Sunday, August 28, 2016

ஆத்மாநாம் சர்ச்சை - லதா ராமகிருஷ்ணன்

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 25, 2016 - நேரம்: 12.21 AM

இன்று ஒரு செய்தி!

ஆத்மாநாமுடைய கவிதைகள் குறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லாதது போலவும், எல்லோரும் அவருடைய கவிதைகளைச் சிதைத்துக் குட்டிச்சுவராக்கி அதன் மூலம் அந்த நிலாவையோ சூரியனையோ கையகப்படுத்திவிடுவதே குறியாகச் செயல்பட்டிருப்பது போலவும் 'மேதகு ஆய்வாளர்' பதறிப் பதறிக் கட்டுரை எழுதியிருப்பதைப் படிக்கும்போது பாவமாயிருக்கிறது.
ஆத்மாநாமின் அனுமதியோடு தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதா என்று எப்படி தெரிந்துகொள்வது, அப்படியே அனுமதித்திருந்தாலும் அவர் மனநோய்க்காளாகி யிருந்தவர் என்பதால் அவர் சுயநினைவோடு அனுமதி கொடுத்திருப்பார் என்று எதை வைத்து நம்புவது என்று மேதகு ஆய்வாளர் துடித்துப் பரிதவித்து ஆத்மாநாமுக்காகக் குரல் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது அவருக்கு சில யோசனைகளை சொல்லத் தோன்றுகிறது :
குறத்தியிடம் ஜோசியம் கேட்கலாம், கிளி ஜோஸியம் பார்க்கலாம், மெழுகுவர்த்தி உதவியோடு ஆவிகளைப் பேசவைக்கலாம், ராசிபலன் பார்க்கலாம் சோழி குலுக்கிப் போட்டுப் பார்க்கலாம் – இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
கவிதை எழுதும் தோழர்களுக்கு,
இருக்கும்போது நம் கவிதையைச் சீந்துவாரில்லையே என்று பஸ்-டிக்கெட் உள்ளிட்ட கண்ட கண்ட துண்டுத்தா ளில் கிறுக்கிவைத்து எங்கேயாவது போட்டுவிடாதீர்கள். இன்னும் முக்கியம், உங்கள் கவிமனம் போன போக்கில் 00/00/0000 என்று ஏதாவது தேதியற்ற தேதி குறித்துவிடா தீர்கள். நாளை உங்கள் கவிதைகளுக்கு மவுசு வரலாம். நீங்கள் போட்டிருக்கும் தேதிக்காய் பல மேதகு ஆய்வாளர்கள் எப்படி யெல்லாம் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் – யாரையெல்லாம் குற்றஞ்சாட்டவேண்டியிருக்கும் - எண்ணிப் பாருங்கள்.
மிக மிக முக்கியமாக,
உங்கள் கவிதைகள் உங்களுக்கும் உங்கள் கவிதைகளை உண்மையாக நேசிப்பவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும் அளவில் முதுமக்கட்தாழி போன்ற பெருங்குடுவையில் அவற்றைப் போட்டு பூமிக்கு அடியில் ஆழப் புதைத்துவிடுங்கள். நகரில் பொந்து போன்ற வாடகைவீட்டில் இதை எப்படிச் செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா? – யோசிக்க வேண்டிய விஷயம்தான். எப்படியிருந்தாலும், எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொண்டால் நல்லதுதான்!
இன்னுமொன்று,
இன்று உங்கள் கவிதைகள் சல்லிக்காசுக்கு உதவாததாய், உங்கள் நட்பினரால் மட்டுமே படிக்கப்பட்டு சிலாகிக்கப் பட்டு வரலாம். நாளையே அவற்றில் சில வியாபாரிகள் தங்கச் சுரங்கத்தை இனங் கண்டு, உங்களை ஒரு பண்டமாகத் தங்கள் உடைமையாக்கிக்கொள்ளும் கீழ்த்தரமான முனைப்பில், உங்கள் கவிதைகளை ஆர்வங் காரணமாக, தன் நண்பருக்குச் செய்தாகவேண்டிய உரிய மரியாதையாக பல்வேறு இ்டையூறுகளுக்கு இடையில் பிரசுரம் செய்யும் உங்கள் அன்புக்குரிய நண்பர் மீது புழுதி வாரித் தூற்றலாம், உங்களுடைய கவிதைகளை உங்கள் நண்பர் வேண்டுமென்றே திருத்திக் குதறி வெளியிட்டு மாளிகைகளாகக் கட்டிக்கொண்டு விட்டார், உங்கள் மதிப்பழித்துவிட்டார் என்று எந்தவித முகாந்திரமுமின்றி வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆத்ம நண்பர் பற்றி புரளி பேசலாம்.
அத்தகைய ’மேதகு ஆய்வாளரை’ வைத்து தங்களுக்கு வேண்டிய ஆதாயங்களைப் பெறுவதே நோக்கமாக அந்த ஆய்வற்ற ஆய்வுக்குப் பக்கங்கள் ஒதுக்கி ஆராதனை செய்யவும். அந்த மேதகு ஆ ய்வாளரின் ஆய்வுத்திறனை விழுந்துவிழுந்து பாராட்டவும் ஆட்கள் இருப்பார்கள்.
உங்கள் உழைப்பில் உருவான படைப்புகள் மேல் கைவைக்க முடியவில்லையென்றால் தந்திரமாக அவற்றை நாட்டுடைமையாக்கும் முயற்சியை மேற்கொள்ளவும் கூடும்.
எனவே, உஷாராயிருங்கள்!
உங்கள் படைப்புகளுக்கு, முக்கியமாக கவிதைகளுக்கு உங்கள் நம்பிக்கைக்கு உரிய நட்பினரை சட்டரீதியான உரிமையாளர்களாக்கி விடுங்கள்.
உடனடியாக ஒரு மந்திரவாதி்யைக் கைக்குள் போட்டுக்கொள்ளுங்கள்!
உங்கள் படைப்புகளைக் கொண்டு பணத்தால் அல்லது பட்டத்தால் லாபம் சம்பாதிப்பதே குறிக்கோளாய் உங்கள் படைப்புகளுக்காக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் மேதகு மனிதர்கள் கண்களுக்கு அவை தட்டுப்படாமல் இருக்கும்படிச் செய்யுங்கள்.
அல்லது, குறை காண்பதே நோக்கமாய் உங்கள் படைப்புகளை அணுகுவோர் பார்வைக்கு உங்கள் படைப்பிலக்கியங்கள் எல்லாம் பெரிய பெரிய சொல்லகராதிகளாகத் தட்டுப்படும்படியாகச் செய்துகொண்டு விடுங்கள்.
அச்சுப்பிழையைக் கூட வேண்டுமென்றே செய்யப்பட்ட வேண்டாத் திருத்தமாய் சுட்டிக்காட்டியபடியிருக்கும் மேதகுமக்களுக்குக் கிட்டும் அத்தகைய அகராதிகளில் அச்சுப்பிழைகள் வார்த்தைக்கு வார்த்தை இருக்கும்படி செய்யவேண்டுமென்றும் அந்த மந்திரவாதியிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டுவிடுங்கள்.
இன்னும் நிறைய சொல்லவிருக்கிறது.
மேதகு ஆய்வாளரின் பரிதவிப்பு எனக்கு க.நா.சுவின் கவிதையொன்றை நினைவுகூரச் செய்தது:
(க.நா.சு கவிதைகள் – சிடாடெல் வெளியீடு (1986)
விலை
க.நா.சு

ஓ! ஓ! ஓ! ஓ!
இவனுக்குத் தேச பக்தி
நிறைய வுண்டு. தேசத்தை
விற்கும்போது
நல்ல விலை போகும்படிப்
பார்த்துக்கொள்வான்
இவனுக்கு தேசபக்தி
நிறைய வுண்டு
ஓ! ஓ! ஓ! ஓ!

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 25, 2016 - நேரம்: 8.37 PM

இன்று ஒரு செய்தி!
(அல்லது) ஆத்மாநாம் ஆய்வாளரின் அப்பட்டமான பொய்!

வாடகை வீடு மாறும்போது புத்தகங்களை மூட்டை மூட்டையாய்க் கொண்டுபோய் இறக்கினால் வீட்டு உரிமையாளர்கள் பயந்துபோய்விடுகிறார்கள் என்பதால் புத்தகங்களைச் சின்னச்சின்னப் பையில் குவித்து எடுத்துப்போய் பாத்திர பண்டங்களைப் போல் சாதுவாக அவற்றை இறக்கி கட்டிலின் கீழ் போட்டாயிற்று.

ஆனால், மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ திரு. கல்யாணராமன் திறனாய்வு என்ற பெயரில் இப்படிக் கிறுக்கித் தள்ளியிருக்கிறாரே, அச்சுப்பிழைகளை யெல்லாம் தீவிரவாத சதித்திட்டமாய், நவீன தமிழ்க் கவிதைகளுக்குப் பொருள்கூற இவர்தான் ‘அத்தாரிட்டி’ என்பதுபோல் என்னென்னவோ உளறிக்கொட்டி யிருக்கிறாரே, இவர் மாதிரி ஆட்களுக்கெல்லாம் பதிலளிக்கவேண்டிய நிலைக்கு சிற்றிதழ் வாசகர்களும் படைப்பாளிகளும் ஆளாக்கப்பட்டிருக்கிறோமே, அதற்காக பேசாமலிருந்தால் இப்படிப்பட்ட அரைகுறைத் திறனாய்வு களுக்கு அங்கீகாரம் வழங்கினாற்போலாகிவிடுமே என்று மனதில் பலவாறாய் எண்ணங்கள் ஓட, புத்தகங்கள் இருந்த பைகளைத் துழாவி ஆத்மாநாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடி வெளியே எடுத்தேன்.

முதலில் கைக்குக் கிடைத்தது ‘மீட்சி’ இதழ் 28.(january - march 88) பக்கங்கள் 47 முதல் 51 வரை ஆத்மாநாமின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. “இக்கவிதைகள் ஆத்மாநாமின் குறிப்பேடுகள் 2 மற்றும் 4இலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. 1983 – 84வருடங்களில் இக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கலாம். “உறைந்து போன நேரம்” கவிதை, கவிதை யாக்கம் பற்றிய முறைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.” என்று மீட்சி ஆசிரியர் பிரம்மராஜனின் குறிப்போடு வெளியாகியுள்ளன.

இந்த ‘உறைந்துபோன நேரம்” கவிதை குறித்து மேதகு ’ஆத்மாநாம் ஆய்வாளர்” அல்லது Athmanam’s ‘Instant Noodles Critic’ காலச்சுவடு கட்டுரையின் கடைசிப் பத்தியில் பின்வருமாறு அங்கலாய்த்திருக்கிறார்:

“ஆத்மாநாம் எழுதிய ‘உறைந்துபோன நேரம்’ கவிதையின் கடைசி இரண்டு சொற்களைச் “சூனியத்தில் முற்றுப்புள்ளி”(2002: பக்கம் 49 – 50) எனப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். ஆனால், உண்மையில் இந்தச் சொற்கள் “சூனியத்தில் வெடித்த, முற்றுப்புள்ளி” என்றுதான், ஆத்மாநாமின் குறிப்பேட்டின் அடிப்படையில், மீட்சியில் (இதழ் 28: ஜனவரி – மார்ச் 1988; பக்கம் 50 – 51) வெளிவந்தபோது இடம்பெற் றிருந்தன. ”

இதோ, என் கையில் மீட்சி 28 இதழ் (ஜனவரி மார்ச் 88) இருக்கிறது. உறைந்துபோன நேரம் கவிதையின் கடைசி மூன்று வரிகள் (பக்கம் 51இல் இடம்பெறுகின்றன)

பட்டன்
உருண்டைப் பந்து
சூனியத்தில்
முற்றுப் புள்ளி
இதோ முழுக்கவிதை ( மீட்சி 88இல் வெளிவந்துள்ளது)
நடையியல்
பயிலுமுன்
கிழி
பற
5. தூள்
தூள்
நூல்
குடி
விளக்கு வரிசை
10. சீப்பு
காகிதம்
ஓலோலம்
புராதன இசை
வழியும் மை.
15. பஸ்ஸுக்குள்
ஊர்ந்து செல்லும்
மண் புழு
பேனா
சிகரெட்
20. காலம்
சென்றவரின்
புகைப்படம்
கிழிந்த காகிதம்
உடைந்த ப்ளாஸ்டிக்
25. தகரச் சிதறல்கள்
கிழிந்த ட்ராயர்
நீளமான பை
தேவையான பணம்
பலப்பம்
30. ஷேவிங் சாமான்கள்
தூக்கு
எழுத்து
கொட்டகை
ஒற்றைக் கம்பளி
35. பட்டன்
உருண்டைப் பந்து
சூனியத்தில்
முற்றுப் புள்ளி.

*மீட்சி88இல் ஆத்மாநாமின் ’உறைந்து போன நேரம்’ கவிதை மேற்கண்டவிதமாய்த்தான் அச்சாகியிருக்கிறது. ஆனால், மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் என்னமாய் பொய்பேசியிருக்கிறார் பாருங்கள் :

”ஆத்மாநாம் எழுதிய ‘உறைந்துபோன நேரம்’ கவிதையின் கடைசி இரண்டு சொற்களைச் “சூனியத்தில், முற்றுப்புள்ளி (2002: பக்49 – 50) எனப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். ஆனால், உண்மையில் இந்தச் சொற்கள் “சூனியத்தில் வெடித்த, முற்றுப்புள்ளி” என்றுதான். ஆத்மாநாமின் குறிப்பேட்டின் அடிப்படை யில், மீட்சியில் (இதழ் 28: ஜனவரி – மார்ச் 1988: பக்கம் 50 – 51) வெளிவந்தபோது இடம்பெற்றிருந்தன.

எத்தனை அப்பட்டப் பொய்! நான் என்னிடமுள்ள மீட்சி 88 இல் வெளியாகியுள்ள அக்கவிதையை ‘போட்டோ ஷாட்’ எடுத்து இங்கே பொதுவெளியில் வைக்கிறேன். மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் அவரிடமுள்ள மீட்சி 88 இதழில் வெளியாகியுள்ள அந்தக் கவிதையை அப்படி வெளியிடத் தயாரா? இல்லை, பிரம்மராஜனிடம் அவர் பொதுவெளி யில் மன்னிப்பு கோரவேண்டும். செய்வாரா?

இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட, மனசாட்சியற்ற ஆய்வாளர்களிடமிருந்து, அவருடைய பொய்கள் மூலம் ஆதாயம் தேட முனைவோரிடமிருந்து, அத்தகையோரை விசுவாசத்தோடு கண்மூடித்தனமாக ஆதரிப்போரிட மிருந்து பிரம்மராஜனைக் காப்பாற்றுவதற்கு முன் ஆத்மாநாமையும் அவர் கவிதைகளையும் காப்பாற்றியாக வேண்டும்.

”சூனியத்தில் முற்றுப்புள்ளியாகி முடிந்துபோய் விடுபவரல்லர் ஆத்மாநாம்; சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளியாய் பெருவெடிப்பின் சாட்சியாய்த் தற்கொலையிலிருந்து தம் எழுத்துகள் வழி ‘என்னை அழித்தாலும், என்னை அழிக்க இயலாது” (2013:ப.27) என்று உயிர்த்தெழும் ‘பழமையினால் சாகாத’ பெருங்கலைஞர் அவர்”. என்று நாடகபாணியில் வெற்று rhetoric முழக்கமிட்டிருக்கிறார் இந்தப் பொய்ப்பித்தலாட்ட ஆய்வாளர்.

ஆத்மாநாமின் எழுத்துகளை யாரும் அழிக்க முடியாது. தற்கொலை செய்துகொண்ட ஆத்மாநாமை இப்படிக் கண்டபடிக்கு யாரும் படுகொலை செய்வதையும் அனுமதிக்கலாகாது.முகநூல் பதிவு: ஆகஸ்ட் 26, 2016 - நேரம்: 9. 49 AM

இன்று ஒரு செய்தி: 03

ஆத்மாநாமும் அரைகுறைத் திறனாய்வாளரும்:

‘மீட்சி’ இதழ் 28.(january - march 88) பக்கங்கள் 47 முதல் 51 வரை ஆத்மாநாமின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. “இக்கவிதைகள் ஆத்மாநாமின் குறிப்பேடுகள் 2 மற்றும் 4இலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு வெளியிடப்பட்டி ருக்கின்றன. 1983 – 84வருடங்களில் இக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கலாம். “உறைந்து போன நேரம்” கவிதை, கவிதை யாக்கம் பற்றிய முறைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.”
- மீட்சி ஆசிரியர் பிரம்மராஜன்.

என்னிடம் உள்ள மீட்சி இதழ் 28இல் கண்டுள்ள அளவில், ஆத்மாநாமின் அக்கவிதையின் இறுதி வடிவத்தில் ’வெடிப்பு’ என்ற வார்த்தை அவராலேயே விலக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கவிதைக்கு முன்னோட்டமாக அவர் எழுதியுள்ள வரிகளும் அவருடைய குறிப்பேட்டில் கண்டபடி அந்த இதழில் தரப்பட்டுள்ளன – ’உறைந்துபோன நேரம்’ கவிதை கவிதையாக்கம் பற்றிய முறைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது” என்று அந்த மீட்சி இதழில் பிரம்மராஜன் குறிப்பிட்டிருப்பது அதைத்தான்.

அந்த வரிகளும் மீட்சி 88 இதழில் தரப்பட்டுள்ளன: அவை ஒரு கவிதையை எழுத ஆத்மாநாம் எடுத்துக்கொள்ளும் கவனத்தையும் தன் க விதையில் தான் பயன்படுத்திய வார்த்தைகளை இறுதிவடிவத்தில் அவரே நீக்கிவிடும் பழக்கத்தையும்( இது எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ள பழக்கம்தான்) எடுத்துக்காட்டுகின்றன: மீட்சி இதழ் 28இன் பக்கம் 48இல் 3 என்ற எண்ணில் அந்தக் கவிதையின் முதல் வடிவம் ஆத்மாநாமால் வடிவமைத்துக் கொள்ளப்பட்ட விதத்தில் இப்படி இடம்பெற்றுள்ளது.

3.
1. நடையியல்
2. பயிலுமுன்
3. கிழி
4. பற
5. தூள்
6. தூள்
7. நூல்
23. கிழிந்த காகிதம்
24. உடைந்த ப்ளாஸ்டிக்
25. தகரச் சிதறல்கள்
26. கிழிந்த பை
27. நீளமான பை
28. தேவையான பணம்
8. குடி
31. தூக்கு
33. கொட்டகை
9. விளக்கு வரிசை
20. காலம்
21. சென்றவரின்
22. புகைப்படம்
10. சீப்பு
19. சிகரெட்
29. பலப்பம்
30. ஷேவிங் சாமான்கள்
11. காகிதம்
18. பேனா
32. எழுத்து
12. ஓலோலம்
13. புராதன இசை
14. வழியும் மை
15. பஸ்ஸுக்குள்
16. ஊர்ந்து செல்லும்
17. மண் புழு
34. ஒற்றைக் கம்பளி
35. பட்டன்.
36. உருண்டைப் பந்து
37. சூனியத்தில் வெடித்த
38. முற்றுப் புள்ளி
உறைந்து போன நேரம்
நடையியல்
பயிலுமுன்
கிழி
பற
5. தூள்
தூள்
நூல்
குடி
விளக்கு வரிசை
10. சீப்பு
காகிதம்
ஓலோலம்
புராதன இசை
வழியும் மை.
15. பஸ்ஸுக்குள்
ஊர்ந்து செல்லும்
மண் புழு
பேனா
சிகரெட்
20. காலம்
சென்றவரின்
புகைப்படம்
கிழிந்த காகிதம்
உடைந்த ப்ளாஸ்டிக்
25. தகரச் சிதறல்கள்
கிழிந்த ட்ராயர்
நீளமான பை
தேவையான பணம்
பலப்பம்
30. ஷேவிங் சாமான்கள்
தூக்கு
எழுத்து
கொட்டகை
ஒற்றைக் கம்பளி
35. பட்டன்
உருண்டைப் பந்து
சூனியத்தில்
முற்றுப் புள்ளி.

*ஆக, கவிதையாக்கப் போக்கில் ஆரம்பக்கட்டத்தில் கவிஞர் வரிசைப்படுத்திக் கொண்டுள்ள வார்த்தைகளில் இடம்பெறும் வெடிப்பு என்ற அதன் இறுதி வடிவத்தில் கவிஞர் ஆத்மாநாம் விலக்கியிருக்கிறார். அந்த வார்த்தை அவருக்கு redundant ஆகத் தோன்றியிருக்கலாம்.

மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர் ஆத்மாநாம் எழுதிய சுதந்திரம் கவிதையில் ‘ஸ்வரம்’ இதழில் 'உனதுயிர் மீது ஆசை இருந்தால்' என்றுதான் வெளியாகி யிருப்பதாகவும் ஆனால், பிரம்மராஜன் அதை ‘உன்மீது ஆசை’ என்பதாகச் செறிவுபடுத்திவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். 

(தன்னையும் அறியாமல் செறிவு என்ற வார்த்தையை அவர் இங்கே பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது!) உனதுயிர் மீது ஆசை’ என்பதில் உயிர்மீது என்பதை redundant ஆக உணர்ந்து ஆத்மாநாம் அதை நீக்கியிருக்க வேண்டும். என் உயிர் இல்லாமல் என் மீது நான் ஆசை கொள்ள வழியேயில்லையே!)

கவிஞர் பிரம்மராஜன் 1989 செப்டம்பர் 1989இல் தன் நண்பரை மரியாதை செய்யும் விதமாய் தன்யா & பிரம்மா வெளியீடாய்க் கொண்டுவந்த ஆத்மாநாம் கவிதைகள், தொகுப்பில் இவ்விதம் குறிப்பிடுகிறார்:

”பிரக்ஞாபூர்வமாக எதிர்கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மை யானவர். எதிர்கவிதை அழகியலை இரண்டாவது நிலைக்குத் தள்ளுகிறது. ஆத்மாநாமின் கவிதைகளில் படிமங்களோ, உருவகங்களோ அவற்றின் செயல் பங்குக்காகப் பயன்படுத்தப்ப்ட்டிருக்கின்றனவே அன்றி, வாசகனை ஏமாற்றும் வார்த்தைகளின் அளவில் நீர்த்துப்போகிற ஜாலங்கள் அல்ல”.

ஆத்மாநாம் படைப்புகள் என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியிட்டுள்ள முதல் பதிப்பில் (டிசம்பர் 2002) தனது பதிப்புரையில் கவிஞர் பிரம்மராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“பொதுவாகத் தன் கவிதைகள் வெளிவந்த இதழ்கள் மற்றும் மாதம் போன்ற தகவல்களைப் பதிவு செய்து வைப்பது பற்றி ஆத்மாநாம் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வெளிவந்தவை, வெளியிடப்படாதவை என்று பிரித்து என்னிடம் இரண்டு கோப்புகளைக் கொடுத்திருந்தாரே ஒழிய வெளிவந்த இதழ்கள் பற்றிய குறிப்புகள் அவற்றில் இல்லை.

இவை தவிர ஆத்மாநாமின் இறப்புக்குப் பிறகு அவரது அம்பத்தூர் வீட்டிலிருந்த 6 நோட்டுப்புத்தகங்களை நண்பரும் கவிஞருமான திரு. எஸ். வைத்தியநாதன் பத்திரமாக எடுத்துவைத்திருந்து என்னிடம் கொடுத்தார். அந்த இரண்டு கோப்புகளில் இல்லாத பல புதிய கவிதைகள் இந்த நோட்டுப் புத்தகங்களில் காணப்பட்டன.

அவ்வாறே சில மொழிபெயர்ப்புகளும். என்றாலும் ப்ரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதிவைத்திருந்தார் ஆத்மாநாம் – ஒருவேளை பிறகு சீர் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்படி விட்டிருக்கலாம்.

மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை அவர் மொழியாக்கம் செய்தவற்றையும் சிற்றிதழ்களில் வெளியிட்டவற்றையும் பற்றி அவர் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. சில மொழிபெயர்ப்புகளைப் பற்றிக் கடிதத்தில் குறிப்பிட் டிருக்கிறார். ‘எல்சால்வடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையின் மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதியும் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. கணையாழியில் அது வெளிவந்தி ருக்க வாய்ப்பிருக்கிறது. அதைத் தேடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. இது தவிர, மேலும் சில விடுபடல்கள் எனது கவனக்குறைவின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம்.

என்னிடம் கொடுத்திருந்தது போலவே கையெழுத்துப் பிரதிகளின் ஒரு கோப்பினை தன்னிடமும் ஆத்மாநாம் கொடுத்ததாக ஞானக் கூத்தன் கூறினார். அவரிடம் கொடுக்கப்பட்ட கோப்பில் இருந்தவற்றிற்கும் என்னிடம் தரப்பட்ட கோப்பில் இருந்த கவிதைகளுக்கும் ஏதும் விடுபடல் இருக்கிறதா எனச் சரிபார்த்து, விடுபடல்கள் எதுவுமில்லை என்று எனக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தார். ஆனால் சின்னச் சின்ன வார்த்தை மாற்றங்கள் – இரண்டு அல்லது மூன்று கவிதைகளில் – இருப்பதாக அவர் எழுதியிருந்தார்.

நான் கூடுமானவரை என்னிடம் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில்தான் இந்தத் தொகுப்புநூலைப் பதிப்பித்திருக் கிறேன்.”
_ இவ்வளவு விவரமாக வெளிப்படையாக, தன் தொகுப்பாக்கம் குறித்துப் பேசியிருப்பவரை ஆத்மாநாமின் Instant Noodles Critic மதிப்பழிப்பதே குறியாகக் கட்டுரை எழுதுவாராம் . கவிதைமேல் உள்ள ஆர்வம், அக்கறை காரணமாக, கவிஞர் ஆத்மாநாமின் மேல் அவர் கவித்துவம் மேல் உள்ள அபிமானம், மரியாதை காரணமாக அரும்பாடு பட்டு பிரம்மராஜன் 270 பக்கங்கள் போல் உருவாக்கியுள்ள ஆத்மாநாம் படைப்புகளை மூன்று நான்கு பதிப்புகள் வெளியிட்டு முடித்த நிலையில் காலச்சுவடு அந்தக் கட்டுரையை தங்கள் 200வது இதழில் வெளியிடுமாம். அவதூறுக் கட்டுரையை எழுதியவரும் சரி, அந்தக் கட்டுரையை ’கறாரான விமர்சனக் கட்டுரையாக அடையாளங்காட்டத் துடிப்பவர்களும் சரி, காலச்சுவடை எந்தக் கேள்வியுமே கேட்கமாட்டார்களாம். அவர்களுக்கு பிரம்மராஜன் பதில் சொல்லியாகவேண்டுமாம். இல்லாவிட்டால் அவரை சாதிப்பெயரைச் சொல்லித் தூற்றுவார்களாம். ஆனால், நான் ஆத்மாநாமின் ‘இன்ஸ்டண்ட் நூடில்ஸ்’ திறனாய்வாளர் மீதான தனிநபர் தாக்குதல் நடத்துகிறேனாம். அப்படிச் செய்யக் கூடாதாம்.

அவ்வாறு அறவுரைப்போருக்கு நான் சொல்லிக்கொள்வது இப்போதைக்கு இதுதான்: GIVE RESPECT AND TAKE RESPECT.


(புகைப்பட உதவி: பிரதாப ருத்ரன்)


முகநூல் பதிவு: ஆகஸ்ட் 28, 2016 - நேரம்:......

இன்று ஒரு செய்தி! - 04


இன்று ஒரு செய்தி! மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளரின் அரும்பெரும் ஆய்வு அணுகுமுறை அல்லது நுணுகுமுறை (2)
அதென்னவோ தெரியவில்லை, பொதுவாகக் கனவே வராத எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் கவிஞர் ஆத்மாநாமையும், நவீன தமிழ்க் கவிதையையும் மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் கைபோன போக்கில் பிய்த்தெறிந்து கொண்டிருப் பதாகவும், தன் கட்டுரைக் கத்தியால் குத்திக் குதறிக்கொண்டிருப் பதாகவும் வரும் பீதிக்கனவில் பாதி ராத்திரியில் எழுந்து உட்கார்ந்து இப்படி ‘இன்று ஒரு செய்தி’ எழுதும்படியாகிவிடுகிறது.
(*பி.கு: ‘ஆத்மாநாம் ஆய்வாளரின் அரும்பெரும் ஆய்வு அணுகுமுறை அல்லது நுணுகுமுறை(1)இல் இடம்பெற்றிருக்கும் முதல் சில வரிகளே இதிலும் இடம்பெற்றிருக்கின்றன. இது நானே பிரக்ஞாபூர்வமாகச் செய்தது, இதில் எந்த சதித்திட்டமும் கிடையாது, ஒருவேளை என் கட்டுரைத்தொகுப்பு எதிலாவது பின்னாளில் இடம்பெறுமானால் அடைப்புக்குறிகளுக்குள் உள்ள 1, 2 என்பவை அ, ஆ என்றும் மாறலாம். இல்லை இந்த இரண்டு குறுங்கட்டுரைகளுக்கும் வேறு தனித்தனித் தலைப்புகளும் என்னால் தரப்படலாம் என்று இவண் நான் தெளிவாக, உறுதிபடக் கூறுகிறேன். (இப்போது நான் சித்தசுவாதீனத்தோடுதான் இந்த உறுதியைக் கூறுகிறேனா என்று எந்த ‘மேதகு ஆய்வாளராவது கேள்வியெழுப்பினால் நான் கண்டிப்பாக ஆவியாக வந்து அவர் ஐயம் தீர்ப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்!)
மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ பிரம்மராஜனைக் திறனாய்வுக் கழுமேடையில் ஏற்றும் அதீத முனைப்பில் பின்வருமாறு குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்:
“ஆத்மாநாமின் ‘டெலெக்ஸ்’ என்ற கவிதை, முதலில் நிஜங்களில் (ஏப்ரல் 1982: ப.15) வெளிவந்தது. பிறகு படிகளில் (இதழ் 15: 1983: ப.&) மறுபிரசுரமானது. படிகளில் இக்கவிதையின் தலைப்பு ‘டெலக்ஸ்’ எனத் திரிந்து விட்டது. நிஜங்கள், ப டிகள் ஆகிய இரண்டு இதழ்களிலுமே, இக்கவிதையின் மூன்றாம்வரி, ‘1,74,843 தலைகள் வீழ்ந்துள்ளன” என்றுதான் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையைத் தம் பதிப்பில் பிரம்மராஜன், ‘1,75,843’ தலைகள் வீழ்ந்துள்ளன” என்று, ஆயிரம் தலைகளைக் கூட்டிப் பதிப்பித்துவிட்டார். கணக்கைச் சரிபார்க்க ஆத்மாநாம் இல்லாவிட்டாலும் அவரது வாசகர்கள் உள்ளார்களே என்பதைப் பற்றிப் பிரம்மராஜன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.”
எத்தனை ஆழமான திறனாய்வு பாருங்கள். ‘டெலெக்ஸ்’, டெலக்ஸ்’ எனத் திரிந்துவிட்டதாம். 1,74,843 என்பது 1,75, 843 என்று பிரம்மராஜன் பதிப்பில் ஆயிரம் தலைகள் அதிகமாக வந்துவிட்டதாம்.
ஆத்மாநாம் வாசகர்கள் ஆத்மாநாம் கவிதைகளை வாசிப்பது இந்தவிதமான அச்சுப்பிழைகளை அங்கலாய்ப்பதற்கா?
இவை அச்சுப்பிழைகள் இல்லையென்று மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளரால் ஆதாரபூர்வமாகச் சொல்லமுடியுமா?
அப்படியே இவை பிழைகளல்ல, பிரம்மராஜனால் வேண்டுமென்றே செய்யப்பட்ட தண்டனைக்குரிய குற்றங்கள் என்றால் ‘what is the motive?
(பி.கு: திரும்பவும் கேட்காமலிருக்க முடியவில்லை. தமிழ் இலக்க ணத்தை நவீன தமிழ்க்கவிதைகளுக்குள் பொருத்திப் பொருத்தித் தவறுகளைச் சுட்டிக்காட்டும் மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ ‘என்பதைப் பற்றிப் பிரம்மராஜன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை’ என்று பற்றி பிரம்மராஜன் ஆகிய சொற்களுக்கிடையே ‘ப்’ போடுவது சரியா? தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்)

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 28, 2016 - நேரம்:......

இன்று ஒரு செய்தி! - 05

இன்று ஒரு செய்தி! மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளரின் அரும்பெரும் ஆய்வு அணுகுமுறை அல்லது நுணுகுமுறை (3)
அதென்னவோ தெரியவில்லை, பொதுவாகக் கனவே வராத எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் கவிஞர் ஆத்மாநாமையும், நவீன தமிழ்க் கவிதையையும் மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் கைபோன போக்கில் பிய்த்தெறிந்து கொண்டிருப்பதாகவும், தன் கட்டுரைக் கத்தியால் குத்திக் குதறிக்கொண்டிருப்பதாகவும் வரும் பீதிக்கனவில் பாதி ராத்திரியில் எழுந்து உட்கார்ந்து இப்படி ‘இன்று ஒரு செய்தி’ எழுதும்படியாகிவிடுகிறது.

(*பி.கு: ‘ஆத்மாநாம் ஆய்வாளரின் அரும்பெரும் ஆய்வு அணுகுமுறை அல்லது நுணுகுமுறை(1)இல் இடம்பெற்றிருக்கும் முதல் சில வரிகளே இதிலும் இடம்பெற்றிருக்கின்றன.

இது நானே பிரக்ஞாபூர்வமாகச் செய்தது, இதில் எந்த சதித்திட்டமும் கிடையாது, ஒருவேளை என் கட்டுரைத்தொகுப்பு எதிலாவது பின்னாளில் இடம்பெறுமானால் அடைப்புக்குறிகளுக்குள் உள்ள 1, 2, 3 என்பவை அ, ஆ, இ என்றும் மாறலாம். இல்லை இந்த இரண்டு குறுங்கட்டுரைகளுக்கும் வேறு தனித்தனித் தலைப்புகளும் என்னால் தரப்படலாம் என்று இவண் நான் தெளிவாக, உறுதிபடக் கூறுகிறேன்.

(இப்போது நான் சித்தசுவாதீனத்தோடுதான் இந்த உறுதியைக் கூறுகிறேனா என்று எந்த ‘மேதகு ஆய்வாள ராவது கேள்வியெழுப் பினால் நான் கண்டிப்பாக ஆவியாக வந்து அவர் ஐயம் தீர்ப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்! – லதா ராமகிருஷ்ணன்) ஆத்மாநாம் கவிதைகளின் தொகுப்பாசிரியர் பிரம்ம ராஜனைப் பழித்து, மதிப்பழித்துக் குற்றஞ்சாட்டி குறைசொல்லிச் சொல்லி களைப்பாகி விட்டதோ என்னவோ, மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ திடீரென்று ‘ழ’ சிற்றிதழ் மேல் பாய்கிறார்:

‘"அவசரம் ‘ என்ற தலைப்பில், நெருக்கடிநிலையை எதிர்த்து ஆத்மாநாம் எழுதிய புகழ்பெற்ற கவிதை, பிரக்ஞையில் (செப்டம்பர் 1975: இதழ் 12: ப.2) வெளிவந்துள்ளது. ஆனால், இதுபற்றி, ‘ஆத்மாநாமின் இக்கவிதை (அவசரம்), எந்த இதழிலும் வெளியாகவில்லை. ஞானக்கூத்தன், இதைக் கையெழுத்துப் பிரதியாகவே படித்ததாக நினைவுகூர்கிறார்”(உயிர்மை: மார்ச் 2016, ப.64) என்கிறார் நஞ்சுண்டன். இத்தகவல் முற்றிலும் தவறு என்பதைக் கண்டோம். ஆனால், நெருக்கடிநிலையை எதிர்த்து ஆத்மாநாம் எழுதிய இக்கவிதை மட்டுமன்று, இது தொடர்பான அவரது பிற கவிதைகளும் ழ வெளியீடாக வந்த ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் ஏனோ சேர்க்கப்படவில்லை. இந்தப் ‘பதிப்பரசியல்’ குறித்தும் விவாதிக்கவேண்டிய தேவைஇ இன்றுள்ளது.

1981இல் வெளியான காகிதத்தில் ஒரு கோடு என்ற ஆத்மாநாமின் கவிதைகளடங்கிய(KAKITHATHIL ORU KODU, Poems in Tamil, Atmanam©, First Edition May 1981, Art Editor : K. M.Adimoolam, Drawings:R.Varadarajan, S.Muralidharan, ழ Veliyeedu, 39, Eswaradoss Lala street, Triplicane Madras – 600 005, Makkal Acchakam Madras – 600 002, Price Rupees Four) சிறுநூலின் ஆரம்பவரிகள் இவை:

“எட்டாண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டுவரும் ஆத்மாநாமின் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளில் ஒரு பகுதியே இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னமேயே அச்சேறிய கவிதைகளில் ஒரு பகுதியையும், இன்னும் அச்சேறாத கவிதைகளில் ஒரு பகுதியையும் இத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கிறது.”
இலக்கியத்தின் மேல் அபிமானம் கொண்டவர்கள் ஒரு சிறு முயற்சியாய் கைக்காசைப் போட்டு 'ழ' இதழ் கொண்டுவந்து, ஆத்மாநாமின் கவிதைகளை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக வெளியிட்டது, ஆத்மாநாம் கவிதைகளின் ஒரு பகுதியே இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று நூலின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட்ட நிலையிலும் அவர்கள் செய்திருப்பது பதிப்பரசியலாம். (அந்த நூலுக்குப் பின் வந்த ஆத்மாநாம் கவிதைகள் (1989), மற்றும் காலச்சுவடு பதிப்பு இரண்டிலுமே அந்தக் கவிதை இடம்பெற் றிருக்கிறது.)

காசில்லாத காலத்தில் கைக்காசைப் போட்டு சிறிய நூல் பதிப்பித்திருப் பதில் இத்தனை பதிப்பரசியலைப் பகுப்பாய்வு செய்து துப்பு துலக்கி யிருக்கும் மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர், பிரம்மராஜன் தொகுப்பாக்கத்தில் பிழை மலிந்திருப்பதாய் பிழையான கருத்தைத் தன் கட்டுரை முழுவதும் திரும்பத் திரும்பப் பலவாறு வலியுறுத்துபவர், அத்தனை பிழைபட்ட நூலைத் திரும்பத் திரும்பப் பதிப்பித்திருக்கும் காலச்சுவடு பதிப்பகம் குறித்து மருந்துக்கும் ஒரு கண்டனத்தை முன்வைப்பதில்லை!

இதில் உள்ள ’பதிப்பரசியலைத்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment