Wednesday, August 1, 2012

பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 02

சங்கிலியால் தொங்கிய மார ஊஞ்சலில் அந்த பெரிய மனிஷி வந்தமர்ந்தாள். உட்கார்ந்த வேகத்தில் ஊஞ்சலானது முன்னும் பின்னும் ஆடியது. அம்மாவிற்கு நெருங்கிய உறவு முறை என்பதால் பேச்சுக் கொடுத்தேன். உண்மையில் அந்தப் பெரிய மனுஷி ரெண்டு கை சொந்தம். அப்பாவிற்கு ரெண்டு மடங்கு தூரம் எனில், அம்மாவிற்கு அதில் பாதி தூர பந்தம் உண்டு. இனி நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

"பிளட் ஷுகர் எல்லாம் கண்ட்ரோல்ல இருக்குதா"

"எங்கப்பா... ஒண்ணுமே சாப்புடறது இல்ல... ஆனா ஷுகர் மட்டும் ஏரிக்குனே இருக்குது." என்றாள். எனக்குப் பாவமாக இருந்தது. "சரி சரி... கவலைப் படாதிங்க... எல்லாம் சரியா போயிடும்" என்றேன்.

"க்கும்... உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் போல..." என்றாள். மேலும் அவளை காயப்படுத்தாமல் பேச்சை மடை மாற்றுவதாக எண்ணிக் கொண்டு, எனக்கே தெரியாமல் உளறிவிட்டேன்.

"ஆமா... உங்க பேத்திக்கு கல்யாணமாமே! அவங்க லவ் பன்றவருக்கே பேசி முடிட்சிட்டிங்கலாமே... ரொம்ப சந்தோசம்..." என்றேன் யதார்த்தப் புன்னகையுடன்.

"எந்த நாயி சொன்னா அந்த மாதிரி... இது நாங்க பெரியவங்களா பார்த்து பேசி முடிச்சி வச்ச கல்யாணம். ஊருல இருக்கவங்களுக்கு வேற வேலை இருந்தா தான?" என்று காய வைத்த எண்ணையில் கடுகைத் தூக்கிப் போட்டது போல பொறிந்து அடங்கினாள்.

"ஊருல எல்லோரும் அப்படிதான் சொல்றாங்க" என்றவாறு நிலைமையைப் புரிந்தும் புரியாமல் பக்கத்தில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்தேன். ஆவி பறக்கும் காஃபியை ஆற்றியவாறு கண்களை உருட்டி சைகை செய்தாள்.

"அதெல்லாம் இல்லப்பா... ரெண்டு பேரும் காலேஜுல ஒண்ணா படிச்சாங்க. அந்தப் பையன் ஞாயித்துக் கெழமன்னா எங்க வீட்டுக்கு வருவான். மத்த படி 'லவ்'வெல்லாம் இல்ல..." என்றவாறு நீட்டிய காஃபியை வாங்கிக் கொண்டாள் பெரிய மனுஷி. அவள் சென்ற பிறகு என்ன சொல்லி திட்டலாம் என்பது போல இருந்தது அம்மாவின் உடல் மொழி. இதே அப்பாவின் சொந்தமாக இருந்திருந்தால் அவளும் சேர்ந்து கேள்விகளை அடுக்கி இருப்பாள். தனக்கும் நெருங்கிய சொந்தம் என்பதால் கொஞ்சம் திணறித்தான் போனாள். நானும் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன்.

நாட்களும் சென்றது. மேற்படி சம்பவத்தையும் முற்றிலும் மறந்துவிட்டேன். அவசியம் இருந்ததால் சின்ன அண்ணனை செல்பேசியில் அழைத்தேன். "ங்கோத்தா... அவங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடறேன். பஜ்ஜேரிங்க நம்மள பத்தி இன்னாடா நெனட்சிக்குனு இருக்காளுங்க? முண்டைங்க..." என்று அடுக்கிக் கொண்டு சென்றான்.

"அடேய்... அடேய்... சும்மா இருடா! எதுக்கு இப்போ குதிக்கிற? அப்புடி இன்னாடா பண்ணிட்டாங்க உன்ன?" என்றேன்.

"அதெல்லாம் உனக்கு எதுக்கு? நான் சொல்ல மாட்டேன்" என்றான்.

"டேய்... சொல்றான்னா" என்றேன்.

"செருப்பால அடிக்கனமும்னு மத்தி (பெரிய மனுஷி)சொல்றா... பொட்டப் பயன்னு பேத்தி சொல்றா... போலீஸ்ல புடுட்சிக் கொடுக்கணும்னு சொல்றா அவளோட சித்திகாரி..." என கோவத்தில் கொக்கரித்தான்.

"ஆமா... யாரடா சொல்றாங்க?" என்றேன் ஒன்றும் புரியாமல்.

"ஆங்... ஊரையா சொல்லுவாங்க? உன்னதாண்டா" என்றான்.

"அவங்க அப்படியெல்லாம் திட்ட மாட்டாங்க. சும்மா யாராச்சும் சொல்லி இருப்பாங்க. என்னமோ நேருல கேட்ட மாதிரி கோவப் பட்ரையே..." என்றேன்.

"செல்போன ஆன் பண்ணி வச்சிட்டு, கேக்கட்டும்ன்ற திமுருல தான திட்டுறாங்க " என்றான் அடக்க முடியாத கோவத்தில்.

"டேய்... அவங்க என்ன தான திட்டுறாங்க. எனக்கே கோவம் வரல. நீ ஏன் குதிக்கிற" என்றேன்.

"ம்...மயிறு நீ அங்க இங்கன்னு போயிடுற. நாலு பேரு பேசறத நாங்க தான கேக்க வேண்டியிருக்கு. சும்மா இருக்க நம்ம என்ன அவளுங்க சொன்ன மாதிரி பொட்டைங்களா?" என்றான்.

பெரிய மனுஷியின் பேத்தியை பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வந்து கொண்டிருக்கின்றனர். அம்மாவின் நெருங்கிய உறவு என்பதால் எங்கள் வீட்டையும் அழைத்திருந்தார்கள். அங்கு செல்வதற்கு முன்பு எதையோ கேட்பதற்காக, செல்பேசியில் கூப்பிட்டு பேச நினைத்து, அவர்கள் திட்டுவது காதில் விழுந்து - அண்ணன் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பதாக அம்மாதான் தெரியப் படுத்தினாள்.நானும் ஒரு வழியாக அவனை சமாதானம் செய்தேன். ஆனால், இரண்டு கண்டிஷன்களை என்னிடம் சொன்னான். அதாவது...

"1. அந்த நாய பொண்ணு பார்க்க வராங்க இல்ல. நம்ம வீட்டுல இருந்து யாரும் போகக் கூடாது
2. அந்த பன்னியோட கல்யாணத்துக்கும் போகக் கூடாது"

என்றான் தீர்மானமாக. இதென்ன பிரமாதம் என்று நிலைமையை சமாளிக்க நானும் ஒத்துக் கொண்டேன். அம்மாவிற்கு இதில் ஏக வருத்தம். "அடப் பாவிங்களா! ஒண்ணுமில்லாத விஷயத்த இப்புடிப் பெருசாக்கி சொந்த பந்தத்தைப் பிரிக்கிறிங்களே?" என்றாள் அழுவாத குறையாக.

இரண்டு நாட்களில் கோவம் தணியும் என்று நினைத்தேன். ம்ஹூம்... அண்ணனின் கோவம் தணிவது போலத் தெரியவில்லை. உறவு முறையில் சித்தப்பா மகன் என்னிடம் வந்தான்.

"அந்த பொட்ட நாயிங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடனும்" என்றான்.

அதெப்படி சில ஆண்களுக்கு பெண்கள் பொட்டைகளாகவும், சில பெண்களுக்கு ஆண்கள் பொட்டைகளாகவும் தெரிகிறார்கள் என்பது விளங்குவதே இல்லை. பள்ளி மற்றும் கல்லூரி விடலைகள் கோவத்தில் சக நண்பனையோ அல்லது எதிர் கூட்டணியில் உள்ளவனையோ "போடா பொட்ட" என்று திட்டுவதை அதிகமாகக் கேட்க முடிகிறது.

"எதோ கோவத்துல பேசிட்டாங்க வுடுடா!" என்றேன்.

"ஊருல எல்லாரும் இதப் பத்திதான் பேசிக்குறாங்க. உனக்கு கொஞ்சம் கூட ரோஷமே வரலையா? உனக்கு ஒடம்புல ரத்தம் ஓடுதா இல்ல சீழ் ஓடுதா?" என்றான்.

"ஹ ஹ ஹ ஹா ஹ" என சத்தம் போட்டு சிரித்தேன்.

"போடா போடா... உன் மூஞ்சில மொட்ட நாயி பீ பேல" என்றான். நான் அடக்க மாட்டாமல் வானத்தை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தேன். வெண்மேகத் திட்டுக்கள் சமாதானப் புறாவைப் போல கடந்து சென்றன.

No comments:

Post a Comment