Sunday, August 28, 2016

ஆத்மாநாம் சர்ச்சை - கே. என். சிவராமன்

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 22 - 2016, நேரம்: 1.13 PM

பதிவு: 01

‘காலச்சுவடு அரசியல்’ என்ற ‘#’ தலைப்பில் ஒரு நிலைத்தகவலை எழுதியிருந்தேன். அதற்கு நண்பர் கிருஷ்ண பிரபு Krishna Prabhu நீண்ட மறுப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்.

எப்படி என் தரப்பை எழுதவும் பேசவும் எனக்கு உரிமை இருக்கிறதோ, அப்படி கிருஷ்ண பிரபுவுக்கும் இருக்கிறது. என்றாலும் தனது வலைத்தளத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவுக்கு சில விளக்கங்களை தர வேண்டியிருக்கிறது.
அதற்கு முன்னதாக நடைபெற்று வரும் உரையாடலை சுருக்கமாக தொகுத்து விடுகிறேன். மறைந்த கவிஞர் ஆத்மாநாமின் மொத்த கவிதைகளையும் தேடிப் பிடித்து தொகுத்து 1989ம் ஆண்டு தனது பதிப்பகம் வழியாக பிரம்மராஜன் கொண்டு வந்தார். இதன் இரண்டாவது பதிப்பை 2002ல் ‘காலச்சுவடு’ பதிப்பகம் கொண்டு வந்தது. தொகுப்பாசிரியர் பிரம்மராஜன்தான்.

அந்த வகையில் இதுவரை ‘காலச்சுவடு பதிப்பகம்’ வழியே - பிரம்மராஜன் தொகுத்த - ‘ஆத்மாநாம் கவிதைகள்’ நான்கைந்து பதிப்புகள் வந்திருக்கின்றன. இந்நிலையில் ஆகஸ்ட், 2016 ‘காலச்சுவடு’ இதழில் ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ என்ற கட்டுரையை பேராசிரியர் கல்யாண ராமன் எழுதியிருக்கிறார்.

அதில் பிரம்மராஜன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அவை எல்லாம் என்னென்ன என்பதை ‘காலச்சுவடு’ தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் கல்யாண ராமனின் கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதை மறுத்தே சென்ற வாரம் முகநூலில் #காலச்சுவடுஅரசியல் என்ற நிலைத்தகவலை எழுதினேன்.

இந்த மறுப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையி்லேயே கிருஷ்ண பிரபு கட்டுரை எழுதியிருக்கிறார். முன்னுரை போதும். விஷயத்துக்கு வருவோம்.

கிபி (கிருஷ்ண பிரபு) கேட்டிருக்கும் கேள்விகளில் முதன்மையானது பிரம்மராஜன்Brammarajan Rajaram தொடர்பானது.

எதற்காக தன் தரப்பை பிரம்மராஜன் எழுதாமல் மற்றவர் எழுதுவதை share செய்கிறார்?
கிபி-யின் இந்தக் கேள்வியை புறம்தள்ளாமல் பதில் அளிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனெனில், இது தனிப்பட்ட கிபி-யின் வினா மட்டுமல்ல. முகநூலில் புழங்கும் பலரது மனதில் எழுந்திருக்கும் கேள்வியும் கூட.
ஓர் உதாரணம் வழியே இதை பார்க்கலாம். ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த அரசாங்கங்கள் ஒரு சிலரை ‘தீவிரவாதி’, ‘திருடன்’ என முத்திரை குத்தி சிறையில் அடைக்கிறது. தண்டனையை வழங்குகிறது.
இதுபோன்ற சூழலில், ‘தான் தீவிரவாதி அல்லது திருடன் அல்ல’ என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் தள்ளப்படுகிறார்களே தவிர, குற்றம் சாட்டியவர்கள் அல்ல.
இதற்கு பெயர்தான் ‘பாசிசம்’. இன்று அமெரிக்கா அதைத்தான் செய்கிறது. பொதுப்புத்தியில் உறைந்து போன இதே வழிமுறையைதான் இலக்கியத்தின் பக்கமும் திருப்புகிறார்கள்.

போகிறபோக்கில் யார் வேண்டுமானாலும் புழுதிவாரி தூற்றிவிட்டு செல்வார்கள்... ‘அச்சோ... நான் அப்படியில்லை....’ என விளக்கம் அளிக்க வேண்டுமா?

எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்... என்ற கேள்வியை - குற்றம்சாட்டுபவர்களை நோக்கி நாம் ஏன் எழுப்புவதில்லை? எனில், நம்மையும் அறியாமல் நமக்குள்ளும் பாசிசம் ஊடுருவியிருக்கிறது என்றுதானே இதற்குப் பொருள்?
அடுத்து sharing.

பிரம்மராஜனை அறியாதவர்கள்தான் இதை தலையாய கேள்வியாக முன் வைப்பார்கள். கிருஷ்ண பிரபு குளோபலைசேஷன் அமலுக்கு வந்த பிறகு நினைவு தெரிந்த வயதுக்கு வந்தவர். எனவே பிரம்மராஜன் குறித்து நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே எனது புரிதலில் இருந்து ‘யார் இந்த பிரம்மராஜன்’ என்று விளக்கி விடுகிறேன்.

1970கள் முதல் சிறுபத்திரிகை சார்ந்த சூழலில் தீவிரமாக இயங்கி வருபவர்தான் பிரம்மராஜன்.அறிவியல் பட்டதாரி. கல்லூரி பேராசிரியர். உலகளவில் இலக்கியத்துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன... எந்தெந்த மொழி படைப்பாளிகள், தங்கள் படைப்புகளின் வழியே என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்... என்பதையெல்லாம் தேடித் தேடி அறிபவர்; கற்பவர். தமிழுக்கு அறிமுகப்படுத்துபவர்.

‘படிகள்’, ‘கசடதபற’, ‘ழ’ இதழ்களில் எழுத ஆரம்பித்தாலும் - ‘மீட்சி’ என்ற சொந்த பத்திரிகையின் வழியே அழுத்தமான தடங்களை பதித்தவர். உலக கவிஞர்களை எல்லாம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இன்று பரவலாக பேசப்படும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை எல்லாம் கையைப் பிடித்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தவர் சாட்சாத் பிரம்மராஜன்தான்.

இன்று வரை மறுபதிப்பு காணாத இவரது மொழியாக்கத்தில் வந்த ‘போர்ஹே சிறுகதைகள்’, ஆர்.சிவகுமார் உள்ளிட்ட சிலரது தமிழாக்கங்களுடன் வெளிவந்த ‘லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்...’ உள்ளிட்ட - 1980களில் வெளியான நூல்களை தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள். பிரம்மராஜன் யார் என்று புரியும்.

போலவே லதா ராமகிருஷ்ணன் Anaamikaa Rishi மொழிபெயர்த்த ‘பிரைமோ லெவி’, ‘ஜேம்ஸ் ஜாய்ஸ்’ நூல்களுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரைகளையும்.

இதுதான் பிரம்மராஜன். தனது செயல்பாடுகளை - செயல் தளத்தை கறாராக வரையறுத்திருக்கிறார்.
அதுதான் literary vanguard movement.

மூன்றே இதழ்களுடன் நின்றுவிட்ட அவரது ‘நான்காம் பாதை’ சிறுபத்திரிகையின் முதல் இதழ் தலையங்கமே இந்த வாசகத்துடன்தான் தொடங்கும்.

இதற்கு என்ன அர்த்தம் - literary vanguard movement - என்பதை அகராதியை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

(சிறுபத்திரிகை) இலக்கியத்தை இப்படித்தான் பிரம்மராஜன் நினைக்கிறார்; வரையறுக்கிறார்; அதன்படியே வாழவும் செய்கிறார். இதே தீவிரத்துடன் செய்ல்படுபவர்கள் மட்டுமே பிரம்மராஜனுடன் இணைந்து பணியாற்ற முடியும். சமரசவாதிகளுக்கு அங்கு இடமில்லை.

ஆரம்பக்கால கோணங்கி, நாகார்ஜுனன், சாரு நிவேதிதா, சத்யன்... என நீளும் படைப்பாளிகளின் தொடக்கக்கால படைப்புகள் அனைத்தும் உக்கிரத்துடன் இருக்க, பிரம்மராஜனுடன் அவர்கள் பழகியதே காரணம். இவர்களது படைப்புகளை பிரம்மராஜன் செப்பனிட்டதே காரணம்.

ரீல் விடவில்லை. கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’க்கு ‘மீட்சி’யில் நாகார்ஜுனன் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். கோணங்கியின் இலக்கிய வகைமை எந்த வகையை சேர்ந்தது என்பதை அந்த விமர்சனம் அடிக்கோடிட்டு காண்பித்திருக்கும். இதன் பிறகே கோணங்கியும் நாகார்ஜுனனும் நண்பர்களானார்கள் என்பது வரலாறு.

தீவிர இலக்கிய வாசகர்கள் அனைவரும் கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’; ‘கொல்லனின் ஆறு பெண்மக்கள்’ தொகுப்புகளை சிலாகிப்பார்கள். இவ்விரு தொகுப்புகளும் எழுதப்பட்ட காலத்தில் கோணங்கிக்கு god father ஆக பிரம்மராஜன் இருந்தார் என்பது தற்செயலல்ல. இப்படி தீவிரத்துடனும் உக்கிரத்துடனும் - பெரும் பத்திரிகைகளுக்கு யார் யார் காம்ப்ரமைஸ் ஆகாமல் இருக்கிறார்களோ - அவர்களை எல்லாம் உயர உயர அழைத்துச் செல்ல பிரம்மராஜன் தயங்கியதே இல்லை.

‘மீட்சி’ காலத்தில் பூக்கோவை நாகார்ஜுனனுக்கு அறிமுகப்படுத்தினார் என்றால் - ‘நான்காம் பாதை’ காலத்தில் முத்துக்குமார் என்பவரை சூழல் முன் நிறுத்தினார். பூக்கோ, தெல்யூஸ் - கத்தாரிக்கு பிறகான சிந்தனையாளர்களை இந்த முத்துக்குமாரை வைத்து ‘நான்காம் பாதை’யில் ஆங்கில பரீட்சயம் இல்லாத தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சிறுபத்திரிகை வட்டாரங்கள் தவிர வேறு எங்கும் பிரம்மராஜன் எழுத மாட்டார்; புழங்க மாட்டார். அவருக்கு 300 பேர் கூட வேண்டாம். 30 பேர் போதும். அந்த 30 பேரும் தீவிரமானவர்களாக இருக்க வேண்டும். இதுதான் ஒரே கண்டிஷன்.

அறிந்த வரை ‘சுபமங்களா’வில் கோமல் சுவாமிநாதனுக்காக பத்தி ஒன்றை எழுதினார். பிறகு ஆரம்பக்கால ‘உயிர்மை’யில் சில கட்டுரைகள்; மொழியாக்கங்கள்.

இதைத்தாண்டி இடைநிலை இதழ்களில் கூட பிரம்மராஜன் எழுதியதில்லை. இப்படிப்பட்ட ஒரு தீவிர நபர் எப்படி முகநூலில் ஸ்டேட்ட்ஸ் ஆக போட்டுத் தள்ளுவார்? இந்த மீடியத்தில் அவர் இருப்பது ஜஸ்ட் பார்வையாளராகத்தான். எப்படி ‘விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’ போன்ற வெகுஜன இதழ்களை நேரம் கிடைக்கும்போது புரட்டிப் பார்க்கிறாரோ... அப்படி இணையத்துக்கு வரும்போது ஸ்டேட்டஸை மேய்கிறார். அவ்வளவே. அவரது டைம் லைனுக்கு சென்று யார் பார்த்தாலும் தெரியும். 99% sharingதான். தப்பித்தவறி எதையாவது எழுத நேர்ந்தாலும் நான்கைந்து வாக்கியங்களுக்கு மேல் பதிவு செய்ததில்லை.

அவ்வளவு ஏன்... தனது வலைத்தளத்தில் கூட அவர் புதியதாக எந்தக் கட்டுரையும் எழுதவில்லை. முன்பு, தான் எழுதியதை எடுத்துப் போட்டிருக்கிறார். தட்ஸ் ஆல். காரணம், இலக்கியம் தொடர்பான - கறாரான - உக்கிரமான அவரது பார்வைதான்.

ஏதோ முகநூலில் அவரது நட்புப் பட்டியலில் நாமும் இருக்கிறோம் என்பதாலேயே நம்மைப் போல் அவரும் ஸ்டேட்டஸ் ஆக போட்டுத் தள்ள வேண்டும்.. சகட்டுமேனிக்கு நாம் வீசும் அவதூறுகளுக்கு எல்லாம் அவர் பதில் அளிக்க வேண்டும்... என்று எதிர்பார்ப்பது சரியல்ல.

அதேபோல் ‘ஆத்மாநாம் கவிதைகள்’ தொகுப்பு சார்ந்து அவருக்கு ஆதரவாக எழுதப்பட்ட நிலைத்தகவல்களை அவர் ஷேர் செய்யும் ஒரே காரணத்துக்காக அவர்கள் எழுதுவதை எல்லாம் ஏற்கிறார் என்றும் அர்த்தமல்ல.

என்னையே எடுத்துக்காட்டுக்கு எடுத்துக் கொள்கிறேன். எனது ஸ்டேட்டஸை ஷேர் செய்தார். ஆனால், ஒருபோதும் இலக்கியம் சார்ந்த எனது நடவடிக்கைகள் / செயல்களை அவர் ஆதரிக்க மாட்டார். சொல்லப்போனால் மற்றவர்களை விட கடுமையாக எதிர்க்கவே செய்வார்.

ஏனெனில் அவர் எப்போதும் ஏற்காத வெகுஜன தளத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறேன். முழ நீளத்துக்கு இவ்வளவும் எழுத காரணம் - பிரம்மராஜன் யார்... எப்படிப்பட்டவர் என்பதை 2000ம் ஆண்டுக்கு பிறகு சிறுபத்திரிகை இலக்கியங்களை படிக்க ஆரம்பித்தவர்களுக்கு - அதுவும் ஃபேஸ்புக்கில் இருப்பவர்களுக்கு - புரிய வைக்கத்தான். மற்றபடி வெறும் கிருஷ்ண பிரபுவுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. நடந்திருப்பது அநியாயம். ‘காலச்சுவடு’ செய்திருப்பது நமது முன்னோடிகளில் ஒருவரான பிரம்மராஜனை இழிவுப்படுத்தும் / அழிக்க நினைக்கும் செயல். இதை தட்டிக் கேட்கும் உரிமை ஒரு வாசகராக நம் அனைவருக்கும் இருக்கிறது.
‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ என்ற கட்டுரையை எழுதியிருக்கும் கல்யாணராமன் - நாற்பது வயதுக்குள் இருப்பவர். நந்தனம் கல்லூரி தமிழ் பேராசிரியர். இவரது இலக்கிய ஆர்வம் போற்றத்தக்கது. ஆனால், அது அரைவேக்காடுத்தனமாக முடிந்து விடக் கூடாது. இவருக்கு வயதும் காலமும் இருக்கிறது. அரசியலுக்கு பலியாகி தன்னைத்தானே இழிவு படுத்திக் கொள்ளக் கூடாது.
‘ஆத்மாநாம் கவிதைகள்’ தொடர்பாக சில ஆண்டுகளாகவே கல்யாணராமன் பல பதிப்பகங்களை தொடர்பு கொண்டு வந்திருக்கிறார்.
அதில் இருவர், பிரம்மராஜனிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். பதிப்பிக்க மறுத்துவிட்டார்கள்.
கடைசியாக தனது சொந்த பதிப்பகம் வழியாக, விற்பனை உரிமையை இன்னொருவருக்கு கொடுத்துவிட்டு, நூலாக கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக DTP, Layout... உள்ளிட்ட வேலைகள் நடந்திருக்கின்றன. இவை எல்லாம் முடிந்து ஸ்பைரல் பைண்டிங் போட்டு பிழைதிருத்தம் செய்ய கொண்டு சென்றிருக்கிறார்.
இதற்கு முன்னுரை வாங்க இன்னொரு பேராசிரியரிடம் கொடுத்திருக்கிறார். அந்த பேராசிரியர் ‘காலச்சுவடு’ பதிப்பகத்துடன் தொடர்புடையவர்.
அவர், முன்னுரை எழுதிக் கொடுப்பதற்கு பதிலாக அப்படியே அந்த நூலை ‘காலச்சுவடு பதிப்பக’த்துக்கு கொண்டு சென்று விட்டார்.
வருடம்தோறும் காலம் சென்ற படைப்பாளிகளுக்கு திவசம் செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கும் அந்தப் பதிப்பகம் - இம்முறை எள்ளுத் தண்ணீர் ஊற்ற ‘ஆத்மாநாமை’ தேர்வு செய்திருக்கிறது. இதுதான் நடந்த விஷயம். கிசுகிசு எல்லாம் அல்ல. வேண்டுமானால் கல்யாண ராமனிடமே யார் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். இது நேர்மையற்ற செயல் என்று கூறி எந்தெந்த பதிப்பகங்கள் இதை பதிப்பிக்க மறுத்தன என்பது உட்பட.
ஆக - ‘பிரம்மராஜனிடம் பேசுங்கள்’ என்று சொன்ன முந்தைய இரு பதிப்பகங்களின் அடிப்படை அறம் கூட ‘காலச்சுவடு பதிப்பக’த்துக்கு இல்லை என்பது கவலையளிக்கும் விஷயம். இத்தனைக்கும் பிரம்மராஜனின் கைபேசி எண்ணும், லேண்ட் லைன் நம்பரும் ‘காலச்சுவடு பதிப்பக’த்துக்கு தெரியும். ‘ஆத்மாநாம் கவிதைகள்’ நூலை இதுவரை பதிப்பித்து வருபவர்களும் இவர்களே. அப்படியிருந்தும் பிரம்மராஜனை தொடர்பு கொண்டு கேட்காமல் -
அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் கட்டுரையை தங்களது ‘200வது இதழில்’ வெளியிட்டிருக்கிறார்கள்.
இதுதான் பத்திரிகை தர்மம் என்றால் - இதுதான் பதிப்பக அறம் என்றால் - இதை எதிர்க்கவே செய்வேன். இது தொடர்பாக பிரம்மராஜன் என்ன முடிவு எடுத்தாலும் அவருக்கு உறுதுணையாக நிற்பேன்.

மற்றவர்களையும் இந்தப் போராட்டத்தில் இணையும்படி பிரசாரம் மேற்கொள்வேன்.

#ISUPPORTBRAMMARAJANRAJARAM


பதிவு: 02

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 23 - 2016, நேரம்: 10.26 AM

(இதுதான் முடிவு என்றால் எதிர்கொள்வோம் . தகவல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பிரம்மராஜனிடம் ஒப்புதல் வாங்கவில்லை.)

ஆத்மாநாம் கவிதைகள்: தொகுப்பு பிரம்மராஜன் Brammarajan Rajaram. விலை: ரூ.49 அல்லது ரூ.99. வழு வழு தாள். வெளியீடு: தன்யா & பிரம்மா பப்ளிஷர்ஸ். (ஆத்மாநாமின் கையெழுத்து பிரதிகள் அனைத்தும் ஸ்கேன் செய்து பின்னிணைப்பாக இணைக்கப்படும். சாம்பிளுக்கு இந்த நிலைத்தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும் மூன்று படங்களை பார்க்கவும்)
இலக்கிய ஆர்வமுள்ள முகநூல் நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை முதலில் நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். இறுதி வரை பெருமாள் முருகன் பக்கம் நின்று அவருக்கு நீதி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட ‘காலச்சுவடு பதிப்பக’த்தை பாராட்டுவோம்.

அதேநேரம் பெருமாள் முருகனுக்கு எந்த வகையான அநீதி ஏற்பட்டதோ - அதே அளவுக்கான அநீதி கவிஞர் பிரம்மராஜனுக்கு Brammarajan Rajaramஇழைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒருபோதும் நாம் மறக்க வேண்டாம்.
இம்முறை நம் முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் பிரம்மராஜன் மீது தாக்குதல் தொடுத்து அவரை முடக்க / அழிக்க நினைப்பவர்கள் சாதி சங்கங்களை சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக சிறுமை கண்டு பொங்கி எழுவதாக தன்னை அறிவித்துக் கொள்ளும் ‘காலச்சுவடு பதிப்பக’மேதான் என்பது வேதனை அளிக்கும் விஷயம்.

பெருமாள் முருகனுக்கு ஒரு நியாயம்... பிரம்மராஜனுக்கு ஒரு நியாயம் என்பது எந்த விதத்தில் சரி?

இதை ‘காலச்சுவடு’ பதிப்பகமும்; அப்பதிப்பகத்தின் நலம் விரும்பிகளும் தயவுசெய்து யோசிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நடந்தது என்ன என்பதை கடந்த நிலைத்தகவலிலேயே பார்த்துவிட்டோம்.
எனவே நேரடியாக விஷயத்துக்கு வருவோம். ஒருவேளை பேராசிரியர் கல்யாணராமனை தொகுப்பாசிரியராக கொண்டு ‘ஆத்மாநாம் கவிதைகள்’ என்ற புதிய பதிப்பை கொண்டு வர ‘காலச்சுவடு பதிப்பகம்’ நினைத்தால் -
பிரம்மராஜனின் ‘தன்யா & பிரம்மா பப்ளிஷர்ஸ்’ சார்பில் அவர் தேடிப் பிடித்து தொகுத்த ‘ஆத்மாநாம் கவிதைகள்’ புதிய பதிப்பை - அதுவும் செம்பதிப்பாக... ஆத்மாநாமின் கையெழுத்து பிரதிகளுடன் வழு வழு தாளில் கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்வோம்.
இதற்கு முதலில் பிரம்மராஜன் சம்மதிக்க வேண்டும். அவரை இணங்க வைக்க வேண்டியது நம் அனைவரது பொறுப்பு. மாறாத மரியாதை கலந்த அன்புடன் அவரை நாம் அனைவரும் தொந்தரவு செய்வோம்.

அத்துடன் மீண்டும் ‘மீட்சி’ இதழை அவரது நேரடிப் பொறுப்பில் அவர் கொண்டு வர வேண்டும் - காலாண்டு இதழாக.
இவ்விரு கோரிக்கைகளுக்காக நாம் அவரை உறங்கவிடாமல் இம்சிப்பதில் தவறொன்றும் இல்லை.

ஒருவேளை ‘ஆத்மாநாம் கவிதைகள்’ பிரம்மராஜனின் பதிப்பகம் சார்பில் மீண்டும் வர வேண்டிய சூழலை ‘காலச்சுவடு பதிப்பகம்’ ஏற்படுத்தினால் - இந்த தொகுப்புக்காக ஆகும் செலவில் ஒரு பகுதியை தனிப்பட்ட முறையில் நான் ஏற்கிறேன். இதன் மூலம் வாசகர்கள் வாங்கும் தொகையில் கணிசமான அளவு குறையும். குறைக்கப்பட்ட புத்தக விலையை கணக்கில் கொள்ளாமல் கணிசமான ஒரு தொகை உரியவர்களுக்கு ராயலடியாக கொடுக்கப்படும். பொருளாதார ரீதியில் அப்படியொன்றும் நான் தன்னிறைவு பெறவில்லை. இன்னமும் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலைதான். என்றாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் என் பங்குக்கு அணிலை போல் உதவ தயாராக இருக்கிறேன்.

பேராசிரியர் கல்யாணராமனுக்கு ஒரு வேண்டுகோள்...

ஆத்மாநாமை மூலத்துடன் படிக்க வேண்டும் என்று நீங்கள் தேடித் தேடி அலைந்தது போற்றத்தக்க விஷயம். இதுபோன்ற தீவிர வாசகர்களை நம்பியே சிறுபத்திரிகை சூழல் இயங்கி வருகிறது.
உங்கள் தேடலும் ஆராய்ச்சியும் மெச்சத்தக்கது. ஆனால், ஏற்கனவே தொகுத்தவர் எப்படிப்பட்டவர்... எந்த வகையில் தொகுப்புப் பணியை அவர் மேற்கொண்டிருக்கிறார்... மூலத்துடன் தொகுப்பு ஏன் வேறுபடுகிறது (வேறுபடுவதாக நினைக்கும் பட்சத்தில்)... தொகுப்பாசிரியர் ஏன் இப்படி / அப்படி மாற்றினார்... என்பதை எல்லாம் சம்பந்தப்பட்ட தொகுப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டு அறிவதே அழகு. தேடலும் ஆராய்ச்சியும் கொண்ட நீங்கள் - உங்கள் உழைப்பை நல்லவிதமாக செலவிடுங்கள். உங்கள் மூலம் ஒருவேளை தமிழ்ச் சூழலுக்கு பொக்கிஷங்கள் கிடைக்கலாம். இங்கு வெளியாகியிருக்கும் மூன்று படங்களும் பிரம்மராஜனின் பக்கத்தில் இருந்து ‘சுடப்பட்டவை’.
பட விளக்கம்:
1. Aathmanam's poem written on a torn sheet (chosen by himself) from a ruled notebook
As usual you don'f find any dates.
2. Athmanam's instructions to the printer for the 8th issue of Zha.
3. Poem by Athmanam
Drawing by Achyathan Koodaloor
(Like any other Athmanam manuscript it is undated).
ஆர்வமுள்ள அனைத்து இலக்கிய நண்பர்களையும் இருகரம் கூப்பி அழைக்கிறேன்...

வாருங்கள்... பிரம்மராஜனை தொந்தரவு செய்வோம்... பழைய பன்னீர் செல்வமாக அவர் சிலிர்த்து எழ உடுக்கை அடிப்போம்...

No comments:

Post a Comment