானா விஷயம்... அப்போ ‘கல்லூரிப் பேருந்து’” என்பதுதான் சரி என்றார் முருகன். போலவே, ‘கல்லூரி பேருந்து’ என்று எழுதினால் அது ‘கல்லூரியும் பேருந்தும்’ என்ற அர்த்தத்தில் வரும் என்றும் கூறினார்.

எனக்குத் தேவையானது கிடைத்துவிட்டது. இனி உங்கள் தயவு எனக்கெதற்கு என பேராசிரியரை விடுதலை செய்தேன். ‘கல்லூரியும் பேருந்தும்’ என மாணவர்கள் செல்லும் வாகனத்தில் எழுதவேண்டிய அவசியமில்லை. ஆகவே, ஒற்றுப் பிழையானது உறுதி செய்யப்படுகிறது. வெல்லாலக்குல வெலாங்காய்ப் பெற்றோர்களே...! உங்களை வெல்லத்தில் வைத்து இடித்துச் சாப்பிட...! (வெலாங்கா சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆகிறது. இப்படித் திட்டியாவது அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் புதுமையாக யோசித்தேன். பெற்றோர்களாகிய நண்பர்கள் கோவிக்கக் கூடாது). ரெண்டு தமிழ் வார்த்தைய தப்பில்லாம எழுத முடியல... அந்தத்தப்பக் கண்டு பிடிக்க முடியல இவங்களால.... இவங்க என்சீநியரிங் கத்துக் கொடுக்கறாங்களா?

சரி... விஷயத்திற்கு வருவோம். தமிழகத்தில் 589 அரசு மற்றும் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. ஒரு கல்லூரியின் தலைக்கு 10 பேருந்துகள் என்றாலும் கூட, ஏறக்குறைய ஐயாயிரம் கல்லூரிப் பேருந்துகள் ஓடுகின்றன. “வேலம்மாள் கல்லூரி, ஆர்.எம்.கே கல்லூரி, ஆர்.எம்.டி கல்லூரி, எஸ்.ஆர்.எம் கல்லூரி, ஜேஎன்என் கல்லூரி” போன்ற முக்கியமான கல்லூரிப் பேருந்துகளிலும் தவறாக அச்சிடப்பட்ட “கல்லூரி பேருந்து” என்ற ஸ்டிக்கர் தான் ஒட்டப்பட்டுள்ளது. இதோ இந்தப் பதிவைப் படித்துவிட்டு, சென்னையைச் சுற்றி ஓடும் காலேஜ் பஸ் ஒவ்வொன்றையும் நுட்பமாக கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு உண்மை புரியும். (தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓடும் காலேஜ் பஸ்களைப் பற்றிய தகவலை, புகைப்படத்துடன் நண்பர்கள் யாரேனும் அனுப்பி வைத்தால் மகிழ்வேன். சமூக இணையதள ஊடகங்களில் ஆதாரத்துடன் பகிர்ந்தால் அதனினும் மகிழ்வேன்.) பிரதியுஷா கல்லூரி வாகனத்தில் சரியாகப் பிழையில்லாமல் எழுதியிருகிறார்கள்.

நான் உங்கள் முன் வைக்க விரும்பும் கேள்வி இதுதான். “கோழி வறுவலுக்கு பதில் காக் ஃப்ரை” என்று எழுதி பேனர் வைப்பவர்களுக்கும், ஒற்றுப் பிழையுடன் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ள, கல்விப் புலத்தில் இயங்கக் கூடிய என்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இனி அந்தந்தக் கல்லூரிகளின் மாணவ நண்பர்கள் தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும்.

அந்தந்த மொழிகளைப் பிரக்ஞையின்றி பிழையாகப் பயன்படுத்தும் சூழல் ஒரு புறமிருக்க, வேற்று மொழியிலிருந்து சில வார்த்தைகள் தமிழுக்கு வருவதும், தமிழிலிருந்து சில வார்த்தைகள் பிற மொழிகளுக்குச் செல்வதும் சகஜமாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நண்பர் ஞாநியுடன் பேசிக் கொண்டிருக்கையில் “ஆல்பொகடாப் பழம், ஆள்தோட்டம்” போன்ற வழக்கு வார்த்தைகளைப் பற்றி அலசிக் கொண்டிருந்தோம். (துருதுஷ்ட வசமாக உரையாடலை நீண்ட நேரம் தொடர முடியாமல் போனது.)

நியூ காலேஜிக்கு எதிரிலுள்ள “ஹால்ஸ்” என்பவரின் நினைவாக கார்டன் ஒன்றிற்கு வைத்த பெயர் “ஆள்தோட்டம்” என்பதாக மாறி இருக்கிறது போல. ஞாநி தான் இதனைப் பகிர்ந்துகொண்டார். “ஆல்பொகடா” என்பது என்ன? ஜுரம் வந்தால் கொடுக்கும் புளிப்பான பழத்திற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? என்பதை மொழியாளர் ஒருவரிடம் தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆக, ஒரு மொழியானது மற்றொரு மொழியுடன் இயல்பாக ஒன்றிணைந்து, சில குறைப் பிரசவ வார்த்தைகள் பிறப்பதையும், பூரண ஆயுசுடன் அவ்வார்த்தைகள் நூற்றாண்டு கடந்து வளமுடன் வாழ்வதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். பத்திரிக்கை துணுக்குக்காகவோ, வேறு பயன்பாட்டிற்காகவோ - முகமறியாத யாரோ ஒருவர் மொழிபெயர்க்க – யதார்த்தப் பயன்பாட்டில் இவ்வார்த்தைகள் நிலைபெற்று விடுகின்றன.

ஆரியர், முகமதியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என வந்தவர்கள் அனைவரும் இந்தியப் பிராந்திய மொழிகளில் உறவாடித் தோற்றுவித்தப் பல்வேறு வார்த்தைகள், தற்போது அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. இது மொழியின் தேய்வுக்கு வழிவகுக்கிறதா? அதற்கு மாறாக மொழியின் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சிக்கு வித்தாகிறதா? என்பதை நாம் விழாக்கால சிறப்புப் பட்டிமன்றக் கலைஞர்களிடம் விட்டுவிடுவோம். இறுதித் தீர்ப்பை பட்டிமன்ற நடுவர் பார்த்துக் கொள்ளட்டும்.

மொழிபெயர்ப்பு என்பது கலை. தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் கலாச்சாரத் தூதுவர்கள் போல. ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு வளமான விஷயங்களைப் பதியம் செய்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்கே நம் சமூகத்தில் மதிப்பில்லாத போது, சரியான அங்கீகாரம் கிடைக்காத போது - மொழிபெயர்ப்பு சார்ந்து இயங்குபர்கள் உள்ளார்த்த ஆர்வத்தின் காரணமாகத் தான் இதனைச் செய்கிறார்கள். “புனைவு, அ-புனைவு” என எந்தப் புலத்தில் இயங்கினாலும் (ஒரு சிலர் இரண்டையுமே செய்கிறார்கள்), அவர்களது முயற்சி பாராட்டத்தக்கது. தமிழில் மொழிபெயர்ப்பு சார்ந்து ஆங்காங்கு நிறைய பேர் பங்காற்றுகிறார்கள். ஆனால், ஒருவருக்கு ஒருவர் பரிசியமில்லை என்ற நிலைதான் இருக்கிறது.

எனவே, மொழிபெயர்ப்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, ஒருங்கிணைந்து பணியாற்றும் சூழல் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில், கிழக்கு பதிப்பகம் ஒருநாள் “மொழிபெயர்ப்பு கருத்தரங்கை” ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கில் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்ற சலுகை இருந்ததால் நானும் சென்றிருந்தேன். ஒரு நாள் பட்டறையில் “நலங்கிள்ளி, தீக்கதிர் குமரேசன், ஜி. குப்புசாமி” என மொழிபெயர்ப்பில் தீவிரத்துடன் இயக்கக் கூடிய சிலரும், மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் வந்திருந்து பல்வேறு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். “பிரியாணிக் கடை விளம்பரத் தட்டிபோல, காலேஜ் பஸ் ஸ்டிக்கர் போல” மொழிபெயர்ப்பு பல நேரங்களில் காலை வாரிவிடும். அதனை நுட்பத்துடன் எதிர்கொண்டால் தான் மொழிபெயர்ப்பில் சிறந்து விளங்க முடியும் என்பதுபோல இருந்தது அவர்களது பகிர்வுகள். ஒருநாள் கருத்தரங்கின் முடிவில் பத்ரி பகிர்ந்துகொண்ட விஷயம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய ஒன்று.

“இந்த ஒருநாள் கருத்தரங்கை முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாம். மூன்று அல்லது நான்குநாள் பயிலரங்கம் ஒன்றை மொழிபெயர்ப்பு சார்ந்து ஏற்பாடு செய்யவேண்டும் என்ற ஆசை என்.எச்.எம் நிறுவனத்திற்கு இருக்கிறது. மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நாங்கள் பயிற்சியளிக்க விரும்புகிறோம். இங்க வந்திருக்கவங்க கிழக்கு பதிப்பகத்துக்கு மட்டுமே மொழிபெயர்ப்பு வேலைய செய்யணும்னு நாங்க எதிர்ப்பார்கல. ஏதோ பேசினோம், களஞ்சி போனோம்னு இருக்கக் கூடாது. ஒரு குழுவா நெறைய விஷயங்கள நம்ம மொழிபெயர்ப்பு சார்ந்து ஷேர் பண்ணிக்கணும். அதுக்கொரு ஆரம்பமா இந்தக் கருத்தரங்கு அமையனும்.” என்றார்.

கிழக்கு பதிப்பக பத்ரி ஷேசுவைத் தொடர்ந்து ஃபாலோ செய்யுங்கள். என்றேனும் அவர் மூன்று நாள் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கிற்கு அழைப்பு விடலாம். ஆர்வமுள்ள இளவட்டங்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாகக் கல்லூரி மாணவர்களை மொழிபெயர்ப்பு சார்ந்து பயன்படுத்திக்கொள்ள பத்ரி விரும்புகிறார். ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களே உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். உங்களது கல்லூரிப் பேருந்தை உற்று நோக்கி அதிலிருந்து தொடங்குங்கள்.

நன்றி...

Monday, April 21, 2014

மூன்று பேர் மூன்று காதல்

ராயப்பேட்டை YMCA புத்தகக் கண்காட்சிக்குச் செல்லப் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். “அண்ணா... உங்கள பார்க்கணுமே...” என்ற குரலில் கொஞ்சம் தடுமாற்றம் புலப்பட்டது.

“சரி... இங்க வந்துடு...” என்று சொல்லி இருந்தேன்.

கண்கள் அழுது வீங்கியிருந்தது. “எவ்வளோ சின்சியரா லவ் பண்ணேன். எங்கெல்லாம் சுத்தி இருக்கேன்... நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றது பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்... இப்போ வேணாம்னு சொல்றா... எவ்வளோ அசிங்கமா இருக்குது...” என்றான்.

“நீ என்ன பண்ண...? எதாச்சும் மிஸ் பிஹேவ் பண்ணியா?” என்றேன்.

“இல்லிங்க அண்ணா... எனக்குத் தெரியாம இன்னொருத்தன் கூடவும் சுத்திட்டு இருக்கா... நான் கண்டு புடிச்சிட்டேன்...” என்றான்.

“நீ சந்தேகப் பட்றதா நெனைக்கிறாலோ?” என்றேன்.

“இல்லைங்க அண்ணா... அவ கேரக்டர் சரியில்லைங்க அண்ணா... இப்போ தான் ரியலைஸ் பண்றேன். அவ வேனாண்டாம் மச்சின்னு ஃப்ரென்ண்ட்ஸ் எல்லாரும் முன்னாடியே சொன்னாங்க... பொறாமையில சொல்றாங்கன்னு நெனச்சிக்கிட்டேன். இப்போ ஏமாந்துட்டேன்...” என்றேன்.

“அய்யய்யய்ய... அதான் உனக்கு சரி வரலன்னு ரியலைஸ் பண்ணிட்ட இல்ல... விட்டுத் தொலையேன்டா” என்றேன்.

“முடியலையே...” என்றான்.

“இதெல்லாம் சும்மா கத... ஆக்டிங் குடுக்காத...” என்றேன்.

“என்னால தாங்க முடியல...” என்றான்.

“இந்த டூமாகோலியை சமாதானம் செய்ய இயலாது” என என்னை நானே தேற்றிக்கொண்டு கிளம்பினேன். கிளம்பும்போது “Book Fair-க்கு வரியா?” என்றேன்.

“I am sorry. I am not” என்று வார்த்தைகளை முழுங்கினான்.

புறப்படும்போது மட்டும் ஒருவார்த்தை கேட்டேன்: “டேய் பையா... லவ்வு புட்டுக்கிச்சின்னு சூசைட் பண்ணிக்க மாட்டியே...?”

“ச்சே... ச்சே...” என்று தலையை ஆட்டினான்.

“அதானே பார்த்தேன். இவன் சாவறதா இருந்தா...! என்பாட்டுக்குப் போற என்ன கூப்பிட்டு வச்சி ஏன் கழுத்தறுக்கப் போறான்?” என்று நினைத்துக்கொண்டு மந்தவெளி பேருந்தில் ஏறினேன்.

ஒட்டுனருக்குப் பீச்சாங்கை பக்கத்துக்கு இருக்கை காலியாக இருந்தது. ஓடிச்சென்று அமர்ந்து கொண்டேன். பின் இருக்கையில் ஒரு காதல் ஜோடி குசுகுசு என பேசிக்கொண்டு வந்தனர். அரசல் புரசலாக காதில் விழுந்தது. அண்ணா சாலையின் ஒரு பழரசக் கடையைப் பார்த்திருப்பாள் போல, கொஞ்சம் பெரிய குரலில் “நீயும் இந்த ஜூஸ் கடைக்கு என்ன கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிச் சொல்லியே ரெண்டு வருஷம் ஓடிப் போயிடுச்சி...” என்று ஆதங்கப்பட்டாள்.

“இந்த வருஷம் தான் டிகிரி முடியுதுல்ல... வேலைக்குப் போயிடறேன். ஜூஸ் கடைக்குப் போகலாம். சினிமா போகலாம். கல்யாணமும் பண்ணிக்கலாம். அது வரைக்கும் காலேஜ், கம்ப்யூட்டர் கிளாஸ் மட்டும் தான்.” என்றான்.

“ஹே... வேணாம் வேணாம்... நான் வெயிட் பண்றேன்டா... நீ மேல படி...” என்றாள். எனக்கு ராயப்பேட்டை வந்துவிட்டது. இறங்குவதற்கு எழுந்துகொண்டேன்.

“வேணான்டி... அதெல்லாம் சரி வராது...” என்று சொல்லியது காதில் விழுந்தது. காதலனின் கையினை அந்தக் காதலி உள்ளங்கையில் ஏந்திக்கொண்டிருந்தாள். “கடவுளே...! இந்தக் காதல் கைகூட வேண்டும்” என்று நினைத்துக் கொண்டேன்.

புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில் இருந்துவிட்டு சென்ட்ரலுக்குக் கிளம்பினேன். ரயில் புறப்பட ஒரு நிமிடம் மட்டுமே இருந்தது. வேகமாக ஓடி ரயிலில் ஏறினேன். மூச்சு வாங்கியவாறு ஜன்னல் ஓர இருக்கை ஏதேனும் இருக்கிறதா? என்று பார்வையைத் திருப்பினேன்.

ஒரு ஜன்னலோர இருக்கையில் – ஜரிகை வேட்டியில் மாப்பிள்ளை வேட்டியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மாநிறம் தான் எனினும் கொஞ்சம் போல குண்டாக இருந்தார். ஜன்னலுக்கு வெளியில் அவரது பார்வை இருந்தது. எதையோ சாதித்த சந்தோசம். பக்கத்தில் கூரைப் புடவையில் மணப்பெண். அவளது பார்வை ரயில் பெட்டியின் மேற்கூரையில் நிலைகுத்தி இருந்தது. கொஞ்சம் போல சோர்வும், கணிக்கமுடியாத குழப்பமும் முகத்தில் தென்பட்டது. சுற்றியிருந்தவர்கள் அவளிடம் சிரித்துப் பேச முயன்று கொண்டிருந்தனர். புதுமணத் தம்பதிகளை நோட்டம்விட்டதில் என் பக்கத்தில் நின்றிருந்தவர்களை கவனிக்கவில்லை. ஒரு கல்லூரி காதல் ஜோடி.

ரயில் பெட்டியின் நுழைவாயில் வழியே காற்று வீச காதலியின் கூந்தல் காற்றிலாடுகிறது. இருவரும் புதுமணத் தம்பதிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பார்த்தும் பார்க்காதது போல கொஞ்சம் விலகி நின்றுகொண்டேன். சற்று நேரத்தில் ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டனர். நாகரீகமாக அந்தக் காதலி, காதலனின் பக்கவாட்டுத் தோள்களில் சாய்ந்துகொண்டாள். அவனும் நாகரீகமாக அவளைத் தழுவிக்கொண்டான். இருவரும் அநேகமாக கல்யாண கோலத்தில் கற்பனை உலகில் பறந்துகொண்டிருக்க வேண்டும்.

தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
காதல் உறவே...
என்ன தான் சுகமோ நெஞ்சிலே...!

நான் வேண்டிக்கொண்டேன்: “கடவுளே...! இந்தக் காதல் கைகூட வேண்டும்.”

திஸ் சாங் இஸ் டெடிகேஷன் டூ ஆல் லவ்வர்ஸ் இன்குலூடிங் லவ் புட்டுக்குன பசங்க: என்ன தான் சுகமோ நெஞ்சிலே...

தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாறு நீ வந்து சீராட்டத்தான்
காணாத வாழ்வு நான் கண்ட நேரம்
பூமாலை நீ சூடிப் பாராட்டத்தான்
நீயென் ராணி நாந்தான் தேனி
நீயென் ராஜா நானுன் ரோஜா
தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
காதல் உறவே

சென்னை புத்தகச் சங்கமம் - YMCA

உலகப் புத்தகத் திருநாளைக் கொண்டாடும் நோக்குடன், புத்தக விரும்பிகளின் ஆவலுக்குத் தீனி போடும் வகையில் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா-வுடன் இணைந்து சென்னை ராயப்பேட்டை "ஒய்.எம்.சி.ஏ" மைதானத்தில் புத்தகக் கண்காட்சியை ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பல முக்கியமான தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பகங்களும் தமது வெளியீடுகளை ஏறக்குறைய நூறு அரங்குகளில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

திருச்சியில் ஓரிரு மாதங்களில் நூறடி உயரமுள்ள "ஈ. வெ. ரா. பெரியார்" சிலையைத் திறக்க இருக்கிறார்கள் போல. அதன் மாதிரி உருவத்தைக் கண்காட்சியின் நுழைவாயிலில் வைத்திருக்கிறார்கள். எனக்கு ஆன்மிகம் பிடிக்கும். போலவே பெரியாரையும் பிடிக்கும். எனவே மாதிரிச் சிலையை மனமாரச் சேவித்துவிட்டு உள்ளே சென்றேன்.

சனிக்கிழமையில் தான் பார்வையாளர்கள் வரவில்லையென்று பார்த்தால் ஞாயிற்றுக் கிழமையும் அதே நிலைமை தான் இருந்தது. இரண்டு நாட்களிலும் காலச்சுவடு அரங்கில் தான் உட்கார்ந்திருந்தேன். சென்னை கண்காட்சியில் சந்தித்துப் பேசிய ஒன்றிரண்டு புதிய வாசகர்கள் காணக் கிடைத்தார்கள். ஒரு சேல்ஸ் மேனாக வேலை செய்த என்னை ஞாபகம் வைத்திருந்து, வாசகர்கள் கைகுலுக்கிப் பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதில் ஒருவர் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்.

"நந்தனம் புக் ஃபேர்ல நீங்க எதையோ பேச வந்தீங்க... ஏற்கனவே என்கிட்டே ஒரு லிஸ்ட் இருக்குன்னு சொல்லியிருந்தேன்..." என்றார்.

"அப்போ... என்னை அவாய்ட் பண்ணிட்டு... அசிங்கப் படுத்திட்டுப் போயிருக்கீங்க... அத டீசென்ட்டா சொல்ல வரீங்க... இல்லையா..." என்றேன்.

சப்தமில்லாமல் சிரித்தார். "சரி நீங்க பாருங்க..." என்று சிரித்தவாறு நகர முற்பட்டேன்.

"நீங்க நந்தனம் வந்தவங்களுக்கு சில புக்ஸ் ரெஃபர் பண்ணிட்டு இருந்திங்க இல்லையா?" என்றார்.

"ஆமாமா... இந்த புக்ஸ் தான்..." என்றவாறு "மீசான் கற்கள் மற்றும் சாய்வு நாற்காலியை" எடுத்துக் காண்பித்தேன். அந்த நண்பர் கொஞ்சம் கூட யோசிக்காமல் வாங்கிக்கொண்டார்.

எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன் - இருவரையும் சனிக்கிழமை சந்தித்துப் பேச முடிந்தது. கட்டியக்காரி குழுவினர் சதத் ஹசன் மண்டோவின் "அவமானம்" கதையை மேடையேற்ற இருந்ததால் - புத்தகச் சங்கமத்திற்கு வந்ததாக விஷ்ணுபுரம் சரவணன் கூறினார். ஏற்கனவே இந்த நாடகத்தை சரவணன் பார்த்ததுண்டு. எனினும் நாடகத்தை நெறியாள்கை செய்த ஸ்ரீஜித்துக்காக வந்திருப்பதாகக் கூறினார்.

கடந்தமாதம் திருநங்கைகள் சார்ந்த விழா ஒன்று திநகரில் ஏற்பாடாகியிருந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் திருநங்கைகள் சார்ந்த விழா கின்னஸ் ரெக்கார்டுக்காக நிகழ்த்தப்பட்டது. அதில் ஸ்ரீஜித்தின் கட்டியக்காரி நாடகக் குழுவும் கலந்துகொண்டு "அவமானம்" நாடகத்தை மேடையேற்றி இருக்கிறார்கள். ஸ்ரீஜித்துக்குக் கொடுத்திருந்த நேரத்தைக் காட்டிலும் இரண்டு மேனி நேரங்கள் தாமதமாகத் தான் அவர்களை மேடையேற்றி இருக்கிறார்கள். கால்மணி நேரம் "அவமானம்" நாடகம் நடந்துகொண்டிருக்கும் பொழுது அறிவிப்பாளர் மேடையில் தோன்றி "சிறப்பு அழைப்பாளர் அவசரமாகக் கிளம்பிச் செல்ல இருப்பதால், அவர்களை மேடைக்கு அழைக்கிறோம். நாடகம் இடையில் நிறுத்தப்படுகிறது" என்று சொல்லி இருக்கிறார். (குட்டி பத்மினி தான் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார் என்று நினைக்கிறன்.)

மூன்றாம் பாலினத்தவரின் உரிமை மற்றும் மேம்பட்ட வாழ்வுக்கான போராட்டம் சார்ந்து அரங்க வடிவில் தொடர்ந்து குரலெழுப்பக் கூடியவர் ஸ்ரீஜித் என்பது விழா ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிந்திருக்காமலா இருந்திருக்கும். பேராசிரியர் அ. மங்கைக்கும், பத்திரிகையாளர் கவின்மலருக்கும் அந்த விழாவில் விருது கொடுத்து கௌரவிக்க இருந்தார்களாம். சிறப்பு அழைப்பாளரைக் காரணம்காட்டி நாடகத்தை இடைநிறுதியதால், அவர்கள் இருவரும் விருதினை ஏற்காமல் வெளிநடப்பு செய்திருகிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீஜித் பங்கேற்று நெறியாள்கை செய்யும் நாடகம் என்பதால் விஷ்ணுபுரம் சரவணன் வந்திருப்பதாகக் கூறினார்.

போலவே, நடிகரும் டப்பிங் ஆர்டிஸ்டும், குறும்படத் தயாரிப்பாளராக அறியப்பட்டிருந்தாலும் - எமக்குப் பதிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் நாகரத்னா பதிப்பக குகனைப் பார்த்து உரையாட முடிந்தது. இவருடன் பேசும் ஒவ்வொரு முறையும் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் தொற்றிக்கொள்ளும். மதி நிலையத்தின் மூலம் வெளியீடு கண்ட சமீபத்திய புத்தகங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பா. ராகவனின் "அலகிலா விளையாட்டு" நாவலின் பதிப்பையும் மதி நிலையத்தில் காணக் கிடைத்தது. சப்தமில்லாமல் ராகவன் மீள் பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறார் போல.

மற்றபடி, புத்தகக் கண்காட்சி மிக மந்தமாக இருப்பதாகத் தான் எனக்குத் தோன்றியது. புனித வெள்ளியன்று கண்காட்சி துவங்கியிருக்கிறது. அதே நாளில் வடிவேலு நடித்த தெனாலிராமன் ரிலீஸ் காண்கிறது. நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு திரைக்கு வருகிறார். அடுத்தடுத்த இரண்டு நாட்களும் கூட விடுமுறை நாட்கள் தான். எனினும் கூட்டமெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. தமிழகப் பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்குகிறது. அதிலும் சிலர் முடங்கிக் கிடக்கிறார்கள். பபாசி நடத்திய பிரம்மாண்ட 700 பதிப்பகங்கள் கலந்துகொண்ட புத்தகக் கண்காட்சி முடிந்து இரண்டு மாதங்கள் கூட பூர்த்தியாகவில்லை. அப்படியிருக்க யார் தான் இந்த புத்தகச் சங்கமத்தின் ஆடியன்ஸ் என்பதையும் கிரகிக்க முடியவில்லை.

"கருத்தரங்கம், பட்டிமன்றம், உணவுத் திருவிழா, கலை மற்றும் பறையிசை, மாணவர்கள் பங்கேற்கும் நடைப் பயணம்" என முக்கியமான நிகழ்வுகள் புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஏற்பாடாகியிருக்கிறது. அரங்கின் உள்ளே நுழையும் போது, ஒரு பெண்மணி "வணக்கம்" கூறி வரவேற்கிறார். கழிப்பறைகள் ஓரளவிற்குச் சுத்தமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சந்தை சுறுசுறுப்படையும் என்றே நினைக்கிறன்.

மின்னஞ்சலை சரி பார்த்துவிட்டு இந்தப் பதிவினை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். வந்திருந்த மின்னஞ்சல்களில் ஒன்று மனதிற்கு நிறைவாக இருந்தது. "சுந்தர்" என்ற புத்தக வாசகர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்:

Sir,
I met you in the Chennai book fair held a few months back.I've completed reading the novel 'Mesaan Karkal' that you asked me to read. A lovely novel.Eramullan's character was the one that made a golden impression.I was totally shattered and lost in the end when Kungali starts walking along the shore without knowing what to do next.Thank you for recommending such a book.

நம்மல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சி, நம்ம சொல்றதையும் ஒருத்தர் காது கொடுத்துக் கேக்குறாங்கன்னா அவர்களது பண்பு பாராட்டுக்குரியது. போலவே, நமக்காக நேரம் எடுத்து மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் எனில் அதனினும் சந்தோசம் தானே...!

நான் வியப்பில் ஆழ்ந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். குளச்சல் மு யூசுப்பை செல்பேசியில் நிதானமாக அழைத்துப் பேச வேண்டும். இந்த விஷயத்தைப் பகிர வேண்டும். யூசப் - புனத்தில் குஞ்சப்துல்லாவிடம் பேசுவார். எங்களுக்கு இதிலெல்லாம் ஒரு ஆனந்தம். ஒரு பரம திருப்தி. அவ்வளவுதான்...!

Monday, March 31, 2014

டாய்லெட் கழுவிய நடிகர்

கழிப்பிடத்தைச் சுத்தம் செய்ய தொடப்பக்கட்டையைக் கையில் எடுக்க வேண்டும். உடனே, நடிகர் நாசர் ஆம் ஆத்மியில் சேர்ந்துவிட்டாரோ என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். விஷயம் அரசியல் சார்ந்ததல்ல.

தான் படித்த கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக நாசர் அழைக்கப் பட்டிருக்கிறார். கல்லூரியின் மாணவர்களையும், நிர்வாகச் சூழலையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத் தனது ஆற்றாமையை நெற்றிப்பொட்டில் அறைந்தார் போலப் பதிவு செய்ய விளக்குமாறு என்று சொல்லக்கூடிய தொடப்பத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.
கேணி இலக்கிய சந்திப்பிலும், கணையாழி மாத இதழ் வெளியீட்டிலும் என நாசரை இரண்டு சந்தர்பங்களில் சந்தித்திருக்கிறேன். முதன்முறையாக நேரில் சந்தித்தது கேணியில் தான். சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். ரோமங்களற்ற பளபளப்பான கையில் சிராய்ப்புகள் இருந்தன.

“என்னங்க நாசர் கைய யாரோ புடிச்சி கீறி உட்டாப் போல இருக்குது? ஷூட்டிங்குல எதாச்சும் நடந்ததா?” என்றேன்.

புன்னகைத்தவாறு “இல்லைங்க... என்னோட தோட்டத்துல வேல செய்யச் சொல்ல செடியில கீறிக்கிச்சி... எனக்கு கார்டனிங் ரொம்பப் புடிக்கும்...” என்றார்.

“ஓ... சரி சரி...” என்றேன்.

அதன் பிறகு நாசரை எங்கும் சந்தித்ததில்லை. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியீடு கண்ட “கணையாழி” மாத இதழின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தன், ஓவியர் ட்ராஸ்கி மருது போன்றவர்களும் வந்திருந்தனர். விழா முடிந்து அரங்கின் வெளியில் நின்று, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். ட்ராஸ்கி மருதுவுடன், நடிகர் நாசரும் அரங்கை விட்டு வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தனர். நாசர் அணிந்திருந்த குர்தாவின் நீள அங்கி தரையில் புரண்டு கொண்டிருந்தது. யாரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

எனது அருகில் வந்ததும் “நாசர்...” என்றேன். கவனத்தை என் மீது குவித்தார்.

“உங்க பின்னாடி பாருங்க... நீங்க போட்டுண்டு இருக்க துண்டு தரையில பொறண்டுக்குனு இருக்குது...” என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் பேச்சைத் தொடர்ந்தேன்.

ஆடையை சரிபடுத்திக்கொண்டு “நன்றி...” என்ற வார்த்தையை உதிர்த்தவாறு கடந்து சென்றார்.

மேற்கண்ட இரண்டு சந்தற்பங்களைத் தவிர்த்து, ஓர் இணைய தொலைக் காட்சிக்காக நாசர் பேசியிருந்ததை மிகவும் ரசித்தேன். பொங்கல் விழாவுக்கான சிறப்பு நேர்முகம் அது. “தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, நம்மளோட தமிழ் மக்களுக்கு நீங்க என்ன மெசேஜ் சார் சொல்ல விரும்புறீங்க?” என்பது தான் மைக்கை நீட்டிய நிருபரின் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். இயற்கையைக் கபளீகரம் செய்யும் தமிழர்களின் போக்கை அந்தப் பேட்டியில் சாடியிருப்பார். சூடான எண்ணெயில் கொட்டப்பட்டக் கடுகுபோல பொரிந்து தள்ளியிருப்பார். அந்தப் பேட்டி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாரம்பரிய விவசாய முறை காணாமல் போவதைத் தனது நேர்முகத்தில் குறிப்பிட்டு “இந்த மாதிரி சூழல் இருக்கும் பொழுது, எந்த லட்சணத்துல நான் தமிழர்களுக்கான பண்டிகைத் திருநாள் வாழ்த்துக்களை சொல்றது... நீங்களே பதில் சொல்லுங்கள்...” என கோபத்தைக் கொட்டியிருப்பார்.

நேற்றைய தினம் திரைக்கல்லூரி மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது “அண்ணா... நாசர் எங்க காலேஜிக்கு வந்திருந்தார் போல...” என்றான். மார்ச் 22, 2014 அன்று திடீரென விசிட் செய்திருக்கிறார் போல.

“ஆமா... அவரும் உங்க காலேஜில தானே படிச்சாரு... அதனால வந்திருப்பாரு...” என்றேன்.

“இல்லன்னா.... வந்தவரு எல்லாரையும் திட்டிட்டுப் போயிருக்காரு.” என்றான்.

“அடடே... எதாச்சும் கேனத்தனமா கேள்வி கேட்டுட்டிங்களா? நாசர் அனாவசியமா கோவப்பட மாட்டாரே...!” என்றேன்.

“இங்கப் படிச்சிட்டு வெளியில வந்து என்ன மாதிரியான படத்த எடுக்குறீங்க? அதுக்கா இங்கப் படிக்கிறீங்க...?–ன்னு கேள்விமேல கேள்வி கேட்டிருக்காரு. அவருக்கு பதில் சொல்ல முடியாம எல்லாரும் திருதிருன்னு முழிச்சி இருக்காங்க” என்றான்.

நல்ல சினிமா சார்ந்த அடிதடிகளை, விமர்சனத் திட்டுக்களை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். ஊர் ரெண்டு பட்டதில் சந்தோஷிக்கும் கூத்தாடிகளைப் போல நாம் வேடிக்கைப் பார்க்கலாம். நாசரின் அடுத்த செயல் தான் மிக முக்கியமான ஒன்று.

“நீங்க யூஸ் பண்ற டாய்லெட்ட கூட சுத்தமா வசிக்கத் தெரியாத உங்களால, எப்படி ஒரு நல்ல சினிமாவ எடுக்க முடியும்”-ன்னு கேள்வி கேட்டுட்டு நேரா ஹாஸ்டலுக்கு போயிருக்காரு. தொடப்பத்த எடுத்து மாணவர்கள் பயன்படுத்தும் டாய்லெட்ட கிளீன் பண்ண ஆரம்பிச்சிட்டாறாம்.

“நீங்க இத பண்ணாதிங்க சார்... நாங்களே பண்ணிடறோம்...” என்று கல்லூரி ஆசிரியர்கள் கெஞ்சிக் கூத்தாடி இருக்கிறார்கள்.

“கூத்தாடி வாழ்க்கையெல்லா....ஆஆஆ...ம் அந்தக் காத்தாடி படும்பாடு, அடி ஆத்தாடி வெக்கக்கேடு” என்று வாயசைத்து நடித்த அவதாரமாயிற்றே, ஆகவே சுற்றி நின்று பேசியவர்களின் வார்த்தைகளைத் தொடர்ந்து உதாசீனம் செய்தவாறு நாசர் தொடர்ந்து கழிப்பறையைச் சுத்தப்படுத்தி இருக்கிறார். அதன் பிறகு டிப்ளமோ மாணவர்கள் இரண்டு பேர் சுத்தப்படுத்த முன்வரவும் தான் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

நாசரும் திரைக்கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலைராணி, ரகுவரன் போன்றவர்கள் அவருடன் படித்த சக தோழர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் படித்தபோது இருந்த கல்லூரியின் சூழல் தற்போது இல்லை. பாதி இடத்தை டைடல் பார்கிற்கும், மீதி இடத்தை ராமானுஜன் டெக் பார்க் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கும், மேலும் கொஞ்ச இடத்தை தேவைப்படும் மற்றவர்களுக்கும் தாரை வார்த்திருகிறார்கள். சென்ற வருடம் கல்லூரி வளாகத்தில் இருந்த ஜப்பனீஸ் கார்டன் அழிக்கப்பட்டு ஏதோ புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தீக்கதிரில் என்று நினைக்கிறன், ஃபிலிம் ரோலை பிளாக்கில் விற்று பணம் பார்க்கும் கல்லூரியின் இழி செயலைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். அது சார்ந்த சலசலப்பே எழவில்லை.

“நான் காவேரி தண்ணீர் பிரச்னைக்கு உண்ணாவிரதம் இருக்கறேன். தமிழர்கள் எனது பேச்சு, அவர்கள் தான் எனது மூச்சு” என்று பஞ்ச் டயலாக் உதிர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல், “கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் உறவு வச்சிக்கறது தப்பில்ல. ஆனா, பாதுகாப்பான உடலுறவு வச்சிக்கணும். அந்த விஷயத்துல பொண்ணுங்க கவனமா இருக்கணும்” என்று பேசி மீடியாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசி, அதே மீடியாவில் மாட்டிக் கொண்ட சுகாசினி வரை திரைக் கல்லூரியில் படித்த செலப்ரிட்டிகளை பட்டியலிட்டால் அனுமன் வால் போல நீளும். தான் சார்ந்த சூழலின் அவலத்தைக் கண்கொண்டு பார்த்து, மாற்றத்திற்கான சிறு முன்னெடுப்பை நிகழ்த்தும் பண்பு மிக முக்கியமான ஒன்று. நடிகர் நாசருக்கு அந்தப் பண்பு இருக்கிறது என்பது பல சந்தர்பங்களிலும் வெளிப்படுகிறது. நாசரைப் பார்க்கும் பொழுது மிக சந்தோஷமாக இருக்கிறது.

நானும் பார்க்கிறேன். பறக்கும் ரயில் நிலையங்களிலுள்ள ஒரு கழிப்பிடமும் பயன்பாட்டில் இல்லை. சென்னை நகர்புறத்தின் இலவசக் கழிப்பிடங்களில் ஒன்று கூட சரியான நிலையில் இல்லை. வேண்டுமெனில் இரவு நேரத்தில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பிடத்தைப் பாருங்கள். பேய் வீடு கெட்டது. இதையெல்லாம் பல ஆயிரம் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆகவே பாழடைந்து கிடக்கிறது என்றுகூட சமாதானம் சொல்லலாம். “பச்சையப்பன் கல்லூரி, உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி, நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்” என ஒரு கல்லூரியிலும் சரியான கழிப்பிட வசதி மாணவர்களுக்கு இல்லை. அரசுப் பள்ளிகளிலும் இதுதான் நிலைமை. பச்சையப்பன் கல்லூரியின் விடுதி என்றைக்கு மாணவர்களின் தலையில் விழுந்து பிரச்சனை பூதாகரமாக வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை. அரசு கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் கழிப்பிட வசதிகளையும், குடி தண்ணீர் வசதிகளையும் யாரொருவர் விவரணப் படமாக்கினாலும் சர்வதேச விருது பெறுவது நிச்சயம். ஆஸ்கர், கேன்ஸ் போன்ற விருதுகள் கிடைத்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? மாணவப் பருவத்திலேயே சுகாதாரமான பயன்பாட்டினைப் பழக்க வழக்கமாக்காமல் சுற்றுச்சூழலின் சுகாதாரத்தை எப்படிப் பேண முடியும்?

வினோபாவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறதாம். பயணப்பட்டு புதிய இடத்திற்குச் செல்ல நேர்ந்தால் - முதலில் கழிப்பிடத்தைச் சென்று பார்ப்பாராம். ஒருமுறை அவரிடம் காரணத்தைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு “கழிப்பிடம் சுத்தமாக இருந்தால் மற்றதெல்லாம் சுத்தமாக இருக்கும். மக்களும் தெளிவோடு இருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்றாராம். அரசியல் செய்பவர்கள் இந்த ஒரு கொள்கையைப் பின்பற்றினாலே போதும். நாடே சுத்தமாகிவிடும்.

ஒருமுறை டி.ஜி. வைஸ்னவா கல்லூரியில் மூன்றாம் அரங்கின் ஸ்பார்டகஸ் நாடகம் ஏற்பாடாகியிருந்தது. ஓவியம் குறித்து தீராநதியில் எழுதும் மோனிகா நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள். மு. ராமசாமியும், கருணாபிரசாத்தும் சக நடிகர்களுடன் ஒத்திகையில் இருக்க, ஒய்யாரமாக காரில் வந்து இறங்கினார் நாசர். “அவரிடம் பேச என்ன இருக்கிறது?” என்ற யோசனையில் விலகிச்சென்று நின்று கொண்டேன். இனி எங்காவது நாசரைப் பார்க்க நேர்ந்தால், விரும்பிச் சென்று கைகுலுக்கியவாறு “நான் உங்களுடைய தீவிர ரசிகன். ஐ லவ் யூ நாசர்” என்பேன்.

கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன இந்த அதரப்பழசான வார்த்தைகளை மெல்லிய புன்சிரிப்புடன் – கேட்டும் கேட்காமலும் நாசர் கடந்து செல்லக்கூடும். வெள்ளித் திரையின் அசையும் காட்சிகளில் தோன்றுவதற்கான சாமான்ய ரசிகனின் பாராட்டாகக் கூட கருதிக்கொள்ளலாம். எனினும் இது, தான் படித்த கல்லூரியின் பராமரிப்பற்ற கழிவறையைச் சுத்தப்படுத்திய அருமைத் தோழருக்கான வார்த்தைகள். வேறென்ன சொல்ல...!

Tuesday, February 18, 2014

பிரபலங்களின் முன் விற்பனைப் பிரதிநிதி

தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலியைப் படிக்கும் பொழுது, அடூர் கோபாலகிருஷ்ணனின் திரையாக்கமான “எலிப் பத்தாயம்” நினைவுக்கு வரலாம். “சாய்வு நாற்காலி” வாழ்ந்து கெட்ட கடலோர கிராம நிலச் சுவாந்தார் ஒருவனின் கதை. தனிப்பட்ட ஒருவனின் பூர்ஸ்வா வாழ்க்கையால் ஒரு குடும்பத்திற்கு நேரும் அவலத்தை சித்தரிக்கும் படைப்பு. பாலியல் இச்சையையும் வயிற்றுப் பசியையும் பிரதானமாகக் கருதும் ஒருவனால் குடும்ப கௌரவம் நடுத்தெருவுக்கு வருவதையும், இதன் காரணமாக உறவுகள் நிலைகுலைந்து சிதருவதையும் முன்வைக்கும் பிரதி.

குடும்ப கௌரவத்தைத் தூக்கிச் சுமக்கும் மனது ஒருபுறம், காமத்தில் திளைத்த இளமைக் காலங்களும், அந்த காம நினைவுகளை மறக்க முடியாமல் உடல் சூதேறித் திரியும் முதுமையேரிய வயோதிக உடலின் அசைபோடும் மனது மறுபுறம் என தரவாட்டுக்காரனின் வாழ்வியல் சிக்கலை முன்வைக்கும் படைப்பு. “சாய்வு நாற்காலி” – 1997 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு. இது தமிழக கடற்கரையோர கிராமத்தில் நடக்கும் கதை எனில், “மீஸான் கற்கள்” – கேரள கடற்கரையோர நிலச்சுவாந்தார் ஒருவனின் குடும்ப, சமூக வாழ்வைப் பிரதிபலிக்கும் படைப்பு.

ஒருமுறை மொழிபெயர்பாளர் குளச்சல் மு யூசுப் - எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “ஸ்மாரக சிலகள் – நல்ல நாவலாச்சே. முடிஞ்சா தமிழுக்குக் கொண்டுவர முடியுமான்னு பாருங்க.” என்று சொன்னாராம் ஜெமோ.

புனத்தில் குஞ்சப்துல்லாவின் மலையாள மூலம் “ஸ்மாரக சிலகள்” மத்திய சாகித்ய அகாடமி (1980), மாநில சாகித்ய அகாடமி (1977) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது. இளம் வயதிலேயே நாவலாசிரியர் இவ்விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காலச்சுவடு பதிப்பகம் இப்புதினத்தை 2004-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்கள். குளச்சல் மு யூசுப் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். “நினைவுச் சிலைகள்” என்ற பெயரில் சிவன் என்பவராலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. எனினும் குளச்சல் மு யூசுப்பின் “மீசான் கற்கள்” பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இரண்டு படைப்புகளும் இஸ்லாம் மார்கத்து வாழ்வியலை நம்முன் வைப்பதால், கடற்கரையோர முஸ்லீம் குடும்பங்களின் வட்டார மொழி கையாளப்பட்டிருக்கும். ஆகவே வாசிப்பதற்கு சற்றே சிரமமாக இருக்கும். எனினும் அட்டகாசமான வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்குக் கடத்தும் நாவல்கள். நம்மில் பலர் சாய்வு நாற்காலியை வாசித்திருக்கலாம். ஆனால் மீஸான் கற்கள் அப்படியல்ல. ஆகவே காலச்சுவடு அரங்கில் நின்றிருந்த போது நல்ல வாசகர்களாக எனக்குப்பட்ட சில செலப்ரிடிகளுக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரை செய்தேன். அந்தச் சம்பவங்களில் சில...


இயக்குனர் & நடிகர் - கரு பழனியப்பன்: கிபி: “பழனி இந்த புத்தகத்த படிச்சி இருக்கிங்களா?”

“இல்லியே... நல்லா இருக்குமா?” என்றார்.

கிபி: “லைப்ரரியில கெடச்சா டிரை பண்ணி பாருங்க... நல்லா இருக்கும்.”

“அப்படியா...” என்று புத்தகத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும் “உங்கள எங்கயோ பார்த்தா போல இருக்குதே...?” என்றார் கரு. பழனி.

கிபி: “பாஸ்கர் சக்தி, கவிதா பாரதின்னு ரெண்டு பேரு டீக்கடை அரசியல் சங்கம் ஒண்ணு நடத்துறாங்க இல்ல. அவிங்க போடுற கூட்டத்துக்கு எப்பவாச்சும் வாரதுடுண்டு. நமக்கும் ஒரு அரசியல் பின்புலம் வேணும்ல...”

“ஓ... சரி சரி... புத்தகத்த எடுத்துக்குறேன்...” என்று சிரித்துவிட்டுக் கடந்து சென்றார்.

கவிஞர் & பாடலாசிரியர் நா. முத்துக்குமார்: கிபி: “முத்துகுமார்... ஒரு நிமிஷம்...! இந்த புத்தகத்தைப் படிச்சி இருக்கிங்களா?”

புத்தகத்தை உற்றுப் பார்த்தவர், “குளச்சல் யூசப் மொழிபெயர்ப்பா...! ஏற்கனவே அவரோட மொழிபெயர்ப்ப படிச்சிருக்கேன். ஏனோ தெரியல... என்னால அவரோட எரியாக்குள்ள போக முடியல...” என்றார்.

கிபி: “சரி சரி... அப்போ வேண்டாம்... வேற எதாச்சும் உங்களுக்குப் புடிச்ச புத்தகத்த நீங்களே பாருங்க...” என்று சொல்லிவிட்டு வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கடந்து சென்ற முத்துக்குமார் அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய தோள்களைத் தொட்டுக்கொண்டு நின்றிருந்தார்.

கிபி: “சொல்லுங்க முத்து... Do you need any help?”

“புத்தகத்துக்கு தானே செலவு பண்றோம். நான் படிக்கலன்னாலும் கூட இருக்க யாராச்சும் படிப்பாங்க இல்ல. நீங்க சொல்றத பார்த்தா முக்கியமான புத்தகமா தெரியுது... நான் ஒண்ணு எடுத்துக்கறேன்.” என்றார்.

எழுத்தாளர் & சினிமா ஆர்வலர் சுகா: “மூங்கில் மூச்சு, வேணுவனம்” சுகாவுடன் ஒருவர் வந்திருந்தார். அதுநாள் வரை சுகாவுடன் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. உடன் இருந்தவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் தொலைபேசியில் நிறைய பேசி பழகியதுண்டு. பிறகுதான் தெரிந்தது அவர் சொல்வனம் பாஸ்கர் என்பது.

கிபி: “இந்த புத்தகத்த படிச்சி இருக்கிங்களா சுகா...?”

“நான் புக்ஸ் வாங்க வரல. ஏற்கனவே பர்சேசிங் முடிச்சாச்சு. சும்மா பாக்கறதுக்காக வந்தேன். இருந்தாலும் ஏதோ சொல்ல வறீங்க... சொல்லுங்க...” என்றார்.

கிபி: “நல்ல ட்ரான்ஸ்லேஷன். முடிஞ்சா வாசிச்சி பாருங்க...” என்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து சுகா மீண்டும் வந்திருந்தார். மறக்காமல் பரிந்துரைத்த புத்தகத்தை எடுத்துவந்து, என்னிடம் காண்பித்துவிட்டு “நல்லா இருந்தா உங்ககிட்ட பேசறேன்...” என்றார்.

கிபி: “நல்லா இல்லைன்னா என்ன கூப்பிட்டு திட்டுங்க... பாஸ்கர் கிட்ட செல்பேசி இலக்கங்கள் இருக்குது...” என்றேன். சிரித்துக்கொண்டே பேன்ட் பாக்கட்டில் கையை நுழைத்தவாறு கடந்து சென்றார். சில நேரங்களில் பாலுமகேந்திராவும் அதுபோன்ற மேனரிசத்துடன் கடந்து சென்றதுண்டு.


எழுத்தாளர், அரசியல்வாதி – சிவகாமி I.P.S: கிபி: “ஹேலோ சிவமாமி... நான் இங்க சேல்ஸ் மேன். இந்த புத்தகத்த பாருங்களேன்.”

“ஒரு நிமிடம் புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்தவர். இந்த நாவல இன்னும் படிச்சதில்ல. நல்லா தான் இருக்கும் போல எடுத்துக்கறேன்.” என்று கடந்து சென்றார்.

இயக்குனர் சசி: கிபி: “சசி... நான் இங்க சேல்ஸ் மேன். இந்த புக் உங்களுக்கு புடிக்குதா பாருங்களேன்.”

“நல்ல புத்தகங்களா...?” என்றார்.

கிபி: “ஓரளவுக்கு... புத்தகத்த பிரிச்சி பாருங்க. புடிச்சி இருந்தா வாங்கிக்கோங்க...”

“ஒரு நிமிடம் பக்கங்களைப் புரட்டியவர். சரி எடுத்துக்கறேன்” என்றதுடன், “கு. அழகிரிசாமி மொத்தத் தொகுப்பு இங்க இருக்குதுங்களா?” என்றார்.

பெருமாள் முருகன் தொகுப்பில் வெளிவந்த “கு. பா. ரா சிறுகதைத் தொகுதியை” எடுத்து அவரிடம் நீட்டினேன்.

“மன்னிக்கணும்... கு. அழகிரிசாமி தொகுப்பு கேட்டேன்.” என்றார் சசி.

கிபி: “ஓ... சாரி... சாரி... ஏதோ ஞாபகத்துல தப்புப் பண்ணிட்டேன்.” என்றேன்.

“ச்சே ச்சே... இதெல்லாம் சகஜம் தானே” என்று சிரித்தார். “நான் இங்க சேல்ஸ் மேன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் – மிகப் பணிவாகவும், மரியாதையுடனும் சசி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. சக மனிதனாக நேசிக்கத்தகுந்த மனிதர் இயக்குனர் சசி.


கவிஞர் வா. மணிகண்டன்: கிபி: “மணி... மீஸான் கற்கள் படிச்சி இருக்கியா?”

“இல்லியே கிருஷ்ணா...! எதாச்சும் ஸ்பெஷல் புத்தகமா அது.”

கிபி: “நல்ல நாவல் மணி... ட்ரை பண்ணி பாரு...”

இரண்டு நாட்கள் கழித்து புத்தகச் சந்தைக்கு வந்தபோது மறக்காமல் வாங்கிக்கொண்டு சென்றான் நண்பன் மணி.

வலசை இதழ் 
கார்த்திகைப் பாண்டியன்: கிபி: “கார்த்தி... இந்த புக் படிச்சி இருக்கியாடா?”

“இல்லையேடா... நல்லா இருக்குமா?”

கிபி: “நீதான் படிச்சி பார்த்துட்டு சொல்லணும்”

பில் கவுண்டரிலிருந்து கிளம்பும் போது “டேய்... இங்க பாருடா... கெளம்பறேன்...” என புத்தகத்தைத் காட்டி கையசைத்துவிட்டுச் சென்றான்.

இயக்குனர் சமுத்திரக்கனி: கிபி: “ஹேலோ கனி... இங்க நான் சேல்ஸ் ரேப். இந்த புக்க பத்தி சொல்லட்டுமா?”

“அச்சோ. புக்ஸ் பத்தின்னா வேணாம்னா சொல்லுவேன்... தாராளமா... சொல்லுங்க...” என்றார் சந்தோஷமாக. கனியும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இரண்டு இளைஞர்கள் வந்து “ஃபோட்டோ பிளீஸ்” என்றார்கள். அவர்களுடன் சிரித்துக்கொண்டு நின்றுவிட்டு மீண்டும் என்னிடம் பேச வந்தார். மீண்டும் சில இளைஞர்கள் அழைத்தனர். அடுத்தடுத்து ரசிகர்கள் வரவும் “ஐயோ... இது சரிப்பட்டு வராது... உங்களுக்கும் டிஸ்டர்ப் ஆகுது... நான் கெளம்பறேன்” என்று கைகொடுத்துவிட்டு கடந்து சென்றார்.

இயக்குனர் வெற்றிமாறன்: சிலபல வருடங்களுக்கு முன்பு உயிர்மையின் புத்தக வெளியீட்டு நிகழ்வு. அரங்கில் ஏராளமான கூட்டம். தாடியைத் தடவி விட்டவாறு பக்கத்தில் இருந்தவரிடம் அந்த இளைஞன் கூறிக் கொண்டிருந்தார்: “எனக்கும் இலக்கியத்துக்கும் என்ன சமந்தம். இலக்கியத்த பத்தி எனக்கு என்ன தெரியும்? என்ன எதுக்கு இங்க கூப்பிட்டாங்கன்னு தெரியல?”

மேடையில் அறிவிப்பு செய்து, மேடை ஏறும் பொழுது தான் கூச்சப்பட்டவாறு பேசிக் கொண்டிருந்த தாடிவைத்த இளைஞர் வெற்றிமாறன் என்பதே தெரிய வந்தது. அவருடைய முதல் திரைப்படம் வந்திருந்த நேரம் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் கூட காலச்சுவடு புத்தக வெளியீட்டில் வெற்றிமாறனைப் பார்க்க நேர்ந்தது. போலவே புத்தகக் கண்காட்சியிலும் எனக்கு அருகில் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கிபி: “ஹலோ வெற்றி... இந்த புக்ஸ் எல்லாம் பாருங்களேன்.”

“நீங்களே சொல்லுங்க...” என்றார்.

“என் பெயர் சிவப்பு...” என்று வாயை எடுத்தேன் “படிச்சிட்டேன்” என்றார்.

“கடல், சின்ன சின்ன விஷயங்களின் கடவுள், செம்மீன், பனி, கடவுளும் கிழவனும்...” எந்த புத்தகத்தைப் பற்றிக் கூறினாலும் “படிச்சிட்டேன்” என்றார்.

கடைசி அஸ்திரமாக “மீஸான் கற்கள்” என்றேன். “படிச்சிட்டேன்” என்றார்.

கிபி: “சரி... அப்போ நீங்களே பார்த்து செலக்ட் பண்ணிக்கோங்க” என்றேன். வெற்றியும் கடந்து சென்றார்.

பக்கத்தில் நின்றிருந்த ஒரு கவிஞர் கூறினார்: “சில சினிமாகாரங்க எதுவும் படிக்கலன்னாலும் படிச்சதா காமிச்சிப்பாங்க”

கிபி: “எது எப்படியோ... வெற்றிமாறனைப் பார்த்தல் இனி எதிர்த்திசையில் ஓடுவேன். ஏனெனில் அவரிடம் விற்பதற்கு என்னிடம் எதுவும் இல்லையே...!”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்: நாடனை நோக்கிச் செல்லும்போதே காலச்சுவடு கண்ணன் உத்தேசித்திருக்க வேண்டும். “தச்சன் இருக்கும் தெருவுல ஊசி விக்கப் போறீங்களா...?” என்றார்.

“சும்மா இருங்க கண்ணன். எல்லாம் எனக்குத் தெரியும்...!” என்றேன்.

கிபி: “ஹேலோ நாஞ்சில் நாடன்... எப்படி இருக்கீங்க...?”

“நல்லா இருக்கேன்... நீங்க?” என்றார்.

கிபி: புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இந்த புத்தகத்த படிச்சிருக்கீங்களான்னு பாருங்களேன்?”

“ஓ... மீஸான் கற்களா...! பத்து வருஷமா நானும் பாக்கறவங்க கிட்ட எல்லாம் படிச்சி பாருங்கன்னு ரெக்கமண்ட் பண்றேன். எவன் கேக்குறான்...! வந்தபோதே படிச்சிட்டேன்...” என்றேன்.

கிபி: “ஓ... உங்களுக்குப் புடிச்சி இருந்துசிங்களா?”

“நிச்சயமா... வாசிக்க வேண்டிய புத்தகம்...” என்றார்.

காலச்சுவடு கண்ணன் கிண்டலுடன் சிரித்தார். அதன் உள்ளர்த்தம் “தச்சனிடம் ஊசி விற்காதே” என்பது போல இருந்தது. எனினும் நாஞ்சில் நாடனைப் பார்த்தால் எதிர்த் திசையில் ஓடமாட்டேன். நாஞ்சில்நாடன் பரந்துபட்ட வாசிப்பாளி என்பது தெரியும். அவரிடம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

“ஓ... மீஸான் கற்களா...! பத்து வருஷமா நானும் பாக்கறவங்க கிட்ட எல்லாம் படிச்சி பாருங்கன்னு ரெக்கமண்ட் பண்றேன். எவன் கேக்குறான்...!” என்று நாஞ்சில் நாடன் பகிர்ந்த போது “சரி... நம் வார்த்தைகள் காற்றிலோ நீரிலோ எழுதியதாகத் தான் இருக்கட்டுமே” என்று நினைத்துக்கொண்டேன்.

Monday, February 17, 2014

சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டை


பெருமாள் முருகனுக்கு விளக்கு விருது கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சேலம் நோக்கிப் புறப்படுகையிலே மனதில் சொல்ல முடியாத சந்தோசம் குடிகொண்டது. முருகனின் நாவல் படைப்புகளில் பலவும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான ஒன்று. விருது வழங்கும் நிகழ்வில் அவரது நாவல்கள் குறித்துப் பேச வருமாறு அழைத்தபோது பல காரணங்களைச் சொல்லித் தவிர்க்கப் பார்த்தேன். உள்ளுக்குள் நடுக்கம் வேறு. அவற்றில் ஒன்று...

“ஐயோ... முருகன் எனக்குப் பேசத் தெரியாதே...! ”

“இந்த மாதிரி நிகழ்வுகளில் பேசிப் பழக்கமில்லையே...! அதெல்லாம் சரியா வாரதுங்க முருகன். வேற யாராச்சும் பேசினால் நன்றாக இருக்குமே...” என்று அடுக்கடுக்காக பல காரணங்களை அடுக்கினேன்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஓர் எழுத்தாளரைப் பற்றி சக எழுத்தாளர்கள் பேசுவது காலம் காலமாக நடக்கும் விஷயம். ஒரு வித்யாசம் இருக்கனுமில்ல. நீங்கலெல்லாம் பேசினால் நல்லா இருக்கும் பிரபு. வந்து பேசுங்க.” என்றார்.

“ஏங்க உங்க நாவல்களைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டாமா? நானெல்லாம் பேசினா சரியா இருக்காதுங்க...! நீங்க ரிஸ்க் எடுக்காதிங்க...” என்று முருகனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.

“நீங்க வாங்க... அதெல்லாம் ஒன்னும் கவலைப் படாதீங்க...!” என்றார்.

“இவர் நம்மள எப்பிடி சூஸ் பண்ணாரு?” என்பதுதான் மனதில் எழுந்த கேள்வி. புத்தகம் வாசிக்கும் விஷயத்தில் படு சோம்பேறி நான். எனினும் முருகனின் எல்லா நாவல்களையும் வாசித்ததுண்டு. வாசக மனநிலையில், நினைவின் அடுக்குகளில் நீங்காமல் பொதிந்துள்ள புனைவுலகம் அவரது ஆரம்பகாலப் படைப்புகளான “ஏறுவெயில் (1991), நிழல்முற்றம் (1993), கூள மாதாரி (2000)” ஆகிய முதல் மூன்று நாவல்கள் தான். எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவு பதினோரு மணிக்கு ரயிலேரும் வரைகூட “என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?” என்பதையெல்லாம் யோசிக்கவில்லை. மறுநாள் காலை சேலம் ரயில் நிலையத்தில் கண்விழித்தபோது ஊரே பளிங்குபோல காட்சியளித்தது. ஆஹா... எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள்!.
நிகழ்வு துவங்க ஏறக்குறைய மூன்று மணிநேர கால இடைவெளி இருந்ததால், சேலம் ஜங்ஷனிலிருந்து – தமிழ்ச் சங்க வளாகத்திற்கு நடந்தே சென்று விடலாம் என்று யோசித்தவாறு நடந்துகொண்டிருந்தேன். ஒரு சிறிய சாலை. அதன் சின்னதொரு கிளைச் சந்தில் நுழைந்தேன். பெயர் கூட “ஜலால் தெரு” என்று நினைக்கிறேன். சிறுவனொருவன் கோலமிட்டுக் கொண்டிருந்தான். அவனது தாய் சிறுவனை ரசித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள். போக்கற்றுத் திரிந்ததில், போகும் வழியிலிருந்த “உழவர் சந்தை” எனது கண்களில் பட்டது. கால்கள் தன்னிச்சையாக சந்தையினுள்ளே புகுந்துவிட்டன. நேரம் சென்றது தெரியாமல் கூட்டத்தில் ஒருவனாக சுமார் ஒரு மணிநேரம் சுற்றிக் கொண்டிருந்தேன். வியாபாரிகளின், வாடிக்கையாளர்களின் பேச்சொலிகள் சலசலத்துக் கேட்டுக்கொண்டிருந்தன. சுற்றிலுமுள்ள தூரத்து மலைகளில் பட்டுத் தெரித்த சூரியனின் காலை ஒளி – காய்கறிகளின் வண்ணங்களை மெருகூட்டிக் கொண்டிருந்தன.

“கங்கணம், ஆளண்டாப் பட்சி, மாதொருபாகன்” போன்ற பெருமாள் முருகனின் படைப்புகள் யாவும் வெவ்வேறு மனித சூழலின், மனித இருப்பின், உறவு முரண்களின், வாழ்வியல் யதார்த்தத்தின் பல்வேறு கோண பரிமாணங்களை முன்வைத்து நகர்ந்தாலும் – அந்த அசல் மனிதர்களின் வாழ்வியல் பிடிப்பானது உழவாகவும், விளைச்சலாகவும் தானே இருக்கிறது. “ஆளண்டாப் பட்சி” – உழவுக் குடும்பம் ஒன்றின் சிதரலையும், அதன் பின்னணியில் கரடு முரடான காடொன்று உழவு நிலத்திற்கு ஏற்ப மாற்றம் கொள்ள - ஒரு குடும்பமே போராடுவதையும் தானே சித்தரிக்கிறது.

“ஏறுவெயில்” நாவலின் ஆன்மா கூட உழவுக் குடும்பம் ஒன்றின் சிதறல் சார்ந்த பதிவு தான். இந்த நாவல் வெளிவந்து ஏறக்குறைய இருபதாண்டுகள் ஆகிறது. விவசாய நிலத்தின் ஒரு பகுதியை “காலனிக் குடியிருப்புகளாக” மாற்ற வேண்டி, பல ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. பல குடும்பங்கள் இந்த நில எடுப்பினால் பாதிக்கப் பட்டாலும் - அதிலொரு குடும்பத்தின் நகரம் சார்ந்த இடப்பெயர்தலையும், அதன் பின்னணியில் சிறுவன் ஒருவனின் மனச் சிக்கலையும், குடும்பச் சரிவையும் முன்வைக்கும் நாவல். பெருமதிப்பிற்குரிய எழுத்தாளரான நாஞ்சில் நாடன் “நிழல் முற்றம்” நாவலுக்கு எழுதிய ‘கூரிய சிலாம்புகள்’ என்ற முன்னுரையில் “சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டை” என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டைகள் திக்குத்தெரியாத திசையில் விழுந்து முளைப்பதைப் போல, கிராமத்து மனிதர்கள் தமது வேர்களை இழந்து சிறுநகரங்களை நோக்கியும், பெருநகரங்களை நோக்கியும் புலம் பெயர்வதை உணர்த்தத்தான் இப்படிக் கூறுகிறார். அரசு தனது ஆதாயத்திற்காக வேண்டி சூப்பிவிட்டு தூக்கி எறிந்த மனிதர்கள் தான் ஏறுவெயில் நாவலின் மாந்தர்கள். “மணி” என்ற வளர்ப்பு நாய் நாவலின் முதல் அத்யாயதில் வருகிறது. அது சிறுவனின் வளர்ப்பு நாய். புலப்பெயர்வினால் பழக்கப்பட்ட நாயே கூட மனிதர்களுடன் நெருங்க முடியாமல் விலகிச் செல்கிறது. சிறுவனைப் பார்த்து எதிர் திசையில் ஓடுகிறது. போலவே நாட்களும் ஓடுகிறது. சிறுவன் இளைஞனாக வளர்ந்து நிற்கிறான். நாவலின் இடையில் ஆங்காங்கு நாய் தலை காட்டிவிட்டுச் செல்கிறது. கடைசி அத்யாயத்தில் அந்நாய் அடையாலங்கலற்று, வீதியொன்றின் குழியிடுக்கில் அழுகிய நிலையில், புழுக்கள் நெளிய சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சவமாகக் கிடக்கிறது. அதனை எடுத்து அடக்கம் செய்கின்றான் இளைஞன். ஒன்றின் அழிவில் இன்னொன்று பிறக்கிறது. நாயின் அழுகிய சதையில் நெளியும் புழுக்களைப் போல.

அரசு தான் என்றில்லை. விவசாயிகளே கூட நிலத்தைக் கூறுபோட்டு விற்கும் காலமிது என்பதும் மறுப்பதற்கில்லை. சாலை விரிவாக்கத் திட்டத்தில், தூக்கி வீசப்பட்டு இடம் பெயரும் குடும்பங்கள் தான் எத்தனை எத்தனை. கிராமம் கூறு போடப்படுவதையும், அதன் பின்னணியில் ஒரு நகரத்தின் வளர்ச்சி உருக்கொள்வதையும் – மனித உறவின் சிக்கல் மிகுந்த உணர்வுகளைக் கொண்டு படைக்கப்பட்ட நாவல்கள் நவீன இலக்கிய ஆக்கத்தில் முயற்சிக்கப்பட்டுள்ளதா என்று உறுதியாகத் தெரியவில்லை. இப்படைப்பை இயக்குனர் பாலுமகேதிரா திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, பின்னர் கைகூடாமல் போனதில் எல்லோருக்கும் வருத்தம் தான். கனவுகள் நிராசையாவது சகஜம் தானே! இரண்டு நாட்களுக்கு முன்னர் இயற்கையுடன் கலந்த பாலுவின் ஆன்மா சாந்தியடையட்டும்.

தமிழ்ச் சங்க வளாகம் – சேலம் ஜங்ஷனிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவாவது இருக்கும் என்றே நினைக்கிறேன். சாலையெல்லாம் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. வழியெல்லாம் கட்டடங்கள். சாலையோர விரிந்து பரந்த நிலத்தில் பிரம்மாண்ட பொறியியல் கல்லூரிகள். ஒரு காலத்தில் இவையெல்லாம் உழவு நிலங்களாகத் தானே இருந்திருக்கும். தமிழ்ச் சங்க வளாகத்தைச் சுற்றிலும் பெரும் பணக்காரர்களின் அழகழகான வீடுகள். உள் (விளையாட்டு) அரங்க காஸ்மோ கிளப், திருமண மண்டபம், மருத்துவமனை, விளையாட்டு மைதானம் என எத்தனையெத்தனை வளர்ச்சிகள். எல்லாம் மனிதத் தேவையின் பொருட்டு உருமாறியவை. விழா நடந்த அரங்கின் ஜன்னல் கதவைத் திறந்தால் – பிள்ளைகள் ஆக்ரோஷத்துடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயில் சிறுவர்களுக்கு நிலவின் சுகந்த ஒளி.

சிறுவர்களின் உலகமே வானத்தின் கீழுள்ள விரிந்த பரப்பு தானே. பதின்ம, வளரிளம் பருவத்து சிறுவர்களின் உலகம் பறந்து விரிந்தது. பெருமாள் முருகனின் படைப்புகளில் உலவும் சிறுவர்களின் உலகமும் அத்தகையதொரு எல்லையற்ற பெருவெளி. பதின்பருவத்து சிறுவர்களின் “உடல்சிக்கல், மனச்சிக்கல், வாழ்வியல் சிக்கல், பொருளாதாரச் சிக்கல்” மட்டுமல்லாது கிராமத்து வாழ் சிறுவர்கள் மீதான சாதிய, பாலியல் வன்முறைகளை எந்தவித சமரசங்களும் இன்றி இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட முறையில் இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறுவர்களின் சிக்கல்களை முன்வைத்த ஏராளமான சிறுகதைகள் நம்மிடம் இருக்கின்றன. எனினும் நாவலில் மிகக் குறைவாகத் தான் கையாளப்பட்டுள்ளன. கி. ராஜநாராயனின் “பிஞ்சுகள்”, பூமணியின் “வெக்கை” போன்ற படைப்புகள் சிறுவர் சார்ந்து படைக்கப்பட்டிருந்தாலும், பெருமாள் முருகனின் படைப்புகள் அவற்றிலிருந்து மாறுபட்ட பரிமாணத்தில் அமைந்திருக்கின்றன. கதைக்களத்தின் யதார்த்த வாழ்க்கை பலவிதங்களில் நம்முன் பரிமாணம் கொள்கிறது.

மனித வாழ்க்கை பாலியல் வாழ்க்கையை அல்லது பாலியல் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். மேலும் இன்பக் கொள்கையும் (Pleasure Principle), இருப்புக் கொள்கையும் (Reality Princple) உயிர்களின் உளப்பண்புகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் – இவற்றின் தாய் வேராகச் செயல்படுவது “கட்டாயமும் மூர்க்கமும்” என்கிறார். உடலே இவற்றின் ஆதாரம். உள்ளுணர்சிகள் அனைத்திற்கும் மூர்க்கம் பொதுவாக இருப்பதால், மூர்க்கத்தோடு தொடர்புடைய கட்டாயத்தன்மை (Compulsion) உள்ளுணர்சிகளின் பொதுப் பண்பாக அமைந்து விடுகிறது. உதாரணமாக, உடலியல் தேவைகள் (Somatic Needs) கட்டாயத்தின் அடிப்படையில் உந்தப்படுகின்றன. இந்த உந்துதல்களே இறுக்கம் மற்றும் தளர்வுக்குக் காரணங்களாக அமைகின்றன.

“நிழல்முற்றம், கூள மாதாரி” ஆகிய நாவல்களில் பதின்பருவத்து சிறுவர்களின் உடலியல் சிக்கலும், காம வேட்கையின் விருப்பங்களும் உளவியல் தன்மையில் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும். நிழல் முற்றத்தில் வரும் படத்துக்காரன் தனது மனைவியைப் பிரிந்து பாலியல் வறட்சியில் தவிக்கிறான். இந்நாவலின் முக்கியப் பாத்திரமான சக்திவேலின் முகம், படத்துக்காரனுக்கு மனைவியின் முகத்தை ஞாபகப்படுத்துவதால் மூர்க்கம் கொள்கிறான். ஆகவே, சக்திவேலை தனியாக அழைத்து வந்து மதுவினை அருந்தச் செய்து பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கிறான்.

“டே சக்தி... நெசமேச் சொல்றன்டா, எம்பொண்டாட்டி மூஞ்சியாட்டமே உனக்குடா. குண்டு மூஞ்சி... பொதுபொதுன்னு கன்னம்டா. லேசா வந்திருக்குதே மீச... அது மட்டும் இல்லாட்டி நீ அவளேதாண்டா. சக்தி, எங்கண்ணு... டேய்...” என போதையில் படத்துக்காரன் சக்திவேலினை அழுத்திப் பிடிக்கவும், “விலக்கவே முடியாத இருள்போல அவன் கவிவதைத்தான் சக்திவேலால் உணர முடிந்தது” என்ற விவரணையுடன் அத்யாயம் முடிகிறது. எதிர்க்க முடியாமல் இச்சையின் தூண்டிலில் விழுகிறான் சக்திவேல். (அத்யாயம்: 9, பக்கம்: 71-76)

போலவே, பாலியல் தொழில் செய்யும் திருநங்கை “கருவாச்சி” தனது வாடிக்கையாளருடன் இருட்டுத் திரையரங்கில் அமர்ந்திருக்க, கருவாச்சியை நெருங்குகிறான் சக்தி. பக்கத்து இருக்கையில் அமர்ந்து திருநங்கையின் இடுப்பில் கையை வைத்து முதலில் லேசாகத் தடவுகிறான். கருவாச்சி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கவும் இடுப்பை லேசாகத் தடவுகிறான்.

“காலு மசுறுக் கூட ஒழுங்கா மொளைக்காத உனக்கு... இது எதுக்குடா... ம்? லொக்கா லொக்காங்கிற... ம்...” என்கிறாள்/ன் கருவாச்சி. (அத்யாயம்: 12, பக்கம்: 97)

கைக்குழந்தையுடன் தனது மனைவி இருக்கும்பொழுது, சக்திவேலை கடையில் துணைக்கு வைத்துவிட்டு திருநங்கையுடன் உறவுகொள்ளச் செல்கிறான் பீடாக் கடைக்காரன். “வளரிளம் பருவத்தில் இருக்கும் சக்திவேல், பாலியல் வறட்சியில் தவிக்கும் படத்துக்காரன், கிளி போன்ற அழகான மனைவியிருந்தும் திருநங்கையுடன் சில நொடிகலேனும் புணரத் துடிக்கும் பீடாக் கடைக்காரன்” என உடல் சார்ந்து, இச்சை சார்ந்து இவர்களின் உள்ளுணர்வு மூர்க்கம் கொள்கிறது.

இதைத்தான் “மூர்க்கத்தோடு தொடர்புடைய கட்டாயத்தன்மை (Compulsion) உள்ளுணர்சிகளின் பொதுப் பண்பாக அமைந்துவிடுகிறது” என்று ஃப்ராய்ட் சொல்கிறார். மேலும், கட்டாயத் திருப்பத்தை இன்பியலுக்கும் (Hedonism) மேலான உளப் பண்பாகக் கொள்வதால் தான் இரட்டைப் பாலுமையே (Bi-sexuality) கட்டாயத் திருப்பத்திற்கு (Repetition Compulsion) அடிப்படையாக உள்ளது என்கிறார் (தனது ஆய்வு முழுமைக்கும் செக்ஸ் உணர்வை முதன்மை உணர்வாகக் கொள்ளும்) சிக்மண்ட் ஃப்ராய்ட். கிராமமும் அற்ற, நகரமும் அற்ற குழந்தைத் தொழிலாளர்களுடைய வாழ்வின் கணங்களை – சிறுவர்களின் போக்கிலும், தியேட்டர் தொழில் சார்ந்த சிக்கலான அனுபவங்களின் ஊடாகவும் உலவி உளவியல் நோக்கில் நிழல் முற்றத்து படைப்பாக்கியிருக்கிறார் பெருமாள் முருகன்.

கூள மாதாரியில் சிறுவர்களின் உலகம் வேறு வகையாகக் கையாளப் பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க கிராமத்துச் சிறுவர்களின் வாழ்வியல் சிக்கலையும், கொத்தடிமைகளாக வாழும் நிலையையும், சிறுவர்களுக்கு இடையிலுள்ள சாதிய அடுக்கின் கூறுகளையும் நுட்பமாக முன்வைத்து நகரும் படைப்பு. நான்கு சிறுவர்களும், மூன்று சிறுமிகளும் தான் நாவலிலுள்ள பிரதானப் பாத்திரங்கள். பொட்டல் மேய்ச்சல் வெளியில் தான் முழுக்கதையும் நகர்கிறது. கிரா-வின் பிஞ்சுகள் நாவலில் கூட சிறுவர்கள் பறவையைத் தேடி கிராமத்தின் விரிந்த நிலத்தில் இங்குமங்கும் அலைந்தாலும், வீடானது தவிர்க்க முடியாததோர் அம்சமாக படைப்பில் இருக்கும். கூள மாதாரி நாவலின் இரண்டு சின்ன இடங்களில் மட்டும் தான் வீடு இடம்பெறும். மற்றபடி இந்நாவல் முழுக்க முழுக்க மேய்ச்சல் நிலத்தையே (Geographical Landscape) சுற்றிவருகிறது. இந்த வடிவத்தில் நிறைய உலகத் திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் எழுத்திலக்கியத்தில் இதுபோன்ற முயற்சிகள் மிகச் சொற்பம் தான். பனைமரத் தோப்பு, தரிசு நிலம், கிணற்றடி, கிணற்றுக் குளியல், வெள்ளாமைப் படல் என இயற்கையின் சூழலில் நாவல் விரிந்து செல்கிறது. இந்தத் தன்மையில் அமைந்த தமிழ் நாவல்களே வேறு இல்லையென்று கூட சொல்லலாம். வட்டார பாலியல் அர்த்தம் பொதிந்த கொச்சை வார்த்தைகள் ஏராளமாக நாவலெங்கும் இரைந்து கிடக்கின்றன. பால்யகால கிராமத்து வாழ்க்கையை நினைத்துப் பார்க்கையில், இரைந்துகிடக்கும் வார்த்தைகளை எடுத்துக் கோர்த்து ரகசியமாக ரசிக்கத் தோன்றுகிறது. இதன் ஆங்கில மொழியாக்கமாகிய “SEASONS OF THE PALM” 2004 ஆம் ஆண்டிற்கான “கிரியாமா” பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

பசுபிக் கடலோர நாடுகள், தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பரப் புரிதலை (Mutual Understand) உருவாக்கும் முயற்சியாக இப்பகுதி (இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கத் துணைக்கண்டம் போன்ற நாடுகள்) வாழும் மக்களின் யதார்த்த வாழ்கையை மையமாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்படும் படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு கிரியாமா. அதன்படி 2004 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட இருநூறு நாவல்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து – கடைசி சுற்றுக்குத் தகுதி பெற்ற நாவகளில் கூள மாதாரி-யின் மொழியாக்கமும் ஒன்று. இதனை ஆய்வாளர் வ. கீதா மொழியாக்கம் செய்திருக்கிறார். நிழல் முற்றம் நாவலையும் வ. கீதா “Current Show” என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார். “மாதொருபாகன்” - அனிருத் மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

“மாதொருபாகன்” – காளியும் பொன்னாவும் குழந்தையில்லாத் தம்பதிகள். ஒருவரை ஒருவர் அளவுகடந்து நேசிக்கின்றனர். குழந்தையில்லா ஒரே குறைதான் அவர்களுக்கு. மகாபாரதத்தில் அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் வியாசன் விந்துதானம் செய்கிறான். தாயின் கூச்சத்தால் கருவிலேயே சபிக்கப்பட்டு பிறந்தவனாகிய பாண்டுவின் மனைவியான குந்தியும் விந்துதானம் பெற வேண்டி கணவனுடன் கானகம் செல்கிறாள். இது காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியில் “டெஸ்ட் டியூப் பேபி” வரை மழலைச் செல்வங்கள் பெற வேண்டி எவ்வளவோ நடக்கிறது. இந்நாவலும் அத்தகையதோர் சிக்கலான முடிச்சை உள்ளடக்கமாகக் கொண்டதுதான். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற புனிதத் தளம். அங்கு நடக்கும் பதினாங்கு நாள் திருவிழாவின் கடைசி நாளின் இரவுத் திருவிழா – கல்யாணமாகியும் பல ஆண்டுகள் குழந்தையில்லாத பெண்களுக்கு முக்கியமான நிகழ்வு. அப்பெண்கள் கோவிலுக்குச் சென்று முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு வந்திருக்கும் இளைஞர்களில் - தனக்குப் பிடித்த யாரேனும் ஒருவனுடன் இரவு முழுவதும் தங்கி, உடலுறவு கொண்டு கருவைச் சுமந்து வரலாம். வந்திருக்கும் பெண்களைப் பொருத்தவரை அவர்கள் சாமி. வாலிபர்களைப் பொருத்தவரை இந்த வாய்ப்பு கிடைத்தற்கரிய மகானுபவம். இளைஞனாக இருந்தபோது காளியும் உடலுறவு சுகத்தினை முதன்முறையாக அனுபவிக்க இந்த விழாவுக்குச் சென்றிருக்கிறான். அப்படியிருக்கையில், தனது மனைவியையே மாற்றான் ஒருவனுடன் உறவுகொள்ள அனுப்பி வைக்கவேண்டிய சூழல். காளியின் குடும்பமே இதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறது.

தனக்கு ஆண்மை இல்லையோ என்று நினைக்கும் கணவன் (காளி). குழந்தைப் பேரு இல்லாததால் மலடி என்பதைக் காரணம் காட்டி - கட்டிய புருஷனே தன்னை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொருத்தியைத் திருமணம் செய்துகொள்வானோ என்று நினைக்கும் மனைவி (பொன்னா). தம்பதிகளின் அகச்சிக்களையும், அவர்கள் சந்திக்கும் புறச்சூழல் நெருக்கடிகளையும் முன்வைத்து, திருச்செங்கோடு சமூகத்திலிருந்த ஒரு வழமையை பதிவாக்கிய அதே சமயத்தில், பக்கத்திற்குப் பக்கம் உணர்வுகளைக் கொப்பளிக்கும் படைப்பாக்கியிருக்கிறார் முருகன்.

இவரது படைப்புகளில் நல்லவர்கள் தீயவர்கள் என்ற பாகுபாடே இல்லை. பூக்குழி நாவலின் சரோஜாவைத் தீயிட்டுக் கொளுத்தும் மாமியார் மாராயி மற்றும் இதர சாதி வெறியர்களைத் தவிர்த்து எல்லோருமே அசலான யதார்த்த மனிதர்கள். சூழலின் தன்மையால் பிணக்கு கொள்கிறார்கள். உறவுகளுக்குள் விரிசல்களும் மோதல்களும் எழுகிறது. எனினும் இவர்கள் மனிதத்தின் மான்பைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். ஆளண்டாப் பட்சியில் வரும் விவசாயக் குடும்பத்தின் மூத்த ஆண்ணன், இளைய தம்பியான முத்துவின் மனைவி பெருமா தனியாக இருக்கும் சமயத்தில் நெருங்கிச் சென்று, மோகத்தின் உந்துதலில் அவளது ஒருபக்க மார்பை அழுத்திப் பிடிக்கிறான். அவள் திமிறிக்கொண்டு ஊரையே கூட்டிவிடுகிறாள். எனினும் மூத்த அண்ணன் தீயவனாகச் சித்தரிக்கப்படவில்லை.

போலவே “கங்கணம்” நாவலில் வரும் சக்கிலியன் குப்பன் – கதை நாயகனான மாரிமுத்துவின் பாட்டிக்கு இரவு நேரக் காவலிருக்கும் பொழுது, 17 வயது மகனின் திருமணதிற்காக வேண்டி மனம் பிறழ்ந்த நிலையிலிருக்கும் பாட்டியின் சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொள்கிறான். நாவலின் கடைசி அத்யாயத்தில் மாரிமுத்துவின் கால்களில் குப்பன் விழுந்து மன்றாடுகிறான். “பெரியாத்தா உள்ள செத்துக் கெடக்கறா! கொஞ்ச நேரத்துல உங்களுக்குக் கல்யாணம். உங்கள மார்மேல தூக்கி வளத்தேனே. உங்களுக்குக் கெடுதி நினைப்பேனா. நீங்க போயிடுங்கைய்யா” என்று மன்றாடுகிறான். இந்த சக்கிலியக் குப்பன் திருடன் அல்ல. சகமனிதன் மீதான, தனது முதலாளியின் வாழ்வு மீதான அக்கறை கொண்ட கிராமத்து மனிதன். 32 -வயதாகியும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிப் போகும் ஒருவனின் வாழ்க்கை மீதான அக்கறையை வெளிப்படுத்தும் தூய உள்ளம் கொண்ட நேசிக்கத் தகுந்த மனிதன். போலவே கங்கணம் மாரிமுத்து தூக்கக் கலக்கத்தில் நிலவின் ஒளியில் பட்டுத் தெறிக்கும் தாயின் இடுப்பைப் பார்த்து ஒருநிமிடம் சபலப்படுகிறான். அடுத்த நொடி சுதாரித்து உள்ளறையில் சென்று படுத்துக்கொள்கிறான்.

“அன்னைக்கும் இதே மாதிரி நிலாடா. இந்த நெலா இருக்குதே இது பொல்லாததுடா. யாரையும் மானங்கெட வெச்சிரும். அன்னைக்கும் அப்படித்தான். ஒடம்பெல்லாம் கணகணன்னு வேவுது. திடுக்குனு முழுச்சிப் பாக்கறன். எதுத்தாப்பல நெலா வெளிச்சத்துல ஒரு இடுப்பு மின்னுது. அப்படியே எந்திரிச்சிப் போயி அந்த இடுப்பக் கட்டிக்கோனும்னு தோணுது. எந்திரிச்சிட்டன். அப்பா எங்கருந்தோ அறிவு வந்து அது உங்கம்மாடான்னுது. அய்யோன்னு மனசுக்குள்ள கத்திக்கிட்டு ஊட்டுக்குள்ள எந்திரிச்சிப் போயிட்டன். அன்னையிலருந்து நான் தனியாத்தான் படுதுக்கறன். அப்பேற்பட்ட அயோக்கியண்டா நான்.” (கங்கணம்: பக்கம் - 299)

கூள மாதாரியின் செவிடி, தான் வேலை செய்யும் கவுண்டச்சியின் குழந்தையை எப்பொழுதும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருகிறாள். ஆடு மேய்க்கும் இடத்திற்கும் தூக்கிச் செல்கிறாள். ஒருமுறை கிணற்றில் குதித்து நீராடுகையில், குழந்தையின் ஞாபகம் வந்து கிணற்றின் மேலேறி வருகிறாள். “ச்சே... இந்தக் கொழந்தயோட கழுத்த பிச்சி வானத்துல எறிந்சிட்டா எவ்வளோ நிம்ம்மதியா இருக்கலாம்” என்று நினைக்கிறாள். யானையில் தூங்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும், “இந்தக் கொழந்தையையா அப்படி நெனச்சோம்...” என்று வருந்துகிறாள். வாழ்வின் நெருக்குதல்கள் இதுபோன்ற மனசஞ்சலத்தை உருவாக்குவதும், அதிலிருந்து விடுபடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றுதானே.

கிராமத்தில் வாழ்பவர்கள் எல்லா வகையிலும் வெள்ளந்தியானவர்கள் என்ற பொதுப்புத்தியில் எழுதிச் செல்லாமல், சந்தற்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களும் பலமும் பலவீனமும் கொண்ட எளிய கிராமத்து மனிதர்கள் தான் என்பது போல பாத்திரங்களை பெருமாள் முருகன் வார்த்தெடுக்கிறார்.

“இருண்ட உலகத்தில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் என்று யாருமே இல்லை. நல்லது-கெட்டது, தீயவன்–கொடியவன், நன்மை-தீமை, உயர்ந்தவை-தாழ்ந்தவை என்ற பேதம் எதுவுமே உலகத்தில் இல்லை. இவை யாவும் நம்முடைய கற்பிதங்கள்” என்று கூறுவார் எழுத்தாளர் பிரபஞ்சன். எல்லாமே சூழலைப் பொறுத்து வெளிப்படும் மனிதர்களின் கன நேர உணர்வுகள் தான். பெருமாள் முருகனின் மொத்த நாவல்களையும் அசைபோடுகையில் எழுத்தாளர் பிரபஞ்சனின் கூற்று உறுதிப்படுகிறது. நாஞ்சில்நாடன் பகிர்ந்ததைப் போல “சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டைகள் திக்குத் தெரியாமல் முளை விடுவதைப் போல”, இவர்கள் தத்துவ விசாரணைகள் எதுவும் அற்று வாழ்வின் மீதான நம்பிக்கையில் துளிர் விடக் கூடிய யதார்த்த மனிதர்கள்”. நாமெல்லாம் கூட அந்த நம்பிக்கையில் துளிர்த்தவர்கள் தானே...!

“இன்னும் பத்து நவல்களாவது எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. ஏராளமான வேலைகள் மிச்சம் இருகிறது” என்றார் முருகன். அந்த வகையில் நாம் பாக்கியசாலிகள். ஏனெனில், எதிர்காலத்தில் முருகனைப் பற்றி நிறையவே பேசலாம். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.
Prof. Ezhilarasi Akka (Mrs. Perumal Murugan) with her younger son Elam Parithi 
at Vilakku Viruthu Function.

Photo Courtesy By: www.facebook.com/chandrujcm