Monday, August 27, 2012

அடக் கடவுளே...!

சமீபத்தில், அண்ணன் பாலபாரதியை சந்திக்க புதிய தலைமுறை அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அலுவலகத்தின் இளம் (ஆண்) ஊழியர்கள் முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாட்டத் தோரணங்களைக் கட்டிக் கொண்டிருந்தனர். தொலைகாட்சி சேனல் ஆரம்பித்து இதற்குள் ஒரு வருடம் உருண்டோடி இருக்கிறது. சேனலின் வீச்சும் தான் அதற்கேற்ப வேகமாக வளர்ந்திருக்கிறது. அல்லோல கல்லோலப்பட்ட இடத்தின் கண்ணாடிச் சுவரின் ஓரத்தில் அமர்வதற்கு இருக்கை போட்டிருந்தார்கள். அதில் ஒரு வாடிய முகம் தென்பட்டது. கிராமிய முகம் என்பது கூடுதல் சிறப்பு. அவர் மட்டுமே அமர்ந்திருந்தார் என்பதை ஒரு தகவலுக்காக பதிய விரும்புகிறேன்.

அந்த நபரைப் பார்த்து "ஹாய்" என்றேன் குதூகலத்துடன். இதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் மலங்க மலங்க விழித்தார். "இங்க வேலை செய்யிறிங்களா?" என்றேன்.

"இல்லைங்க சார்... ஒருத்தர பார்க்க வந்தேன்." என்றார்.

"Oh yes.... சார் போட்டுக் கூப்பிடும் அளவிற்கு நான் பெரிய ஆல் இல்லை. என்னோட பேரு கிருஷ்ண பிரபு" என்றேன்.

"என் பேரு பிரபு" என்றார்.

போகட்டும் "யாரைப் பார்க்க வந்திங்க?" என்றேன் மேலும் பேச்சுக் கொடுக்க.

"எதோ ஒரு கட்டுரையைச் சுட்டிக் காட்டி..." அதை எழுதியவரைப் பார்க்க வந்தேன். "அதைப் பற்றிய தகவல்களைத் திரட்ட" என்றார்.

"கூகுளில் தேடி இருக்கலாமே. இவ்வளவு மெனக்கெட்டு வர வேண்டுமா" என்றேன்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாதே!" என்றார்.

என்னுடைய விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு, "மெயில் அனுப்புங்கள். இது தொடர்பாக ஏதேனும் என் கண்ணில் பட்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் பாலபாரதி வந்து சேர்ந்தார்.

பாலபாரதி குழந்தைகளைப் பற்றி ஆராயக் கூடியவர். ஆர்வமுடன் தகவல்களை சேகரிக்கக் கூடியவர். தன்முனைப்பு குறைபாடுடைய (ஆட்டிசம்) குழந்தைகள் சார்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். என்னுடைய சகோதரி கீர்த்தனா கிருஷ்ணமூர்த்தியும் கடந்த பல வருடங்களாக குழந்தைகள் மன நலம் சார்ந்து இயங்கி வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரியிலும் - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மைன்ட் ட்ரைனர்-ஆக இருக்கிறார். பொதிகையில் அது சார்ந்த நிகழ்ச்சியையும் தொடர்ந்து செய்து வருகிறார். கனியமுதனைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால் பேச்சு சுழன்று சுழன்று குழந்தைகளைப் பற்றியே சென்று கொண்டிருந்தது. மேலும் விரிவாகப் பேச கீர்த்தனாவுடன் அவரை ஒருநாள் வந்து சந்திப்பதாகக் கூறினேன்.

அண்ணனுடன் குஸ்தி விளையாடிக் கலைத்து, அங்கிருந்து புறப்பட எத்தனித்தேன். ஓவியர் மருது வந்துகொண்டிருந்தார். அவருக்கு எதிரில் சென்று சடுகுடுவில் ஆட்களை மடக்குவதுபோல அரண் அமைத்தேன்.

"வணக்கம் Mr. மருது, ஒரு நிமிடம் உங்களிடம் பேச வேண்டும்" என்றேன்.

"சொல்லுங்க" என்றார்.

"என்னுடைய நண்பர் இந்திய ஓவியங்களைப் பற்றிய, முக்கியமாக தமிழ் ஓவியங்களைப் பற்றிய புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். உங்களிடம் ஏதாவது பரிந்துரை செய்ய இருக்கிறதா?" என்றேன்.

"அப்படி எதுவும் இருக்க மாதிரி தெரியலை... விட்டல்ராவ் எழுதனது இப்போ கெடைக்கறது இல்ல" என்றார் வருத்தத்துடன்.

இனி பேச எதுவுமில்லை என்பதால், அவரிடமிருந்து விடைபெற்றேன். அங்கிருந்து புறப்படும் நேரத்தில் அந்த நபர் என்னைச் சீண்டினார். பாவப்பட்ட முகத்தை வைத்துக் கொண்டு "உங்களிடம் பேச வேண்டும்" என்றார்.

"சரியாப்போச்சு... உங்களைப் பார்த்தால் ரொம்ப கொழப்பத்துலயும், டெண்ஷன்லயும் இருக்க மாதிரி தெரிஞ்சுது. ஒருவேலை இன்டெர்வியூ-விற்கு வந்திருப்பிங்கலோ-ன்னு நெனச்சி தான் ரிலாக்ஸ் செய்ய பேச்சுக் கொடுத்தேன்... ஆனால், நீங்க கட்டுரையாளரத் தானே பார்க்க வந்திருக்கீங்க. என்கிட்டே பேச என்ன இருக்கு?" என்றேன்.

"நீங்களா தான எங்கிட்ட பேசினிங்க?" என்றார்.

"அட... நான் எந்த ஆபீசுக்கு போனாலும் ரிஷப்ஷனிஸ்ட் கிட்டக்கூட பேச மாட்டேன். இன்டர்வியூ-க்கு வந்திருக்க மாதிரி யாராச்சும் தெரிஞ்சாங்கனா... சும்மா பேச்சு கொடுத்து கொஞ்சம் டென்ஷனை கம்மி செய்வேன். அப்படி நெனட்சிதான் உங்ககிட்ட பேசினேன் " என்றேன்.

"நீங்க மொதல்ல சொன்னது ரொம்ப கரெக்ட்" என்றார்.

"நான் என்னங்க சொன்னேன்...?" என்றேன்.

"நான் ரொம்ப கொழப்பத்துல இருக்கேன்...என்ன பண்றதுன்னே தெரியல?" என்றார்.

இந்தச் சின்னப் பையனிடம் அப்படி என்ன பெருசாக பிரச்சனை இருக்கப்போகிறது என்று "சரி... உட்காருங்கள் இப்பொழுதே பேசி சரி செய்துவிடலாம்" என்றேன்.

"எங்கக் குடும்பம் ரொம்ப வருமையில இருக்காங்க. அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. தம்பி வேலை செய்யுறான். அம்மா தான் எங்களை எல்லாம் காப்பாத்துனாங்க. பாருங்க நான் பண்ணண்டாவது (12th) வரைக்கும் ஃப்ரீ ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன். பாஸ் பண்ணிட்டு வேலைக்குப் போகலாம்னு தான் நெனச்சேன். படிச்ச ஸ்கூல்ல இருந்த டீச்சேர்ஸ் தான், நீ எஞ்சினியரிங் படின்னு சொன்னாங்க. எனக்கு என்னவோ வேலைக்குப் போகணும்னு தான் தோனுச்சி. ஒருத்தர் நான் படிக்க வக்கிறேன்னு சொன்னாரு. சரின்னு நானும் ஒரு பிரைவேட் காலேஜில சேர்ந்துட்டேன். ஒரு வருஷத்துக்கு மேல அவரால காசு கொடுக்க முடியலை. எதோ கஷ்டம்ம்னு பணம் கொடுக்கறத நிறுத்திட்டாரு.

இப்போ படிப்புக்காக காசு கொடுங்கன்னு யார்கிட்டயாவது கேக்க வேண்டி இருக்கு. எல்லாத்துக்கும் அடுத்தவங்ககிட்ட போய் நிக்க வேண்டி இருக்கேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவே மைன்ட் பிரஷரா இருக்கு... " என்றார்.

"ஓ மை காட்... நான் எச்சைக் கையால் ஈ ஓட்டத் தயங்குபவன். என்னிடம் ஏன் இந்த பச்சிளம் பாலகன் மடை திறந்த வெள்ளம் போல பேசுகிறான் என்று சுதாரித்தேன். மைன்ட் பிரஷ் - பற்றி பாலபாரதியிடம் பேசியதை பையன் கவனித்திருக்க வேண்டும். அதுதான் விஷயம். "சரிங்க பிரபு... என்னுடைய இ-மெயிலுக்கு உங்களுடைய பையோ டேட்டா அனுப்புங்க. நிச்சயமா உங்கள கூப்பிடுறேன். பாருங்க, நான் பணம் கொடுத்து உதவி செய்ய முடியாது. ஏன்னா, ஐ ஆம் ஜாப்லெஸ்... ஆனால் வேறு ஒரு வகையில் உங்களுக்கு உதவ முடியும்" என்றேன்.

"எனக்கு மட்டும் தான் Emotional Training கெடைக்கனுமா? என்ன மாதிரி ஹாஸ்டல்ல நெறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கும் கெடச்சா நல்லா இருக்கும்" என்றார்.

Btec இரண்டாம் வருடம் படிக்கும் அந்தச் சின்னப் பையனுக்கு எவ்வளோ நல்ல மனசு. ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதி கூறுகிறேன், அந்த வசதியை தனக்காக மட்டும் பயன்படுத்தாமல், தன்னைப் போன்ற இயலாமையில் இருக்கும் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த சந்திப்பைப் பற்றி என்னுடைய அக்காவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள். இங்கு அப்படியா நடக்கிறது. அகரம் ஃபவுண்டேஷன் முதல் விஜய் டிவி வரை.... இவர்கள் எங்கள் தயாரிப்பு என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதிலேயே இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சு நெஞ்சங்களுக்கு எவ்வளவு வலிக்கும். இதை நாம் ரசித்து ரசித்து நெக்குருகி வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு பார்க்கிறோம். குழந்தைகளை அழவைக்கும், காயப்படுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

நான் பகிர நினைப்பது, இதிலிருந்து முற்றிலும் முரணான ஒன்று. பிளஸ் 2 ரிசல்ட் வரும் சமயத்தில் கர்ண பரம்பரையில் பிறந்ததுபோல உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட வேண்டியது. பிறகு தன்னால் முடியவில்லை என்று விலக வேண்டியது. இதனால் குழந்தைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பள்ளியோ, கல்லூரியோ - மாணவர்களுக்கு பண உதவியை விட, அன்பும், அரவணைப்பும் ஆறுதலும் தான் முக்கியம். அதை முதலில் கொடுக்க முடியுமா என்று பார்ப்பது நல்லது.

உதவி பெரும் மாணவர்களையும் குறை சொல்லித்தான் ஆகவேண்டும். முற்றிலும் ஒருவரை நம்பி வாழ்வது தவறுதானே. பகுதி நேரமாக ஏதேனும் வேலை செய்யலாம். என்னுடைய உறவினர்களில் பலரும் வெளிநாடு சென்று படிக்கும் பொழுது, அங்குள்ள சூப்பர் மார்கெட், பெட்ரோல் பங்க் போன்ற பகுதி நேர வேலையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் பொழுது தண்ணீர் குடித்த டம்ப்லரைக் கூட அருகிலுள்ள சிங்க்கில் கொண்டு வைக்கத் தயங்குவார்கள். இவர்களைத் தடுப்பதுதான் என்னவென்பது புரியவில்லை?

ஒருமுறை பயண கதியில், டாம்பீகமான வழிப்போக்கன் ஒருவனை சந்தித்தேன். என்னுடைய இருப்பு அவனை தொந்தரவு செய்திருக்க வேண்டும். அழுக்கடைந்த என்னுடைய உருவத்தைப் பார்த்து முகத்தைச் சுளித்துக்கொண்டே"வாட் ஆர் யு டூஇங்?" என தெனாவட்டாகக் கேட்டான்.

"இட்ஸ் நன் ஓஃப் யூவர் பிசினஸ்" - என்ற அதரப் பழசான சொலவடையில் கடந்து சென்றேன். நாட்டை ஆண்டால் என்ன? டேபிள் துடைத்தால் என்ன? வேலை செய்யும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் சாதாரண மனிதனாக வாழப் பழகினால் எல்லாமே கைகூடும். இதைத் தான் பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும். மாறாக போட்டி மனப்பான்மையையும், அமைதியின்மைக்கான சூழலையுமே தற்போதைய கல்விமுறை விதைத்துக் கொண்டு வருகிறது.

எத்தனை மாணவர்கள் தினம்தினம் குமுருகிறார்களோ!... அடக் கடவுளே...!

1 comment:

  1. வேலை செய்யும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் சாதாரண மனிதனாக வாழப் பழகினால் எல்லாமே கைகூடும். இதைத் தான் பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும். மாறாக போட்டி மனப்பான்மையையும், அமைதியின்மைக்கான சூழலையுமே தற்போதைய கல்விமுறை விதைத்துக் கொண்டு வருகிறது.

    super Ki.Pirabhu

    ReplyDelete