Saturday, June 8, 2013

அருண் தமிழ் ஸ்டுடியோ - அறச்சீற்றம் 2

குட்டிப்புலி படத்தில் நடித்த சசிகுமாரை "தமிழ் சினிமாவின் ராமதாஸ்" என்றும், “ஆபத்தான மனிதர்” என்றும் தமிழ் ஸ்டுடியோ அருண் தனது முகநூல் நிலைத்தகவலில் பகிர்ந்திருந்தார். படைப்பை மீறி ஒரு நடிகரை/ தனி மனிதரை தாக்கும் விதத்தில் அருண் எழுதியிருந்ததால் – அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சினிமா ஆய்வாளர் ராஜன்குறை கிருஷ்ணன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அருண் தனது பக்கத்தில் தொடர்ந்து எழுதிவரும் நிலைத்தகவலின் முதிர்சியின்மை குறித்தும், போதாமை குறித்தும் காட்டமாகவே எழுதியிருந்தார். இரண்டு தரப்பிற்கும் ஆதரவாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

நடிகர் சசிக்குமாரைப் பற்றிய அருணின் அதே நிலைத்தகவலை – திரைத்துறைக் கலைஞர் மாமல்லன் கார்த்தியும் சுட்டிக்காட்டி ஒரு நிலைத்தகவல் எழுதியிருந்தார். இவர் பிரபல இலங்கை இயக்குனர் ”பிரசன்ன விதானகே”-விடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது AR ரகுமானின் நண்பர் பரத்பாலா இயக்கம் மரியான் படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆகவே கலைப்படம், கமர்ஷியல் படம் குறித்த நேரடியான தெளிவான அனுபவம் இவருக்கிருக்கின்றது. இப்படிப்பட்டவர் ஒரு நிலைத்தகவல் எழுதியிருக்கிறார் என்பதால் - ஆதரவாக சிலரும், மாற்றுக் கருத்தை சிலரும் முன்வைத்திருந்தனர். அதில் “சூது கவ்வும்” இயக்குனர் நளன் குமாரசாமியும் அடக்கம். நாளைய இயக்குனர் போட்டியில் கலந்து கொண்ட இன்னும் சிலரும் கூட மாமல்லனுடன் தமது கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். அதற்கு தமிழ் ஸ்டுடியோ அருண் பின்வருமாறு தமது கருத்தை பகிர்ந்திருந்தார்.


"சூது கவ்வும்" இயக்குனர் நளன் குமாரசாமி - மாமல்லன் கார்க்கிக்கு பின்வருமாறு பின்னூட்டம் இடுகிறார்:
அதற்குத் தான் "குழந்தைகளா இங்கே என்ன சத்தம்..." என்ற ரீதியில் அருண் பின்னூட்டம் இடுகிறார். மாற்றுக் கருத்தை முன் வைப்பதில் ஒரு முறை வேண்டாமா? இதென்ன அதிகாரத் தோரணை என்று எனக்குப் புரியவில்லை. இவர் என்னவோ அறிவாளி போலவும், மற்றவர்கள் எல்லோரும் பப்பா என்பது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? பொதுவாகவே தன்னுடைய கருத்த்தில் குறை காண்பவர்களை அருணுக்குப் பிடிக்காது. "உங்களுக்கு என்னுடைய வளர்ச்சி பிடிக்கவில்லை! உங்களுக்கு மாற்று சினிமாவின் மீது அக்கறை இல்லை. என்மீது தனிமனித தாக்குதல் நடத்துகிறீர்கள்." என்பது போன்ற எதையாவது ஒன்றை திரும்பத் திரும்பச் சொல்லி இரக்கத்தைச் சம்பாதிப்பார். ஆதாரப் பூர்வமான தகவலை அடுக்கினால் - தன்னுடைய பக்கத்திற்கு வரமுடியாதபடி பிளாக் செய்துவிடுவார்.

கடந்த ஆண்டு கூடங்குளம் பிரச்சனையைக் கையில் வைத்துக்கொண்டு - எழுத்தாளர்களுக்கு சமூக அக்கறை இல்லையென வசைமாரி பொழிந்தார். அதனைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்து பதிவில் எழுதியிருந்தேன்: தமிழ் ஸ்டுடியோ – அறச்சீற்றம்

தவறான கருத்தைப் பகிர்ந்ததற்காக சிறு வருத்தத்தைக் கூட பதிவு செய்யவில்லை. மாறாக நிலைத்தகவலை அழித்துவிட்டு வேறு விஷயத்திற்குத் தாவினார். அங்கும் நெய்வேலி குறும்பட விருது குறித்த ஆதாரமற்ற தகவலைப் பகிர்ந்திருந்தார். அதற்கடுத்து நாளைய இயக்குனர்கள் மீது பாய்ந்தார். தொடர்ந்து அவருடன் உரையாடியதில், விமர்சித்ததில், அவருடைய முதிர்ச்சியற்ற பகிர்ந்தல்களையும் குறைகளையும் சுட்டிக் காட்டியதில் என்னை அவருடைய முகநூல் பக்கத்தைப் பார்க்காதபடிக்கு பிளாக் செய்துவிட்டார். நேற்றும் அப்படித்தான் நடந்தது. ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து மாமல்லன் கார்த்தியின் இழையில் தான் அவருடன் உரையாடத் தோன்றியது. பழைய விஷயங்களைச் சுட்டிக்காட்டி அவருடன் உரையாட நினைத்தேன். உடனே என்னை பிளாக் செய்துவிட்டார்.

ஆனால் ஆரோக்கியமான முகநூல் நிலைத்தகவல் விமர்சனம் குறித்தும், விவாதம் குறித்தும் பொதுவான கருத்தைப் பகிரும் பொழுது அருண் பின்வருமாறு அங்கலாய்க்கிறார்.

/-- "எல்லா வகையிலும் இங்கே(முகநூல்) உரையாடலுக்கான வெளி முடக்கப்பட்டிருக்கும் போது.." --/

இவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். என் போன்று ஆதாரத்தை முன் வைத்து உரையாடுபவர்களை அருண் எந்த அடிப்படையில் தொடர்ந்து பிளாக் செய்து வருகிறார்? (போலியான அக்கவுன்ட் மூலமோ அல்லது நண்பர்களின் அக்கவுன்ட் மூலமோ அவரை அவதானிப்பது கம்ப சூத்திரமா என்ன?)

மாமல்லன் கார்த்திக்கு அருண் கொடுத்த பின்னூட்டம் மிக முக்கியமானது. அதன் ஸ்நாப் ஷாட் கீழே:
அருணின் பக்கத்திலேயே கட்டுரை குறித்த விவாதத்தை முன்னெடுக்க விஷயம் தெரிந்தவர்களுக்கு அவர் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் இல்லையா? விமர்சனம் செய்பவர்களுக்கு பின்னூட்டமிடும் வசதியில்லாமல் செய்வது. மீறிச் செய்தால் பிளாக் செய்யவேண்டியது. பின்னர் தான் ஒரு ஞாயவாதி என்று பிரகடனம் செய்ய வேண்டியது.

/-- இந்த நாயலய இயக்குனர் செல்லக் கண்மணிகளுக்கு நான் ஒருபோதும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒருநாடகத்தை எடுத்து, வெற்றிபெற்றவுடன், நளன் பேசும் பேச்சு, என்னை பிரம்மிக்க வைக்கிறது.--/

மேலும் நளன் குமாரசாமி போன்ற நாளைய இயக்குனர்களின் வெற்றியை ஜீரணித்துக்கொள்ள அருண் தயக்கம் காட்டுவது ஏன் என்று தான் புரியவில்லை. தமிழ் குறும்படம் சார்ந்து எடிட்டர் லெனினின் ஆரம்பகட்ட முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தரமணி அரசு திரைக்கல்லூரி ஆரம்பித்த நாட்களிலிருந்தே, 1970- களின் இறுதி ஆண்டுகளில் இருந்தே குறும்படம் எடுக்கப்படுகிறது. தமுஎகச & கலை இலக்கிய மன்றம் குறும்படங்களை திரையிட்டு மக்கள் மத்தியில் குறும்படம் சார்ந்த விழிப்பை ஏற்படுத்ஹ்டி இருக்கிறார்கள். 1990-களின் மத்தியில் நிழல் திருநாவுக்கரசு & பதியம் போன்ற நண்பர்கள் குறும்படம் சார்ந்த பட்டறைகளை நடத்தத் துவங்கிவிட்டனர். 2001-ஆம் ஆண்டு குறும்பட விழா நடத்தி பரிசுத்தொகை வழங்கும் முறையையும் அந்தந்த காலகட்டத்தில் இயங்கியவர்கள் செய்திருக்கிறார்கள். இதுவரை 29 மாவட்டங்களில் தான் நடத்திய குறும்படப் பயிற்சிப் பட்டறைகளில் ஏறக்குறைய 5000 நபர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என கடைசியாக பேசிய பொழுது நிழல் திருநாவுக்கரசு பகிர்ந்துகொண்டார். சென்னையில் இருப்பதால் திருநாவுக்கரசு பற்றி நான் பேசுகிறேன். வெளியில் தெரியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எவ்வளவு பேர் இருப்பார்கள். அவர்களெல்லோரும் விளம்பரத்திற்காக இப்படியா அடுத்தவர்களை புழுதிவாரித் தூற்றுகிறார்கள்.

"நான் யாரையாவது தனிமனிதத் தாக்குதல் செய்கிறேனா?" - என்று அருண் தனது பின்னூட்டத்தில் கேட்கிறார். ஞாயமான கேள்விதான். "ஆபத்தான மனிதர்" என சசிக்குமாருக்கு பட்டம் கொடுத்ததை எந்த வகையில் சேர்க்க? "நாயலய இயக்குனர் செல்லக் கண்மணிகளுக்கு" என கலைஞர் டிவியில் குறும்படங்கள் சார்ந்து இயங்கும் நண்பர்களைப் பற்றிய பேசுவது எந்த வகையில் சேரும்? இதையெல்லாம் அருண் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

எதையாவது பேசுவதற்கு முன்பு "யாரிடம் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? அவர்களின் தகுதி என்ன?" என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு பேச வேண்டும். எதையாவது உளறிக் கொட்டிவிட்டு, பின்னர் ஊர் கூட்டி ஒப்பாரி வைப்பது பொதுவில் இயங்குபவர்களுக்கு அழகில்லை.

கடைசியாக ஒன்று. "ஒரு நடிகரோ அல்லது இயக்குனரோ" - மாற்று சினிமா சார்ந்து பேசுகிறார் எனில் அதனை உச்சி முகர்ந்து ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மாற்று சினிமா சார்ந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவர் தன்னை "நடிகர்/ இயக்குனர்" என்று சொல்லிக்கொண்டால் - அது அபாயம் நிரம்பிய ஒன்று. அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ் ஸ்டுடியோ அருணின் முகநூல் பக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில் உடனே சென்று பாருங்கள். நீங்கள் பிளாக் செய்யப்பட்டவரா பிரச்சனை இல்லை. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். "Actor / Director" - என்று தான் அவருடைய பக்கத்தில் போட்டிருக்கிறார். தானும் ஒரு நடிகனாக, இயக்குனராக பரிமளிக்க நினைத்து அது நிறைவேறாத பட்சத்தில் சமூக இணையதளங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதியை அருண் தவறாகப் பயன்படுத்துகிராரோ என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

(அவர் நடித்த படத்தையும், இயக்கிய படத்தையும் அல்லது இயக்கி நடித்த படத்தையும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் கிடைத்தாள் எனக்கும் ஒரு பிரதி கொடுத்து உதவுங்கள்.)

விளம்பரத்தைத் தேடிக்கொள்ளாத அற்பணிப்பு உணர்வு தான் கலையை வளர்த்தெடுக்கும். மாற்று சினிமா சார்ந்து இயங்கும் எத்தனையோ தோழர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சப்தமின்றி அற்பணிப்புடன் தான் இயங்குகிறார்கள். நண்பர் அருணும் அதுபோல பரிமளிக்க வாழ்த்துக்கள்.


4 comments:

  1. கிருஷ்ண பிரபு நல்ல ஆய்வு...நேர்மையான கேள்விகள்.

    ReplyDelete
  2. அருண் நடிக்க போறாரா?பரவாயில்லை.power star களை பார்த்தவர்கள் நாங்கள்.பயப்படமாட்டோம்.

    ReplyDelete
  3. அடுத்து powerstar ஆ தமிழ் நாடு தாங்குமா?

    ReplyDelete
  4. அருண் நடிக்கட்டும், ஏதேனும் படத்தை இயக்கட்டும் - அதைப் பற்றி எனக்குப் பிரச்சனை இல்லை. சக நண்பராக அதனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ஆனால் மாற்று சினிமா பேர்வழி என்ற அளவுகோலை வைத்துக்கொண்டு - அதற்கு நேரெதிரான கமர்ஷியல் சினிமா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அவர் எள்ளி நகையாடுவதும், தனிமனிதத் தாக்குதல் செய்வதும் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று.

    அதற்காகத் தான் இந்தப் பதிவு.

    ReplyDelete