Sunday, June 23, 2013

தோழர் மணிவண்ணன் – நினைவேந்தல்

மனதிற்கு நெருக்கமான, ஒத்த அலைவரிசையுள்ள வாசக நண்பர்கள் ஒன்று சேர்ந்து “கே.கே.நகர் டீக்கடை சிந்தனையாளர்கள் பேரவை” என்ற பெயரில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் “நீயா? நானா?” என்று மல்யுத்தம் செய்து கொள்ளலாம் என யோசனை செய்திருந்தார்கள். கவிதாபாரதி, பாஸ்கர் சக்தி, மணிவண்ணன், கரு. பழனியப்பன் போன்றோர் இதற்கான முயற்சிகளை எடுத்தனர். டிஸ்கவரி வேடியப்பன் இதற்கான இடத்தைத் தந்து உதவினர்.

முதல் கூட்டத்திற்கு அறிமுகமற்றவனாகத் தான் சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினராக இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர் & புத்தகப் பிரியர் மணிவண்ணன் தனது நீண்டகால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுவதற்காக அழைக்கப் பட்டிருந்தார். இவரை காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். ஒருசில படங்களை இயக்கிய ஆளுமையும் தான். போலவே தமிழீழம் சார்ந்த அவருடைய நிலைப்பாடு பற்றியும் ஓரளவிற்கு தெரியும். 



தாங்கித் தாங்கி நடந்தபடிதான் கூட்டத்திற்கு வந்தார். அவருடைய இயல்பான நடையே அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டேன். தோழமையுடனும் தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்புடனும் தெரிந்தவர்களிடம் கை குலுக்கினார். ஓர் ஓரத்தில் அமர்ந்தவாறு இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் சந்திப்பும் துவங்கியது. மணிவண்ணனின் பேச்சு கூட மொன மொனவென்றிருந்தது. “இவர எப்படி பேச வச்சி நடிக்க வெக்கிறாங்க? ஒரு வார்த்தையும் ஒழுங்கா காதுல கேக்கலையே...! தெளிவில்லாத உச்சரிப்பா வேற இருக்கே...?” என்று நினைத்துக் கொண்டேன்.

உண்மை என்னவெனில் – சந்திப்பின் சில வாரங்களுக்கு முன்பு எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி அதற்கான தொடர் சிகிச்சையில் மணிவண்ணன் இருந்திருக்கிறார். டீக் கடை சிந்தனையாள நண்பர்கள் பேசுவதற்கு அழைத்த போது உடல் நலம் சரியில்லாததைக் காரணம் காட்டி மறுப்பு சொல்லி வருவதைத் தவிர்த்திருக்கலாம். என்றாலும் நட்பு பாராட்டி வந்திருந்தார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நண்பர்களுடன் தனது கருத்துக்களை உற்சாகத்துடன் பரிமாரிக்கொண்டார். அதன் பிறகு நீண்ட நாட்களாக கூடாமளிருந்த சிந்தனையாளர்கள் பேரவை தோழர் மணிவண்ணனின் மரணத்தை முன்னிட்டு – நினைவேந்தல் நிகழ்வாக அமைந்துவிட்டது யாரும் எதிர் பார்க்காத ஒன்று. இயக்குனர்/ நடிகர் மனோபாலா, ஓவியர் டிராஸ்கி மருது, இயக்குனர் / நடிகர் பொன்வண்ணன், நிழல் திருநாவுக்கரசு, கரு பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு – மணிவண்ணன் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். 


ஒரு ப்ரடக்ஷன் கம்பெனியில் சாதாரண ஆபீஸ் பாயாக இருந்த மணிவண்ணன், தனது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தாலும் நட்பினாலும் மனோபாலாவால் பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராக அறிமுக படுத்தப்படுகிறார். பின்னர் பல்வேறு சூழலில் 40 திரைப்படங்களுக்கும் மேல் இருவரும் சேர்ந்து வேலை செய்ததை மனோபாலா அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்துகொண்டார். நிழல்கள் தோல்வி முதல், அதன் தொடர்ச்சியாக அலைகள் ஓய்வதில்லை படத்தின் பிரம்மாண்ட வெற்றி என பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். தனது நீண்டகால நண்பருடனான அனுபவங்களை சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தவர், இருக்கைக்குத் திரும்பும் சமயம் கண்கள் கலங்கி நெகிழ்ந்துவிட்டார். 

அடுத்ததாக பேசிய ‘நிழல்’ திருநாவுக்கரசு “போர் முரசு” என்ற சமிக்ஞையில் மணிவன்னனுடன் சேர்ந்து ஆரம்பத்தில் வேலை செய்தது குறித்தும், அந்த நட்பின் பழக்கத்தில் தான் பரிந்துரைக்கும் ஏராளமான சிறு குழுக்களுக்கும், இயக்கங்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் மணிவண்ணன் தொடர்ந்து உதவி செய்து வந்ததைக் குறித்தும், கடைசி வரை அவருடைய வாசிப்பு சார்ந்த வேட்கை குறித்தும் பலவாறு பகிர்ந்துகொடார்.

இயக்குனர் பொன்வண்ணன் முற்றிலும் வேறொரு கோணத்தில், விமர்சன நோக்கில் தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தார். அப்போதைக்கு அப்போது முடிக்க வேண்டிய வேலைகளை தள்ளிப்போடுதல், உடல்சார்ந்த அக்கறையின்மை, தாமதமாக முடிவெடுத்தல் போன்ற சராசரி வாழ்வியல் சிக்கல்கள் சார்ந்த மணிவண்ணனின் தன்மைகள் குறித்து பேசினார். மணிவண்ணன் – முரண்பாடுகளின் உச்சம். கொள்கையளவில் பொதுவுடைமைவாதியாக இருந்தவர் “புதிய கார், புதிய கைக்கடிகாரம்” என சந்தையில் புதிதாக அறிமுகமாகும் பொருட்களை வாங்கும் வினோத பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால் உடைக்காக அதிகம் செலவு செய்யமாட்டார். சிறிய உணவகத்தில் தான் சாப்பிடுவார். ஒரு முனையில் அதிக விளைகொடுத்து பொருட்களை வாங்கும் நுகர்வு மனப்பான்மையில் திளைப்பவராகவும், மற்றொரு முனையில் எளிய மக்களுடன் பழகும் ஆளாகவும் அவர் இருந்திருக்கிறார். என்றாலும் பல்வேறு சூழலில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து இனி மீள்வதற்கு வழியில்லை என்ற நிலையிலும் காலத்துடன் சரிக்குச் சமமாக நின்று போராடியவர் மணிவண்ணன். காலத்தை எதிர்த்து போராடுபவனையே காலம் நினைவில் வைத்துகொள்ளும். இவர் காலத்தால் நினைவுகூறப்படுவார்.

அடுத்து வந்த கரு பழனியப்பன் - பொன்வண்ணன் பேசியதில் உணர்ந்த மாற்றுக் கருத்தை முன்வைத்து பேச்சைத் துவக்கினார். “நமது பொதுப்புத்தியில் கம்யூனிஸ்ட் என்பவன் கார் வச்சிக்கக் கூடாது, ஆடம்பரமா வாழக்கூடாது” என்ற புரிதல்கள் இருக்கின்றது. என்னால் கம்யூனிசத்தை அப்படிப் புரிந்துகொள்ள முடியவில்லை. கம்யூனிஸ் என்றால் ஏழையாகத் தான் இருக்க வேண்டுமா? “காரோ, கராண்டோ, கம்ப்யூட்டரோ” – இதெல்லாம் எல்லோருக்கும் கிடைக்கணும். பொதுவுடைமை என்பது அதுதானே. ஒரு தெளிவான கம்யூநிஸ்டாகத் தான் மணிவண்ணன் வாழ்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் மணிவண்ணனின் திரைப்படங்கள் குறித்தும், அவருடைய செழுமையான பங்களிப்பு குறித்தும், தனிப்பட்ட நட்பு குறித்தும் – தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஓவியர் டிராஸ்கி மருது – ‘மனோபாலா, மணிவண்ணன், நடிகர் சந்திரசேகர்’ போன்றவர்களது ஆரம்பகால அறைத்தோழர் என்பதால் பால்யம் குறித்த நினைவுகளையும், ஆரம்பகால வாழ்க்கைகளையும் நினைவு கூர்ந்தார். “நிழல்கள்” திரைப்படம் அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் தான் என்றார். அந்தப் படத்தில் வரும் ஓவியர் கதாப்பாத்திரம் கூட இவர்தான் என்றார். படத்தில் பயன்படுத்தப்பட்ட ஓவியங்கள் கூட அவர் வரைந்தது தான் என்றார். இடையில் நண்பர்களைப் பிரிந்து பணிநிமித்தமாக ஹைதராபாத் சென்றது, பின்னர் இங்கு வந்து நபர்களுடன் மீண்டும் இணைந்து கொண்டது என பல்வேறு தளங்களில் பேசினார்.

மணிவண்ணன் நடிகராக உச்சத்தில் இருந்த சமயம். ஒரு புதுப்பட தயாரிப்பாளர் தனது படத்தில் நடித்துத் தரும்படி அவரை அணுகினாராம். அவர் கேட்ட தேதியில் ஊட்டியில் நடிப்பதற்கான கமிட்மென்ட் ஏற்கனவே மணிவண்ணனுக்கு இருக்கின்றது. புதுப்பட ஷூட்டிங் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஏற்பாடாகியிருக்கிறது. “மணிவண்ணன் யோசித்துவிட்டு சரி நடிச்சி கொடுக்கறேன்” என்றாராம். ஏறக்குறைய தொடர்ந்து பத்து நாட்கள் இரவு 8 மணிக்கு விமானம் பிடித்து, இரண்டு மணிநேரத்தில் சென்னைக்கு வந்து படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு, அதிகாலையில் விமானத்தைப் பிடித்து ஊட்டிக்குச் சென்று அந்தப் படத்திலும் நடித்துக் கொடுத்தாராம். பயண டிக்கட் எல்லாம் கூட தனது சொந்த செலவிலேயே பார்த்துக் கொண்டாராம். இதுபற்றி தயாரிப்பாளர் விசாரித்ததற்கு பின்வருமாறு கூறி இருக்கிறார்:

“நீங்க கொடுக்கற சம்பளத்த மீறித் தான் டிக்கட் போட்டுக்குனு வந்து நடிச்சி கொடுக்கறேன். இது உங்களுக்கு முதல் படம். பணம் எப்படி செலவாகுதுன்னே தெரியாது. உங்க காச சினிமாவுல போட்டுட்டு லாஸ் பண்ணிட்டிங்கன்னா – மறுபடியும் சினிமா எடுக்க வரமாட்டிங்க. அதான் நானே வந்து நடிச்சி கொடுக்கறேன்” என்றாராம்.

“கே.கே.நகர் டீக்கடை சிந்தனையாளர்கள் பேரவை” நடத்திய முதல் கூட்டம் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. கல்மேல் கால்போட்டவாறு ஓர் ஓரத்தில் அமர்ந்து கொண்டு தோழர் மணிவண்ணன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பேசியதில் ஒரு சந்தேகம். ஆகவே “மிஸ்டர் மணி... ஒன் செகன்ட்...” என்றேன்.

“ம்... சொல்லுங்க தம்பி...” என்றார் அக்கறையுடன்.

“என்ன கேள்வி கேட்டேன்?” என்பது மறந்துவிட்டது. “என்ன பதில் சொன்னார்...!” என்பதும் மறந்துவிட்டது. என்றாலும் நான் கேட்ட கேள்வியை பொறுமையாக எதிர்கொண்டு, அதற்குத் தகுந்த விளக்கத்தை அளித்தார். நான் தொடர்ந்து பேசுவதற்கான வாய்ப்பையும் வழங்கினார். வயது வித்யாசம் பார்க்காமல் முனைப்புடன் உற்சாகமாக உரையாடக் கூடிய நண்பர். முதல் முறையாக அவரைச் சந்தித்த போது ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருக்காமல், நெருங்கிச் சென்று கைகுலுக்கி நிறையவே பேசி இருக்கலாம். இனி காலத்துடன் போராடித்தான் இதுபோன்ற ஜோடனையற்ற சக மனிதனைச் சந்திக்க வேண்டும்.

காலங்காலமாக காலமும் நல்ல மனிதர்களைச் சந்திக்க போராடிக்கொடுதானே இருக்கின்றது. நண்பர்களின் பகிர்வை கவனிக்கையில் மணிவண்ணனின் ஒரு முகம் நல்லதாகவே இருந்திருக்கிறது. காலம் போராடிச் சந்தித்த நல்ல மனிதர்களில் ஒருவராக தோழரை நினைவு கூர்வோம். அவருடைய நினைவைக் கொண்டாடுவோம்.

(பாஸ்கர் சக்தி துவக்கி வைக்க, கவிதாபாரதி தொகுத்து வழங்க, மணிவண்ணனின் இறுதி உரையுடன் – ஒரு நிமிட மௌன அஞ்சலியாக கூட்டம் நிறைவுபெற்றது. ஆகக்கூடி ஒரு நெகிழ்வான சந்திப்பாக அமைந்தது.)

3 comments:

  1. காலங்காலமாக காலமும் நல்ல மனிதர்களைச் சந்திக்க போராடிக்கொடுதானே இருக்கின்றது. நண்பர்களின் பகிர்வை கவனிக்கையில் மணிவண்ணனின் ஒரு முகம் நல்லதாகவே இருந்திருக்கிறது. காலம் போராடிச் சந்தித்த நல்ல மனிதர்களில் ஒருவராக தோழரை நினைவு கூர்வோம். அவருடைய நினைவைக் கொண்டாடுவோம்.
    நெகிழ வைத்த பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. //நண்பர்களின் பகிர்வை கவனிக்கையில் மணிவண்ணனின் ஒரு முகம் நல்லதாகவே இருந்திருக்கிறது//- மிகவும் கவனமான வார்த்தைப் பயன்பாடு. நல்ல பதிவு. நீங்கள் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டதுபோல் நிகழ்சிக்கு வந்திருக்கலாம்போலத்தான் இருக்கிறது பிரபு!

    ReplyDelete