Friday, August 26, 2016

ஆத்மாநாம் கவிதை சர்ச்சை

பெருமாள்முருகன், ம.ரா, சலபதி, சீனிவாசன் நடராஜன், ஆர். சிவக்குமார், பெருந்தேவி போன்றவர்களை எனக்கு மிகப் பிடிக்கும். இளைய தலைமுறையினரில் அனிருத்தன் வாசுதேவன்.

ஒன்று, கல்விப்புலத்தில் இருந்துகொண்டு மிகத்  தீவிரமாக நவீன இலக்கியம், ஆய்வு சார்ந்து இயங்கும் அவர்களது பண்பும் உழைப்பும். மற்றொன்று, ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர்கள் கொடுக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவமும்.

இலக்கியமும் சிற்றிதழ்களும் எல்லா மொழிகளுக்கும் ஊட்டம் அளிப்பவை. எனது இலக்கிய வாசிப்புப் பழக்கம் கல்லூரி காலந்தொட்டே இருப்பதுதான் என்றாலும், சிற்றிதழைப் (இடைநிலை இதழ்களும் சேர்த்துதான்) பொருத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் நேரடித் தொடர்பும், பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

அதிலும் 'கணையாழி'யில் மட்டும்தான் சில மாதங்கள் பொருப்பில் இருந்தேன். வாரத்தின் புதன்கிழமையில் ஆசிரியர் ம.ரா(சேந்திரன்), இணையாசிரியர் சீனிவாசன் நடராஜன், துணை  ஆசிரியர்கள் - கவிஞர் வேல்கண்ணன், கட்டுரையாளர் ஜீவ கரிகாலன், உதவி ஆசிரியர் - எழுத்துக்காரன் ரமேஷ் ரக்சன், இதழழகு - கோபு ஆகியோர் சந்தித்துப் பேசுவோம். அந்த மாதத்தில் வெளியான படைப்புகள் குறித்தும், இதழின் வேறுசில பிரச்சனைகள் குறித்தும், சமகால இதழ்களின் போக்கு குறித்தும் பேசுவோம்.

நானும் குழுவில் இணைந்து இரண்டு வாரங்கள் மட்டுமே சென்றிருக்கும். ஒருநாள் ம.ரா புன்சிரிப்புடன் அலுவலகத்தில் நுழைந்தார். சந்திப்பு இதமாகக் கழிய இருக்கிறது என்றுதான் நினைத்தேன். அம்மாதக் கணையாழியில் மீள் பிரசுரம் ஆகியிருந்த 'விதை நெல்' கட்டுரை குறித்து அனுப்பியிருந்த காட்டமான  மின்னஞ்சலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்,
"கணையாழி இதழை இந்த மாதத்துடன் நிறுத்திடலாம்ன்னு இருக்கேன். இதுபோலப் பிழை வரதெல்லாம் அசிங்கம்." என்றார் எங்கள் எல்லோரையும் ஊடுருவிப் பார்த்தவாறு.

"இந்த மாதிரியான விஷயத்த எமோஷனலா டீல் பண்ணக் கூடாது. இது சின்ன தப்போ... பெரிய தப்போ...! தப்பு நடந்துடுச்சி. இனிமே இந்த மாதிரி தப்பு வராம பார்த்துக்கலாம். எனக்கும்தாங்கய்யா ரொம்பக் கஷ்டமா இருக்கு. அதுக்காக நம்ம இதழ நிறுத்தக்கூடாது. தப்பு நடந்துடுச்சின்னு அவங்கக்கிட்ட நாம பேசலாம்.... தப்ப அக்சப்ட் பண்ணிக்கலாம். இதுபோல பிரச்சனைகள எல்லாம் மீறித்தான் சிற்றிதழ்கள் வந்துட்டு இருக்கு..." என சீனிவாசன் ப்ராக்டிகலாகப் பேசிக் கொண்டிருந்தார்.

கூட்டம் முடிந்த பிறகு சீனிவாசன் என்னைக் காரிக் காரி உமிழ்ந்தார் என்பது வேறு விஷயம். ஏனெனில் சில பக்கங்களின் பிழைதிருத்தத்தை நானும் பார்த்திருந்தேன்.

விஷயம் இதுதான்: "பெரியார்" என்று இருக்க வேண்டிய இடத்தில் 'பெயர் யார்' என்று அச்சாகி இருந்தது.

"இது எவ்வளவு பெரிய தப்பு... ரொம்ப முன்னாடி வந்த கட்டுரைய மறுபடியும் பிரசுரம் செய்யும்போது எவ்வளோ கவனமா இருக்கனும். இந்த மாதிரி தப்பு நடக்கும்னா... நாம எதுக்கு இவ்வளோ கஷ்டப் படனும். இத்தன பேரு இதழுக்காக உழைக்கனும்" என்று ஜீரணிக்க முடியாமல் வாதாடிக்கொண்டிருந்தார் ம.ரா.

ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார் சீனிவாசன். நான் குழுவில் இணைந்த புதிது என்பதால் கூலாக இருந்தேன். மற்றவர்கள் எல்லோரும் ஒரு கொதிநிலையிலேயே இருந்தனர். ஆகவே, இடையில் புகுந்து நான் சொன்னேன்:

"ஏங்க சீனிவாசன், எவ்வளோ பெரிய தப்பு இது. இதப் போயி சாதாரணமா பேசிட்டு  இருக்கீங்களே...!"

நண்பர்கள் கண்களை உருட்டி ஜாடை செய்தார்கள். இருந்தாலும் சில வார்த்தைகளை உதிர்த்தேன். அதைத் தொடர்ந்த நான்கு வாரங்களுக்கு மா.ரா நிம்மதியில்லாமல்தான் புலம்பிக் கொண்டிருந்தார். அங்கிருந்த வரை வேறு எதற்காகவும் ம.ரா அவ்வளவு வருத்தப்பட்டு நான் பார்த்ததில்லை.

'ஒரு வார்த்த மாறிட்டதுக்கு ஒரு மனுஷன் இப்படி வெப்ராளப் படுவாரா'ன்னு போச்சு. ஆனால், ஆய்வு சார்ந்த மனநிலையில் இருந்து பார்த்தால்தான் அதன் மதிப்பு தெரியும்.

'விடம்பனம்' நாவலைத் தட்டச்சு செய்தபோது சில வார்த்தைகளைக் கவனத்துடன் சீனிவாசன் ஸ்கெட்ச்  செய்தார். ஒவ்வொரு வார்த்தையும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதிலும், இதுவாகத்தான் இருக்கவேண்டும்  என்பதிலும் புத்தகம் அச்சாகிக் கைக்கு வரும்வரை  கவனத்துடன் இருந்தார்.

மாதொருபாகன் வழக்கில் கருத்துச் சுதந்திரம் சார்ந்து தமிழ் ஹிந்து மொழியாக்கம் செய்திருந்ததின் (வார்த்தைத் தேர்வின்) கவனக் குறைவை வருத்தப்பட்டு ஆர். சிவக்குமார் முகநூலில் பதிவிட்டிருந்ததை எல்லோரும் அறிவர். அல்லாதோர் அவரது பக்கத்தில் சென்று பார்க்கலாம். அதேபோல  முருகனுடனும் சரி, சலபதியுடனும் சரி, பெருந்தேவியுடனும் சரி வார்த்தை சார்ந்த உரையாடல் அனுபவங்கள் எனக்கு நிறையவே உண்டு.

இப்படிப்பட்ட வார்த்தைகள் சார்ந்த ஒரு விஷயத்தைத்தான் ஆத்மாநாம் கவிதைத் தொகுப்பு சார்ந்து (எழுத்து, வார்த்தை, வாக்கியம்)  கல்யாணராமன் தனது கட்டுரையில் காட்டமாக விவாதிக்கிறார். இதில் பிரம்மராஜனை இழுவுபடுத்தும் செயல் என்ன இருக்கிறது? பிரம்மராஜனின் படைப்புலக பிம்பத்தையே சரிக்கிறோம் என்று வாதிடுகிறார்கள்.

20 வருடங்களாக ஒரு தொகுப்பு அச்சில் இருக்கிறது. ஏறக்குறைய 5 பதிப்புகள் வெளிவந்திருக்கிறது. அடுத்தடுத்த ஒவ்வொரு பதிப்பின் போதும் ஏதேனும் பிழை உள்ளதா? வேறு ஏதேனும் கண்ணை மறைக்கும் மோகினிப் பிழைகள் உள்ளதா? என்று பிரம்மராஜன் பார்த்திருக்கலாமே. டிடிபி பிழைகள் இருக்க வாய்ப்புண்டு என்பதால் மூலத்துடன் ஒப்பிடுவோம் என்ற பிரக்ஞை ஏன் பிரம்மராஜனுக்குத் தோன்றவில்லை? மறுபடியும் தொகுப்பை ஏன் செழுமை செய்யவில்லை போன்ற அடிப்படையான கேள்விகள் எனக்கு  எழுகின்றன? இதெல்லாம் ஞாயமான கேள்விகள்தானே..!

தொகுப்பு வெளிவந்து பல பத்து வருடங்கள் ஆகிறது. இவ்வளவு காலம் தமிழ்த்துறை என்ன செய்துகொண்டிருந்தது? கல்யாணராமன் யார்? பேராசிரியர்ன்னா பெரிய புடுங்கியா? ஆய்வாளர்ன்னா அப்பாடக்கரா? விமர்சகர்ன்னா வீர வண்டு முருகனா? போன்ற கேள்விகளை எழுப்புவது எந்த வகையில் ஞாயம்? கடந்த பத்து வருடங்களில் தொகுப்பை ஒரு முறை சீர் செய்திருக்கலாமே. 

தோழர் லதா ராமகிருஷ்ணன் மட்டும்  ஓரளவிற்குச் சமாதானம் அடைந்து மீட்சி இதழுடன் - கல்யாணராமன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயத்தை - ஒப்பிட்டுப் பேசி முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இதுதான் சிற்றிதழ் சூழலுக்கு ஆரோக்கியமானது. அகிலன் எத்திராஜூம் ஆரோக்கியமாக நாகரீகமாக விவாதத்தை முன்னெடுக்கிறார். மற்றவர்கள் எல்லோரும் பிரம்மராஜனின் புனித பிம்பத்தைச் சரியாமல் தாங்கிப் பிடிக்கவும், காலச்சுவடு நிறுவனத்தை வசை பாடவும் செய்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கீழ்த்தரமாக வசைபாடியும், அதன் மூலம் சந்தர்ப்ப ஆதாயம் அடையவும் பிரியப்படும் சிலர் சிற்றிதழின் ஆசிரியர் பொருப்பில் வேறு இருக்கின்றனர். தான் பொருப்பிலுள்ள சிற்றிதழில் ஒடிக்கொண்டிருக்கும் விவாதம் சார்ந்த கட்டுரை ஒன்றினை ஆதாரத்துடன் கல்யாணராமனுக்கு எதிராகவும், காலச்சுவடு இதழுக்கு எதிராகவும் (விமர்சனக் கட்டுரை) எழுதலாமே!? அதற்கெல்லாம் உழைப்பு வேண்டுமே.

தடம் இதழுக்குக் கொடுத்த நேர்முகத்தில் "இப்போதைய தமிழ்ச்  சூழலுக்கு உடனடித் தேவை 10 நல்ல விமர்சகர்கள்..." என்றார் பிரபஞ்சன். இந்தக் கூற்றில் முழு உண்மை இருக்கிறது. ராமன் போன்றோர் முளை விடும் பொழுதே இவர்கள் பதட்டம் அடைகிறார்கள். இவர்களுக்குத் தேவை இனிக்க இனிக்கப் பேசி மயக்கும் பேச்சாளர்கள். அதனால்தான் கீழான சொற்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

சென்னையில் ஒரு மாதத்தில் ஆயிரம் இலக்கிய கூட்டங்கள் நடக்கிறது. எல்லா கூட்டங்களிலும் பாராட்டு பாராட்டு பாராட்டு. இல்லையேல் கீழ்த்தரமான முகநூல் விவாதம்.

கல்யாணராமன் இதழின் பிரதிகளையும், முதல் பதிப்பையும், காலச்சுவடு பதிப்பகத்தில் வெளிவந்த தொகுப்பையும் ஒப்பிட்டுத்  தெளிவாகவே தனது விமர்சனக் கேள்விகளைக் கட்டுரையில் கேட்கிறார். அதற்கு இதுவரையிலும்  விளக்கம் அளிக்காமலிருந்த பிரம்மராஜன் - வன்னிய இலக்கிய அமைப்பில், இலக்கிய முன்னணிப் படையினருக்குப் படைப்பூக்கத்துடன் செயல்பட அவர் அழைப்பு விடுத்ததாக எழுதியிருந்த - ஜெமோவின் இணையப் பதிவை சுட்டிக் காட்டியபோது பொங்கி எழுந்திருக்கிறார்.

ஆத்மாநாம் கவிதைகளை பிரம்மராஜன் தொகுத்துப் பதிப்பித்தபோது ஏற்கனவே  வெளியாகியிருந்த கவிதை வரிகளை மாற்றியும், விடுபட்டும், இடைச்செருகலாக சிலவற்றைச் சேர்த்தும் வெளியிட்டிருந்ததை கல்யாணராமன் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியுள்ளார். இதற்கு பதிலளிக்காமல் கள்ள மெளனம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த பிரம்மராஜன், அவர் 2008ல் ‘வன்னியர் படைப்பாளிகள் பேரியக்கத்தில்’  இணைந்ததைக் குறிப்பிட்டு எழுதியதும் மெளனம் கலைந்து “ஆமாம், நான் வன்னியகுல ஷத்ரியன் தான், அதற்கு என்ன இப்போது?” என்று சிலிர்த்தெழுந்திருக்கிறார்.
இது எதைக் காட்டுகிறது?


மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரே ஒரு நாள் மட்டும் பொறுப்பு வகித்துவிட்டு விலகிவிட்டார், மற்றபடி அவருக்கு ஜாதியுணர்வெல்லாம் கிடையாது என்று சப்பைக்கட்டு கட்டிகொண்டிருந்த அவருடைய ஆதரவாளர்கள் எல்லோருடைய முகங்களிலும் கரியைப் பூசிவிட்டு , “ ஆமாம், நான் வீர வன்னியன்தான் ‘ என்று பெருமையாக முழக்கமிடுகிறாரென்றால் என்ன அர்த்தம்?

ஒன்று: ஆத்மாநாம் கவிதைகளை இவர் இஷ்டத்துக்கும் மாற்றிப் பதிப்பித்திருப்பதைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. அதனால்தான் இவ்வளவு நாட்களாக மெளனம். அவர் அப்பட்டமாகப் புரிந்திருக்கும்  தவறுகளை ஒருவர் சுட்டிக்காட்டியதை  அவரை அவதூறு செய்துவிட்டதாகவும், இழிவுபடுத்திவிட்டதாகவும் வெற்றுக்கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும் தொண்டர்களிடமும் கல்யாணராமனின் கேள்விகளுக்கு பதில் இல்லை.

இரண்டு: பிரம்மராஜன் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று யாரும் கேட்கவில்லை. ஒரு படைப்பாளி சாதி அமைப்பு ஒன்றில் பங்கெடுத்துக்கொள்வது சரியா என்பதுதான் கேள்வி. ஜெமோவும் அதைத்தான் கேட்கிறார்.

அதற்கு “ ஆமாம், நான் அந்த ஜாதிதான்”  என்று முழக்கமிட்டால் அதற்குப் பொருள் ‘ ஆமாம், எனக்கு சாதியப்பற்றுதான் பிரதானம்; இலக்கியப்பற்று அதற்குப் பின்னால்தான்’ என்பதுதான்.
ஆத்மாநாம் உங்களுடைய தனிப்பட்ட சொத்து அல்ல. எல்லோருக்கும் பொதுவானவர். தமிழின் கொடை. ஆத்மாநாமின் ரெப்ரெசன்ட்டேட் நான்தான் என்ற மனப்போக்கில் பிரம்மராஜன் அமைதி காப்பதும், பிரம்மராஜனின் மவுத் வாய்ஸ் நாங்கள்தான் என்று தொடர்கள் படை ஆக்ரோஷத்துடன் அரசியல் கடைசி போலக் கூச்சலிடுவதும் அவலத்தின் உச்சம். 
முகநூலில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம்  கொந்தலிப்பான மனநிலையின் வெளிப்பாடுதான். அதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான் என்றாலும், இதெல்லாம் தேவையில்லாத உரையாடல்கள்தான்  என்றாலும், பிரதி சார்ந்து பேச உங்களுக்கு நிறையவே இருக்கும்.

நீங்கள் மெளனம் கலைய வேண்டும். எங்களுடன் பேச வேண்டும்.
உங்களுடைய மெளனம் மற்றவர்களுக்கு ஆதாரத் தேவை. உங்கள் மெளனம் கலைந்தால் அவர்களுக்குப் பிழைப்பு இல்லை. பிழைப்புவாதிகளைப் புறந்தள்ளுங்கள். உங்களின் கால்களைப் பிடித்து சகதிக்குள் இழுக்க நினைப்பவர்கள் அவர்கள். நீங்கள், ஆத்மாநாம் வாசகர்களாகிய  எங்களுடன் பேச வேண்டும். அதுவே எங்களுக்கான மகிழ்ச்சி.

கடைசியாகக் கேட்பதற்கு வேறொன்றும் இல்லை பிரம்மராஜன். ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அதுகூட ஆரம்பத்திலிருந்தே கேட்பதுதான்.

மௌனம் கலைத்துப் பேசுவீர்களா பிரம்மராஜன்? 

No comments:

Post a Comment