Sunday, April 12, 2015

ஓவியராய் நடிகராய் சிவக்குமார்


சிலபல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை டேக் சென்டரில் இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டார்கள். நடிகர் சிவக்குமார் தான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார். முதன் முதலாக அங்கு தான் அவரை நேரில் கண்டேன். முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட அவர் இபா-வின் கைகளில் ஐநூறு ரூபாய்த் தாளினைத் திணித்தார். இபா – பணத்தினைப் பெற்றுக்கொள்ள மறுத்தார். “புத்தகத்த சும்மா வாங்கிட்டு போகக் கூடாது...” என்று வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கொடுத்தார். வேறுவழியில்லாமல் ரூபாயைப் பெற்றுக்கொண்ட இபா, அதனை பக்கத்திலிருந்த கிழக்கு பதிப்பாளர் பதிரியிடம் கொடுத்தார். பின்னர் நாடகத்தில் பர்ஃபார்ம் செய்வது போல ஏற்ற இறக்கத்துடன் ஒலிப்பெருக்கியின் முன்பு சிவக்குமார் பேசினார். ‘உச்சி வெயில்’ நாவல் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டதையும், அது தொடர்பான சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார். இரண்டாவது முறையாக சாகித்ய அகாதமி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அவரைச் சந்தித்தேன். அந்நிகழ்விலும் வெளுத்து வாங்கினார். கேணி சந்திப்பிலும் ஏதேனும் சுவாரஸ்யத்தினை அள்ளி வீசுவார் என்ற எண்ணங்களுடன் தான் சென்றிருந்தேன். என்னுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. 

பொதுவாகவே கேணி சந்திப்பில் – ஏதாவதொரு தலைப்பை ஒட்டி சிறப்பு விருந்தினர் தனது அனுபவங்களைப் பேசுவார், அதைத் தொடர்ந்து கேள்வி-பதில் உரையாடல் பகுதி இடம்பெறும். மடைதிறந்த வெள்ளம் போலப் பேசக்கூடிய சிவக்குமார் நேரடியாகவே உரையாடல் பகுதியாக தனது சந்திப்பை அமைத்துக் கொண்டார். ஒருவகையில் அதுவும் நல்லதாகத் தான் போனது. ஓரிடத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டால் குறித்த நேரத்தில் வந்து சேர்வதில் சிவக்குமாரை மிஞ்சுவதற்கு ஆளில்லை என்பது சினிமா இன்டஸ்ட்ரியில் லீக்கான அரதப் பழசான விஷயம். எனினும் இதனைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை – 4.30 மணிக்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்விற்கு 4 மணிக்கெல்லாம் அவர் வந்து சேர்ந்துவிட்டார். சிவக்குமார் வந்து சேர்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு மூன்று சமையல் கலைஞர்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். சந்திப்பு துவங்குவதற்கு முன்பு வந்திருந்த எல்லோருக்கும் ஜாங்கிரி, போண்டா, டிகிரி காஃபி ஆகியவற்றை சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். வயிற்றை நிரப்பிக்கொண்டு தான் பேசுவதற்கு உட்கார்ந்தோம்.

ஞாநி சந்திப்பைத் துவக்கி வைத்தார். சிவக்குமாரின் பத்து நிமிட வீடியோ முதலில் ஒளிபரப்பப்பட்டது. அந்த அசையும் படத்தில் “ஓவியன், யோகா விரும்பி, நடிகன்” என்ற வரிசையில் அவருடைய ப்ரொஃபைல் அமைந்திருந்தது. ஓர் ஓவியனாக சிவக்குமார் திறமைசாலியாகத் தான் இருக்கிறார். காணக்கிடைத்த ஓவியங்கள் நுட்பமாகத் தான் வரையப்பட்டிருந்தன. அவர் கையால் வரைந்து ஞாநிக்கு ஏற்கனவே பரிசளித்த காந்தி ஓவியமும் நன்றாகவே இருந்தது. நடிகர் நாகேஷ், ஜெமினி கணேசன் ஆகியோரது ஓவியங்களும் தத்ரூபமாகவே இருந்தது. தத்துவமேதை ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து அப்படத்தில் அவரிடமே கையொப்பம் பெற்றிருக்கிறார். வேறுசில ஓவியங்கள் கூட வீடியோவில் காணக் கிடைத்தன.

ஓவியக் கல்லூரியில் மாணவனாய்ச் சேருவதற்கு வண்டியேறிய சிவக்குமார் எந்தப் புள்ளியில் நடிகனாக ஆசைப்பட்டிருப்பார் என்று தெரியவில்லை. ஒருவேளை சென்னையின் நெருக்கடியான வாழ்க்கையும் கூட அவரை மாற்றியிருக்கலாம். எது எப்படியோ...!? அறுபதாண்டு காலதிற்கும் மேலாக சினிமாத் துறையில் ‘எதிர் நீச்சல், உள் நீச்சல், மல்லாந்த நீச்சல், பக்கவாட்டு நீச்சல்’ என இருக்கும் எல்லா மோடிமஸ்தான் வித்தைகளையும் காண்பித்து உச்சத்திற்கு வந்திருக்கிறார். அந்த வகையில் அவரைப் பாராட்ட வேண்டும்.

வெள்ளந்தியாக கொங்குத் தமிழ் பேசிக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தவர் சாதாரணமாகத் திரையில் ஜொலித்திருக்க முடியுமா என்ன? எத்தனை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருப்பார். வாசகர் கேட்ட முதல் கேள்வி பெண்களைப் பற்றியதாக இருந்தது. இக்கேள்விக்குத் தான் சிறுவயதில் கடந்து வந்த ஏழ்மை நிலையை மறைக்காமல் பகிர்ந்துகொண்டார். இவர் பிறந்த போது அப்பா இறந்திருக்கிறார். உடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக மரணம் அடைந்திருக்கிறார்கள். கணவனை இழந்த நிலையிலும் சிவக்குமாரின் தாயார் தனது ஒரே மகனான இவரைப் பொறுப்புடன் வளர்த்திருக்கிறார். அவரது அன்னையின் முகம் ஓரிரு நிமிடங்கள் நினைவுக்கு வந்து சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறன். பேசிக்கொண்டே இருந்தபோது ஓரிடத்தில் தொண்டை அடைத்துக்கொண்டு கண்கள் கலங்கினார். உருவங்களையும் முகங்களையும் நினைவு கூர்வதில் ஓவியர்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியுமா என்ன? யானையின் ஞாபகத்தைத் தராசில் வைத்தால், ஓவியர்களின் ஞாபகம் கனமானதாகவே இருக்கும். மேலும், ஏழ்மையில் வெளிப்படும் தாயன்புக்கு நிகராக வேறெதைச் சொல்ல முடியும்?

ஆரம்பகால இந்திய தமிழ் சினிமாவும், நாடகச் சூழலும் இவருக்குத் தங்குதடையற்ற தமிழை வாரி வழங்கி இருக்கிறது. எப்பொழுதோ படித்த நாடக வசனங்களையும், கம்ப ராமாயணப் பாடல்களையும் தங்கு தடையின்றி எடுத்து விடுகிறார். பொத்தான் தட்டியதும் துடிப்புடன் இயங்கும் மெஷின் போலச் சரளமாக வரிகள் வந்துக் கொட்டுகின்றன. நாடக அனுபவங்களைப் பற்றி நிறையவே பேசினார். மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக் குழுவில் இவர் பிரதானமாக இருந்திருக்கிறார். இந்தியா முழுவதிலும் பயணம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களை இவர்கள் அரங்கேற்றி இருப்பார்கள் போல. கல்லூரிகளுக்குச் சென்று அரங்கேற்றிய நாடக அனுபவங்களையும் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்துகொண்டார்.

நாடகமானாலும் சரி, சினிமாவானாலும் சரி - சிவாஜி கணேசனை மானசீக குருவாக ஏற்றுகொண்டிருப்பார் போல. சிவாஜியை ரொம்பவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசினார். சிவாஜிக்கு நிகரான நடிகர்கள் இனி பிறக்கவே முடியாது என்றும் தனது பேச்சில் பதிவு செய்தார். “சிவாஜிக்குப் பிறகு வந்த சிறந்த நடிகர் என்று யாராவது ஒருவரைக் கூற முடியுமா?” என்று ஞாநி கேட்டபோது கூட, “மொத்தல்ல யாராச்சும் நல்லா நடிக்கட்டும். அப்புறமா சொல்றேன்” என்றார். மேலும் தொடர்ந்து “கமலஹாசனை சிவாஜிக்குப் பிறகு வந்த நல்ல நடிகர்களில் ஒருவராகக் கூறலாம். நிறைய மெனக்கெட்டு நடிக்கிராரு” என்றார். சிவாஜி நடித்த ஆரம்ப காலங்களில் சினிமா தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளரவில்லை. மேக்கப் துறை கூட அந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் சிவாஜி எந்த மாதிரி எல்லாம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்பதை ஒரு நடிகனாக என்னால் பூரணமாக உணர முடியும். குறைந்த பட்ச மேக்கப் வசதியில் சிவாஜி அதிகப்படியான சாத்தியங்களைச் செய்திருக்கிறார். நடிப்புக்காக சிவாஜி மெனக்கெட்டது அதிகம். அந்த வகையில் சிவாஜிக்கு நிகராக ஒருவரைக் கூற முடியாது என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்தார்.

சினிமாவைப் பொறுத்த வரையில் மலையாள நடிகர்களுக்கு நிகராகப் பங்களிப்பு செய்பவர்கள் தென்னிந்தியாவில் மிகக் குறைவு. மலையாள சினிமாவைப் பொருத்த வரை அந்தந்த காலங்களில், அந்தந்த தலைமுறையினர் வெளுத்து வாங்குவார்கள். இப்போது ஃபஹத் ஃபாஸில் பட்டையைக் கிளப்புகிறார்கள் அல்லவா? அதுபோல... பொம்மக்குட்டி அம்மாவுக்கு படத்தில் நடித்த திலீபுக்கு அந்த வருடத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கும் போல. சிவக்குமாருக்கு அதில் மாற்றுக் கருத்து இருக்கும் போல, அதனைத் தெளிவாகவே பதிவு செய்தார். எனினும் ஒரு விஷயத்தைக் கொஞ்சம் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இலக்கியமாகட்டும் சினிமாவாகட்டும் நவீன கலைப் பங்களிப்பில் மலையாளிகள் என்றுமே தனித்து நிற்கக் கூடியவர்கள். எடுத்து வைத்துப் பேச நிறையவே அவர்களிடம் இருக்கிறது. நம் வசதிக்காக அவற்றையெல்லாம் மறந்துவிடுகிறோம்.

குமுதமாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடிகர் பிரபு உச்சத்தில் இருந்த காலத்தில் சிவாஜியிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்: “நடிப்பில் பிரபுவை உங்களது வாரிசு என்று சொல்லலாமா?”

“மோகன்லால் எப்பிடி நடிக்கிறான் பாருங்க. அவன் தான் என்னோட வாரிசு...” என்று சிவாஜி பதில் சொல்லியிருந்தார். அந்த நேரத்தில் மோகன்லாலுடன் ஒரு மலையாளப் படத்தில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். இளைய தளபதி விஜய் நடித்த ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ஷூட்டிங் இடைவேளையில் அந்த நேர்முகத்தைக் கொடுத்திருந்தார் என்று நினைக்கிறேன். மணி ரத்னம் இயக்கத்தில் இருவர் வெளிவந்த காலகட்டம், உலக அழகி ஐஸ்வர்யா ராயிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள்:

“உங்களுடன் நடித்தவர்களில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?” என்று கேட்டிருந்தார்கள்.

“மோகன்லாலைத் தான் சொல்லத் தோன்றுகிறது... எந்த ஒரு கஷ்டமான சீன்லையும் அனாவசியமா நடிச்சிட்டுப் போயிட்ராரு. அவரோட நடிப்பு பிரம்மிக்க வெக்குது” என்று இப்போதையை பியூட்டி குயின் ஐஸ்வர்யா பச்சன் அந்த நேரத்தில் பதில் சொல்லியிருந்தார். மம்முட்டி, திலீப், ஜெயராம், நெடுமுடி வேணு, சீனிவாசன் என்று ஒரு பெரிய லிஸ்டையே சொல்லலாம். பெண் நடிகர்களை எடுத்துக்கொண்டாலும் ஒரு பெரிய லிஸ்டையே கொடுக்கலாம். தமிழ் சினிமாவில் பொம்மை போலப் பயன்படுத்தப்படும் நடிகைகளைக் கூட சிறந்த நடிப்பை வெளிப்படுத்துமாறு மலையாளத் திரையுலகைப் பயன்படுத்தி இருப்பார்கள்.

சரி... எல்லோருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும் இல்லையா? சிவக்குமாரின் நிலைப்பாடு அவருக்கு என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். “இப்போதுள்ள நடிகர்களுக்கு எதையாவது சொல்ல நினைக்கிறீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

“ஆய்... ஊய்-ன்னு சப்தம் போட்டு நடிக்க மட்டும் நடிச்சிடாதீங்க... எல்லாத்துக்கும் சாதாரணமா மொகத்த வச்சிக்கோங்க...” என்று சொல்லியதும் அரங்கமே அதிர்ந்தது. அடிவயிற்றிலிருந்து கத்திப் பேசி கேமராவிற்கு முன்னால் நடித்ததிலிருந்து, இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய தன்மையின் பின்னணிகளை மிகுந்த நகைச்சுவையுடன், ஷூட்டிங்கில் அனுபவங்களை நினைவு கூர்ந்து பகிர்ந்துகொண்டார். கடவுளாகவும் தேவர்களாகவும் நடிப்பதிலுள்ள சிரமத்தையும் எடுத்துக் கூறினார். போலவே, நடிப்பிற்காக குதிரையேற்றம் கற்றுக்கொண்டதையும் அதிலுள்ள சிரமங்களையும் கூட நகைச்சுவையுடன் பகிந்துகொண்டார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை...!

“காலைல மட்டும் சாப்பிடாம வீட்ட விட்டுக் கெளம்பிடாதீங்க. மீந்துபோன சாதத்துல தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க இல்ல. அந்த பழைய கஞ்சியாவது குடிச்சிட்டுப் போங்க. மூணு வேல சாப்பிடுறோம். ஒரு வேலைதான் டாய்லெட் போறோம்... ஒருநாளைக்கு ரெண்டு முறை டாய்லெட் பொங்க... ஒடம்ப பார்த்துக்கோங்க...” என்ற ஆலோசனையை எல்லோருக்குமே பரிந்துரைத்தார். இடையில் அவரது இளையமகன் கார்த்தியின் ஃபோன் கால் வந்தது. “எங்கப்பா இருக்க...?” இருக்க என்று அவர் கேட்டிருக்கக் கூடும் என்று நினைக்கிறன்.

“உன்ன மாதிரி புத்திசாலிங்கக் கூட பேசிட்டு இருக்குறேன். ஷூட்டிங் ஒழுங்கா போகுதா? சாப்பாடு ஆச்சா?” என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு “ஒரு மணி நேரம் கழிச்சி உன்னக் கூப்பிடுறேன்” என்று சொல்பேசியைத் துண்டித்துவிட்டு மீண்டும் பேசத் துவங்கினார்.

சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய் சங்கர், எம். ஜி. ஆர், முத்துராமன், ஜெயலலிதா என்று எல்லா முக்கியமான நடிகர்களுடன் சேர்ந்தும் நடித்ததை நல்லதொரு அனுபவமாக அமைந்தது என்பதைப் பகிர்ந்துகொண்டார். பேச்சை ஆரம்பிக்கும் முன்பே “இங்க பாருங்க, நீங்க எல்லாம் புத்திசாலிங்க... நான் முட்டாள். கேள்வி கேட்டு எதிராளியைத் திணரடிப்பது சுலபம். அத ஞாபகம் வச்சிட்டு – எந்தக் கேள்வியைக் கேட்டால் பயனுள்ளதா இருக்குமோ... அந்த கேள்விய மட்டும் கேளுங்க...” என்பதைத் தெள்வாக டிக்ளேர் செய்திருந்தார். கேட்கப்பட்ட கேள்விகளும் தரமானதாகவே அமைந்தது. நடிகர் சிவக்குமார் சொல்லிய பதில்களும் ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருந்தது. போலவே, ஒலிப்பெருக்கியும் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டே வாசகர்களுடன் பேசினார். கம்ப ராமாயணத்தை ஒருமணி நேரத்திற்குச் சற்றுக் கூடுதலான நேரங்கள் பேசி ஒலி-ஒளி வடிவாக ஏற்கனவே சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதன் விற்பனை சக்கைபோடு போட்டன. இப்பொழுது மகாபாரதத்தைக் கைகளில் எடுத்திருக்கிறாராம். அதன் வெளியீடு கூடிய சீக்கிரம் சந்தையில் கிடைக்கலாம். அது வெளிவந்ததும் இன்னொருமுறை வேண்டுமெனில் நாம் இதுபோல உரையாடலாம் என்றார்.

கம்ப ராமாயணம் வெளிவந்ததும் நிறைய இடங்களில் அதைப் பற்றிப் பேசக் கூப்பிட்டிருக்கிறார்கள். கம்பன் கழகத்தில் கூட பேசுவதற்குக் கூபிட்டார்களாம். எல்லா அழைப்புகளையும் மறுத்துவிட்டாராம். ஆனால், மகாபாரதம் வெளிவந்ததும் நானே இங்கு வந்து - கேணி இலக்கிய சந்திப்பு - பேசுகிறேன் என்று அவர் கூறியதும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஹூம்... அந்த நாளும் வராமலா போகும் சிவக்குமாரை அப்பொழுது மறுபடியும் சந்தித்து உரையாடலாம். பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இவரிடம் இருக்கிறது. கேட்பதற்கு நமக்குத்தான் பொறுமை வேண்டும். பொறுமையுடன் காத்திருங்கள். மீண்டும் சந்திக்கலாம்.

1 comment:

  1. good job .. கி.பி அருமையான பதிவு , கூட்டத்தை மிஸ் செய்த எனக்கு நேரில் பார்த்த அனுபவம் ..

    ReplyDelete