Monday, April 6, 2015

நிசப்தம் டிரஸ்ட்


நம்மால் செய்ய முடியாத ஒன்றை - நாம் நேசிக்கும் ஒருவர் செய்யும் பொழுது அல்லது அவர்களைச் செய்ய வைத்துப் பார்த்து சந்தோஷப் படுவதை ‘விகாராஸ் பிளஷர் (vigorous pleasure)’ என்பார்கள். அந்த வகையில் வா. மணிகண்டனைப் பார்த்து நிறையவே சந்தோஷப்படலாம். அதற்கான காரணங்களும் நிறையவே இருக்கிறது. நிசப்தம் வாசகர்களாக வா. மணிகண்டனுடன் கைகோர்க்கும் தோழர்களும் இந்த ‘விகாராஸ் பிளஷர்’-ஐத் தான் அடைகிறார்களோ...! அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

எழுத்தாளர் அம்பை 25 வருடங்களுக்கும் மேலாக ‘ஸ்பாரோ’ என்ற தன்னார்வ அமைப்பை நண்பர்களின் மூலம் செய்து கொண்டிருக்கிறார். இந்திய அளவில் பெண்கள் சார்ந்த முக்கியமான – அரசியல் மற்றும் இதர சார்புகளற்ற ஆவணக் காப்பகம் இது. இங்கு சினிமாவில் குத்துச் சண்டை போடுபவர்களுக்கும், தகுடுத் தனம் செய்பவர்களுக்கும் தேசிய விருதுகளும் சமூக கவனங்களும் கிடைக்கிறது. ஆனால் உண்மையான சமூக அக்கறையுடன் இயங்கும் செயற்படுபவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அம்பையிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன்:

“நீங்க தமிழ்ல முக்கியமான எழுத்தாளர் உங்களோட ‘ஸ்பாரோ’ அமைப்பிற்குத் தமிழகத்தில் இருந்து போதிய கவனம் கிடைத்ததா? இப்போது கிடைக்கிறதா?”

“அப்படியெல்லாம் குறிப்பிட்டு எந்த உதவியும் பெருசா தமிழர்களிடம் இருந்து கெடைக்கறது இல்ல...” என்றார்.

பெண்ணியம் பேசக்கூடியவர்கள் கூட கவனத்துடன் ‘ஸ்பாரோ’ அமைப்பை அனுகுகிறார்களா என்று தெரியவில்லை. அம்பை இயங்கத் துவங்கிய காலத்தில் இணையம் இல்லை. அனால் வா. மணிகண்டனுக்கு இணைய வசதி ஒரு வரப்பிரசாதம். மீடியாவின் உதவியோ, பத்திரிகையின் உதவியோ இல்லாமலேயே நங்கூரம் வீசி நிற்கிறார் மணி. ‘நிசப்தம் டிரஸ்ட்’ ஓசையின்றி வளர்ந்து வருகிறது.

முதன் முறையாக வா. மணிகண்டனை உயிர்மை பதிப்பகத்தின் அரங்கில் தான் சந்தித்தேன். எந்த வருடம் என்று சரியாக ஞாபகம் இல்லை. கத்துக்குட்டியாக நான் சுற்றிக் கொண்டிருந்த காலம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் ஏற்பாடாகியிருந்த ‘சென்னை புத்தகக் கண்காட்சி’யின் ஒருநாளில் தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. இன்றைய தேதியிலாவது விரல்விட்டு எண்ணக் கூடிய எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் நல்லது-கெட்டதே தெரியாது. யாரிடம் எப்படிப் பேசுவது என்று கூட தெரியாது. பேசிய கொஞ்ச நேரத்தில் “நீங்க யாரு? நீங்க என்ன செய்யுறீங்க? நீங்க ரைட்டரா?” என்று நேர்முகம் செய்வது போலக் கேள்விகள் தெறிக்கும்.

உயிர்மையில் அந்த வருடம் வெளியாகியிருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதேர்சையாகக் ‘கவிதைத் தொகுப்புகள்’ அடுக்கப்பட்டிருந்த ரேக்கில் - சில புத்தகங்களின் அட்டை வடிவமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னருகில் யாரோ ஓர் அன்னிய மனிதர் (மணி) நீண்ட நேரமாக நின்றுகொண்டிருப்பது போலப் பட்டது. எப்படிப் பேசத் துவங்கினேன்? என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

“ஆமா... ரொம்ப நேரமா ஒரே எடத்துல நின்னுட்டு இருக்கிங்களே? எதாச்சும் ஹெல்ப் வேணுங்களா?” என்று தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

“இல்ல... இல்ல... இந்தக் கவிதைத் தொகுப்பு என்னோடது... பொதுவாகவே கவிதையைத் தேடி யாரெல்லாம் வராங்கன்னு பார்க்கத் தான் இங்க இருக்குறேன். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் ஒரு ரெண்டுமூனு நாளுக்கு இந்த மாதிரி சும்மா நின்னு வாச் பண்ணுவேன்...” என்றார் மணி.

“அடக் கடவுளே... அப்படியா சங்கதி... உங்களோட கவிதைத் தொகுப்பை அவசியம் நான் எடுத்துக்குறேன்...” என்றேன். சொல்லியது போலவே வாங்கிக்கொண்டும் சென்றேன். ஒரு சின்ன உரையாடல் எனக்கும் மணிக்கும் அன்று நிகழ்ந்தது. அதன்பிறகு நீண்ட நாட்கள் என்னுடைய அலமாரியில் அந்தக் கவிதைப் புத்தகம் வாசிக்கப்படாமலே இருந்தது. கிஃப்டாகக் கிடைத்த இன்னும் சில கவிதைகளும் வாசிக்கப் படாமலேயே அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்தது. சென்ற ஆண்டில் தான் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போய் பொன்னேரி கிளை நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வந்தேன். நான் கொடுத்த புத்தகங்கள் ஒன்று கூட நூலகத்தில் இல்லை. என் கண்ணெதிரே ஒரு புதுக் கவிஞர் எல்லா கவிதைகளையும் நூலகரிடம் கேட்டுவாங்கி லவட்டிக்கொண்டு சென்றார். இன்னும் கொடுத்த பாடில்லை.

பிறகு மணியும் நானும் அவசியம் எனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். கண்ணுக்குத் தெரிந்தார்போல மணியின் வளர்ச்சியைப் பார்ப்பது மிக சந்தோஷமாக இருக்கிறது.

கடந்த 2013 புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் நின்றிருந்த போது - நாகேஸ்வரன் என்ற சீனியர் சிட்டிசன் புத்தகத்தைத் தேடிக்கொண்டு வந்திருந்தார். (கவனிக்க ஒரேயொரு புத்தகத்தை மட்டும் தேடிக்கொண்டு வந்திருந்தார்.) ஏதாவது கிளாசிக் எழுத்தாளரின் புத்தகங்களைத் தேடிக்கொண்டுதான் வந்திருப்பார் என்று தான் நினைத்திருந்தேன். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. மிகுந்த சிரமப்பட்டு தான் கண்காட்சிக்கு வந்திருந்தார்.

“வா. மணிகண்டன் புத்தகம் இருக்கா?” என்று கேட்டார்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “யாரோட புத்தகம்?” என்று மறுபடியும் கேட்டேன்.

“வா. மணிகண்டன் புத்தகம். லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்” என்றார் அழுத்தந் திருத்தமாக. கடந்த இரண்டு புத்தகக் கண்காட்சிகளிலும் காலச்சுவடு அரங்கிற்கு அருகிலேயே “டிஸ்கவரி புக் பேலஸ்” அரங்கும் வந்துவிடுவதால் பல விஷயங்களிலும் வசதியாகவே இருக்கிறது. நண்பர் நாகேஸ்வரனை அழைத்துக்கொண்டு டிஸ்கவரிக்குச் சென்றதாக ஞாபகம். அவரிடம் சொன்னேன்:

“நேத்தைக்கு பூரா மணி இங்க தான் சுத்திட்டு இருந்தான். ரொம்ப சிரமப்பட்டு வேற வந்திருக்கிங்க. நான் வேணும்னா ஃபோன் பண்ணி அவன இங்க வரச் சொல்லட்டுமா? கொஞ்ச நேரம் பேசிட்டுப் போங்களேன்” என்றேன் அக்கறையுடன்.

“நீங்க நிசப்தம் வாசிக்கிறது இல்லையா? அவர் பொங்களூருக்கு ரிட்டர்ன் ஆயிட்டதா நேத்திக்கே பிளாக் போட்டுட்டாரே...” என்று பல்ப் கொடுத்தார் அந்த நண்பர்.

“ஓ... சரி சரி... மணிக்கு கால் பண்ணா உங்களைப் பத்தி அவசியம் சொல்றேன்...” என்றேன். உண்மையில் அன்றைக்கு வீடு திரும்பியதும் மணியை செல்பேசியில் அழைத்து சந்தித்த நண்பரைப் பற்றிப் பகிர்ந்துகொண்டேன். கல்லூரி மாணவர்களிலிருந்து, சீனியர் சிட்டிசன் வரை எல்லா அளவிலும் மணிக்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் இணையத்தைப் பொறுத்த வரை மணியின் பலம். டிஸ்கவரி புக் பேலஸில் – ஏப்ரல் 05, காலை ஏற்பாடாகியிருந்த – வா. மணிகண்டனுடனான வாசக சந்திப்பு அதனை உறுதி செய்வது போல இருந்தது. நாகேஸ்வரன் உட்பட மணியின் தீவிர வாசகர்கள் பலரும் வந்திருந்தனர்.

அருமைத் தோழர் கவிதா பாரதியின் (எழுத்தாளர், நடிகர், இயக்குனர்) உரையினைத் தவற விட்டுவிடுவேனோ என்று பயந்துகொண்டு ஓடினேன். நல்ல வேளை, சரியாக கவிதா பாரதி பேசத் துவங்கும் போது அரங்கிற்குச் சென்றிருந்தேன். கவிதாவின் பேச்சு எடுப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. மணியின் எழுத்துக்களைத் தம்பிச்சோழன் (நடிகர், எழுத்தாளர்) விமர்சன கோணத்தில் பேசி இருப்பார் போல. வீடியோ வந்ததும் தான் பார்க்க வேண்டும். பேச்சில் ஹாஸ்யத்தை நிரப்பி ‘ஹை ஸ்கோர்’ செய்தது நாகேஸ்வரன் தான். மனிதர் தோனி போல ஹெலிகாப்டர் ஷார்ட்ஸ் அடித்துக் கொண்டிருந்தார். இவர் தெரிவித்த ‘இலங்கைத் தமிழர் போராட்டம், ஆங்கிலத்தின் அவசியம்’ போன்ற கருத்துக்கள் – நம்முடைய சகாக்களின் வாயில் மெல்லுவதற்கு அவலினைப் போடுவதுபோல இருந்தது. (வீடியோ வந்ததும் பாருங்கள்). 


உயிர்மையில் சந்தித்த - தீவிர இலக்கிய சூழலில் இயங்கிய மணியிலிருந்து, நிசப்தம்.காம் மணியாக இவர் எப்படி நகர்ந்தார் என்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. சென்னை சங்கமத்தில் 100 கவிஞர்கள் கவிதை வாசிப்பில் மணிகண்டனும் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போதிருந்த திமுக-வின் அரசியல் நிலைப்பாட்டினைக் காரணம் காட்டி – “கவிதை வாசிப்பைப் புறக்கணிக்கிறேன்” என்று மணி பகிர்ந்திருந்தார். அதனைச் சுட்டிக்காட்டி ஞாநி தன்னுடைய பத்தியில் எழுதி அந்த வார பூச்செண்டை மணிக்குக் கொடுத்தார். பின்னர் காலச்சுவடு கண்ணனும் கூட மணியின் இந்த எதிர்வினையைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். ஆங்கில நாளிதழ் கூட – டைம்ஸ் ஆப் இந்தியா என்று நினைக்கிறன் – மணியின் புறக்கணிப்பை எழுதியிருந்ததாக ஞாபகம். தண்டவாளம் போல அதே சமயத்தில் “ஜெ.மோ, எஸ்.ரா” போன்ற பலருக்கும் காட்டமாக எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தார் மணி. இதற்காகவெல்லாம் மணி கவனிக்கப்பட்டாரா என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. 

எது எப்படியோ!? கால இடைவெளியில் இணையத்தில் ஒரு சிலரின் மீது “லைம் லைட்” விழுவது வாடிக்கை தான். “கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், லக்கி லுக், அதிஷா, நர்சிம்” – இவர்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு 5000 ஹிட்ஸ் வந்திருந்தால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை. இப்போதைய “லைம் லைட்”டின் கீற்று வா.மணிகண்டன் மீது விழுகிறது. மணிக்கென தனியான வாசக நண்பர்களின் வட்டம் உருவாகி இருக்கிறது. நாளுக்கு நாள் நிசப்தம் வாசகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது.

மேலே பட்டியலிட்ட நன்கறிந்த நண்பர்கள் இணையத்தில் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார்களோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. எழுதுவதின் கூடவே “நிசப்தம் டிரஸ்டின்” மூலம் மணி செய்துகொண்டிருக்கும் செயல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. பல்வேறு தளத்திலுள்ளவர்களுக்கும் தனது வாசக நண்பர்களின் துணைகொண்டு உதவிக்கொண்டு இருக்கிறார். எல்லாவற்றையும் பளிங்கு போலத் தெளிவாக நிர்வகித்துக் கொண்டு வருகிறார். டிரஸ்டின் பொருளாதார நகர்வுகள் ஒவ்வொன்றையும், உள்ளது உள்ள படியே எல்லோருக்கும் தெரியப்படுத்தி விடுகிறார். இதில் மணியைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லா டிரஸ்டுகளுமே இதனைச் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் செய்வதில்லை.

கடந்த பதினைந்து வாரங்களாக – வார விடுமுறைகளில் - மணி வீடே தங்குவதில்லையாம். டிரஸ்டின் மூலம் உதவி கேட்பவர்களை நேரில் சென்று பார்த்து, உண்மை நிலவரம் தெரிந்த பின்னர் தான் உதவி செய்கிறாராம். இதற்காக மதுரை, திருநெல்வேலி என தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்கிறாராம். இந்த மெனக்கெடலுக்காகத் தான் மணியைப் பாராட்டத் தோன்றுகிறது. நன்கொடையாகக் கிடைக்கும் பண விஷயத்தில் ட்ரான்ஸ்பரன்ட்டாக இருப்பதாலும் - ப்ராசஸ் & ரிசல்ட் ஒரியென்ட்டேடாக இருப்பதாலும் மணியை நம்பி பாழுங் கிணற்றில் கூட விழலாம். “நான் வடித்தெடுத்த கஞ்சப் பயல்” என்று வேறு மணிகண்டன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விடுகிறாராம். டீ-டோட்டலராக இருக்கும் ஒருவர் கஞ்சப் பயலாகவும், ஒரு டிரஸ்டின் முக்கிய நிர்வாகியாகவும் இருப்பது சாலச் சிறந்தது. ஆராய்ந்து அறியாமல் எது ஒன்றிலும் கால் வைக்காத இவரது குணமும் நம்பிக்கை அளிக்கும்படி இருக்கிறது.

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் தொகுப்பில் பல கதைகளும் செயற்கையான திருப்பங்களுடன் முடிந்திருக்கும். மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்திய தொகுப்பு. படித்து முடித்ததும் யாவரும் பப்ளிஷர்களில் ஒருவரான ‘ஜீவ கரிகால’னிடம் – “ஏன்டா, இந்த மாதிரி கதைய தொகுத்து புத்தகமா போடனுமா? மணியோட பேர கெடுக்கனும்னு கங்கணம் கட்டிட்டு இருக்கிங்களா நீயும் வேல்கண்ணனும்... ரொம்ப சுமாரான கதைகளா தான் தேர்ந்தெடுத்து இருக்கிங்க...” என்றேன்.

“அட... நீங்க வேற அந்த புத்தகம் 1000 பிரதிகளுக்கு மேல வித்துடுச்சி...” என்றான் ஜீவ கரிகாலன்.

“அப்படியா...” என்று வாயைப் பிளந்தேன். எனினும் இங்கொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று வரையிலும் இந்தத் தொகுப்பு விற்றுத் தீர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. இத்தொகுப்பின் முதல் பிரதியை 5000 ரூபாய்க்கு நிசப்தம் வாசகர் ஏலத்தில் எடுத்தார். இது போன்ற செயல்களாலும் மணி அதிகம் கவனம் பெற்றார். புத்தகம் விற்று கிடைக்கும் பணத்தைக் கூட, ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்து விடுகிறார் மணி. நிசப்தம் வாசகர்களுக்காக வா. மணிகண்டன் எழுதுவது சுற்றறிக்கைக்கு ஒப்பானது. மணி எழுதக்கூடிய எல்லாவற்றையும் அவர்கள் சிலாகிப்பார்கள். தேர்ந்தெடுத்த பதிவுகள் அச்சேறி புத்தகமாக வெளியிடும் பொழுது அதன் தன்மையே வேறு. பல்வேறு தளத்திலிருந்து விமர்சனக் குரல்கள் எழும். இணையக் காழ்ப்புகளினால் எழும் கூச்சல்களிலிருந்து மாறுபட்ட குரல்கள் இவை. “லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்” – நிறைய பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கலாம். எனினும் அதில் விரல்விட்டு எண்ணக்கூடிய நல்ல கதைகள் கூட இல்லை. 


“மசால் தோசை 38 ரூபாய்” பல விதங்களிலும் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. சுவாரஸ்யமான தொகுப்பும் கூட. ஒருவேளை அதிக ஹிட்ஸ் வந்த கட்டுரைகளிலிருந்து ஆகச் சிறந்த கட்டுரைகளைக் கூட இவர்கள் தொகுத்திருக்கலாம். இந்தத் தொகுப்பைப் பாராட்டிப் பேச நிறையவே இருக்கிறது. (ஒற்றுப் பிழைகளையும், இன்ன பிற அச்சுக் கோர்ப்புப் பிழைகளையும் தவிர்த்து). பெங்களூர் நகரத்தைக் களமாகக் கொண்டு வா. மணிகண்டன் நாவல் எழுதும் முயற்சியில் இருக்கிறாராம். (பெங்களூர் சிறுகதைகள் என்று காவ்யா பதிப்பகம் ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்கள். அந்தப் புத்தகம் தான் ஞாபகம் வருகிறது.) மணியின் இந்நாவல் சிறப்பாக வரும் என்றே எதிர்பார்கிறேன். “மசால் தோசை 38 ரூபாய்” அந்த நம்பிக்கையைக் கொடுக்கிறது.

ஒருமுறை எழுத்தாளர் கே.என். செந்தில் ‘சென்னை புத்தகக் கண்காட்சி’யைப் பற்றிய எண்ணங்களைக் காலச்சுவடு இதழில் பதிவு செய்த போது – மணியின் இணையச் செயல்பாடுகளைப் பதிவு செய்த போது, “ஒருசிலர் தான் புகழ் வெளிச்சத்தின் பின்னால் செல்கிறார்கள். வா. மணிகண்டனுமா இப்படி இருக்க வேண்டும்? மணிகண்டன் நன்றாக எழுதக் கூடியவராயிற்றே...” என்பது போலச் சொல்லி இருந்தார். மணிகண்டன் டெம்ப்லேட் ரைட்டிங்கில் மாட்டிக்கிட்டாரோ என்ற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது. அந்த எண்ணம் எனக்கும் கூட இருக்கிறது.

“நீ எப்படி டெய்லி எழுதுற?” என்று மணியிடமே கூட நேரில் சந்தித்த போது கேட்டதுண்டு. இது போன்று ஒவ்வொருவரும் கேட்கக் கூடும். மணிகண்டனின் ஊரைச் சேர்ந்த சிறுகதையாளர் ‘கே.என். செந்தில்’ போல ஆதங்கப் படக் கூடும். ஒன்றை மட்டும் கவனியுங்கள். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் நிசப்தம் டிரஸ்டிற்கு, இந்தியாவிலிருந்து மட்டும் (இணைய வங்கிப் பரிவர்தனையின் மூலம்) 5 லட்ச ரூபாய் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறதாம். இன்னும் சில நாட்களில் வெளிநாடுகளிலிருந்தும் நேரடியாகப் பணம் செலுத்தும் வசதியைப் பெற்று விடுவார்களாம். நன்கொடை இன்னும் கூட அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் மணிக்கான சவாலும், உழைப்பும் அதிகரிக்கக் கூடும் என்றே நினைக்கிறன்.

உரையாடலின் போது மணியிடம் கேட்கப்பட்ட “பிரபல எழுத்தாளர்கள் போல நீங்கள் குருபீடத்தை நோக்கிப் போகிறீர்களா? அரசியலுக்கு வருவீர்களா? உங்களோட அடுத்த பிளான் என்ன?” போன்ற கேள்விகள் எல்லாம் மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்தின. “சும்மா இருக்கவங்கள சொறிஞ்சி விடுறதுல நம்ம ஆளுங்கள தட்டிக்க யாரு இருக்கா?” இறுதியாக, “ஆமா... எவ்வளோ பேரு எழுதுறாங்க... ஆனா, என்னத்த காண்கிறார்கள்... எழுத்தின் மூலம் கிடைக்கும் வாசகத் தோழர்கள் மூலம் ஒருவனால் எளிய மனிதர்களுக்கு உதவ முடிகிறது எனில் இப்படியே எழுதிவிட்டுத் தான் போகட்டுமே? என்ன குறைந்துவிடப் போகிறது? அந்த ஒருவன் மணியாக இருந்துவிட்டுப் போகட்டுமே...” என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த எண்ணமே மணியை நினைத்து சந்தோஷப் படப் போதுமானதாகவும் இருக்கிறது. அந்த சந்தோசம் கொடுக்கும் மன நிறைவின் நிசப்தத்தில் நாமும் கொஞ்சம் உறையலாமே.

இப்படியே எழுதி, இப்படியே பயணித்து, இப்படியே சந்தோஷித்து என்றென்றைக்கும் மணி தனது எழுத்துப் பணியின் மூலம் ஜீவித்திருக்கட்டும்.

ஆமென்.

2 comments:

  1. மணியின் மற்றொரு புத்தகமான "சைபர் சாத்தான்கள்" பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.
    இணைய,கணிணி தகிடுதத்தங்களை பற்றிய சுவராசியமான் புத்தகம் அது.

    ReplyDelete
  2. //கண்ணுக்குத் தெரிந்தார்போல மணியின் வளர்ச்சியைப் பார்ப்பது மிக சந்தோஷமாக இருக்கிறது.
    // இன்று வரையிலும் இந்தத் தொகுப்பு விற்றுத் தீர்ந்த வண்ணம் தான் இருக்கிறது.
    :).

    மணிகண்டன் எழுத்துகள் என் மூளைக்கு சரளமாக செரிமானமாகிறது. சில சமயங்களில் மணிகண்டன் நாள் ஒன்றுக்கு ரெண்டு மூன்று பதிவுகள் போடமாட்டேன்கிறார் எனும் பேராசை கோபம் வருகிறது.
    - அருள் மணிவண்ணன்.

    ReplyDelete