Tuesday, January 4, 2011

திலீப்குமாருக்கு விளக்கு விருது

ஜனவரி 2, காலச்சுவடு புத்தக வெளியீட்டின் அதே நாளன்று அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நுாலக கட்டிடத்தின் ஒரு சிறு அரங்கில் விளக்கு விருது ஏற்பாடாகியிருந்தது. சிஸ்டர் ஜெஸ்மியின் ஆமென் மற்றும் சின்ன அரயத்தி ஆகிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்த 'குளச்சல் மு யூசப்' விழாவிற்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்த்தேன். அவர் வராதது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. எனவே என்னுடைய முழுக் கவனமும் திலீப்குமார் மீது திரும்பியது. விழா தொடங்குவதற்கு முன்பே அவருடன் உரையாட நேர்ந்தது. அருகில் பாலபாரதி இருந்தார்.

"உங்களுக்கு விருது கிடைத்ததில் மிகுந்த சந்தோசம் திலிப்ஜி. அதைவிட சந்தோசம் புத்தக சந்தையில் உங்களுடைய கடவு சிறுகதைத் தொகுப்பு கிடைக்க இருப்பது" என்று வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டேன்.

"நன்றி.. இங்கே கிடைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். புத்தகம் அச்சில் இருப்பதால் எடுத்துவர முடியவில்லை." என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது பாலபாரதி தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

"மும்பையில் இருக்கும் பொழுது, அம்பை உங்களைப் பற்றி உயர்வா சொல்லி இருக்காங்க சார். முதல் முறையா இப்போதான் நேரில் பார்க்கிறேன்."

"ஓ அப்படியா... ஸ்டைலுக்காக கறுப்புக் கண்ணாடி போட்டிருக்கேன்னு நெனைக்காதீங்க. கண் ஆபரேஷன் நடந்ததால வெளிச்சம் கண்ணைக் கூசுது. அதான்..." என்றபடி பாலபாரதியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அசோகமித்திரனின் அருகில் ஞாநி, விமலாதித்த மாமல்லன், வெளிரங்கராஜன், அழியாச்சுடர் ராம் போன்றோர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். விழா ஏற்பாடாகியிருந்த அறை எங்களுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன், ராணுவ வீரர்களுக்கான மாலை சிற்றுண்டி ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை வெளியில் காத்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு தான் விளக்கு விழா தொடங்கியது. அங்கு நடைபெற்ற விழாவின் சுருக்கத்தை பொன் வாசுதேவன் நடத்திவரும் 'அகநாழிகை' சிற்றிதழுக்கு அனுப்பி இருந்தேன். ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகிறது. இப்பொழுதுதான் வலையேற்ற முடிந்தது.

திலீப்குமாருக்கு விளக்கு விருது

எழுபதுகளின் இறுதிகளில் எழுதத் தொடங்கிய திலீப்குமார், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். முதல் சிறுகதையான 'தீர்வு' கணையாழியில் வெளியானதின் மூலம் இலக்கிய உலகில் கவனம் பெற்றவர். இந்த முதல் சிறுகதை 1977-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றது. இவருடைய கதைகள் பெரும்பாலும் கோவை மற்றும் சென்னையை பின்புலமாகக் கொண்டவை. புலம் பெயர்ந்து வாழும் குஜராத்தியர்களின் அகச் சிக்கல்களையும், புறச் சிக்கல்களையும் துல்லியமாகத் தனது படைப்புகளில் பதிவு செய்தவர். எளிய சம்பவம் போலத் தோன்றும் இவருடைய கதைகள் கசப்பான யதார்த்தத்தையும், நகர வாழ்வின் நெருக்கடிகளையும் வசீகரமான நகைச்சுவை உணர்வுடன் நுட்பமாக அலசுபவை. பெண்களின் நிறைவேறாத ஆசைகளும் பாலியல் வேட்கைகளும், மரணத்தை எதிர்நோக்கும் முதியவர்களின் வெளிப்படுத்த முடியாத நிராசைகளும் இவர் கதைகளில் அதிகம் வெளிப்படுகின்றன.

க்ரியா பதிப்பகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய திலீப் குமாரின் 'கடவு' என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது க்ரியாவில் கிடைக்கிறது. சிறந்த மொழிபெயர்ப்பாளர். 'Contemporary Tamil Short Fiction' EastWest Books பதிப்பாக 1999-ல் வெளிவந்துள்ளது. இதன் மறுபதிப்பு 'A Place to Live' என்ற தலைப்பில் 2004-ல் பெங்குவின் வெளியிட்டார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுப்பாக வெளியிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன அறிமுக நூலை 1982--ல் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் ஆர் சூடாமணியின் தேர்ந்தெடுத்த கதைகளை 'நாகலிங்க மரம்' என்ற தொகுதியாக சமீபத்தில் அடையாளம் பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்துள்ளார்.

இவருடைய சிறுகதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், செக் ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'கடிதம், நிகழக மறுத்த அற்புதம், கண்ணாடி' ஆகிய மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

நவீன தமிழ் இல்லக்கியம் குறித்து யேல், சிகாகோ, கலிஃபோர்னியா போன்ற பல்கலைக் கழகங்களிலும் ஃபிரான்சில் உள்ள INALCO ஆய்வு நிறுவனத்திலும் உரையாற்றியிருக்கிறார்.

இவருடைய 35 ஆண்டுகால இலக்கிய ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, 2009 ஆம் ஆண்டிற்கான விளக்கு விருது திலீப் குமாருக்கு அறிவிக்கப்பட்டு, 02-01-2011 அன்று மாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்த விருது அமெரிக்க வாழ் தமிழர்களின் கூட்டு அமைப்பின் மூலம், புதுமைப்பித்தன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வழகப்படுகிறது. இவருக்கு முன்பு தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளான சி.சு செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாஸ், பூமணி, சி மணி, சே இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைதீஸ்வரன், விக்ரமாதித்யன் ஆகியோர் இவ்விருதினைப் பெற்றிருக்கின்றனர்.

எழுத்தாளர் வே சபாநாயகம், கவிஞர் சிபிச்செல்வன், பேராசிரியர் அ ராமசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்து 2009 ஆம் ஆண்டிற்கான விருதுக்குரிய படைப்பாளியாக திலீப்குமாரை தேர்வு செய்திருக்கின்றனர். விளக்கு விருது ஒருங்கிணைப்பாளர் வெளி ரங்கராஜன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கினார்.

வெளி ரங்கராஜன் பேசியவை:

விளக்கு அமைப்பு பெரிய நிறுவனம் அல்ல. வெளிநாட்டு வாழ் இலக்கிய ஆர்வலர்கள் தொடங்கிய எளிய அமைப்பு. அரசாங்கத்தால் தகுதியுடைய மூத்த படைப்பாளிகள் பலர் புறக்கணிக்கப் படுகிறார்கள். மூத்த ஆளுமைகளுக்கே இதுதான் நிலைமை என்றால் வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளின் நிலை கவலைக்குரியது. இந்த நிலையில் உரிய படைப்பாளிகள் கவுரவிக்கப் படவேண்டும் என்ற ஆவலில் அமெரிக்கவாழ் தமிழர்களால் தொடங்கப்பட்டதுதான் விளக்கு அமைப்பு. இதுவரை பரிசு பெற்ற அனைவரும் தகுதியானவர்கள் தான் என்ற மன நிறைவு எங்களுக்கு இருக்கிறது. பாராட்டுச் சான்றிதழுடன் ரூபாய் 40,000/- ற்கான காசோலை வழங்கப்படுகிறது என்று திலீப் குமாரின் படைப்புகளைப் பற்றி பேசிவிட்டு அசோகமித்ரனை உரையாற்ற அழைத்தார்.

அசோகமித்ரன் பேசியவை:

நண்பர்களே இந்த சந்தர்ப்பத்தை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன். விளக்கு அமைப்பிற்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. உரியவர்களுக்குத் தான் விருது சென்று சேரும் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக இயங்கும் சாகித்ய அகாடமி மீது இந்த நம்பிக்கை இருக்கிறதா என்றால் சொல்லுவதற்கில்லை. பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். விதி விளக்காக ஒருசில நல்ல படைப்பாளிகளுக்குக் கொடுத்திருப்பார்கள்.

விருது வழங்க வரணும்னு கூப்பிட்டப்போ சரின்னு சொல்லிட்டேன். ஆனால் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது. மூன்று நாட்களாக ஆஸ்துமா தொல்லை. தொடர்ந்து மூக்கில் ஒழுகியது. இந்த நிலையில் விழாவுக்கு சென்றால் நன்றாக இருக்காது என்று யோசித்தேன். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ!. எனக்கு இருக்கிறது. விழா நாள் நெருங்கவும் பிரச்சனை சரியானது. மூக்கு ஒழுகிக் கொண்டே பேசினால் நன்றாகவா இருக்கும். இலக்கியக் கூட்டத்தில் மூக்கொழுகரதப் பத்திப் பேசறானேன்னு நெனைக்கக் கூடாது.

முதலில் விருதுகள் சரியானவர்களுக்குப் போகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த விருதை விட்டுவிடுங்கள். இதில் கூட இரண்டு நபர்கள் மீது எனக்கு அதிருப்தி இருக்கிறது. அதுகூட என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்ற எல்லோரும் விருதுக்குத் தகுதியுடையவர்கள் தான். அந்த வரிசையில் திலீப்குமாருக்கு கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

முதல் முறையாக திலீப்குமார் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். அதுவும் ராத்திரி 9 மணிக்கு. ஓர் எழுத்தாளனைப் பார்க்க வருவதற்கு அவர் தேர்ந்தெடுத்த நேரத்தைப் பாருங்கள். கையில் ஞானரதம் இருந்தது. அப்போ விசேஷமான இதழ் அது. அந்த காலத்திலெல்லாம் வீட்டு வாசலில் ஒருவரைப் பார்த்து, பேசிவிட்டு அப்படியே அனுப்பிவிட வசதி இருந்தது. இப்பொழுது போல இல்லை. ரொம்ப அழகாக நேர்த்தியான சஃபாரி உடை போட்டிருந்தார். கொஞ்ச நாள் கழித்து அவரைப் பார்த்த பொழுது, அந்த ஆடையின் சாயம் வெளுத்து அழுக்காக மாறியிருந்தது. சிறிது நாட்களில் அதுவும் கிழிந்திருந்தது.

ஒருமுறை சங்கர ராமசுப்ரமனியம் சிறுபத்திரிகை கொண்டுவந்திருந்தான். அவருடைய இலக்கிய நண்பருடன் சேர்ந்து நடத்திய ஆங்கிலப் பத்திரிகை. இந்த மாதிரி பத்திரிகைகளோட எனக்கு ரொம்ப பழக்கம் இருக்கு. 2 இஷ்யூ வரும் பிறகு நின்னு போயிடும். "ஆங்கிலம் ரொம்ப நல்லா தெரியும்னு சொல்ல மாட்டேன். ஆனால் உங்களை விட எனக்கு கொஞ்சம் அதிகமா தெரியும். தொடர்ந்து இதழ் வருவது நல்லதில்லை" ன்னு அபிப்ராயம் சொல்லிட்டேன்.

இப்பொழுதெல்லாம் எல்லாரும் கவிதை எழுதறாங்க. அதுல ஒன்னும் தப்பில்லே. ஆனால் அதைக் கொண்டுவந்து கொடுத்துப் படிக்க வேற சொல்றாங்க. உட்கார்ந்திருக்க நீங்க எல்லாம்கூட கவிதை எழுதறவன்களா இருக்கலாம். குறிப்பாக பெண்கள் நெறைய கவிதை எழுதறாங்க. ஆனா ஒரு பெண்ணாவது சிறுபத்திரிகை தொடங்குகிறாரா? எதை செய்யக் கூடாதென்று அவர்களுக்கு நல்லாத் தெரியும்.

பிறகு மைலாப்பூரில் ஒரு புத்தகக்கடை ஆரம்பித்தார். எந்த புத்தகம் வேணும்னாலும் திலீப் கிட்ட போனால் கண்டிப்பாகக் கிடைக்கும் என்னும் அளவிற்கு பெயர் எடுத்தார். பத்திரிகை மற்றும் இதழ்களுக்கென்றே தனியாக ஒரு பகுதி இருக்கும். ரெண்டாவது மாடியில் இருந்தது. அதையெல்லாம் வாங்குகிறோமோ? இல்லையோ?, அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம். ரெண்டு பத்திரிகை கொடுத்தவன் வந்து பாக்கும்போது ஒரு பத்திரிகை இருக்காது. அதற்கான பணத்தை இவர் தான் கொடுப்பாரு.

திலீப்குமாரின் கதைகள் தனி ராகம். ஆர்பாட்டமில்லாத நகைச்சுவை அவருக்கே உரித்தான தனிச் சிறப்பு. சில சிறுபத்ரிகைகளில் எழுதியவர்கள் அப்பத்ரிகைகள் நின்றவுடன் எழுதுவதையே கூட நிறுத்தியிருக்கிறார்கள். விதி விளக்காக ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களில் திலீப்குமார் முக்கியமானவர். எண்ணிக்கையில் இவருடைய கதைகள் அதிகமில்லாமல் இருக்கலாம். தனித்துவமான வடிவத்தால் அவையெல்லாம் விசேஷ நிலை பெறுகின்றன. இந்த விருது அவருக்கு சென்று சேருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி...

திலீப்குமார் பேசியவை

இந்த வெளிச்சம் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. எப்பொழுதுமே கூட்டத்தின் கடைசியில் இருக்க ஆசைப்படுபவன் நான். வாசக நண்பர்களை இந்த நேரத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பலரின் மீதும் விழுந்த வெளிச்சத்தின் சிறு பகுதி என்மீது விழுந்திருக்கிறது.

குடும்ப வறுமையின் காரணமாக சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உடன் வேலை செய்த பெரியவர்கள் என்னைத் திட்டி, அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியாது. உள்ளுக்குள் கசப்பை வைத்துக் கொண்டுதான் அவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், சிக்கலான மனிதர்களுடன் வளர்ந்ததால் எனக்கு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போனது. பலருடைய தோல்வியில் தானே ஒருவனுடைய வெற்றி இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. என்னுடைய முதலாளி சொகுசாக வாழ்வதற்கு அவரிடம் வேலை செய்த எல்லோரையும் சுரண்டினர். யாரையும் காயப்படுத்தாமல் வெற்றி பெறுவது எழுத்தில் மட்டும் தான் முடியும். அதனால் தான் எழுத ஆரம்பித்தேன். எழுதிய கதைகளை இதழ்களுக்கு அனுப்புகிறோம். சரியில்லை என்றால் திருப்பி அனுப்பிவிடப் போகிறார்கள். இதில் யாரையும் காயப்படுத்துவதற்கு இல்லையே.

அசோகமித்திரன் பேசியது எல்லாம் உண்மை. ஆண்டுகளை மட்டும் மாற்றி சொல்லிவிட்டார். ஒரு முறை அவரைப் பார்த்துவிட்டு வரும்பொழுது தற்செயலாக க்ரியா ராமகிருஷ்ணனைப் பார்க்க நேர்ந்தது. பேருந்தின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். அப்படியே அவருடனான தொடர்பு நீண்டு க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு வேலை செய்தபோது பல எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அது என்னுடைய ஆர்வத்திற்கு பெரிதும் உதவியது.

என்னுடைய எழுத்தில் அசோகமித்ரனின் சாயல் இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால் நான் எல்லோரையும் வாசித்தேன். ஆகவே எல்லோருடைய சாயலும் என்னுடைய எழுத்தில் இருக்கிறது. அவர்கள் தவறாகக் கூறுகிறார்கள்.

ஒருமுறை மலேசியக் கருத்தரங்கில் பேசுவதற்காக சென்றிருந்தேன். பலரும் கூடிய கருத்தரங்கு அது. பேசுபவர்களுடைய புகைப்படமும், அதன் கீழ் கொஞ்சம் எழுதுவதற்கான வெள்ளைத் தாளையும் நான்கு பக்க சுவரில் ஒட்டியிருந்தார்கள். என்னுடன் பேசிய அனைவருடைய புகைப்படத்திற்குக் கீழும் ஏதேதோ எழுதியிருந்தார்கள். எனக்கான இடத்தில் யாருமே எழுதவில்லை. ஒரே ஒரு பெண்மணி மட்டும் "மென்மை" என்ற வார்த்தையை மூன்று முறை எழுதி இருந்தார்கள். அதுவும் முதல் வார்த்தை பெரிதாகவும், அதற்கடுத்த வார்த்தை அதை விடச் சிறியதாகவும், கடைசி வார்த்தை மிகச் சிறியதாகவும் எழுதியிருந்தார்கள். தேடிக் கண்டுபிடித்து அவரிடம் காரணம் கேட்டேன்.

"நீங்கள் ரொம்ப மென்மையாகப் பேசினீர்கள். எதுவுமே சரியாகக் கேட்கவில்லை. அதனால் தான் அப்படி எழுதினேன்" என்றார்கள். இந்த மென்மையான சுபாவம் சிறுவயதில் இருந்தே இருப்பதால் மாற்ற முடியவில்லை. நண்பர்களையும், வாசகர்களையும் இந்த நேரத்தில் சந்திக்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

அதைத் தொடர்ந்து கவிஞரும், நடுவர் குழு உறுப்பினருமான சிபிச்செல்வன் நன்றியுரை ஆற்றினார். அதில் "சென்ற வருடமே இந்த விருது திலீப் குமாருக்குக் கிடைத்திருக்க வேண்டியது. அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளிலும் விளக்கு விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்துவிட்டு, உடனே விருது பெற்றுக் கொள்வது நன்றாக இருக்காது என்பதைக் காரணம் காட்டி வாங்க மறுத்துவிட்டார். இந்த வருடம் விளக்கு விருதை அவருக்கு அளிப்பதில் இந்த அமைப்பு மகிழ்ச்சி கொள்கிறது. வாசகர்களும், நண்பர்களும் எங்களுடன் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி" என்றார்.

எழுத்தாளர்கள் சங்கர் ராமசுப்ரமணியம், விஜய மகேந்திரன், டைரக்டர் செந்தூரம் ரவி போன்றோர் திலீப்குமாரின் படைப்பு குறித்தும், அவருடனான தனிப்பட்ட உறவு குறித்தும் சில சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். எழுத்தாளர் ஞாநி, ராஜன்குறை, விமலாதித்த மாமல்லன், பாலபாரதி, பத்மா, சுபாஷினி, க்ரியா ராமகிருஷ்ணன், அழியாச்சுடர் ராம் போன்ற பலரும் விழாவில் கலந்துகொண்டார்கள்.

இதற்கு முன்பு இலக்கிய சிந்தனை, மத்திய அரசின் 'பாஷா பாரதி', ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் 'சாரல்' ஆகிய முக்கியமான விருதுகளை திலீப்குமார் ஏற்கனவே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: அகநாழிகை சிற்றிதழ்

No comments:

Post a Comment