Saturday, March 2, 2013

நகல் மனிதர்களின் முக ஒற்றுமை

எல்லோருக்கும் இது நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்குப் பல முறை நிகழ்ந்திருக்கிறது. சிலர் உற்றுப் பார்ப்பார்கள். நானும் அவர்களையே பார்ப்பேன். பின்னர் கடந்து சென்றுவிடுவார்கள்.

சிலர் மட்டும் நெருங்கி வந்து கேட்பார்கள்:

“ஏனுங்க நீங்க கோயந்த்தூருங்களா?”

“இல்லியே...!” என்பேன். அவர்களுக்குத் தெரிந்த யாரேனும் ஒருவரது பெயரைச் சொல்லி “நீங்க அவரோன்னு நெனச்சேன்... சாரி...” என்பார்கள். போலவே, “நீங்க ராம்னாட்டா? நீங்க மதுரை தானே? உங்களுக்கு கடலூர் பக்கம் தானே சொந்த ஊரு?” என்று பலரும் கேட்டிருக்கிறார்கள். அந்த சமயங்களிலெல்லாம் எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்.

“மச்சான் உன்னைய போலவே ஒருத்தன அத்திப்பட்டு ஸ்டேஷன்ல பார்த்தேண்டா” என பொன்னேரியில் வசிக்கும் சில நண்பர்கள் கூட சொல்லியதுண்டு. “சச்சின், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்” போன்ற பல பிரபலங்களுடைய நகல் மனிதர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனக்கும் கூட எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்புவும் ஒரே ஜாடையில் இருப்பது போல சில நேரங்களில் தோன்றும். பாஸ்கரிடம் கூட ஒருமுறை சொல்லி இருக்கிறேன். “அப்படி எதுவும் இல்லியே கிபி” என்று தான் அவர் கூறினார்.

இணையத்தில் உலாவும் பொழுது சில நண்பர்களுடைய முக ஒற்றுமைகளை ஒப்பிட்டுப் பார்த்து ஆட்சர்யப்பட்டிருக்கிறேன். அவற்றில் சில:

1. முகநூல் தோழர் சரவண வீரையா & உடன் வேலை செய்த நண்பர் இன்பராஜ் (
இந்த ஒரு புகைப்படத்தில் மட்டுமே இருவரும் ஆச்சில் வார்த்தது போல இருக்கிறார்கள்.)

2. எனது செல்லப் பிள்ளைகளில் ஒன்றான ஜகந்த் & எழுத்தாளர் தமிழ்மகனின் செல்லப் புதல்வர் மாக்சிம். (ஆண்கள் பெண்கள் – புத்தக வெளியீட்டில் தமிழ் மகனிடம் இந்த ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினேன். “ஆமாம் பிரபு... ரெண்டுபேரும் ஒரே மாதிரி தான் இருக்கானுங்க” என்றார்.)


3. ஆந்திர அரசியல் தலைவர் ஜனார்த்தன ரெட்டியும், ஜேகே குரூப்ஸ் நிறுவனரும், ஜேகே ஃபவுண்டேஷன் மூலம் விழுப்புரம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்பவருமான ஜெயகிருஷ்ணன். 


4மயின்ட் ஃப்ரெஷின் நல விரும்பிகளில் ஒருவரான பள்ளி ஆசிரியர் கீர்த்தி & எழுத்தாளர் அரவிந்தனின் (நம்ம சென்னை) துணைவியார் ஸ்ரீதேவி (பாடகி)



5. இந்த ஆங்கிலப் பாடகன் யாரென்று தெரியவில்லை. ஆனால் சாதுவின் நண்பன் லோகேஷ் போலவே இருக்கிறார்.



இதெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. யாரென்றே தெரியாத, பயணத்தில் கடந்து செல்லும் மனிதர்களின் முகங்களில் - நெருக்கமான நண்பர்களின் ஒற்றுமையைக் காண்கிறேன். போலவே நானும் யார் யாருக்கெல்லாமோ தெரிந்தவன் போல இருக்கிறேன். என்னிடம் நான்கு முகக் கண்ணாடிகள் இருக்கின்றன. அவற்றை விரும்பியபடி மாற்றி மாற்றி அணிந்துகொள்வேன். அணியும் கண்ணாடிகள் கூட கடந்து செல்பவர்களின் மனதுக்கு நெருக்கமானவனாக என்னை நிறுத்தி விடுகிறது போல. “எது எப்படியோ? வம்பு தும்பில் மாட்டாமல் இருந்தால் சரி!” என்றுதான் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: நண்பர்களின் புகைப்படங்களையும், பெயர்களையும் – அனுமதி பெறாமல் பயன்படுத்தி இருக்கிறேன். அவர்கள் என்னை மன்னித்து, ஆசிர்வதித்து  அருள் பாளிப்பார்கலாக! 

நன்றி...

1 comment: