Monday, December 13, 2010

கேணி சந்திப்பு - வண்ணதாசன்

உச்சிக் கிளையில் இருக்கும் தேன்கூட்டைப் பார்த்திருக்கிறீர்களா? தேனடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வழவழப்பான தேனீக்கள் தான் எத்தனை அழகு! வெயிலில் மின்னும் அந்த கரிய நிறத்திற்கு ஈடுஇணை எது? ஞானியின் வீடும் இந்த மாதம், தேன்கூட்டைப் போலவே இருந்தது. வாசற்கதவை பிடித்துக் கொண்டும், ஜன்னல் சட்டத்தில் தொங்கிக்கொண்டும், வழிப்பாதையில் சம்மனமிட்டும், சமையல் மேடையில் உட்கார்ந்துகொண்டும் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ராணித் தேனிபோல வண்ணதாசன் வந்தமர்ந்தார்.

"ஒளியிலே தெரிவது" -என்ற புத்தக வெளியீட்டுடன் சந்திப்பு நடக்க இருக்கிறது. முதல் பிரதி யாரிடம் செல்கிறது என்பது வண்ணதாசன் தான் முடிவு செய்யவேண்டும் என்று அறிமுகவுரையுடன் இலக்கிய சந்திப்பை ஞாநி துவங்கி வைத்தார்.

வழி தெரியாமல் ஞாநியின் வீட்டைத் தேடியவாறு சாலையில் நடந்து வந்தேன். என்னை நோக்கி ஒரு நபர் வந்து "நீங்கள் கேணிக்குதானே செல்கிறீர்கள் என்னுடன் வாருங்கள்" என்று இங்கு அழைத்துக்கொண்டு வந்தார். இதிலிருந்து எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டுவதில்லை. வாசகர்கள் தான் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்பது புரிகிறது. அவர் பெயர் குமார் என்று நினைக்கிறேன். என்னுடைய வாசகராகத்தான் இருக்க வேண்டும். அவருக்கு முதல் பிரதியை கொடுக்க விரும்புகிறேன் என்றதும் பெருத்த கரகோஷம். நண்பர் குமார் பரவசம் கலந்த கூச்சத்துடன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை நாடக நடிகர் பாரதி மணியும், மூன்றாவது பிரதியை எழுத்தாளர் எஸ்ரா -வும் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கல்யாண்ஜி தனது உரையைத் தொடர்ந்தார்.

எனக்கு பேசத்தெரியாது அதனால் தான் எழுத ஆரம்பித்தேன். அதிகம் பேசாமல் உங்களுடன் இருந்துவிட்டுப் போகவே வந்துள்ளேன். எழுதுபவன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனக்கு எஸ்ரா மாதிரி பேசவராது. எழுதுபவன் எழுதினால் போதும் என்பது என் எண்ணம். ஆறு, குளம், ஏரி என்று எல்லா நீர்நிலைகளும் வற்றிக்கொண்டு வருகின்றன, தாமிரபரணியை பார்ப்பதற்கு மனம் வலிக்கிறது. கேணியின் அருகில் சந்திப்பு என்றதும் ஆர்வமுடன் வந்தேன். ஏனெனில் கிணற்றிற்கும் எனக்கும் சமந்தம் இருக்கிறது. வேலையில்லாத நாட்களில் என்னுடைய அண்ணன் வீட்டு பின்வாசலில் உள்ள கேணிக்கு அருகில் வரைந்துகொண்டும், எழுதிக் கொண்டும் இருந்த நாட்கள் நினைவிற்கு வருகிறது. எழுதுபவனுக்கு ஞாபகங்கள் பெரிய சம்பத்து அல்லது அவஸ்த்தை.

சந்திப்பு உள்ளே நடப்பது ஏமாற்றமாக இருக்கிறது. வந்ததும் கேணி இருக்கும் இடத்தை சென்று பார்த்தேன். மக்கிய இலைகளும், பழுத்து விழுந்த சருகுகளும், சேரும் சகதியும் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அழுகின சருகும் அழகுதானே. சந்திப்பு பின்புறம் ஏற்பாடாகி இருந்தாலும் நீங்கள் ஆர்வமுடன் அங்கு அமர்ந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். குறுக்கும் நெடுக்குமாக செல்லக்கூடிய பல வண்ணக் கொடிகளும், ஈரத் துணியின் வாடையும் கவரக்கூடிய விஷயங்களாக இருக்கிறது. கிரா பேசிய வார்த்தைகள் கேணிக்கு அருகில் உதிர்ந்து கிடக்கிறது. அவற்றை பொருக்கி எடுத்துச்செல்லவே வந்திருக்கிறேன். எல்லோரும் வருவதற்கு முன், இந்த அறையில் பத்தமடை பாயை விரித்திருந்தார்கள். எவ்வளவு அழகாக இருந்தது. அந்த கோரைப்பாயின் வாசனை கூட எனக்குத் தெரியும்.

1962 ஏப்ரல் மாத வெயில் காலத்தில் ஆரம்பித்து, இதோ இந்த குளிர் காலம் வரை நிறைய தூரம் வந்துவிட்டேன். முதன் முதலாக என்னுடைய படைப்பை வாசித்துவிட்டு நம்பிராஜன் என்ற வாசகர் வீடுதேடி வந்திருந்தார். அதிலிருந்து எவ்வளவு தூரம் வந்துவிட்டேன். முதலில் அஃகு பரந்தாமன் என்னுடைய படைப்பை வெளியிட்டார். இப்பொழுது சந்தியா நடராஜன் வரை எவ்வளவு தூரம் வந்துவிட்டேன். உண்மையில் அத்தனை தூரம் நெருங்கி இருக்கிறேன் அல்லது இன்னும் நெருங்க நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுப்பதை எடுத்துக் கொள்கிறேன். அதற்கு பதிலாக என்னிடம் இருப்பதை உங்களுக்குக் கொடுக்கிறேன். என்னிடம் இருப்பது எழுத்தாக இருக்கிறது. அதன் மூலம் உங்களிடம் நெருங்க விரும்புகிறேன்.

சில தினங்களுக்கு முன் ரமணாஸ்ரமம் சென்றிருந்தேன். நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. என்னுடைய முதல் திருவண்ணாமலை பயணம் அதுதான். மழை சந்தோஷத்தையோ அல்லது துக்கத்தையோ நமக்குத் தருகிறது. பகுத்தறிய முடியாத உணர்வுடன் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தேன். அமைதியான இடம் இருட்டாக இருந்தது. என்னைச் சுற்றிலும் எல்லோரும் மெளனமாக இருக்கிறார்கள். இருள்திட்டில் எல்லாமே மெளனமாக இருக்கிறது. எழுத்தாளர்கள் நினைப்பதுபோல எல்லோருடையை மௌனத்தையும் நான் வாங்கிக்கொள்கிறேன். அதனால் நான் தான் அதிக மௌனியாக இருந்தேன். திடீரென்று மயிலின் குரல் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த சப்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. "ஆசிரமத்தின் அந்த மூலையில் மயில் இருக்கிறது, இந்த மூலையில் இருக்கிறது" என்று உடன் வந்தவர்கள் கூறினார்கள். மயில் சப்தம்தான் எனக்கு மயிலானது.

உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அங்கு சந்தித்த எவ்வளவோ முகங்கள் நினைவிற்கு வந்து செல்கிறது. அதிலும் வயதானவர்களின் மௌனம் எத்தனை அழகுடையது. ஓவியனாக இருந்திருந்தால் அந்த முகங்களை வரைந்திருப்பேன். அனைவரையும் கடந்து வரும்பொழுது, ஒரு வயோதிக திபெத்திய மனிதர் வழியில் அமர்ந்திருந்தார். ஒரு நாகலிங்கப் பூவை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் கவனம் வேறெதிலும் செல்லவில்லை. மெளனமாக பூவையே பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையுமே பார்த்தவர்தான் அப்படி உட்கார்ந்திருக்க வேண்டும். அல்லது எதையுமே பார்க்காதவர் தான் அப்படி மௌனித்திருக்க வேண்டும். அவரை கடந்து செல்லும் பொழுது கையிலுள்ள பூவை என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர் என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு அவரை நெருங்கினேன். திபெத்திய மௌனியின் கையில் பூ இல்லை. யாரோ அவரிடமிருந்து வாங்கிச் சென்றிருக்க வேண்டும். அல்லது மௌனியே யாருக்காவது கொடுத்திருக்க வேண்டும். ஒரு ஜன்னல் ஓரத்தில் கூட பூவை அவர் வைத்திருக்கலாம். [இங்கு பேச்சு தடைப்பட்டு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். சுற்றிலும் மௌனம் நிலவியது.]

இந்த மௌனம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் வீட்டில் நிறைய ஜன்னல்கள் இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த வெளிச்சம் ஏதாவதொரு ஜன்னலில் கிடைக்கலாம். எனக்கு அதுபோன்ற வெளிச்சம் கிடைப்பதாகத் தெரியவில்லை.

ஒருநாள் காலை சாலையில் சென்றுகொண்டிருந்தேன். இருசக்கர வாகனத்தில் குழந்தையை அமர்த்திக் கொண்டு ஒரு பெண் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். சீருடை அணிந்த குழந்தைகள் வேறெதையும் பார்ப்பதில்லை. குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல செல்கிறார்கள். அவர் வண்டியை ஒட்டிக்கொண்டு செல்லவில்லை. தள்ளிக்கொண்டு சென்றார். வழியெல்லாம் பன்னீர்ப் பூக்கள் பரவிக் கிடந்தன. என்னைக் கடக்கும் பொழுது "எப்பா எவளோ பூ!" என்ற வார்த்தையை அந்தப் பெண்மணி உதிர்த்தார். அந்த வார்த்தைகளை யாருக்காக அவள் சொன்னால். என்னிடமா? குழந்தையிடமா? அல்லது அவளுக்கே சொல்லிக் கொண்டாளா?... அதுபோலத்தான் என்னுடைய எழுத்துக்களும்.

சென்னை, தூத்துக்குடி, பாபநாசம், திருநெல்வேலி என்று எத்தனையோ இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். அங்கெல்லாம் எத்தனையோ மனிதர்கள் என்னை பாதித்திருக்கிறார்கள். பாரம் சுமப்பவர்கள் எழுத்தாளர்களுக்கு நிறைய சொல்லுவார்கள். எழுத்தாளர்களின் முகம் அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய வலியை தோழமையுடன் பகிர்ந்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் எழுத ஓர் ஆயுள் போதாது. படித்த கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை.

என்னுடைய இளம்சூடான சாராயத்தை
அப்படியே வாங்கிக்கொள்ளுங்கள்
தயவுசெய்து வேறு
குவளைகளில் மாற்றிவிடாதீர்கள்
நுரைகள் உடைந்துவிடும்...

என்னுடைய படைப்புகளையும் இளம் சூடான சாராயம் போல கோப்பைகளில் தருகிறேன். தயவு செய்து அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஒருசில கேள்விகள்:

1. வண்ணதாசன் - பெயர்க்காரணம் சொல்லுங்களேன்?
வல்லிக்கண்ணன் அப்பாவிற்கு கடிதம் எழுதுவார். அவரின் மேல் மிகுந்த ஈடுபாடு எங்களுக்கு. அவரின் நினைவாக இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன். வேறெதுவும் இல்லை. முதலில் என்னுடைய அண்ணன் தான் இந்தப் பெயரில் எழுதினர். அவரிடமிருந்து நான் திருடிக்கொண்டேன். தொலைத்ததை இன்னும் அவர் தேடிக் கொண்டிருக்கிறார்.

2. கவிதைக்கு கல்யாண்ஜி என்ற பெயரில் எழுதுகிறீர்களே?
என்னுடைய பெயர் கல்யான் சி {தி.க. சிவசங்கரன்}. அதனை கல்யாண்ஜி என்று வைத்துக்கொண்டேன். வார்த்தை லயத்திற்காக அப்படி மாற்றிக் கொண்டேன்.

3. நீங்கள் கதை, கவிதை என இரண்டு தளங்களிலும் இயங்குகிறீர்கள். ஒரு சம்பவம் எப்படி கதையாகவோ கவிதையாகவோ உருப்பெறுகிறது?
இதற்கு முன் தீர்மானம் எதுவும் இல்லை. ஒருவரை திடீரெனப் பாடும் படிக்கேட்டால், அவருக்கு அடிக்கடி நினைவிற்கு வரும் பாடலைத் தானே பாடுவார். அப்படி இல்லாமல் யாராவது பாடும்படிக் கேட்டால் இந்தப் பாடலைத் தான் பாட வேண்டும் என்று முன் தீர்மானத்துடன் பாடுவதில்லையே. அதுபோலத்தான் எழுத்தும். உள்ளிருந்து தானாகவே வெளிவர வேண்டும். அது அந்த நேரத்தைப் பொறுத்தது.

4. விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
அந்த மாதிரி எதுவும் வருவதே இல்லையே...வந்தால் தானே அதைப் பற்றி சொல்ல முடியும்.

5. படைப்பாளிக்கு ஞானச்செருக்கு இருக்க வேண்டுமா?
ஞானம் இருப்பவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஜெயகாந்தன் சொல்லலாம். அவருக்கு இருக்கிறது. எனக்கு இல்லை.

6. உங்களுக்கு இணையப் பக்கங்கள் இருக்கிறதே... இணையத்தில் கிடைப்பதை வாசிக்கிறீர்களா?
சில பக்கங்களை அடிக்கடி வாசிப்பேன். எப்பொழுதாவது சில பக்கங்களுக்கு சென்று வந்துவிடுவேன். மற்றபடி இணையத்தில் தீவிரமாக இயங்க விருப்பமில்லை. நேரம் விரயம் ஆகிறது. அந்த நேரத்தில் ஒரு கதையை எழுதிவிடுவேன். 40 வருடங்களுக்கும் மேலாக எழுதிவிட்டேன். அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இணையம் கடந்த 10 வருடத்தில் வந்தது தானே. என்னுடைய பக்கங்களை வேறொருவர் பதிவிடுகிறார். நம்முடைய வேலையை மற்றவர் செய்தால் மகிழ்ச்சி தானே. செய்யட்டுமே. :-)

7. எது இலக்கியம்?
நீங்கள் எதை இலக்கியம் என்று நினைக்கிறீர்களோ அதுவே இலக்கியம்.

8. "மதினி, பெரியம்மா" போன்ற உறவுப் பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறீர்களே?
தயவு செய்து உறவுப் பெயர்களை சொல்லிப் பழகுங்கள். வார்த்தை பயன்படுத்த பயன்படுத்தத் தான் மொழி கூர்மை அடையும். கிரா, நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் போன்றவர்களை விடவா மொழிக்கு நான் செய்துவிட்டேன்.

இதைத் தவிர மேலும் பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவையெல்லாம் அரசியல், பெண்ணியம், புரட்சி, நாட்டுநடப்பு, சினிமா பற்றிய தேவையில்லாத கேள்விகளாக இருந்தன. அவையெல்லாம் கல்யாண்ஜிக்கு சமந்தப்பட்ட கேள்விகளாகவும் எனக்குத் தெரியவில்லை. எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக கலந்துரையாடலை நிறைவு செய்தார்கள்.

எடுத்துச் சென்ற புத்தகத்தில் கல்யாண்ஜியிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன், எஸ்ரா, பாரதிமணி, சங்கர் நாராயணன், வேணுவனம் சுகா, பாலபாரதி, பட்டர் ஃபிளை சூர்யா, நிலா ரசிகன், வேல்கண்ணன், உழவன், அடலேறு, வெங்கட் ரமணன், முத்துச்சாமி, பிரபா, நடிகர் சார்லி, நடிகை பாத்திமா பாபு போன்ற பலரையும் சந்திப்பில் பார்க்க முடிந்தது. பலரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கேணிக்கு வந்திருந்தார்கள்.

வண்ணதாசன் கேணி இலக்கிய சந்திப்பு - ஒலி வடிவில்

தொடர்புடைய இதர பதிவுகள்:
1. வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்! - பாலபாரதி

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3.
அடுத்த மாதம் கேணிக்கு தமிழிசை மற்றும் மரபு பற்றி சந்திப்பு நடைபெறும். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

21 comments:

  1. நல்ல தொகுப்பு கிருஷ்ணா.. ஒவ்வொரு மாசமும் நீங்க போயிட்டு வந்து எழுதும்போது நாம கேணிக்கு வர முடியலையேன்னு ரொம்ப ஏக்கமா இருக்கு.. ஒரு தரமாவது வரப்பாக்கணும்.. ஹ்ம்ம்..

    ReplyDelete
  2. பரவாயில்லை. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு..! :)))

    அனேக விஷயங்களை தொட்டு விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
    --

    வண்ணதாசனின் தகப்பனார் பெயர். தி.க. சிவசங்கரன். தவறுதலாக //{திக சிவசுந்தரம்}.// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சரி செய்யவும்.

    நன்றி!

    பாலா

    ReplyDelete
  3. கேணிக்கு வர இயலாத சூழல், மதுரைக்கு உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு இப்போதுதான் வந்தேன். உங்கள் பதிவு கூட்டத்திற்கு வர முடியாத குறையை ஓரளவு போக்கிவிட்டது. நன்றி கிருஷ்ணா.

    இலக்கியம் சினிமாவைப் போல என்று அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். வண்ணதாசன் தமிழ் மக்கள் அனைவரும் அறியக் கூடிய பெயராக வேண்டும் என்பது என் ஆசை. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா

    ReplyDelete
  4. நன்றி கிருஷ்ணா.நேர்த்தியா தொகுத்து இருக்கீங்க.

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு கிருஷ்ணா

    நன்றி கிருஷ்ணா

    ReplyDelete
  6. //ஞானம் இருப்பவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஜெயமோகன் சொல்லலாம். அவருக்கு இருக்கிறது. எனக்கு இல்லை.// அவர் சொன்னது ஜெயகாந்தன். வரலாறு ரொம்ப முக்கியம் கிருஷ்ணா. :)))

    ReplyDelete
  7. @ கார்த்திகை பாண்டியன், லேகா, ராம்ஜி யாகூ

    பின்னூட்டத்திற்கு நன்றி... நேரம் இருந்தால் கேணிக்கு வந்து செல்லுங்கள். அருமையாக இருக்கும்.

    ReplyDelete
  8. @ யெஸ்.பாலபாரதி

    பிழையைத் திருத்திவிட்டேன். நன்றி பாலு...

    ReplyDelete
  9. @ உமா

    உங்களுடைய எண்ணமே என்னுடையதும்...

    ReplyDelete
  10. //அவையெல்லாம் அரசியல், பெண்ணியம், புரட்சி, நாட்டுநடப்பு, சினிமா பற்றிய தேவையில்லாத கேள்விகளாக இருந்தன.//
    உங்களுக்கு தேவையில்லாத கேள்வின்னு நீங்க நினைக்கலாம், அதுனால அதையெல்லாம் பதிவு செய்யாம விடலாம். அதெல்லாம் உங்க விருப்பம். தப்பேயில்ல. ஆனா ஒரு படி மேல போய்
    //அவையெல்லாம் கல்யாண்ஜிக்கு சமந்தப்பட்ட கேள்விகளாகவும் எனக்குத் தெரியவில்லை// அப்படின்னு சொல்றீங்களே, அதான் புரியல. அதுல பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் சொன்னதுலேர்ந்து கல்யாண்ஜியே அதெல்லாம் தனக்கு சம்பந்தமில்லாதது அப்படின்னு நினைக்கலைன்னு தோணுது. அப்படி இருக்க, நீங்க எதுக்கு நடுவுல இப்படி ஒரு ஸ்வீப்பிங்க் ஸ்டேட்மெண்ட் கொடுக்கறீங்கன்னு புரியலை.

    ReplyDelete
  11. /--உங்களுக்கு தேவையில்லாத கேள்வின்னு நீங்க நினைக்கலாம், அதுனால அதையெல்லாம் பதிவு செய்யாம விடலாம்.--/

    மறதியும் ஒரு முக்கிய காரணம்... நினைத்துப் பார்த்தால் பல கேள்விகள் தேவையில்லாததாகத் தான் படுகிறது லக்ஷ்மி. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லவே இல்லை...

    ReplyDelete
  12. /-- கேள்விகளுக்கு பதில் சொன்னதுலேர்ந்து கல்யாண்ஜியே அதெல்லாம் தனக்கு சம்பந்தமில்லாதது அப்படின்னு நினைக்கலைன்னு தோணுது. அப்படி இருக்க, நீங்க எதுக்கு நடுவுல இப்படி ஒரு ஸ்வீப்பிங்க் ஸ்டேட்மெண்ட் கொடுக்கறீங்கன்னு புரியலை... --/

    சில கேள்விகள் எழுந்தபொழுது கல்யாண்ஜி சிரித்துக் கொண்டே ஞாநியின் காதைக்கடித்தார் என்று எழுதியிருக்கலாம்... கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டேன்...

    To be frank... இந்த இடத்தில் என் மீது கொஞ்சம் தப்பு இருப்பதை ஒத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  13. அருமையான தொகுப்பு கிருஷ்ணா.

    வாழ்த்துகள்.

    இந்த பதிவை முகப்புத்தகத்தில் பதிகிறேன்.

    ReplyDelete
  14. ஒஹ்... Facebook - முகப்புத்தகம்... ஹ ஹ ஹ ஹா நன்றி சூர்யா..

    ReplyDelete
  15. கிருஷ்ணா... கிருஷ்ணா...
    அருமையாக எழுதிட்ட, அப்படியே அவர பேச கேட்பது போலவே இருக்கு. ம்ச்... ஐ மிஸ் கேணி மறுபடியும்.... :-(

    ReplyDelete
  16. இப்பொழுதுதான் கேணி ஒலி வடிவம் கிடைத்தது... கேட்டுப்பார் முரளி...

    http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_keni_17.php

    ReplyDelete
  17. அருமை பிரபு. நன்றி

    ReplyDelete
  18. ஹலோ கிருஷ்ணா,
    இது வரை நான் உங்களுக்கு (மின்) கடிதம் எழுதவில்லையே தவிர கேணி கூட்ட விவரங்களுக்காக உங்கள் வலைப்பதிவை favourite-ல் பதித்து வைத்திருக்கிறேன்.
    இதற்கு முன்னால் பல (இலக்கிய) பிரபலங்கள் இந்த கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தாலும் இந்த டிசம்பர் கூட்டம் என்னைப்பொறுத்தவரை ஒரு special.
    ஏனெனில்...இந்த தடவை வண்ணதாசன்!
    இவர் நிறைய பேரின் மன மிருது பக்கங்களை தொட்டு, உறவுகளை, நுட்பமான கணங்களை, நியாபகப்படுத்தி இருப்பார் என்பது எனக்கு தெரியும்,
    அவருடனான இந்த சந்திப்பை மிக பொறுப்பாக வெளிப்படுத்தியமைக்கு எனது தாழ்மையான நன்றிகள்!

    முக்கியமாக வண்ணதாசனின் குரலை அந்த ஒலிப்பதிவில் கேட்டது - மன நிறைவைத்தந்தது!
    பின்ன, நீங்கள் நிறைய மதிக்கும் ஒருத்தரின் குரலை முதல் தடவை கேட்டால் எப்படி இருக்கும்!
    குரல் எதிர்பார்த்தது மாதிரி தான் இருந்தது...(Prince Charles குரலைக்கேட்டு இருக்கிறிர்களா...உருவத்திற்கும் குரலுக்கும் சுத்தமாய் சம்பந்தம் இருக்காது!).
    வண்ணதாசனின் சிறுகதைகளில் மிக கவர்ந்து, அனேகமாக அனைத்து வரிகளும் நியாபகத்தில் இருப்பவை - "நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்",
    "உப்பு கரிக்கிற சிறகுகள்" (கடைசி வாக்கியம்...speechless)
    இதுவரை படிக்கவில்லையென்றால், சிபாரிசு செய்கிறேன்.

    இந்த மாதிரி கேணி, ஜெயமோகன் ஜமா போன்ற எழுத்தாளர்களும் எழுதாதவர்களும் (அடிக்கடி) சந்திக்க சந்திப்புகள் - இந்தியா திரும்பி வந்து விட மேலும் தீவிர காரணங்களாக எனக்குப்படுகிறது!
    ஒரு சில வெளி நாடு வாழ் வாசக நண்பர்களுக்காகவாது இந்த மாதிரி தோன்றி இருக்கும் என நினைக்கிறேன்!

    இந்த தடவை சென்னை வரும் போது சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் சேர்ந்து விட்டீர்கள்!
    நன்றி பல!

    Essex சிவா

    ReplyDelete
  19. நிச்சயம் சந்திக்கலாம் நண்பரே...

    ReplyDelete
  20. 1962 ஏப்ரல் மாத வெயில் காலத்தில் ஆரம்பித்து, இதோ இந்த குளிர் காலம் வரை நிறைய தூரம் வந்துவிட்டேன். - வண்ணதாசன்

    2012'டன் வண்ணதாசன் சிறுகதை எழுத வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. அதை முன்னிட்டு மதுரையில் 'அந்நியமற்ற நதி' என்ற நிகழ்வு நடந்தது. வண்ணதாசனின் உரையை அன்று கேட்க முடிந்தது.

    கேணி நிகழ்வை நன்றாகத் தொகுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete