Thursday, July 10, 2014

கேணி சந்திப்பு - இயக்குநர் ஞான. ராஜசேகரன்

பாரதிமணியை அவருடைய வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது “கிருஷ்ணா...! கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை இயக்குனர் ஞானராஜசேகரன் படமா எடுக்க இருக்குறாரு...” என்றார். 


மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து – இளநிலை மற்றும் முதுநிலையில் – அரியர் மேல் அரியர் வைத்து - அட்டைக்கு மேல் அட்டை வாங்கிய – அசாத்தியமான மாணவர்களில் நானும் ஒருவன். பின்னர் “ராமானுஜன்” படத்தில் நண்பர் மணிபாரதி நடித்திருப்பது தெரிந்ததும் சந்தோஷத்தில் ததும்பி வழிந்தேன். இருக்காதே பின்னே...! “ராமானுஜன்... ராமானுஜன்...” படத்தில் நமக்குத் தெரிந்த ஒரு நபர் - சின்ன பாத்திரத்தில் தலையைக் காட்டுகிறார்.

ராமானுஜன் படத்தைப் பற்றி பேசுகையில் “பை கணித மன்ற” சிவாவைப் பற்றி நினைக்கவில்லை எனில் என் கட்டை வேகாது. ஒரு நாள் தனது வீட்டிற்கு வருமாறு சிவா அழைப்பு விடுத்திருந்தார். சென்னையின் வீதிகளில் ‘அழுக்கான, சாயம்போன, கிழிந்த’ ஆடையுடன் சுற்றுவதுதான் எனக்கு மிகப் பிடிக்கும். ஆகவே பெரும்பாலான விருந்தோம்பல் அழைப்புகளைத் தவிர்த்துவிடுவேன். ஆனால், ‘பை கணித மன்ற’ சிவாவை அப்படித் தவிர்க்க இயலாது.

டி. ஜி. வைஸ்னவா கல்லூரியில் இளநிலைக் கணிதமும், சென்னை ஐஐடி-யில் முதுநிலைக் கணிதமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தையும் கணிதத்தில் பெற்றவர். டாக்டரேட் பட்ட ஆராய்ச்சியிலும் ராமானுஜத்தின் நிரூபனங்களைத் தொட்டுத்தான் பயணித்திருக்கிறார். தற்போது டி. ஜி. வைஸ்னவா கல்லூரியில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார். அவரைச் சந்தித்ததின் காரணம் இதுவல்ல. மாறாக பல்வேறு இதழ்களிலும் கணிதம் சார்ந்து தமிழில் எழுதுகிறார். “தி ஹிந்து” தமிழ் நாளிதழில் வாரம்தோறும் கணித்ததைப் பற்றி ஏதேனும் எழுதுகிறார். கணித மேதைகள் பகுதி | & || என்ற தொகுதிகள் ஏற்கனவே வெளிவந்துள்ளது. ராமானுஜன் பற்றிய விரிவான புத்தகத்தைத் தமிழில் எழுதி இருக்கிறார். சிவாவின் இரண்டு புத்தகங்கள் தமிழக அரசு விருது பெற்றுள்ளன.

அன்றாட வாழ்க்கையில் “கணிதப் பயன்பாடுகள்” என்பது நம் போன்ற எளிய மக்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம். ஆகவே, “கணிதப் பயன்பாடுகள்” என்ற புத்தகத்தைக் கூடிய சீக்கிரமே கொண்டுவரும் முயற்சியிலும் இருக்கிறார். இது போன்ற மனிதர்களை சந்திக்கச் செல்வது சுவாரஸ்யம் நிறைந்த விஷயம் தானே...!

வீட்டில் நுழைந்ததுமே அவரது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார். சுவரில் கணித அறிஞர்களின் பிளாக் & வொயிட் படம் மாட்டப்பட்டிருந்தது. தரையில் அமர்ந்துகொண்டேன். சிவா பேசத் துவங்கினார்:

“இங்க பாருங்கோ கிருஷ்ணா...! நான் எங்கையாவது வெளிய போறதா இருந்தாச்சும் கூட ராமானுஜனை சேவிச்சிட்டுத் தான் போவேன்...! அவர் தான் எனக்கு எல்லாமே. கடவுள் மாதிரின்னு வச்சிக்கோங்கோ...!” என்றார்.

இப்படிக் கூடவா மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, “நீங்க ஆச்சரியப் படுத்துறீங்க சிவா...!” என்றேன்.

ஏறக்குறைய ஆயிரம் கணிதப் புத்தகங்களின் சேகரிப்புகள் சிவாவிடம் இருக்கிறது. ராமானுஜத்தின் தேற்றங்களைத் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டவர் சிவா. அவரது அலமாரியிலுள்ள புத்தகங்கள் தான் “ராமானுஜன்” படத்தில் ராமானுஜனாக நடித்த – நட்சத்திரத் தம்பதிகளான ஜெமினிகணேசன் – சாவித்திரியின் பேரன் வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறார். நமக்குத் தெரிந்தவரின் புத்தகங்கள் ராமானுஜன் படத்தில் நடித்திருக்கிறது. “ஐயோ... ஐயோ... ஐயோ...” சந்தோசம் தாங்கள...!

இரவு நேரத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து - வீடு திரும்ப சில நேரங்களில் பயணிப்பதுண்டு. மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கும் ஒரு நண்பர் அப்படிப்பட்ட பயணங்களில் பழக்கம். அவரது பெயர் உஸ்மான். பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பார். ரயில் ஸ்நேகம் – ரயில் பயணத்தோடு முடிந்துவிடும். ஒரு நாள் திநகர் பழைய GRT தங்க நகைக்கடைக்கு எதிரிலுள்ள மேம்பாலத்தின் கீழ், ரோட்டோரத்தில் கடை விரித்து - உஸ்மான் துணி விற்றுக் கொண்டிருந்தார். “ஓ... நீங்க இங்கதான் வியாபாரம் பண்றீங்களா?” என்றேன்.

“ஆமா’ண்ணா! நீங்க எங்க இந்தப் பக்கம்?” என்றார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அதன் பிறகு நீண்ட நாட்களாகிவிட்டது உஸ்மானைப் பார்த்து. இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கண்ணில் பட்டார்.

“என்னங்க ஆளையே பார்க்க முடியல?” என்றேன்.

“ராமானுஜன் படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிச்சேங்க’ண்ணா... கும்பகோணத்துல ஷூட்டிங்... கொஞ்ச நாள் அங்க போயிருந்தேன்... அதான்...” என்றார்.

“அடடே...! மீஞ்சூரில் இருந்தும் ஒருவர் ராமானுஜன் படத்தில் நடிக்கிறாரா?” என்று இறும்பூஊஊஊது எய்தினேன்.

எனுடைய கணிப்பு சரி எனில்... முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பயல் தான் – சக பயணி உஸ்மான். இந்தப் பயலின் மண்டையும், முகவெட்டும் உஸ்மானைப் போலவே உள்ளது.

என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லி இருக்கிறார்: “டேய்.... பசங்களா நீங்க எங்க போனாலும் இந்த மேத்ஸ் உங்கள உடாது... ஒழுங்கா படிச்சிடுங்க...!”

அவர் எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை. நாமாவது படிப்பதாவது!? எனினும், கணிதமேதை ராமானுஜன் பல விதங்களிலும் என்னைத் துறத்துகிறான். என்னமோ தெரியவில்லை இந்தப் படத்தில் வேலை செய்பவர்களை அடிக்கடி சந்திக்க நேர்கிறது.

இதோ ராமானுஜன் படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரன் “கேணி சந்திப்புக்கு” வர இருக்கிறார். “மோகமுள், பாரதி, காமராஜர், ராமானுஜன்” போன்ற முக்கியமான படங்களை இயக்கி இருக்கிறார். ஞானராஜசேகரன் ஓர் ஐ.ஏ.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


“சங்கராபரணம், இது நம்ம ஆளு” போன்ற படங்களில் இசை விற்பன்னராக – முக்கியமான பாத்திரத்தில் நடித்தவர் ஓர் ஐ.ஏ.எஸ் ஆபீசர் என்று கேள்விப்பட்டதுண்டு. அதுகூடப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் நடிக்க வந்தார். ஞானராஜசேகரன் மூன்று வருடங்களோ என்னவே – இடையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்தவர். அரசாங்க வேலையில் தொடர்புடையவர்கள் – கலைத்துறையில் ஈடுபடும் பொழுது எதுபோன்ற “பிரச்சனைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்க நேர்கிறது” என்பதை தோழர் ஞானராஜசேகரிடம் கேட்கலாம் என்றிருக்கிறேன். உங்களுக்கும் சில கேள்விகள் இருக்கலாம். தோழரை சந்திக்க எழுத்தாளர் ஞாநியின் வீட்டிற்கு வாருங்கள். நண்பருடன் உரையாடலாம்.

நாம் சந்திக்கப்போகும் இடம் மற்றும் நாள் பின்வருமாறு:

கேணி சந்திப்பு:

பாரதி','பெரியார்', 'ராமானுஜன்' பட இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேசுகிறார்.

ஜூலை 13, ஞாயிறு மாலை 4 மணி,

39 அழகிரிசாமி சாலை,

கலைஞர் கருணாநிதி நகர்,

சென்னை 78.

அன்புடன் அழைப்பது
ஞாநி, பாஸ்கர் சக்தி.

டிஸ்கி: தியேட்டருக்குச் சென்று நீண்ட நாட்கள் ஆகிறது. ராமானுஜன் படத்தைத் திரையரங்கில் பார்க்கலாம் என்றிருக்கிறேன். திருட்டு சிடி-ய இடையில உட்டு எங்கனவுல மண்ணைத் தூவாதிங்க. போலவே, படம் கலக்ஷ்ன் சரியா இல்லைன்னு படத்தையும் தியேட்டர வுட்டு தூக்கிடாதிங்க. இதுபோன்ற அறிவுசார் ஆளுமைகளைப் பற்றிய படங்கள் தமிழுக்குப் புதிது. அவசியம் ஓடவேண்டும். தமிழ் சினிமா வேறு தளத்திற்கு நகரவேண்டும். நம் அசலான மக்களின் முகங்கள் திரையில் தெரிய வேண்டும்.

Wiki: இயக்குநர் ஞான. ராஜசேகரன்

No comments:

Post a Comment