Thursday, May 2, 2013

சினிமாவைக் கவ்வும் சூது

சினிமா என்பதே பொழுதுபோக்கும் அம்சம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், சினிமாவைக் கொஞ்சம் உற்று கவனிப்பத்தின் மூலம், சமூகத்தின் உளவியலையும் நெருக்கமாக உணர முடியும் என்று தோன்றுகிறது. ஆரம்பகால சினிமாவில் இதிகாசக் கதைகளும், புராணக் கதைகளும் திரையாக்கம் செய்யப்பட்டன. அதனை ஒட்டி சமகால சுதந்திர வேட்கையை முடுக்குவிக்கும் கதைகளும் படங்களாக எடுக்கப்பட்டன. ஐம்பதுகளின் முற்பகுதி இப்படி என்றால், பராசக்தி போன்ற முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்கள் – காதல், கலப்புத் திருமணம், சாதிய அடக்குமுறை போன்ற திரைப்படங்களை எடுக்க ஒரு வெளியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அதன் பின்னர் ‘கல்லூரி, காதல், செண்டிமெண்ட்’ என தொண்ணூறுகளின் இறுதிவரை இந்திய சினிமா சகமனித வாழ்வின் நிறைகளையும் குறைகளையும் தண்டவாளமாகக் கொண்டு பயணம் செய்கின்றது. அதன் பிறகு ‘சீழ் பிடித்த அரசியல், தீவிரவாதிகளின் ஊடுருவல்’ என பலவும் திரையாக்கங்களாக முன் வைக்கப்பட்டன. இவையாவும் சமூகத்தில் நடப்பவைதான். நடந்துகொண்டு இருப்பவை தான். ஆகவே சமூகத்தின் பிரதிபலிப்பாக திரைப்படங்களும், திரைப்படங்களின் ஒட்டுண்ணியாக சமூகமும் இருந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மேற்சொன்ன காலங்களில் வெளிவந்த திரைப்படங்கள் நல்லவைக்கும் கெட்டவைக்குமான மோதலாக உச்சம் பெற்று, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... எனினும் தர்மமே வெல்லும்” என்ற அடிப்படையில் நல்லவை திரைப்படத்தின் இறுதியில் கவுரவிக்கப்படும். ஆனால் தற்கால சினிமாவில் இந்த அடிப்படை ஆட்டம் காண்கிறது. “கொலை, குத்து, ரவுடியிசம், களவு, என்கவுண்டர், ஆள்கடத்தல்” போன்ற விஷயங்கள் ஹீரோயிசமாக கொண்டாடப்படுகிறது. இது சார்ந்து தான் என்னுடைய எண்ணங்களும் விரிகிறது.

நண்பர்களின் பழக்கமும் நேசமும் நகரத்தில் நுழைவதற்கு சிபாரிசுக் கடிதம் போல பலருக்கும் இருக்கின்றது. அதற்கேற்ப நகரமானது நாள்தோறும் மனிதர்களைத் திணித்துக் கொள்கின்றது. பிதுங்கி வழியும் நகர மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் வார்த்தைகளால் சொல்லி மாளாதவை. ஒருபுறம் நகர வாழ்வின் கோரக் கரங்களால் ஒடுக்கப்படும் அடித்தட்டு உதிரி மனிதர்களின் வாழ்வானது “வழக்கு எண் 18/9” போன்ற திரைப்படங்களின் மூலம் ரத்தமும் சதையுமாக திரையாக்கம் செய்யப்படுகிறது. இன்னொரு புறம் வன்முறைகளும் வக்கிரங்களும் நிறைந்த மனிதர்களின் கதையென கூலிப் படையினரின் அதீத ரவுடித் தனங்கள் கற்பனையாகத் திரையாக்கம் செய்யப்படுகின்றன. பாட்சா துவங்கி ‘தீனா, ஜெமினி, பீமா, புதுப்பேட்டை, பொல்லாதவன்’ என பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவற்றின் அடுத்தகட்ட நகர்வாக இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களின் படங்கள் தொழிநுட்ப ரீதியில் கொண்டாடப்படுகின்றன. திரைக்கதையின் வேகம் சார்ந்து மெச்சப்படுகின்றன. ஆனால் திரைப்படங்களின் உள்ளடக்கமானது கெட்டவைகளின் ரசவாதங்களாக இருக்கின்றன.

‘ஆள்கடத்தல், பணத் திருட்டு’ போன்றவை மாமாங்க ஆண்டுகளாகவே திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. நகைச்சுவையின் அடிப்படையில் இந்த அம்சங்களைத் தொக்கி நிற்கும் படங்களாக, “மைக்கல் மதன காமராஜன்” முதல் “உள்ளத்தை அள்ளித்தா” வரை பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ரிசர்வ் பேங்கின் பணத்தைத் திருட எத்தனிக்கும் மணிரத்னத்தின் ரொமாண்டிச வகையில் சேரும் “திருடா திருடா”, கொஞ்சம் காமெடி கொஞ்சம் சீரியஸ் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட ஷங்கரின் “ஜென்டில்மேன்” போன்ற படங்களைக் கூட இந்தப் பட்டியலில் வைக்கலாம். (பில்லா போன்ற ஹாலிவுட் காப்பிப் படங்களை இதில் சேர்க்க இயலாது.) ஆனால் திரைப்படத்தின் இறுதியில் சமூக விரோதச் செயல்களுக்கான தண்டனை நிச்சயமாக அவர்களுக்கு இருக்கும். (இல்லையேல் நாடகத் தன்மையில் வில்லன்கள் மனம் திருந்துவார்கள்.)


இதிலிருந்து சமீப காலங்களில் எடுக்கப்பட்ட “பீட்சா, ஆரண்யகாண்டம்” போன்ற நம்பிக்கையளிக்கும் நாளைய இயக்குனர்களின் திரைப் படங்கள் வேறு திசையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி இருக்கின்றன. தனது முதலாளியிடம் கொல்லையடித்த விலையுயர்ந்த ஆபரணக் கற்களைத் திருடிவிட்டு, வேரூரில் சொகுசாக வாழ்க்கையைத் துவங்கும் கணவன் மனைவியைப் பற்றிய கதை “பீட்சா”. “எது தேவையோ அதுவே தர்மம்” என்ற அடிப்படையில் வக்கிர எண்ணத்துடன் ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைக்கும் கதையே “ஆரண்யகாண்டம்”. இந்தப் படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் அடுத்தவர்களின் பணத்தை அபகரிக்கவே சூதுடன் நடந்துகொள்கிறார்கள். அதில் வெற்றியும் அடைகிறார்கள். இந்த வரிசையில் மற்றுமொரு ஆக்கமாகத் தான் “சூது கவ்வும்” திரைப்படத்தைக் கருத வேண்டி இருக்கிறது.

தொழில்நுட்பம், திரைக்கதை, எடிட்டிங், நவீன உத்தியைக் கையாளுதல் என எல்லாவற்றிலும் சிறப்பாகச் செய்தவர்கள், சமூகப் பிரக்ஞை சார்ந்த அறத்தை நிலைநாட்டுதலில் கோட்டை விட்டிருக்கிறார்கள். நகரத்தில் வாழும் ஒன்டிக்கட்டைகள் மூவர், சைக்கோத் திருடனான விஜய் சேதுபதிக்கு நண்பர்களாகிறார்கள். புதியவர்களின் நெருக்கம் விஜய் சேதுபதியின் திருட்டுத் தொழிலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. களவுத் தொழிலின் முன்னேற்றச் சிக்கலையும், பிரச்சனையின் தீர்வுகளையும் ஹாஸ்யத்துடன் நகர்த்திச் செல்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி.

“சாலையில் நடந்து சென்ற பெண்மணியின் நகைத் திருட்டு. பார்க்கிங்கில் நின்றிருந்த கார் கடத்தல், செயின் பறிப்பு, அடையாளம் தெரியாதவரின் பிணம்” என நாளிதழில் வெளிவரும் பல சம்பவங்களில் கல்லூரி மற்றும் மாணவர்கள் தொடர்புடையவர்களாக இருப்பது வேதனையளிக்கும் சம்பவமாக இருக்கின்றது. இந்தப் படத்திலும் டிகிரி படித்த இருவர் விஜய் சேதுபதியுடன் திருட்டுத் தொழிலில் இணைகின்றனர். சின்னச் சின்ன கடத்தல்களைச் செய்பவர்கள், நிர்பந்தத்தின் காரணமாக அமைச்சர் ஒருவரின் மகனைக் கடத்துகின்றனர். ஒரு டீலிங் பேசி அமைச்சரின் மகனும் இந்தக் கடத்தலுக்கு உடன்படுகிறார் (டிகிரியில் அரியர் வைத்திருப்பவர்). ஏகத்துக்கும் லாஜிக் இல்லாமல் பயணிக்கும் இந்தத் திரைக்கதை பல இடங்களில் அரங்கத்தையே சிரிப்பலையில் அதிர வைக்கிறது. என்றாலும் கடத்தலில் தொடர்புடைய ஒருவரும் தண்டனைக்கு உட்படவில்லை. மாறாக சமூக அரசியலில் களம் இறக்கப்படுகிறார்கள். இளைய தலைமுறை இயக்குனர்கள் சமூக விரோதச் செயலை ஆதரிக்கிறார்களா? அல்லது சமூகம் நம்பும் மனசாட்சியற்ற விஷயங்களை சினிமா இயக்குனர்கள் ஆவணப் படுத்துகிறார்களா? ஒரு படம் எனில் இதனை விவாதிக்காமல் விட்டு விடலாம். தொடர்ந்து வெளிவரும் படங்கள் இந்தத் தன்மையில் இருப்பதால் இது சார்ந்த யோசிக்க வைக்கிறது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் மனத்தைக் கவர்கிறார்கள். விஜய் சேதுபதி சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் ரஜினி தான் நடித்தத் திரைப்படங்களில் நடிகராக உச்சத்தைத் தொட்டிருப்பார். “முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை” போன்ற படங்களில் நடிகனாகத் தனது முத்திரையைப் பதித்திருப்பார் ரஜினி. அதன் பின்னர் வியாபார வியூகத்தின் பற்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு, வியாபார கமர்ஷியல் ஹீரோவாக உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ரஜினியுடன் விஜய் சேதுபதியை ஒப்பிட இயலாது. என்றாலும் “தென்பெற்குப் பருவக்காற்று” நடிகராக விஜய் சேதுபதிக்கு முக்கியமானப் படம். அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் வேறு ஒரு திசையை நோக்கிப் பயணிப்பதை உணர முடிகிறது. இந்தக் கமர்ஷியல் பார்முலாவில் உன்னத நடிப்பாற்றலை இழக்காமல் இருந்தால் சரி.

நாளிதழ்களில் படித்த செய்திதான், சமூகப் பொறுப்புடன் “வழக்கு எண் 18/9” என்ற படமாக எடுக்கப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் நடக்கும் திரை விழாக்களில் பரிசையும் தட்டிச் செல்கிறது. அதே நாளிதழ்களில் படிக்கும் செய்திதான் கொஞ்சமும் சமூகப் பிரக்ஞை இன்றி காமெடி மசாலாக்களைத் தூவி இது போன்ற படங்களாகவும் முன் வைக்கப்படுகின்றது. இரண்டிற்கும் ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவைத் தருவதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. இதில் எங்கிருந்து சினிமாவைக் கொண்டு சமூக உளவியலை நாடி பிடித்துப் பார்க்க...!?

எனக்கு ஏன் வம்பு? - நல்லதோ கெட்டதோ? விருதுகளைக் குவிக்கிறீர்களோ! ரசிகர்களின் உற்சாகக் கைத்தட்டளைப் பெருகிறீர்களோ! ஆக மொத்தம் சினிமாக் கலைஞர்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன்.

7 comments:

  1. நானும் இதைத்தான் நினைத்தேன், திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது.. என்னதான் சிரித்தாலும் மனதில் ஒட்ட மறுத்துவிட்டது இந்த படம். நாளைய இயக்குனர்கள் என்று இவர்களுக்கு பட்டம் வசூல் ரீதியாக வேண்டுமானாலும் சொல்லலாம். ‘கமர்சியலை’அடுத்த களத்திற்கு கொண்டு செல்வார்களே தவிர தமிழ் சினிமாவை அல்ல...!

    ReplyDelete
  2. இது வரை நீங்கள் எழுதியவற்றிலேயே சிறப்பான தெளிவான கட்டுரை இதுதான் கிபி. வாழ்த்துகள். பாஸ்கர்சக்தி

    ReplyDelete
  3. கிருஷ்ணபிரபு நான் பாஸ்கர்சக்தி...இது வரை நீங்கள் எழுதி, நான் படித்தவற்றிலேயே சிறப்பாகவும் தெளிவாகவும் சரியான பார்வையோடும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இதுதான். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உங்களின் அன்பும் பாராட்டுகளும் எனக்கு எப்பொழுதுமே பொக்கிஷம் பாஸ்.

    :-)

    ReplyDelete
  5. சிறப்பான கட்டுரை. நான் முதன்முதலில் ”நாயகன்” பார்த்தபோது இதேபோல் நினைத்திருக்கிறேன். அதுவும்”நாலுபேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் செய்யலாம்” என்ற வசனம் எல்லாம் மணிரத்னம் படத்தில் வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. சுந்தர்வேல்.

    ReplyDelete
  6. சிறப்பான கட்டுரை. நான் முதன்முதலில் ”நாயகன்” பார்த்தபோது இதேபோல் நினைத்திருக்கிறேன். அதுவும்”நாலுபேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் செய்யலாம்” என்ற வசனம் எல்லாம் மணிரத்னம் படத்தில் வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. சுந்தர்வேல்.

    ReplyDelete