Thursday, July 23, 2009

சுவாரஸ்ய பதிவர் விருது... முரளியிடமிருந்து...

நண்பர் முரளியை எனக்குக் கடந்த பல மாதங்களாகத் தெரியும். எஸ். ராமகிருஷ்ணன் என்றால் அவருக்கு அலாதிப் பிரியம். 'ஆனந்த விகடனில்' என்னுடைய பதிவு பரிந்துரை செய்யப்பட்டிருந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். 'அன்பே சிவம்' என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்.

"நான் வாசித்த தமிழ் புத்தகங்கள்" என்ற எனது பதிவின் மூலமாகத் தான் முரளி எனக்கு அறிமுகம். அவர் எனக்கு 'சுவாரஸ்ய பதிவர் விருதினை' அளித்துள்ளார். மேலும் எனக்கு பிடித்த 6 பதிவர்களை அறிமுகப்படுத்தச் சொல்லி இருக்கிறார். மிகவும் கடினமான வேலை. நண்பருடைய மகிழ்ச்சிக்காக இந்தப் பதிவு.

அதைக் கேட்டவுடனே எனக்கு தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் 20 பேர் தமக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி எழுதிய 'கடிகாரங்கள் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது' என்ற அ. முத்துலிங்கத்தின் கட்டுரைத் தொகுப்புதான் ஞாபகம் வருகிறது.

அதில் "வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாதித்ததாக ஒரே ஒரு புத்தகத்தை சொல்ல முடியவில்லை" என்று சுஜாதா சொல்லி இருப்பார். புத்தகங்களுக்கே அதுதான் கதி என்றால் பதிவுகளுக்கு சொல்லவும் வேண்டுமா?. முழுமையான சுவாரஸ்ய பதிவாக என்னால் எதையும் உறுதியிட்டுக் கூற முடியவில்லை.

என்னுடைய அக்கா அவளுடைய மகனுடனான உரையாடல்களைப் பற்றி எழுதும் AkhilnJaya பதிவு மற்றும் என்னுடைய தங்கை ஆங்கிலத்தில் எழுதும் Reflecting.... பதிவும் தான் நான் அடிக்கடி விரும்பிச்செல்லும் பதிவு.

எனது உறவுகளைத் தவிர்த்து என்றால் எனக்கு எழுத்தாளர்களின் வலைத் தளங்களிக்குச் சென்று படிக்கப்பிடிக்கும். திரு. மாலன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெய மோகன், சாரு நிவேதிதா, பா. ராகவன் என அந்தப் பட்டியல் நீளும்.

மேலும் திண்ணை, காலச்சுவடு, உயிர்மை, மரத்தடி, கீற்று, அறிவியல், வரலாறு, பங்கு சந்தை, தமிழ் ஸ்டூடியோ என முக்கியமான தமிழ் இணையத் தளங்களைப் பார்வையிடுவது பிடிக்கும்.

சில மூத்த பதிவர்களான பத்ரி (எண்ணங்கள்), அகநாழிகை, பைத்தியக்காரன் (சிவராமன்), பிச்சைப் பாத்திரம் (சுரேஷ் கண்ணன்), ஓம்கார், உமா சக்தி, கலையகம், ரிஷான் போன்றவர்களின் பதிவுகள் பிடிக்கும்.

இவர்களைத் தவிர வலைப்பூ நண்பர்களான பிரியமுடன் பிரபு, முரளி, அமித்துவின் அம்மா (சாரதா), அமுதா, வண்ணத்துப் பூச்சியார்(சூர்யா), ஆதவா (குழந்தை ஓவியம்), விக்கி (வாழ்க்கைப் பயணம்), பாதசாரியின் பால்வீதி, வினோத் (ஜூலை காற்றில்...), பப்பு... என இவர்களுடைய பதிவை மட்டும் தான் மேய்வது வழக்கம்.

சில சமயங்களில் என் நட்பு வட்டத்தைத் தவிர வேறு சிலரின் பதிவுகளை படிக்க நேரும். அந்தப் பதிவர்களுக்கே நான் விருது கொடுக்க நினைக்கிறேன். அவர்கள் பின்வருமாறு:

1. பதிவர் தீபா

கடைசியாக இவருடைய பதிவில் சிறுவர் இதழ்கள் பற்றிய செய்தியையும், அதில் வந்த ஒரு அருமையான கதையையும் சொல்லி இருப்பார். எப்பொழுதாவது அவருடைய வலைப்பூவிற்கு சுவாரச்யமுடன் செல்வேன். சிதறல்கள் - என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார். நல்ல எழுத்து இவருடையது. எனக்கு 'வண்ணத்துப் பூச்சி விருதினை' இவர் தான் முதன் முதலில் கொடுத்தார். அதுதான் பதிவிட்டு நான் வாங்கிய முதல் விருதும் கூட. இவருடன் எனக்கு அந்த அளவிற்கு தொடர்பில்லை. எப்பொழுதாவது பின்னூட்டம் இடுவதோடு சரி...

2. பால முருகன்

இவர் மலேசியப் பதிவர். இவருடைய பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆசிரியராக பணிபுரிகிறார் என்று நினைக்கிறேன். "மதிப்பீடுகள்-நவீனத்துவம்-படைப்பிலக்கியம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார். சுவாரஸ்யமான பல பதிவுகளை இவருடைய வலைப்பூவில் காணலாம். இவருடன் எனக்கு முற்றிலும் தொடர்பு இல்லை.

3. ஜீவா ஓவியக்கூடம்

ஓவியர் ஜீவா எழுதும் பதிவினை கடந்த சில நாட்களாகத் தான் வாசிக்கிறேன். சமீப மூன்று மாதங்களாகத் தான் பதிவிடுகிறார் என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு பதிவுகள் தான் படித்திருக்கிறேன். இவர் தமிழ் ஸ்டுடியோவில் எழுதும் உலகப் படம் கட்டுரை நன்றாக இருக்கும். இவருடனும் எனக்கு முற்றிலும் தொடர்பு இல்லை.

4. சுட்டி உலகம் - அமுதா

குழந்தைகளுக்கான பதிவுகள் மிகவும் குறைவு. அந்தக் குறையை போக்கும் படி இருக்கும் இவருடைய இந்த பதிவு. சின்னச் சின்ன கதைகளை இந்தப் பதிவில் எழுதுகிறார். சோர்வாக இருக்கும் போது இந்தப் பதிவினை வாசிப்பேன். அவர் தொடர்ந்து நல்ல முறையில் செயல் படுவார் என்று எதிர் பார்க்கிறேன். இவர் எப்பொழுதாவது எனக்கு பின்னூட்டம் இடுவார்.

5. யாழிசை ஓர் இலக்கிய பயணம்...

இவர் நல்ல பல புத்தகங்களையும் பற்றி பதிவிடுகிறார். இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். தனது தந்தையின் மூலம் இலக்கிய வாசிப்பு ஆரம்பித்தது என்று இவருடைய பிஞ்சுகள் பற்றிய பதிவில் படித்ததாக ஞாபகம். அது மென்மேலும் பெருக வாழ்த்துக்கள் லேகா...

மிகுதியான தமிழ்ப் புத்தகங்களையும், எப்பொழுதாவது சில நல்ல ஆங்கிலப் புத்தகங்களையும் பற்றி இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறார். புத்தகம் என்றால் எனக்குப் பிடிக்கும் என்பதால் இவர் எழுதும் பதிவிற்கு எப்பொழுதாவது நான் பின்னூட்டம் இடுவேன். மற்றபடி இவருடன் எனக்கு தொடர்பு இல்லை.

6. புத்தகம் - மூன்றாம் பார்வை

ஞானசேகர் மற்றும் சேரல் என்ற இரண்டு நண்பர்களும் தாங்கள் படிக்கும் புத்தகங்களை இந்த வலைப்பூவில் பதிவிடுகிறார்கள். இவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி தமிழில் பதிவிடுகிறார்கள். நேரம் கிடைக்கும் போது இவர்களுடைய வலைத்தளத்திற்கு செல்லுவேன். சில நேரங்களில் பின்னூட்டம் இடுவேன், மற்றபடி இவர்களுடன் எனக்குத் தொடர்பு இல்லை.

மேலே உள்ள மொத்தப் பதிவையும் நான் படித்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு வார்த்தை கூட படிக்காமல் "Me the first" என்று ஒருநாளும் பின்னூட்டம் அளித்ததில்லை. :-)

மேலே உள்ளவர்கள் எனக்குப் பிடித்தவர்கள் ஆகவே பரிந்துரைக்கிறேன். நீங்கள் அவர்களுடைய வலைப் பூவிற்குச் சென்றால் நிச்சயம் நல்ல பல விஷயங்கள் கிடைக்கும்.

நன்றி...

4 comments:

 1. மிக்க நன்றி கிருஷ்ணப்பிரபு. உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊக்கம் அளிக்கின்றன. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  /*சில சமயங்களில் என் நட்பு வட்டத்தைத் தவிர வேறு சிலரின் பதிவுகளை படிக்க நேரும். அந்தப் பதிவர்களுக்கே நான் விருது கொடுக்க நினைக்கிறேன். */
  நல்ல கருத்து. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. நீங்களும் சுவாரஸியப் பதிவராகிட்டீங்க. அட, இத்தனை புத்தகங்களை அறிமுகப் படுத்தும் வேலையை விட முக்கியமான ஒண்ணு இருக்கா என்ன?

  ReplyDelete
 3. நன்றி அமுதா & பப்பு... மீண்டும் வருக...

  ReplyDelete
 4. மிகவும் நன்றி, திரு கிருஷ்ண பிரபு!

  ReplyDelete