Wednesday, April 29, 2015

தேர்வு – மேல் படிப்பு

பன்னிரண்டாவது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் - பரிச்சை எழுதி விட்டு – தேர்ச்சிக்காகக் காத்திருக்கும் ஒரு மாணவர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். செல்பேசியிலும் அவரிடம் பேச நேர்ந்தது.

“சார், என்ஜினியரிங் படிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. எதாச்சும் ஆர்ட்ஸ் குரூப்பில் சேரலாம் என்றிருக்கிறேன்” என்றார்.

அது சரி... என்ன மாதிரியான ஸ்டூடன்ட். இவருடைய கெப்பேசிட்டி என்ன? என்று தெரிந்துகொள்ள – “ஸ்கூல்ல கடைசியா நடந்த எக்ஸ்ஸாம்ல எவ்வளோ மார்க் எடுத்து இருந்த?” என்றேன்.

“1075” என்றார்.

“சரி... பப்ளிக் எக்ஸ்சாம்ல எவ்வளோ எடுப்ப” என்று கேட்டேன்.

“1150க்கு மேல எதிர் பாக்குறேன்” என்றார்.

“தமிழ் or இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிச்சா என்ன ஸ்கோப் இருக்கும்” என்று கேட்கிறார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் மொழியை ஒழுங்காகப் படித்து, கணினி அறிவும் நிரம்பப் பெற்றிருந்தால் – ஆயிரம் ஆராய்ச்சிகள் செய்ய – வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. சரியான நபர்கள் இல்லாததால் சென்னை பல்கலைக் கழகத்தின் “தமிழ் கணினித் துறை”-யில் ஆட்கள் சேர்க்கப் படுவதில்லை. இந்த பாடப் பிரிவிற்கு சரியான வழிமுறை இல்லாததால் தமிழ் கம்ப்யூட்டிங் லிங்விஸ்டிக்ஸ் துறை நாதியற்று இருக்கிறது.

தமிழை முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்க அதிக மதிப்பெண் பெரும் மாணவர் யாரேனும் முன் வருவார்களா என்ன? அப்படியே மாணவர் முன்வந்தாலும் பெற்றோர்கள் அனுமதிப்பார்களா என்ன? அப்படியே பெற்றோர்கள் பிள்ளையின் சொற்படி சேர்க்க நினைத்தாலும் சுற்றத்தார் சும்மா இருப்பார்களா என்ன?

“தமிழ் படிச்சா எங்க சார் வேல கெடைக்கப் போகுது?” என்பார்கள். (இந்த காலத்துல எந்த சப்ஜெக் படிச்சாதான் – படிப்புக்கேத்த வேலை கெடைக்குது.) கூகுள், யாகூ, சிஃபி போன்ற பன்னாட்டு இணைய சேவையை வழங்கும் நிறுவனங்களில் மொழி வல்லுனர்கள் நிச்சயம் தேவைப்படுகிறார்கள். கணினி அறிவும், மொழி சார்ந்த அறிவும் நிரம்பப் பெற்றிருந்தால் – தமிழ் படித்தவர்களுக்கு இதுபோன்ற நிறுவனங்களில் நிச்சயம் வேலை உண்டு. கூடவே ஜப்பனீஸ், சைனீஸ், கொரியன், ஜெர்மன், ப்ரெஞ் என ஏதேனும் ஒரு பன்னாட்டு மொழியைக் கற்றிருந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். மின்னிதழ்களில் முனைவர் பட்டம் பெற்ற அண்ணா கண்ணன் சிஃபி, யாகூ போன்ற நிறுவனங்களில் வேலை செய்தவர் தானே. மின்னிதழ் சார்ந்த முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டவருக்கே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது எனில், “கம்ப்யூட்டிங் லிங்விஸ்டிக்ஸ்” பிரிவுக்கு வாய்ப்புகள் இல்லாமலா இருக்கும்.

இந்த பாடப் பிரிவைத் தனித் துறையாக அரசு கல்லூரிகளில் துவங்கினால் அதில் அர்த்தம் இருக்காது. தமிழ்த் துறையைப் பொருத்தவரை வடிகட்டியதிலும் வடிகட்டிய சராசரிக்குக் கீழுள்ள மாணவர்கள் தான் சேர வருகிறார்கள். இதனை விடக் கொடுமை வேறெதுவும் இல்லை. முதுகலை தமிழ் படிக்க - கம்ப்யூட்டர் என்ஜினியரிங் பிரிவிலும், இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், கப்யூட்டார் அப்ளிகேஷன்ஸ் பிரிவிலும் படித்தவர்களுக்கு – ஒரு கோட்டாவை வழங்கலாம். நான் சேர்ந்துள்ள அரசு கல்லூரியில் விஜயன் என்றொரு தோழர் படித்தார். எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, தமிழ் முதுகலை படிக்க வந்திருந்தார். அவரும் ஆர்வத்துடன் தான் வந்திருந்தார். இடையிடையே அரசுப் பணிகளுக்கான தேர்வினை அடிக்கடி எழுதக் கூடியவர் அவர். கடந்த வாரத்தில் இந்திய அஞ்சல் துறைக்கான தேர்வில் வெற்றி பெற்றதால் – மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். இதுபோல எல்லோரும் ஆர்வத்துடன் வருவார்கள் என்று சொல்லுவதற்கு இல்லையே. ஒருசிலர் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தமிழ் முக்கியப் பாடம் என்பதாலும் சேர்ந்து படிக்க வருகிறார்கள். சிலர் அரசு பள்ளிகளில் ஆசிரியப் பணியைப் பெறுவதற்கும் படிக்க வருகிறார்கள். ஆர்வத்துடனும், அடுத்தகட்ட ஆராய்ச்சி நோக்கிலும் படிக்க வருபவர்கள் மிகக் குறைவு தானே.

கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் பாடப் பிரிவுகளை விருப்பப் பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் கணினித் துறையில் செய்வதற்கு நிறையவே இருக்கிறது. தமிழ் துறை சார்ந்து ஆராய்ச்சிகள் செய்வதற்கு இவர்களிடம் நிறையவே விஷயங்கள் இருக்கும். ஆனால், நுட்பமான அரதப் பழசான விதிமுறைகள் இதற்கெல்லாம் குறுக்கே நின்றுவிடும். தமிழ் முதுகலைக்கு விண்ணப்பிக்கச் சென்றிருந்த போது, BCA படித்த (கம்யூனிஸ்ட் தோழர்) ராஜ்கமலையும் தமிழ் முதுகலைக்கு விண்ணப்பிக்குமாறு உடன் அழைத்துச் சென்றிருந்தேன். என் சொற்படி அவரும் விண்ணப்பித்திருந்தார். ஆனால், “BCA படித்தவர்கள் தமிழ் துறையில் சேர்த்துக்கொள்ளப் படுவதற்கு விதிமுறைகளில் அனுமதி இல்லை” என்றார்கள்.

மத்திய மொழிகளுக்கான நிறுவனம் இது போன்ற ஆய்வுகளுக்காகப் பற்பல கோடி ரூபாய்களை ஆராய்ச்சிக்காக ஒதுக்குகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்வரும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் தேசிய மொழிகள் எல்லாவறையும் கணினி சார்ந்து எழுத்துருவாக்கம் செய்யவும், அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி ஆராய்ச்சி செய்யவும் கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கீடு செய்கிறது. இந்தப் பணமும், ஆராய்ச்சியும் என்ன ஆகிறது என்றே தெரியவில்லை. செய்யக் கூடிய ஆராய்ச்சியும் தரமானவையா என்பதும் நமக்குத் தெரிய வருவதில்லை.

வேலை வாய்ப்பையும், அதன் பின்னாலுள்ள அரசியலையும் மட்டுமே கருத்தில் கொள்ளும் விதிமுறைகள் – துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில் விதிமுறைகளை ஏன் தளர்த்திக் கொள்ளக் கூடாது. மத்திய மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் படித்தவர்கள் செய்வதற்கு நிறையவே இருக்கிறது. அது போன்ற வாய்ப்புகள் எல்லாம் ஒரு வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேற்கூறிய மத்திய மொழி நிறுவனத்தின் மானியம் அதற்கு உதாரணம். அரதப் பழசான தேவையற்ற விதிமுறைகளைத் தளர்த்தும் போது அல்லது ஒரு கோட்டாவை வழங்கி சயின்ஸ் பிரிவில் உள்ள மாணவர்களைத் தமிழ் படிக்க ஊக்குவிக்கும் பொழுது – செயலூக்கம் பெறக்கூடிய வகையில் ஆய்வுகளும் – மொழி சார்ந்த வளர்ச்சியும் தொழில்நுட்பம் சார்ந்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஐ.ஐ.டி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத் துறையுடன் “கம்ப்யூட்டர் லிங்விஸ்டிக்ஸ்” துறை உடன் சேர்ந்து உப துறையாகச் செயல்படுகிறது. சென்னை பல்கலைக் கழகத்தின் கணினி தமிழ்த் துறையே கவனிப்பாரற்றுக் கிடக்க, அரசு கல்லூரிகளில் நமக்கு ஒரு பாடமாக சடங்கிற்கு மட்டுமே இருப்பதை குற்றமாகச் சொல்லிவிட முடியாது.

தமிழ்த் துறை பேராசிரியராக வருவதற்கும் இளங்கலையில் தமிழ் படித்திருக்க வேண்டும் என்கிறார்கள். தமிழ் கணினி பாடத்தைத் தமிழ் பேராசிரியர் தான் முதுகலை மாணவர்களுக்கு எடுக்கிறார். ஒப்புக்கு ஏதோ எடுக்கிறோம் என்ற வகையில் தான் எடுக்கிறார். ஒண்ணு, கணினித் துறை பேராசிரியரை இந்த பாடத்திற்கு அனுப்ப வேண்டும். இல்லையேல், தமிழ்த்துறையிலேயே கணினி சார்ந்த இளங்கலை படித்தவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். சென்னைப் பல்கலையில் தமிழ்க் கணினி துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களும், போஸ்ட் டாக்டரேட் செய்தவர்களும் கூட வேலை வாய்ப்பின்றிதான் இருகிறார்கள். எல்லா மொழியுமே கம்ப்யூட்டர், மொபைல் என்று பயன்படுத்தும் வசதிக்கு வந்திருக்கிறது. அரசாங்கமும் கணினி பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. அதற்கேற்ப துறைகளும் மாறிக்கொண்டு வர வேண்டாமா?

கம்ப்யூட்டர் பிரிவில் படித்த – நன்றாகப் படிக்கக் கூடிய ஒரு மாணவர் தமிழ் படிக்க ஆர்வத்துடன் முன் வருகிறார். கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இது போன்றவர்களுக்குப் போதிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பது ஒரு வகையில் சாபம். மாணவருக்கு அல்ல. தமிழுக்கு. இந்த சாபம் நீடிக்கும் வரையில் – கவிஞர் வைரமுத்துவின் மகன் – செல்பேசியில் பயன்படுத்துமாறு புதிய எழுத்துருவை வடிவமைத்திருக்கிறார் போன்ற செய்திகள் நமக்கு மலைப்பாகத் தான் தோன்றும். அந்த மலைப்பிலேயே நம் தினவை நாம் தீர்த்துக் கொள்ள வேண்டியது தன்.

கடந்த வருடம் 1 லட்சத்தி 30 ஆயிரம் என்ஜினியரிங் மாணவர்கள் – அரசு உறுதியளித்திருந்த படி உதவித்தொகை அளிக்காததால் – பருவத் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சிக்கல் ஏற்பட்டது என்று செய்தியை 1 மாதத்திற்கு முந்திய நாளிதழில் காணக் கிடைத்தது. இவர்களில் முக்கால்வாசிப் பேர் தலித்துகள். குறைந்த சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைப் சேர்ந்த மாணவர்களும் இருக்கிறார்கள்.

நண்பர் பெ. முருகன் தன்னுடைய பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளைத் தவிர்த்து தமிழினை விருப்பப் பாடமாக எடுத்தவர். முருகன் பெற்றிருந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு “தமிழ் பிரிவில் உன்னை சேர்த்துக் கொள்ளவே மாட்டேன். சயின்ஸ் பிரிவில் நீ என்ன கேக்குறையோ அந்த பிரிவில் சீட் கொடுக்கிறேன். உனக்கு ஒரு மாசம் டைம் கொடுக்கறேன். அதுக்குள்ளே யோசிச்சி நல்ல முடிவ எடு.” என்று அவரது கல்லூரி முதல்வர் சொல்லியிருக்கிறார். பெருமாள்முருகன் தமிழினை விருப்பப் பாடமாக எடுத்திருக்கிறார். விளக்கு விருது ஏற்றுக்கொண்ட விழாவில் அவர் இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். இப்படி ஆர்வத்துடன் தமிழ் சார்ந்து இயங்க வந்தவர் பெருமாள்முருகன். படைப்பு, ஆய்வு என பங்காற்றியவரை “இனி எழுதமாட்டேன்...” என்று அவரிடம் ஓர் அரசு அலுவலர் முன்னிலையில் கையெழுத்திட வைத்திருக்கிறார்கள்.

சலபதி என்று நண்பர்கள் வட்டத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ‘ஆ.ரா. வெங்கடாசலபதி’ – சமூக வரலாற்று ஆய்வாளர்களில் மிக முக்கியமானவர். தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழ் எல்லைக்கு வெளியிலும் மரியாதையுடன் கவனிக்கப்படும் ஆய்வாளர்களில் ஒருவர். இளங்கலையில் B.Com பாடத்தைத் தேர்வு செய்தவர் என்று நினைக்கிறன். மறைமலை அடிகளார் நூலகத்தில் பகுதி நேர வேலை செய்துகொண்டே முதுகலையைத் தொலைதூர வகுப்பில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்து வரலாற்றுத் துறையில் சேர்ந்து படித்தார். JNU-வில் தமிழ் பதிப்புகள் சார்ந்து முனைவர் பட்ட ஆராய்ச்சியை செய்தார். இப்பொழுது வரலாற்றுத் துறை பேராசிரியராக இருக்கிறார்.

“வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் பலரும் வரலாறு என்றால் என்னவென்றே தெரியாமல் இருகிறார்கள்” என்று தான் பேசும் மேடைகளில் சலபதி பகிரங்கமாகவே குற்றம் சாட்டும்பொழுது, ‘இந்த ஆணவம் சலபதிக்கு இருக்கக் கூடாது’ என்கிறார்கள். ஏன் இறுகக் கூடாது? திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருப்பதில் என்ன தவறிருக்கிறது?

பெருமாள்முருகன் போல, சலபதி போல ஆர்வத்துடன் பாடங்களைத் தேர்ந்தெடுக்க ஒருசில மாணவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். எனினும் பெரும்பாலான மாணவர்கள் “இலக்கியம், வரலாறு, மண்ணியல், விலங்கியல், தாவரவியல், தத்துவம், உளவியல்” என பல்வேறு பிரிவுகளில் நல்ல மதிப்பெண் பெறுபவர்கள் கவனம் செலுத்துவதே இல்லை. இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் வரலாற்றுத் துறையை எடுத்துப் படித்தால் “பணக்கார ஊட்டுப் புள்ள படிக்குது” என்கிறோம். ஆர்வத்துடன் படித்தால் யார் வேண்டுமெனிலும் படிக்கலாம். அதற்குத் தேவை தைரியம். அந்த தைரியம் பைத்தியக்காரத் தனமாகவும், திமிர் தனமாகவும் எல்லோருக்கும் படலம். உண்மையில் அது உள்ளுணர்வு.

“தமிழ் or இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிச்சா என்ன மாதிரி ஸ்கோப் இருக்கும்?” என்று கேட்ட நண்பருக்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சொல்லுவதைச் சொல்லிவிடுவோம். மற்றவற்றை அவரது உள்ளுணர்வே தீர்மானிக்கட்டும்.


1 comment:

  1. கடைசி வரிதான் உண்மையான தீர்வாக இருக்க முடியும். கொஞ்சம் யோசிக்கவைத்த பதிவு என்பது ஐயமில்லை. தெளிவாக பதியப்பட்டிருக்கிறது.

    - அருள் மணிவண்ணன்.

    ReplyDelete