Sunday, October 6, 2013

தங்கமீன்களும், மாலனின் தப்புக் கணக்கும்


அபிலாஷின் தங்கமீன்கள் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையின் ஆரம்ப விவரணைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. அந்த வரிகள் பின்வருமாறு:

/-- தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை என்பது.--/

படிக்க: http://thiruttusavi.blogspot.in/2013/10/blog-post.html

முதல் பத்தியின் கடைசி வரிகள் கொஞ்சம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

“ராமின் தங்கமீன்களின் ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை என்பது”

தங்கமீங்கள் திரைப்படத்தின் சிறப்பான விஷயங்களை மட்டுமே அபிலாஷ் தேடிப் பிடித்து வியந்தோதுகிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. கல்யாணி கேரக்டரைப் பற்றி மிக நுட்பமாக ஆராய்ந்து பேசும் அபிலாஷ், மேலதிகமாக மலையாள படங்களில் சிலதை எடுத்துக்கொண்டு கல்யாணியின் பாத்திர வார்ப்பு பற்றி ஓர் ஆராய்ச்சியே செய்துவிடுகிறார். அபிலாஷ் மட்டுமல்ல, பல விமர்சகர்களும் கல்யாணியை சிலாகித்து தான் எழுதுகிறார்கள். ஆனால், கல்யாணி கேரக்டருக்கு இணையான முக்கியக் கதாப்பாத்திரமான குழந்தைப் பாத்திரத்தின் பலவீனமான பாத்திர வார்ப்பைப் பற்றிப் பேசாமலேயே எல்லோரும் கடந்து விடுகிறார்கள். இந்தப் படத்தில் “தந்தை – மகள்” ஆகிய பாத்திரங்கள் தண்டவாளம் போல ஒன்றுக்கொன்று அச்சு பிசகாமல் திரைக்கதையின் மீதமர்ந்து பயணிக்க வேண்டிய கதாப்பாத்திரங்கள்.

கல்யாணியின் மகள் துருதுருவென கன்று போலச் சுற்றி வருகிறாள். இந்த அதிவேகச் செயல்பாடு “சிறுமியின் கவனத்தை சிதறச் செய்கிறதோ?” என்று யோசித்துக் கொண்டு வருகையில், “M”, “W” போன்ற ஒரே மாதிரி வடிவில் அமைந்த எழுத்துக்களை – ஆசிரியையின் சொற்படி கரும்பலகையில் எழுத முடியாமல் சிறுமி தவிக்கிறாள். ஓரிடத்தில் “M” என்ற எழுத்துக்குப் பதில் “W” என எழுதுகிறாள். அதிலிருந்து அந்தச் சிறுமியை சக மாணவர்கள் “W” என அழைக்கத் துவங்குகின்றனர். மூன்றாவது படிக்க வேண்டிய சிறுமிக்கு 7 வயது இருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது படிக்கிறாள். இரண்டாவது படிக்கும் குழந்தைக்கு எழுத்து சார்ந்த அடையாளச் சிக்கல் இருப்பது கொஞ்சம் கவனிக்கக வேண்டிய விஷயம். பிறகு கல்யாணி கதாப்பாத்திரத்தில் நடித்த “ராம்” கூட, தங்கமீன்கள் நீந்திக் கொண்டிருக்கும் குளத்தங்கரையில் “M”, “W” எழுத்துரு சார்ந்த பிரத்தியேக வகுப்பையே அந்தச் சிறுமிக்கு எடுக்கிறார். இதைக் கொண்டு ஒப்பு நோக்குகையில் அந்தச் சிறுமி “டிஸ்லக்ஷியா போன்று ஏதேனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தையா?” என்ற ஐயம் எழுகிறது. (“தாரே சமன் பார்” – அமீர்கான் தயாரித்து இயக்கிய டெஸ்லெக்ஷியா பற்றிய பிளாக் பஸ்டர் திரைப்படம் என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.)

“அதிவேகச் செயல்பாட்டல் படிப்பில் கவனக் குறைவுடன் தத்தளிக்கும் குழந்தையா?” அல்லது “(டிஸ்லக்ஷியாவால் பாதிக்கப்பட்ட) சிறப்புக் குழந்தையா?” என்ற சந்தேகத்தை, அவளுடைய கேள்வி கேட்கும் குணமும், கேள்விக்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் குணமும் வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது.

அபிலாஷ் சொல்கிறார்: /-- நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன.--/

தங்கமீன்கள் பார்த்தபோது பாலுமகேந்திராவின் குறும்படம் ஒன்று தான் ஞாபகத்திற்கு வந்தது. பத்திரிகையாளர் மாலன் நாராயணன் எழுதி தாய் இதழில் வெளியான “தப்புக் கணக்கு” சிறுகதையை சன் டிவியில் ஒளிபரப்பான பாலுவின் கதை நேரத்திற்காக குறும்படமாக எடுத்திருக்கிறார்.

சிறுகதையில் ஒரு சிறுமி (ஜனனி) தாத்தாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். ஏனெனில் அந்த பள்ளிச் சிறுமிக்குத் தாத்தாவிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. சிறுமியைப் பற்றி மாலன் பின்வருமாறு சொல்கிறார்: “ஜனனியின் கேள்விகளுக்கு பதில் சொல்வது தேன் கூட்டில் கல் வீசுவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது. சரம்சரமாய் கேள்விகள் கிளம்பும்”. (கல்யாணியின் மகளும் நிறைய கேள்வி கேட்பவள்.)

தாத்தா மட்டுமே ஜனனியின் கேள்விக்குப் பொறுமையாக பதில் சொல்வது மட்டுமல்லாது, தொடர்ந்து கேள்விகள் கேட்கும் பழக்கத்தைத் தட்டிக் கொடுப்பார். வீட்டிலுள்ள மற்றவர்கள் “கொஞ்சம் சும்மாயிரேன்மா... இப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா...” என்கிறார்கள்.

பரீட்சை பேப்பரில் “7 X 2= 14” என்று எழுதியிருப்பதற்கு - கணக்கின் குறுக்கே தவறு என சிகப்பு மையினால் கோடு போட்டு, மார்ஜின் பக்கத்தில் பூஜ்யம் மதிப்பெண்கள் போட்டிருக்கிறாள் பள்ளி ஆசிரியை.

“7 X 2= 14 தவறான விடையா?” என்பதுதான் ஜனனியின் கேள்வி. அடுத்த நாள் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு தாத்தா பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் முறையிடுகிறார்.

“இதிலே என்ன தப்பு மேடம்?”

“ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அப்படியானால் இரு வாரத்திற்கு ” 2 X7=14” என்கிறாள் ஆசிரியை.

“சரி 7 X 2= 14 என குழந்தை எழுதினால் அது தப்பா?” என்கிறார் தாத்தா.

“தப்பு தான். வகுப்பில் எப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமோ அப்படித்தான் எழுதணும். 2 X 7= 14 என்று சொல்லிக் கொடுத்திருக்கிற போது, 7 X 2= 14 என்று எழுதினால் தவறுதான்” என்கிறாள் ஆசிரியை.

“டீச்சர் இது அநியாயம்!” என பிரின்சிபால், கல்வித்துறை அதிகாரி என பிரச்சனை சார்ந்து புகார் கொடுக்கிறார் தாத்தா. கல்வித் துறை மந்திரியிடமும் புகார் செய்வதற்கு முன்பு ஜனனியின் பெற்றோர்களிடம் பேசிவிடலாம் என்று பேசிப் பார்க்கிறார்.

“டீச்சர் சொல்றது தப்பாயிருக்கலாம்பா, ஆனா அவங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே பரீட்சையில எழுதறதுக்கு இவளுக்கு என்ன கேடு?” என்கிறார் ஜனனியின் அப்பா.

“சரி, எழுத்தல்ல, அது தப்பா?” என்கிறார் ஜனனியின் தாத்தா.

“ஏன் அவ எழுத்தல்ல?” என்கிறாள் ஜனனியின் அம்மா.

“அவளையே கூப்பிட்டு கேளு” என்கிறார் தாத்தா.

“ஒரு வாரத்திற்கு ஏழு நாள். இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள்?” என்று பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வியைக் கேட்கிறார்கள்.

“ஏழு இன்ட்டு ரெண்டு இஸ் ஈக்குவல்டு பதினாலு” என்கிறாள்.

“ஏழு இன்ட்டு ரெண்டு எப்படி? ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அப்போ ரெண்டு இன்ட்டு ஏழு தானே?” என்று கேட்கிறார்கள்.

“இல்லே தாத்தா. ஒரு வாரத்துல ஒரு சண்டே, ஒரு மண்டே, ஒரு டியூஸ்டே இப்படி ஏழு நாள்... ரெண்டு வாரத்துல ரெண்டு சண்டே, ரெண்டு மண்டே, ரெண்டு டியூஸ்டே...” என்று விரல் விட்டு எண்ணுகிறாள் ஜனனி. “ஸோ... ஏழு நாள். ஒவ்வொன்னும் ரெண்டு தடவை. அதான் ஏழு இன்டு ரெண்டு...” என்கிறாள் புத்திசாலித்தனமாக ஜனனி.

“கிரேட்...” என்கிறார் தாத்தா. “இது வித்யாசமான சிந்தனை. மொத்த கிளாசும் டீச்சர் சொல்லிக் கொடுத்த மாதிரி குதிரைக்குப் பட்டைக் கட்டின மாதிரி போறச்சே, மூளைய உபயோகிச்சு நீ கணக்கு போட்டிருக்க பாரு, இது கிரியேட்டிவிட்டி! இது புத்திசாலித்தனம்!” என்று உற்சாகத்தில் பூரிக்கிறார் தாத்தா.

“சந்தோஷப் படாதிங்கப்பா... இது கவலைப் பட வேண்டிய விஷயம்” என்கிறார் ஜனனியின் அப்பா.

“என்னடா சொல்றே?” என்கிறார் தாத்தா.

“இது பெண் குழந்தை. ஞாபகம் வச்சிக்கோ. சொல்லிக் கொடுத்த மாதிரியில்லாம வேறு மாதிரி யோசிக்கிற குழந்தை, பின்னால பெரியவளானா நிறைய கேள்வி கேப்பா. இதுநாள் வரைக்கும் நடைமுறையில் இருக்கிற சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இதையெல்லாம் கேள்வி கேட்பார்கள். வித்யாசமா சிந்திக்கறதனாலையே காயப்படுவா. ஊரோட, உலகத்தோட, ஒத்து வாழாம இருந்தா அவளுக்கும் அவஸ்தை. மற்றவர்களுக்கும் இம்சை”

“அதனால..” என்கிறார் தாத்தா.

கடைசியில் “டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்களோ அப்படியே கணக்குப் போடு. அதிகப் பிரசங்கித் தனம் எல்லாம் வேண்டாம்” என்று அழுத்தமாகச் சொல்லியவாறு புறப்படுகிறார் அப்பா. கண்களில் ஈரம் சொட்ட அந்தச் சிறுமியை தாத்தா பார்க்கிறார் என்பதாக கதை முடியும்.

குழந்தைகளின் துறுதுறு தன்மையையும், கற்பனைச் சிறகுகளை முறிக்கும் கல்வி முறையையும் கொண்ட இந்தியக் கல்வி பாடத் திட்டங்களை பற்றிய போதாமையையும் நுட்பமாக பதிவு செய்திருப்பார் மாலன். சிக்கலுக்கான தீர்வு எதையும் சொல்லாமல், சிறுமிக்கு உறுதுணையாக நிற்கும் தாத்தாவை ஒரு கையறு நிலையில் சிறுகதையின் முடிவில் நிருத்தியிருப்பார். பாலு மகேந்திராவின் கதை நேரத்திற்காக இந்தச் சிறுகதையை இயக்குனர் பாலு மகேந்திரா குறும்படமாக எடுக்கும் பொழுது இன்னும் மெனக்கெட்டு சிறப்பாகச் செய்கிறார். (பாலு மகேந்திரா கதை நேரத்தில் எடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களின் திரைக்கதை வடிவத்தை புத்தகமாக வம்சி பதிப்பகம் வெளியிட்டிருகிறார்கள். குறும்படத்தின் குறுந்தகடுகளும் புத்தக இணைப்பாகக் கிடைக்கிறது. அதில் தப்புக் கணக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.)

குறும்படமானது “தாத்தா – பேத்தி” என்று விரிகிறது. தங்கமீன்கள் “அப்பா – மகள்” என்று விரிகின்றது. ஆக, “ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை” என அபிலாஷ் சொல்வது கொஞ்சம் அதிகம் தான். குறும்படத்திலேயே இந்த முயற்சி நடந்திருக்கிறது. அதனை ராம் தனது மானசீக குருவாகக் கருதும் பாலுமகேந்திரா இயக்கி இருக்கிறார். அதன் திரைக்கதை மற்றும் குறுந்தகட்டினை ராமின் ஆதர்ஷ நண்பர்களில் ஒருவரான வம்சி பதிப்பகத்தின் உரிமையாளர் பவா செல்லத்துரை வெளியிட்டிருக்கிறார்.

குறும்படத்தில் தீர்வு எதுவும் இருக்காது. தங்கமீங்களில் தீர்வு இருக்கிறது. தனியார் பள்ளியில் மக்கு போல சுற்றித் திரியும் சிறுமி, அரசாங்கப் பள்ளியில் சேர்கப்பட்டவுடன் சோபிக்கத் துவங்குகிறாள். எழுத்துரு அடையாளச் சிக்கலில் தவிக்கும் சிறுமி – கட்டுரை எழுதி முதற்பரிசு வாங்குகிறாள். பள்ளியின் ஆண்டு விழாவில் அந்தக் கட்டுரையை மேடையில் நின்றுகொண்டு வாசிக்கத் துவங்குகிறாள் என்பதுடன் படம் நிறைவு பெறுகிறது. இங்கு தான் யதார்த்தச் சிக்கல்களிலிருந்து “தங்கமீன்கள்” வழுவி நிற்கிறது.

“தங்கமீன்கள்” உணர்வு பூர்வமான கதை என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் திரைப்படமானது சிறுமியை மையமாக வைத்துச் சுழல்கிறது. அப்படியிருக்க சிறுமியின் பாத்திர வார்ப்பை மிக நுட்பமாக ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ராம் கொஞ்சம் போல சறுக்கி இருக்கிறார். “ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை” என்பதெல்லாம் அதிகபட்ச ஒப்புமையாகத் தான் இருக்கிறது. வேறென்ன சொல்ல...!

மாலனின் தப்புக் கணக்கு சிறுகதையை வாசிக்க: தப்புக் கணக்கு

2 comments:

  1. ஜனனி கேரக்டரும், தங்கமீன்கள் செல்லம்மா கேரக்டருக்கும் வித்யாசம் உண்டு.

    தப்புக்கணக்கில் ஜனனி, ஷார்ப்பான பொண்ணு மாதிரி காட்டியிருப்பார்கள். வித்யாசமாக - ஆனால் சரியாகச் சிந்திக்கும் ஒரு பாப்பா அது.

    இங்கு செல்லம்மா அப்படியில்லை. கற்பனை வளம் நிறைந்த பாப்பா. ஆனால் ஷார்ப் இல்லை. (செல்லம்மாவுக்கு கற்பனை வளம் அதிகம் இருக்கிறது. ஆனால் அறிவு வளம் இல்லை.) யாராவது வித்யாசமான கோணத்தில் சொல்லிக் கொடுத்தால் எளிதாகப் புரிந்து கொள்ளும். அதுவும் அப்பா சொன்னால் எல்லாமே சரி, அப்பா தான் அவளுக்கு ஹீரோ. அப்படிப்பட்ட கேரக்டர் வடிவமைப்பு.

    என் புரிதலில் தப்புக்கணக்கில், குழந்தைகளை வேறுபட்ட கோணங்களில் இன்றைய கல்வி முறை சிந்திக்க வைக்க முயற்சி எடுப்பதில்லை அல்லது விரும்புவதில்லை. ஸ்பூன் ஃபீடிங் கட்டாயமாக்கப்படுகிறது என்ற மாதிரியான ஒரு கோணம்.

    ஆனால் தங்கமீன்களில் சற்று மந்தமான குழந்தைக்குப் புரிவது போலப் பாடம் எடுக்க முயற்சிகள் எடுப்பதில்லை என்பது பற்றியது. அதை விட அதிகமாக, மாணவர்கள் மேல் ஆசிரியர்களுக்குச் சிறப்புக் கவனம் இருப்பதில்லை. ஆசிரியர்களால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கூட்டத்தோடு கும்மியடிக்கும்படியான கற்பித்தல் முறை இருக்கிறது என்று வலியிறுத்துகிறது.

    தப்புக்கணக்குக்கும் தங்கமீன்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை: இரண்டும் நம் பள்ளிக்கூட அமைப்பின் கற்பித்தல் முறை பற்றிப் பேசுகிறது.

    ஆனால் தப்புக்கணக்கு அதை அறிவியல் ரீதியில் அணுகுகிறது. வேறுபட்ட சிந்தனைகள் ஊக்குவிடப்படவில்லை என்பதை வலியுறுத்துகிறது. இது நம் கல்விமுறைக்கும் குழந்தைகளின் 'மாத்தி யோசி' ஆற்றலுக்கும் இடையிலுள்ள இடைவெளியைப் பற்றி அதிகம் பேசுகிறது.

    தங்கமீன்கள் அதை உணர்வு ரீதியில் அணுகுகிறது. பெரும்பாலும் ஆசிரியர்-மாணவர்கள் உறவில் இருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை எதிர்க்கிறது. செல்லம்மா மந்தமான குழந்தை தான். சிறப்புக் கவனிப்புகள் அல்லது அன்பாய் அணுகும் போது அவளால் வெற்றி பெற முடியும் என்பதையே அந்த அரசுப்பள்ளியில் பரிசு பெறும் காட்சியமைப்பு காட்டுகிறது. இது ஆசிரியர்கள் மாணவர்களைக் கையாளும் திறனுக்கும் மாணவர்களின் புரிந்துணரும் திறனுக்குமுள்ள இடைவெளி பற்றிப் பேசுகிறது.

    Same Root. But different Branch.

    - இராஜிசங்கர்

    ReplyDelete
  2. ஜனனிக்கு நான்கு வயது என மாலன் சொல்லியிருப்பார். செல்லமாவிற்கு ஏழு வயது. இந்தக் கோணத்திலும் கேரக்டர்களை அணுகலாம்.

    எனினும் படைப்பின் மைய இழை இந்தியக் கல்விமுறையின் அக்கரையில்லாத் தன்மை பற்றியது. அதனை பாலுமகேந்திராவின் குறும்படமும், ராமின் தங்கமீங்களும் வேறு வேறு கோணத்தில் அலசுகிறது.

    இந்தமாதிரி ஒரு விஷயம் இதற்கு முன் தமிழில் நடக்கவில்லை என்கிறார் அல்லவா அபிலாஷ். அங்குதான் ஐயம் எழுகிறது.

    ReplyDelete