Monday, August 24, 2009

இப்படியும் ஒரு சந்திப்பு...

இரண்டு பாஸ்போட் சைஸ் ஃபோட்டோவை பாக்கெட்டில் வைக்கும்போதே கனகராஜை சந்திக்கும் போது அவனுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன். கனகராஜை மதியம் இரண்டு மணிக்கு மேல் சென்னை சென்ட்ரலில் சந்திப்பதாகச் சொல்லி இருந்தான். அதற்குள் நண்பனின் குடும்பத் திருமணத்திற்குச் சென்று, அங்கிருந்து தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இரண்டு ஃபோட்டோக்களை ஒட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது அவனுக்கு. மதியம் வரை வகுப்பு வேறு இருக்கிறது. அவன் வகுப்பிலிருந்து சீக்கிரமே புறப்பட்டுவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். இல்லையெனில் கனகராஜைப் பார்க்க முடியாது.

விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊரே கோலாகலமாக இருந்தது. கனகராஜை கிருஷ்ணனுக்கு முன்பின் தெரியாது. அவர்களுக்கிடையிலான ஒரு வாரகால இ-மெயில் தொடர்பு மட்டுமே சந்திப்பிற்கான காரணமாக இருந்தது.

அவர்களுக்கு இடையிலான இ-மெயில் பரிமாற்றம் சுவாரஸ்யம் நிறைந்தது. முதலில் கனகராஜ் தான் கிருஷ்ணனுக்கு இ-மெயில் அனுப்பி இருந்தான்.

அன்புள்ள கிருஷ்ணபிரபு சார்,

நான் கனகராஜ், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் BCA இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். நான் இணையத்தில் கோவில்களைத் தேடும்போது உங்களுடைய "இந்திய நேபாள சுற்றுலா" பதிவினைக் கண்டேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. நான் 23/08/2009 அன்று சென்னைக்கு வருகிறேன். உங்களைப் பார்க்க முடியுமா?

உங்களுடைய முடிவை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

R. கனகராஜ் (RK) ஈரோடு
18-08-2009

வந்திருந்த இ-மெயிலைப் பார்த்தவுடன் கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுடைய மருமகன் வினோத்திற்கு ஃபோன் செய்து நடந்ததைக் கூறினான்.

என்ன மாமா? சின்ன பையன் ஆசைபடுறான். ஓய்வாயிருந்தா போய்ப்பாருங்க என்று அவனால் முடிந்த வரை சொல்லிப்பார்த்தான்.

"இல்லடா..வந்து...சரியா வருமாடா வினோத்?" - என்று கிருஷ்ணன் முனகினான்.

எல்லாம் ஒரு அனுபவம் தானே. சும்மா போயிட்டு வாங்க மாமா. வந்து அனுபவத்தை சொல்லுங்க மாமா.

வினோத்துடன் பேசிவிட்டுத்தான் கனகராஜின் இ-மெயிலுக்கு கிருஷ்ணன் பதிலளித்தான்.

அன்புள்ள கனக்கு,

நலம் தானே நண்பரே? உங்களுடைய மின்னஞ்சல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உங்களுடைய சென்னை வருகையில் நான் உங்களைச் சந்திக்கிறேன். 23/08/2009 - அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எனக்கு வகுப்பு இருப்பதால் மதியமாக சந்திக்கத் தயார்.

நீங்கள் பேருந்தில் வருகிறீர்களா அல்லது ரயில் வண்டியில் வருகிறீர்களா?

உங்களுடைய பயண நோக்கம் என்ன? ஏதாவது நேர்முகம் அல்லது இதர முக்கியமான விஷயம் என்றால் தயவு செய்து அதில் கவனம் செலுத்துங்கள். நான் ஒரு சாதாரண சக மனிதன். ஆயிரமாயிரம் பேர் பதிவிடுகிறார்கள் அவர்களில் நானும் ஒருவன். அவ்வளவே.

மேலும் என்னை சந்திக்கும் ஆர்வம் எதனால் வந்தது? ஆன்மிகம் தான் காரணம் என்றால் அதை விளக்கும் தகுதி எனக்கு இல்லை. ஆகவே பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை உங்களுடன் கதைக்க வந்தால் சரியாக இருக்குமா?

எனக்கு உங்களுடைய புகைப்படம் அனுப்பிவிடுங்கள் உங்களை சந்திக்கும் பொழுது கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். இல்லையெனில் அந்தக் கலர் ஷர்ட்...இந்தக் கலர் ஃபேண்ட் என ஒரே குழப்பமாகிவிடும்.

உங்களுடைய பயண நோக்கம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி...

கிருஷ்ணப்பிரப்பு,
சென்னை,
18-08-2009

இந்த இ-மெயிலைப் பார்த்து ஞாயமாக அவன் ஓடி இருக்க வேண்டும். ஆனால் பதில் எழுதி இருந்தான்.

அன்புள்ள கிருஷ்ண பிரபு சார்,

உங்களுடைய பதிலுக்கு நன்றி. தயவு செய்து என்னை 'கனக்கு' என்று அழைக்காதீர்கள். என்னுடைய பாட்டிதான் அப்படி அழைப்பார்கள். முழுப் பெயரையும் பயன்படுத்துங்கள்.

இந்த இ-மெயிலுடன் எனது புகைப் படத்தையும் இணைத்துள்ளேன். நண்பருடைய திருமணத்திற்காக சென்னை வருகிறேன். ஆகவே இதர வேலைகள் எனக்கு இல்லை. 23-08-2009 மதியம் 3.15 மணிக்கு என்னுடைய ரயிலை சென்னை சென்ட்ரலில் நான் பிடிக்க வேண்டும். அதற்கு முன் உங்களை சந்தித்தால் நன்றாக இருக்கும்.

R. கனகராஜ் (RK)
ஈரோடு
19-08-2009

இந்த இ-மெயிலைப் பார்த்தவுடன் கண்கள் இருண்டது கிருஷ்ணனுக்கு. கல்லூரி வாழ்க்கையில் கணக்குப் பரீட்சையில் முட்டை வாங்கி இருக்கிறான். ஆனால் இப்பொழுது 'கனக்கு' என்ற வார்த்தையை எழுதியே முட்டை வாங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது அவனுக்கு. அதற்குப் பிறகும் இரண்டு மெயில்களை பரிமாறிக் கொண்டார்கள் இருவரும்.

அதில் "கட்டற்ற மென்பொருள்" என்ற புத்தகம் உங்களுக்குப் பயன்படுமெனில் வாங்கித் தரட்டுமா என்று கனகராஜிடம் கேட்டிருந்தான் கிருஷ்ணன். அந்த புத்தகத்தை எழுதியவரின் திருமணத்திற்குத்தான் நான் சென்னை வரப்போகிறேன் சார். அவருடன் ஒருமாத காலம் நான் சென்னையில் இருந்து உபுண்டு மொழிபெயர்ப்பில் உதவி செய்திருக்கிறேன் என்ற பதில் கிருஷ்ணனுக்கு வந்திருந்தது. சதுரங்க ஆட்டத்தில் யாணை, குதிரை, மந்திரி என பலரும் படைதிரட்டிக்கொண்டு வந்து ராஜாவிற்குச் செக் வைப்பது போல கனகராஜும் ஏதோ ஒரு விளையாட்டை கண்ணுக்குத் தெரியாமல் விளையாடுவதுபோல் இருந்தது கிருஷ்ணனுக்கு. எனினும் அவன் அனுப்பிய கடைசி மெயிலில் கனகராஜை சந்திப்பதை உறுதி செய்திருந்தான்.

அதன்படி, அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சீக்கிரமே சென்னை சென்ட்ரலுக்கு சென்றுவிட்டதால் ஹிக்கின் போத்தம் புத்தகக் கடையில் துணையெழுத்து, ராஜாஜியின் ராமாயணம், காண்டேகரின் சிறுகதைகள், லா. சா. ராவின் கழுகு ஆகிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு காத்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன். அரைமணி நேர காத்திருப்பிற்குப் பின் கனகராஜ் வந்திருந்தான்.

எப்படி இருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்டபடியே கனகராஜை நெருங்கினான் கிருஷ்ணன்.

"எதுவும் வேணாம் சார். இருக்கறது கொஞ்ச நேரம் அதுல உங்க பயணத்தைப் பற்றி பேசலாமே...." என்றான் கனகராஜ்.

முதலில் சார் சார் என்று சொல்வதை நிறுத்துங்க...எனக்கு ஒரு மாதிரி இருக்குது. பயணத்தைப் பற்றி பேசறதுக்கு என்னப்பா இருக்கு! சரி, எதாச்சும் ஜூஸ் குடி... என்றபடியே பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக் கொண்டு இருவரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நிற்கும் ஐந்தாவது பிளாட்பாரம் நோக்கி நடந்தார்கள். அங்கிருக்கும் பிளாட்பார இருக்கையில் அமர்ந்து மாதுளை ஜூஸை குடித்துக் கொண்டே பேச ஆயத்தமானார்கள்.

உலகில் உள்ள எல்லா இடங்களுமே புனிதமான இடங்கள் தான். நான் சென்ற இடங்கள் மட்டும் புனித இடங்கள் அல்ல. கிறித்துவர்களுக்கு வாடிகன், முஸ்லிம்களுக்கு மெக்கா, இந்துக்களுக்கு காசி, கயை, கைலாயம் என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிறகு நான் ஏன் செல்ல வேண்டுமென்றால் அந்த இடங்கள் அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள். நம் மூதாதையர்களால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க இடங்கள் .

நான் பிரயாகையில் முண்டம் அளிக்கவில்லை, கயையில் பிண்டம் அளிக்கவில்லை, காசியில் புனித நீராடவில்லை...நன் ஒரு பார்வையாளனாகவே அந்தப் பயணத்தில் செயல்பட்டேன். மொத்தப் பயணத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயம் எவரஸ்ட் சிகரத்தைப் பார்த்ததும் போக்ராவில் காலாற நடந்ததும் தான் என்று விளக்கிக் கொண்டு இருந்தான் கிருஷ்ணன்.

உப்புசப்பு இல்லாத உப்புமாவை விருந்தாளிக்கு வைப்பது போல் தயக்கத்துடனே தனது அனுபவங்களை சொல்லிக்கொண்டு இருந்தான் கிருஷ்ணன். தீராத பசி கொண்ட தேவர்கள் அமுதத்தை கண்ணால் பார்த்தே பசியாருவதைப் போல கனகராஜும் ஒவ்வொரு வார்த்தையையும் தனது செவிகளில் வாங்கி தின்றுகொண்டிருந்தான்.

"எனக்குக் கூட புனித தளங்களுக்குச் செல்ல வேண்டுமென்று ஆசை, அதைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பேசினால் கேலி செய்கிறார்கள்" என்று கனகராஜ் கூறினான்.

நீங்க செய்யறது தப்பு கனகராஜ். உங்களுக்குப் பிடித்த விஷயம் அவங்களுக்கும் பிடிக்கணும் என்ற அவசியம் இல்லையே. சரி... நான்கு வருடங்களில் நான் கைலாயம் செல்லலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் பணம் சேர்த்துக் கொள்ளுங்கள். போகும்போது உங்களிடம் தெரிவிக்கிறேன். முடிந்தால் என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

அண்ணா, எனக்கு மென்பொருள் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று ஆசை. பிறகு குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று ஆசை. சுற்றுப்புற சூழலுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டுமென்று ஆசை. இந்த மாதிரி உங்களுக்கு என்ன செய்யனும்னு ஆசை?

உங்களுடைய ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள். பெருசா சாதிக்கணும்னு எதுவும் இல்லை. அப்படி எதாச்சும் செய்ய வேண்டுமென்றும் நினைத்ததில்லை.

சிறுவயதில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு ஏரோபிளேன் ஓட்ட வேண்டும், எஞ்சினியர் ஆகவேண்டும், கிடார் வாசிக்க வேண்டும்... என்று பல ஆசைகள் இருந்ததாம். பெருவாரியான ஆசைகளை நிறைவேற்றியும்விட்டார். ஆனால் காலையில் எழுந்து சிரமமில்லாமல் கக்கூஸ் போவதையே தனது வயோதிககால சந்தோஷமாகக் கூறுகிறார். பெரிய சாதனை, பெரிய சந்தோசம் என்பது நம்ம செய்யற சின்ன சின்ன விஷயங்களிலேயே நிறைய இருக்கு. அத அனுபவிச்சாலே போதுமே என்று கிருஷ்ணன் கூறினான்.

சரி... உனக்காக நான் எஸ். ரா எழுதிய துணையெழுத்து வாங்கி வந்திருக்கேன். நீ படிக்கனும்னு நான் சொல்லமாட்டேன். படித்தால் எனக்கு சந்தோஷமே. எனக்கும் சில புத்தகங்கள் வாங்கி இருக்கேன் பார்கிறாயா?

கொடுங்க அண்ணா...ஹை! இது என்ன ராமாயணம் என்று அவனுடைய முகம் முழுவதும் சந்தோஷக் கலை தாண்டவமாடியது.

அந்த ராமாயணம் ராஜாஜி எழுதியது கனகராஜ். நீங்க கவர்னரா இருந்து இருக்கீங்க, முதல்வரா இருந்து இருக்கீங்க, இன்னும் பல உயரிய பதவியில் இருந்து இருக்கீங்க.... உங்களோட வாழ்க்கையிலேயே நீங்கள் எதற்காக சந்தோஷப்பட்டீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

ராமாயண மகாபாரத்தை எழுதிய போதுதான் நான் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன் என்று பதில் சொல்லியிருந்தாராம்.

ஆகவே சுவாரஸ்யமாய் இருக்கும். நீயே எடுத்துக்கோ. நான் வேற வாங்கிக்கிறேன் என்று அவனுக்கே கொடுத்துவிட்டான்.

அண்ணா, உங்களுக்கு இதெல்லாம் எப்படி அண்ணா தெரியுது?

நீ எதை கேக்குற கனகராஜ்.

இல்லங்க அண்ணா, அத எப்படி சொல்றதுன்னு தெரியல...

நான் ரொம்ப மந்தமானவன். எனக்கு எதுவும் தெரியாது...கனகராஜ் உங்க ரயில் புறப்படுது கலம்புங்க...கலம்புங்க... ரயிலின் நகர்வு இருவரையும் பிரித்தது இருந்தாலும் சிரித்துக் கொண்டே கையசைத்துக் கொண்டார்கள்.

ஐயோ... ரயில் போயிடுச்சே. கனக்கு...கனக்கு... உன்கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு நெனச்சேனே! கத்தியவனின் கோரிக்கையை ரயிலின் ஜிகு புகு சத்தம் நிதானமாக விழுங்கியது. அதற்கும் கனகராஜ் சிரித்துக் கொண்டே கையசைத்துக் கொண்டிருந்தான்.

4 comments:

  1. நல்லாருந்துச்சு!

    உங்கள் 'பொக்கிஷமா'? ஒரே கடிதங்களாக இருக்கிறதே?

    ராஜாஜி ராமாயணம் சிறுவனாக, அப்பா காலத்திய வார இதழ் பைண்டாக படித்தது.

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்...... கிருஷ்ணா... அருமையான அனுபவம். இதுபோல எனக்கும் ஒரு அனுபவம் உண்டு.அதுபற்றி பின்னொரு நாளில் பேசுவோம்.
    எதுக்கும் கைலாயம் போகும்முன் எனக்கும் தெரிவிக்கவும். :-)

    ReplyDelete
  3. @ pappu
    கண்டிப்பாக கனகராஜ் ஒரு பொக்கிஷம் தான். நல்ல பையன்.நிறைய துடிப்புடன் இருக்கிறான்.

    பரவாயில்லையே ராஜாஜியின் பாரதம் படித்திருக்கிரீர்களே!... நான் வாங்க செல்லும் போது 3 புத்தகங்கள் இருந்தன. கனகராஜிடம் பேசிவிட்டு செல்வதற்குள் மீதி இரண்டும் தீர்ந்துவிட்டன. இன்னும் அவருடைய புத்தகங்களுக்கு மவுசு குறையவில்லை பப்பு...

    @ முரளிகுமார் பத்மநாபன்
    பயணம் செல்லும் போது கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன் முரளி.

    ReplyDelete
  4. மிக வித்தியாசமான சந்திப்பு கிருஷ்ணா.... நாம் கூட மின்னஞ்சலில் தான் பேசி இருக்கிறோம். நேரில் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று கூடத் தோன்றுகிறது :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete