அலுவலகத்தில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஆகவே எப்படி விடுமுறை கேட்பது என்று குழப்பினேன். இருந்தாலும் என்னுடைய PM சரவணனிடம் சொல்லிவிட்டு வெளியில் கிளம்பினேன். அப்படியே தணிகைக்கும் Phone செய்து உடன் வருமாறு அழைத்தேன். அவருக்கு M.E-Main Practical Exam என்பதால் தன்னால் வர இயலாது என்று கூறிவிட்டான்.
"சரிடா, இன்னொருமுறை நான் போகும்போது உன்னை மறக்காம அழச்சிக்குனு போறேன்... அதனால Exam நல்லா பண்ணு. அதுதான் முக்கியம்னு" சொல்லி நான் மட்டும் கிளம்பினேன்.
சரியாக 10.30 மணிக்கு என்னை சந்திக்க அம்மா நேரம் கொடுத்து இருந்தார்கள். என்னுடைய அலுவலகத்திலிருந்து ஆட்டோ எடுத்துக்கொண்டு நீலாங்கரை செல்ல பயணமானேன். போகும் வழியில் ஜானகி அவர்கள் பாடிய 'பக்தி மலர், அஷ்டலக்ஷ்மி பாடல்' மற்றும் 'SPB பாடிய சுப்ரபாதம்' ஆகிய ஒலி நாடாக்களை அவருடைய கையொப்பம் பெறுவதற்காக வாங்கிக்கொண்டேன்.
தனியாகத்தானே போகிறோம் இந்த Auto Driver -யும் உடன் அழைத்துச் செல்லலாம் என்று "உங்களுக்கு பாடகி ஜானகியைப் பிடிக்குமா?" என்று வினவினேன். பிடிக்கும் Sir என்று 'பாடகி சுசீலா'வின் பாடலொன்றைப் பாடினார்.
"நல்லா பாடுறீங்களே, நான் அவங்கல தான் பார்க்கப் போறேன். நீங்களும் கூட வரீங்களா?" என்று கேட்டேன்.
இப்ப எல்லாம் எனக்கு பாட்டுலயோ, சினிமாவுலயோ விருப்பம் இல்ல சார். சவாரி போறதுக்கும், அல்லாவ ஒதரதுக்குமே நேரம் சரியா இருக்கு. நீங்க போயிட்டு வாங்க சார் என்று கூறினார். நானும் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
இதற்கு முன் நான் எந்தப் பிரபலங்களையும் சந்தித்ததில்லை. எனவே எச்சரிக்கை உணர்வுடன் ஒவ்வொரு அடியாக மெதுவாக எடுத்துவைக்கிறேன். பெரிய வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தேன். வெள்ளை நிற நாய் ஒன்று என்னைப் பார்த்துக் குறைத்தது. நான் ஒரு அடி பின்வாங்கி நின்று கொண்டேன். நாயின் குறைத்தலைக் கேட்டு ஒரு பெண் வெளியில் வந்தாள். "பயப்படாதீங்க அது கடிக்காது" என்று கூறினாள் . நாய் வளர்ப்பவர்கள் சாதாரணமாக சொல்வது தானே. அவள் கேட்கும் முன்பே நான் காரணத்தைக் கூறினேன். உள்ளே அழைத்துச் சென்று உட்காரவைத்தாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். பிறகு வீட்டின் உள் அலங்காரங்களைக் கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருப்பார்கள் போல. ஜானகி அம்மா அவருடைய கணவருடன் எடுத்த புகைப்படமும், அவருடைய மகன் முரளி கிருஷ்ணாவின் திருமண புகைப்படமும், அவருடைய பேத்தியின் புகைப்படமும் சுவரினை அலங்கரித்திருந்தன.இருக்கைகளிலும் மேசைகளிலும் அரசர்களின் உருவங்கள் கொண்ட வேலைப்பாடுகள் இருந்தன. காலைக் கதிரவனின் பிரகாச ஒளி ஜன்னலின் வழியே ஊடுருவி அலங்காரப் பொருட்களுக்கு மேலும் பொலிவிவைக் கொடுத்தது.
திடீரென்று ஒரு குரல் "அம்மா உங்களை மேலே கூப்பிடிகிறார்கள்" என்று சொல்லவும்... அலறி அடித்து எழுந்து கொண்டேன்.
இரண்டு அறைகளைத் தாண்டி மாடிக்கு செல்லும் படி வந்தது. போகும் வழி முழுவதும் அம்மா வாங்கிய பரிசுகள் ஆங்காங்கு தென்பட்டன. சுவரின் மூலைகளில் இசைக் கருவிகள் அலங்காரமாக வைக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு படிக்கும் ஒரு காமாட்சி அம்மன் விளக்கு வைத்திருந்தார்கள். படியின் சுவர்களிலும் அவர் வாங்கிய வாழ்த்து மடல்கள் அலங்காரமாக தொங்கின. மேலே அம்மாவின் அறைக்குப் பக்கத்தில் அமர வைத்தார்கள். பொறுமையாக காத்துக் கொண்டு இருந்தேன்.
வாங்க...வாங்க... என்று சொல்லிக் கொண்டே தும்பைப் பூவின் வெள்ளை நிற சேலையில் என்னருகே ஜானகி அம்மா வந்தார்கள். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவருடைய கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டேன். இருக்கையில் அமர வைத்து பேச ஆரம்பித்தார்கள்.
நான்: உங்களுடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளோ சின்னவன் நான் என்னையும் பொருட்டாக மதித்து நேரம் ஒதுக்கியதற்கு நன்றி அம்மா.
அம்மா: என்ன அப்படி சொல்லிட்டிங்க. நீங்க எல்லாம் இல்லனா நாங்க இல்லையே.
நான்: இல்லங்கம்மா நீங்க எவ்வளோ பெரிய இசை மேதை?
அம்மா: நீங்க எல்லாம் கூட எவ்வளோ படிச்சி இருக்கீங்க. நீங்க எல்லாம் கூட தான் பெரியவங்க. அதுவும் இல்லாம நான் எங்கப்பா படுறேன். உள்ள இருந்து கிருஷ்ணா சாமி தான் பாடுறதா எனக்குத் தோணும்.
நான்: நீங்க முறைப்படி சங்கீதம் படிக்கலன்னு சொல்லி இருக்கீங்களே அம்மா?
அம்மா: ஆமாம்பா சின்ன வயசுல என்னோட அக்கா பாட்டு கிளாஸ் போவா... கூடவே நானும் போவேன். அப்போ கேட்டதோட சரி. அதுவும் எனக்கு 10 வயசுக்குள்ள தான் இருக்கும். மத்தபடி முறைப்படி கத்துக்கல.
நான்: அப்போ நீங்க எப்படி சங்கதி, ஸ்வர வரிசை எல்லாம் சரியா பாடுறீங்க?
அம்மா: எழுதி வச்சி தான் படுவேன். அதுதான் சொன்னேனே நானா பாடுறேன்... உள்ள இருந்து கிருஷ்ணா இல்ல பாடுறாரு!
நான்: ரெக்காடிங்ல ரொம்ப Time இருக்காதே? எப்படி பாடம் பண்ணுவீங்க?
அம்மா: அதுக்கு என்ன சொல்லிக் கொடுக்க கலைஞர்கள் இருக்காங்க இல்ல... நாலு முறை பாடச் சொல்லிக் கேட்டா ஞாபகம் வந்துடும்.
நான்: உங்களுக்குள்ள ஏதோ தெய்வீக சக்தி இருங்குங்கம்மா!
அம்மா: இருக்கலாம்பா... முன் ஜென்மத்துல மேதைகளோட இருந்து இருப்பேனோ என்னவோ?
நான்: என்னோட Guitar Master எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறதுக்குள்ள சோர்ந்து போயிடுவாரு. எனக்கு மூலைல சுலபமா நோட்ஸ் பதியாது. ஆனா உங்களுக்கு சுலபமா வருதுன்னா ஆச்சர்யமா இருக்கு...
அம்மா: சிரிச்சாங்க
நான்: ஐயோ... தப்பா நெனைகாதிங்க...
அம்மா: இல்லப்பா... Guitar என் பையன் கூட வாசிப்பான்.
நான்: தெரியும்மா. என்னோட மாஸ்டர் சொல்லி இருக்காரு. உங்க பையனோட மாஸ்டர் கிட்டதான் அவரும் படிச்சாரு.
அம்மா: சரி, வந்து ரொம்ப நேரம் ஆகுதே...என்ன சாப்பிடுறீங்க?
நான்: எனக்கு எதுவும் வேண்டாங்கம்மா.
அம்மா: இலப்பா, நான் Coffee குடிக்கப்போறேன். உனக்கும் எடுத்துட்டு வர சொல்லுறேன். அமாம் Coffee குடிப்ப இல்ல?
நான்: சரிங்கம்மா.
அம்மா: (InterCom-ல ரெண்டு Coffee எடுத்துட்டு வர சொன்னாங்க.)
நான்: நீங்க இளைய ராஜா கூட எவ்வளோ பாட்டு பாடி இருக்கீங்க. அவர பத்தி கொஞ்சம் சொலுங்களேன்?
அம்மா: அவன பத்தி என்ன சொலுறது. எனக்கு நெறைய பாட்டு கொடுத்து இருக்கான். அவன் ஒரு Music Genius.
நான்: அவர் கூட நீங்க நெறைய பாட்டு பாடி இருக்கீங்க இல்ல?. நெறைய Hit Songs!
அம்மா: ஆமாம் ஆமாம்... இளையராஜா, பாலு, மனோ, மலேசியா வாசுதேவன்... நெறைய பேரு கூட பாடி இருக்கேன். ரஃபி, பால முரளி கிருஷ்ணா, பிபிஎஸ், ஜேசுதாஸ் கூட எல்லாம் பாடி இருக்கேன்.
நான்: அதுல SPB Sir-க்கு உங்க மேல ரொம்ப பிரியம் அம்மா. சமீபத்துல ஒரு TV நிகழ்ச்சியில உங்கள சரஸ்வதின்னு சொன்னாரு.
அம்மா: அப்படி எல்லாம் இல்லப்பா...
நான்: "அவர்கிட்ட(SPB) ஒரு கேள்வி கேட்டாங்க. உங்களுக்கு பிடித்த பாடகி யாரு? யாரு கூட பாட பயமா இருக்கும்?" கொஞ்சமும் யோசிக்காம ஜானகி அம்மான்னு சொன்னாரு.
அம்மா: சிரிச்சாங்க...
நான்: நீங்க பாடினதுலையே உங்களுக்குப் பிடித்த பாட்டு எது?
அம்மா: எப்படிப்பா சொல்ல முடியும். பல Language-ல 10,000 பாட்டுக்கு மேல பாடி இருக்கேன். ஒரு பாட்ட மட்டும் சொல்லுறது கஷ்டம் தான்.
நான்: வீடு ரொம்ப அழகா இருக்கு.
அம்மா: அதுல எல்லாம் நான் தலையிடுறது இல்ல... பசங்க பாத்துப்பாங்க.
நான்: அவசரமா வந்ததால உங்களுக்கு எதுவுமே வாங்கி வர முடியல... கேமரா கூட எடுத்து வர மறந்துட்டேன்.
அம்மா: அதனால என்ன அடுத்த முறை வரும் போது எடுத்துக்கோ. கொஞ்சம் இருப்பான்னு உள்ள எழுந்து போனாங்க. (அவங்க Sign பண்ணி வச்சிருந்த 2 Photo கொடுத்தாங்க.)
நான்: சந்தோஷமாக வாங்கிக் கொண்டேன். இன்னும் ஒரு முறை நேரம் கொடுங்க அம்மா... கேமராவோட வந்து ஒரு போட்டோ எடுத்துக்குறேன்.
அம்மா: அதனால என்னப்பா... தாராளமா வா.
நான்: என்னோட நண்பருக்கு இன்னைக்கு பரீச்சை. அதனால தான் வர முடியல. மன்னிச்சிக்கோங்க அம்மா.
அம்மா: படிப்பு தான முக்கியம்... என்ன பிறகு வந்து பார்த்துக்கலாமே.
நான்: சிரிச்சேன்...
coffee எடுத்துக் கொண்டு ஒரு பெண் வந்தாள். எடுத்துக்க சொன்னாங்க. கை நடுக்கத்த்துடன் ஆவி பறக்கும் Coffee-யை எடுத்துக் கொண்டேன். அம்மாவிடம் காட்டினேன் பாருங்கள் என்னுடைய கை எப்படி நடுங்குகிறது. உங்கள் மீதுள்ள பயம் உள்ளுக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அம்மா: எதுக்கு பயப்படனும். எல்லாருமே மனுஷங்க தானே. நிதானமா குடிங்க.
வாங்கி வந்திருந்த ஒலி நாடாக்களில் கையொப்பம் வாங்கிக் கொள்ள அவரிடம் கொடுத்தேன். அவருடைய ஆல்பங்களில் கையொப்பமிட்டார். பாலு அவர்களின் சுப்ரபாத ஆல்பத்தில் கையொப்பமிட மறுத்துவிட்டார். இது பாலு பாடினது இல்ல நான் எப்படி Sign பண்ண முடியும். அவர்கிட்ட வாங்கிக்கோங்க.
நான்: அவங்க இந்த மாதிரி யாருக்கும் நேரம் கொடுக்கறது இல்லையே!.
அம்மா: Try பண்ணா பாக்கலாம்பா...
இவ்வளவு நேரம் என்னிடம் பொறுமையாக பேசியதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்தேன். நான் அவர்களிடம் கேட்டிருந்த நேரம் பத்து நிமிடம். ஆனால் என்னிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசினார்கள். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் சாப்பிட்டுவிட்டு செல்லலாமே. சமையல் தயாராகிவிடும் என்றார்கள்.
"இல்லங்க, அம்மா Office-ல லஞ்ச் இருக்கு" என்று சொல்லி அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.
குளிர்ந்த கடற்கரைக் காற்று வீசும் அவர்களுடைய வீட்டை விட்டு வெளியில் வந்து திரும்புவதற்கு மனம் இல்லாமல் மீண்டும் அலுவலகத்திற்கு செல்ல ஆட்டோவைப் பிடித்தேன்.
Friday, June 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ம்ம் இன்னும் முடிக்கலை போல, வெயிட்டிங்க்ல போடறதே வேலைய போச்சு......
ReplyDeleteகிருஷ்ணா அருமை உங்களுக்கென்று ஒரு எழுத்து நடை இருக்கிறது தொடருங்கள். ஆனால் இந்த பதிவில் ஒருவித தயக்கம் இருந்துகொண்டே இருப்பது போல படுகிறது. அப்படியா?
அருமையான சந்திப்பு..
ReplyDeleteமுரளி... நான் முதல் முறை அவர்களை சந்தித்த போது. நடுக்கத்துடன் கூடிய குழப்பத்தில் இருந்தேன். எப்படி அவர்களுடன் பேசுவது? அவர்கள் என்னை எப்படி எதிர் கொள்வார்கள். அது போன்ற நிலையில் இருந்தேன்.
ReplyDeleteஅவர்களுடைய கணிவாலும், முதிர்ச்சியாலும் என்னுடைய சமநிலைக்கு வந்தேன். அருமையான சந்திப்பு. யோசித்துப் பாருங்கள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக எந்த பிரபலம் அடுத்தவர்களிடம் பேசுவார்கள். அதுவும் ஒரு சிறுவனுடன்.
பெரிய இசை மேதை ஆனால் எளிமையானவர், அன்பே உருவானவர்.
@ வினோத்,
நன்றி நண்பரே.