Monday, March 31, 2014

டாய்லெட் கழுவிய நடிகர்

கழிப்பிடத்தைச் சுத்தம் செய்ய தொடப்பக்கட்டையைக் கையில் எடுக்க வேண்டும். உடனே, நடிகர் நாசர் ஆம் ஆத்மியில் சேர்ந்துவிட்டாரோ என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். விஷயம் அரசியல் சார்ந்ததல்ல.

தான் படித்த கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக நாசர் அழைக்கப் பட்டிருக்கிறார். கல்லூரியின் மாணவர்களையும், நிர்வாகச் சூழலையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத் தனது ஆற்றாமையை நெற்றிப்பொட்டில் அறைந்தார் போலப் பதிவு செய்ய விளக்குமாறு என்று சொல்லக்கூடிய தொடப்பத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.
கேணி இலக்கிய சந்திப்பிலும், கணையாழி மாத இதழ் வெளியீட்டிலும் என நாசரை இரண்டு சந்தர்பங்களில் சந்தித்திருக்கிறேன். முதன்முறையாக நேரில் சந்தித்தது கேணியில் தான். சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். ரோமங்களற்ற பளபளப்பான கையில் சிராய்ப்புகள் இருந்தன.

“என்னங்க நாசர் கைய யாரோ புடிச்சி கீறி உட்டாப் போல இருக்குது? ஷூட்டிங்குல எதாச்சும் நடந்ததா?” என்றேன்.

புன்னகைத்தவாறு “இல்லைங்க... என்னோட தோட்டத்துல வேல செய்யச் சொல்ல செடியில கீறிக்கிச்சி... எனக்கு கார்டனிங் ரொம்பப் புடிக்கும்...” என்றார்.

“ஓ... சரி சரி...” என்றேன்.

அதன் பிறகு நாசரை எங்கும் சந்தித்ததில்லை. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியீடு கண்ட “கணையாழி” மாத இதழின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தன், ஓவியர் ட்ராஸ்கி மருது போன்றவர்களும் வந்திருந்தனர். விழா முடிந்து அரங்கின் வெளியில் நின்று, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். ட்ராஸ்கி மருதுவுடன், நடிகர் நாசரும் அரங்கை விட்டு வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தனர். நாசர் அணிந்திருந்த குர்தாவின் நீள அங்கி தரையில் புரண்டு கொண்டிருந்தது. யாரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

எனது அருகில் வந்ததும் “நாசர்...” என்றேன். கவனத்தை என் மீது குவித்தார்.

“உங்க பின்னாடி பாருங்க... நீங்க போட்டுண்டு இருக்க துண்டு தரையில பொறண்டுக்குனு இருக்குது...” என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் பேச்சைத் தொடர்ந்தேன்.

ஆடையை சரிபடுத்திக்கொண்டு “நன்றி...” என்ற வார்த்தையை உதிர்த்தவாறு கடந்து சென்றார்.

மேற்கண்ட இரண்டு சந்தற்பங்களைத் தவிர்த்து, ஓர் இணைய தொலைக் காட்சிக்காக நாசர் பேசியிருந்ததை மிகவும் ரசித்தேன். பொங்கல் விழாவுக்கான சிறப்பு நேர்முகம் அது. “தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, நம்மளோட தமிழ் மக்களுக்கு நீங்க என்ன மெசேஜ் சார் சொல்ல விரும்புறீங்க?” என்பது தான் மைக்கை நீட்டிய நிருபரின் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். இயற்கையைக் கபளீகரம் செய்யும் தமிழர்களின் போக்கை அந்தப் பேட்டியில் சாடியிருப்பார். சூடான எண்ணெயில் கொட்டப்பட்டக் கடுகுபோல பொரிந்து தள்ளியிருப்பார். அந்தப் பேட்டி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாரம்பரிய விவசாய முறை காணாமல் போவதைத் தனது நேர்முகத்தில் குறிப்பிட்டு “இந்த மாதிரி சூழல் இருக்கும் பொழுது, எந்த லட்சணத்துல நான் தமிழர்களுக்கான பண்டிகைத் திருநாள் வாழ்த்துக்களை சொல்றது... நீங்களே பதில் சொல்லுங்கள்...” என கோபத்தைக் கொட்டியிருப்பார்.

நேற்றைய தினம் திரைக்கல்லூரி மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது “அண்ணா... நாசர் எங்க காலேஜிக்கு வந்திருந்தார் போல...” என்றான். மார்ச் 22, 2014 அன்று திடீரென விசிட் செய்திருக்கிறார் போல.

“ஆமா... அவரும் உங்க காலேஜில தானே படிச்சாரு... அதனால வந்திருப்பாரு...” என்றேன்.

“இல்லன்னா.... வந்தவரு எல்லாரையும் திட்டிட்டுப் போயிருக்காரு.” என்றான்.

“அடடே... எதாச்சும் கேனத்தனமா கேள்வி கேட்டுட்டிங்களா? நாசர் அனாவசியமா கோவப்பட மாட்டாரே...!” என்றேன்.

“இங்கப் படிச்சிட்டு வெளியில வந்து என்ன மாதிரியான படத்த எடுக்குறீங்க? அதுக்கா இங்கப் படிக்கிறீங்க...?–ன்னு கேள்விமேல கேள்வி கேட்டிருக்காரு. அவருக்கு பதில் சொல்ல முடியாம எல்லாரும் திருதிருன்னு முழிச்சி இருக்காங்க” என்றான்.

நல்ல சினிமா சார்ந்த அடிதடிகளை, விமர்சனத் திட்டுக்களை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். ஊர் ரெண்டு பட்டதில் சந்தோஷிக்கும் கூத்தாடிகளைப் போல நாம் வேடிக்கைப் பார்க்கலாம். நாசரின் அடுத்த செயல் தான் மிக முக்கியமான ஒன்று.

“நீங்க யூஸ் பண்ற டாய்லெட்ட கூட சுத்தமா வசிக்கத் தெரியாத உங்களால, எப்படி ஒரு நல்ல சினிமாவ எடுக்க முடியும்”-ன்னு கேள்வி கேட்டுட்டு நேரா ஹாஸ்டலுக்கு போயிருக்காரு. தொடப்பத்த எடுத்து மாணவர்கள் பயன்படுத்தும் டாய்லெட்ட கிளீன் பண்ண ஆரம்பிச்சிட்டாறாம்.

“நீங்க இத பண்ணாதிங்க சார்... நாங்களே பண்ணிடறோம்...” என்று கல்லூரி ஆசிரியர்கள் கெஞ்சிக் கூத்தாடி இருக்கிறார்கள்.

“கூத்தாடி வாழ்க்கையெல்லா....ஆஆஆ...ம் அந்தக் காத்தாடி படும்பாடு, அடி ஆத்தாடி வெக்கக்கேடு” என்று வாயசைத்து நடித்த அவதாரமாயிற்றே, ஆகவே சுற்றி நின்று பேசியவர்களின் வார்த்தைகளைத் தொடர்ந்து உதாசீனம் செய்தவாறு நாசர் தொடர்ந்து கழிப்பறையைச் சுத்தப்படுத்தி இருக்கிறார். அதன் பிறகு டிப்ளமோ மாணவர்கள் இரண்டு பேர் சுத்தப்படுத்த முன்வரவும் தான் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

நாசரும் திரைக்கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலைராணி, ரகுவரன் போன்றவர்கள் அவருடன் படித்த சக தோழர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் படித்தபோது இருந்த கல்லூரியின் சூழல் தற்போது இல்லை. பாதி இடத்தை டைடல் பார்கிற்கும், மீதி இடத்தை ராமானுஜன் டெக் பார்க் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கும், மேலும் கொஞ்ச இடத்தை தேவைப்படும் மற்றவர்களுக்கும் தாரை வார்த்திருகிறார்கள். சென்ற வருடம் கல்லூரி வளாகத்தில் இருந்த ஜப்பனீஸ் கார்டன் அழிக்கப்பட்டு ஏதோ புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தீக்கதிரில் என்று நினைக்கிறன், ஃபிலிம் ரோலை பிளாக்கில் விற்று பணம் பார்க்கும் கல்லூரியின் இழி செயலைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். அது சார்ந்த சலசலப்பே எழவில்லை.

“நான் காவேரி தண்ணீர் பிரச்னைக்கு உண்ணாவிரதம் இருக்கறேன். தமிழர்கள் எனது பேச்சு, அவர்கள் தான் எனது மூச்சு” என்று பஞ்ச் டயலாக் உதிர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல், “கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் உறவு வச்சிக்கறது தப்பில்ல. ஆனா, பாதுகாப்பான உடலுறவு வச்சிக்கணும். அந்த விஷயத்துல பொண்ணுங்க கவனமா இருக்கணும்” என்று பேசி மீடியாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசி, அதே மீடியாவில் மாட்டிக் கொண்ட சுகாசினி வரை திரைக் கல்லூரியில் படித்த செலப்ரிட்டிகளை பட்டியலிட்டால் அனுமன் வால் போல நீளும். தான் சார்ந்த சூழலின் அவலத்தைக் கண்கொண்டு பார்த்து, மாற்றத்திற்கான சிறு முன்னெடுப்பை நிகழ்த்தும் பண்பு மிக முக்கியமான ஒன்று. நடிகர் நாசருக்கு அந்தப் பண்பு இருக்கிறது என்பது பல சந்தர்பங்களிலும் வெளிப்படுகிறது. நாசரைப் பார்க்கும் பொழுது மிக சந்தோஷமாக இருக்கிறது.

நானும் பார்க்கிறேன். பறக்கும் ரயில் நிலையங்களிலுள்ள ஒரு கழிப்பிடமும் பயன்பாட்டில் இல்லை. சென்னை நகர்புறத்தின் இலவசக் கழிப்பிடங்களில் ஒன்று கூட சரியான நிலையில் இல்லை. வேண்டுமெனில் இரவு நேரத்தில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பிடத்தைப் பாருங்கள். பேய் வீடு கெட்டது. இதையெல்லாம் பல ஆயிரம் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆகவே பாழடைந்து கிடக்கிறது என்றுகூட சமாதானம் சொல்லலாம். “பச்சையப்பன் கல்லூரி, உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி, நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்” என ஒரு கல்லூரியிலும் சரியான கழிப்பிட வசதி மாணவர்களுக்கு இல்லை. அரசுப் பள்ளிகளிலும் இதுதான் நிலைமை. பச்சையப்பன் கல்லூரியின் விடுதி என்றைக்கு மாணவர்களின் தலையில் விழுந்து பிரச்சனை பூதாகரமாக வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை. அரசு கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் கழிப்பிட வசதிகளையும், குடி தண்ணீர் வசதிகளையும் யாரொருவர் விவரணப் படமாக்கினாலும் சர்வதேச விருது பெறுவது நிச்சயம். ஆஸ்கர், கேன்ஸ் போன்ற விருதுகள் கிடைத்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? மாணவப் பருவத்திலேயே சுகாதாரமான பயன்பாட்டினைப் பழக்க வழக்கமாக்காமல் சுற்றுச்சூழலின் சுகாதாரத்தை எப்படிப் பேண முடியும்?

வினோபாவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறதாம். பயணப்பட்டு புதிய இடத்திற்குச் செல்ல நேர்ந்தால் - முதலில் கழிப்பிடத்தைச் சென்று பார்ப்பாராம். ஒருமுறை அவரிடம் காரணத்தைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு “கழிப்பிடம் சுத்தமாக இருந்தால் மற்றதெல்லாம் சுத்தமாக இருக்கும். மக்களும் தெளிவோடு இருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்றாராம். அரசியல் செய்பவர்கள் இந்த ஒரு கொள்கையைப் பின்பற்றினாலே போதும். நாடே சுத்தமாகிவிடும்.

ஒருமுறை டி.ஜி. வைஸ்னவா கல்லூரியில் மூன்றாம் அரங்கின் ஸ்பார்டகஸ் நாடகம் ஏற்பாடாகியிருந்தது. ஓவியம் குறித்து தீராநதியில் எழுதும் மோனிகா நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள். மு. ராமசாமியும், கருணாபிரசாத்தும் சக நடிகர்களுடன் ஒத்திகையில் இருக்க, ஒய்யாரமாக காரில் வந்து இறங்கினார் நாசர். “அவரிடம் பேச என்ன இருக்கிறது?” என்ற யோசனையில் விலகிச்சென்று நின்று கொண்டேன். இனி எங்காவது நாசரைப் பார்க்க நேர்ந்தால், விரும்பிச் சென்று கைகுலுக்கியவாறு “நான் உங்களுடைய தீவிர ரசிகன். ஐ லவ் யூ நாசர்” என்பேன்.

கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன இந்த அதரப்பழசான வார்த்தைகளை மெல்லிய புன்சிரிப்புடன் – கேட்டும் கேட்காமலும் நாசர் கடந்து செல்லக்கூடும். வெள்ளித் திரையின் அசையும் காட்சிகளில் தோன்றுவதற்கான சாமான்ய ரசிகனின் பாராட்டாகக் கூட கருதிக்கொள்ளலாம். எனினும் இது, தான் படித்த கல்லூரியின் பராமரிப்பற்ற கழிவறையைச் சுத்தப்படுத்திய அருமைத் தோழருக்கான வார்த்தைகள். வேறென்ன சொல்ல...!

1 comment:

  1. நண்பரே


    அடிப்படையிலேயே நமது மக்களுக்கு சுகாதரம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

    இதைச் சொல்ல இன்னொரு பெரியார் தேவை??

    ReplyDelete