Sunday, July 22, 2012

வெறுமனே சும்மா இருக்கிறேன்

“இப்போ என்னதான் செய்யுறீங்க?” என்ற கேள்வியை கடந்த இரண்டாண்டு காலமாகவே என்னைப் பார்க்கும் நண்பர்களும், உறவினர்களும், நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். “வெறுமனே சும்மா தான் இருக்கிறேன்” என்ற பதிலில் அவர்கள் உறைந்து போகிறார்கள். “இது பெரிய தப்பு இல்லைங்களா? பொறுப்பில்லாம இப்படி ஒன்னும் செய்யாம இருக்கலாமா?” என்ற கேள்வி அவர்களிடமிருந்து எழும் சமயம், “ஒன்றும் செய்யாமல் இருப்பது வேறு. சுற்றி நடப்பவற்றின் சாட்சியாக, வெற்றுக் கோப்பைபோல வெறுமனே சும்மா இருப்பது முற்றிலும் வேறு” என உதட்டிலிருந்து புன்னகை வழிய பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

“என்னமோ சாமியார் மாதிரி பேசுற...! இதெல்லாம் நல்லதுக்கில்ல... வயசு இருக்கும்போதே ஓடியாடி சம்பாதிச்சிடனும்” என்கிறார்கள்.

முற்றிலும் பயம் தான் இவர்களிடம் ஒளிந்திருக்கிறது. இறந்த காலத்தின் வேர்கள் பற்றி, நிகழ்காலத்தில் முளைவிடும், எதிர்காலம் பற்றிய நிச்சயமில்லா தன்மை பற்றிய பயம். “காலத்தை உணராமல் பயத்தை உண்மையில் போக்க முடியாது” – என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதனை பெரிதுபடுத்தி விவாதிப்பதற்கில்லை என்றாலும், ‘ஒன்றும் செய்யாமல்’ என்பது ‘வெறுமனே’-விலிருந்து துருவம் போல் விலகி நிற்கிறது என்பதை நம் மக்களுக்கு எதைக் கொண்டு புரிய வைக்க.

“Being Still is not the same thing as doing nothing” என ‘கராடே கிட்’ படத்தில் ஜேடன் ஸ்மித்திடம் (jaden smith) ஜாக்கிசான் சொல்வதுபோல ஓர் இடம் வரும். இந்த உன்னத தத்துவத்தை எத்தனைபேர் கவனித்திருப்போம். வாழ்வின் சாரமே இந்த ஒற்றை வரியில் தான் அடங்கியிருக்கிறது என்பது என்னுடைய எண்ணம். சில நொடிகளில் காற்றில் கரைந்து தேய்ந்துபோகும் இந்த ஒற்றை வரி தரிசனத்தை, பாறையானது அடைகாக்கும் உயிர்ப்புள்ள தேரையைப்போல வாழ்வெல்லாம் அடைகாக்க ஆசைப்படுகிறேன்.

புத்த நிலையின் நான்கில் ஒன்றை உரசத் துடிக்கும் பிக்குகளும், ஜென் துறவிகளும், சூபிகளும், சித்தர்களும், பக்கிர்களும் – இந்த ‘Being still’ என்ற சூட்சமத்தில் தானே சூல்கொள்ளப் போராடுகிறார்கள். அதில் தானே இன்பமும் இருக்கிறது.

“அதெப்படி வெறுமனே இருக்க முடியும்? போர் அடிக்காதா?” – என்ற கேள்வி இன்னும் சுவாரஸ்யம் நிறைந்தது.

இதற்கும் என்னிடம் பதிலில்லை. என்றாலும் ஆயிரமாயிரம் புதிர்களும், ஆயிரமாயிரம் திருப்பங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை. சிலசமயம் பேருந்துகளில் பார்த்ததுண்டு. விடுபட்ட கட்டங்களில் வார்த்தைகளையும், எண்களையும் இட்டு நிரப்பும் விளையாட்டை, நாற்பது வயதைக் கடந்தவர்கள் கவனம் பிசகாமல் விளையாடுவதைக் கண்டதுண்டு. ‘குறுக்கெழுத்து, சொதோகு’ – என ஏதேதோ பெயர் சொல்லி விளையாடுகிறார்கள். அவற்றையெல்லாம் விட வாழ்வின் யதார்த்தப் புதிரை எதிர்நோக்குவதும், ஆர்வத்துடன் சிக்கவிழ்ப்பதும் எவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது.

இங்கு சலிப்பானது எங்குதான் முளைவிடுகிறதோ தெரியவில்லை. “படிப்போ, பணமோ, புகழோ, வேலையோ, பெண்ணோ, சிற்றின்பமோ” – ஏதோ ஒன்றை அடைய விரும்புவது தவறில்லை. அதற்காக முக்காலத்தையும் அடகு வைக்க வேண்டுமா என்ன? சலிக்காத பயணமாகத் தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அதில் அறியப்படாத பல முகங்கள் தலை காட்டிவிட்டுச் செல்கிறார்கள். குளத்தில் எறிந்த கல்போல அவர்களின் நினைவுகள் சலனத்தை ஏற்படுத்த, சலிப்பானது ஆழம்கானா களிம்புச் சேற்றில் புதைந்து கிடக்கிறது என்று நினைக்கிறேன். இதுவரை சலிப்பின் சுவடைக் கூட என்னால் காண முடியவில்லை.

“உங்களுடைய டெய்லி ரொட்டின்ஸ் தான் என்ன?”

போதுமான அளவு சாப்பிடுவதும், தூங்குவதும் தான் பிரதானம். மீதி நேரத்தில் பயணம் செய்வேன். குறைவாக தமிழ் புத்தகங்கள் படிக்கிறேன். யாரேனும் சந்திக்க அழைத்தால் நேரில் சென்று உரையாடுகிறேன். தட்ஸ் இட்.

“தமிழ் புக்ஸ் படிச்சா என்ன பிரயோஜனம்? இங்கிலீஷ் புக்ஸ் படிச்சா நாலேஜ்-ஆவுது வளரும் இல்ல?”

உஹ்... வேதாளம் போல் தொடரும் கேள்வி இது. "அறிவானது நிம்மதியைக் கெடுத்து விடும். இயந்தர கதியில் ஓட நம்மைத் தயாற்படுத்திவிடும். ஆகவே அதனைப் பெருக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை" என சுருக்கமாக முடித்துக் கொள்ள பழகிவிட்டேன்.

"அப்போ... வாழ்க்கையில் என்ன தான் செய்வதாக உத்தேசம்?"

என்னைப் பார்த்து புன்னகை செய்பவர்களுக்கு புன்னகைக்கப் போகிறேன். என்னிடம் கைகொடுத்து பேசுபவர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசப் போகிறேன். அவ்வளவே...

"இதெல்லாம் உருப்படுறதுக்கான வழியில்லை...! நாசமா போகப்போற?" என்று சபிப்பதுபோல் அக்கறையாகப் பேசுகிறார்கள்.

நான் பள்ளி வாழ்க்கையில் சுமார். கல்லூரி வாழ்க்கையில் மிக மட்டம். இதையெல்லாம் மீறி ஏதோ நாலுபேர் நின்று அக்கறையுடன் பேசும்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் படிப்பில் தோல்வி கண்டபோதெல்லாம் "நீ ரொம்ப கஷ்டப் படப் போற... நாசமாப் போகப்போற" என்று பயத்தை விதைத்தார்கள். உணவகத்தின் எச்சில் டேபிளை தொடைக்கும் வேலைக்குத் தான் லாயக்கி என்று பரிகசித்தார்கள். அந்த நாட்களில் மன அழுத்தத்தின், உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்தேன். காலம் என்னைக் கறை தேற்றியது.

செய்யும் இடத்தின் பாப்புலாரிட்டியோ (Brand Name), செய்யும் வேலையோ நம்மை அடையாள படுத்திவிடாது. செய் நேர்த்திதான் காலம் கடந்தும் நிற்கும். அதிலுள்ள புதுமைதான் நிகழ் காலத்திலும் மெச்சப்படும் என்பது என் எண்ணம். ஆகவே, ஒரு பொதுக் கழிப்பிடத்தைக் காண்பித்து சுத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டால், என்னுடைய தன்மை மாறாமல், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல், கொடுத்த வேலையை எப்படிச் செய்யலாம் என்று யோசிப்பேன்.

மேலும், "மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாம் நல்லா வரும்போது... நமக்கு என்னங்க கொறை"... நமக்கும் நாலு நல்ல உள்ளங்கள் இருக்கத் தானே செய்யுறாங்க.

"ம்ஹூம்... ஒரு கால்கட்டு போட்டால் தான் திருந்துவன்னு நெனைக்கிறேன்?" என்கிறார்கள்.

இதென்ன கதை. கல்யாணம் என்பது மன நிறைவுடன் வாழ்வதற்குத் தானே. அதை ஏன் சிறைபடுத்தும் வைபவமாகப் பார்க்க வேண்டும்? இந்தப் பொதுப்புத்தி மிகத் தவறான வாதம். யூ பிளடி ஃபூல்ஸ்.... யூ ஹவ் டு சேஞ்ச்ஜ் யுவர் மென்டாலிட்டி...

"ஆகட்டும் பிறகு பார்ப்போம்!" என்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை? ஏன் இவர்கள் வாழ்க்கையை பணம் ஈட்டும் ஒரு வியாபாரமாகவே பார்க்கிறார்கள் என்று!

"சரி... கல்யாணமாகி ஒரு கொழந்த பொறக்கட்டும்!" என்கிறார்கள்.

அதைத் தான் நானும் சொல்கிறேன். அதது நடக்கும்போது நடக்கட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்வோம். அதுவரை நிகழ்காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியது தானே. ஒவ்வொரு நாள் கண்விழிக்கும் போதும் நினைப்பதுண்டு, "இன்றைய தினமே பூமியில் எனக்கு கடைசி தினமாகவும் இருக்கலாம்" என்று.

ஆகவே காட்டாற்று வெள்ளம் போல, சுழன்றோடும் காற்றைப் போல, வழிந்து செல்லும் மேகம் போல, சிறகடித்துப் பறக்கும் பறவைபோல... இன்னும் இன்னும் கட்டற எல்லாவற்றையும் போல இருந்துவிட்டுப் போகவே ஆசைப்படுகிறேன்... எனக்கான எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொண்டு... பாரதி சொல்வானே "விசைகொண்டு எறிந்த பந்தைப் போல" என்று அதைப் போல...

வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்ப்பது. எனவே அதன் போக்கில் வாழ்ந்துதான் பார்ப்போமே. எதிர்காலம் குறித்த தேவையில்லாத சஞ்சலங்கள் எதற்கு.

சுபம்... மங்களம்...

Tuesday, July 17, 2012

தமிழ் ஸ்டுடியோ – அறச்சீற்றம்

கொதிக்கும் உலையை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?

தமிழ் ஸ்டுடியோ அருண் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். அருமையானவரும் கூட. அவரின் உற்ற நண்பர்களான குணா மற்றும் தயாளனையும் நன்கறிவேன். ஆழமான நட்பு இல்லையென்றாலும், எங்காவது சந்தித்தால் நலம் விசாரித்துக் கொள்ளும் அளவிற்கு பழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அருணும் குணாவும் தனியாளாக போராடிக் கொண்டிருந்த நாட்களிலிருந்தே தெரியும். ஆரம்பத்தில் அவர்களுடைய கவனம் முழுவதும் குறும்படங்களின் மீதுதான் இருந்தது. பின் ‘படிமை’ என்ற குறும்பட பயிற்சிப் பட்டறையைத் துவங்கினார்கள். அதில் சேர்ந்து பயின்ற சில தம்பிகள் கூட எனக்குப் பரிட்சயம் உண்டு. இன்னும் சொல்லப் போனால், தமிழீழம் சார்ந்த குறும்படமான “18 தீக்குச்சியை” மருமகன் முத்து தயாரிக்க முன்வந்த போது படிமையின் பயிற்சி மாணவரான ‘செந்தூரனை’த் தான் ஈழத் தமிழ் உட்சரிப்பு சரிபார்பிற்காக நாடினேன்.

பிறகு “கதை சொல்லி, கொஞ்சம் தேநீர் கொஞ்சம் அரட்டை, ஊர் சுற்றலாம் வாங்க” என அவர்களுடைய முயற்சி பல துறைகள் சார்ந்தும் விரிந்து சென்றது. கேணி சந்திப்பின் ஒலி நாடாக்களை அவர்களுக்குக் கொடுத்து தமிழ் ஸ்டுடியோ இணையப் பக்கத்தில் கூட போடச் சொல்லி இருக்கிறேன். அவருடைய சீரிய பங்களிப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறதுதானே? பூவும் தலையும் சுண்டிவிட்டால் தானே தெரியும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அருண் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார். அணு உலைக்கு எதிராக எழுத்தாளர்கள் முழு மூச்சில் செயல்படவில்லை என்று. அவர்கள் தெருவில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்றும் சொல்லாமல் சொல்லியிருந்தார். அவர்களுக்கு பொறுப்பில்லை என்ற தொனியிலும் சொல்லியிருந்தார். அதற்கு பின்வருமாறு நான் மறுமொழி கூறியிருந்தேன்.

“இதோ பாருங்கள் அருண். தெரியாமல் பேசக் கூடாது. சாகித்யமி அகாடமி விருது வாங்கியவர்கள் உட்பட முக்கியமான எழுத்தாளர்கள் உட்பட 25 எழுத்தாளர்கள் முதலமைச்சரை காண வேண்டி நேரம் கேட்டிருக்கிறார்கள். இன்று வரை அவர்களைக் காண முதல்வர் நேரம் கொடுக்கவில்லை. எல்லோரும் கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்” என்றும் சொல்லியிருந்தேன். (ஞாநியும் பாஸ்கர் சக்தியும் அவர்களில் அடங்குவர்.) அதுவுமில்லாமல் அணு உலை அபாயம் பற்றி கவிஞர்களும் எழுத்தாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே என்றும் சொல்லியிருந்தேன்.

இதுபோன்ற அடுத்தடுத்த பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் ஸ்டேடசையே டெலிட் செய்துவிட்டார். சரி போகட்டும் அவருடைய அணுகல் முறை அப்படி என்று விட்டுவிட்டேன்.

அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சி பற்றி எதோ பகிர்ந்திருந்தார். அதற்கு அவருடைய பின்தொடர்தலில் இருக்கும் வளர்ந்துவரும் சினிமாக் கலைஞர்கள் வறுத்தெடுத்து விட்டார்கள். எதோ நானும் என்னுடைய குறை அறிவிற்கு எட்டிய சில கேள்விகளை எழுப்பி இருந்தேன். அதற்கு அவருடைய பதில் “உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை” என்பதாகத் தான் இருந்தது.

அடுத்து அ. முத்துலிங்கத்தின் பவித்ரா சிறுகதையை மருமகன் முத்து தயாரித்து, விக்னேஷ்வரன் விஜயன் ‘சித்ரா’ என்ற குறும்படமாக எடுத்திருந்தான். அதற்கு தமிழக அளவில் இரண்டு விருதுகள் கிடைத்தது. அதில் தமுஎகச அளித்த முதல் பரிசு குறிப்பிடத்தக்கது. இந்த குரும்படத்தைப் பற்றி திரு. அருண் அவர்கள் ஒரு ஸ்டேடஸ் பகிர்ந்திருந்தார்.

/-- நிறைய நல்ல குறும்படங்களை இந்த ஆண்டு பார்த்தேன். ஆனால் நெய்வேலி புத்தக காட்சியில் பரிசு பெற்ற படங்களை விட அவை நல்ல படங்கள். தவிர சித்ரா அ. முத்துலிங்கம் அவர்களின் கதை என்பதை விட படம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல என்னால் முடியவில்லை. இப்படி ஒரு படம் எடுக்கிறோம் என்று முத்துலிங்கம் அவர்களிடம் அனுமதியோ, அல்லது எடுத்த பிறகோ அவருக்கு தெரிவிக்கவோ இல்லை என்று வேறு கேள்விப் பட்டேன்.

திருடி எடுக்கப்படும் படங்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். --/

அதற்கு பின்வருமாறு நான் பதில் சொல்லியிருந்தேன்.
/-- இப்படி ஒரு படம் எடுக்கிறோம் என்று முத்துலிங்கம் அவர்களிடம் அனுமதியோ, அல்லது எடுத்த பிறகோ அவருக்கு தெரிவிக்கவோ இல்லை என்று வேறு கேள்விப் பட்டேன்.--/

அ முத்துலிங்கமே கனடா திரைப்பட விழாவிற்கு இதன் ஒரு பிரதியை அனுப்பி வைக்குமாறு கேட்டிருப்பதாக அதன் இயக்குனர் நீண்ட நாட்களுக்கு முன்பு தெரியப்படுத்தி இருந்தார்.

/-- திருடி எடுக்கப்படும் படங்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்.--/

முழு விஷயம் தெரியாமல் பேசக்கூடாது தோழர்களே. அந்தக் கதையை பாலு மகேந்திரா எடுப்பதற்காக உரிமம் பெற்றிருந்தார். அது சார்ந்து பாலு மகேந்திராவுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை,

இலக்கியத்தை நாடி காட்சிப் படுத்துபவர்கள் மிகக் குறைவு. அவர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள். என்றும் சொல்லியிருந்தேன். அதனுடன் அ முத்துலிங்கம் விக்னேஸ்வரனை பாராட்டி எழுதியிருந்த சுட்டியையும் கொடுத்திருந்தேன்: http://amuttu.net/viewArticle/getArticle/276

அதோடு அருண் வேறொரு ஸ்டேடஸ்-க்கு பார்த்து பறந்துவிட்டார். சமீபத்தில் ‘பருத்திவீரன்’ படம் பற்றி அடூர் கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பதாக ஏதோ ஒன்றை பகிர்ந்திருந்தார். பகிர்வின் முடிவில் “ஏதும் தெரியாமலே தையா தக்கா” என்று குதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருந்தார். கவிஞர் மகுடேஸ்வரன் உட்பட இன்னும் சிலர் அதைப் பற்றிய மாற்றுக் கருத்தை முன் வைத்திருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். மற்றவர்களைவிட என்னுடைய கருத்து அருணை கலக்கப்படுத்தி இருக்க வேண்டும். மேற்கூறிய விஷயங்களைத் தான் பகிர்ந்திருந்தேன் வேறொன்றும் இல்லை.

முடிவில் இப்படிச் சொல்லியிருந்தேன், “நீங்கள் ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை அருண். கூட்டம் சேர்ந்துவிட்டது. அகவே உங்களை விளம்பரப் படுத்திக் கொள்கிறீர்களோ என்ற சந்தேகப் பார்வை வலுக்கிறது. மேலும் உங்களுடைய அரைவேக்காட்டுத் தனமான பகிர்தல்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்ற பொருள் வரும்படி எதோ சொல்லியிருந்தேன். ரிஷி மூலத்திலிருந்து சில விஷயங்களை சொல்லி இருந்ததால் என்னுடைய பின்னூட்டங்களை அழித்ததுடன், என்னையும் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்துவிட்டார். அதுகூட என்னுடைய தம்பி மணி பார்த்து சொல்லியதும் தான் தெரிய வந்தது.

மேலும் அருண் அவருடைய ஸ்டேடசில் இப்படிப் பகிர்ந்திருக்கிறாம், “அருண் மற்றும் தமிழ் ஸ்டுடியோ பற்றி எதுவும் தெரியாமல், காழ்ப்புடன் கருத்து தெரிவித்திருந்தமையால் என்னை நண்பர் வட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக கவிஞர் மகுடேஸ்வரனுக்கு” பதில் சொல்லி இருக்கிறார் போல. நான் என்னத்தைக் கண்டேன். திருநள்ளாறில் தொலைத்ததை மீண்டும் சென்று யாரும் சீண்டுவார்களா என்ன? விட்டது எல்லாம்....

நேர்மையாக விமர்சனத்தை அணுகவேண்டும் என்று ஸ்டேடசுக்கு ஸ்டேடஸ் புரட்சி பேசும் அருண், என்னை நட்பு வட்டத்தில் வைத்துக் கொண்டே பேசி இருக்கலாமே. எது எப்படியோ?! எனக்கு நிம்மதிதான்.

என்றாலும் “புரியவில்லை என்ற ஃபேஸ் நண்பர்களுக்காக” மேலும் ஒரு விஷயத்தை பகிர விழைகிறேன். ‘வழக்கு எண் 18/9’ – பற்றி கறாரான விமர்சனத்தை அருண் முன் வைத்திருக்கிறார். அருண் ‘என்ன பேசினார்? ஏது பேசினார்?’ என்று எனக்குத் தெரியாது. எரிச்சலுற்ற இயக்குனர் வசந்தபாலன் அருணை நட்பு வட்டத்திலிருந்து நீக்கி இருக்கிறார். உடனே அருண் கொண்ட அறத்சீற்றம் இருக்கிறதே. அது சிங்கத்தின் கர்ஜனை!

வசந்தபாலன் நேர்மையாக விமர்சனத்தை அணுகாமல் தன்னை ஒதுக்கிவிட்டார். என்று புலம்பித் தள்ளியிருந்தார். நான் கூட அதனை ஷேர் செய்திருந்தேன். அதுவும் பின்வருமாறு எழுதி...

“மனிதன் ஓரமாகச் சென்று ஒதுக்கி வைப்பவை மட்டுமல்ல மலம். மனிதனை ஒதுக்கி வைத்தால் அவனும் மலமே” – என்று சொல்லியது ,மட்டுமல்லாமல், வசந்தபாலனுக்கு என்னுடைய கண்டனங்களையும் தெரியப் படுத்தி இருந்தேன். இன்று ‘என்னை’ - அருண் ஒதுக்கி வைத்திருக்கிறார். இதைப் பற்றிதான் “வசந்தபாலன் உடைத்தால் பொன் சட்டி!”, “அருண் உடைத்தால் மண் சட்டியா?” என்று கேட்டிருந்தேன். வேறொன்றும் இல்லை தோழர்களே. இப்பொழுது புரிந்ததா?

குறிப்பு: ஃபேஸ் குடுமிப்பிடி விமர்சன கலாட்டாவில் குழப்பம் அடைந்த நண்பர்களுகு சமர்ப்பணம்.

Wednesday, July 11, 2012

பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 01

அன்றொருநாள் பெருஞ்சாரலுடன் நல்ல காற்று. கொடுத்து வைத்தவன் போல், வீட்டின் முற்றத்தில் இருந்த பிரம்புக் கூடையில் ஆடிக் கொண்டிருந்தேன். மேகத்தின் உரசல் மின்னலென வெட்ட, இடியானது மழையுடன் சல்லாபிக்கிறது. அறிமுகமான நண்பர் செல்பேசியில் அழைத்தார். அந்த துக்கச் செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பேசியவர்...

"கிருஷ்ணா, நம்ம ஃஷார்ட் பில்முல ஒரு சாங்கு இருக்கு. டியூன் கூட ரெடி. பாடல் வரிகளை நீங்க தான் எழுதுறீங்க" என்றார்.

எனக்கு ஷாக் அடித்தது போல இருந்தது. வம்சத்தின் நலம் கருதி, தேவவிரதன் பிரம்மச்சரிய விரதம் பூண்டு பீஷ்மர் ஆனது போல, உலகை உய்விக்க வாழ்நாளில் ஒருக்காலும் கவிஞன் ஆவதில்லை என நானும் சபதம் எடுத்திருப்பதை நண்பருக்கு விளக்கமாகக் கூறினேன். அவரோ புரிந்து கொண்டபாடில்லை. கொட்டித் தீர்க்கும் மழையை ரசிக்க விடாமல் அவரும் ஒற்றைக் கால் கொக்குபோல தன்னுடைய நிலையில் உறுதியாக நிற்கிறார். தூக்கம் வருவதாக பொய்சொல்லி, தொடர்பை துண்டித்துக்கொண்டு மழையை ரசிக்கத் தொடங்கினேன்.

நீண்ட நாள் கழித்து அதே நண்பர், "குறும்படம் முடிந்து விட்டதாகவும், அவசியம் திரையிடலுக்கு வரவேண்டும்" எனவும் செல்பேசியில் அழைப்பு விடுத்தார். ஏ. வி. எம் ஸ்டுடியோவில் நடந்த திரையிடலுக்கு திரளான இளசுகள் வந்திருந்தனர். "இவன நம்பி இவ்ளோ பேர் எந்த தைரியத்தில் வந்திருக்காங்க" என்று நினைத்துக் கொண்டேன். அருகில் சென்று "சீப் கஸ்ட்" யாரென்று கேட்டேன். கொலையான வெறியுடன் மெட்டமைத்த இசை வல்லுநர் என்றார்கள். ஆமாம்... இங்ஙனக்குல்லையே கேட்டுக்குறா மாதிரி மியூசிக் நோட்ஸ் எழுதுபவர்கள் வெறும் இசை அமைப்பாளர்கள். அங்கிங்கெனாதபடி அகிலமெல்லாம் கேக்குறா மாதிரி மியூசிக் அடிச்சா ((காப்பி)) அவங்க பரிசுத்தமான இசை வல்லுநர்கள் என்பது நம்மோர் கணக்கு.

"வல்லுனரும்...இதோ வருவார், அதோ வருவார்" என்று காத்துக் கிடந்தார்கள். பூப்பெய்தியவள் பிள்ளைபெற்று, பேரப் பிள்ளையும் கண்டு, பிடிச்சாம்பலாய் மாறவேண்டி காடுகூட செல்லும் நிலை வரலாம், அந்த செலப்ரிட்டி தான் வந்தபாடில்லை. நண்பருக்கு முதல் அனுபவம் என்பதால் பதட்டத்துடன் இருந்தார். மெல்ல நெருங்கி யோசனை சொன்னேன். "நீங்கள் ஏன் திரையிடலை ஆரம்பிக்கக் கூடாது?. இவ்வளவுபேர் எதற்காக காத்திருக்க வேண்டும்? இது அநியாயம் இல்லையா?"

"செலேப்ரிட்டி கோச்சிப்பாரே கிருஷ்ணா" என்றார்.

"கோவம் வந்தா கோழிப் பீயில கொண்டு கையை வைக்கச் சொல். மேலதிகமாக உன்னுடைய நடுவிரலை மட்டும் அவருடைய முகத்திற்கு நேராகக் காண்பி" என்றேன்.

"பாட்டெழுத மாட்டேன்னு சொன்னிங்களே, அன்னைக்கே காட்டியிருக்க வேண்டும். இதோ இப்போ காட்டறேன் பாத்துக்கோங்க" என்று முகத்திற்கு நேராக விரலைக் காண்பித்தார். பதிலேதும் சொல்லாமல் இருட்டறையில் சென்று அமர்ந்துகொண்டேன். அழுதிருந்தால் கூட யாருக்குத் தெரியப்போகிறது. ஆறுதல் சொல்ல விஸ்காம் மாணவர் தினேஷ் ஆதி மட்டுமே அருகில் இருந்தார். ஆரம்பத்தில் பாடல் ஒளிபரப்பானது. வரிகள் கூட கேட்கும் படியாகத் தான் இருந்தது. அதைத் தொடர்ந்து திரையிடல் முடிந்து வெளியில் வந்ததும் தான் விசாரிக்கத் தோன்றியது. அந்தப் பாடலை எழுதியது யாரென்று?. படத்தின் இயக்குனரே பாடல் வரிகளை எழுதியதாகச் சொன்னார்கள். மிக மோசமான படமாக்களுக்கும், சுமாரான வரிகளுக்கும், கேட்கும்படியான இசைக்கும் மௌனத்தால் வாழ்த்து சொல்லி விடைபெற்று வீடு திரும்பினேன்.

சமீபத்தில் அந்த நண்பர் மீண்டும் அழைத்தார். "கிருஷ்ணா, ஒரு டெலிபிலிம் எடுக்கப்போறேன். ஒரு டீம் ஃபார்ம் பண்ணி தீயா ஒழட்சிட்டு இருக்கோம். நீங்க ப்ரொடக்ஷன் மேனேஜரா ரோல் எடுத்துக்க முடியுமா? இட்ஸ் எ மேட்டர் ஆஃப் மணி. தட்ஸ் வொய்?" என்றார்.

இங்குதான் தோழரின் புத்திக் கூர்மையை ஆலிங்கனம் செய்ய வேண்டும். திருடன் என ஊருக்குத் தெரிந்தவன் தானே காவலுக்கு உகந்தவன். என்றாலும் சுதாரித்துக் கொண்டு அறிவுரை வழங்கினேன். "வெக்கிறதுக்கு எடமில்லன்னு மசால் வடைய கொண்டுட்டு போயி எலிப் பொந்துல வக்கலாமா? நானோ ஐ.டியில் வேலை செய்தவன். அதுவுமில்லாம கற்பூரம் கணக்கா கையில இருக்குற காசயெல்லாம் காத்துல கரக்கிறவன் நானு. இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்க வேற ஆளப் பாருங்க" என்றேன். நம்ம சர்க்கிள்ல இருக்க பூரா பயலுங்களும் திருடந்தான்னு இந்தாளு மோப்பம் புடிச்சிருப்பான் போல."உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது ரெகமன்ட் பண்ணுங்க" என்றார்.

மண்டையில அடப்பெடுத்து யோசிச்சி பாத்ததுல உதவி இயக்குனர் யோகிதான் நினைவிற்கு வந்தான். தம்பியான தம்பியை அழைத்துக் கொண்டு தோழரிடம் சென்றேன். "இவ்வளோதான் பட்ஜெட், இதுதான் ஸ்டோரி" என ஒன்லைன் சொல்லியவரைப் பார்த்து யோகி சிரித்தான். தோழருக்குத் தெரியாதவாறு அவனைச் சீண்டி, "சிரிக்காதே... தப்பா நெனட்சிக்கப் போறாரு" என்று சமிஞ்ஞை செய்தேன். யுத்தக் களத்தில் நிற்பதுபோல் எதிரில் இருப்பதால் அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?. சுதாரித்துக் கொண்டு யோகியைப் பார்த்து "ஏன்டா சிரிக்கிற? அவரென்ன பைத்தியக்காரனா? இல்ல அம்மணமா நிக்கிறானா? ஜாக்கரத ஆமான்னு..." நொங்கு நொங்கென பனை போல் வளர்ந்தவனின் தலையை எட்டி எட்டிக் கொட்டினேன்.

"நோவ்... சும்மா இருங்கண்ணா? இதே கதையதான் எங்க சாரு படமா எடுக்கப் போறாரு. ஸ்கிரிப்ட் வொர்க் போயிட்டு இருக்கு. பின்னே இவரு கூட எப்படி-ணா இருக்கது. அதெல்லாம் தப்பா போயிடும். நீங்க வேற ஆளப் பார்த்துக்கோங்க" என தேனீர் பருகிக் கொண்டிருந்த கண்ணாடித் தம்ளரை டங்கென வைத்துவிட்டு புறமுதுகைக் காட்டியவாறு நடந்து சென்றான். தோழரைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். "அவன் எதக் காமிட்சிக்குனு நடந்து போறான் பாத்தியா?".

"உலகத்துல எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் நமக்கு முன்னாடி நடந்து போனால், அவனோட முதுகுதான் தெரியும் கிருஷ்ணா" என்றார்.

"முதுகுக்குக் கீழதான் புட்டம் இருக்கு. அவன் நமக்கு சூத்த காம்சிட்டு போறான்டா நேந்து வுட்டப் பாவி. இந்த மானபங்கம் எனக்குத் தேவையா?" என்றேன்.

"இதெல்லாம் ஒண்ணுமே இல்ல கிருஷ்ணா. இன்னும் நம்ம எவ்வளவோ பாக்க வேண்டியிருக்கு" என்றார் உருக்கமாக.

"எனக்கெதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு. இந்த நம்ம நம்ம-ன்ற சமாச்சாரத்த எல்லாம் இன்னியோட நிறுத்திக்கோ" என கோவத்தில் முஷ்டியை மடக்கி தோழருக்கு நடுவிரலைக் காண்பித்து நடக்கத் துவங்கினேன், நீட்டிய விரலால் செல்பேசியை எடுத்து சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு.

Thursday, June 21, 2012

ஆள காணமே மச்சி

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் அந்த வகுப்பிற்குச் செல்லக் கட்டணம் கட்டியிருந்தேன். வகுப்பு நன்றாகச் சென்று கொண்டிருந்தது. ஒருவன் இடையில் வந்து சேர்ந்தான். முதல் நாள் வந்ததும் ஓர் ஓரத்தில் சென்று அமர்ந்தான். அமைதியான பையன் என்று நினைத்துக் கொண்டேன். ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள ஏற்ற தோற்றம் அவனுக்கு. குள்ளமாகவும், அளவெடுத்துச் செதுக்கிய உடல்வாகுடனும் மங்கோலியர்களைப் பிரதிபலிப்பது போல அழகாக இருப்பான். குழந்தையின் வெகுளித்தனம் அவனுடைய முகத்தில் வெளிப்படும். இரண்டு வாரங்கள் சென்றது. சுருட்டி வைத்திருந்த ஆஞ்சநேயர் வாலை அவிழ்த்து விட்டான். அப்பப்பா ஊமைக் குசும்பு என்பார்களே அது அவன் தான்.

தெலுங்கு பிராமின் என்பதால் பல தமிழ் வார்த்தைகள் அழுந்தியும், சுழலும் நாக்கிலிருந்தும் வெளிப்படும். அவன் “அண்ணா“ என்று அழைப்பதே ஒரு விதமாக இருக்கும். சில சமயங்களில் சொல்ல வரும் விஷயத்தை நடிகர் ரஜினியின் குரலில் வெளிப்படுத்துவான். “டேய்... அவன்ல்லாம் ஒரு ஆலுன்னு அவன் குரலில் பேசுறியே“ என்று சீண்டுவேன். “தலிவரப் பத்தி உனக்கு இன்னான்னா தெரியும்“ என்று உரிமையுடன் சண்டைக்கு வருவான். குடும்ப உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறைவாக பேசினால் கூட அப்படி ஒரு கோவம் ரஜினி ரசிகர்களுக்கு வருமா என்பது சந்தேகமே. கார்த்தியின் அத்தை வீணை டீச்சர் என்பதால் இசையும் ஓரளவிற்குப் பரிட்சயம். அல்லது கேள்வி ஞானமாகக் கூட இருக்கலாம். காதிற்கு இனிமையாகப் பாடுவான். சில ஸ்லோகங்கள் கூட ரசிக்கும்படி ஏற்ற இறக்கத்துடன் கார்த்தி சொல்லக் கேட்டதுண்டு. பொறாமையாகக் கூட இருக்கும்.

பாடம் நடக்கும்போது, சில வார்த்தைகளைக் கேலி பேசி என்னைச் சிரிக்க வைப்பான்.உதாரணமா, 'குசுரி' என்றால் மருந்து என்று பொருள்படும் ஜப்பானிய வார்த்தை. நேட்டிவ் ஜேப்பநிஸ் அந்த வார்த்தையைச் சொல்லி விளக்கும் பொழுது, அவர்களுக்குத் தெரியாமல் என் காதில் கேட்கும்படி 'இன்னா ரீ?' என்று கேட்பான். 'எனக்குத் தெரியாது போடா...!' என்பேன்.

இது கூட தெரியாதா 'குசு... குசு...குசு... குசுரீ' என்பான். அதைக்கேட்டு கொல்லென்று சிரிப்பேன். சென்செய்(ஆசிரியர்) என்னைப் பார்த்து எச்சரித்துவிட்டு பாடத்தில் கவனம் செலுத்துவார். இந்த மாதிரி வார்த்தைகள் எல்லா மொழியிலும் இருக்கிறது. “என்னோட தாய்மொழி தெலுங்கில் கூட இருக்கு. ஆமா “பூ“-வுக்கு தெலுங்குல என்ன வார்த்தைத் தெரியுமா?“ என்பான். “டேய் தம்பி... நானும் ஆந்திரா பார்டர் தான். கொஞ்சம் மூடுறியா?“ என்பேன்.

“அண்ணா... ஆண்டவன் ஓட்டைன்னு எதுக்கு வச்சிருக்கான். தொறந்து இருக்கணும்னு தானே? அத எதுக்கு மூடச் சொல்றிங்க.“ என்பான்.

“இந்த மாதிரி எங்கடா பேசக் கத்துக்குன?“

“அது என்ன மாயம்னு தெரியல? மந்திரம்னு தெரியல மச்சி... உன்ன பார்த்தா மட்டும் அருவி மாதிரி கொட்டுது மச்சி“ என்பான் ரஜினியின் குரலில்.

“என்னது மச்சியா?“

“ஆமாண்ணா...“ என்பான் சாதாரண குரலில்.

ஒவ்வொரு வாரமும் இதுபோல குண்டக்க மண்டக்க பேசியே விடுமுறை நாட்களை இனிமையாக்கிக் கொண்டிருந்தான். JLPT தேர்வுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. “இங்கப் பாரு கார்த்தி, ஜப்பானிய மொழிய கத்துக்குனே ஆகணும்னு நான் இங்க வரல. எனக்குத் தேவ ஒரு அனுபவம். அதுக்காகத் தான் வரேன். ஆனா நீ அப்படி இல்ல...! மரியாதையா கவனி, இல்ல சாக அடிட்சிடுவேன்“ என்று திட்டும்பொழுது, “இங்க பாரு மச்சி லைஃப்புன்னா ஜாலியா இருக்கணும்... சிஸ்டமாட்டிக்கா இருக்கக் கூடாது... பீ கூல்...“ என்பான்.

குளிர் கால ஞாயிற்றுக் கிழமையின் காலை நேரத்தில் மீனாட்சி கல்லூரியில் எங்களுக்கான தேர்வு நடத்த ஏற்பாடாகியிருந்தது. என்னுடைய வகுப்பில் மொத்தம் பனிரெண்டு பேர். பரீட்சை எழுத வந்திருந்தவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் நபர்கள். ஓர் ஓரத்தில் அமர்ந்து கார்த்தி வேகம் வேகமாகப் படித்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று நின்றேன். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு மேலும் படித்துக் கொண்டிருந்தான். வகுப்புத் தோழர்களும் அவனுடன் இருந்தனர். அவர்களிடமிருந்து விலகி காலாற நடக்கத் துவங்கினேன். பத்து வயது முதல் நாற்பது வயது வரையுள்ள பலரும் படித்துக் கொண்டிருந்தனர். தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே தெரிந்துவிட்டது நாங்கள் “அவுட்“ என்று. கார்த்திக்கு சரியாக எழுதாதது கொஞ்சம் வருத்தம் தான்.

இது போன்ற உலக மொழிகளைப் படிக்க பணம் கட்டினால், சிரமப்பட்டு படித்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வது புத்திசாலிக்கு அழகு. “சாலித் தனங்கள் கூறு என்ன விலை“ என்று கேட்பவன் ஆயிற்றே. இணையம் தொடர்பாக பார்த்துக் கொண்டிருந்த வேலையை நான் விட்டுவிட்டேன். சென்னைப் புறநகரில் இருக்கும் நோக்கியா கம்பெனியில் கார்த்தி வேலைக்குச் சேர்ந்தான். பெரும்பாலும் அவனுக்கு இரவில் தான் வேலை. இருவரும் அதன்பிறகு பேசிக்கொள்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. எப்பொழுதாவது செல்பேசியில் அழைப்பேன். “தூங்குறேண்ணா... எழுந்ததும் கூப்பிடுறேண்ணா“ என்பான் உளறலில். “சரி கண்ணா... Have a nice dreams“ என்பேன். ஞாபகம் இருந்தால் எழுந்ததும் செல்பேசியில் அழைப்பான். “சொல்லு மச்சி“ என்று ஆரம்பிப்பான்.

“என்ன தொற சந்தோஷமா இருக்கீங்க“.

“Bcoz... Bcoz... I had a nice dream“ என்பான்.

கடந்த ஒருவருடத்திற்கு முன்பு அவனிடம் பேசியது. அதன்பிறகு கார்த்தியத் தொடர்பு கொள்ள முடியாமலே போனது. அவனே அழைக்கட்டும் என வெறுத்துப் போய் விட்டுவிட்டேன். என்னுடைய இந்த செயல் எந்த ஒரு பெரிய குற்றத்திற்கும் நிகரானது என்ற குற்ற உணர்ச்சியை எழுத்தாளர் மதுமிதா லைக் செய்திருந்த இந்த புகைப்படம் ஏற்படுத்திவிட்டது. (புற்றுநோய் முற்றிய நிலையிலும் அவனுடைய முகத்தைப் பாருங்கள். எவ்வளவு சந்தோசம்... வதக்கி எடுக்கும் வலியை அவன் எங்கு புதைத்திருக்கக் கூடும்.)



ரஜினியை பலமுறை கடுமையாக விமர்சித்துப் பேசியதுண்டு. சமூக இணையத் தளங்களில் அவருக்கு எதிரான பல விஷயங்களைப் பகிர்ந்ததுண்டு. என்றாலும் எளிமையுடனும், இரக்கத்துடனும் இருப்பதால் தான் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள் போல. உயிருக்குப் போராடிய தன்னுடைய ரசிகனைப் பார்க்க நேரம் கொடுத்து, கட்டித் தழுவி அவனை சந்தோஷப்படுத்தி இருக்கிறாரே! வறண்ட நிலத்தின் மண் தரையில் விழுந்த மேகத் துளியாக வாழ்வின் விளிம்பில் இருந்த சிறுவனின் ஆழ்மனம் குளிர்ந்திருக்கும் இல்லையா! என்றாவது ரஜினியைப் பார்க்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால் இந்த ஒரு செயலுக்காக ஆரத் தழுவி நன்றி சொல்வேன்.

“ரஜினியாவது...! உன்னைப் பார்ப்பதாவது?“ என்கிறீர்களா...

ரஜினி மாறுவேடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக எளிய மனிதராகச் சுற்றிக் கொண்டிருப்பாராம். நான் வேடமேற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன். பெரிய முள்ளும், சிறிய முள்ளும் ஒரு புள்ளியில் சந்தித்துத்தானே ஆகவேண்டும். அதுதானே காலத்தின் கட்டாயமும் கூட. அந்த நடிப்புக் கலைஞனை ஒருநாள் நிஜத்தில் சந்தித்து கைகுலுக்குவேன். நன்றி சொல்வேன்...

கார்த்தி புற்று நோயால் போராடி உயிர் விட்டிருக்கிறான். அவனுக்கு குடலில் கேன்சர் இருந்ததாம். கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். இரவு வேலை செய்ததால் அடிக்கடி வாயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. சாதாரண சுகமின்மை என்று தான் அவனுடைய பெற்றோர்கள் நினைத்திருக்கிறார்கள். கேன்சர் என்று முற்றிய நிலையில் தான் உணர்ந்திருக்கிறார்கள்.

இனி மருத்துவம் பார்த்து பிரயோஜனம் இல்லை என்ற நிலையில், ஆந்திராவில் இருக்கும் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று கவனித்திருக்கிறார்கள். ஒரு நாள் நெஞ்சை அடைப்பது போல் இருக்கிறது என்று மார்பைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் தோலில் சாய்ந்திருக்கிறான். அவசர சிகிச்சை அளிக்க மருத்துவமனை நோக்கி ஓடியிருக்கிறார்கள். போகும் வழியிலேயே அவன் உயிர் பிரிந்திருக்கிறது. ஆகக்கூடி இருபத்தி ஐந்து வயது இருக்காது. எனக்குத் தெரிந்து எந்தக் கெட்டப் பழக்கமும் அவனுக்கு இல்லை. என்றாலும் விதி வலியது தானே!

“இப்படி அல்பாயுசுல போயிட்டியேடா கார்த்தி!?“ என்று அவனிடம் கேட்டால், அதற்கும் அவனிடம் ஒரு பதில் இருக்கும்.

இனி அது “மௌனம்“... மரணித்த மௌனம்...

Thursday, June 7, 2012

லஞ்ச காக்கிகள் – நக்கீரன்

நடவடிக்கை எடுக்காத உள்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி ரெய்டுகளில் கையும் களவுமாக சிக்கிய... காவல்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையும்... உள்துறை அமைச்சகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது. எந்தெந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும்போது எந்தெந்த போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டிருக்கிறார்கள்? எவ்வளவு தொகை லஞ்சம் வாங்கும்போது கைப்பற்றப்பட்டது? என்று ஆராய்ந்தபோது.

அந்த லிஸ்டில் உள்ள பலரும் தற்போது உயர் போலீஸ் அதிகாரிகளாக வலம் வருகிறார்கள் என்ற ஷாக்கை உண்டாக்கியது. இப்படி லஞ்சப் பேய்களாக உலா வந்த காக்கிகளின் விபரங்களை தகவல் பெரும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) மூலம் பெறுவதற்குள் பட்ட பாடுகளை வேதனையுடன் விவரிக்கிறார் சமூக ஆர்வலரும் பொதுநல வழக்குகளை தொடுப்பவருமான பிரபல வழக்கறிஞர் கார்த்திகேயன்.

எந்தப் பிரச்சனையானாலும் ஏழை எளிய மக்கள் புகார் கொடுக்கப் போவது போலீஸ் ஸ்டேஷன்தான். ஆனா, குற்றம் செஞ்சவனை தண்டிக்காமல் காப்பாற்றுவது... அப்பாவிகள் மேலே பொய்க்கேஸ் போட்டு தண்டிக்கிறது இதுக்கெல்லாம் மிக முக்கிய காரணமா இருக்கிறது லஞ்சம்தான். இப்படி அப்பாவிகளுக்கு துரோகம் செய்யும் காக்கிகள்... லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் கையும் களவுமாக பிடிபட்டு என்ன தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை தெரிஞ்சிக்கிறதுக்காக மூன்று வருஷத்துக்கு முன்னால 2008 டிசம்பர் 30-ந்தேதி தமிழக உள்துறைக்கு ஆர் டி ஐ மூலம் தகவல் கேட்டு அனுப்பியிருந்தேன்.

அதாவது... தமிழக காவல்துறைக்குட் பட்ட சென்னை மாநகரத்தில் 2003-ல் இருந்து எத்தனை காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது? எத்தனை காவல்துறை அதிகாரிகள் ரெய்டில் பிடிபட்டார்கள்? அவர்களின் பெயர், பதவி மற்றும் முகவரி என்ன? எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது? அவர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அதன் விசாரணை அறிக்கை நகல்? எத்தனை போலீஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளைத்தான் அனுப்பியிருந்தேன். ரெண்டு மாசத்துக்கப்புறம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர்கிட்டயிருந்து 2009 பிப்ரவரி 3-ந் தேதி எனக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில், தகவல் பெரும் உரிமை சட்டத்தை அமல்படுத்தும் துறையான தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறையின் 2008 ஆகஸ்டு 26-ந் தேதி வெளியிடப்பட்ட (G.O-158) அரசாணைப்படி... லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெரும் உரிமை சட்டத்திலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதால்... நீங்கள் கேட்டனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது என்றிருந்தது.

தகவல் பெரும் உரிமை சட்டப்படி... மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழல் சம்பந்தமாக எந்தத் துறையில் தகவல் கேட்டாலும் தகவல் அளிக்க வேண்டும்னு இருக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெரும் உரிமைச் சட்டம் பொருந்தாதுன்னு அரசாணை வெளியிட்டது தவறாச்சேன்னு மறுநாளே... திரும்பவும் அதே கேள்விகளை முன்வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை தலைவருக்கு ஆர.டி.ஐ மூலம் முதல் மேல்முறையீடு செய்தேன்.

ஒரு மாசத்துக்கப்புறம் அதாவது 2009 மார்ச் 3-ந் தேதி ஏற்கனவே அனுப்பின பதிலையே திருப்பி அனுப்பியிருந்தாங்க. நானும் விடாம... 2009 ஜூன் 4-ந் தேதி மாநில தகவல் ஆணையத்துக்கு இரண்டாவது மேல்முறையீடு செய்தேன். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது மாநில தகவல் ஆணையம். 2009 அக்டோபர் 14-ந் தேதி தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத் துரையின் அரசாணை தகவல்பெரும் உரிமை சட்டத்திற்கு முரணானது. அதனால், இந்த உத்தரவு கொடுக்கப்பட்ட இரண்டு வாரத்துக்குள் மனுதாரர் கார்த்திகேயன் கேட்ட கேள்விகளுக்கு முழுமையான தகவல்களை இலவசமாக தரவேண்டும்னு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அப்படியும் அந்தத் தகவல்களை தராமல், என்மீதும் தகவல் ஆணையம் மீதும் வழக்கு தொடுத்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

ஆனால் 12-01-2010 அன்று நீதியரசர் சந்துரு அவர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்துட்டாரு. இந்த உத்தரவுக்கு எதிராக மறுபடியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்ய... அந்த மனுவையும் நீதியரசர் முருகேசன் மற்றும் சசீதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனா, அதுக்கப்புறமும் கூட தகவல்களை தராம சைலண்டாக இருக்குதே லஞ்ச ஒழிப்புத்துறை... அப்படியென்ன ரகசியம் இருக்கிறது என்று யோசித்துவிட்டு ‘நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் தகவல் தராமல் காலதாமதம் செய்வதால் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்’னு நோட்டீஸ் அனுப்பினேன். பிறகு உச்சநீதிமன்றமும் போன லஞ்ச ஒழிப்புத்துறையின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால் 2012 மே 25-ந் தேதிதான் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் வந்துதுங்க” என்று பெருமூச்சுவிடும் வழக்கறிஞர் கார்த்திகேயன், “இப்போதான் தெரியுது... ஏன் நான் கேட்ட கேள்விகளுக்கு மூணு வருஷம் கழிச்சு பதில் அனுப்பியிருக்கு லஞ்ச ஒழிப்புத்துறைன்னு. சென்னையில் லஞ்சம வாங்கும்போது பிடிபட்ட காவல்துறை அதிகாரிகள் யார் மேலையுமே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழோ, துறை ரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படவே இல்லைன்னு. மேலும், குறைந்த பட்சம் தற்காலிக பணியிடை நீக்கம் கூட செய்யப்படவில்லை என்பதுதான் வேதனை. மேலும், சட்டம் ஒழுங்கு, க்ரைம் போலீஸ் அதிகாரிகள் யார், யார் லஞ்சம வாங்கிச் சிக்கினார்கள், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல் தராமல் ரகசியமாகவே வைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

இப்படி இருந்தா... லஞ்சம வாங்குற அதிகாரிகளுக்கு எப்படி பயம் வரும்? லஞ்ச ஊழல் எப்படி ஒழியும்? லஞ்சம வாங்குற அதிகாரிகளை ஒரு அரசாங்கமே காப்பாற்றுவதற்கு என்ன காரணம்? சென்னையில் மட்டுமே இப்படின்னா தமிழ்நாடு முழுக்க பிடிபட்ட காவல்துறை அதிகாரிகள் யார் யார்? அவங்க மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு? என்பது பெரிய கேள்விக்குறியை உருவாக்குது? என்கிறார் வேதனையுடன்.

நிருபர்: ம. மனோ-
நன்றி: நக்கீரன் இதழ் (2012 ஜுன் 06-08)

Monday, May 21, 2012

கவனிக்கிறோம் - Media Watch


ஜனநாயகத்தின் தூண்களென “நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிக்கை” ஆகிய நான்கும் வர்ணிக்கப்படுகின்றன. இதில் முதல் மூன்று தூண்களும் தனது மாண்பில் இருந்து வழுவும் போது, நான்காவது தூணாகிய பத்திரிகை மிகமிக முக்கியமாக நேர்மையுடன் செயலாற்ற வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் பத்திரிகை தர்மம் காப்பாற்றப்படுகிறதா? என்ற அச்சம் நிலவுகிறது. “காட்சி ஊடகமோ! அல்லது அச்சு ஊடகமோ! அல்லது இணைய ஊடகமோ!” - எதுவாக இருப்பினும் செய்தியானது நடுநிலை அம்சத்தை இழந்துதான் பெரும்பாலும் மக்களைச் சென்று சேர்க்கிறது.

ஆகவே ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை அலசி ஆராய்ந்து, நடுநிலையைக் காக்கவும நம்பகத் தன்மையைக் கூட்டவும் ஒரு குழு அமைத்தல் தற்போதைய சூழலில் அவசியமாகிறது. எனவே அதிகமாக புழக்கத்தில் இருக்கும் தமிழக ஊடகங்களை தன்னார்வக் குழுவின் மூலம் ஆய்விற்கு உட்படுத்தி அதில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்வதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கம். அதற்கான கலந்துரையாடல் 20.5.2012 அன்று காலை 10 மணி அளவில் எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஞாநி வசிக்கும் கேணி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஞாநி மற்றும் அ. மார்க்ஸ் உட்பட பத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டோம். MediaWatch என்ற ஊடக ஒருங்கிணைப்புக் குழுவிற்கு பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் அனைவரின் சம்மதத்துடன் “கவனிக்கிறோம்” என்ற பெயர் சூட்டப்பத்தது.

“இதனை எங்கிருந்து தொடங்கலாம்? எப்படித் தொடங்கலாம்? என்னென்ன வகையில் செயலாற்றலாம்?” போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்கள் கலந்துரையாடலில் அலசப்பட்டு பின்வரும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவைகளாவன:

1.தமிழ்நாட்டில் அதிக புழக்கத்தில் இருக்கும், மக்களை வெகுவாகச் சென்றடையும் தமிழ் மற்றும் ஆங்கில - தின இதழ்கள், வார இதழ்கள், முக்கிய தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் ஆகியவற்றைக் கவனித்து விமர்சிக்க வேண்டிய அம்சங்களை முன்னெடுத்தல்.

2. முதலில் "கவனிக்கிறோம்" என்ற வலைப்பக்கமாக மாதம் இருமுறை வலையேற்றத் துவங்கி, பின்னர் கால இடைவெளியில் அதன் வளர்ச்சியை அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்லுதல். (ஒவ்வொரு மாதமும் 1,16 ஆம் தேதிகளில் பதிவுகளைப் புதுப்பித்தல்).

3.ஊடகங்கள் தொடர்பான முக்கிய விவாதங்கள் நடைபெறும் பிற தளங்கள் [other blogs/website/articles] மீதும் கவனம் ஈர்த்தல்.

4.ஊடக மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கட்டுரைகளை அளித்தல்.

5 .இத்துறையில் ஆர்வம் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்கள் இதுதொடர்பாக அளிக்கும் பதிவுகளை பரிசீலித்து வெளியிடுதல்.

6.ஊடக ஆய்வு செயல்பாடுகள் எந்தவகையிலும் ஊடகங்களின் கருத்து சுதந்திரங்களை பறிப்பதாக/ தாக்குவதாக அமைந்துவிடாமல் ஆக்கப்பூர்வமான விமர்சன அணுகல்முறையின் அடிப்படையில் இவற்றை செயல்படுத்துதல்.

7.உள்நோக்கத்துடன் தனிநபர்களையும் இயக்கங்களையும் மக்கள் போராளிகளையும் அவதூறு செய்து வன்முறையைத் தூண்டும் ஊடக செயல்பாடுகளைக் கண்டித்துக குரலுயர்த்துதல்.

8.தலித்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோர் குறித்த ஊடகப் பார்வைகளைக் கவனித்தல். அவர்களைப் பாதிக்கும் செயல்பாடுகளுக்கு எதிராக குரலுயர்த்துதல்.

9. "கவனிக்கிறோம்" ஊடக ஆய்வு வலைப்பக்கத்தை 1.6.2012 முதல் செயல்படுத்துதல்.

"கவனிக்கிறோம்" முதற்கட்ட கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள்:

1.ஞாநி
2.அ.மார்க்ஸ்
3.கி.நடராஜன்
4.கே.ஆர். அதியமான்
5.மோகன்
6.பாஸ்கர்
7.தினேஷ் குமார்
8.கிருஷ்ண பிரபு
9.சா.ரூ.மணிவில்லன்
10.சே.அன்பரசன்
11.ரமேஷ் வைத்யா
12.மீனா

கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத "கவனிக்கிறோம்" குழுவினர் :

1.கோ.சுகுமாறன்
2.ராஜன் குறை
3.மேகவண்ணன்
4.யாழன் ஆதி
5.பரமேஸ்வரி

பிரபஞ்சன், கவிஞர் சுகுமாரன், பாலபாரதி போன்றோரும் வருவதாக இருந்தது. சில காரணங்களால் அவர்களாலும் வர இயலவில்லை.

வலைப்பக்கம்: http://gavanikkirom.blogspot.in
ஞாநியின் பரிந்துரை: www.youtube.com/watch?v=YICegCjVF4w

இச்செயல்பாடுகளில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பல்துறையைச் சார்ந்த நண்பர்கள் தத்தமது துறைகளைப் பற்றி ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்க வரவேண்டும். இந்தக் குழு சார்ந்த விவரங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புகளுக்கு : 9841598733, 9884800976, 9500259824.

Wednesday, April 11, 2012

குளோரியானா - செல்வநாதன்

1947 -ல் இலங்கையில் பிறந்த குளோரியானா G செல்வநாதன் சர்வதேச அளவில் நடக்கும் உலகத் திரைப்பட விழாக்களின் ஒருங்கிணைப்பாளராக தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். தமிழ்நாடு உலகத் திரைப்பட விழாவின் நிரந்தர உறுப்பினராக 2004 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு துவங்கி பெர்லினில் நடக்கும் ஆசிய பசுஃபிக் திரைப்பட விழாவின் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்தத் துறையில் ஆசிய அளவில் ஊக்கத்துடன் செயல்படும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் மற்றும் ஊடகவியல் சார்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர். குறும்படம் மற்றும் ஆவணப்படங்களின் தயாரிப்பாளர். மூன்று ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறார். வானொலி மற்றும் தொலைக் காட்சியில் நீண்டகாலம் நிருபராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. “வேர்ல்ட் தமிழ் டெலிவிஷன்” என்ற தொலைகாட்சி சேனலை ஜெர்மனில் சொந்தமாக நடத்தி இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் பணியாற்றியிருக்கிறார். இருபது வருடங்களுக்கும் மேலாக தொழிற்கல்வி நிறுவனங்கள், தொழிற் கூடங்கள் மற்றும் பள்ளிகளில் வெளிநாட்டவருக்கு ஆங்கில மொழியைப் பயிற்றுவித்தவர். “4th Dimension of love” என்ற ஆங்கில நாவலையும் எழுதி இருக்கிறார். கடந்த எட்டு வருடங்களாக செவன்த் சேனல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உலகத் திரைப்பட விழாவை சென்னையில் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை வந்திருந்தபோது அவருடன் சேர்ந்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திரையிடலின் பகுதி நேர இடைவெளியில் நம்முடன் புன்னகைத்தவாறே பேசத் துவங்கினார்.

சினிமா துறைக்கு வந்ததைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

எந்த வசதியும் இல்லாத இலங்கையின் சிறு கிராமத்தில் பிறந்தேன். அந்த சூழலில் ஹாலிவுட் எல்லாம் ஒரு கனவு தானே. ஐந்தாவது படிக்கும் போதே சினிமாவின் மீது எனக்கு அளவு கடந்த பைத்தியம். ஜெமினி கணேசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை நேரில் சந்தித்துப் பேச ஆசையாக இருந்தது. அது இயலாது என்பதால் ஒரு தபால் கடித்தத்தில் என்னுடைய விருப்பத்தைத் தெரியப்படுத்தி அஞ்சல் வில்லையை ஒட்டாமல், முகவரியை மட்டும் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டேன்.

சிறிய கிராமம் என்பதால் எல்லோரும் தெரிந்தவர்களாகத் தானே இருப்பார்கள். தபால்காரருக்கு எங்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் நன்றாகத் தெரியும். எனவே என்னுடைய பெயரைப் பார்த்துவிட்டு, கடிதத்தை வீட்டிற்கு எடுத்து வந்து கொடுத்துவிட்டார். பிறகு வீட்டிலுள்ள எல்லோரும் அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு “இங்க இருந்துட்டு ஹாலிவுட் போற கனவெல்லாம் கூட உனக்கு இருக்கும் போல” என்று என்னைக் கேலி கூட செய்திருக்கிறார்கள்.

அப்போதிலிருந்தே என்றாவது ஒருநாள் சினிமா சார்ந்த ஏதேனும் ஒரு துறையில் உயர் பதவியை வகிக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு வெறி இருந்தது.

உங்களுடைய ஆரம்பக் கல்வி கூட சினிமா சார்ந்துதான் இருந்ததா?

இலங்கையில் தான் பனிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு PUC படிப்பதற்காக சென்னை வந்தேன். படிப்பில் தேறியவுடன் ரேடியோ சிலோனில் வேலை கிடைத்தது. சிறுவயதில் இசையைப் பயின்றிருந்ததால் பாடகியாகவும் சில நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். சிறிது காலத்தில் கல்யாணமும் நடந்துவிட்டது. ஆகவே அந்த வேலையை விட வேண்டி வந்தது. இரண்டு மகளும், ஒரு மகனும் பிறந்திருந்தார்கள். போர் நடந்து கொண்டிருந்ததால் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய சூழல். என்னுடைய தோழி பெர்லினுக்கு வருமாறு அழைப்பு விடுத்தாள். ஆகவே அங்கு செல்லலாம் என்று தீர்மானித்தோம்.

ஜெர்மனியைப் பொறுத்த வரை கல்வித் தகுதி இருந்தாள் தான் கௌரவமாக வாழ இயலும். அதுவும் வெளிநாட்டவராக இருக்கும் பட்சத்தில் முதுநிலையோ அல்லது ஆராய்ச்சிப் படிப்போ இருந்தாள் மிகவும் நல்லது. அப்பொழுதுதான் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும். எனவே கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து “Translations in the Media” என்ற தலைப்பில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கை வேறு பாதையில் பயணிக்கத் துவங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே திரைப்பட விழாக்கள் சார்ந்துதான் இயங்குகிறீர்களா?

அப்படிச் சொல்ல இயலாது... என்றாலும் வானொலி மற்றும் காட்சி ஊடகம் சார்ந்த எல்லா நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன். ஏற்கனவே இலங்கை வானொலியில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் டாக்டர் பட்டம் பெற்ற பின்பு ஜெர்மன் தொலைக்காட்சியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். எவ்வளவு தான் படித்திருந்தாலும் அவையாவும் பிரதானம் இல்லை. அடிமட்ட வேலைகளையும் சேர்த்தே செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும் நம்பிக்கையை மட்டும் எந்த நிலையிலும் இழந்ததே இல்லை. ஏதேனும் ஒரு வகையில் ஊடகத்துடன் தொடர்புடைய வேலையைச் செய்ய வேண்டும் என்பதால் பல சிக்கல்களையும் எதிர்கொண்டு நின்றேன். BBC போன்ற பிரபல நிறுவனங்களுக்குக் கூட நிருபராகப் பணியாற்றி இருக்கிறேன். பெர்லின் திரைப்பட விழாவில் மொழி பெயர்ப்பாளராகவும், ஹாலிவுட் நட்சத்திரங்களை நேர்முகம் செய்தல், பத்திரிகையாளர் சந்திப்பு போன்றவற்றிலும் பங்கெடுக்கும் சூழல் அமைந்தது. அதுதான் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு நிலையில் திரும்பிப் பார்த்த பொழுது ஆசியாவில் இருந்து திரைப்பட ஒருங்கிணைப்பாளராக பங்கெடுக்கும் ஒரே பெண்ணாக நான் மட்டுமே இருந்தேன். ஆகவே பலருடைய கவனமும் என் மீது விழ ஆரம்பித்தது. முக்கியமான உலகத் திரைப்பட விழாக்களில் ஜூரியாகவும் பங்கெடுத்து இருக்கிறேன். அதன் மூலம் கிடைத்த தொடர்புகள் தான் இந்தத் துறையில் உத்வேகத்துடன் இயங்கக் காரணமாக அமைந்தது.

2004 -ஆம் ஆண்டு முதல் சென்னை திரைப்பட விழாவை செவன்த் சேனல் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறீர்கள் இல்லையா?

2003–ஆம் ஆண்டே செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் எண்ணைத் தொடர்பு கொண்டார். அந்த வருடம் என்னுடைய கணவர் இறந்துவிட்டதால் வர இயலவில்லை. ஆகவே அதற்கடுத்த ஆண்டிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறோம். இங்கு திரையிடப்படும் திரைப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் விழாவை ஆண்டுதோறும் பெர்லினிலும் நடத்திக்கொண்டு வருகிறோம்.

மேற்கத்திய திரைப்படங்களை தமிழகத்தில் திரையிடுவதைப் போலவே தமிழர்களின் படைப்புகளுக்கான ஒரு பிரத்யோக விழாவை ஜெர்மனியில் எடுக்கும் எண்ணம் உங்களுக்குத் தோன்றியதுண்டா?

நிச்சயமாக இருக்கிறது. தமிழர்களின் குறும்படங்களை மட்டுமே திரையிடும் ஒரு திரைப்பட விழாவை பெர்லினில் நடத்தும் திட்டம் இருக்கிறது. அது சம்மந்தமாக சில நிறுவனங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்திலிருந்தும் (6), இலங்கையிலிருந்தும் (6), உலகின் இதர பகுதிகளிலிருந்தும் (6) தமிழில் எடுக்கப்படும் குறும்படங்களுக்கான விழாவாக இதனை முன்னெடுக்க விரும்புகிறோம். 18 குறும்படங்கள் பங்குபெறும் மூன்று நாள் விழாவாக இதனைத் திட்டமிட்டு இருக்கிறோம். தொடரும் ஆண்டுகளில் எண்ணிக்கை கூடலாம்.

குறும்படங்களை “தமிழகம், இலங்கை, மலேசியா” என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தையும், இலங்கையையும் நாம் சேர்த்து வைத்துப் பார்க்க முடியாது. இலங்கைத் தமிழர்களை பிரத்யேக கவனம் கொடுத்து உத்வேகப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். தொழில் நுட்ப கூறுகளும், வசதி வாய்ப்புகளும் தமிழகத்தைக் காட்டிலும் ஈழத் தமிழர்களுக்குக் குறைவாகவே கிடைக்கிறது. அவர்களையும் அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது தானே. மற்றபடி பிரித்துப் பார்க்கிறேன் என்பது ஏற்புடைய கருத்து அல்ல.

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய “4th Dimension of love” என்ற நாவல் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

நீண்ட காலமாகவே நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் 2005-ல் தான் அதற்கான தருணம் அமைந்தது. என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களையே கொஞ்சம் வித்யாசமாக இதில் சொல்லி இருக்கிறேன். ஊடகத் துறையில் பெண்கள் பணியாற்றும் போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை இந்தப் படைப்பில் சொல்லி இருக்கிறேன். மீடியாவில் பணியாற்றும் பெண்களை சுலபத்தில் களங்கப் படுத்திவிடுவார்கள்.

BBC நிறுவனத்திற்காக நரசிம்மராவை பேட்டி எடுக்கச் சென்ற அனிதா பிரதாபனையே இதற்கு உதாரணமாகக் கூறலாம். “I know you all journalist are disgusting…“ என்று பொதுப்படையாக எல்லோரையும் சாடினார். ஒரு நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் எப்படி அது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தலாம். “ஏன் இப்படி நடக்கிறது?” என்பதை தான் இந்த நாவலில் வேறு விதமாகச் சொல்லி இருக்கிறேன்.

இந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறதாமே?

ஆமாம். ஜெர்மன் குடியுரிமை பெற்றவர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது. 49% பங்குகளை ஜெர்மன் பட நிறுவனங்கள் கொடுக்கும். 51% பங்குகளை படம் எடுப்பவர்கள் கொடுக்க வேண்டும். படம் தோல்வி அடைந்தால் பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே தான் ஜெர்மன் நிறுவனங்களுடன் இணைந்து எடுக்கலாம் என்றிருக்கிறேன். ஒரு நிறுவனம் “சரி” என்று சொல்லி இருக்கிறார்கள். என்றாலும் கடைசி வரை எதையும் உறுதியாகச் சொல்ல இயலாது.

உங்களுடைய ஆவணப்பட அனுபவங்களைப் பற்றி சொல்லுங்களேன்?

இதுவரை மூன்று ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறேன். ஜோத்பூர் மகாராஜாவின் அரண்மனை சுவர்களில் ஓவியங்கள் இருக்கிறது. அதனைத் தீட்டியது போலிஷ் நாட்டு ஓவியர் ஸ்டீபன் நப்ளின். சுவரில் வரைந்த ஓவியங்கள் என்பதால் தனியே பிரித்தெடுக்க முடியாது. பழுதுபார்க்கும் நிபுணர்களும் இல்லாமல் போகவே அதனை ஆவணப்படுத்த மகாராஜா விரும்பி இருக்கிறார். எனவே அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மகாராஜாவின் நேர்முகம் கூட அந்தப் பதிவில் இருக்கிறது.

இரண்டாவதாக எடுத்த ஆவணப்படம் இந்தியருக்கும் (அப்பா), அசீரியருக்கும்* (அம்மா) பிறந்த பெண் குழந்தை பற்றியது. அவர்களிருவரும் ஈராக்கில் சந்தித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். அந்தப் பெண் குழந்தை தன்னுடைய தாயின் நூறு சொந்தங்களை வெவ்வேறு நாடுகளில் தேடிக் கண்டுபிடிக்கிறாள். அவள் எழுத்தாளரும் பாடகரும் ஆவார். பன்முக ஆளுமையான அவரைப் பற்றிய ஆவணப்படம் தான் அது. சிறந்த படத்திற்கான விருது கூட அதற்குக் கிடைத்தது.

பல் மருத்துவர் டாக்டர் பாலாஜி பற்றிய ஆவணப்படம் தான் மூன்றாவது. அவருடைய மருத்துவ முறைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவை அதில் இருக்கும்.

“World Tamil Television” பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

ஏதாவது செய்யவேண்டும் என்று ஊக்கத்துடன் ஆரம்பித்த ஒன்று. சில சிக்கல்களால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே நிறுத்த வேண்டி வந்தது. காரணம், இதனை அரசியல் செய்தி சேனலாக நினைத்துவிட்டார்கள். எனவே தினந்தோறும் ஜேர்மனியின் செய்தித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஒளிபரப்பும் நிகழ்ச்சி சார்ந்து உயர் அதிகாரி ஒருவருக்கு எல்லாவற்றையும் தெளிவுபடுத்த வேண்டும். இத்தனைக்கும் சேனலை நடத்துவதற்கான உரிமத்தை சட்ட முறைப்படி விண்ணப்பித்து தான் பெற்றிருந்தேன்.

“தொலைகாட்சியை நிறுத்துவதற்கான இலங்கை அரசின் கோரிக்கையை ஜெர்மனி அரசு நிராகரித்துவிட்டது” என்று என்னுடைய புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டு விட்டார்கள். நாளிதழ்கள் தங்களது முதல் பக்கத்தில் அதனைப் பற்றி எழுதி பெரிது படுத்திவிட்டன. இரண்டு நாடுகளுக்கு இடையிலான உரசல் ஏற்பட இது காரணமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு என்னால் ஸ்ரீலங்கா செல்ல முடியாமல் போனது. மீறிச் சென்றால் இலங்கை அரசின் சிறையில் தான் என்னுடைய கடைசி காலத்தைக் கழிக்க வேண்டும். பிறந்த நாடுதான் எனக்கு விரோதமாகிவிட்டது. ஆனால் மற்ற எல்லா நாடுகளும் எனக்கு நட்பு நாடுகள் தான். “திரைப்பட விழாக்களுக்காக பிரான்ஸ், கனடா, நெதர்லாந்து, சுவிசர்லாந்து, டென்மார்க், இந்தியா போன்ற பல நாடுகளுக்கும் சென்று வருகிறேன். பிறந்த மண்ணைத் தவிர...” என்றவரின் கண்ணில் சோகம் இழையோடியது.

விருப்பமான துறையில் நீண்டகாலம் பணியாற்றி தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தாலும். பிறந்த ஊரில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருக்கும் தானே. அடுத்தடுத்த திரைப்படம் திரையிடும் நேரம் நெருங்கிவிட்டதால் நம்மிடம் விடைபெற்றுக் கொண்டு இருட்டறையை நோக்கி நடக்கத் துவங்கினார்.

*அசீரியன் - ரஷ்யாவிற்கும் இராக்கிற்கும் இடையிலுள்ள ஒரு பகுதியில் வாழ்ந்த இனம்.

நன்றி: பண்புடன் இணைய இதழ் (www.panbudan.com)