Monday, May 6, 2013

பரதேசி – பாலாவின் கள்ளத்தனம்

பாலாவின் பரதேசி திரைப்படம் வெளிவந்திருந்த சமயம் முகநூலில் பகிர்ந்து முன்னெடுத்த கருத்துக்கள் தான் இவை. 
பரதேசிகளின் திருவோட்டை பண்பட்டவர்கள் சொந்தம் கொண்டாடலாமா? 

ஒரு நாவலை திரைப்படமாக எடுக்கும் பொழுது, கதையின் போக்கை திரைக்கதையில் வடிக்க – மூலக் கதையைச் சிதைத்து, இருப்பதை விலக்கிவிட்டு, இல்லாததைச் சேர்த்து ஒரு காம்போவாகத் தான் வார்த்தெடுக்க இயலும்.

“முள்ளும் மலரும்” – உமா சந்திரனின் கதை (Written By). எனவே ‘திரைக்கதை, வசனம், இயக்கத்தில்’ மட்டுமே மகேந்திரன் தனது பெயரைப் போடுகிறார். (நாவலின் முடிவு வேறு, சினிமாவின் முடிவு வேறு என்பது தீவிர வாசகர்கள் அறிந்த ஒன்று தான்...)

இப்பொழுதுள்ள சினிமா டைரக்டர்கள் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு படமாக்கும் பொழுது, கதைக்கான கிரிடிட்டை எழுத்தாளனுக்குத் தருவதில்லை என்பது வருத்தமான விஷயம். “*************** என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது (Based On)” என்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இது எந்த விதத்தில் ஞாயம் என்பது எனக்குப் புரியவில்லை.

எழுத்தாளர்கள் இங்கு தான் நுட்பமாக வஞ்சிக்கப் படுகிறார்கள். ஏமாளிகளாக நிற்க வைக்கப் படுகிறார்கள். (விக்கிப்பீடியாவில் தேடிப்பாருங்கள்: “நான் கடவுள், அரவான், அழகர்சாமியின் குதிரை, பரதேசி” வரை இந்த அழுச்சாட்டியம் நீளும். விக்கிப்பீடியாவில் அணில் சேவை செய்யும் பலரும் மூளையைக் கழட்டி ஹாங்கரில் மாட்டிவிடுவார்கள் போல... அவ்வளவு தவறான தகவல்களை வலையேற்றுகிறார்கள்.)

Written By – ல் டைரக்டர்கள் ஏன் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இது அநியாயம் இல்லையா? மூத்தப் படைப்பாளி மகேந்திரனுக்கு இருக்கும் கண்ணியம் இவர்களிடம் ஏன் இருப்பதில்லை? ஏப்பா....! நீங்க ScreenPlay, Dialogue, Direction இதிலெல்லாம் உங்களின் பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள். ஒருவரும் கேட்கப்போவதில்லை. கதையும், எழுத்தும் (Written & Story) அவர்களுடையது ஐயா!

எரியும் பனிக்காடு டேனியல் எழுதிய ஆங்கில நாவல். இரா. முருகவேல் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பது உலகறிந்த விஷயம். கதையின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றுவதின் மூலம் மட்டுமே தழுவல் என்றாகிவிடுமா? நாவலின் ஆதாரச் சாரம் மசாலா தடவி திரைப்படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களே பரதேசி படத்தை தியேட்டருக்குச் சென்று பாருங்கள். அதுதான் சினிமா கலைஞர்களுக்குச் செய்யும் ஞாயம். ஆனால் டைட்டில் கார்டில் “கதை, திரைக்கதை, வசனம்” என்று பட்டியலிட்டு பாலா தன்னுடைய பெயரைப் போட்டுக்கொண்டால், “கதை உங்களுடையதா பாலா?” என்று தவறாமல் கேள்வி எழுப்புங்கள். அது எழுத்தாளர்களுக்குச் செய்யும் ஞாயம்!

ஆடை வடிவமைப்பு குறித்து:


பரதேசி நாயகன் அதர்வாவின் நடிப்பு அருமை. ஆனால் அவருடைய காஸ்டியூம் சற்றே மலங்க வைக்கிறது. ஊரிலுள்ள எல்லோரும் மேல் சட்டையில்லாமல் இருக்க, அல்லது கதர் சட்டை அணிந்திருக்க – இவர் மட்டும் சாக்குப் பையை போன்ற உடையை எப்படி அணிந்திருக்கிறார்? 1939 – சுதந்திரத்திற்கு முன்பான ஆண்டுகள் இல்லையா? இதுபோன்ற ஆடைகளை ஆங்கிலேயர்கள் கூட அணிந்திருப்பார்களா என்பது சற்றே விவாதிக்க வேண்டிய விஷயம் தான்.

நீலகிரி மலையின் குளிர்ச்சியான பிரதேசத்தில் இந்த சாக்குப் பை ஆடையை நாயகன் அணிந்து கொள்கிறார் சரி. வெக்கையைக் கிளம்பும் செம்பன் புழக்கத்தில் கூடவா அந்த சாக்குப்பை உடையை அணிய வேண்டும்? # Paradesi Doubt (பின்னர் இந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பிற்கு தேசிய விருது அறிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதனடிப்படையில் இந்த விருது கொடுக்கப்பட்டது என்று விளக்கினார்கள் எனில் தன்யனாவோம்.)

போஸ்டர் சார்ந்த அவதானிப்பு:


சினிமா போஸ்டரின் வடிவத்திற்கு ஏற்ப முடிந்த மட்டும் முக்கியமான டெக்னீஷியன்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். விதவிதமான வடிவங்களில் போஸ்டர் உலவ விடப்படுதலும் சினிமா வியாபாரத்தில் அங்கம் தான்.

இயக்குனர், கேமரா மென், எடிட்டர், சண்டைப்பயிற்சி இயக்குனர், இசை அமைப்பாளர் போன்றவர்களது பெயர்கள் இருக்கும். அவசியம் எனில் திரைக்கதை மற்றும் வசனத்தில் பங்கு பெற்றவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பாலாவின் கடந்த திரைப்படங்களான நான் கடவுள் மற்றும் அவன் இவன் போன்ற படங்களையே கூட இதற்கு உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். வசனம் சார்ந்து ஜெயமோகன் மற்றும் எஸ் ராமகிருஷ்ணனின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் பரதேசியின் போஸ்டர்களில் இதுவரை நான் பார்த்ததில் நாஞ்சில் நாடனின் பெயரை எங்கும் காண இயலவில்லை. மூத்த படைப்பாளியின் சினிமா வருகையை ஆர்பரித்துக் கொண்டாட வேண்டியதில்லை! மற்றவர்களுக்குக் கொடுக்கும் இடத்தை நடனுக்கும் கொடுக்கலாமே என்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது!?

ஓரிரு பாடலை எழுதிய வைரமுத்துவுக்கு இடமிருக்கிறது! ஆனால் தனது சிறுகதையும் வசன பங்களிப்பையும் செய்த நாஞ்சில் நாடனுக்கு......!?

தொடர்ந்து வெளிவரும் தின இதழ்களில் பரதேசி படத்தின் விளம்பரங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது எந்த வடிவத்தில் அமைந்த விளம்பரமாக இருந்தாலும் சரி... நாஞ்சில் நாடனின் பெயரை கிஞ்சித்தும் காண முடியவில்லை.

இதுதான் சினிமா உலகம் போல....!

2 comments:

  1. முக்கியமான பதிவு

    ReplyDelete
  2. நன்றி கரிகாலன்....

    நிறைய - பிரபல தமிழ் பட இயக்குனர்கள் இதுபோலச் செய்திருக்கிறார்கள் போல.. பட்டியலை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். ஆதாரம் கிடைத்தால் அவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றிருக்கிறேன்.

    ReplyDelete