Tuesday, May 5, 2009

பயணத்தில் அலையும் புலன்கள்

வயோதிகமும், உடல்வாகும் பேருந்தை நோக்கி ஓடும் ராமனை மூச்சிரைக்க வைத்தது. அவனுடன் முண்டியடித்து பள்ளி செல்லும் சிறுவர்களும் பேருந்தில் ஏறினர். தனது உடல் எடையைக் காட்டிலும் அதிகமான பளுவைச் சுமக்கும் எறும்பு போல் சிறுவர்கள் புத்தகத்தைச் சுமந்து கொண்டு சமன்செய்ய முடியாமல் ஆடினார்கள். அது ராமனுக்கு அசௌகர்யமாகத் தான் இருந்தது.

மாணவர்களில் சிலர் நடத்துனர் கேட்கும் முன்பே இலவசப் பயணச்சீட்டை எடுத்துக் காட்டினார்கள். அவர்களை ஆமோதித்தவாறு "படியில் யாரும் தொங்காதீர்கள் உள்ளே ஏறுங்கள்" என்று கத்திக்கொண்டே பயணிகளுக்கு டிக்கட் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தார் நடத்துனர்.

பேருந்தில் ஏறியதும் எல்லோருமே சில வசதிகளை எதிர் பார்ப்போம். பஸ் காலியாக இருந்தால் ஜன்னலோர சீட்டைத் தேடுவோம். சற்றே கூட்டம் இருந்து, இருக்கை காலியாக இருந்தால் வசதியான இடத்தைத் தேடுவோம். மேலும் பக்கத்து இருக்கையில் ஒல்லியான நபர் உட்கார வேண்டுமென்று எதிர் பார்ப்போம். அனால் கூட்டம் நிரம்பி வழியும் பேருந்தில் எதையும் எதிர்பார்த்து பலனில்லை. புழுக்கம் வேறு தேவையில்லாத எரிச்சலை சக மனிதர்கள் மீது கொட்டித் தீர்க்க எத்தனிக்கிறது. எனவே மூச்சு விட காற்று கிடைத்தல் போதும் என்று தான் ராமனும் நின்று கொண்டிருந்தான்.

அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டிய ஒருவர் ராமனுக்கு இருக்கையில் அமர இடம் கொடுத்தார். நன்றி கூறும் புன்னகையுடன் இருக்கையில் அமர்ந்து மாணவர்களின் பேச்சில் கவனம் செலுத்தினான். அவர்களுடைய பேச்சு வீடியோ கேம்சைப் பற்றி தான் இருந்தது. கொஞ்சம் பெரியவர்கள் IPL கிரிக்கெட் மேச்சைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் தேர்தலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ராமனுக்கு கிரிக்கெட், அரசியல் எல்லாம் சுவாரஸ்யமில்லாத விஷயங்கள். எனவே சிறுவர்களின் பேச்சில் கவனம் செலுத்தினான். தான் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுக்களை சிந்திக்கலானான்.

கிராமிய வாழ்க்கையில் கில்லி, கோலி, பம்பரம், ஒனாயடி விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு... இப்படி எத்தனையோ விளையாட்டுகள் இருக்கின்றன. அதில் பஸ் விளையாட்டும் ஒன்று. ஏனோ அவனுக்கு பஸ் விளையாட்டு ஒரு வசீகரத்தை அளித்தது.

பெரிய சனல் நூலை இரு முனைகளின் முடிவிலும் கட்டி அதைத் தான் பஸ்ஸாக பாவிப்பார்கள். சில நேரங்களில் அது கூட கிடைக்காது. எனவே கற்பனையிலேயே பஸ்ஸை செலுத்துவார்கள். ரேய்..ரேய்.. என்ற குரல் வருகிறதா என்று காத்திருந்து பஸ்ஸை செலுத்துவதில் மற்றவர்களை விட இவனுக்கு திறமை அதிகம். இவன் தான் பல நேரங்களில் ஓட்டுனராக இருப்பான். ஒரு சிலமுறை நடத்துனராகவும் இருந்திருக்கிறான். விளையாட்டின் மீதான எண்ணக் குவியல் நடத்துனரின் குரல் கேட்டுக் கலைந்தது. சரியான சில்லறையைக் கொடுத்து தான் போக வேண்டிய இடத்திற்கு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டான். பள்ளியின் நிறுத்தம் வந்ததும் மாணவர்கள் அனைவரும் இறங்கிவிட்டனர்.

சிறிது நேரத்தில் ராமனுக்கு ஜன்னலோரத்தில் அமர இருக்கைக் கிடைத்தது. எந்த வயதினருக்கும் ஜன்னலோர இருக்கையில் பயணம் செய்வது அலாதிதான். பேருந்து செல்லும் வேகத்தில் எதிர்படும் அனைத்தும் ஓட்டமாய் ஓடி மறைந்தன. கோடையின் வெக்கை அவ்வளவு காலையிலும் முகத்தில் அடித்தது. சூடான காற்று சுருங்கிய தசைகளுக்கு இடையில் வெப்பத்தை ஏற்படுத்திச் சென்றது.

எங்கிருந்தோ இளமை ததும்பும் இளைய ராஜாவின் பாடல் காற்றில் அலையலையாய் வழிந்து கொண்டிருந்தது. "என் கண்மணி...உன் காதலன்.." என்ற சன்னமான குரல் காதுகளை நிறைத்தது. அவனையும் அறியாமல் உதடுகள் அந்தப் பாடலை முணுமுணுத்தன. கல்லூரியில் படிக்கும் போது இந்தப் பாடலை உடன் படிக்கும் பெண்களைப் பார்த்து பாடிய ஞாபகம் வந்தது.

பாடலின் இடையில் வரும் "இந்தாமா கருவாட்டு கூட, தேனாம்பேட்டை பஸ் ஸ்டாப்", போன்ற வசனங்களுக்கு பதிலாக இவர்கள் பேசும் கொச்சையான வரிகளை மறுபடி மறுபடி மனதில் சொல்லிப் பார்த்தான். நண்பர்களை மறுபடியும் பார்க்க நேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ச்சே... அந்த வாழ்க்கை இப்போ திரும்பி வருமா என்று உள்ளூர கேட்டுக் கொண்டான்.

பேருந்து போகும் வேகத்தில் இரண்டு, மூன்று இருக்கைகளுக்கு முன்னாலிருந்த ஒருவன் ஜன்னல் வழியே தலையை நீட்டி எச்சில் துப்பினான். துப்பிய எச்சில் துகள்களாக சிதைந்து ஒரு துளி இவன் முகத்தில் பட்ட உணர்வு ராமனுக்கு ஏற்பட்டது. இது அவனுடைய கல்லூரி நினைவுகளை சிதரச்செய்தது. சிதறிய நினைவுகளை ஒழுங்கு படுத்த நினைத்தாலும் முடியவில்லை.

ஜன்னலின் வழியே பார்வையைத் திருப்பினான். வெளியில் கல்லூரி மாணவர்கள் சினிமா பாடல் பாடிக்கொண்டு கலாட்டா செய்து கொண்டு இருந்தார்கள். அதில் முக்கியமான பாடகன் ராமுவின் மகன். ராமன் தலையிலடித்துக் கொண்டான்.

11 comments:

 1. கிருஷ்ணா, உங்க பதிவை படித்தேன், அருமை.
  // வெக்கை அவ்வளவு காலையிலும் முகத்தில் அடித்தது. சூடான காற்று சுருங்கிய தசைகளுக்கு இடையில் வெப்பத்தை ஏற்படுத்திச் சென்றது //
  இது போன்ற உர்வகப்படுத்துதலே எழுத்தை அழகாக்குகிறது. தொடருங்கள், வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நன்றி நண்பரே... இதற்கு முன்பு கதையோ சிறு கதையோ எழுத முயன்றதில்லை. 1000 ரூபாய்க்குப் புத்தகம் பரிசு என்பதால் துணிந்து இறங்கிவிட்டேன். ஆனால் என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நன்றாக எழுதியுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

  ReplyDelete
 3. அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

  ReplyDelete
 4. //பேருந்தில் ஏறியதும் எல்லோருமே சில வசதிகளை எதிர் பார்ப்போம்//

  இந்த பத்தி நன்றாக இருந்தது. முடிவு தான் எனக்கு புரியவில்லை. ராமுவின் மகனா? இல்லை ராமனின் மகனா?

  ReplyDelete
 5. முடிவை நான் சொதப்பிவிட்டேன். அது எனக்கே நன்றாக தெரிகிறது. அலுவலகத்தில் வேலை இருந்ததால் போதிய கவனம் செலுத்த இயலவில்லை. வேறு மாதிரி யோசித்து இப்படி முடித்துவிட்டேன்.

  ராமன் என்றுதான் இருக்கவேண்டும். இப்பொழுது திருத்துவது தவறு. போட்டிக்காக எழுதியது. முடிவுகள் வந்ததும் திருத்திவிடுகிறேன்.

  ஆழ்ந்து படித்து தவறைத் திருத்தியதற்கு நன்றி பிரேம்.

  ReplyDelete
 6. நன்றாக உள்ளது..
  வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  //ராமன் என்றுதான் இருக்கவேண்டும். இப்பொழுது திருத்துவது தவறு. போட்டிக்காக எழுதியது. முடிவுகள் வந்ததும் திருத்திவிடுகிறேன்//

  அது எல்லாம் மாற்றல்லாம் தப்பு இல்லை மாற்றி விடுங்கள்..

  ReplyDelete
 7. இல்லங்க வினோத்...நான் முதலிலேயே அதை கவனித்து இருக்க வேண்டும். கவனக் குறைவு தான் காரணம். இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். பதிவில் இணைந்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி வினோத்.

  ReplyDelete
 8. //
  A simple man with his lots of mistakes. அட அதான்பா எழுத்துப் பிழை.
  //
  அப்படி எதுவும் எழுத்துப் பிழைகள் இல்லையே என்று தோன்றிய போது தான் கண்ணில் பட்டது, உங்கள் வலைப்பூவின் தலைப்பின் கீழுள்ள வரி "காட்சிகள்" என்பது "கட்சி" என்று வந்துள்ளது.

  ReplyDelete
 9. நன்றி Joe பிழையை திருத்திவிட்டேன். பிழை இருப்பின் இதேபோல் தவறாமல் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

  I saw you profile. சமீப காலமாக ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ள மண்டையை உருட்டிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய வலைத் தளத்தைப் பார்க்கிறேன். நன்றி Joe Anand

  ReplyDelete
 10. புழுக்கம் வேறு தேவையில்லாத எரிச்சலை சக மனிதர்கள் மீது கொட்டித் தீர்க்க எத்தனிக்கிறது.

  கோடையின் வெக்கை அவ்வளவு காலையிலும் முகத்தில் அடித்தது. சூடான காற்று சுருங்கிய தசைகளுக்கு இடையில் வெப்பத்தை ஏற்படுத்திச் சென்றது.

  இது போன்ற வாக்கியங்கள் சுவாரசியம், முடிவு கொஞ்சம் ஏமாற்றம், பின்னூட்டங்களில் தகவல்களை அறிய முடிகிறது, முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. எனக்கே அது தெரிந்து தான் இருந்தது. முடிவு சரியில்லை. ஒரு கோர்வையில்லாமல் எழுதிவிட்டேன்.

  ReplyDelete