Sunday, September 30, 2012

லவ் ஃபெய்லியர்

எனது முதல் காதல் அதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும். அக்கா ஜெயாவிடம் பகிர்ந்தபோது கொல்லெனச் சிரித்தாள். பத்தாம் வகுப்பில் படித்தபோது, என்னுடன் ஒன்றாக டியூஷன் படித்த நண்பனை பேருந்து பயணத்தில் தற்செயலாகச் சந்தித்தேன். அதுவும் பதினைந்து ஆண்டுகள் கழித்து. முதலில் அவன் தான் அடையாளம் கண்டு பேசினான். என்னை நெருங்கியவன் “நீங்க கிருஷ்ணபிரபு தானே” என்றான். 

“ஆமா நீங்க...” என்றேன். “நம்ம ரெண்டு பேரும் பத்தாவது படிக்கும் போது ஒரே டியூஷன்...” என்றான். 

“அப்போ எதுக்கு இந்த – ‘வாங்க போங்க’ – குப்பைகள் எல்லாம்” என்றேன்.

“உங்கள பாத்தா ‘டா’ போட தோனல. உங்க கூட ரொம்பப் பேசி பழகினது இல்லையே!” என்றான். 

“சரி... உன்னோட விருப்பம்... சொல்லு... எப்படி இருக்க?” 

“ம் ம் ம்... உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்றான். 

“எதப்பத்திடா கேக்குற?. “நம்ம டியூஷன்ல படிச்சாளே...? XYZ” என்று அந்தப் பெயரை உதிர்த்தபோது, அவனுடைய முகமெல்லாம் தண்ணீர் தெளித்த பூவைப்போல புத்தாக்கம் கண்டது. அடுத்த நொடியே வாடி வதங்கிய முகத்தைத் தொங்கப் போட்டான். 

“அடடே... வாழ்வில் காதல் தோல்வி கண்டவர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்து துன்புறுத்துவார்கள் போல” என்று நினைத்துக் கொண்டேன். கூடவே அந்தப் பெயரும், அவளுடைய முகமும் ஞாபகத்தில் வரவே இல்லை. “டேய்... நான் ஒரு உண்மை சொல்லணும்... என்னோட கிளாஸ்மேட்ஸ்சோட பேரு கூட ஞாபகத்தில் இல்ல. அவங்க எல்லாரோட முகம் கூட ஞாபகத்தில் இருந்து மறஞ்ஜிடுட்சி... நீங்க ரெண்டு பேரும் வேற செக்ஷனா இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்...” 

“ஆமாங்க...” என்றான். 

“சரி... இதுக்கு மேல நீ தான் சொல்லணும்” என்றேன். 

தயங்கி பேசத்தொடங்கியவன். “உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... எனக்கு டியூஷன் படிக்கறதுக்கு எல்லாம் விருப்பமே இல்லை. அவளுக்காகத் தான் டியூஷன் சேர்ந்தேன்...” என சுற்றி வளைத்தான். 

“ஐயோ...! இவன் எதுக்குத் தேவையில்லாம என்னைப் பொறாமைப் பட வெக்கிறான். ஒருவேளை நான் வாங்கிவந்த வரம் அப்படியோ!” என மைன்ட் வாய்சில் ஏதேதோ பேசிக்கொண்டேன். 

“பொண்ணுங்க செம கியூட் தெரியுமா! நான் அவ பின்னாடி சுத்தறத அவ கண்டுபிடிட்சிட்டா!... அதனால என்ன விட்டு வெலகி வெலகி போயிட்டு இருந்தா...” என்றதோடு “அதுக்கு மேல ஒரு விஷயம் இருக்கு...” என்றான்.

இங்க என்ன ட்விஸ்ட் வக்கப் போறானோ என்று நினைத்துக் கொண்டேன். “எங்கையாவது முக்குச் சந்துல நேருக்கு நேரா சந்திச்சி காதல சொல்லிட்டியா?” என்றேன். 

“விஷயம் அது இல்லங்க... xyz –க்கு உங்களைத் தான் ரொம்ப பிடிக்கும்... அவ உங்களைத் தான்...” என்று எதோ பினாத்திக் கொண்டிருந்தான். உடனே அவனை இடைமறித்து “இதென்ன வேடிக்கை, அவளோட மனசுல நான் இருந்தேன்னு உனக்கு எப்படித் தெரியும்...?” என்றேன். 

“நான் ஸ்கூல்ல படிச்சத விட அவல நோட்டம் விட்டதுதான் அதிகம். அவளோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி... ஒரு பையன் ஒரு பொண்ண ஜூட் விட்றத எல்லாரும் கண்டு பிடிட்சிடலாம். ஆனா பொண்ணுங்க யார ஜூட் விட்றாங்கன்னு அவங்கள லவ் பன்றவங்களுக்குத் தான் நல்லா தெரியும்” என்றான். 

அடக் கடவுளே, எனக்கான காதல் எனக்கே தெரியாமல் உதிர்ந்திருக்கிறது. அதை வேறொருவன் வந்து தெரியப்படுத்திச் செல்கிறான். வேப்பம்பூவின் தேனை ருசித்தால் கொஞ்சம் கசப்பையும் உணர்ந்துத் தானே ஆகவேண்டும். இது என் வாழ்நாளின் பிட்டார் ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ். இனி நானும் லவ் ஃபெய்லியர் என்று இறுமாப்புடன் சொல்லிக்கொள்வேன். சக மனிதர்கள் நம்மை நேசிக்கிறார்கள் என்பதைவிட வேறெந்த ஒன்றும் வாழ்வை சிறப்பித்துவிடாது. 

“இதை அப்பவே சொல்லாம... இப்ப ஏன்டா எங்கிட்ட சொல்ற?” என்று நண்பனிடம் கேட்டேன். 

“அப்பல்லாம் உங்கள அடிக்கனும்னு கூட நெனட்சிருக்கேன். அவ்வளோ கடுப்புல இருந்தேன். அதான் உங்ககிட்ட நெருங்கிப் பழகல...” என்றான்.

“இப்போ அவ எங்க இருக்கா...?” 

“யாருக்குத் தெரியும்...!?...” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். 

சிறகிலிருந்து பிரிந்த 
இறகு ஒன்று 
காற்றின் 
தீராத பக்கங்களில் 
ஒரு பறவையின் வாழ்வை 
எழுதிச் செல்கிறது...!

(இந்த மூணு புள்ளி... ஒரு ஆச்சர்யக் குறி மிக முக்கியம்...)

No comments:

Post a Comment