Thursday, July 31, 2014

மீண்டும் காலச்சுவடில்...

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் ஒருநாள், காலச்சுவடு கண்ணன் தனது சென்னை பயணத்தின்போது சந்திக்க வருமாறு நேரம் கொடுத்திருந்தார். உங்களுக்குத் தான் தெரியுமே சென்னையின் வாகன நெரிசல்கள் பற்றி...! குறித்த இடத்திற்குச் சென்று சேர்வதற்குள் அரைமணி நேரம் தாமதமாகிவிட்டது. கண்ணன் கேட்டார்:

“பிரபு... நீங்க எப்பவுமே இப்படித்தானா!?”

“ஆங்... எப்படி?” – இது நான்.

“சாவுக்கு ‘வா’-ன்னா. காரியத்துக்கு வராப்போல வந்து நிக்கிறது?” – என்று கேட்டார்.

“ஹாஃபன் அவர் லேட்டெல்லாம்... ஒரு லேட்டே இல்லிங்க கண்ணன்? நீங்க எந்தக் காலத்துல இருக்குறீங்க? எதுக்கு டயம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு... சரி விஷயத்துக்கு வாங்க...” – இது நான். (குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது. அப்படியே ஓட்டினாலும் காண்பித்துக் கொள்ளக் கூடாது இல்லையா!)

“விஷயம் இதுதான். போன வருஷம் சென்னை புக் ஃபேர்ல காலச்சுவடு ஸ்டால்ல இருந்தீங்க இல்ல... ஆமா... அதே மாதிரி இந்த வருஷ சென்னை புக் ஃபேர்லயும் ஒரு அசைன்மென்ட் இருக்கு... நீங்க தான் பண்ணனும்...!”

“ஏங்க... புக் ஃபேர்க்கு இன்னும் ஆறு மாசம் இருக்குங்க...! நானெல்லாம் எக்ஸ்ஸாமுக்கே ஓவர்நைட்ல படிக்கிற ஆளு” என்றேன்.

“நானும் தான் கேலண்டர் பாக்குறேன்... எனக்கும் ஆறு மாத இடைவெளி இருப்பது தெரியும். அப்புறம்... எக்ஸ்சாம் எழுதுறது வேற... புத்தகம் விக்கிறது வேற” என்றார். போலவே, “எதிர் வரும் புத்தகச் சந்தையில் உங்களோட அசைன்மென்ட் பெரிதாக ஒன்றும் இல்லை. போன வருஷம் சுமார் ஆயிரம் யங் ரீடர்ஸ்’கிட்ட பேசினேன்னு பெருசா சொன்னீங்க இல்ல! அத எல்லோர் போலவும் நானும் நம்புறேன். ஆனா, அவங்கெல்லாம் மறுபடியும் காலச்சுவடு அரங்கிற்கு புத்தகம் வாங்க வறாங்களா? அதுல எவ்வளோ பேரு மறுபடியும் வறாங்க? உங்கள ஞாபகம் வச்சிருந்து உங்கக்கிட்ட மறுபடியும் பேசுறாங்களா? வேற ஏதாச்சும் புத்தகத்த ரெஃபர் பண்ணச் சொல்லிக் கேக்குறாங்களா?” அப்படி வரவங்க எந்தத் துறையில இருக்குறாங்க? என்பது போன்ற ஒரு டீடெயில் அனாலிசிஸ் ரிப்போர்ட் வேணும்” என்றார்.

எனக்குத் தலையைச் சுற்றியது. “இந்திய உளவுத்துறையும், இஸ்ரேலிய மொசாடும் உங்கக்கிட்ட கெட்டுது போங்க... இந்த மாதிரி ஒரு ரிப்போர்ட்ட டாக்டரேட் (PhD) பண்ற மார்கெட்டிங் ஸ்டூடன்ஸ் கூட (சிறப்பா சப்மிட்) பண்ண முடியாது. அப்படி இருக்கும் போது என்னால சாத்தியமா?” என்றேன்.

“ஆராய்ச்சிய பண்ணனும்னா எலிய வச்சித்தான் பண்ணனுமே தவிர, அறிவாளிய வச்சி இல்ல...!” என்றவாறு, இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு – பின்னந்தலையில் வைத்தவாறு வானத்தைப் பார்த்துச் சிரித்தார். சமயத்தில், சுந்தர ராமசாமியும் இப்படித் தான் வானத்தைப் பார்த்துச் சிரிப்பாறாம். சீனியர் வாசகர்கள் பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால், ஒரு யங் அஸ்பைரிங் டேலண்டை கிண்டலடிப்பாரா என்று தெரியவில்லை.

எனினும் கண்ணனுடைய பதிலிலும் ஞாயம் இருக்கிறது. அதற்கு மேல் நானென்னப் பேச. “ஆகட்டுங்க கண்ணன். நான் பரிசோதனை எலியாவே இருந்துட்டுப் போறேன். வேற ஏதாச்சும் சொல்லனுமா?” என்றேன்.

“வேற ஒன்னும் இல்ல... போயிட்டு வாங்க. நீங்க வேலை செய்யுற அழகைப் புத்தகசந்தையில பார்க்கலாம்” என்றார்.

“பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் இலக்கியம் வாசிக்க விரும்புகிறார்களா? இலக்கியப் புத்தகங்களை வாங்கப் புத்தகச் சந்தைக்கு ஆர்வத்துடன் வருகிறார்களா? ஆம் எனில்...! தொடர்ந்து புத்தகம் வாங்க முன் வருகிறார்களா?” என்பது தான் காலச்சுவடு நிறுவனம் தெரிந்து கொள்ள நினைக்கும் விஷயம். ஒரு பதிப்பகம் இப்படிப்பட்ட விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பதும் நல்ல விஷயம் தானே...!

எல்லா காலங்களிலும் விலைபோகும் பண்டங்கள் என மூன்று விஷயங்களைப் பட்டியலிடலாம். அவையாவன, “காதல் (Love), காமம் (Sex), ஆன்மிகம் (Spiritual)” எனலாம். சுகி சிவம் எதைப் பேசினாலும் கேட்கிறார்கள். ஓஷோ எதைப் பேசினாலும் கேட்கிறார்கள். “நித்யானந்தா, பிரேமானந்தா” – என்று யார் பேசினாலும் வாய் பிளந்தவாறு கேட்கிறார்கள். அவர்களது சரக்கும் விலைபோகிறது. காதலும் காமமும் தான் காட்சி ஊடகங்களின் தலையாயப் பண்டங்கள். “காதல், காமம், ஆன்மிகம்” – இந்த மூன்றிலிருந்தும் வேறுபட்ட ஏதோ ஒரு பூடகமான விஷயமாகத் தான் படைப்பிலக்கியத்தை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த மூன்றின் ரசபாஷக் கலப்பே இலக்கிய ஆக்கங்கள் என்பது மொழியை முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கே கூட தெரிவதில்லை. மொழிப்பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் சராசரி மாணவர்களைக் காட்டிலும் மோசம்.

“புத்தகத்தைத் திறந்தாலே எனக்குத் தூக்கம் வருகிறது?” என்று நிறைய பேர் குறைபட்டுக் கொள்கிறார்கள். வாஸ்தவம் தான். முதல்முறை “கட்டிங்” அடிக்கும் போது குமட்டுகிறது. விஷம்போலக் கசக்கிறது. முதல் முறை “தம்” அடிக்கும் போது மூச்சை அடைக்கிறது. நெஞ்சிக்கூடு வெடிக்கிறது. பழகிய பின் இவற்றை விட முடிகிறதா? இவையில்லாமல் வாழ்க்கை இனிக்கிறதா? அதுபோலத் தான் புத்தக வாசிப்பும். “எனக்குத் தூக்கம் வருகிறது?” என்று சொல்லும் நண்பர்களுக்கு ஜெயகாந்தனின் “சுமைதாங்கி” என்ற சிறுகதையை வாசிக்கக் கொடுப்பேன்.

“அண்ணா...! இந்த சிறுகதய படிச்சது ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்தாப் போல இருக்குதே...! நம்ம இந்தக் கதைய ஷார்ட் ஃபிலிமா எடுக்கலாமா?” என்பார்கள்.

“சரி போயிட்டு இன்னொருவாட்டி வா...!” என்பேன். மறுபடியும் தேடி வரும்பொழுது “ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம்னு சொன்னியே...!? ஆளையேக் காணோமே!” என்பேன்.

“ஆமா... ஆமா... நல்ல கதை’ங்கண்ணா... என்னால மறக்கவே முடியல...” என்பார்கள்.

“மொத முறையா படிச்ச இல்ல... அதான்... இந்தா இந்தக் கதையக் கொஞ்சம் படிச்சிப் பாரு...” என்று அதே ஜெயகாந்தனின் “தாம்பத்தியம்” என்ற சிறுகதையைக் கொடுத்துவிட்டு, “நீ...! பார்க் போயிருக்கியா?” என்று கேட்பேன்.

“இதென்னக் கேள்வி...?” என்பது போலச் சிரிப்பார்கள்.

கதையைப் படித்துவிட்டு “ஹே... இதுகூட சூப்பரா இருக்குது’ண்ணா...!” என்பார்கள்.

சுமைதாங்கி” – ஒரு சாலை விபத்தை மையமாகக் கொண்டது. “தாம்பத்யம்” – நடைபாதைத் தம்பதிகள் உடலுறவு கொள்ள முடியாமல் அல்லல்படும் கதையைக் கருவாகக் கொண்டது. ஆனால், இரண்டு கதைகளுமே அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டும் கதைகள். “இந்தமாதிரி ஒரு நூறு ரைட்டர்ஸ் இருக்குறாங்க! ஆயிரமாயிரம் கதைகள் இருக்குது...! எல்லாத்தையும் ஷார்ட் ஃபிலிமா எடுக்க முடியுமா?” என்பேன்.

“ஓ... அப்பப்பக் கொடுன்னா படிக்கிறேன்.” என்பார்கள்.

“ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்க இதையெல்லாம் படிக்கணும்னு அவசியம் இல்ல. சினிமா(மொழி) வேற. இலக்கிய(மொழி)ம் வேற. சினிமாவுக்கு இலக்கியமும், இலக்கியத்துக்கு சினிமாவும் ஒரு வகையில வளமை சேர்க்கும். அத மொதல்ல புரிஞ்சிக்கனும்” என்பேன். இதெல்லாம் வேதாளத்தின் காதில் சங்கூதிய கணக்கு. அதது அததன் கழுத்தில் தொங்கத்தானே பிரியப்படும். பத்து பேரிடம் இப்படித் தொடர்பில் இருந்தால் ஆறு நண்பர்கள் ஓடிவிடுவார்கள். மீதி நான்குபேர் எதையேனும் வாசிக்கக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நமக்கு நான்கு பேர் போதும். விற்கும் விலைவாசியில் இந்த நான்கு பேருக்குத் தீனிப் போடவே நம்மால் ஆகாது.

நாவல்களைப் பொறுத்த அளவில் “பால்யகாலசகி, மதில்கள், என் பெயர் ராமசேஷன், உப்பு நாய்கள், ராமாவும் உமாவும், நாளை மற்றொரு நாளே” போன்ற நாவல்கள் தான் ஆரம்ப வாசகர்களின் ரசனைக்குத் தீனி போடுகிறது. இவையெல்லாம் உணர்வுகளைத் தூண்டி, வேறொரு கனவு நிலைக்குக் கொண்டுசெல்லும் படைப்புகள். “ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், உண்மை கலந்த நாட்குறிப்பு, ஒற்றன், வெட்டுப்புலி, பிஞ்சுகள்” போன்ற நாவல்களையும் இந்தக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த நாவல்களைப் பரிந்துரை செய்த யாரும் என்னைத் திட்டியதில்லை. அதன்பின்னர் தான் கஷ்டகாலமே. “சாய்வு நாற்காலி, மீஸான் கற்கள், கூள மாதாரி, நிழல்முற்றம், மௌனத்தின் குரல், இரண்டாம் இடம், பருவம், என் பெயர் சிவப்பு, ஏழாம் உலகம், அஞ்சலை” போன்ற ஏதேனும் ஆக்கங்களைப் பரிந்துரைக்கும் போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகும். “அண்ணா...! இதெல்லாம் டஃப் லேங்குவேஜா இருக்குதுங்க’ண்ணா. ஒன்னும் புரியல...!” என்பார்கள்.

“தமிழ்ல தானே எழுதி இருக்காங்க. அதெப்படி புரியாம போகும்.” என்று கேட்பேன்.

“ஒரு அம்பது பக்கம் படி அந்த லேங்குவேஜ் உனக்குப் பழகிடும்” என்பேன். அது போலவே சிலருக்குக் கைகூடியும் இருக்கிறது. “அண்ணா. சில இடங்கள்ள அழுதுட்டே’ண்ணா” என்பார்கள்.

“அதெப்படி... லேங்குவேஜ் புரியாம அழுத?” என்று மடக்குவேன்.

“அப்புறம் அப்புறம்... புரிய ஆரம்பிச்சிடுச்சி’ண்ணா...” என்பார்கள்.

இப்படித்தான் நட்பு சூழ் உலகம் உருண்டு கொண்டிருகிறது. “மீசன் கற்கள்” – முதல் நூறு பக்கங்கள் தாண்டுவது கொஞ்சம் சிரமம் தான். அவ்வளவு கதாப்பாத்திரங்கள் இந்த நூறு பக்கங்களில் வருவார்கள். நமக்கு அன்னியப்பட்டக் கதையாக இருந்தாலும், வாசித்து முடிக்கும் போது இந்நாவல் நம்மைச் சுற்றிலும் நடக்கும் கதைபோல இருந்திருக்கும். “சாய்வு நாற்காலி” – ஒருவனது அகச்சிக்கலை முன்வைக்கும் கதை. எனினும், அவனுக்குள் நாம் பிரவேசித்திருப்போம்.

காலச்சுவடு போன்ற இலக்கிய ப்ராண்ட் வேல்யூ உள்ள, ஒர் அரங்கில் வாசக நண்பர்களைச் சந்திப்பதில் உள்ளூர என்றுமே மகிழ்ச்சி தான். அதுவும் முகம் தெரியாத வாசக நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதில் சொல்லமுடியாத சந்தோசம். அப்படி உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது – நான் விரும்பி வாசித்த படைப்புகளைப் பற்றி சின்னதாக ஒரு டெமோ கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது.

கடந்த புத்தகக் கண்காட்சியில் “கவிஞர் சுகுமாரன், பெருமாள்முருகன், தோப்பில் முகமது மீரான், குளச்சல் மு யூசுப், ஜி குப்புசாமி, பி. ஏ. கிருஷ்ணன்” ஆகியோர் தான் என்னுடைய ப்ராடக்ட். ஆ. ரா. வேங்கடாசலபதியின் “அந்த காலத்தில் காப்பி இல்லை” என்ற புத்தகத்தையும் ஒரு புராடக்டாக எடுக்கத்தான் நினைத்திருந்தேன். ஆனால், கண்காட்சி முடிய இருக்கும் சமயத்தில் தான் புத்தகங்கள் அச்சாகி அரங்கிற்கு வந்து சேர்ந்தன. இங்கு தான் ஒரு தன்னிலை விளக்கம் தேவைப்படுகிறது. இந்தப் பட்டியலிலுள்ள எல்லோரும் என்னுடைய இணக்கமான நண்பர்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒருசில பேராசிரியர்கள் கூட இருக்கிறார்கள். என் போன்ற சராசரிக்கும் கீழான மாணவர்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும் சொல்லுங்கள்?

உண்மையில், கவிஞர் சுகுமாரனைத் தவிர மற்ற யாருடனும் அதற்கு முன்பு பேசிப் பழக்கமில்லை. கேணியிலும், புத்தக வெளியீடுகளிலும் இதர எழுத்தாளர்களில் ஒருசிலரை தூரத்திலிருந்து பார்த்ததுண்டு. ஒரு மின்னஞ்சலோ!, ஒரு பேச்சு வார்த்தையோ! ஹூஹூம்... எனினும், இவர்களது ஆக்கங்கள் எனக்கு நிறையவே பரிச்சியம். பெருமாள்முருகன் புத்தகச் சந்தைக்கு வந்து சேர்வதற்குள் “கூள மாதாரி, நிழல் முற்றம்” ஆகிய புத்தகங்களை விற்றுத் தீர்துவிட்டேன். சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கையில் பத்தி’அண்ணா முருகனிடம் தொடர்புகொண்டு “உங்க ரெண்டு நாவலையும் கிருஷ்ணபிரபு வித்துத் தீத்துட்டு இருக்குறாரு...!” என்று சொல்லி இருக்கிறார்.

“அப்படியா...? யாரவரு...!” என்று முருகன் கேட்டிருக்கிறார்.

அதன் பிறகு பத்தியண்ணன் என்னிடம் கேட்டார்: “என்னங்க கிருஷ்ணா...! உங்கள பெருமாள்முருகனுக்குத் தெரியாதா?”

“ஹூஹூம்... அவர் கூட பேசினது இல்லைங்க அண்ணா” என்றேன்.

நாகம் அக்காவும், முத்த’ண்ணாவும் கவுன்டரில் அமர்ந்திருக்க “இந்தப் பையன் யாரு... இவ்வளோ எனர்ஜியா வொர்க் பண்றானே...!?” என்று ஆச்சர்யத்துடன் ஜி குப்புசாமி கேட்டிருக்கிறார். பி. ஏ. கிருஷ்ணன், ஆ. ரா. வேங்கடாச்சலாபதி போன்றோருக்கு கண்ணன் அறிமுகம் செய்துவைத்தார். “ஓ...” என்ற ஒலியுடனும், ஒரு சின்ன கைகுலுக்களுடனும் பரஸ்பரம் விலகிச் சென்றோம். இதில், “பெருமாள்முருகனை மட்டும் கொஞ்சம் போல தூக்கி வைத்துப் பேசுகிறீர்களே” என்று எல்லோரும் முறையிடுகிறார்கள்.

நான் புத்தகக் கண்காட்சியை ஒட்டி எழுதியிருந்த பதிவில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்: “என்னைப் பொறுத்த வரை இந்த வருஷம் பெருமாள் முருகனின் வருடம். போலவே ஜி குப்புசாமியின் வருடமும் கூட...”

காவியா பதிப்பகம் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு தோழர் பெருமாள்முருகனின் படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ஒழுங்கா படிச்சிருந்தா இந்த வேலையை நாம் செய்திருக்கலாமே என்று தோன்றும். ஆய்வை விட்டுத் தள்ளுங்கள். வைரமுத்துவின் நாவல்கள் கூட உன்னதமான படைப்புகள் என்று சொல்லி ஆய்வுகள் நடக்கிறது. ரசனையின் அடிப்படையில் என்று வைத்துப் பார்த்தாலும் கூட, முருகனின் படைப்புகள் அவசியம் விவாதிக்க வேண்டிய விஷயம். கொங்குமண் சார்ந்த அவ்வளவு விஷயங்கள் முருகனின் படைப்புகளில் கொட்டிக் கிடக்கின்றன.

இதோ...! மறுபடியும் ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் சேல்ஸ் மேனாக வேலை செய்ய காலச்சுவடு கண்ணன் அழைத்திருக்கிறார். இந்த வாய்ப்பைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. உண்மையில் எந்த எழுத்தாளரைப் பற்றிய டெமோவையும் கொடுக்குமாறு என்னை அவர் பணிக்கவில்லை. கண்ணனுக்குத் தேவையானது – ஆய்வும், அதுசார்ந்த புள்ளிவிவரமும். அப்படியிருக்க மேலதிகமாக இந்த வாய்ப்பினை விருப்பப்படிப் பயன்படுத்திக் கொள்ளவே பிரியப்படுகிறேன்.

அடுத்த சந்தைக்கான டெமோ புத்தகங்களை இனிமேல் தான் தெரிவு செய்யவேண்டும். என்றாலும், முதல் பட்டியலில் “மாதொருபாகன், பனி, திருடன் மணியன்பிள்ளை, பச்சைவிரல்” ஆகிய நான்கு புத்தகங்கள் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டன.

“நீங்க என்ன கிபி இந்த வருஷமும் பெருமாள்முருகனோட புராணத்தைத் தான் புத்தகச் சந்தையில் பாடப் போறீங்களா?” என்று கேட்பது காதில் விழுகிறது. அதுதான் இல்லை. இன்னும் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்பது சஸ்பென்ஸ்.

ஆக, புத்தகச் சந்தைக்குப் புதிதாக வருபவராக இருக்கலாம். ஏற்கனவே வந்தவராகவும் இருக்கலாம். நாம் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடியும் இருக்கலாம். கடந்தமுறை பரிந்துரை செய்த புத்தகங்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆகவே, என்னுடன் சண்டையிட நீங்கள் பிரியப்படலாம்.

எதிர்வரும் ஜனவரி மாதப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்து, வேண்டிய மட்டும் உரையாட மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இயற்கை அதற்கான சாத்தியங்களை உருவாக்கித் தரும் என்றே நம்புகிறேன்.

கவுன்ட் டவுன் ஸ்டர்ட்ஸ் ஹியர்... 

3 comments:

 1. ஜெயகாந்தனின் அந்தக் கதையை இப்போதுதான் படித்தேன், கிட்டத்தட்ட வித்தியாசமானதொரு எண்ணவோட்டதைக் கொடுத்த கதை சுமைதாங்கி..

  கடந்த வருடம் புத்தகச் சந்தையில் உங்களைச் சந்தித்தேன், உங்களைச் சந்திக்கும் முன்னரே 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் சார் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார், அந்த ஆர்வத்தில் தான் உங்களைச் சந்திக்க வந்தேன், உங்கள் அருகில் நெருங்கிவிட்டேன், பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தீர்கள், வியர்த்திருந்தீர்கள்.. திடிரென ஒரு அந்நியன் உங்களை நெருங்கி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி உணர்வீர்களோ அப்படித்தான் என்னையும் உணர்ந்தீர்கள், சமநேரத்தில் ஜோ.டி க்ருஸின் வருகையை வேறு ஒலி பெருக்கியில் கூற வேண்டிய அவசரத்தில் இருந்தீர்கள்... ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.. :-)

  ReplyDelete
 2. நம்ம மொகமே எப்பவும் சீரியஸா இருக்குற மாதிரி இருக்கும்... நீங்க தாராளமா சந்திக்கும் பொழுது பேசலாம்.

  சக மனிதர்கள் வாழும் உலகில் இதுபோன்ற உரையாடல்களைத் தவிர்த்து வேறென்னத்தைக் கண்டோம்.

  :-)

  ReplyDelete