Friday, December 10, 2010

பாரதி திரைப்படம்

இன்று பாரதியின் 129-ஆவது பிறந்த நாள். சென்ற வருடம் அவருடைய பிறந்தநாளுக்கு கட்டுரைத் தொகுதிகளை வாங்கினேன். இது நாள் வரை ஒரு வார்த்தை கூட அந்த கட்டுரைகளிலிருந்து வாசிக்கவில்லை. நேற்று ராஜ் வீடியோஸ் சென்று அவருடைய வாழ்க்கை சம்பவங்கள் அடங்கிய திரைப்பட குறுந்தகட்டை வாங்கினேன். எனவே இன்று காலை 'பாரதி' திரைப்படம் பார்ப்பதென தீர்மானித்தேன்.

பாரதியின் மரண ஊர்வலத்தில் படம் துவங்கியது. அந்த நேரத்தில் பாரதி மணி எழுதிய "நிகம்போத் தில்லி சுடுகாடு" நினைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் அவரே காட்சிகளில் வந்தார். பாரதியின் தந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார். உடன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள், சாயாஜி ஷிண்டே, தேவயானி, நிழங்கள் ரவி, ஸ்ரீகாந்த் என்று எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

காணும் காட்சிகளை கண்களில் ஒற்றிக்கொள்ளும் படியாக இருந்தது தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் கேமராக் கண்களும். அதனை நேர்த்தியாக வெட்டி ஒட்டியிருந்த லெனின் மற்றும் VT விஜயனும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இசைஞானி இளையராஜாவின் இசை படைப்பிற்கு கனத்தையும், வலு சேர்ப்பதாகவும் இருக்கிறது. பசி உறக்கம் இல்லாமல் படத்தின் பாடல்களைக் கேட்கலாம்.


பாரதி போன்ற மகா கலைஞனின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது மிகுந்த சிரமத்திற்குரியது. இயக்குனர் ஞான ராஜசேகரன் சிறப்பாக செய்திருக்கிறார். திரைப்படத்தை மூன்று பேர் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். அவர்களில் எழுத்தாளர் சுஜாதாவும் ஒருவர். அவர்களுக்கும் நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

இந்தத் திரைப்பட பாடல்களில் பாரதியின் கவிதைகள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது, மகாகவியின் மரணமும் தவறாக சொல்லப்பட்டிருக்கிறது, இசை அதீதமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று பாதகமாக ஒருசில விமர்சனங்களைப் படிக்க நேர்ந்தாலும் தமிழ்த் திரைப்படங்களில் இது முக்கியமான படம். 2000-ம் ஆண்டில் தேசிய விருது பெற்ற படம். படத்தின் உருவாக்கத்திற்கு பங்களித்த பலருக்கும் தேசிய விருது பெற்றுத் தந்த படம். திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கோடி வணக்கங்கள்.

திரைப்படத்தைப் பார்க்க கூகுளே வீடியோஸ் பக்கங்களுக்கு செல்லவும்:

பாரதி திரைப்படம்

4 comments:

  1. பதிவிற்கும் பகிர்விர்க்கும் நன்றிகள்

    ReplyDelete
  2. சில நாட்களுக்கு முன்புதான் நானும் பாரதியின் கட்டுரைத் தொகுப்பை படித்தேன். மிகவும் அருமை.

    ReplyDelete
  3. Mahakavi subramania bharathiyar birth date is december 11 not december 10.

    ReplyDelete
  4. டிசம்பர் பத்தாம் தேதி டைப் செய்ய ஆரம்பித்து... டிசம்பர் 11 ம் தேதி போஸ்ட் செய்ததில் வந்த பிரச்னை கார்த்திக்.

    உங்களுடைய நுட்பமான அவதானிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி...

    ReplyDelete