Thursday, August 18, 2016

காலச்சுவடு வெறுப்பரசியல்

ஆதாய அரசியல் ஆபத்தானது. அதனினும் ஆபத்தானது (வெற்று அல்லது ஆதாய) இலக்கிய அரசியலும், காரணமற்ற வெறுப்பரசியலும்தான். பிரம்மராஜனுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாதது அல்ல.

ஆத்மாநாம் முழுத்தொகுப்பு விமர்சனக் கட்டுரைக்கு - காலச்சுவடு பதிப்பகத்துக்கும், காலச்சுவடு கண்ணனனுக்கும் - எதிராக முகநூலில் பகிரப்படும் நிலை தகவல்களைத் தொடர்ந்து பிரம்மராஜன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து (Facebook share) வருகிறார். இதெல்லாம் பதட்ட நோய்மை மனநிலையின் உச்சம் என்றுதான் புரிந்துகொள்கிறேன். விமர்சனக் கட்டுரையைப் பரவலாக அறியப்பட்ட கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான பிரம்மராஜன் நேர்மையாகவே அனுகலாம்தானே. தொகுப்பு சார்ந்து இதெல்லாம் இயல்பாக நடப்பவைதானே.

ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழ், 200-ஆவது சிறப்பிதழாக வந்தது மட்டுமல்லாமல் வந்த சூட்டுடன் பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்றுள்ளது. 164 பக்கங்களில் விளம்பரங்கள் போகப் பல சிறப்புப் பகுதிகள் இருந்தாலும் இதழில் வெளியான - பிரம்மராஜன் தொகுத்த - ஆத்மாநாம் முழுத்தொகுப்பு சார்ந்த விமர்சனக் கட்டுரையை முகநூலில் பகிர்ந்ததும் பலதரப்பிலிருந்தும் சலசலப்புகள் எழுந்துள்ளன.

சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி - கல்யாணராமன், காலச்சுவடு

காலச்சுவடு பதிப்பகம் அரசியல் செய்கிறார்கள், பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் வளைத்துப் போட்டுப் பதிப்பரசியல் செய்கிறார்கள் என்ற தேய்ந்து போன ரெக்கார்டு குரல்கள் தற்போது மீண்டும் எழ ஆரம்பித்துள்ளன.

படைப்புகள் சார்ந்த விமர்சனங்களையும், விவாதங்களையும் முன்னெடுப்பதில் பேரா. கல்யாணராமன் ஆர்வம் மிகுந்தவர் என்பது பலருக்கும் தெரியும். மரபிலக்கியம், நவீன இலக்கியம் என இரண்டு புலங்களிலும் ஆழ்ந்த பார்வையும் ஈடுபாடும் உள்ளவர் என்பது தீவிர இலக்கிய நண்பர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்.

ஆய்வுக் கூட்டம் ஒன்றில் ராமனுடன் மோதி வார்த்தைப் போர் செய்தது ஞாபகத்திற்கு வருகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் மாதம்தோறும் ஓர் ஆய்வுக் கூட்டம் ஏற்பாடாகும் (ஒவ்வொரு மாதமும் நிகழ்வு குறித்த தகவல் எனக்கு வருகிறது). மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை மாணவர்களும், சென்னை பல்கலைக் கழக ஆங்கிலத் துறை மாணவர்களும் கூட்டத்தில் உரை நிகழ்த்துவார்கள். மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சீனிவாசனும், சென்னை பல்கலை ஆங்கிலத் துறை பேராசிரியர் அழகரசனும் சேர்ந்து முன்னெடுக்கும் ஆய்வுக் கூட்டம் அது.

நான் வலது பக்கமும், பேரா. கல்யாண ராமன் இடது பக்கமும் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் அபிலாஷும் உடனிருந்ததாக ஞாபகம். அகலிகை குறித்த ஆய்வு நோக்கிலான கட்டுரை ஒன்றினை அழகரசனின் மாணவி ஒருவர் வாசித்தார். தமிழ்ப் பேரா. பழனியப்பனின் ஆய்வு மாணவர் ஒருவரும் பங்குபெற்று உரையாற்றினார். ஆய்வுக் கூட்டம் ஏற்பாடாகியிருந்த மாதத்தில் வெளிவந்திருந்த - காலச்சுவடு இதழில் மறு பிரசுரமாகியிருந்த - சுந்தர ராமசாமியின் கதையைப் பற்றிப் பேரா. பழனியப்பனின் ஆய்வு மாணவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். காலச்சுவடு இதழின் அரசியல் பார்வைகள் குறித்தும் கடுமையான பார்வைகளை முன்வைத்தார். காலச்சுவடு, தலித்துகளுக்கு எதிரான இதழ் என்பதில் அந்த மாணவர் உறுதியுடன் பேசினார்.

அவர் பேசி முடித்ததும், பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த - மாநிலக் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் - மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவக்குமார் 'ஒரு இதழ் குறித்தும், அந்த இதழின் அரசியல் பார்வை குறித்தும் இவ்வளவு அவநம்பிக்கையுடன் அனுகத் தேவையில்லை' என்ற கருத்தை மென்மையான வார்த்தைகளில் முன்வைத்தார்.

அதற்கு பேரா. ராமன், "மாணவரின் தலித் அரசியல் பார்வை சரியானதுதான். காலச்சுவடு சார்ந்து மாணவரின் தலித் அரசியல் தளத்திலிருந்து பார்க்கையில், மாணவர் முன்வைத்த வாதம் சரிதான்." என்று குறிப்பிட்டார்.

பேச்சு எங்கெங்கோ சென்ற விவாதத்தில் தி.ஜாவின் முழுத்தொகுப்பு ஏற்கனவே உள்ள நிலையில் காலச்சுவடு மீண்டும் தி.ஜாவின் முழுத் தொகுப்பைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? கவிஞர் சுகுமாரனைக் கொண்டு தொகுக்க வேண்டியதின் அவசியம் என்ன? என்ற கருத்து சார்ந்த விவாதம் எழுந்தது.

அதற்குக் கடுமையான ஆட்சேபங்களை நான் முன்வைத்தேன். "தி.ஜாவின் மற்ற தொகுப்புகளில் இல்லாத சில கதைகளை சுகுமாரன் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். சில கதைகள் வெளியான இதழின் விவரமும், கால வரிசையும் ஐந்திணை பதிப்பில் தவறாக உள்ளது. அதுவுமில்லாமல் உரிமம் பெற்றுத்தான் காலச்சுவடு புத்தகத்தை அச்சிட்டிருக்கிறார்கள். மேலும், படைப்பு எந்தப் பதிப்பகத்தில் வெளிவர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது படைப்பின் உரிமைக்குச் சொந்தமானவர்கள்தானே தவிர வாசகர்களோ பதிப்பகத்தாரோ அல்ல..." என்று ராமனிடம் வாதம் செய்தேன். நண்பர் காமராசு என்னுடைய குரலின் அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு சைகை செய்தார். "மோகமுள்" என்ற வார்த்தையை தி.ஜா எங்கிருந்து பெற்றார் என்று சுகுமாரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்த சில தகவல்கள் சார்ந்த கருத்தையும் முன்வைத்தார். தொடர்ந்து ராமனுக்கும் எனக்கும் விவாத உரசல் மூண்டது.

ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் ராமனிடம் சென்று கை குலுக்கி "நீங்கள் பல அருமையான கருத்துக்களை முன்வைத்தீர்கள்" என்றேன். அவரும் மகிழ்ச்சியுடன் உரையாடினார். தமிழ் பதிப்புச் சூழல் சார்ந்தும், காலச்சுவடு கிளாசிக் பதிப்புகள் சார்ந்தும் கூட ராமனுக்கு விமர்சனங்கள் உண்டு. அதையெல்லாம் ராமன் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அவற்றைப் பற்றியெல்லாம் கூட விமர்சனம் எழுதும் எண்ணம் ராமனுக்கு இருக்கலாம்.

நேர்ப்பேச்சில் சந்தித்துப் பேசியதில் ராமனிடம் மொழிபெயர்ப்புகள் சார்ந்தும், தொகுப்புகள் சார்ந்தும் சொல்ல நிறையவே இருக்கிறது. அவருடைய பார்வைகள் தற்காலப் பதிப்புச் சூழலில் விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய ஒன்று. மாறாக காலச்சுவடு கண்ணனைத் திட்டுவதின் மூலமும், ராமனைத் தனிமனிதத் தாக்குதல் நடத்துவதன் மூலமும் கட்டுரையின் சாரத்தை மடைமாற்றி விஷமிகள் குளிர் காய்கிறார்கள்.

காலச்சுவடு என்றில்லை முழுத்தொகுப்பு வெளியிட்டுள்ள எல்லா பதிப்பகங்களின் கிளாசிக் படைப்புகளும், கிளாசிக் ஆளுமைகளின் முழுத் தொகுப்புகளும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவை அல்ல. சிறுசிறு அச்சுப் பிழைகள் நிச்சயம் இருக்கும். ஆனால் படைப்பின் அர்த்தத்தையே மாற்றுகின்ற பிழைகள் பொருத்துக்கொள்ள முடியாத ஒன்று. வார்த்தையையும், வாக்கியங்களையும் மாற்றுவதின் மூலம் படைப்பின் சாரத்தையே மாற்றுகிறோம் என்பது தொகுப்பாளர்கள் அறியாததா? பொருட்படுத்தி இவற்றை எல்லாம் நாம் விவாதிக்க முன்வர வேண்டும் இல்லையா?. அதைத்தான் ஆகஸ்டு மாத (2016) இதழின் கட்டுரையில் கல்யாணராமன் முன்வைத்திருக்கிறார்.

கல்யாணராமன் முன்வைக்கும் விமர்சனத்தில் ஒன்றுக்குக் கூட பதில் அளிக்காமல், காலச்சுவடு பதிப்பகத்தின் மீதான தாக்குதலாக கே.என். சிவராமன் மடைமாற்றுகிறார். கடந்த பல ஆண்டுகளில் - போதிய இடைவெளியில் - இதுபோன்ற வெறுப்பரசியலைப் பதிப்பகங்களுக்கு இடையே அவர் செய்து வருகிறார். சிவராமன் போன்ற தீவிர வாசகர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது ஏமாற்றம் அளிக்கிறது.

பிரம்மராஜன் தொகுத்துக் கையளித்த 'ஆத்மாநாம் முழுத்தொகுப்பு' மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல் போற்றப்பட வேண்டிய ஒரு வேலைதான். கடந்த 20 ஆண்டுகளாக அந்தத் தொகுப்புதான் நமக்குப் படிக்கக் கிடைக்கிறது. பிரம்மராஜனுக்குத் தமிழ்ச் சூழல் அந்த வகையில் நன்றிக் கடன்பட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், கல்யாணராமன் தனது கட்டுரையில் குறிப்பிடும் விஷயங்களை விவாதித்து 'ஆத்மாநாம் படைப்புகள்' சார்ந்த புரிதலை முன்னெடுக்காமால், பதிப்பரசியலை முன்வைத்து விவாதத்தை மடை மாற்றுவது துருதிஷ்டமான ஒன்று.

'ஜி. நாகராஜன் படைப்புகள்', 'ஜி. நாகராஜன் ஆக்கங்கள்' என சி. மோகன் தொகுத்துக் கையளித்த பதிப்பையும், ராஜமார்த்தாண்டன் கையளித்த பதிப்பையும் காலச்சுவடு பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்கள். சி. மோகனின் தொகுப்பில் இல்லாத பல படைப்புகளும், கடிதங்களும், ஆங்கிலப் படைப்புகளும் ராஜமார்த்தாண்டனின் பிந்தைய தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வாசகர்கள் இரண்டு தொகுப்பையும் ஒப்பிட்டு இதனைப் புரிந்துகொள்ளலாம். இதுபோன்ற அடுத்தடுத்த தொகுப்பு வேலைகள்தான் ஒரு படைப்பாளிக்கு மரியாதை செய்யும் செயல்கள். இதெல்லாம் புதிதாக ஒன்றும் நடப்பதல்ல.

ஆங்கிலப் பதிப்பில் ஒரே எழுத்தாளனுக்கு, ஒரே பதிப்பகத்தின் மூலம் இரண்டு தொகுப்புகள் வெளிவருகின்றன. ஒரு புத்தகத்தின் இரண்டு மொழிபெயர்ப்புகளும் ஒரே பதிப்பகத்தில் ஒன்றாகவே அச்சாகின்றன. வாசகர்கள் விரும்பும் தொகுப்பையும், மொழியாக்கத்தையும் வாங்கிக் கொள்ளலாம். ஓரான் பாமுக், முரகாமி போன்ற எழுத்தாளர்களுக்குத் தமிழில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. அடுத்தடுத்த மேம்படுத்தப்பட்ட தொகுப்பு வந்தால் கூட பதிப்பகங்களுக்கு இடையிலான வெறுப்பரசியலாக முன்னெடுப்பதில்தான் சிவராமன் போன்றவர்கள் முனைப்பாக இருக்கின்றனர்.

'தனிமையின் நூறு ஆண்டுகள்' மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரே பதிப்பில் இரண்டு விதமான முன்னட்டை வடிவமைப்பைச் செய்து காலச்சுவடு பதிப்பகம் முன்னோடியான முயற்சியைக் கடந்த ஆண்டுகளில் செய்திருந்தார்கள். தமிழ்ச் சூழலில் முன்னட்டை மேக்கப் வேலைகள்தான் சாத்தியம் போல. தொகுப்பு சார்ந்த கறாரான வேலைகள் செய்தால் பொங்கி எழுகிறார்கள்.

ஒவ்வொரு வார்த்தையையும் வாக்கியத்தையும் வரியையும் படைப்பாளன் தனது ஓர்மையில் வடித்தெடுக்கிறான். அதற்கான மரியாதையை உணர்ந்தவர்கள் தொகுப்பாளர்களாக அமைந்தால் வாசகர்கள் தப்பித்தோம். இல்லையேல் சிரமம்தான். எல்லாவற்றையும் பாராட்டும், எல்லோரையும் பாராட்டும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நியாயமான விமர்சனம் செய்தால் கூட பதிப்பரசியலாகவும், பதிப்பக - எழுத்தாள பிரச்சனையாகவும் திரிதல் செய்யும் விஷமிகளுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

சமூக வலைதளங்களில் கல்யாண ராமன் எழுதிய கட்டுரைக்குக் காலச்சுவடு நிறுவனத்தையும், கண்ணனையும் சாடும் பதிவுகளைத் தொடர்ந்து பிரம்மராஜன் தனது முகநூலில் பகிர்ந்து வரும் மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. பிரம்மராஜன் தமிழ் வாசகர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறாரா என்ன? இது போன்ற போலித்தனமான அனுகுதல்கள் பிரம்மராஜனுக்கு எதற்கு? ஒரு தொகுப்பின் சர்ச்சைகள் குறித்து வாய் திறக்க வேண்டியதும், அதன் புரிதலை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டியதும் புரிதலுள்ள தொகுப்பாளரின் அடிப்படை தர்மம். மாறாகக் கீழ்த்தரமான இலக்கிய அரசியலை வளர்த்தெடுப்பது அல்ல.

பஷீர் நினைவு தினத்தில் எஸ்ரா தொகுத்த "நூறு சிறந்த சிறுகதைகள்" தொகுப்பு குறித்து சில ஐயங்களை நான் முன் வைத்துப் பேசினேன். கொஞ்சம் கூடப் பொறுப்பின்றிக் கதைகளை எஸ்ரா தொகுத்திருக்கிறார் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதனைப் பதிவிலும் எழுதி இருக்கிறேன். இன்று வரையிலும் எஸ்ரா அது குறித்து வாய் திறக்கவில்லை. எஸ்ராவின் தீவிர வாசகர்கள் என்னைப் பழித்ததுதான் மிச்சம்.

Link: பஷீரும் தமிழ்ச் சூழலும் (Click to read more)

ஆத்மாநாம் முழுத்தொகுப்பு குறித்து பேரா. கல்யாண ராமன் கட்டுரை எழுதியதற்கு, 'இவ்வளவு நாட்களும் தமிழ்த்துறை தூங்கிக் கொண்டிருந்ததா? இவ்வளவு நாள் இல்லாத அக்கரை திடீரென்று ராமனுக்கு எங்கிருந்து வந்தது?' போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.

தமிழர்களிடம் எங்கோ ஒரு பிறழ்வு இருக்கிறது. எல்லாம் நண்டு கதையின் தாத்பர்யம்தான். ஆத்மாநாம் அறக்கட்டளையை சீனிவசன் நடராஜன் ஆரம்பித்த போதும் இதே பிரச்சனை எழுந்தது. ஆத்மாநாம் பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கவும், விருதினைக் கொடுக்கவும் இவர்கள் யார்? என்ற பிரச்சனையை எழுப்பினார்கள்.

தமிழ்ச் சூழல் எல்லா காலத்திலும் இப்படித்தான் இருந்துள்ளதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. இரட்டை அர்த்தம்தான் என்றாலும் ஒரு பழமொழியைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

'தானும் படுக்க மாட்டானுங்க. தள்ளியும் படுக்க மாட்டானுங்க.'

ஆத்மாநாம் முழுத் தொகுப்புக்கும் சரி, ஆத்மாநாம் பெயரிலான அறக்கட்டளையைப் பதிவு செய்ததற்கும் சரி, அப்பெயரிலான விருதினை அறிவித்தபோதும் சரி, தமிழ்ச் சூழலை நினைக்கும்போதும் சரி, இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்வது பொருத்தமாகத்தான் இருக்கிறது.

இந்த விஷயத்தில் வாய் திறக்க வேண்டியது பிரம்மராஜன்தான். விளக்கம் அளிக்க வேண்டியதும் அவர் மட்டும்தான். இந்த விவாதம் குறித்து அவருக்குச் சாதகமாக எழுதும் முகநூல் பதிவுகளை ஷேர் செய்யும் பிரம்மராஜனுக்குக் கட்டுரை வெளியான இதழுக்கு எதிர்விமர்சனம் அல்லது பதில் கட்டுரை எழுதத் தெரியாதா?

பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் காலச்சுவடு பதிப்பகத்துக்கு எதிராகவும், பிரம்மராஜனுக்கு ஆதரவாகவும் முகநூலில் பகிர்ந்துள்ள நிலைத்தகவல் வெறுப்பரசியலின் உச்சம். முதல் வரியிலேயே சிவராமன் இப்படி ஆரம்பிக்கிறார்.

/-- பிரம்மராஜனைக் குறிவைத்துத் தாக்க ஆரம்பித்திருக்கிறதா? அழிக்க நினைக்கிறதா காலச்சுவடு? --/

ஒரு படைப்பை விமர்சனம் செய்வது ஒருவரை அழிப்பதாகுமா? காலச்சுவடு பதிப்பகம் என்ன இலக்கிய சர்வாதிகாரிகளா? இலக்கிய வரலாற்றில் பிம்மராஜனுக்கான இடத்தை யாரும் தாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. அதைப் போலவே விமர்சனத்திலிருந்து பிரம்மராஜன் தப்பிக்கவும் முடியாது. ஒரு வகையில் காலச்சுவடு பதிப்பகம் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் அக்கட்டுரை வழி ஏற்படுத்துகிறதுதானே!? வசகர்களாகிய நமக்கும் தொகுப்பு சார்ந்த ஒரு புரிதலை ஏற்படுத்துகிறதுதானே. உ.வே.சா முன்னுரை தொகுப்புப் பணியை அதிகாரத்தால் காலச்சுவடு பெற்றது என்ற யூகத்தின் அடிப்படையிலான ஆதாரமில்லாத தகவல்களைப் பகிர்வது அபத்தத்தின் உச்சம்.



சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் காலச்சுவடு பதிப்பகத்தின் மீதும், கண்ணன் மீதும் பிரயோகிக்க நினைக்கும் வெறுப்பரசியலை - காலச்சுவடு பதிப்பகம் வாயிலாகப் புத்தகங்கள் கொண்டு வரும் - ஆய்வாளர்கள் மீதும் படைப்பாளிகள் மீதும் சிவராமன் கக்குவதற்குத் தயாராகவே இருக்கிறார். இதெல்லாம் தமிழின் ஆரோக்கியத்தின் முதுகில் விஷக் கத்தியைச் சொருகும் வேலை. காலச்சுவடையும், கண்ணனையும் வசைபாட எவ்வளவோ விஷயங்கள் சிவராமனுக்குக் கிடைக்கலாம், அதற்குப் பதில் சலபதி போன்ற ஆய்வாளர்களின் உழைப்பையும், பெருமாள்முருகன் போன்ற படைப்பாளிகளையும்தான் புறந்தள்ள வேண்டுமா?

புதுமைப்பித்தன் கதைகளைக் காலச்சுவடு கொண்டுவரும் அறிவிப்பை வெளியிட்டபோது தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தியவர்கள் - 8 பதிப்புகளைக் கடந்துவிட்ட (ஆ.இரா.வேங்கடா)சலபதி தொகுத்தளித்த முழுத்தொகுப்பை அதற்கு முன் வந்த தொகுப்புகளுடன் ஒப்பிட்டு - சலபதியின் தொகுப்பு செம்பதிப்பு அல்ல என்பதை இவர்கள் நிரூபிக்கலாமே. பெருமாள்முருகன் தொகுத்தளித்த கு.ப.ரா கதைகளுக்கும் அதனைச் செய்யலாமே?

சங்க இலக்கியங்களைத் தொகுத்தளித்ததில் சாமிநாதைய்யர் எப்படி முன்னோடியோ, அதுபோலவே நவீன கிளாசிக் படைப்புகளை - நவீன பார்வையோடும் அறிவின் பின்புலத்திலும், கல்விப் புல ஆய்வாளனின் நோக்கோடும் - தொகுத்தளிப்பதில் சலபதி முன்மாதிரி ஆளுமை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பதிப்பிலும் ஏதாவது ஒரு புதுத் தகவலைச் சேர்த்து புதுமைப்பித்தனை இன்னும் இன்னும் என சலபதி நெருங்குகிறார். அதன் மூலம் வாசகர்களும் நம்பகத்தனமான மூலத்தை நெருங்க வழி சமைக்கிறார். இதுவரையிலும் வெளிவந்த தொகுப்பின் முன்னுரைகளைப் படித்தாலே அது விளங்கும். சலபதி செய்யும் ஒவ்வொரு வேலையின் பின்னும் இந்தச் செய்நேர்த்தி இருக்கும். ஒரு வார்த்தையில் சொல்லுவதாக இருந்தால் சலபதியின் தொகுப்புப் பணியை 'அபாரம்' என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட பணியைப் பாராட்டவில்லை என்றாலும் தூற்றாமல் இருக்கலாமே.

பழ. அதியமான் தொகுத்தளித்த கு. அழகிரிசாமி கதைகள் முழுத்தொகுப்பு, பெருமாள்முருகன் தொகுத்தளித்த கு.ப.ரா கதைகள் முழுத்தொகுப்பு போன்ற வேலைகளுக்கும் சலபதியின் 'புதுமைப்பித்தன்' முழுத்தொகுப்பே முன்மாதிரி. வரலாற்றுப் பார்வையிலும், அறிவார்த்த பார்வையிலும் அறிவியல் பின்புலத்தின் துணைகொண்டு இந்தத் தொகுப்பு வேலைகளைச் சலபதி செய்திருக்கிறார். இதுவரையிலும் வெளிவந்துள்ள புதுமைப்பித்தன் கதைகளின் பல்வேறு பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே வாசகர்களுக்கு உண்மை புலனாகும். இதுபோன்ற நம்பகத்தனமான பதிப்புகளை நூலகங்களும் கல்வி நிறுவனங்களும் தேடி வாங்குவதில் வியப்பில்லையே. (இதைத்தான் நூலகங்களைக் குறி வைத்து காலச்சுவடு லாபி செய்கிறது என்று சிவராமன் ஊடுசால் ஓட்டுகிறார்.)

சிவராமனின் பாஷையில் சொல்லுவதென்றால் காலச்சுவடு மீதுள்ள வெறுப்பரசியலில் சலபதியையும், பெருமாள்முருகனையும் இவர் தாக்க நினைக்கிறாரா? அல்லது அழிக்க நினைக்கிறாரா?

ஆம்... அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என்று சிவராமன் போல நானும் சொல்ல மாட்டேன். ஏனெனில் இவர்கள் செய்யும் வேலைகளால் வரலாறு அவர்களுக்கான இடத்தைக் கொடுக்கும். உழைப்பு, செய்நேர்த்தி ஆகியவற்றின் பொருட்டு அவரவர்க்கான இடம் அவரவர்க்கு வாய்க்கும்தானே.

மாதொருபாகன் சர்ச்சை வெடித்தபோது கருத்துச் சுதந்தரத்திற்காகக் குரல் கொடுக்கிறேன் என்று பெருமாள்முருகனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் சிவராமன் பேசியதும் கூட காலச்சுவடு மீதுள்ள வெறுப்பரசியல்தான் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது.

ஒரு தொகுப்பு வெளிவருவதன் - கால இடைவெளியில் அதே தொகுப்பின் மேம்படுத்தப்பட்ட செம்பதிப்பு ஆதாரத் தகவல்களுடன் வெளிவருவதன் - சாத்தியக் கூறுகள் தென்பட்டால் இலக்கியச் சூழலில் மகிழ்வுக்கான வெளி அமையவேண்டும். அப்படியில்லாமல் பதிப்பகங்களுக்கு இடையிலான அரசியலாக சிவராமன் போன்றவர்கள் மடைமாற்றுவது சந்தர்ப்பவாதம்.

இதுபோன்ற தொகுப்புப் பணிகள் தமிழுக்குப் புதிது என்பதால் மற்றவர்களும் குழப்பத்துடன் புரிந்து கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. ஆதாரப் பூர்வமான, செறிவான நல்ல பதிப்பைத் தீவிர வாசகர்கள் தேடிச் செல்வார்கள். காலச்சுவடு பதிப்பகத்தில் வெளிவந்த புதுமைப்பித்தன் முழுத்தொகுப்பே அதற்குச் சான்று. இதுசார்ந்த புரிதலுள்ள வாசகர்கள் நல்ல பதிப்பைக் கண்டடைவார்கள். தீவிர வாசகர்களே ஒரு பதிப்பகத்தின் நம்பிக்கைக் கீற்று. சிவராமனும் அதில் ஒருவர் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனினும் அவர் ஏன் காலச்சுவடு பதிப்பகத்தின் மீது வன்மத்தைக் கக்குகிறார் என்பதுதான் புரியவில்லை.

தன்னுடைய நண்பரின் படைப்புகளின் மூலத்தைத் தேடித் திரிந்து ஒருவன் கண்டுபிடித்திருக்கிறான் என்பதில் பிரம்மராஜன் உண்மையில் மகிழ வேண்டும். அதை விடுத்து சிவராமன் போன்றவர்கள் பதிவிட்டிருக்கும் - ராமனின் விமர்சனக் கட்டுரையை நீர்த்துப் போகச் செய்யும் தன்மையிலான - முகநூல் பதிவுகளை பிரம்மராஜன் தனது முகநூல் பக்கங்களில் ஷேர் செய்வது எந்த வகையிலும் நியாயம் என்று தெரியவில்லை. பிரம்மராஜனின் இலக்கியப் பங்களிப்புக்குக் கல்யாணராமனின் விமர்சனக் கட்டுரை களங்கம் ஏற்படுத்துவதால் வழக்கு தொடர வேண்டும் என்று ஒரு சீனியர் டிரான்ஸ்லேட்டர் முகநூல் பின்னூட்டத்தில் யோசனையை முன்வைக்கிறார். அடக் கடவுளே...! தமிழ்ச் சூழல் வெளங்கிடும்.

ஆர். சிவக்குமார், விமலாதித்த மாமல்லன், கவிஞர் சுகுமாரன், பிரம்மராஜன், அகிலன் எத்திராஜ் போன்றவர்கள் ஆத்மாநாம் படைப்பு குறித்து நம்பத் தகுந்த தகவல்களைக் கொடுக்க வல்லவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆகவே, இத்தொகுப்பு குறித்தும், விமர்சனக் கட்டுரை குறித்தும் பேச இவர்களுக்கு நிறையவே விஷயம் இருக்கும். வினோதம் என்னவெனில் இவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. மற்றவர்கள்தான் பார்ப்பனக் கண்ணன், பதிப்பரசியல் என்று சமர் செய்கிறார்கள்.

தமிழ் இலக்கியப் பிரதிகளைக் கவனத்துடன் அனுகி அதுசார்ந்த கருத்துக்களைப் பகிரும் விமலாதித்த மாமல்லன் கூட அமைதி காப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இலக்கிய சூழலிலிருந்தும், பொதுவெளியிலிருந்தும் விலகி வாழும் பிரம்மராஜன் மெளனம் கலைய வேண்டும். இல்லையேல், முடிந்த மட்டும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் (கள்ள இலக்கிய அரசியல்) வெறுப்பரசியலைப் பரப்புபவர்களை ஊக்கப்படுத்தி, (தனது நிழலில்) உரப்படுத்தி இலக்கிய விவாதத்தைத் திரிக்கும் வேலையை பிரம்மராஜன் செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே நவீன இலக்கியத்துக்கு - கவிப் பங்களிப்பை விட, ஆத்மாநாம் தொகுப்பைக் கையளித்ததை விட இலக்கியச் சூழலுக்கு - பிரம்மராஜன் செய்யும் மிகப் பெரிய கைமாறாக இருக்கும். அதைவிட முக்கியம் பிரம்மராஜன் நேரடியாக நம்முடன் பேச வேண்டும். பேசுவாரா அவர்?

டிஸ்கி:

1. ஆங்கிலத் துறை பேராசிரியரின் பெயரைத் தவறுதலாக 'சிவக்குமார்' என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர்கள் 'அழகரசன்' என்பதை கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

2. அபிலாஷ் - உரையாற்றினார் என்று குறிப்பிட்டிருந்தேன். 'அகலிகை' பற்றிய கட்டுரையை வாசித்தவர் நந்தனம் கல்லூரிப் பேராசிரியர்.

3. 'ஐந்திணை' என்ற பதிப்பகத்தின் பெயரை நீக்கி இருக்கிறேன். தி.ஜா தொகுதியை பலரும் வெளியிட்டிருக்கலாம். ஆகவே பொதுவாகவே பேசுவோம். 

4 comments:

  1. "ஆர். சிவக்குமார், விமலாதித்த மாமல்லன், கவிஞர் சுகுமாரன், பிரம்மராஜன், அகிலன் எத்திராஜ் போன்றவர்கள் ஆத்மாநாம் படைப்பு குறித்து நம்பத் தகுந்த தகவல்களைக் கொடுக்க வல்லவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை" என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் கவிஞர் ஆத்மாநாம் குறித்த எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. திரு. ஆத்மாநாமை நான் ஓரிரு முறைதான் சந்தித்திருக்கிறேன். அதுவும் கூட கவிஞர் பிரம்மராஜனோடுதான். திரு. ஆத்மாநாம் மீது அபிமானமும் மரியாதையும் எனக்கு உண்டு. ஆனால் அவர் குறித்து எனக்குத் தெரிந்த தகவல்கள் எதுவும் பொருட்படுத்தத் தக்கவை அல்ல.

    அன்புடன்

    எதிராஜ் அகிலன்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி அகில்...

      Delete
  2. விமர்சனமோ, எதிர்வினையோ இருபக்குமும் கூர் இருக்கும் பிடியில்லாத கத்தி போன்றது. சார்புநிலையற்று நடுநிலையாக கையாளாவிட்டால், அதை முன்வைப்பவனையே கேள்விக்குள்ளாக்கி கேலிக்குள்ளாக்கிவிடும். இது உங்களுக்கும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.திரு.கிருஷ்ண பிரபு
    //"தானும் படுக்க மாட்டானுங்க. தள்ளியும் படுக்க மாட்டானுங்க”.//
    //ஆத்மாநாம் முழுத் தொகுப்புக்கும் சரி, ஆத்மாநாம் பெயரிலான அறக்கட்டளையைப் பதிவு செய்ததற்கும் சரி, அப்பெயரிலான விருதினை அறிவித்தபோதும் சரி, தமிழ்ச் சூழலை நினைக்கும்போதும் சரி, இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்வது பொருத்தமாகத்தான் இருக்கிறது.//
    #‪#‎திரு‬.கிருஷ்ண பிரபு
    மேற்கண்ட உங்களது பகிரங்க வெளிப்பாட்டிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், ஆத்மாநாம் அரக்கட்டளை ஆரம்பித்தாகிவிட்டது, கல்யாணராமன் என்கிற ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஆய்வாளரை தொகுப்பாசிரியராகக் கொண்டு ஆத்மாநாமின் மொத்த படைப்புகளையும் கையப்படுத்திவிட நினைக்கிறீர்கள்.
    அதற்கு பிரம்மராஜன் மிகவும் தலைவலியாக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள். அவரது தலையின் மீது கல்லைபோட்டு சாகடித்துவிடுங்கள். மேற்கொண்டு எவரது தலையீடும் இருக்காது. மிக எளிதில் தொகுப்பினை வெளியிட்டுவிடலாம். அடுத்த விருது தருவதற்குள்.
    ஆத்மாநாமிற்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது, அவரது கவிதைகளில் வருகின்ற குட்டி இளவரசிகள் இன்னமும் இருக்கிறார்கள். அவரொன்றும் அநாதையாக இறந்துபோய்விடவில்லை. இந்த விசயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் திரு.கிருஷ்ண பிரபு அவர்களே.
    //'தனிமையின் நூறு ஆண்டுகள்” மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரே பதிப்பில் இரண்டு விதமான முன்னட்டை வடிவமைப்பைச் செய்து காலச்சுவடு பதிப்பகம் முன்னோடியான முயற்சியைக் கடந்த ஆண்டுகளில் செய்திருந்தார்கள். தமிழ்ச் சூழலில் முன்னட்டை மேக்கப் வேலைகள்தான் சாத்தியம் போல. தொகுப்பு சார்ந்த கறாரான வேலைகள் செய்தால் பொங்கி எழுகிறார்கள்.//
    ##திரு.கிருஷ்ண பிரபு
    ஆம் திரு.கிருஷ்ண பிரபு, நீங்கள் சொல்வது உண்மைதான். தமிழ்ச் சூழலில் முன்னட்டை மேக்கப் வேலைகள் தான் சாத்தியம். உள் மூலத்திலிருந்து வெளிக்கொணர்ந்த திரு.ஞாலன் சுப்பிரமணியனும், வேலாயுதத்தின் மலையாள வெளி மூலத்திலிருந்து வெளிக்கொணர்ந்த திரு.சுகுமாரனும் “ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை” நாவலின் அட்டை வடிவமைக்கு கொடுத்த கவனத்தில் ஒரு பகுதியையாவது நாவலின் மொழிபெயர்ப்பிற்கு கொடுத்திருந்தால் மொழிபெயர்ப்பு மிக சிறப்பாக இருந்திருக்கும்.
    நீங்கள் அந்த மொழிபெயர்ப்பு தமிழ் கிளாசிக் நாவலை வாசித்திருக்கிறீர்களா திரு.கிருஷ்ண பிரபு?

    ReplyDelete
  3. ஆதாய அரசியல் ஆபத்தானது. அதனினும் ஆபத்தானது (வெற்று அல்லது ஆதாய) இலக்கிய அரசியலும், காரணமற்ற வெறுப்பரசியலும்தான். பிரம்மராஜனுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாதது அல்ல.

    ஆத்மாநாம் முழுத்தொகுப்பு விமர்சனக் கட்டுரைக்கு - காலச்சுவடு பதிப்பகத்துக்கும், காலச்சுவடு கண்ணனனுக்கும் - எதிராக முகநூலில் பகிரப்படும் நிலை தகவல்களைத் தொடர்ந்து பிரம்மராஜன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து (Facebook share) வருகிறார். இதெல்லாம் பதட்ட "நோய்மை மனநிலையின் உச்சம் என்றுதான் புரிந்துகொள்கிறேன். விமர்சனக் கட்டுரையைப் பரவலாக அறியப்பட்ட கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான பிரம்மராஜன் நேர்மையாகவே அனுகலாம்தானே. தொகுப்பு சார்ந்து இதெல்லாம் இயல்பாக நடப்பவைதானே." தோழர்களுக்கு, யார் செய்கிறார் ஆதாய அரசியல்? ஆத்மாநாம் தொகுப்பை வெளியிட்டு பிரம்மராஜன் அடைந்த ஆதாயம் என்ன? ஆத்மாநாமின் கவிதைகளை சிதைத்து பிரம்மராஜன் பெற்ற, பெறும் ஆதாயம் என்ன? சம்பந்தப்பட்ட கட்டுரையின் Tone and Tenor கண்டிப்பாக பிரம்மராஜனை மதிப்பழிப்பதாகத்தான் இருக்கிறது. ஒரு படைப்பாளியைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றியனுப்பி சாட்டையால் அவரை அடித்து அவரிடமிருந்து பதில் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பதும் பதில் தந்தால்தான் அவர் அறிவாளி இல்லாவிட்டால் அவர் மனநோயாளி என்று பேசுவது எத்தனை மட்டமான ப்ளாக்மெயில். நீங்கள் உண்மையான எழுத்தாளராயிருந்தால் நான் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். வழக்கு போடும் அதிகாரமும் உரிமையும் காலச்சுவடுக்கு மட்டும்தான் இருக்கிறதா என்ன? இந்தக் கட்டுரை தொடர்பாய் எழுப்பப்படும் கேள்விகள் எல்லாம் உங்களுக்கு வெறுப்பு அரசியல். அப்படித்தானே? காலச்சுவடின் மற்ற செம்பதிப்புகள் தொடர்பாகவும் கட்டுரையாளருக்குக் காத்திரமான எதிர்க்கருத்துகள் உள்ளது என்று சொல்கிறீர்களே, அவற்றை காலச்சுவடில் வெளியிடச் செய்யுங்களேன். ஆத்மாநாம் தான் உயிரோடிருக்கிறவரை எதிர்த்த விஷயங்களை அவரை ஒரு ப்ராடக்ட் ஆக்கி செய்ய முற்படுவது என்ன நியாயம்? அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் மனநோயாளிகள், சுய ஆதாயம் தேடுபவர்கள், அப்படித்தானே? பிரம்மராஜன் அவருடைய முகநூல் பக்கங்களில் வெளியிடுவது அவர் விருப்பத்தேர்வு. அவற்றைப் படித்து நீங்கள்தான் பதற்றமடைந்திருக்கிறீர்கள் என்பது வெளிப்படை. இத்தனை பேசுகிறீர்களே, திருவாளர் கல்யாணராமன் குறிப்பிடும் அளவு பிழைகள் மண்டிக்கிடக்கும் ஒரு நூலை நான்கு பதிப்புகள் வெளியிட்டு பொருளீட்டிய பதிப்பகத்திடம் கேட்க உங்களிடம் ஏன் ஒரு கேள்விகூட இல்லை. நான் சீனியர் ட்ரான்ஸ்லேட்டரெல்லாம் இல்லை. சாதாரண மொழிபெயர்ப்பாளர். ஆனால், சிறுபத்திரிகையுலகில் 30 வருடங்களுக்கும் மேல் புழங்குபவள் என்பதால் காலச்சுவடின் இந்த அராஜக அரசியலைப் பார்த்து நமக்கேன் வம்பு என்று வாளாவிருக்க முடியவில்லை. மனசாட்சி இருக்கிறதே, என்ன செய்ய? தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.

    ReplyDelete