Thursday, June 12, 2014

ஒரு நடிகை பேசுகிறாள் – ரோஹிணி

இரண்டு வருடங்களுக்கு முன்பு, பெசன்ட் நகர் “சந்திரலேகா ஸ்பேசஸ்” அரங்கில் நவீன நாடகம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. சீக்கிரமே சென்றுவிட்டதால் ஸ்பேசஸ் அரங்கின் முன்பிருக்கும் சிமென்ட் குட்டிச்சுவரில் உட்கார்ந்துகொண்டு, தொலைதூரக் கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளைச் சுடிதாரில் பக்கத்தில் ஒரு பெண்மணியும் உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நேரம் கழித்து தான் உரைத்தது அவர் “நடிகை ரோஹிணி” என்பது. அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லை. சிநேகத்துடன் மெல்லிய புன்னகையை வீசினார். நானும் சிரித்துவிட்டு அங்கிருந்து கொஞ்சம் விலகிச் சென்று அமர்ந்துகொண்டேன். பிரபலங்களுக்கு நம்மால் கொடுக்கக் கூடிய ஒரே நல்ல விஷயம் ப்ரைவசி தானே...! ஏற்கனவே சில புத்தக வெளியீடுகளில் அவரை தூரத்திலிருந்து பார்த்ததுண்டு. எனினும் கடந்த ஜனவரியில் ஏற்பாடாகியிருந்த “தி ஹிந்து லிட் ஃபார் லைப்” நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக நீண்டநாள் கழித்து ரோஹிணியை மறுபடியும் பார்க்க நேர்ந்தது. அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசியதும் அப்பொழுதுதான்.

தமிழ் பெண் கவிஞர்களும் நண்பர்களுமான “சல்மா, அனார், ஸர்மிளா சையத்” ஆகியோர் ஓர் அமர்வின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டதால் நானும் சென்றிருந்தேன். ஸர்மிளா சையத் ஒரு கேமராவைக் கொடுத்து “பிரபு... கொஞ்சம் போட்டோஸ் எடுத்துக் கொடுங்களேன்” என்றார்கள். எனக்கும் நிகழ்வினை ஒலிக் கோப்புகளாக ரெக்கார்ட் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், நிகழ்வினை கவனிக்கப் பணியமர்த்தப் பட்டிருந்த கல்லூரி மாணவர்கள், “எங்களுக்குக் கொடுத்துருக்குற இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இப்படிங்க சார்... நீங்க இங்க உட்காரக் கூடாதுங்க (தரையில) சார். நீங்க இங்க நிக்கக் கூடாதுங்க சார்” என்று படுத்தி எடுத்தார்கள்.

“யோவ்... நீங்க கூப்பிட்டு இருக்குற சீஃப் கஸ்ட் தான்யா போட்டோ எடுக்கச் சொன்னாங்க. இங்க உக்காந்தாத் தான்யா ரெக்கார்ட் பண்ண முடியும்...” என்று சொல்லிப் பார்த்தேன். “ஹூஹூம்... நாங்களா விடுவோம்... எங்களுக்குக் கொடுத்திருக்க இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இப்(பி)டீங் சார்... நீங்க இங்க உட்காரக் கூடாதுங்(க) (தரையில) சார். நீங்க இங்க நிக்கக் கூடாதுங்(க) சார்” என்று படிய பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடினார்கள். “போங்கடா... நீங்களும் உங்களோட எழவு ஈவன்டும்” என்று தூரப்போய் நின்றுகொண்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் ரோஹிணியைச் சந்தித்து “ஏங்க... இந்தப் பசங்க இப்படிப் படுத்தி எடுக்குறாங்க? பேஜார் பண்றாங்களே” என்றேன் எரிச்சலுடனும், கோபத்துடனும்.

“போயெட்ஸ் வேல்யூ அவங்களுக்கு என்னங்க தெரியும்...? நீங்க என்கிட்டே சொல்லி இருந்திங்கன்னா நான் அவங்கக்கிட்டப் பேசி உங்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பேனே...!?” என்றார். உண்மையில் வாய் வார்த்தைக்குக் கூட அப்படிச் சொல்லியிருக்கலாம். எனினும் அடுத்தவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மை எல்லோரிடமும் காணக் கிடைப்பதில்லை. ரோஹிணியிடம் அது நிறையவே இருக்கிறது. 

“மகளிர் மட்டும்” திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் பிணமாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார். கூடவே ரோஹிணியும் நடித்திருப்பார். நாகேஷ் அளவிற்கு ரோஹினியின் நடிப்பு இந்தக் காட்சியில் சிலாகிக்கப் படவில்லை. நினைத்துப் பார்க்கையில் ரோஹிணியின் அந்தப் பாத்திரம் தான் மனதில் பசுமையாக நிற்கிறது. நாகேஷுக்கு இணையாக அவரும் அதில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.

தமிழோ, ஆங்கிலமோ ரோஹினியின் உச்சரிப்பு ஸ்படிக சுத்தமாக இருக்கும். அவருடைய மொழியாளுகையும் அசத்தலாக இருக்கும். தமிழிலும், ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் வெளியாகக் கூடிய நவீன இலக்கியங்களைத் தேடிப் படிக்கிறார். இலக்கியப் பரிட்சயம் ரோகினிக்கு நிறையவே இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளப் திரைப்படங்களில் அரிதாரம் பூசியிருக்கும் இவர் - பச்சைக்கிளி முத்துச்சரம் உட்பட மூன்று திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் தியேட்டர் ஆர்டிஸ்டும் கூட. டப்பிங் ஆர்டிஸ்ட்டாக மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களுக்கு ரோஹிணிதான் தொடர்ந்து குரல் கொடுக்கிறார். தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என வெவ்வேறு தளங்களில் இயங்கிய ரோகினி தற்போது “அப்பாவின் மீசை” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். (இயக்குனர் சேரனின் தயாரிப்பு என்று நினைக்கிறன்.) கேணி சந்திப்பில் என்ன பேசப் போகிறார் என்ற ஆவல் நிறையவே இருந்தது. “இப்போ... இங்க பேசப் போற விஷயங்கள வேற எங்கயும் பேச முடியாது... அதனால அந்த விஷயங்கள இங்க பேசுறதுதான் சரியாவும் இருக்கும்...” என்று பாகிர்வைத் துவங்கினார்.

“ரெண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் தற்செயலாக அமைகிறது. ஒண்ணு, நாம ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது மூன்றாம் பாலினராகவோ பிறப்பது. இன்னொன்னு நாம பொறக்கற எடம். நேரமும் கூட அதை நிர்ணயிக்குது. நான் பெண்ணாகவும், நடிகையாகவும் ஆனது தற்செயலாக நடந்த விஷயங்கள். அதற்காக நிறைய வருத்தப்பட்டிருகிறேன். I was made to feel bad. சின்னச் சின்ன விஷயங்கள்ல அத புரிஞ்சிக்குனு இருக்குறேன்.” என மர்ம நாவலின் முதல் அத்யாயம் போலவே ரோஹினியின் ஆரம்பப் பேச்சு அமைந்தது. எனினும் திறந்த புத்தகம் போலத் தனது வாழ்வின் முக்கியமான தருணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உயிர்மை புத்தக வெளியீட்டில் (2005) எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தை வெளியிட, ரோகினி பெற்றுக் கொண்டிருக்கிறார். புத்தகத்தை வெளியிட்ட சுஜாதா “உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா...?” என்று கேட்டிருக்கிறார். படிச்சவங்க, அறிவாளிங்க முதல் சாமான்ய மக்கள் வரை “நடிகைன்னா இப்படித்தான் இருப்பாங்க... அவங்க படிக்கவே மாட்டாங்க” என்ற ஸ்டீரியோ டைப் பார்வை இருக்குதில்லையா, அதைப் பற்றித் தான் இன்னைக்குப் பேசலாம்னு இருக்குறேன். அசோகமித்திரன் எவ்வளோ பெரிய ரைட்டர், அவர் எழுதிய ‘கரைந்த நிழல்க’ளாக இருக்கட்டும், “மானசரோவர், தண்ணீர்” என எல்லா நாவல்களிலும் நடிகைகளை அவர் சித்தரித்திருக்கும் விதம் ஏற்புடையது அல்ல. அவர் மட்டும்தானென்று இல்லை. நடிகைகளைப் பற்றி எழுதிய எல்லோருமே ஒரு ஸ்டீரியோ டைப் மனப்பான்மையில் தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பில் ‘நல்ல போலீஸ், கெட்ட போலீஸ்’ என்று சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், நடிகை எனில் அவளுடைய சித்தரிப்பு ஸ்டீரியோ டைப்பில் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். கரைந்த நிழகள் நாவலின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் உள்ள குறையாக எனக்குத் தோன்றுவது இதுதான்.

மகளிர் தினத்தில் பேசுவதற்காக ஒரு கல்லூரிக்குப் பேச அழைத்திருந்தார்கள். ஒருமணி நேரம் “பெண்ணியம்” பற்றிப் பேசுவதற்கு ஏற்றார்போல தாயார் படுத்திக்கொண்டு சென்றிருந்தேன். நிகழ்ச்சியில் பேசி முடித்ததும் அவர்களிடம் கேட்டேன்: “நீங்க எதாச்சும் சொல்றதா இருந்தா சொல்லலாம்.”

“மேடம்... நீங்க எப்போ பேசுறத நிறுத்துவிங்கன்னு எதிர்பார்த்தோம்... எங்களோட பஸ்சுக்கு டயம் ஆகுது” என்றார்கள். ஒரு கல்லூரிக்கு எட்டு மணிநேரம் பயணம் செய்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். “இனிமே ப்ரிப்பர் பண்ணிட்டுப் போறதெல்லாம் வேஸ்ட். அடியன்ஸ்கிட்ட எதாச்சும் கேட்டுட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பேசலாம்” என “உங்களுக்கு எதைப் பத்திப் பேசணும்” என்று கேட்டேன்.

“அச அதிகம் வச்சி...” பாட்டுக்கு டேன்ஸ் ஆடுங்க என்றார்கள். என்னிக்கோ நான் ஆடுன ஒரு பாட்டுக்கான டேன்ச மேடையில ஆடச் சொன்னங்க. நாம பரிமாறிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்குது இல்லையா?

“நடிகைன்னா இப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு இதுமட்டும் தான் தெரியும்” என்று எல்லோரும் நினைகிறார்களோ? என்று பலநேரங்களில் நினைத்துக் கொண்டதுண்டு. அதனால் வருத்தமும் அடைந்ததுண்டு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தாலும், பதினைந்து வயதில் – என்னை விட இருபது வயது அதிகமுடைய நடிகருக்குக் கதாநாயகியாக ஒரு படத்தில் ஒப்பந்தமானேன். அந்த வயதிற்கே உரிய குழப்பங்கள், அந்த நடிகருடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது உண்டான குழப்பங்கள் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். “இந்தப் படத்திற்குப் பிறகு நீ இன்டஸ்ரியில இருந்த... நான் என் தொழிலையே விட்டுடறேன்” என புலியூர் சரோஜா கூட சொல்லியிருக்கிறார். டெக்னீஷியஸ் எல்லோரையும் அவ்வளோ படுத்தி இருக்கிறேன். சிறுவயதிலிருந்தே நடிக்க வந்துவிட்டதால், பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிக்கறதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் தான் இருந்தேன். மலையாள இயக்குனர் பரதன், பாலுமகேந்திரா போன்றவர்களுடன் வேலை செய்தபோதுதான், நடிப்பின் மீது ஆர்வம் வந்தது.

முதல் ஐந்து வகுப்புகள் வீட்டிலிருந்தே படித்தேன். ஒருவர் வீட்டிற்கு வந்து தெலுங்கு கற்றுக் கொடுப்பார். தமிழ் சரியாகப் பேச வராது. தேவையான விஷயங்கள தெலுங்கில் எழுதி வைத்துப் படிப்பேன். சான்ஸ் கேட்டுத் தேவரைப் பார்க்கச் சென்றபோதும், நான்கு வரிகள் எழுதிக் கொடுத்தார்கள். அதைத்தான் அவரிடம் சொன்னேன். அவருக்கும் என்னைப் பிடித்திருந்தது. ஒரு தெலுங்கு படத்துல கிருஷ்ணர் வேஷத்துல நடிச்சிருந்தேன். அந்த படத்த தேவர் பார்த்திருக்காரு. முருகன் வேஷத்துல நடிக்கறதுக்கு என்னோட முகம் சரியா இருக்கும்னு நெனச்சாரு போல. அதனால முருகர் வேஷத்துல நடிக்கறதுக்கு சேன்ஸ் கெடைச்சுது. அப்போ எல்லாம் லைவ் சவுண்ட் ரெக்கார்ட் பண்ணுவாங்க. “முருகன் அடிமை” என்ற படத்துல நடிக்க மூணு மாசம் டயம் இருக்குது. அதுக்குள்ளே தமிழ் சொல்லிக் கொடுங்க என்று தேவர் சொன்னார். அப்படித்தான் தெலுங்கு, தமிழ்ன்னு மத்த பாடங்களையும் ஆள வச்சி சொல்லிக் கொடுத்தாங்க. அப்பாவுக்குத் தமிழில் ஆர்வம் இருந்ததால், எனக்கும் தொடர்ந்து சொல்லிக் கொடுத்து ஆர்வத்தை ஏற்படுத்தினார். அப்படித்தான் தமிழ் மீதும் ஆர்வம் வந்தது. ஆர்வம் வந்து மேலும் மேலும் படிக்க ஆரம்பித்ததும் தான் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. வாழ்க்கையையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நாகேஷ காமெடியனா, குணச்சித்திர நடிகரா உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், நாகேஷ் தெலுங்குல ஒரு படம் டைரக்ட் செய்திருக்காரு. அந்தப் படத்துல நான் தான் சைல்ட் ஆர்டிஸ்டா நடிச்சேன். நாகேஷப் பொருத்தவரை அழுவர சீன்ஸ் வந்தா கிளிசரின் போட விடமாட்டாரு. காட்சிய சூட் பண்றதுக்கு முன்னாடி கூப்புடுவாறு, கண்ணையே உத்துப் பார்க்கச் சொல்லுவாரு. சில நொடிகள் அவரோட கண்ணையே பார்த்துட்டு இருந்தால் போதும். எங்கிருந்துதான் வரும்ன்னு தெரியாது. அடக்கமுடியாம அழுக பொத்துக்குனு வரும். உடனே சீன சூட் பண்ணிடுவாங்க. அழுவர சீன்ஸ் வந்தால், ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் எக்ஸ்ட்ரா கெடைகும்றதால எனக்கும் சந்தோஷமா இருக்கும். ரொம்பநாள் கழிச்சி தியேட்டர் நாடகங்களல்ல நடிக்கும் போது தான், நாகேஷ் சொல்லிக் கொடுத்த இந்த டெக்னிக்க அங்க யூஸ் பன்றத பார்த்தேன். அப்போதான் ஒண்ணு புரிஞ்சிது... எனக்கே தெரியாம நான் நெறைய ஸ்கூலுக்கு போயிருக்கேன். நான் யாருகிட்ட எல்லாம் நடிக்க போனேனோ அவங்ககிட்ட இருந்து நெறைய விஷயங்களைக் கத்துட்டு இருந்திருக்கேன்.

உலகம் எனக்கு அறிமுகமான பத்திரிகைகள் மூலம் தான். ஆனால் பத்திரிகைகள் நம்மைப் பற்றி “கவர்ச்சிக் கண்ணி, அது இதுன்னு” எழுதுறாங்க. ஆரம்பத்துல இதுல இருந்தெல்லாம் எப்படி தற்காத்துக் கொல்றதுன்னு தான் தோணுச்சி. பெண்னென்றாலே இரண்டாம் குடிகளாகத் தான் பார்கிறார்கள். அதனினும் தரம் குறைந்த இடத்தைத் தான் நடிகைகளுக்குக் கொடுக்கிறார்கள். அறிவார்த்த சமூகமான எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் இருக்கும் சூழலிலும் இது போன்ற விஷயங்களை நேரடியாகவே எதிர்கொண்டேன். நம்முடைய சமூகம் ஸ்டீரியோ டைப் சமூகமாகவே தான் இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணம். ஏதாவது பிரச்சனையில் பெண் கைதானால் “அழகி கைது” என்று பத்திரிகைகள் எழுதுகிறார்கள். “அப்போ அழகன் என்ன ஆனாரு?. அத பத்தி எல்லாம் எழுத மாட்டாங்க.”

இதையெல்லாம் யோசித்தபோது, ரெண்டு தற்செயலா நடந்த விஷயத்துக்காக I was made feel bad-னு சொல்லி இருந்தேன் இல்லையா?. Then, I took a decision. I was not going to feel bad. மாறாக நான் கூச்சப் படப்போவதில்லை. பெண்ணாகப் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன். அதிலும் நடிகையாகப் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் என்று என்னை நானே உந்திக் கொண்டேன். எனினும் பிரக்ஞையுடன் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் மலையாளத்தில் நான் செய்த படங்கள் தான். மலையாள நடிகர்களான வேணு, கோபி போன்றவர்களுடன் நடித்தது பெரிய அனுபவம். இயக்குனர் பரதனுடன் வேலை செய்த பிறகுதான் சினிமாவையே நேசிக்கக் கற்றுக் கொண்டேன் என்று கூட சொல்லலாம். அடிப்படையில் பரதன் ஓர் ஓவியர். அவருடன் பணியாற்றுவது பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு ஒப்பானது. அவங்க உங்களுக்குள்ள இருக்குற கிரியேடிவ் டேலண்ட வெளியைக் கொண்டு வருவாங்க. தமிழில் பாலுமகேந்திரா போன்றவர்களுடன் பணியாற்றிய போதும் அதுபோல உணர்ந்ததுண்டு.

நீங்க எவ்வளோ தான் தெறமையானவங்களா இருந்தாலும், நெறைய விஷயங்களைக் கத்துக்கிட்டாலும் – ஒரு நடிகைன்னா சொசைட்டியில மரியாத இருக்கறது இல்ல. இதையெல்லாம் நெனச்சி ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டப்பட்டதுண்டு. இவற்றிலிருந்தெல்லாம் என்னை மீட்டெடுப்பதற்கு துணையாக இருப்பது கலையும், இலக்கியமும், நண்பர்களும், தியேட்டரும் (நாடக ரங்கம்) தான். நான் இப்படி இருக்கேன்னு எதையும் சொல்லத் தெரியல. ஆனால் எதையெல்லாம் செய்வதில் எனக்கு இன்பம் கிடைக்கிறதோ, அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன். மற்றபடி நான் பேசியதில் ஏதாவது தவறிருந்து சுட்டிக் காட்டினால் அதைப் பற்றிப் பேசலாம். “இல்ல... தமிழ் ரைட்டர்ஸ் நல்ல படியாகவும் எழுதி இருக்காங்கன்னு மேற்கோள் காட்டினிங்கன்னா கொஞ்சம் சந்தோஷமா இன்னிக்கி வீட்டுக்குப் போவேன்.” என்று முடித்துக் கொண்டார்.

தண்ணீர் நாவலின் ஜமுனா கதாப்பாத்திரத்தை முன்வைத்தும், அரந்தை நாராயணின் இரண்டு படைப்புகளை, சினிமா நடிகையை மையப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு நாவல்களைக் குறித்தும் ஞாநி தனது பார்வைகளை முன்வைத்தார். அதில் ஒரு நாவலை ஞாநி தொலைக்காட்சித் தொடராகவும் எடுத்திருப்பதாகப் பகிர்ந்துகொண்டார். ஞாநி தனது அறிமுக உரையில் ரகுவரனைப் பற்றிய எந்தக் கேள்விகளையும் கேட்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். “ஐயையோ... ரகுவ பத்தி பேசறதுக்கு நெறைய விஷயங்கள் இருக்கு. தாராளமா கேட்கட்டும்” என்று ரோகினி உடனே ஞாநியின் ஆட்சேபனையை மறுத்துக் கூறினார். எனினும் யாரும் ரகுவரனைப் பற்றி இறுதிவரை வாய் திறக்காமல் இருந்தனர்.

“ஒரு படத்துல கமிட் ஆனவுடன் ரகுவரன் நிறைய ஹோம் வொர்க் செய்யவாறேமே...? அதப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்?” என்றார் ஒளிப்பதிவாளரும், ஆவணப்பட இயக்குனருமான அருள்மொழி.

ரோஹிணி: ஐயோ ஃபென்டஸ்டிக் கொஸ்டின்... ரகுவபத்தி கேக்கவே இல்லையேன்னு நெனச்சேன். ஒவ்வொரு படத்துக்கும் அவர் பண்ற ஹோம் வொர்க் பயங்கரமா இருக்கும். மொதல்ல ஒரு படத்துல கமிட் ஆனா காஸ்டியூம்ஸ் வாங்க ஆரம்பிப்பாருங்க. அதெல்லாம் பைத்தியக்காரத் தனமா இருக்கும். ஒவ்வொரு மெட்டீரியலையும் பார்த்துப் பார்த்து செலக் செய்வாரு. ஒவ்வொரு கடையா தேடி அலையுவோம். கேரக்டருக்கு ஏத்தா மாதிரி கண்ணாடி வேணும்னா... ஒவ்வொரு பழைய கண்ணாடி இருக்குற கடையா தேடி அலையிவாறு. இதெல்லாம் அவரோட ப்ராசஸ்னு புரிஞ்சிக்கிறதுக்கே ரொம்ப காலம் ஆயிடுச்சு. இதெல்லாம் கேரக்டர்குள்ள போறதுக்கான அவரோட ப்ராசஸ்.

அதே மாதிரி அவரோட போஷர்ன்ஸ் மொத்தத்தையும் சூட் பண்ணிட்டுத்தான் லஞ்சுக்குப் போவாரு. ரெண்டுமணி, மூனுமணி, ஆறு மணின்னு பார்க்கவே மாட்டாரு. இத்தனைக்கும் அவருக்கு டயபடிக் இருந்துச்சி. அல்சர் வேற இருந்துச்சு. இது மாதிரி இருக்குற ஒடம்ப வச்சிட்டு அவ்வளோ மெனக்கெடுவாறு. வெறும் டீயையும் சிகரட்டையும் வச்சிக்குனு ஒட்டுவாறு. சில டைரக்டர்ஸ் அத புரிஞ்சுக்குனு லன்ச் டயம் முடியறதுக்குள்ள அவரோட போஷர்ன்ஸ்ச சூட் பண்ணிடுவாங்க. ஆனா எல்லாரும் அது மாதிரி இருப்பாங்கன்னும் சொல்ல முடியாதுங்க இல்லிங்களா.

அதே மாதிரி ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி ரெண்டு மூணு முறை டையரக்டர்ஸ்ச கூப்பிட்டுப் பேசுவாரு. அவங்களுக்கு அவ்வளோ இன்புட்ஸ் கொடுப்பாரு. அவங்களுக்கும் அந்த பாயின்ட்ஸ் எல்லாம் எத்துக்குறா மாதிரி இருக்கும். இன்னும்கூட நெறைய சொல்லிக்கிட்டே போகலாம். 

கேணி வாசகர்கள் கேட்டப் பல கேள்விகளுக்குப் பொறுமையாகவும், தெளிவாகவும் ரோஹிணி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். நடிகைகளைக் குறித்த ஸ்டீரியோ டைப் கருத்தாக்கங்கள் வெளிப்படும் பல சம்பவங்களை ரோஹிணி பகிர்ந்துகொண்டு வருத்தப்பட்டார். இதுவரை கேணிக்குக் கைவீசிக் கொண்டுதான் சென்றிருக்கிறேன். ஆனால், வீட்டிலிருந்து இம்முறை கேணிக்குக் கிளம்பும்போதே மொழிபெயர்ப்புத் தெலுங்கு நாடகமான “சீதை ஜோசிய”த்தின் ஒரு பிரதியைத் தோழர் ரோஹிணிக்காக எடுத்து வைத்துக் கொண்டேன். கூட்டம் துவங்குவதற்கு முன்பே ரோஹினியை நெருங்கி “இந்தாங்க ரோஹிணி... உங்களுக்காக நான் எடுத்துட்டு வந்த புத்தகம் இது...” என்றேன்.

“என்ன புக் இது?” என்றார்கள்.

“ஒரு டிராமா ஸ்கிரிப்ட். தெலுங்கு மூலம்... தமிழில் சாகித்ய அகாடமி ரொம்ப நாளுக்கு முன்னாடி வெளியிட்டிருக்காங்க...” என்றேன்.

“தெலுங்கா... ரைட்டர் பேரு என்ன? புக் டைட்டில் என்ன? எப்போ வந்தது?” என்று புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆய்வாளர் வா.கீதா, எழிலரசி அக்கா, அரங்க நடிகை வினோதினி, கவிஞர் விஜயலட்சுமி போன்றவர்களுக்காக வாங்கியப் பிரதிகளில் ஒன்று மிஞ்சியிருந்தது. நடிகர் ரோகிணிக்காக அந்தப் பிரதியை எடுத்துச் செல்ல வேண்டுமென்று எனக்கு ஏன் தோன்றியது? புதிராகத் தான் இருக்கிறது...! இத்தனைக்கும் ரோஹிணி நவீன இலக்கியம் வாசிக்கக் கூடியவர், பாடல்களை எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

உலகம் ஸ்டீரியோ டைப் ஆட்களால் மட்டுமே நிரம்பியதில்லை. “நான் கொஞ்சம் அரொகென்ட் தான். ஆனால், ஸ்டீரியோ டைப் ஆளான்னு நீங்க தான் சொல்லணும்” போலவே, பெண்கள் சார்ந்த, நடிகை சார்ந்த எண்ணங்களைப் பொருத்தவரை உங்களுடைய மனநிலை என்ன என்பதையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் நாம் வாழ்வது ரத்தமும் சதையுமான உலகில்.

1 comment:

  1. எப்படியோ இன்றைய காலைப் பொழுதில் இதை வாசிக்க நேர்ந்தது. இனிமையான பயனுள்ள பொழுது இது!

    ReplyDelete