Tuesday, May 21, 2013

பாலுமகேந்திராவின் நேர்மை


கலந்துரையாடல் மற்றும் விவாதம் சார்ந்த ஆரோக்கியமான முன்னெடுப்புகள் படைப்பு ரீதியாகச் செயல்படும் கற்பனாவாதிகளிடமும், நம்முடைய சூழலிலும் இருக்கிறதா என்பது சந்தேகம் தான். முரணான எதிர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நட்புடன் அணுகும் மனப்பாங்கு அரிதிலும் அரிதாகத் தான் இருக்கின்றது.

எழுத்தாளர் மற்றும் விமர்சகர் கௌதம சித்தார்த்தனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். திரைப்படங்களைப் பற்றிய கறாரான விமர்சனங்கள் எழுதக் கூடிய நண்பர் என்பதால் தான் “எதற்கும் கேட்டு வைப்போமே...!” என்று கேட்டேன்.

“கெளதம்... நீங்கள் விமர்சனம் எழுதுகிறீர்கள் சரி... அதற்கு முன்பு நீங்கள் ஒரு சிறுகதையாளரும் கூட. அப்படி இருக்கையில் உங்களுடைய விமர்சனங்கள் –நல்ல நண்பர்களையும் எதிரிகளாக்கி விடுமே? எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்றேன்.

“அட... போங்க தலைவா...! அதெல்லாம் எவ்வளவோ பார்த்துட்டோம்....” என்றார்.

(“எஸ்ரா, ஜெமோ” போன்றவர்கள் நூறு சிறந்த சிறுகதைகளில் இவருடைய கதையையும் சேர்த்தால் தான் – “கௌதம சித்தார்தன்” போன்றவர்கள் சிறுகதையும் எழுதி இருக்கிறார்கள் என்று தற்கால வாசக உலகம் ஏற்றுக்கொள்ளும். இல்லையேல் கஷ்டம் தான். சிறுகதை நாவல் சார்ந்த எத்தனையோ விமர்சனக் கட்டுரைகள் அந்தந்த காலங்களில் நிச்சயம் வந்திருக்கும். அவற்றை வசித்து வாசகர்கள் ஏன் தெரிந்துகொள்ள முற்படுவதில்லை என்ற புதிர் நீண்ட காலமாக எனக்கு இருக்கிறது. தனிப்பட்ட ஒரு நபர் விரும்புவதை – அவருடைய ஒளிவட்டம் கருதி மற்றவர்களும் விரும்பக் கூடிய காலகட்டத்தில் தான் இன்னும் இருக்கிறோம் என்பது வேதனையான விஷயம். இணையத்தில் எதையோ ஒன்றை எழுத வேண்டும் என்று அவர்களும் எழுதுகிறார்கள். வாசகர்களும் அவர்களுடைய பகிர்தல்கலையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவற்றை பரப்புரை செய்கிறார்கள்.)

சரி விஷயத்திற்கு வருவோம். கௌதம சித்தார்த்தனுடன் மேலும் கதைக்களானேன்.

“ம்ம்... சரி போகட்டும் கௌதம்.... கறாரான விமர்சனத்தை முன் வைத்தும்... கருத்து மோதலை மறந்துவிட்டு உங்களுடன் தொடர்பு கொண்டு பேசிய யாரேனும் ஒரேயொரு சினிமா படைப்பாளியாவது இருக்கிறார்களா?” என்று கேட்டேன்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் “அட்டகத்தி ரஞ்சித்” என்றார். தீராநதியில் கௌதமின் விமர்சனத்தைப் படித்துவிட்டு செல்பேசியில் அழைத்து - அவர் எழுதிய விமர்சனம் சார்ந்து பாராட்டிப் பேசினாராம். அதிலுள்ள சில மாற்றுக் கருத்துக்களையும் முன்வைத்தாராம். இத்தனைக்கும் ரஞ்சித்தின் முதல் படம் “அட்டகத்தி” என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் கோலோச்சும் அனைவருக்கும் இருக்க வேண்டிய தன்மையான குணம் இது.

ஆடுகளம் திரைப்படம் தேசிய அளவில் பலப்பல விருதுகளை அள்ளிய தருணம் அது. தரமணி திரைக் கல்லூரிக்கு அந்தப் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனை மாணவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பேச அழைத்திருக்கிறார்கள். “ஆடுகளம்” குறித்த பல கேள்விகளையும் அந்த சமயத்தில் மாணவர்கள் எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவு பிரிவில் படிக்கும் ஒரு மாணவர் ஆடுகளத்தின் DI சார்ந்த கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.

“சார்... ஆடுகளத்தின் DI (Digital intermediate) வொர்க் – அந்தப் படத்துக்கு என்ன தேவையோ... அது சரியா இல்லாதமாதிரி இருக்குங்களே சார்...?” என்று படத்தின் கலர் டோன் பற்றிய கேள்வியை ஒளிப்பதிவு மாணவர் முடிக்கும் முன்பே இயக்குனர் வெற்றிமாறன் குறுக்கிட்டிருக்கிறார்.

ஞாயமாக வெற்றிமாறன் பதில்தனே சொல்லி இருக்க வேண்டும். DI சார்ந்த பதிலாகத் தானே அதுவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு முக்கியமான மடைமாற்றலை வெற்றிமாறன் அங்கே செய்திருக்கிறார்.

கேள்விகேட்ட மாணவரைப் பார்த்து “உங்கள விட பாலு மகேந்திரா நல்ல ஒளிப்பதிவாளர்னு நான் நம்புறேன்... அவரே இந்தப் படத்தைப் பார்த்துட்டு DI வொர்க் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு சொல்லிட்டாரு.” என்றாராம். கேள்வி கேட்ட ஒளிப்பதிவு மாணவர் வாயடைத்துப் போய் இருக்கையில் அமர்ந்தாராம்.

ஒரு திரைப்படக் கல்லூரி மாணவன் – திரைப்படம் சார்ந்த நுணுக்கமான கேள்வியைக் கேட்கிறான் எனில் அதற்கு நேரடியான ஞாயமான பதிலைத் தராமல் - தனது குருவான, வாத்தியாரான பாலுமகேந்திராவை, வெற்றிமாறன் கேடயமாகப் பயன்படுத்தி சூழலை சமாளித்து இருக்கிறார். விழாவினை எப்படியும் கல்லூரி இயக்குனராக இருந்தவர் (ஸ்ரீதர்) தலைமை தாங்கி இருப்பார். இயக்குனர் பிரிவு துறைத் தலைவராக இருந்தவர் (ரவிராஜ்) உடன் இருந்திருப்பார். ஒளிப்பதிவு துறைத் தலைவர் (ஜிபிகே) அருகில் இருந்திருப்பார். இவர்கள் எல்லாம் வெற்றிமாறனின் இந்த பதிலை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்பதை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. (ஜிபிகே எனும் கிருஷ்ணன் பிசி ஸ்ரீராமிடம் அசோசியேட்டாக இருந்தவர். திரைக்கல்லூரியில் பணிபுரிபவர்களில் திறமையானவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.)

கேள்வி கேட்கும் மாணவனை வகுப்பறையில் மட்டுமல்ல, பொதுவாக நடக்கும் கலந்துரையாடலிலும் வாயடைக்கும் வேலையைத் தான் நிர்வாகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அல்லது அப்படி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறனே இதனை மறந்திருப்பார். இதனை இப்பொழுது நான் ஏன் கிளற வேண்டும்?

கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பிறந்த நாள். பாலு கேக் வெட்டும் வைபவம் சமூக இணையதளத்தில் பார்க்கக் கிடைத்தது. அருகில் பாலுவின் சீடர்கள் எல்லோரும் இருக்கின்றனர். வெற்றிமாறனும் அருகில் நின்று கொண்டிருந்தார். பாலுவின் திரைக்கல்லூரி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் படித்த ஒருவர் என்னுடைய நண்பர். நீண்ட நாட்களுக்கு முன்பு அந்த நண்பர் என்னிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்தார். வெற்றிமாரனையும் பாலுவையும் ஒன்றாகப் பார்க்கும் பொழுது நண்பர் பகிர்ந்த விஷயம் தான் நினைவிற்கு வந்தது.

ஒருமுறை பாலுமகேந்திரா அவருடைய குரும்படத்தைத் திரையிட்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாராம். அதிலொரு மாணவர் திரையிடப்பட்ட குறும்படத்தில் இருந்த தற்கப் பிழையைச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்டாராம். பாலுமகேந்திரா சமாளிக்க முயன்றிருக்கிறார். மாணவர் மேலும் மேலும் கேள்வியைக் கேட்டு நெருக்குதல் கொடுத்திருக்கிறார். பாலுவால் சூழலை சமாளிக்க முடியவில்லை. மாணவரிடம் கோவத்தை வெளிப்படுத்தி அடக்கியிருக்கிறார். வகுப்பு முடிந்து எல்லோரும் சென்றுவிட்டார்கள். பாலுவும் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மறுநாள் பாலு திரைக்கல்லூரிக்கு வந்திருக்கிறார். கேள்வி கேட்ட மாணவரை அழைத்தாராம்.

“இங்க பாரு (...............)... நான் இத்தன வருஷமா தரமான படங்களைத் தான் கொடுத்திருக்கேன்னு கர்வத்தோட இருக்கேன். எல்லா படத்தையும் பார்த்துப் பார்த்துதான் செஞ்சிருக்கேன். ஆனா... அதுல நீ ஒரு கொற சொல்லும் போது என்னால தாங்க முடியல... அதான் நேத்து கோவப்பட்டுட்டேன்... மத்தபடி நீ புத்திசாலிதான்... நீ சரியான கேள்வியைத் தான் கேட்டிருக்க...” என்றாராம்.

ஒரு படைப்பாளியாக, ஆளுமையாக இங்குதான் பாலுமகேந்திரா வெற்றி பெற்று நிற்கிறார். ஏறக்குறைய ஏழு தேசிய விருதுகளை பெற்றவர் பாலு என்பது குறிப்பிடத் தக்கது. இயக்குநருக்காக மூன்றுமுறை பெற்றிருக்கிறார். “கேமரா, எடிடிங், திரைக்கதை, இயக்கம்” என பல துறைகளிலும் தேசிய விருது பெற்ற ஒரே திரைக் கலைஞர் இவராகத் தான் இருப்பார். தன்னுடைய தவறை உணர்ந்து அதற்கான வருத்தத்தையும், சரியான பதிலையும் – வளரும் கலைஞர்களான தன்னுடைய திரைப்பள்ளி மாணவருக்குக் கொடுத்திருக்கிறார். தன்னிடம் ஒரு கேள்வியை அல்லது விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் எனில் அதற்கான தன்னிலை விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். (வார்த்தை ஜாலத்தால் செய்த தவறை ஞாயப்படுத்தும் பதில் அல்ல. சரியான விளக்கம். தவறு எனில் அதை ஏற்றுக்கொள்ளும் தன்னிலை விளக்கம்.) பாலு மகேந்திராவிற்கு அந்தத் தன்மை இருக்கிறது. அவரிடம் சினிமா பயின்றவர்களுக்கும் அது இருப்பின் மிக்க மகிழ்ச்சிதான்.

இந்த மாதிரியான உங்களுடைய மென்மையான குணங்கள் வெளியில் தெரியாததால் தான் பாலு... தேவையில்லாமல் எதிர்மறையாக விமர்சிக்கப் படுகிறீர்கள். அதனால் தான் இன்னும் கூட உங்களுடைய உண்மையான முகம் வெளியில் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றுதான் அந்த நண்பர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தமிழ் சினிமாவின் போக்கை திசை திருப்பியதில் உங்களுடைய பங்களிப்பு நிறையவே இருக்கிறது. போலவே இந்தச் சம்பவத்தைப் பகிர்வதில் மூலம் சமகால இயக்குனர்கள் - கேள்வி கேட்பவர்களிடமும், விமர்சகர்களுடமும் எப்படி தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற போக்கையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான் பகிர்ந்துகொண்டேன். இதுவரை யாரும் பெறாத அளவிற்கு தேசிய அங்கீகாரம் பெற்றுவிட்டீர்கள். எனினும் அந்த அளவிற்கு உங்களை தென்னிந்திய சமூகம் கொண்டாடவில்லையோ என்ற ஏக்கம் உங்களுடைய ரசிகர்களான எங்களுக்கு இருக்கின்றது. இதோ அடுத்ததாக நடிக்கவும் செய்கிறீர்கள். எல்லோரும் ஆவலுடன் இருக்கிறோம். சீக்கிரமே திரைக்கு வந்துவிடுங்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலு.

1 comment:

  1. நல்ல பதிவு அண்ணா!
    நானும் பாலு மகேந்திரா அவர்ளை "தலைமுறை" படத்தின் மூலம் மீண்டும் காண ஆவல் கொள்கிறேன்.

    ReplyDelete