Tuesday, March 26, 2013

சூது கவ்வும் – நல்ல உதாரணம்

ஒடிசலான தேகத்துடனும் ஒட்டிய கன்னங்களுடனும் தான் - இரண்டு வருடத்திற்கு முன்பு யோகி அறிமுகமானான். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விசாரித்ததற்கு MBA படிப்பதாகக் கூறினான். அன்றொரு நாள் கேணி கூட்டம் முடிந்து, உதயம் திரையரங்கை நோக்கியவாறு நடந்து கொண்டிருந்தோம். எதிரில் கிடந்த இருள் திட்டையும், மின் விளக்கில் கசியும் மஞ்சள் ஒளியையும் மீறி பேசிக்கொண்டே நடந்தோம். கண்கூசச் செய்யும் வாகனங்களின் முகப்பொளி இடையிடையே மின்னல் போல வெட்டின. “இலக்கிய வாசகராக இருப்பாரோ!” என்ற அனுமானத்தில் தான் பேசிக்கொண்டு வந்தேன். “அண்ணா! படிச்சி முடிச்சிட்டு சினிமாவுல சேரப் போறேங்கண்ணா...!” என்றான்.

வானத்துப் பட்சியின் எச்சில் களிம்பு தலையில் கொட்டியதைப் போல உணர்ந்தேன். “மொதல்ல நல்லா படிங்க & டிகிரிய முடிங்க... அதுக்குப் பிறகு சினிமா, பொடலங்கா, பச்ச மிளகாய், காய்கறிக் குருமா” என மத்ததையெல்லாம் பார்த்துக்கலாம் என்றவன், “ரிசல்ட் வந்தா உங்கள டிரேஸ் பண்ணுவேன் ஜாக்கிரதை” என்று எச்சரித்தேன். சிரித்துக்கொண்டே அன்றைய தினம் பிரிந்து சென்றான். அதன் பிறகும் ஒன்றிரண்டு இலக்கியக் கூட்டங்களில் சந்தித்ததுண்டு.

என்றாலும் கல்லூரி இறுதியாண்டில் இருக்கும் பொழுது எதற்காகவோ செல்பேசியில் அழைத்தவன் - உரையாடல் நிறைவடையும் பொழுது “அண்ணா! விஜய் டிவி சீரியல்ல நலன் சார் கிட்ட வொர்க் பண்றேன்’ங்கண்ணா. அவரும் எங்க ஊர்க்காரருதான்...” என்றான். “இத்தோட இவன் கத காலி டோய்...”-ன்னு தான் நெனச்சேன். சில நாட்கள் தொடர்பற்று இருந்தோம். நாட்களும் உருண்டோடிவிட்டது.

எனக்குத் தெரிந்த நண்பரொருவர் பரிச்சார்த்தமாக டெலி ஃபிலிம் எடுக்கத் தொடர்புகொண்ட போது, யோகியைத் தான் அழைத்துப் பேசினேன். ஒன் லைன் கேட்டவன் குழம்பிய முகத்துடன் பின்வாங்கினான். “இந்த ப்ராஜச்ட்ல நான் உதவி செய்ய முடியாது’ன்னா” என்றான். ஏனெனில் என்னுடைய நண்பரின் கதையும், யோகியின் இயக்குனர் நலனின் கதையும் ஒத்த தன்மையுடையவை. (ஏற்கனவே அதைப் பற்றி ஜாடை மாடையாக எழுதியிருக்கிறேன்: பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 01

நலனின் அந்தக் கதை திரைவடிவமாக சில நாட்களில் வெளிவர இருக்கிறது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா - நாளை காலை சத்தியம் திரையரங்கில் அடக்கமான முறையில் நடக்க இருக்கிறது. எகவே, “சூது கவ்வும்” முகநூல் பக்கத்தில் - இதுவரை (Official FaceBook Page) பகிர்ந்திருந்த விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலொரு டிசைன் எனது கவனத்தை ஈர்த்தது. பொதுவாக “தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசை இயக்குனர், வசனகர்த்தா, கவிஞர்” போன்றவர்களுடைய பெயர்கள் தான் விளம்பர டிசைனில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் “தயாரிப்பு மேற்பார்வை, துணை இயக்குனர் & உதவி இயக்குனர்”-களின் பெயர்களும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இப்பொழுது தான் முதன் முறையாகப் பார்க்கிறேன். நாளிதழின் செவ்வகப் பெட்டியினுள் எல்லா நபர்களின் பெயர்களையும் குறிப்பிட இயலாது. ஆனால் இணைய விளம்பரங்களில் அது சாத்தியம் தானே! இருந்தாலும் யாரும் அது சார்ந்த அக்கறையை எடுத்துக் கொள்வதில்லை. நலன் தான் முதன் முதலில் அதனைத் துவக்கி வைக்கிறார். 


“இந்தச் சின்ன விஷயத்தைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கண்டுபிடித்துப் பாராட்ட வேண்டுமா?” என்ற கேள்வி எழலாம். இதையெல்லாம் நுட்பமாக கவனிக்கப் படாததால் தான் சிலர் வஞ்சிக்கப் படுகிறார்கள்.

இந்த ஆண்டு வெளிவந்த செலப்ரிட்டி இயக்குனர் ஒருவரின் படத்தில் பல உதவி இயக்குனர்கள் வேலை செய்திருக்கிறார்கள். படம் நல்ல முறையில் காட்சிப்படுத்தப்பட்டு, திரைக்கும் வந்துவிட்டது. ஏறக்குறைய ஒரு வருடம் அந்தப் படத்தில் வேலை செய்த, ஓர் உதவி இயக்குனரின் பெயர் டைட்டில் கார்டில் சேர்க்கப் படவில்லையென அவரது நண்பர்கள் வருத்தப்பட்டார்கள். படத்தின் இயக்குனருக்கும், உதவி இயக்குனருக்கும் பிரச்சனை என்றால் கூடப் பரவாயில்லை. அட... தயாரிப்பாளருடன் வாய்ச்சவடால் என்றால் கூட பரவாயில்லை. ஓரளவு ஜீரணித்துக் கொள்ளலாம். போஸ்ட் புரொடக்ஷன் நடக்கும் சமயத்தில், அசோசியேட் இயக்குனருடன் ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக – இயக்குனருக்குத் தெரிந்தோ தெரியாமலோ உதவி இயக்குனரின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கேற்றார் போல அந்த பெரிய இயக்குனரும் எந்த உதவி இயக்குனரிடமும் நேரடியாகப் பேச மாட்டாராம். அசோசியேட் மூலமாகத் தான் அடுத்தவர்களிடம் பேசுவாராம். (ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மேலதிக விவரங்கள் கிடைத்தால் அதைப்பற்றி விலா வரியாக வலைப்பதிவில் எழுத வேண்டும் என்றிருக்கிறேன்.) இது ஒரேயொரு உதாரணம் தான். இதுபோன்ற ஏராளமான விஷயங்கள் நம்மைச் சுற்றிலும், சினிமாத் துறையில் நுழையும் நண்பர்களுக்கு ஆரம்ப காலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சினிமாத் துறையில் வேலைக்கான சம்பளத்தை எதிர்பார்க்கவே முடியாது. அதுவும் உதவி இயக்குனர்களின் தினசரி வாழ்க்கை அவலத்தின் சகதியில் நீந்துவதைப் போன்றது. இவை எல்லாவற்றையும் மீறி, ஓர் அடையாளத்திற்காகத் தானே ஆர்வமிகுதியில் அடிமைகள் போல வேலை செய்கிறார்கள். அதிலும் மண்ணள்ளிப் போடும் ஒருசிலரின் பின்னரசியல் மிகுந்த வேதனைக்குரியது. இதுபோன்ற ஆயிரமாயிரம் நெருக்கடிகளை மீறித்தான் ஒருவர் தன்னுடைய ஆளுமையை சினிமாத் துறையில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் படத்தின் இதரப் பங்களிப்பாளர்களுக்கும் அக்கறையுடன் மதிப்புக் கொடுத்த நலன் குமாரசாமியைப் பாராட்ட நினைக்கிறேன். ஏ.ஆர். ரகுமான் ஆரோக்கியமான நல்ல துவகத்தை, அவருடைய தன்மையில், அவரால் முடிந்த அளவு தனது துறையில் ஏற்படுத்திக் கொடுத்தார். கருவி இசைக்கலைஞர்களின் பெயரையும், இதர இசைக் கலைஞர்களின் பெயரையும் சினிமா ஆல்பத்தின் பின்னட்டையில் குறிப்பிட்ட முதல் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமானை இன்றளவிலும் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். அது போன்ற ஒரு ஆரோக்கியமான விஷயத்தைத் தான் நலன் குமாரசாமி தனது “சூது கவ்வும்” படத்தின் இணைய விளம்பரத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நலனைப் போலவே - தலையில் கொம்பு முளைத்ததாகச் சுற்றிவரும் செலப்ரிட்டி இயக்குனர்களும், இனிமேல் முளைக்கவிருக்கும் மிடுக்கான அசோசியேட் இயக்குனர்களும், மற்ற நல்ல இயக்குனர்களும் இதனைத் தொடர்ந்தால் பாராட்டும் படி இருக்கும்.

இந்தப் படத்தில் எனக்குப் பரிச்சியமான ஒரே ஜந்து உதவி இயக்குனர் யோகி மட்டுமே! அவனுக்கும், சமீப காலங்களில் நம்பிக்கையளிக்கும் நடிகராக மிளிரும் சேதுவுக்கும், மொத்தப் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

நாளை முதல் “காதைக் கவ்வும்” இசையைக் கேட்டு மகிழுங்கள்.

# சூது கவ்வும் - நல்ல உதாரணம், என்பதை நலனின் முன்னுதாரணமான விளம்பர டிசைனுக்காக மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். யோகிக்காக “முதல் நாள் –முதல் ஷோ” பார்ப்பேன். அதன் பிறகுதான் மற்றதெல்லாம். புரிகிறது தானே!

2 comments:

  1. எல்லாவற்றையும் மீறி, ஓர் அடையாளத்திற்காகத் தானே ஆர்வமிகுதியில் அடிமைகள் போல வேலை செய்கிறார்கள்.//

    இதையெல்லாம் நுட்பமாக கவனிக்கப் படாததால் தான் சிலர் வஞ்சிக்கப் படுகிறார்கள்.//

    ஒருசிலரின் பின்னரசியல் மிகுந்த வேதனைக்குரியது. இதுபோன்ற ஆயிரமாயிரம் நெருக்கடிகளை மீறித்தான் ஒருவர் தன்னுடைய ஆளுமையை சினிமாத் துறையில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. //

    நுட்பமான அவதானிப்பு.

    ReplyDelete