Monday, January 17, 2011

கவிதை சங்கமம், சென்னை

ஆறு மாதங்களுக்கு முன்பு, பச்சையப்பன் கல்லூரியின் மைதானத்திலுள்ள கல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வேலையை ராஜினாமா செய்வது பற்றி தீவிரமாக தனிமையில் யோசித்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் சிறுவர்கள் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கால்பந்து. சிலர் ஹாக்கி. அவர்களுடைய உற்சாகக் குரல்களை விழுங்கியவாறு பறை மேள தப்பாட்ட கோஷம் என் காதில் கேட்டது. பெருங்கோஷம் வந்த திசையை நோக்கி நகர்ந்தேன். விடுதியில் தங்கிப் படிக்கும் கால்கள் மெலிந்த, வயிறு ஒட்டிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சோதனை ஆட்டம் (ரிகர்சல்) ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான ஒரே பார்வையாளனாக அமர்ந்துகொண்டேன். நீண்ட நேர பயிற்சிக்குப் பின் ஓய்வெடுக்க வந்தார்கள். "எதற்காக இந்தப் பயிற்சி?" என்று கேட்டேன்.

"சில விழாக்கள் வருகிறது. அதற்காகப் பயிற்சி செய்கிறோம்." என்றார்கள்.

"எந்த விழா? எங்கு நடக்கிறது?" என்று கேட்டுக் கொள்ளவில்லை. அவர்களுடைய படிப்பைப் பற்றி விசாரித்த பொழுது கணக்கியலும் கணினியியலும் வரலாறும் படிப்பதாகக் கூறினார்கள். அவர்கள் மீண்டும் பயிற்சிகுத் தயாரானதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

கடந்த ஞாயிறன்று கோயம்பேடு சென்றிருந்தேன். சென்னை சங்கமத்தில் அதே பறை மேள தப்பாட்ட ஒலி. கூட்டத்தோடு கூட்டமாக மையத்தை நோக்கி என்னுடைய பார்வையைச் செலுத்தினேன். கலைஞர்களில் இருவர் எனக்குத் தெரிந்தவர் போல இருந்தனர். ஆட்டம் முடிந்ததும் அருகில் சென்று கைகுலுக்கினேன். "உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்." என்றேன். அவர்களுடைய பெயர் சக்ரவர்த்தி மற்றும் குரு. வாலிப ரேகை ஓடக்கூடிய முகம்.

"ஞாபகம் இருக்கு. நாங்க பயிற்சி செய்யும் போது கல்லூரிக்கு வந்தீர்களே" என்றார்கள். சில சந்திப்புகளும் அதைத் தொடர்ந்த பின் சந்திப்புகளும் தற்செயலாக அமைந்துவிடுகிறது. சென்னை சங்கமம் நடத்தும் ஒரு நூறு கவிஞர்கள் பங்குபெற்ற கவிதை வாசிப்பிற்கு சென்றதும் அப்படித்தான். கட்டுரைகளுக்கே தகிகினதோம் போடுபவன். கவிதை என்பது அவ்வளவு சுலபத்தில் மண்டையில் ஏறாது. எனவேதான் என்னுடைய நண்பன் கூட "You are hard nut to crack" என்று எப்பொழுதும் வசைபாடுவான்.

விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழி உமாஷக்தி தொலைபேசி அழைப்பு விடுத்தார். ஆகவே செல்வதென முடிவு செய்தேன். தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நுழைந்ததும் கவிஞர் வேல்கண்ணனைப் பார்த்தேன். "எள்ளு வேணும்னா எண்ணையில பொறியலாம் எலிப்புழுக்கை எதுக்குயா பொறியனும்" என்பது போல என்னைப் பார்த்தார்.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே
கல்லாதான் பெற்றக் கவி...

என்றவாறு வான்கோழியாக வேடிக்கைப் பார்க்க வந்திருக்கேன். "பிரியாணி போட்டுரலாம்னு நெனச்சிடாதீக" என்றேன். முத்துச்சாமி, அடலேறு, அ மு சையது போன்ற கவிஞர்கள் முன் வரிசையில் இடம் பிடித்திருந்தனர். "இங்கிருந்தால் வேடிக்கைப் பார்க்க இயலாது" என்று கூறிக் கொண்டு பின்னால் சென்றேன். ச முத்துவேல், அகநாழிகை பொன் வாசுதேவன், தண்டோரா மணிஜி, நர்சிம் ஆகியோருடன் ஐக்யமானேன்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கும் கவிஞர் கலாப்ரியா வந்து சேர்ந்தார். முக்கியக் கவிஞர்களான ஈரோடு தமிழன்பன், ஞானக்கூத்தன் போன்றோரும் வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் கவிஞர் இளையபாரதி அனைவரையும் வரவேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். ஒருவர் பின் ஒருவராக கவிதை வாசிக்கப் புறப்பட்டனர். அவர்களில் 'பாரதி' படத்தில் எட்டையபுரம் சமஸ்தான மகாராஜாவாக நடித்தவரும் அடக்கம். 24-வது நபர் கவிதை வாசிக்கும் பொழுது கனிமொழி சத்தமின்றி உள்ளே நுழைந்தார். புகைப்படக் கலைஞர்கள் மேடையைச் சுற்றி வலம் வந்தனர். அரங்க மேடையில் அவருக்கான பூங்கொத்தும், மரியாதையும் அளிக்கப்பட்டது.

ஊழலில் தொடர்புடையவர்கள் நடத்தும் சங்கம விழாவை புறக்கணிக்கிறேன் என்று கவிஞர் வா மணிகண்டன் திறந்த வெளியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அதனினும் பார்க்க முக்கிய கலகத்தை ஒரு கவிஞர் (பெண்) உள்ளரங்கில் ஏற்படுத்தினார். இவருடைய கவிதையை மிகவும் ரசித்தேன். கனிமொழி கூட யதார்த்த உண்மை உணர்ந்து சிரித்தார். புலவர் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு பதவியில் இருப்பவர்களை புகழ்பாடும் கூட்டத்தினர் தலையில் ஒரு கொட்டு வைப்பது போல இருந்தது. அதன் பிறகு வாசிக்கப்பட்ட சில கவிதைகளில் பால்கனியில் நின்று கனிமொழி காற்று வாங்கினார். உணவு நாற்காலியில் தமிழச்சி தங்கபாண்டியன் வீற்றிருந்தார். சூரிய உதயத்தைப் புகழ்பாடும் கவிதைகளும் இருந்தது. சூரிய நமஸ்காரத்தைச் சொல்ல வேண்டுமா என்ன? ஐயோ... சூரிய பகவானை விட்டு விட்டோமே! தளபதிக்கும், தளபதியின் குஸ்தியாளிக்கும் கவிதைகளில் இட ஒதுக்கீடு இல்லை. அவர்களுடைய வாரிசுகளுக்கும்தான். இலக்கியம் ஓர் எல்லைக்குட்பட்டது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

நல்ல வேலை, சினிமா பாடல்கள் எழுதியே கவிஞர் என்றும் அரச கவிஞர் என்றும் பெயர் வாங்கிய யாரும் வரவில்லை. அரைமணி நேரத் துதிப்பாடல் கூடியிருக்கும். தனக்கான விழா எடுப்பதற்கே நேரம் போதவில்லை. வளரும் கவிஞர்களை வாழ்த்த, வழி நடத்த நேரம் இருக்குமா என்ன? யாரைச் சொல்லியும் குற்றமில்லை. தன்னைத் தானே வியாபாரப்படுத்திக் கொள்பவன் தானே கலியுக புத்திசாலி. இல்லையேல் வாரிசுகளை வியாபாரம் செய்தால் போகிறது. இதைச் சொன்னாள் நீங்கள் கோவிக்கக்கூடாது. ஒரு நல்ல காரியத்தைத் தொடங்க வேண்டுமெனில் வீட்டிலிருந்து தானே ஆரம்பிக்க வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து வந்திருந்தவர்களுக்கு வணக்கம் கூறியவாறே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி புறப்பட்டுச் சென்றார். செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதுபோல கவிதை வாசிப்பு தொடர்ந்து நடந்தது. "யோவ்... பசிக்குதுயா வெளிய போயி ஏதாவது சாப்பிட்டு வரலாம் வா" என்று முத்துவேலிடம் கூறினேன்.

"என் சொன்ன நண்ப... மரியாதைத் தேய..." என்றார்.

"யோவ்... காண்டு கலப்பாத... முதலில் ராகம் பாடுவதை நிறுத்தும். பசி காதை அடைக்குது" என்றேன்.

"அட என்னய்யா... ஒன்னும் தெரியாத ஆளா இருக்க. சிக்கன் பிரியாணி வந்து எறங்கி இருக்கு. கவிதை வாசிச்சா பண முடிப்பும் உண்டு" என்றார். நிலாரசிகனின் கவிதைத் தொகுப்பு கைகளில் இருந்தது. சில வரிகளை உருவி விடலாமா என்று யோசித்தேன்.

ஊரார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு காதலியின் கையைப் பிடித்துக்கொண்டு, ஊரைவிட்டு ஓடும் காதலன் போல முத்துவேலை இழுத்துக் கொண்டு பிரியாணி வாசத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு ஓடி நீண்ட வரிசையில் கடைசியாக நின்றேன். சாப்பிட்டு முடித்தும் வெளியில் வந்தேன். நூறு கவிஞர்களில் ஒரு சிறுவன் காலையில் கவிதை வாசித்தான். குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியது. அவனை உற்சாகப்படுத்தக் கைகுலுக்கினேன். அவனுடைய ஆங்கில ஆசிரியர் மஷூக் ரஹ்மானை அறிமுகப் படுத்தினான். அவரும் ஒரு தமிழ் கவிஞர் (http://mashookrahman.com). மஷூக் தான் அவனை உற்சாகப்படுத்தி அழைத்து வந்திருந்தாராம்.

அவர் கவிஞர் என்பதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. AR ரஹ்மானுக்கு ஜோதா அக்பர் படத்தின் 'க்வாஜா எங்கள் க்வாஜா' என்ற பாடலை எழுதியவர் என்பதும் அல்ல. சினிமாவிற்கு பாடல் எழுதப் போவதில்லை என்ற முடிவெடுத்து இருக்கிறாராம். சூஃபி பற்றி நிறைய படிக்கப் போவதாகவும், கவிதை எழுதுவதில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறினார். பார்க்க: யூடியூப் - மஷூக். இவர் வலைப்பதிவும் எழுதுகிறார் - கவிதை...கவிதை மட்டும்...

கவிதை வாசிப்பு மீண்டும் தொடங்கவும் உள்ளே சென்று அமர்ந்தேன். அருகில் ஒரு வாலிபர் 5 பக்க கவிதையை வைத்துக் கொண்டிருந்தார். பீதியுடன் அவரிடம் பேசினேன். MCA படித்துவிட்டு ரேடியோ ஜாக்கியாக விருப்பத்தின் பேரில் வேலை செய்கிறாராம். எதோ ஒரு அலைவரிசையில் அவருடைய குரல் தினமும் ஒலிக்கிறது. நேரம் எடுத்து அவர் பேசும் விஷயங்களைக் கேட்க வேண்டும். கருவறை என்ற கவிதைப் புத்தகம் வெளிவந்திருப்பதாகக் கூறினார். அவருடைய கவிதைக்கு அரங்கில் ஏக வரவேற்ப்பு இருந்தது.

ஈழக் கவிஞர் ஜெயபாரதி அவருடைய மனைவியுடன் வந்து கவிதை வாசித்துச் சென்றார். அவருடைய கவிதைகளில் இரண்டை வாசுகி ஜெயபாரதி இனிமையாகப் பாடினார். சென்னை சங்கமத்தின் இசைக் குறுந்தகடு வெளியிடப்பட்டது. இசையமைத்தவரின் பெயர் மறந்துவிட்டது. இதைச் சொல்வதற்கு என்னை எவ்வளவு திட்டினாலும் தகும்.

ச முத்துவேல், உமாஷக்தி, வேல்கண்ணன், முத்துச்சாமி, அடலேறு, அ மு சையது, பொன் வாசுதேவன், கார்த்திகா வாசுதேவன் போன்ற பல நண்பர்கள் கவிதை வாசிப்பதை நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நர்சிம் கவிதை வாசிக்க வந்து அவசர அலுவல் காரணமாக புறப்பட்டுச் சென்றார். நான்கு ஆண்டுகளில் 350 கவிஞர்கள் வாசித்த மொத்தக் கவிதையும் ஒரே தொகுப்பாக அச்சில் வர இருக்கிறது. அடுத்த புத்தகக் கண்காட்சியில் அதுவும் கிடைக்கும். சங்கமத்தை பகிரங்கமாகப் புறக்கணித்த பேரரச கவிகள் ரகசியமாக வாங்கிப் படிக்கலாம்.

வசைச் சொற்களுக்கான அகராதியை தொகுக்க யாராவது முன்வர வேண்டும் என்று கிரா சொல்லி இருக்கிறார்.கார்த்திகா வாசுதேவனிடம் கடைசி இருக்கையில் உட்கார்ந்து அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

முன் இருக்கையில் அமர்ந்திருந்த, என்னுடைய பாட்டி வயதில் உள்ள பெண்மணி முகத்தைத் திருப்பி "எதுக்கு டிஸ்டப் பண்றீங்க? சும்மா உட்கார முடியாதா?" என்றார். அமு சையதும், கார்த்திகாவும் என்னை சந்தேகத்துடன் பார்த்தனர். நீங்கள் என்னுடைய நண்பர்கள் தானே.? முதலில், நீங்க ரெண்டு பேரும் என்னை நம்ப வேண்டும். நான் ஒன்றும் கோபியர் கிருஷ்ணன் அல்ல என்றேன். இருவரும் சமாதானம் ஆயினர்.

பாட்டியிடம் முகத்தை நீட்டி "நான் ஒன்னும் செய்யலை" என்றேன்.

எங்களுடைய பேச்சைத் தொடர்ந்தோம். அந்தப் பெண்மணிக்கு என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லை. மீண்டும் பின்பக்கம் முகத்தைத் திருப்பி "செருப்பால அடிப்பேன். கொஞ்சம் கூட மேனர்சே இல்லை. எதுக்கு டிஸ்டப் பண்றீங்க?" என்றார்கள். முன் நெற்றியில் விழுந்த நரைமுடி ஆக்ரோஷமாக காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. ஒருவனை செருப்பால் அடிப்பேன் என்று பொது இடத்தில் திட்டி, சரியான சாட்சிகள் இருப்பின், சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் குறைந்தது இரண்டு மாத சிறை தண்டனை உறுதி. இந்த விஷயம் அந்த பாட்டிக்குத் தெரியாத வரை பிரச்சனை இல்லை. தெரிந்தால் பாவம் குற்ற உணர்வில் சங்கடப்படுவார்.

"கார்த்திகா, கிராவோட அகராதிக்கு இவங்க ஒரு பெரிய களஞ்சியமா இருப்பாங்க போல. முகவரி வாங்கிக்கலாமா?" என்றேன். கடைசி கவிஞர் தன்னுடைய படைப்பை வாசித்து முடித்ததால் கூட்டம் கலைந்தது. எங்களுடைய வசைக் களஞ்சியமும் கூட்டத்துடன் கூட்டமாக சங்கமித்தது. சென்னை சங்கமத்தில் எல்லாம் சங்கமம்.

6 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. எப்படியாக இருந்தாலும் என் போன்றவர்களின் நட்பிற்கு வந்திருந்து வாழ்த்தியதற்கு நன்றி பிரபு.

    ReplyDelete
  3. அந்தம்மாவிடம் கேட்கவில்லையா என்ன பிரச்சனை என்று?
    உங்கள் (வள,வள?!) பேச்சு தொந்தரவா அல்லது வேறு ஏதாவதா...
    கவியரங்கம் போய் பேசிக்கொண்டு (to be precise, அரட்டை?!) இருந்தால் மற்றவர்களுக்கு தொந்தரவு தானே?!
    In serious note, இருந்தாலும் செருப்பால் அடிப்பேன் எல்லாம் ஓவர்...

    Essex சிவா

    ReplyDelete
  4. ஒரு ப்லொவ்-ல பேசிட்டாங்க...எங்களால் பிரச்சனை இல்லை. ரொம்ப பெரியவங்க...

    சரியா தப்பா என்பதெல்லாம் தேவையில்லாத வாதம்... She misunderstood us thats it...

    :-)))

    ReplyDelete
  5. ஏன் சேரை ஆட்டி கொண்டிருக்கிறீர்கள் என்று அந்த பெண்மனி திட்டிக் கொண்டிருந்தார்.( எங்களுக்கும் அவர் இருக்கைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாத நிலையிலேயே !!)

    த‌விர‌,அந்த‌ சேர் ஆட‌வேயில்லை.அந்த‌ பெண்ம‌னிக்கு சிறிது ம‌ன‌நிலை ச‌ரியில்லாத‌வ‌ர் என்ப‌தை பிற‌கு தான் புரிந்து கொண்டோம்.

    எல்லாமே க‌வ‌ர் ப‌ண்ணிட்டீங்க‌ கிருஷ்ணா..அந்த‌ குற‌ட்டை ஒலி,"போதும் நிறுத்துங்க‌.." இதைப்ப‌ற்றியெல்லாம் எழுத‌வில்லையே.

    ReplyDelete
  6. முன்வரிசை வரை அந்தக் குறட்டை ஒலி கேட்டதா? எனக்குப் பின்னால் தான் அந்த நண்பர் தூங்கிக் கொண்டிருந்தார்.

    :-)))

    ReplyDelete