சுந்தர ராமசாமி... தன் படைப்புகள் மூலமும், காலச்சுவடு மாத இதழ் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமும் தனக்கென ஒரு தனி இடத்தையும் பெரும் தாக்கத்தையும் நவீன தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தியவர் . இளம் படைப்பாளிகளின் ஆதர்ஷனங்களில் அவரும் முக்கியமானவர் என்றே கூற வேண்டும். அவரைப் பற்றிய "நீ யார்" என்ற ஆவணப்படத்தை அண்ணா சாலையிலுள்ள ஃபிலிம் சாம்பாரில் இன்று (16-08-2009) காலை 10 மணிக்கு ஒளிபரப்ப இருப்பதாக எழுத்தாளர் திரு: ஞானி அவர்களின் மூலம் தெரிய வந்தது.
சரியாக காலை 10.05-ற்கு அரங்கத்தினுள் சென்றேன். நிறைய கலைத் துறையை சேர்ந்தவர்கள் வெளியில் நின்றுகொண்டு இருந்தார்கள். அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். தனியாளாக சென்றதால் யாரிடம் பேசுவது என்று தயக்கமாக இருந்தது. ஒருவரிடம் இங்கு தானே சு. ரா-வைப் பற்றிய ஆவணப்படம் திரையிடுகிறார்கள் என்று கேட்டேன். அவரும் "ஆம்" என்றார்.
swine flue - பீதி காரணமாக முகம் மற்றும் கைகளை அலம்பிவிட்டு மீண்டும் அவரையே கடந்து சென்றேன். என்னை இடை மறித்து "நீங்கள் தானே கிருஷ்ண பிரபு?" என்று கேட்டார். ஆச்சர்யமாக இருந்தது. "என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றேன். நீங்கள் எனக்கு பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். என் பெயர் விஷ்ணு குமார் என்று கூறினார்.
யாருமே துணைக்கு இல்லையே என்று நினைத்த எனக்கு இவரின் அறிமுகம் ஆறுதலாக இருந்தது. உங்களுடன் நான் அமர்ந்து கொள்வதில் பிரச்சனை இல்லையே என்று கேட்டவாறு அவருடன் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் ரமணியின் வரவேற்புரையுடன் திரையிடல் ஆரம்பமானது.
"நம்மால் இயன்ற காரியங்களை உண்மையுடனும், பொது நலத்துடனும் செய்தால் உரிய காலத்தில் சில மாற்றங்களைக் காண முடியும். தமிழ் சமுதாயத்தில் எழுத்தாளர்கள் நல்ல சக்தியாக வர வேண்டும். அவர்கள் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று மொழி, நடை, பார்வை, அவதானிப்பு உருவாக வேண்டும்.சுயத்தைக் காப்பாற்றும் சூழல் ஏற்பட வேண்டும். எந்த சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடுகிறதோ அந்த சமூகமே மதிப்பினைப் பெரும்" என்ற முழக்கங்களுடன் சுந்தர ராமசாமி திரையில் தோன்றினார்.
சு.ராவின் கவிதைகள், ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ குறித்துப் பலரும் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அவரின் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களின் சு ராவின் படைப்புகள் மீதான விமர்சனம் ரசிக்கும்படியாக இருந்தது.
சுரா Sun TV, Asianet TV போன்ற தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டிகளும், அவருடைய குறிப்பிட்ட மேடைப் பேச்சுகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெறுகின்றன.
நாராயணன், R.V. ரமணன், N.சுகுமாரன், அசோகமித்திரன், ஆற்றூர் ரவிவர்மா, சலபதி, தியோடார் பாஸ்கர், ஞானி, பாலுமகேந்திரா, விஷ்ணு மதூர், பால் சகரியா, ராஜ மார்த்தாண்டம், மனுஷபுத்திரன், கோகுலக் கண்ணன், அருணா சாய்ராம், புதுவை இளவேனில், யுவன் சந்திரசேகர் முதலானவர்கள் அவரது அனுபவங்கள், படைப்புகள் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள் ஆவணப் படத்திற்கு அழகு சேர்கின்றது.
"புதுவை இளவேனில்" - சுந்தர ராமசாமியை புகைப்படம் எடுத்தவர். புகைப் படம் எடுக்கும் போது அவருக்கு இருந்த மகிழ்ச்சியான மன நிலையையும், அவர் கொடுத்த ஒத்துழைப்பையும் அனுபவித்துப் பேசினார்.
"அருணா சாய்ராம்" - இவருடைய தீவிர விசிறியாம் சுந்தர ராமசாமி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்ற நாவலை அவருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். அவருடைய அன்பு மனைவி கமலா அருணா சய்ராமிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
பள்ளி மாணவிகளுக்கு அவர் அளித்த பேட்டி வித்யாசமான சுந்தர ராமசாமியைப் பார்க்கும் படியாக இருந்தது. மாணவிகளுடைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ரசிக்கும்படியாக இருந்தது.
இரண்டாம் பாதியில் இடம்பெற்ற சு.ராவின் மரணமும், அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட விதமும் மனதை உலுக்குவதாக இருந்தது. அதற்குப் பிறகு அவருடைய குடும்பத்தார் சுந்தர ராமசாமியின் பிறந்த இடம், வளர்ந்த இடம் என பல விஷயங்கள் விரிவாகக் காட்டப்படுகிறது. சு. ரா-வைப் பற்றிய அவருடைய இளைய பேரனின் நினைவுகள் அருமையிலும் அருமை. மழலைக்குரலில் மாறாத அன்புடன் அவன் பகிர்ந்துகொள்ளும் விதம் ரசிக்க வேண்டிய ஒன்று.
தனது மறைவிற்குப் பிறகு சடங்குகள் வேண்டாம் என்று சுந்தர ராமசாமி சொல்லிவிட்டாராம். ஆகவே அவர் விருப்பப்படி இறுதி மரியாதை செய்திருக்கிறார்கள். அசோகமித்திரன் அதைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஆவணப்படம் போல் இல்லாமல் இயல்பாக படமாக்கியிருக்கும் விதம் அருமை. ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் அனைத்துமே அருமை. R.V ரமணணின் நீண்ட கால உழைப்பு இதில் இருக்கிறது.
தூர்தஷனுக்காக அரைமணி நேரம் எடுக்கப் பட்ட இந்த ஆவணப்படத்தின் தணிக்கை செய்யப் படாத இரண்டு மணி நேர [சந்திப்பில் ஒளிபரப்பப்பட்ட] குறுந்தகடு விலைக்கு வாங்கக் கிடைக்கிறது. இயக்குனர் R.V.ரமணணிடம் தொடர்பு கொண்டால் 'நீ யார்' குறுந்தகடை விலைக்கு வாங்கலாம்.
Details:
NEE YAAR – Who are you?
Duration: 120 minutes
Tamil, Malayalam, English (Subtitled in English)
Directed, Photographed and Edited by RV Ramani
Produced by Public Service Broadcasting Trust & Prasar Bharati
Address:
R.V. Ramani [Director & photojournalist]
L-1/3, First Floor,
28th Cross, Besant Nagar,
Chennai 600090. India
Website: www.ramanifilms.com
E-mail: ramanirv@hotmail.com
Saturday, August 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பகிர்வு கிருஷ்ணா. வர இயலவில்லை. குறுந்தகடு வாங்கிவிடலாம் :)
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
http://gayathirimahadevan.blogspot.com/
ReplyDeleteவிஷ்ணு குமார் நன்றாக கவிதை எழுதுகிறார்... வாசித்தீர்களா?
பின்னூட்டத்திற்கு நன்றி சேரல்...
அமெரிக்கன் கல்லூரி மாணவர்களின் சு ராவின் படைப்புகள் மீதான விமர்சனம் ரசிக்கும்படியாக இருந்தது.////
ReplyDeleteமதுரை அமெரிக்கன் கல்லூரியா?
நான் அக்கல்லூரியின் (3 மாதங்களுக்கு முன்னால் வரை) மாணவன்.
சரியாகத் தெரியவில்லை. அதனால் தான் எந்த ஊர் என்று தெரியப்படுத்தவில்லை. எப்படியும் குறுந்தகடு வாங்கலாம் என்று இருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்கிறேன்.
ReplyDelete