Sunday, May 5, 2013

சோக கீதத்தின் பின்னணி

அவருக்கு படபடப்பாகத் தான் இருந்திருக்க வேண்டும். கூடவே அடிவயிற்றில் ஏதோ பிசைவது போலவும் இருந்திருக்க வேண்டும். சினிமா என்பது செண்டிமெண்ட் பார்க்கும் உலகம். முதல் நாள் படப் பூஜையின் போது ஏதேனும் அபசகுனத்தை அல்லது தடங்கலை உணர நேர்ந்தால் தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதை நிறுத்தி விடுவார்கள். இன்றளவிலும் கூட இதுதான் நிலைமை. ஏவிஎம் ரெகார்டிங் தியேட்டரில் பாடல் பதிவுடன் தனது முதல் பட பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் காரைக்குடி நாராயணன். அன்றைய தினம் பார்த்து ரெகார்டிங் இயந்திரத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே பாடல் பதிவை மேற்கொள்ள முடியாத சூழல். இது தெரிந்தால் தயாரிப்பாளர் “என்ன முடிவை எடுப்பாரோ!?” என்ற தயக்கம் காரைக்குடி நாராயணனுக்கு. இத்தனைக்கும் அந்த நேரத்தில் பிரபல வசனகர்த்தாவாக வளம் வந்தவர் தான் அவர்.


இளையராஜா தான் இந்தப் படத்திற்கு இசை இயக்குனர் என்று முடிவு செய்திருக்கிறார்கள். நான்கு படங்களுக்கு மட்டுமே மேஸ்ட்ரோ இசையமைத்திருந்த காலம் அது. அந்த வகையில் இசைஞானியும் புதியவர் தான். எனினும் காரைக்குடி நாராயணன் ராஜாவிடம் ஓடுகிறார்.

“என்ன செய்யறது ராஜா? இப்படி ஆயிடுச்சே? சரிப்பட்டு வராது போல...!” என்று நீட்டி முழகியிருக்கிறார்.

“பயப்படாதீங்க அண்ணே...! உங்கள அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்...” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், பிரசாத் லேபிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களிடம் பேசி - மதியம் இரண்டு மணி முதல் தொடர்ந்து ஆறுமணி நேரத்தில் இரண்டு பாடல்களை – காரைக்குடி நாராயணனின் முதல் படமான “அச்சாணி” என்ற படத்திற்கு கம்போஸ் செய்துக் கொடுத்திருக்கிறார் மேஸ்ட்ரோ.

இந்தப் படத்தின் பாடல் பதிவின் போது இன்னுமொரு சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. தினத்தந்தியில் இளையராஜாவே அதனை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.


இரண்டு பாடல்களில் ஒரு பாடலை ஜானகி பாட ரெக்கார்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இயக்குனரோ கலவரத்தில் இருக்கிறார். வாத்தியக் கலைஞர்கள் வாசித்துக் கொண்டிருக்க... ஜானகியும் கொடுக்கப்பட்ட மெட்டில், கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை கவனத்துடன் பாடிக் கொண்டிருக்கிறார். திடீரென வாத்தியக் கலைஞர்கள் வாசிப்பதை நிறுத்தி இருக்கிறார்கள். இளையராஜாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே படத்தின் இயக்குனர் காரைக்குடி நாராயணன் டென்ஷனில் இருக்கிறார். அவருக்கு சீக்கிரம் பாடலை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம். அப்படி இருக்க ரெக்கார்டிங் தடைப்பட்டு எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். மேஸ்ட்ரோ கோவத்துடன் வெளியில் வந்து விசாரித்திருக்கிறார்:

“என்ன பிரச்சன..? ஏன் ரெகார்டிங்-அ ஸ்டாப் பண்ணிட்டிங்க...?”

அதற்குள் சுதாரித்து கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டு ஜானகி சொல்லி இருக்கிறார்:

“சாரி ராஜா... இந்த வரிகளும் பாடலும் பாவமும் மனச பாரமாக்குது... அதான் பாட முடியாமல் அழுதுட்டேன்...”

“ஓ... சரி சரி... ரிலக்ஸ் பண்ணிட்டு சீக்கிரம் பாடிடுங்க...” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்துகிறார் ராஜா. அந்தப் பாடல் தான் அச்சாணி படத்தில் வரும் “மாதா உன் கோவிலில்.... மணி தீபம் ஏற்றினேன்...”

நேற்றைய தினம் தூக்கம் வரவில்லை என ரேடியோவை முடுக்கினேன். அதில் காரைக்குடி நாராயணன் மேற்கூறிய சம்பவத்தை சிரித்துக் கொண்டே நேயர்களுடன் பகிர்ந்துகொண்டார். பாடலைக் கேட்கும் பொழுது ஜானகி தாங்க முடியாமல் அழுத வரிகள் வருகிறதா என்று காத்துக் கொண்டிருந்தேன். அந்த வரிகள் இவைதான்:

பிள்ளை பெறாத பெண்மை தாயானது – (2)
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை...
நான் என்ன சொல்வது – மாதா


இந்தப் பாடல் ஒலிக்காத மாதா கோவில்களே இல்லை என்று சொல்லலாம். எவ்வளவு பிரம்மாதமான பாடல். ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு அனுசரணையாக அன்புடன் வேலை செய்திருக்கின்றனர். பணத்திற்காக, புகழுக்காக, இத்தியாதி வசதிகளுக்காகவே ஒரு வேலையைச் செய்கிறோம் என்றாலும்... இது போன்ற பிணைப்புகள் தான் வாழ்வை அர்த்த பூர்வமாக்குகின்றன. அழகாக்குகின்றன...!

இளையராஜா - ஐ லவ் யூ டா செல்லம்... உன்னை எதுக்கு எல்லாரும் கர்வம் புடிச்சவன்னு சொல்றாங்க. உன்ன பத்தி முழுசா தெரிஞ்சிக்கல அதான்.

No comments:

Post a Comment