Monday, June 8, 2009

ஜானகி அம்மாவுடன் தொலைபேசியில்...

2007 -ஆம் ஆண்டின் ஒரு நாள் சென்னையிலுள்ள பெரிய நிறுவத்தில் மெக்கானிக்காக வேலை செய்யும் 'வேலு' என்ற நபர் கவுன்சலிங் பெறுவதற்காக வந்திருந்தார். அவர் சில குறைகளை என்னிடம் சொல்லி அதிலிருந்து தன்னால் வெளியில் வர இயலவில்லை என்று குறைபட்டுக் கொண்டார்.

அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததில் திரைப் பாடல்களை விரும்பி கேட்பவர் போல் தெரிந்தது. "சிக்கல் ஏற்படும் போது நீங்கள் மனதிற்கு பிடித்த பாடல்கள் கேட்பதன் மூலம் சுலபமாக வெளியில் வரலாமே" என்று அவரிடம் ஆலோசனை கூறினேன்.

உண்மைதான் கிருஷ்ணா "எனக்கு ஜானகி அம்மா என்றால் உயிர், அவருடைய தீவிர விசிறி நான், தினமும் அவருடைய பாடல்களைக் கேட்டுவிட்டுதான் உறங்கச் செல்வேன் " என்றார்.

ஜானகி அம்மாவிற்கு நானும் தீவிர விசிறி என்பதால் அவருடைய சில பாடல்களை மேற்கோள்காட்டி பேசினேன். தீவிரமாக அதை பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் போது-ஜானகி அம்மாவின் தொலைபேசி எண்கள் அவரிடம் இருப்பதாகக் கூறினார். கவுன்சலிங் முடிந்து புறப்படும் போது மறக்காமல் அவரிடமிருந்து ஜானகி அம்மாவின் தொலைபேசி இலக்கங்களை வாங்கிக்கொண்டேன்.

பெரிய இசைமேதை என்பதால் அவரை தொலைபேசியில் அழைக்க உறுத்தலாகவே இருந்தது.

துணிந்து ஒரு நாள் எங்களை சுழற்றினேன். எதிரில் பேசியவர் அவர்கள் வீட்டில் வேலை செய்பவர் என்று நினைக்கிறேன். "ஜானகி அம்மா பாபா கோவில் சென்றுள்ளார்கள் மதியமாக அழையுங்கள்" என்றார். என் பெயரை மறக்காமல் கேட்டு வாங்கிக்கொண்டார்.

மதியம் மூன்று மணிக்கு தொலைபேசியில் அழைத்தேன் எதிரில் தொலைபேசியை எடுத்தவர், "நீங்கள் யார்" என்று வினவினார். அவர்களுடைய விசிறி என்றும், காலையில் தொலைபேசியில் அழைத்ததையும் கூறினேன். முழுவதும் கேட்டவர் "இப்பொழுது அம்மா தூங்கும் நேரமாயிற்றே இப்பொழுது தொந்தரவு செய்யலாமா?" என்றார். என்னுடைய ஆர்வக் கோளாறை அப்பொழுதுதான் உணர முடிந்தது. மன்னிப்பு கேட்டுக்கொண்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.

நீண்ட பிரயாசைக்குப் பிறகு ஒருநாள் ஜானகி அம்மாவிடம் பேச இணைப்பை வழங்கினார்கள். அவருடைய இளமை மாறாத குரல் தொலைபேசி வழியே என்னுடைய செவிமடல்களுக்கு அதிர்வூட்டியது. அந்த அதிர்வு சொல்ல முடியாத இன்பத்தை உடல் முழுவதும் பரவச்செய்து.

நான் பேசிய உரையாடல் பின்வருமாறு இருந்தது:

நான்: வணக்கம் அம்மா...உங்களுடைய தீவிர விசிறி நான்...
ஜானகி அம்மா: நல்லதுபா... உன் பேரு என்ன?
நான்: கிருஷ்ண பிரபு...அம்மா
ஜானகி அம்மா: சந்தோஷம்பா... எனக்கு கிருஷ்ணா சாமின்னா ரொம்ப புடிக்கும்...
நான்: அப்படிங்கலாம்மா?
ஜானகி அம்மா: ஆமா... என்னோட பையன் பேரு கூட முரளி கிருஷ்ணா...
நான்: தெரியுங்கம்மா...படிச்சி இருக்கேன்...அம்மா உங்கள நேரில் பார்க்க முடியுமா? ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுத்தா போதும்...
ஜானகி அம்மா: அதனால என்னப்பா... எப்ப வேணும்னாலும் வா. இங்க நீலாங்கரைல(சென்னை) தான் இருக்கேன்.
நான்: Address தெரியாதுங்கமா!
ஜானகி அம்மா: முழு முகவரியும் நிறுத்தி நிறுத்தி சொன்னாங்க...
எனக்கு எப்ப வீட்டில் இருப்பேன்னு தெரியாது. அதனால அடிக்கடி போன் பண்ணுப்பா... வீட்டில் இருந்தா வா-ன்னு சொல்றேன். உடனே புறப்பட்டு வா... நம்ம நேரில் பார்க்கலாம். அடுத்த மாசம் Full-லா வெளிய போறேன். வீட்டில் இருக்கமாட்டேன். ஒரு சின்ன நிகழ்ச்சி. ஒரு மாசம் கழிச்சி Phone பண்ணுப்பா. நான் சொல்றேன்.
நான்: நான் பழவேற்காடு பக்கத்துல இருக்கேன்மா? அதனால காலை நேரத்துல டைம் கொடுத்தா நல்லா இருக்கும். கும்மிடி பூண்டி பக்கத்துல இருக்கேன்மா...
ஜானகி அம்மா: ஐயோ அவ்வளோ தொலைவில இருந்தா வரப் போறீங்க...? என்ன பார்க்க இவ்வளோ தொலைவு வரணுமா...! பார்த்துக்கோங்கோ.
நான்: எனக்கு கஷ்டம் இலைங்கம்மா. Daily வேலைக்கு வந்து போறதால பழக்கம் தான்.
ஜானகி அம்மா: அப்படின்னா சரி...
நான்: சரிங்கம்மா நான் அடுத்த மாசம் உங்கள நேரில் வந்து பாக்குறேன்.
ஜானகி அம்மா: சரிப்பா...
நான்: "இவ்வளோ நேரம் பொறுமையா என்கூட பேசினதுக்கு நன்றிங்க அம்மா" -ன்னு சொல்லி Phone-ஐ வைத்தேன்.

பேசி முடித்ததும் உலகமே லேசானது போல ஒரு உணர்வு. அவர்களுடன் பேசிய ஒரு வாரத்திற்குள் நீலாங்கரைக்குச் சென்று அவர்களுடைய வீடு இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். வீட்டிற்கு வெளியில் சிறிது நேரம் காத்திருந்து திரும்பினேன்.

ஒருமாதம் கழித்து அவரை காணச் செல்லும் போது யாருடன் போகலாம் என்று யோசிக்கலானேன்.

என் அக்காவின் மகன் அகிலுக்கு அப்போது இரண்டு வயது. அவனை உடன் அழைத்து செல்லத் தான் எனக்கு விருப்பம். சிறு குழந்தை அவன், ஏதாவது குறும்பு செய்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். ஆகவே அவனை அழைத்துச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

நண்பர்களில் யாரை அழைத்துச் செல்லலாம் என்று யோசித்தேன். பாடகர்களை சந்திக்கும் ஆர்வம் என்னுடைய நண்பர்களின் யாருக்கு இருக்குமென்று யோசிக்கும் போது தணிகை மற்றும் ரகுநாத் என்ற இருவரும் ஞாபகத்திற்கு வந்தனர்.

எனக்கு பாட வராது. ஆனால் அவர்கள் இருவருமே திரை இசைப் பாடல்களை நன்றாகப் பாடுவார்கள். எனக்கு மறந்து போகும் சில பாடல் வரிகளை அவர்களைப் பாடச் சொல்லி சில நேரங்களில் கேட்பதுண்டு. அந்த நன்றிக்காகவாவது இருவரையும் அழைத்துச் செல்ல எண்ணினேன்.

தேவையில்லாத மன வருத்தத்தால் இருவரிடமும் பேசி பல வருடங்கள் ஆகிறது. ஆகவே அவர்களுடன் தொடர்பு கொள்ள தயக்கமாக இருந்தது. முதலில் தணிகையை அழைக்க எண்ணி அவனுடைய Mobile No -ஐ நண்பர் சரவணனிடம் வாங்கினேன். துருதுஷ்ட வசமாக ரகுநாத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நீண்ட நாட்கள் தணிகை அரசுடன் தொடர்பு இல்லாததால் என்னுடைய அழைப்பிற்கு சம்மதிப்பாரா என்று குழப்பமாகவே இருந்தது. தயக்கத்துடன் சில நாட்களில் தனிகையுடன் தொடர்பு கொண்டேன். குரலில் உதறல் இருந்தது. இருவருக்குமே. நலம் விசாரித்துவிட்டு என்னுடைய கோரிக்கையை வைத்தேன். வருவதாக சம்மதித்தான்.

இதற்குள் நான் வேறு அலுவலகத்திற்கு மாறி இருந்தேன். ஆகவே வேலைப் பளு அதிகமாக இருந்தது. ஒரு மாதம் என்பது ஒரு வாரம் போல் சென்றது. ஜானகி அம்மா.. ஜானகி அம்மா... என்று மூலையில் அலாரம் அடித்தது.

ஒரு நாள் காலை அலுவலகத்திற்கு வந்தவுடன் காலை 9 மணிக்கு ஜானகி அம்மாவிற்கு போன் செய்தேன். "வீட்டில் தான் இருக்கிறேன் வாப்பா" என்று கூறினார்கள்.

நானும் என்னுடைய நண்பரும் வருவதாகச் சொல்லி அதற்காக தயாரானேன்.

9 comments:

  1. கிருஷ்ணா தெளிவாக எழுதி உள்ளிர்கள்..
    நீங்கள் மனம் சம்பந்தமாக கவுன்சிலிங் தருகிறிர்கள..
    அதை பற்றி உங்களுக்கு நேரம் கிடைக்கும் பட்சதில் தொடர்ந்து பதிவு இடலாமே..
    நிறையா பேருக்கு உபயோகமா இருக்கும்..

    ReplyDelete
  2. நேரம் கிடைக்கும் போது கவுன்சலிங் செய்கிறேன். அதைப் பற்றி பதிவிடும் யோசனையும் இருக்கிறது வினோத். பிறகு யோசிக்கலாம்.

    ReplyDelete
  3. எனக்கும் கூட S.Janaki-இன் குரல் ஒரு காலத்தில் மிகப் பிடித்ததாக இருந்தது

    ReplyDelete
  4. அது என்ன ஒரு காலத்தில்... இப்பொழுதும் திரை இசைப் பாடல்களுக்கான அந்தக் குரலுக்கு ஈடு இணை இல்லை. உங்களுடைய சில பதிவுகளைப் படித்திருக்கிறேன் நந்தா தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Oh Krishnaa, a another side of you? good. keep doing things. did you met janaki amma? or?

    ReplyDelete
  6. இசைக்குயிலை நேரில் சந்தித்து இருக்கிறேன். அடுத்த பதிவு அதுவாகத்தானிருக்கும். நேரம் இல்லாததால் எழுத முடியவில்லை.

    ReplyDelete
  7. இந்த blogஐ இன்று தான் பார்த்தேன்.
    ஜானகி அம்மாவை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா?
    நீங்கள் அவருடன் என்ன கதைத்தீர்கள் என்று கேட்க ஆவலாக உள்ளது.

    உங்களது நண்பர் (enna-kelvigal ) ஒருவர் துணைஎழுத்து பற்றி எழுதிய பதிவுக்கு நீங்கள் எழுதிய‌ பதிலை பார்த்த போது,
    உங்களிடம் கட்டுரைகள் ஏன் எழுதுவதில்லை என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.

    இந்த blogஇலும் அடிக்கடி எழுதுங்கோ. நேரம் உள்ள போது.

    ReplyDelete
  8. கண்டிப்பாக எழுதலாம் வாசுகி. நேரம் என்று ஒன்று அமைய வேண்டுமே. முதலில் ஆகச்சிறந்த மூத்த படைப்பாளிகளை வாசித்துவிட்டு எதையாவது யோசிப்போமே...

    ஜானகி அம்மாவுடனான சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அதுவும் இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன்... என்னுடைய ஞாபக அடுக்குகளை அலசிக்கொண்டு இருக்கிறேன்.

    மேலும் அலுவலகத்திலிருந்து பதிவுகளை எழுதுவதால் கட்டுரைகள் எழுதுவது சிரமமாக இருக்கிறது. யோசனை தடைபடுகிறது. மற்றபடி விருப்பம்தான்...

    ReplyDelete
  9. அனுபவத்தின் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்க்.

    ReplyDelete