Saturday, May 4, 2013

சூது கவ்வும் – திரை விமர்சனம்


உலகத்தையே தன்னுடைய ஆள்காட்டி விரலின் கையசைவில் வைத்திருக்கும் அமெரிக்காவால், அதனினும் பலமடங்கு சிறிய நாடான வெனிசுலாவை ஆட்டவும் முடியவில்லை. அசைக்கவும் முடியவில்லை. காரணம்... வெனிசுலாவின் அதிபர் ‘சாவேஸ்’ என்ற ஒற்றை மனிதர்.

என்னுடைய நெருங்கிய நண்பன் தினேஷ் வெனிசுலாவில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறான். பிரபல ஆயில் கம்பெனியின் ஒப்பந்த ஊழியனாக அங்கு வேலை செய்கிறான். இவனைப் போலவே இந்தியாவிலும், மற்றுமுள்ள உலக நாடுகளிலிருந்தும் பல பேர் அந்நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றிருக்கிறார்கள்.

வேலையை முடித்த ஒரு மாலைப் பொழுதில் பேருந்தில் ஏறச் சென்றிருக்கிறான் தினேஷ். வாகனத்தின் முதல் படியில் காலை வைக்கும் பொழுது ஒரு துப்பாக்கி அவனுடைய முதுகில் வைக்கப்படுகிறது. சப்தமின்றி வண்டியில் ஏறுமாறு ஸ்பானிஷ் மொழியில் சொல்கிறான் அந்த கடத்தல்காரன். உயிர்பிழைத்தால் போதுமென்று சமிக்ஞைக்குக் கட்டுப்பட்டிருக்கிறான் தினேஷ். இவனைப் போலவே வண்டியில் இருந்த பலரையும் பிணைக் கைதிகளாக வைக்கின்றனர். என்னுடைய நண்பனையும் சேர்த்து, வாகனத்தில் இருந்த எல்லோருடைய உடைமைகளையும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர் கொள்ளையர்கள். இதன் உச்சமாக பிணைக்கைதிகள் இருந்த வண்டியை காவல் நிலையத்தின் அருகிலிருந்த மரத்தின் கீழ் நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அப்படியெனில் சட்டமும் ஒழுங்கும் எந்த அளவில் இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

“கிச்சா... இது வெனிசுலாவுல ரொம்ப சாதாரணம்... ஆனால் சினிமா ஹீரோ மாதிரி எதிர்த்து சத்தம் போடாம அவங்க கேக்கறத கொடுத்தடனும்... இல்லன்னா சுட்டுடுவானுங்க... சிலதப்ப நம்ம போட்டிருக்க டிரெஸ் அவங்களுக்கு புடிச்சிருந்தா – அதையும் கழட்டிக் கொடுக்கச் சொல்லுவாங்க... நம்மள ஜட்டியோட நிக்க வச்சிடுவாங்க...” என்று சாதாரணமாகக் கூறினான் அவன்.

“என்னடா இப்படி சொல்ற...? சாவேஸ் இருக்க நாட்டுலையாடா இப்படி நடக்குது...?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

“எல்லா அரசியல்வாதியும் அவ்வலோதாண்டா... ஒவ்வொரு வீட்டுலயும் நாலு கள்ளத் துப்பாக்கியாவது இருக்கும் அங்க... அதெல்லாம் சாவேஸ்-கு நல்லாவே தெரியும். இந்த மாதிரி திருட்டு, கொல்லைன்னு நடக்கறதும் தெரியும்... ஆனா அவர் ஒண்ணுமே செய்யறது இல்லடா...” என்றான்.

வெனிசுலா அதிபர் சாவேஸ் இறந்த ஒரு மாத காலத்தில் என்னுடைய பள்ளிகாலத் தோழன் தினேஷ் இந்தியா வந்திருந்தான். அவனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுதுதான் மேற்கூறிய சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டான். மேலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் பலரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதையும் பகிர்ந்துகொண்டன். “கெட்டவனாக மாறினால் தான் ஜனத்தோடு ஜனமாக தற்காலத்தில் வாழ முடியும்” என்பதை ஒரு சமூகமே ஏற்றுக்கொண்டால் என்னவாகும் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஓர் உதாரணம்.

இதுபோன்ற வழிப்பறிகள் தூர தேசத்தில் மட்டுமே நடப்பதில்லை. சென்னை கொளத்தூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கச் சங்கிலித் திருட்டில் ஈடுபடுகிறான். பூந்தமல்லி அருகிலுள்ள அரசுக கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் நூறு பவுன் தங்க ஆபரனங்களைத் திருடி இருக்கின்றனர். இது போன்ற பல குற்றச் சம்பவங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள மாணவர்கள் & வேலையில்லாப் பட்டதாரிகள் ஈடுபடுகிறார்கள். குற்றவாளிகள் பிடிபட்டதும் சொல்லும் காரணம் தான் மேலும் வியப்படைய வைக்கிறது. “மசாஜ் சென்டர் செல்லவும், பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும் ஆடைப்பட்டுத் தான் திருடினோம்” என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

“கெட்டவனாக மாறினால் தான் ஜனத்தோடு ஜனமாக தற்காலத்தில் வாழ முடியும்” என்ற ஒற்றை மேற்கோளில் நம்பிக்கைக் கொண்டு - ஒரேயொரு நேர்மையான நல்ல அரசியல் வாதியையும், வேலையில்லாமல் சுற்றித் திரியும் சில இளைஞர்களையும் கூட்டாகச் சேர்த்துக்கொண்டு (ஜனரஞ்சகத் தன்மையில் ஹாஸ்யத்துடன்) மேம்போக்கான தமிழ் சினிமா ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையடித்திருக்கும் படம் தான் “சூது கவ்வும்”.

வேலையற்றவனின் ஒருநாள் பகல் வாழ்வு எவ்வளவு சிரமங்கள் நிறைந்தது என்பதை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும். எண்பதுகளுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்தவர்கள் இதன் முழு அர்த்தத்தை உணர்ந்தவர்கள். ஆனால், தொண்ணூறுகளில் துவங்கி இரண்டாயிரமாவது ஆண்டு வரையுள்ள பத்தாண்டுகள் பட்டதாரிகளின் பொற்காலம் என்று தான் சொல்லவேண்டும். தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் கலாச்சார வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தொழில் வளர்ச்சியின் காரணமாக மனிதவளத்தை நிரப்ப ஏகப்பட்ட படிப்புகளும் முளைத்தெழுந்தன. படிக்காததால் வேலையில்லை என்ற நிலைமாறி, லட்சக்கணக்கானோர் படித்து பட்டம் பெற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் முழி பிதுங்கி நிற்கின்றனர். ஒரு நிலையில் இது போன்றவர்கள் தற்கொலைக்கான முடிவைக் கையில் எடுக்கின்றனர். இல்லையேல் குற்றச் செயல்களைக் கையில் எடுக்கின்றனர். இதில் இரண்டாம் வகையினரின் சிலநாள் வாழ்வினை சித்தரிக்கும் படம் தான் இது.

ஐந்து நட்சத்திர ஓட்டலில் கார் பார்க்கிங் செய்யும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவனும், தகாத செயலில் ஈடுபட்டதாக ஒரு பெண்ணால் பழி சுமத்தப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவனும் சென்னையில் அறை எடுத்துத் தங்குகின்றனர். அவர்களுடன் நயந்தாராவிற்கு ஒன்னரை லட்சம் செலவு செய்து சிலை வடித்தவன் சுற்றத்தாரால் துரத்தியடிக்கப்பட்டு இவர்களுடன் இணைந்து கொள்கிறான். இவர்களின் பிறவிப் பயன் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இல்லாத ஹீரோயிநியுடன் கற்பனையாக வாழும் சைக்கோ கடத்தல்காரனான “தாஸ்” என்கின்ற விஜய் சேதுபதியிடன் சென்று சேர்வார்களா? ஐந்து கட்டளையிட்டுத் திருடிக்கொண்டு வரும் விஜய் சேதுபதியை இந்த மூவர் கூட்டணி பெரிய திருட்டிற்கு இழுத்துச் செல்கிறது. இவர்களால் கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையே இவர்களால் கவரப்பட்டு, கேபினட் மந்திரி ஒருவரின் மகனைக் கடத்த வேண்டுகோள் வைக்கிறான்.

நேர்மையான மந்திரியின் மகன் ஜகஜ்ஜாலக் கில்லாடி. வேலையற்றவனான அவனும் இவர்களுடன் கூட்டுக் கடத்தலில் ஈடுபடுகிறான். “கடத்தல், கடத்தியதால் கடத்தல், கடத்தியதற்கு கடத்தியதால் மீண்டும் கடத்தல்” என திரைக்கதை நுட்பமாகச் சுழல்வதால் திரைப்படத்தினை சோர்விலிருந்து மீட்க ஒரு என்கவுண்டர் போலீஸ். சைக்கோ திருடனுக்கு எல்லா விதத்திலும் அம்சமாகப் பொருந்தும் சைக்கோ போலீஸ் இவர். திருடர்களை நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் இந்த போலீஸ். ஆனால் மாந்திரியின் மகன் அவர்களைக் காப்பாற்றுகிறான். நீதிமன்றம் அவர்களை நிரபராதி என விடுதலை செய்கிறது. என்றாலும் படத்தின் இறுதியில் மந்திரியின் மகனைத் தவிர்த்து இந்தக் கூட்டுக் களவாணிகளை என்கவுண்டர் செய்ய தனியொரு இடத்திற்கு கடத்திச் செல்கிறார் அந்த போலீஸ். விதியின் பயன் அவரது பின்புறத்தைக் கள்ளத் துப்பாக்கியின் ரவை துளைக்கிறது. ஆகவே இவர்கள் தப்பிக்கிறார்கள்.

பாத்திர வார்ப்பும், நடிகர்களின் இயல்பான நடிப்பும், வசன உச்சரிப்பும் படத்தினை தொய்வில்லாமல் கொண்டு செய்கின்றது. குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்பை வெகுவாகப் பாராட்டலாம். ஆங்கிலத்தை கொத்திக் குதறி அவர் பேசுவதிலாகட்டும், இல்லாத பெண் தோழியுடன் உரையாடுவதிலாகட்டும், குடித்துவிட்டு கும்மாலமடிப்பதிலாகட்டும் மற்ற நடிகர்களை விஞ்சி நிற்கிறார். கடைசி காட்சிகளின் இருட்டறையில் போலீசிடம் அடிவாங்கும் பொழுது சேதுவின் உடல்மொழி சிறப்பாக இருக்கிறது.

திரையாக்கம் செய்யத் தேர்ந்தெடுத்திருக்கும் கரு முக்கியமாகத் தான் படுகிறது. ஏனெனில் சூதுதான் தற்கால வாழ்வை நகர்த்திச்செல்கிறது. இப்படிப்பட்ட முக்கியமான எதிர்மறை கருத்தை முன்வைக்கும் பொழுது, கலைஞனாக – சினிமா படைப்பாளியாக சமூகம் சார்ந்த முழிப்பும் அக்கறையும் நிச்சயம் வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் திருட்டை மொத்த இளைஞர் பட்டாளமுமே சிறு உறுத்தலும் இல்லாமல் காமெடி என்ற பெயரில் கண்டு களிக்கிறது. உண்மையில் தத்தமது உள்மன ஆசைக்குத் தீனியாக இதனைக் கருதுகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. படத்தின் மூலம் இயக்குனர் நலன் குமாரசாமி என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆழ்ந்து எச்சரிக்கையுடம் யோசிக்க வேண்டி இருக்கிறது. அப்படி சிந்திக்கும் வேலையில் அறிமுக இயக்குனராக சினிமா வியாபாரத்தில் வெற்றிவாகை சூடிய நலன் குமாரசாமி, படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டிய சமூக அறம் சார்ந்த விஷயத்தில் இவர் தோல்விகண்டு நிற்கிறார் என்பதுதான் முற்றிலும் உண்மை.

சினிமாவைக் கவ்வும் சூது

6 comments:

  1. I beg to differ.... Should all cinema have social responsibility? Its a form of communication.... equally is a song or a book or a painting or even a joke..... why isnt there much debate on those having social responsibility.... i guess ppl tend to talk more on those that is only popular.....

    ReplyDelete
  2. அய்யோ! என்னா அற உணர்வு! ஆனா அருதப் பழசு.

    ReplyDelete
  3. @ஸ்ரீகாந்த் - ஓர் அரசியல்வாதி பொதுமேடையில் சுவாரஸ்யத்திற்காக வேண்டி தகாத கருத்துக்களை முன்வைத்துப் பேசினால் - அவரை சமூக விரோதி போல பார்க்கும் சமூகம்... அதே கருத்துக்களை ஓர் இயக்குனர் சினிமாவில் சுவாரஸ்யத்திற்காக வேண்டி திணித்தால் என்டர்டெயின்மென்ட்டாகப் பார்க்கும் மனநிலை எனக்கு புரிபடவே மாட்டேன் என்கிறது.

    அரசியலைப் போலவே சினிமாவும் வியாபாரம். மேடைப் பேச்சைக் காட்டிலும் சினிமா பாதாளம் வரை பாயும். அப்படி இருக்க... சினிமாவை நுட்பமாகப் பார்ப்பது தவறா?

    ReplyDelete
  4. @சுந்தர் அண்ணே...

    இந்தப் படத்துல வர அரசியல் வாதி கணக்கா இல்ல இருக்கு... நேர்மை என்பது அருதப் பழசுதான்...!

    :-)

    ReplyDelete
  5. கிருஷ்ணன் அவர்களே! "எதிர் மறையான கருத்தை" முன் வைக்கும் போது நீங்களும் அதே தவற்றை செய்கிறீர்களே! வெனிசூலாவில் மட்டுமல்ல! நைஜீரியாவில் ,ஆப்பிரிக்க நாடுகளில் , நடக்கிறது ! இந்தியவில் இருந்து போன அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற என் உறவினர் சொல்லியிருக்கிறார்! (நஜிரியா) .அதனை சாவோஸ் ஆட்சி தன் welfare measure குறைத்துள்ளது என்ற உண்மையையும் சொல்லியிருக்கலாம்! "சூது கவ்வும்" ! நிச்சயமாக ! ---காஸ்யபன்.

    ReplyDelete
  6. என்னுடைய நண்பனும் இங்கிருந்து சென்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் சொல்லியதையே நான் பகிர்ந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் அவனுடைய அனுபவத்தை விரிவாக எழுதி அனுப்புமாறு கேட்டிருக்கிறேன் காஷ்யபன்.

    /-- சாவோஸ் ஆட்சி தன் welfare measure குறைத்துள்ளது என்ற உண்மையையும் சொல்லியிருக்கலாம்!--/

    குறைத்திருக்கிறது எனில் எந்த அளவில்...? முப்பது ஆண்டுகளாக சாவேஸ் தானே இருந்திருக்கிறார். முப்பது வருடங்களாகக் குறைத்துக் கொண்டே இருந்திருக்கிறார? போன்ற ஐயங்கள் எழுகிறது தோழர். எல்லா அரசியல் வாதிகளும் நம்பகத் தன்மையை ஏற்படுத்த இதுபோலச் செய்வது சகஜம் தானே...!

    ReplyDelete