Monday, July 28, 2014

C2H – சேரன் – எஸ்கேபி கருணா

ஓர் ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றிய குறிப்பை நீண்ட நாட்களுக்கு முன்பு தமிழில் படித்தேன். அதில் அமெரிக்கப் பொருட்களுடன் (Product Guide) வழங்கும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களைக் கிண்டலடித்திருந்தார்கள். குழந்தையை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் வாகனத்துடன் விநியோகிக்கும் புத்தகத்தில் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது.

“குழந்தையை இதில் உட்காரவைத்து மடிக்கக் கூடாது.”

எந்த முட்டாளாவது அதுபோலச் செய்வார்களா? குழந்தையை உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் வாகனத்தை, குழந்தை உட்கார்ந்திருக்கும் சமயம் நான்காக மடிப்பார்களா? அதுவும் மெத்தப் படித்தவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மேற்கத்தியர்கள் வாங்கும் பொருட்களில் இதுபோன்ற குறிப்புகள் தேவைதானா? என்பது போன்ற கேள்விகள் எழும். எனினும் ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது, “அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!, எப்படிப் பயன்படுத்தக் கூடாது! பயன்படுத்தாமல் போனால் எப்படி அப்புறப்படுத்த வேண்டும்” என்பதை விளக்கமாகச் சொல்லிவிடுகிறார்கள். அதுதான் முக்கியம். நம்மிடம் இல்லாத விஷயமே இந்தப் பண்புதான். (இது போன்று பல பொருட்களிலுள்ள பயன்படுத்தும் முறையைப் பற்றிய குறிப்பை நக்கலடித்து எழுதப்பட்ட புத்தகம்.)

ஒரு வருடத்தில் சுமார் 300 தமிழ்த் திரைப்படங்கள் உருவாகிறது. அதில் ஐடல் வொர்ஷிப் படங்கள் என்று எடுத்துக்கொண்டால் பத்திலிருந்து பதினைந்து படங்கள் தேறும். இந்தக் குறைந்த எண்ணிகையில் அமைந்த படங்கள் இதர 95% தமிழ்த் திரைப்படங்களை காவு கொள்கின்றன. இந்த மிகுதியான 95% படங்களிலிருந்து “நல்ல படங்களும், ரசனையான படங்களும், கலாப் பூர்வமான படங்களும், கலைப் படங்களும்” தியேட்டர் கிடைக்காமல் முடங்கிவிடுகிறது. அப்படியே கிடைத்தாலும் ஒருவாரதிற்கு மேல் ஒடுவதற்கான கால அவகாசங்கள் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டத் திரைப்படங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார் இயக்குனர் சேரன்.

சமீபத்தில் வெளியான ஒளிப்பதிவாளர் நடராஜன் மையப்பாத்திரம் ஏற்று நடித்திருந்த “சதுரங்க வேட்டை” திரைப்படமானது, சென்ற ஆண்டுகளில் வெளிவந்த ஜனரஞ்சகப் படங்களான “பீட்சா, சூது கவ்வும்” போன்ற படங்களை விடவும், “ஆரண்யகாண்டம்” போன்ற மேக்கிங் அளவில் முக்கியமாகக் கவனிக்கப்பட்டப் படங்களிலிருந்தும் சற்றே விலகிய “நல்ல முயற்சி” என்றே தோன்றுகிறது. எனினும் “வேலையில்லா(ப்) பட்டதாரி, திருமணம் எனும் நிக்காஹ்” போன்ற படங்களின் சுழலில் “சதுரங்க வேட்டை” தியேட்டரை விட்டுக் காணாமல் போனது.

“பீட்சா, சூது கவ்வும்” போன்ற படங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம். அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துவிட்டது. உலகத் திரைப்பட விழாக்களிலும், சினிமா பயிற்சியாளர்கள் மற்றும் பழகுனர்களிடமும் “ஆரண்யகாண்டம்” - மிக நல்ல எதிர்வினையை ஏற்படுத்தியது. எனினும், இன்றுவரை அதன் குறுந்தகட்டை நம்மால் பெற முடியவில்லை. (தயாரிப்பாளர் – இயக்குனர் தரப்பு பனிப் போரின் காரணமாக படம் திரிசங்கு போலத் தொங்குகிறது என்கிறார்கள். உண்மை நிலை என்ன என்பது யாருக்குத் தெரியும்?)

கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையைச் சித்தரித்த “ராமானுஜன்” திரைப்படத்திற்குத் தமிழகத்தின் பல திரையரங்குகள் கிடைக்கவில்லை. “வெங்காயம்” திரைப்படத்திற்கும் கூட திரையரங்குகள் கிடைக்கவில்லை. இயக்குனர் சேரன் போராடி “வெங்காயம்” படத்தின் மீது ஓரளவிற்கு வெளிச்சம் பாய்ச்சினார். இதுபோல ஒவ்வொரு படத்திற்குமா போராடிக் கொண்டிருக்க முடியும். ஆகவே, “சினிமா டூ ஹோம் – C2H” திட்டத்தின் மூலம் “நல்ல, ரசனையான, முக்கியமான, ரசிக்கத்தக்க” திரைப்படங்களை - ரூபாய் 50/- விலை மதிப்பிலான குறுந்தகடுகளாகக் கொண்டுவரும் திட்டமிருப்பதாகக் கூறினார். அதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து “ஆதரவுகளும் விமர்சனங்களும்” எழும்பியவாறு இருக்கிறது.

இந்த வியாபாரம் வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் செல்லுபடியாகாது என்கிறார் ஒருவர். முழுக்க முழுக்க சரிவராத வியாபாரம் என்கிறார் இன்னொருவர். இவற்றிலிருந்து முற்றிலும் மாறான சுற்றுச்சூழலியல் கருத்தைத் தோராயப் புள்ளிவிவர அடிப்படையில் முன் வைத்திருக்கிறார் எஸ்கேபி கருணா. 


சூழலியல் கேடு எந்தத் தொழிலில் தான் இல்லை. மைக்கா, டியூப் லைட், காலாவதியான மருந்துகள், எலக்ட்ரிக் சாதனங்கள் , சென்ட், கிரீம் போன்ற அழகுசாதனப் பொருட்கள் முதல் ஆணுறைக் கவசங்கள் வரை குப்பை மேலாண்மை என்பது இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் தலைக் குடைச்சலான விஷயம் தான். ஆறு மாத காலத்தில் குறைந்தது ஒரு கோடி பயன்படுத்தப்பட்டக் குறுந்தகடுகள் சுற்றுப்புறங்களில் வீசப்பட்டு, அதனால் சூழலியல் கேடுகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கிறது. இது கேன்சர் போன்ற வியாதிகளையும், மழை நீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுக்கும் என்பதையும் காரணமாகக் கூறிக் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறுகிறார். 

தொழில்நுட்பங்கள் வளர வளர இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். எனினும், மாறாக எஸ்கேபி கருணா “டிடிஎச், கேபிள் டிவி ஒளிபரப்பு, இணைய ஒளிபரப்பு” போன்ற முறைகளையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறார். இது மறுபடியும் தியேட்டர் போன்ற கார்பரேட் லாபிகளிடம் மாட்டிக்கொள்ளும் கண்ணிகளுக்கு ஒப்பானது. “டிடிஎச், இணையம்” போன்றவை இந்தியாவின் 80% சாமானிய மக்களால் பயன்படுத்தக் கூடிய நிலையிலா இருக்கிறது. போலவே ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்திலுள்ள அனைவரும் திரைப்படத்தைப் பார்க்கவேண்டிய கட்டாயமும் இந்த முறைகளில் ஏற்படுகிறது. நவக்கிரகம் போல ஆளுக்கொரு திரையை நோக்கி நின்றுகொண்டிருக்கும் நிலையில் இது சாத்தியமா? இடையில் மின்வெட்டு ஏற்பட்டாலும் கட்டிய பணம் ஸ்வாகா. குறுந்தகடு - விருப்பப்பட்ட நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பார்க்கக்கூடிய வசதியினை வழங்குகிறது.

பயன்படுத்தப்பட்டு புதர் காடுகளிலும், கழிவரை மலப் பீங்காங்களிலும் வீசி எறியப்படும் ஆணுறைகளும் தான் சதவீதத்தின் அடிப்படையில் அதிகம். ரப்பர் மக்குவதற்கு நாளாகும், சரியான முறையில் அப்புறப்படுத்தாத விந்துக்கள் கசிந்த ஆணுறையால் தொற்றுக்கள் உண்டாகும் என்று யாரேனும் ஆணுறையை எதிர்ப்பார்களா? அதுபோலத் தான் இருக்கிறது இதுபோன்ற வாதங்களும்.

நம்மாட்கள் எதைக் கொடுத்தாலும் பயன்படுத்துவார்கள். நம் மக்களுக்கு ஒரு வரைமுறையே கிடையாது. ஆளுயர வினைல் ஹோர்டிங் சூழலுக்கு மிகுந்த கேட்டினை விளைவிக்கக் கூடிய ஒன்று. நண்பரும், எழுத்தாளருமான ஞாநி தனது மேற்கத்திய நாட்டுப் பயணத்தைப் பற்றி “ஆப்பிள் தேசம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியபோது - மேற்கத்திய நாடுகளில் “வினைல் ஹோர்டிங் பேனர்கள்” தடை செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இந்தியாவில் பேனர்கள் தென்படாத ஏதேனும் விழாக்கள் உள்ளதா? பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசப்பட்ட மெழுகு போன்ற வழவழ பேனர்கள் தான், மழைக் காலத்தில் ஏழைக் குடிசைகளில் கூரையாக இருக்கிறது. பேனர்களில் அச்சிடப்பட்ட ரசாயனகள் மழைநீர் பட்டு, சாலைகளில் ஓடுகிறது. ஏழைச் சிறுவர்கள் அந்த நீரில் தான் விளையாடுகிறார்கள். இந்த ரசாயனங்களாலும் தோல் வியாதிகள் உட்பட கேன்சர் வருவதாகக் கூறுகிறார்கள். பொது இடங்களில் தூக்கி வீசப்படும் பேனர்களாளும் மழை நீர் பூமிக்குள் செல்வது தடைபடுகிறது. “காதுகுத்து, கல்யாணம், கருமாதி, பிறப்பு, இறப்பு, பூப்பெய்திய பெண்ணைக் குந்த வைக்கும் சடங்கு” என குடும்பம் தோறும் விழாக்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள் எனில், அரசியல்வாதிகள் பத்தடிக்கு ஒரு பேனர் வைக்கிறார்கள். “முதிர்ந்த மூத்தத் தமிழே...! முத்தமிழே...! தளபதியே, அஞ்சா நெஞ்சனே” என்று இந்தப் பக்கம் வைத்தால், “அம்மா தாயே...” என்று அந்தப் பக்கம் வைக்கிறார்கள்.

இதுபோன்று மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொருட்களால் வராத சூழலியல் கேடா சேரனின் C2H நிறுவனத்தின் குறுந்தகட்டால் வந்துவிடப் போகிறது. சகோதரர் எஸ்கேபி கருணா இன்ஜினியரிங் கல்லூரி சார்ந்து இயங்குவதால் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். புள்ளி விவரத்தில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 550 –க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரிக்குச் சராசரியாக 1, 000 நபர்கள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வருவதாக எடுத்துக் கொண்டாலும், வருடத்திற்கு 5, 50, 000 இன்ஜினியர்கள் தமிழகக் கல்லூரிகளில் இருந்து மட்டும் வெளியில் வருகிறார்கள். இதில் பாதிபேர் சினிமா ஆசையினாலும், இன்ஜினியரிங் படிக்க முடியாததாலும் டிகிரியை வாங்க முடிவதில்லை. தொடர்ந்த பத்து வருடங்களுக்கு ஒரு தோராயக் கணக்கை எடுத்துக் கொண்டாலும் சுமார் 55 லட்சம் இன்ஜினியரிங் க்ராஜூவேட்ஸ் பத்து ஆண்டுகளில் உருவாகிறார்கள். இவர்கள் எல்லோருமா வேலைக்குச் செல்கிறார்கள். படித்து முடித்தும் வேலையில்லாமல் அலைகிறார்கள். பாடத்தில் கோட்டை விட்டவர்கள் எப்படியாது அடித்துப்பிடித்து மீண்டும் தேர்வெழுதி என்ஜினியரிங் பட்டத்தை வாங்கி விடுகிறார்கள். எனினும் தகுந்த வேலை கிடைக்காமல் எல்லோரும் திண்டாடுகிறார்கள். இந்த வேலையில்லாத அபரிதமான மனித எண்ணிக்கைகளைக் காட்டிலுமா சமூகக் கேட்டைக் காடிலுமா குறுந்தகடுகள் போன்ற பொருட்கள் சூழலியல் கேட்டை ஏற்படுத்திவிடப் போகிறது. “கொலை, கொள்ளை, அடிதடி, வழிப்பறி” போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய நாளிதழ் செய்திகளில் பெரும்பாலும் என்ஜினியரிங் மாணவர்களின் பெயர்கள் தான் அடிபடுகின்றன. சமூக உளவியலில் இதுபோன்ற நெகடிவ் திசையில் பயணிக்கும் என்ஜினியரிங் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நுட்பமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு, அவர்கள் படித்த என்ஜினியரிங் கல்லூரிகளைக் குற்றம் சொல்ல முடியுமா என்ன? அதுபோலத் தான் இருக்கிறது – சினிமா சார்ந்து ஆக்கப்பூர்வமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க இருக்கும் இயக்குனர் சேரனைக் கடுமையாக விமர்சிப்பதும் எதிர்ப்பதும்.

“கார்பொரேட் மென்பொருள் நிறுவனங்கள், ஆடியோ கம்பெனிகள், டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவங்கள்” போல, சேரனும் தான் சார்ந்த துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். அதற்கு இது போன்ற சூழலியல் காரணங்களை எதிர்மறையாக முன்வைப்பது ஞாயமே அல்ல.

“டிவிடி, சிடி” போன்றவற்றால் சூழலியல் கேடு உண்டாகும் என்ற வாதத்தைக் காட்டிலும், கல்லூரியில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்குப் போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து – “மறுசுழற்சி முறையில் இதுபோன்ற உபயோகமற்ற பொருட்களை என்ன செய்யலாம்?” என்பதை ப்ராஜெக்டாகச் சமர்ப்பிக்கச் சொல்லலாம். கலை மனிதர்களைப் பண்படுத்தும். நல்ல விஷயங்கள் அடித்தட்டு மக்களிடம் சென்று சேருவதில் தடை இருப்பதால் தான் எல்லா பிரச்சனைகளுமே ஆரம்பமாகிறது. இயக்குனர் சேரன் நல்ல படங்களை எடுப்பவர். நல்ல படங்கள் திரையரங்குகளுக்குச் சென்று சேர வேண்டும் – எல்லா தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்று நினைப்பவர். அவரைக் குறுக்கிடாமல் இருப்பதே நல்ல சினிமா வெளிவருவதற்கு நாம் செய்யும் உதவி. உங்களது (எஸ்கேபி கருணா) நட்பு வட்டத்தில் இருக்கக் கூடிய நல்ல சினிமா நண்பர்களில் சேரனும் ஒருவர் என்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் அவருடன் கைகோர்க்க வேண்டும். இல்லையேல் பேசாமல் இருந்துவிட வேண்டும். எதற்குக் கடுமையாக ஆட்சேபிக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஐ சப்போர்ட் சேரன்... 
சமூகப் பொறுப்பு சினிமாக்காரர்களிடம் மட்டுமே இருக்க வேண்டிய விஷயமா என்ன? அது எல்லோருக்குமே இருக்க வேண்டும். முக்கியமாகப் பொதுமக்களுக்கு. சினிமா இயக்குனராக இருந்தால் என்ன? எழுத்தாளனாக இருந்தால் என்ன? என்ஜியரிங் கல்லூரி நிறுவனராக இருந்தால் என்ன? அரசியல்வாதியாக இருந்தால் என்ன? எல்லோரும் சமூகத்தின் அங்கம் தானே!அங்கம் தானே!

குறிப்பு: இயக்குனர் சேரனை ஆதரித்துப் பல்வேறு தருணங்களில் – இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கால இடைவெளியில் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, சேரன் எனக்கு நண்பராக இருப்பாரோ என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். ஆர் பி அமுதனின் ஆவணப்படத் திரையிடலிலும், பாதை புத்தக வெளியீட்டிலுமாக இரண்டு தருணங்களில் தூரத்திலிருந்து சேரனைப் பார்த்ததோடு சரி. மற்றபடி வானத்து நட்சத்திரம் போலவே, இயக்குனர் சேரனும் எனக்கு தூர தூரமாக... C2H – நல்ல முயற்சி. வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.

1 comment: