Sunday, July 22, 2012

வெறுமனே சும்மா இருக்கிறேன்

“இப்போ என்னதான் செய்யுறீங்க?” என்ற கேள்வியை கடந்த இரண்டாண்டு காலமாகவே என்னைப் பார்க்கும் நண்பர்களும், உறவினர்களும், நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். “வெறுமனே சும்மா தான் இருக்கிறேன்” என்ற பதிலில் அவர்கள் உறைந்து போகிறார்கள். “இது பெரிய தப்பு இல்லைங்களா? பொறுப்பில்லாம இப்படி ஒன்னும் செய்யாம இருக்கலாமா?” என்ற கேள்வி அவர்களிடமிருந்து எழும் சமயம், “ஒன்றும் செய்யாமல் இருப்பது வேறு. சுற்றி நடப்பவற்றின் சாட்சியாக, வெற்றுக் கோப்பைபோல வெறுமனே சும்மா இருப்பது முற்றிலும் வேறு” என உதட்டிலிருந்து புன்னகை வழிய பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

“என்னமோ சாமியார் மாதிரி பேசுற...! இதெல்லாம் நல்லதுக்கில்ல... வயசு இருக்கும்போதே ஓடியாடி சம்பாதிச்சிடனும்” என்கிறார்கள்.

முற்றிலும் பயம் தான் இவர்களிடம் ஒளிந்திருக்கிறது. இறந்த காலத்தின் வேர்கள் பற்றி, நிகழ்காலத்தில் முளைவிடும், எதிர்காலம் பற்றிய நிச்சயமில்லா தன்மை பற்றிய பயம். “காலத்தை உணராமல் பயத்தை உண்மையில் போக்க முடியாது” – என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதனை பெரிதுபடுத்தி விவாதிப்பதற்கில்லை என்றாலும், ‘ஒன்றும் செய்யாமல்’ என்பது ‘வெறுமனே’-விலிருந்து துருவம் போல் விலகி நிற்கிறது என்பதை நம் மக்களுக்கு எதைக் கொண்டு புரிய வைக்க.

“Being Still is not the same thing as doing nothing” என ‘கராடே கிட்’ படத்தில் ஜேடன் ஸ்மித்திடம் (jaden smith) ஜாக்கிசான் சொல்வதுபோல ஓர் இடம் வரும். இந்த உன்னத தத்துவத்தை எத்தனைபேர் கவனித்திருப்போம். வாழ்வின் சாரமே இந்த ஒற்றை வரியில் தான் அடங்கியிருக்கிறது என்பது என்னுடைய எண்ணம். சில நொடிகளில் காற்றில் கரைந்து தேய்ந்துபோகும் இந்த ஒற்றை வரி தரிசனத்தை, பாறையானது அடைகாக்கும் உயிர்ப்புள்ள தேரையைப்போல வாழ்வெல்லாம் அடைகாக்க ஆசைப்படுகிறேன்.

புத்த நிலையின் நான்கில் ஒன்றை உரசத் துடிக்கும் பிக்குகளும், ஜென் துறவிகளும், சூபிகளும், சித்தர்களும், பக்கிர்களும் – இந்த ‘Being still’ என்ற சூட்சமத்தில் தானே சூல்கொள்ளப் போராடுகிறார்கள். அதில் தானே இன்பமும் இருக்கிறது.

“அதெப்படி வெறுமனே இருக்க முடியும்? போர் அடிக்காதா?” – என்ற கேள்வி இன்னும் சுவாரஸ்யம் நிறைந்தது.

இதற்கும் என்னிடம் பதிலில்லை. என்றாலும் ஆயிரமாயிரம் புதிர்களும், ஆயிரமாயிரம் திருப்பங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை. சிலசமயம் பேருந்துகளில் பார்த்ததுண்டு. விடுபட்ட கட்டங்களில் வார்த்தைகளையும், எண்களையும் இட்டு நிரப்பும் விளையாட்டை, நாற்பது வயதைக் கடந்தவர்கள் கவனம் பிசகாமல் விளையாடுவதைக் கண்டதுண்டு. ‘குறுக்கெழுத்து, சொதோகு’ – என ஏதேதோ பெயர் சொல்லி விளையாடுகிறார்கள். அவற்றையெல்லாம் விட வாழ்வின் யதார்த்தப் புதிரை எதிர்நோக்குவதும், ஆர்வத்துடன் சிக்கவிழ்ப்பதும் எவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது.

இங்கு சலிப்பானது எங்குதான் முளைவிடுகிறதோ தெரியவில்லை. “படிப்போ, பணமோ, புகழோ, வேலையோ, பெண்ணோ, சிற்றின்பமோ” – ஏதோ ஒன்றை அடைய விரும்புவது தவறில்லை. அதற்காக முக்காலத்தையும் அடகு வைக்க வேண்டுமா என்ன? சலிக்காத பயணமாகத் தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அதில் அறியப்படாத பல முகங்கள் தலை காட்டிவிட்டுச் செல்கிறார்கள். குளத்தில் எறிந்த கல்போல அவர்களின் நினைவுகள் சலனத்தை ஏற்படுத்த, சலிப்பானது ஆழம்கானா களிம்புச் சேற்றில் புதைந்து கிடக்கிறது என்று நினைக்கிறேன். இதுவரை சலிப்பின் சுவடைக் கூட என்னால் காண முடியவில்லை.

“உங்களுடைய டெய்லி ரொட்டின்ஸ் தான் என்ன?”

போதுமான அளவு சாப்பிடுவதும், தூங்குவதும் தான் பிரதானம். மீதி நேரத்தில் பயணம் செய்வேன். குறைவாக தமிழ் புத்தகங்கள் படிக்கிறேன். யாரேனும் சந்திக்க அழைத்தால் நேரில் சென்று உரையாடுகிறேன். தட்ஸ் இட்.

“தமிழ் புக்ஸ் படிச்சா என்ன பிரயோஜனம்? இங்கிலீஷ் புக்ஸ் படிச்சா நாலேஜ்-ஆவுது வளரும் இல்ல?”

உஹ்... வேதாளம் போல் தொடரும் கேள்வி இது. "அறிவானது நிம்மதியைக் கெடுத்து விடும். இயந்தர கதியில் ஓட நம்மைத் தயாற்படுத்திவிடும். ஆகவே அதனைப் பெருக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை" என சுருக்கமாக முடித்துக் கொள்ள பழகிவிட்டேன்.

"அப்போ... வாழ்க்கையில் என்ன தான் செய்வதாக உத்தேசம்?"

என்னைப் பார்த்து புன்னகை செய்பவர்களுக்கு புன்னகைக்கப் போகிறேன். என்னிடம் கைகொடுத்து பேசுபவர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசப் போகிறேன். அவ்வளவே...

"இதெல்லாம் உருப்படுறதுக்கான வழியில்லை...! நாசமா போகப்போற?" என்று சபிப்பதுபோல் அக்கறையாகப் பேசுகிறார்கள்.

நான் பள்ளி வாழ்க்கையில் சுமார். கல்லூரி வாழ்க்கையில் மிக மட்டம். இதையெல்லாம் மீறி ஏதோ நாலுபேர் நின்று அக்கறையுடன் பேசும்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் படிப்பில் தோல்வி கண்டபோதெல்லாம் "நீ ரொம்ப கஷ்டப் படப் போற... நாசமாப் போகப்போற" என்று பயத்தை விதைத்தார்கள். உணவகத்தின் எச்சில் டேபிளை தொடைக்கும் வேலைக்குத் தான் லாயக்கி என்று பரிகசித்தார்கள். அந்த நாட்களில் மன அழுத்தத்தின், உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்தேன். காலம் என்னைக் கறை தேற்றியது.

செய்யும் இடத்தின் பாப்புலாரிட்டியோ (Brand Name), செய்யும் வேலையோ நம்மை அடையாள படுத்திவிடாது. செய் நேர்த்திதான் காலம் கடந்தும் நிற்கும். அதிலுள்ள புதுமைதான் நிகழ் காலத்திலும் மெச்சப்படும் என்பது என் எண்ணம். ஆகவே, ஒரு பொதுக் கழிப்பிடத்தைக் காண்பித்து சுத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டால், என்னுடைய தன்மை மாறாமல், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல், கொடுத்த வேலையை எப்படிச் செய்யலாம் என்று யோசிப்பேன்.

மேலும், "மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாம் நல்லா வரும்போது... நமக்கு என்னங்க கொறை"... நமக்கும் நாலு நல்ல உள்ளங்கள் இருக்கத் தானே செய்யுறாங்க.

"ம்ஹூம்... ஒரு கால்கட்டு போட்டால் தான் திருந்துவன்னு நெனைக்கிறேன்?" என்கிறார்கள்.

இதென்ன கதை. கல்யாணம் என்பது மன நிறைவுடன் வாழ்வதற்குத் தானே. அதை ஏன் சிறைபடுத்தும் வைபவமாகப் பார்க்க வேண்டும்? இந்தப் பொதுப்புத்தி மிகத் தவறான வாதம். யூ பிளடி ஃபூல்ஸ்.... யூ ஹவ் டு சேஞ்ச்ஜ் யுவர் மென்டாலிட்டி...

"ஆகட்டும் பிறகு பார்ப்போம்!" என்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை? ஏன் இவர்கள் வாழ்க்கையை பணம் ஈட்டும் ஒரு வியாபாரமாகவே பார்க்கிறார்கள் என்று!

"சரி... கல்யாணமாகி ஒரு கொழந்த பொறக்கட்டும்!" என்கிறார்கள்.

அதைத் தான் நானும் சொல்கிறேன். அதது நடக்கும்போது நடக்கட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்வோம். அதுவரை நிகழ்காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியது தானே. ஒவ்வொரு நாள் கண்விழிக்கும் போதும் நினைப்பதுண்டு, "இன்றைய தினமே பூமியில் எனக்கு கடைசி தினமாகவும் இருக்கலாம்" என்று.

ஆகவே காட்டாற்று வெள்ளம் போல, சுழன்றோடும் காற்றைப் போல, வழிந்து செல்லும் மேகம் போல, சிறகடித்துப் பறக்கும் பறவைபோல... இன்னும் இன்னும் கட்டற எல்லாவற்றையும் போல இருந்துவிட்டுப் போகவே ஆசைப்படுகிறேன்... எனக்கான எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொண்டு... பாரதி சொல்வானே "விசைகொண்டு எறிந்த பந்தைப் போல" என்று அதைப் போல...

வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்ப்பது. எனவே அதன் போக்கில் வாழ்ந்துதான் பார்ப்போமே. எதிர்காலம் குறித்த தேவையில்லாத சஞ்சலங்கள் எதற்கு.

சுபம்... மங்களம்...

5 comments:

  1. வேறு யாரோ சேர்த்துவைத்த செல்வத்தில் நாம் வாழ்க்கை நடத்தும்போது இந்தத்தத்துவங்கள் எல்லாம் பேசலாம். நம்முடைய அடுத்த வேளை குவளை தண்ணீரே நாம் சம்பாதித்த காசில்தான் பெறமுடியும் என்ற நிலை இருந்தால் தத்துவம் மாறிப் போகும். ஞாநி

    ReplyDelete
  2. /-- நம்முடைய அடுத்த வேளை குவளை தண்ணீரே நாம் சம்பாதித்த காசில்தான் பெறமுடியும் என்ற நிலை இருந்தால் --/

    IT துறையில் சம்பாதித்த காசில் தான் (வங்கி சேமிப்பு) வாழ்கிறேன் ஞாநி. வேண்டுமெனில் பகுதி நேர வேலை செய்து சம்பாதித்துக் கொள்வேன்.

    மேலும் நான் சோம்பேறி அல்ல. எனக்கு விருப்பமானதை விரும்பிய படி செய்கிறேன். அதற்கான சன்மானங்கள் கிடைப்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

    /-- யாரோ சேர்த்துவைத்த செல்வத்தில் நாம் வாழ்க்கை நடத்தும்போது --/

    எனக்கு பெரிதாக சொத்துக்கள் இல்லை என்பதுதான் உண்மை. அந்த வேலையை என்னுடைய தாத்தாக்கள் எங்களுக்குக் கொடுக்கவில்லை. முழுவதும் கரைத்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார்கள். இனிமேல் கரைப்பதற்கு ஒன்றும் இல்லை.

    :-)

    ReplyDelete
  3. என்னுடைய ரோல் மாடல், அக்காவின் கணவர் வெங்கட் சொல்லுவார்... "டேய்... Everything is money & Every time is money" என்று.

    பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் தேவையில்லாதது ஞாநி. நகரத்தில் வாழும் போது அது தவிர்க்க இயலாதது. கிராமம் சார்ந்து நகரும் பொழுது அந்த அழுத்தத்தை பாதி அளவில் குறைக்கலாம். அதைத் தான் நான் செய்கிறேன்.

    என்னுடைய இருப்பு கிராமம் சார்ந்தது.

    ReplyDelete
  4. இந்த தில் இல்லாதததுதான் என் பலவீனமாக நினைக்கிறேன் பிரபு. நீங்கள் சொன்ன வரிகளை விட, அதன்பின் உள்ள யதார்த்தத்தின் வீச்சுதான் எனக்கு மிகவும் முக்கியமாக படுகிறது. பிடிக்காத வேலை தரும் சோர்வுக்கு நிகர் எதுவுமே இல்லை. உங்களது பலத்தை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  5. நன்றி பிரபா... என்னைப் பார்த்துக் கெடாமல் இருந்தால் சரி...

    :-D

    ReplyDelete