Thursday, May 23, 2013

கறயண்டா ஷாஜி கறயண்டா

சமீபத்தில் பின்னணிப் பாடகர் பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் இயற்கை எய்தினார். பல்வேறு மொழிகளின் கருப்பு வெள்ளை திரைப்பட கதாநாயகர்களின் ஆஸ்தானப் பாடகராக விளங்கியவர் என்பதால் அவரைப் பற்றிய துண்டுச் செய்திகளும், ஏராளமான துணுக்குகளும், ஒருசில நுனிப்புல் கட்டுரைகளும் என பலதையும் படிக்கக் கிடைத்தன. (பிழையான கட்டுரைகளையும் சேர்த்தே தான் இங்குக் குறிப்பிடுகிறேன்.) அவற்றில் மே மாதம் உயிர்மை இதழில் வெளியான ஷாஜியின் கட்டுரையை வாசித்துவிட்டு துக்கத்தில் அழுவதா அல்லது ஷாஜியின் அறியாமை நினைத்துச் சிரிப்பதா என்ற தீவிர குழப்பத்தில் ஆழ்ந்தேன். ஏற்கனவே ஷாஜி எழுதியுள்ள பி பி ஸ்ரீனிவாஸ் பற்றிய கட்டுரையையும் படித்ததுண்டு. அந்தக் கட்டுரையில் “உட்லண்ட்ஸ் டிரைவ் இன் எங்கிருந்தது? அந்த ஹோட்டலுக்கு P B ஸ்ரீனிவாஸ் எதில் வருவார்? அங்கு PBS என்ன செய்வார்? அவருடன் ஷாஜி கைகுலுக்கு பேசிய சம்பவங்கள்... மேலும் PBS என்ன பாடினார்? ஏது பாடினார்?” போன்ற தகவல்களை அடுக்கி, அவருடன் சமகாலத்தில் பின்னணி பாடியவர்களுடன் PBS -ன் குரல் வளத்தை ஒப்பிட்டு – முழுக் கட்டுரையையும் ஓரளவிற்கு ஒப்பேற்றி இருப்பார். அந்தக் கட்டுரை இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது.

பி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்

ஒரு பாடகராக பி பி ஸ்ரீனிவாஸ் என்ற கலைஞரை அணுகும் பொழுது, “அவர் பட்டுப் பீதாம்பர ஆடை அணிந்து கொண்டு, ஜொலிக்கும் தங்கக் கிரீடத்தை சூட்டிக் கொண்டு, சட்டை பாக்கெட்டில் எட்டு கலர் எழுதுகோல்களை வைத்துக் கொண்டு உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் வளம் வருவார்” போன்ற வியந்தோதும் விஷயங்களைத் தான் முதன்மையானதாக ஷாஜி கருதுகிறார் போல. வாசிப்பவர்களுக்கும் இந்த விஷயங்கள் தான் தேவைப்படுகின்றன என்று நினைத்துவிட்டார் போல.

ஷாஜியை இசை விமர்சகர் என எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஷாஜி எழுதும் பெரும்பாலான தமிழ் கட்டுரையகளில் இசைக் கலைஞர்களின் பிறப்பு இறப்பு பற்றிய குறிப்புகளும், அவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியும் வர்ணிக்கப்பட்டு – பின்னர் அந்த இசைக் கலைஞரின் பங்களிப்பை போகிறபோக்கில் தொட்டுக் கொண்டும் எழுதப்பட்ட கட்டுரைகளாகத் தான் இருந்திருக்கின்றன. அதற்கு மேலே கொடுத்துள்ள பிபிஎஸ் பற்றிய கட்டுரையையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். “அனுபவக் குறிப்பின் தன்மையில் எழுதப்படும் கட்டுரைகளை விமர்சனமாக எப்படி எடுத்துக் கொள்வது?” என்று புரியவில்லை. கேணி போன்ற சந்திப்புகளில் கூட பத்திரிகையாளர் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் ஷாஜியை இசை விமர்சகர் என்று தான் குறிப்பிடுகிறார்கள். இசையை அதன் தொழின்முறை நுட்பம் சார்ந்து அணுகாமல் – வெறுமனே வியாபார அனுகூலங்களையும் இயந்திரத் தொழில் நுட்பங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்படும் தட்டையான கட்டுரைகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு ஷாஜியை விமர்சகராக ஏற்றுக் கொள்வதில் சங்கடங்கள் நிறையவே இருக்கின்றது.

உயிர்மை இதழில் ஷாஜி சமீபத்தில் எழுதிய அஞ்சலிக் கட்டுரைக்கு வருவோம். ஒருவர் இறந்துவிட்டால் “ஐயையோ... அவர் உயிருடன் இருந்த பொழுது அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை... விருதுகள் கொடுத்து கௌரவிக்கவில்லை” என்பது சாதாரணமாக நடப்பதுதான். பாரதி, புதுமைப்பித்தன், கணித மேதை ராமானுஜர் போன்றவர்களை ஒவ்வொரு துறைக்கும் உதாரணமாகச் சொல்லலாம். போலவே பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் பற்றி ஷாஜியும் அங்கலாய்க்க வருவதும் அதுதான். ஆனால் அந்த அங்கலாய்ப்பையும் மீறி அவருடைய “சொல்லில் அடங்காத இசை” என்ற புத்தகம் சார்ந்த சுய விளம்பரம் தான் கட்டுரை முழுவதும் விரவிக் கிடக்கிறது. (கட்டுரையிலிருந்து ஒருசில பகுதிகள் கீழே)

/-- பிபிஎஸ் பற்றி “போன காலங்களின் இசை வசந்தம்” – என்னுடைய இணையதளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் அந்த ஒரே கட்டுரைதான் PBS பற்றி இதுவரைக்கும் வந்திருக்கும் ஒரே விரிவான பதிவு.

இதை நான் மகிழ்ச்சியுடன் சொல்லவில்லை. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள வெகு ஜன இசையின் தவிர்க்க முடியாத ஆளுமையான PBS -ஐ பற்றி இந்த மொழிகளின் வெகுஜன கலை சார்ந்த இதழ்கள், ஊடகங்கள் சொல்லும் படியாக எதுவுமே பதிவு செய்ய முடியவில்லை என்பது எவ்வளவு துர்பாக்கியமானது. ---/

இவருடைய கட்டுரை மட்டும் தான் இதுவரைக்கும் வந்திருக்கும் விரிவான கட்டுரை என்று ஷாஜி சொல்கிறார். எண்பதுகளின் இறுதிகளிலேயே PBS பாடுவதை நிறுத்திவிட்டார். (அல்லது அவருக்கான வாய்ப்பு அதற்குப் பின் மங்கி இருக்கிறது.) அதற்கு முன்பு வெளியான இதழ்களில் (கல்கி, விகடன், அமுதசுரபி) போன்ற இதழ்களில் அவரைப் பற்றிய விரிவான கட்டுரைகளும் நேர்முகங்களும் வந்திருக்க வாய்பிருக்கிறது இல்லையா?

அந்த காலத்து சிற்றிதழ்களை விட்டு விடுங்கள். அந்த காலத்து சிற்றிதழ்கள் சினிமாவைச் சீண்டவில்லை. ஆகவே அதைப் பற்றி எழுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்பதிலும் ஞாயம் இல்லை. அப்படியே எழுதி இருப்பதாக வைத்துக் கொண்டாலும் – 2009 ஆண்டுகள் வரை ஜெமோ தான் ஷாஜியின் ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துக் கொடுக்கிறார். அதன் பிறகு ஷாஜியே தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டுவிட்டார். இடைப்பட்ட இந்த குறைந்த ஆண்டுகளில் அவர் கடந்த ஐம்பதாண்டுகள் வெளியான இதழ்களை எல்லாம் ஆராயந்துவிட்டுத் தான் – “தன்னுடைய கட்டுரை மட்டும்” தான் PBS பற்றி வந்திருக்கும் ஒரே பதிவு என்று கிளைம் செய்கிறாரா?

/-- நான்கு மொழிகளிலும் முன்னணிப் பாடகராக இருந்த PBS –க்குத் தனது வாழ்நாளில் சொல்லிக்கொள்ளும் படியான எந்தவொரு விருதுமே கிடைக்கவில்லை. பட்டங்களும் பதவிகளும் அவரைத் தேடி வரவில்லை. நாம் அவரைப் பெரிதாகக் கொண்டாடவில்லை. (ஆங்கிலப் பத்திரிக்கை ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டதாக வந்த செய்தியைக் குறிப்பிட்டு – அந்த இளம் பாடகர் தனது நண்பர் தான். அதே புத்தக வெளியீட்டில் அந்த இளம் பாடகர் தான் கஸல் கச்சேரி செய்தார் என்பதையும் ஷாஜி கட்டுரையில் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார்.) --/

இங்கும் கூட தன்னுடைய புத்தக வெளியீட்டைப் பற்றித் தான் சுற்றிச் சுற்றிப் பேசுகிறார்.

/-- PBS - பற்றின எனது கட்டுரையுடன் இணையத்தில் நான் போட்டிருக்கும் புகைப்படங்களைத் தான் உலகம் முழுவதுமுள்ள தொலைகாட்சி, இணைய, அச்சு ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டன. முன்சொன்ன உயிர்மை புத்தக வெளியீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அவை...--/

அய்யா ஷாஜி... தமிழில் உள்ள பெரும்பாலான இதழ்கள் கட்டண சேவையில் இயங்குபவை. அப்படி இருக்க... இலவசமாக எங்கெல்லாம் தேவையான ரிசோர்ஸ் கிடைக்கிறதோ அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது தானே இணைய தர்மம். அந்த ரீதியில் தான் உங்களுடைய வலைப் பூவில் பதிவேற்றியிருந்த புகைப்படங்களை மீடியா தோழர்கள் எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள். (விகடன், குமுதம், கல்கி – போன்ற இதழ்களில் PBS –ன் புகைப்படங்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் கட்டணம் செலுத்தி அவற்றை பெற்றிருக்க வேண்டும்.) மேலும் நூறாண்டுகளாகவா இணையம் இருக்கின்றது. கடந்த இருபதாண்டு காலமாகத் தானே. அதிலும் தமிழ் இதழ்கள் கடந்த பத்தாண்டு காலமாகத் தானே இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. இவ்வளவு ஏன் உயிர்மை தளத்திற்குச் சென்று பாருங்கள். கடந்த நவம்பர் 2012 கழித்து வெளிவந்த இதழ்களை கட்டணம் கட்டித் தான் படிக்க முடியும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரைகள் வெளியாகும் இதழே இணையத்தில் கட்டணச் சேவையிலும், எளிதில் தகவல்களை எடுக்க முடியாத வகைத் தன்மையிலும் இருக்கும் பொழுது - மற்ற வெகுஜன இதழ்களையும், ஊடகங்களையும் குறைபட்டுக் கொண்டு என்ன பயன்? மேலும் தேடு பொறியில் பாடகர் PBS பற்றி தேடிய பொழுது உங்களுடைய வலைப்பூவை கூகுள் முன்னணியில் வரிசைப் படுத்தி இருக்கும். ஆகவே அதனை மீடியா நண்பர்கள் பயன்படுத்தி இருக்கலாம். அப்படி இருக்கையில் அஞ்சலிக் கட்டுரையில் கூடவா சுயா விளம்பரம் தேடிக்கொள்வது என்ற இங்கிதம் வேண்டாமா உங்களுக்கு!? இது போன்ற கட்டுரைகளை வாசிக்கும் பொழுது வருத்தத்தை விட அருவருப்பு தான் மிஞ்சுகிறது ஷாஜி.

உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. நிறையவே எழுதுங்கள். ஆனால் இந்தத் திமிர் தனம் வேண்டாமே ஷாஜி. அழுவலாம்... ஆனால் அழுவதின் மூலம் சுயவிளம்பரம் தேடக் கூடாது. ஆகவே கறயண்டா ஷாஜி கறயண்டா.

# உங்களுடைய வலைப்பூவில் இருந்த புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வேண்டுமென்றே தான் உங்களுக்கான மரியாதையைச் செலுத்துகிறேன். நன்றி ஷாஜி. 

No comments:

Post a Comment