Saturday, November 27, 2010

கேணி - ஓவியர் சந்திப்பு

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." - மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லரின் இந்த கூற்று முற்றிலும் உண்மை என்பதை மனோகர் தேவதாஸின் கேணி சந்திப்பில் உணர்ந்தேன்.

நாம் உண்ணும் உணவின் சக்தியில் நிறைய கலோரியை கண்பார்வைக்குத் தான் செலவிடுகிறோம். இருந்தும் நம்முடைய பார்வைத் திறன் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் அவற்றை நிவர்த்தி செய்தாலும், மனிதனுடைய கண்டுபிடிப்புகளுக்கு சவால் விடக்கூடிய குறைபாடுகளும் இருக்கத்தானே செய்கிறது. அவற்றில் ஒன்று தான் "ரெட்டினைட்டிஸ் பிக்மன்டோஸா (Retinitis pigmentosa)". தீர்க்க முடியாத இந்த பார்வைக் குறைபாட்டிற்குச் சொந்தக்காரர் மனோகர் தேவதாஸ். அதனை பொருட்படுத்தாமல் அவர் நம் சமூகத்திற்கும், பாரம்பரியத்திற்கும் - ஓவியமாக, புத்தகமாக, கலை வடிவாக செய்திருப்பது ஏராளாம். அந்த பணிகளின் மூலம் சாதித்ததும், கொடுத்ததும், கொடுத்துக் கொண்டிருப்பதும் ஏராளம்... ஏராளம்...

30 வயது வரை கண் பார்வை இருந்து, அதன் பிறகு இல்லாமல் போவது சகிக்க முடியாதது. அதுவும் ஓர் ஓவியனுக்கு இந்த நிலைமை என்பது கொடூரமானது. அ முத்துலிங்கத்தின் 'இருளில்' என்ற கட்டுரை பார்வை இல்லாதவர்களின் விசித்திர உலகை மனக் கண்ணில் நிறுத்துபவை. கட்டுரையை முழுவதும் வாசித்துவிட்டு மனோகருடன் கைகோர்ப்பது நல்லது.

இருளில் - அ முத்துலிங்கம்

தந்தையின் மருத்துவ வேலை காரணமாக மனோகரின் பால்ய வயதில் மதுரைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். அவருடைய சிறுவயது மதுரை அனுபவங்கள் அழகியல் நிரம்பியது. 50 வருடங்களுக்கு முந்தைய மதுரையை அவர் ஓவியமாக வரைந்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பவை. முறையாக யாரிடமும் ஓவிய கலையைக் கற்று கொண்டதாக அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

அவருடைய நண்பர்களுக்கும் ஓவிய நுணுக்கம் என்பது சிறு வயதிலேயே சுயமாக அமைந்திருக்கிறது. கல்லூரி பேராசிரியராக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் மனோகரின் இளவயது ஆசை. புற்று நோயால் தந்தை இறக்கவும், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராக சேர்ந்திருக்கிறார். நிறுவன மேலாளர்களுக்கு மனோகரைப் பிடித்துவிடவும், கம்பெனியே ஆறு மாத பயிற்சிக்காக மனோகரை மேல் நாட்டிற்கு அனுப்பி இருக்கிறது. கல்யாண சந்தையில் அவருடைய மதிப்பு உயர்ந்து மஹிமா கிடைக்க அதுவே காரணமாக அமைந்திருக்கிறது. நுண்கலை படித்த மஹிமா வாழ்க்கை துணையாகக் கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். கல்யாணத்திற்குப் பிறகு வேலையை உதறிவிட்டு படிப்பதற்காக சில ஆண்டுகள் வெளிநாடு சென்றிருக்கிறார். அவருடன் சென்ற மஹிமா 'கலை மற்றும் கலாச்சார மைய'-த்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். பல நாட்டு நண்பர்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள். இடையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. சொந்த நாட்டிற்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் தோன்றவே நண்பர்களின் வற்புறுத்தலையும் மீறி வாய்ப்புகள் இருந்தும் இந்தியாவிற்குத் திரும்பி இருக்கிறார்கள். வேலை செய்த பழைய நிறுவனத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.

நாட்கள் மகிழ்ச்சியாக சென்றிருக்கிறது. சென்னையிலுள்ள மஹிமாவின் வீட்டிலிருந்து மதுரைக்கு மனோகர், அவருடைய அம்மா, மகள் சென்றிருக்கிறார்கள். மஹிமாவே கார் ஓட்டியிருக்கிறார். எதிர்பாராமல் நடந்த விபத்து அவர்களுடைய வாழ்க்கையையே திருப்பிப் போட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் என்றாலும் மஹிமாவின் முதுகுத்தண்டில் அடிபட்டு கழுத்துக்குக் கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாத நிலை. ஓரிரு வருடத்தில் மனோகருக்கும் வலக் கண் மையப் பார்வையில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. பார்வைக் குறைபாடு வேகமாக அதிகரித்திருக்கிறது.

மஹிமாவோ படுக்கையை விட்டு நகர முடியாத நிலை. மனோகருக்கோ தீர்க்க முடியாத பார்வைக் குறைபாடு. அது அடுத்த கண்ணிலும் பரவக் கூடிய அபாயம் இருக்கிறது. அதற்குள் தங்களது வாழ்நாளுக்குத் தேவையான பொருளினை ஈட்ட வேண்டிய கட்டாயம்.

பார்வையை முழுவதும் இழப்பதற்கு முன்பு, மதுரையை பற்றிய நினைவுகளை புத்தகமாகவும், மதுரை வீதிகளையும், கோவில் மற்றும் கட்டடங்களை கருப்பு வெள்ளை ஓவியமாகவும் வரையுமாறு மஹிமா கேட்டிருக்கிறார். வரைந்த படங்களை மகிமாவே படுக்கையில் இருந்தவாறு வியாரம் செய்திருக்கிறார். பார்வை நன்றாக இருந்த பொழுது வரைந்ததைக் காட்டிலும், கண்ணில் கோலாரினை வைத்துக் கொண்டு மகிமாவுன் பேசிக்கொண்டே வரைந்த ஓவியங்கள் அதிகம், தரமும் முன்பிருந்ததை விட அதிகம் என்று சொல்லிய போது ஆச்சர்யமாக இருந்தது. ஆதர்ஷ்ய தம்பதிகள் என்ற வார்த்தையின் அர்த்தமும் உரைத்தது.

30 வருடம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெரும் பொழுது கிடைத்த ரொக்கம் 3.5 லட்சம். மஹிமாவுன் இருக்க நேர்ந்த ஓய்வு காலத்தில் வரைந்த ஓவியம் மூலமாகவும், எழுதிய புத்தகம் மூலமாகவும் கிடைத்த பணம் 38 லட்ச ரூபாய் என்றார். அந்த பணம் முழுவதும் சங்கர நேத்ராலயா, ஸ்ரீ அரவிந்தர் கண் மருத்துவமனை போன்ற அறக்கட்டளைக்கு ஏழை மக்கள் பயனடையுமாறு மனோகர் தம்பதியினர் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். (நீங்கள் வாங்கும் மனோகரின் ஓவியமோ, வாழ்த்து அட்டையோ, புத்தகமோ எதுவாக இருப்பினும் அதன் மூலம் கிடைக்கும் பணம் நேரடியாக ஏழை மக்களுக்குச் செல்கிறது. அதற்காக நிச்சயம் வாங்க வேண்டும் என்று கோஷம் போடவில்லை). மஹிமாவின் மீதான மனோகரின் காதல் பரவசமானது. சலித்துப் பார்த்தால், அவர் பேசிய கோர்வையான வாக்கியங்களின் தொடக்கத்திலும், முடிவிலும் மஹிமா என்ற பெயர் இருக்கும். ஒரு வட்டத்தின் மையம் போல அவருடைய மனைவியின் ஞாபகத்தை அழுத்தமாக இருத்தி முழு உரையைப் பேசி முடித்தார்.

கேணியில் அவர் பேசிய 3 மணி நேரத்தில் 'மஹிமா' என்ற பெயரை நூறு முறைக்கு மேல் உச்சரித்திருப்பார். கல்யாண நிச்சயம் ஆனது முதல், மஹிமா இறந்தது வரை வரையப்பட்ட பல ஓவியங்களையும் காண்பித்தார். தொடர்புடைய பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தேவையான பொழுது ஞாநியிடன் உதவி கேட்டு, மடிக்கணினியை அவர் உபயோகித்த விதம் ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு கேள்விக்கான பதில் எனக்கு சுவாரஸ்யம் நிரம்பியதாக இருந்தது. ஒவ்வொரு உலகியல் அனுபவத்திலும் அவருடைய மனைவியை எப்படி நினைவு கூர்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் பதிலாகவும் அது அமைந்தது.

புழு, பட்டாம் பூச்சியாக மாறும் விதத்தை குழந்தைகளுக்கு அனுபவபூர்வமாக கற்பிப்பதர்க்காக அவருடைய மகள், தேவையான இலைகளுடன் ஒரு பட்டாம் பூச்சி முட்டையிலிருந்து வெளியில் வந்த புழுவை பாட்டலில் வளர்த்தாராம். இலைகளை சாப்பிட்டு வளர்ந்த கூட்டுப் புழு முழுமையான வடிவம் பெற்று ஒரு நாள் வெளிச்சத்தை நோக்கிப் பறந்து சென்றதாம். என்னுடைய மஹிமாவும் அப்படித்தான். படுத்த படுக்கையில் சுமக்க முடியாத பாரங்களை சுமந்தாள். அவளுக்கான நேரம் வந்ததும் ஒரு பட்டாம் பூச்சியைப் போல வெளிச்சத்தை நோக்கி பறந்து விட்டாள் என்ற போது அவருடைய முகம் பூவைப் போல மலந்தது. அவருடைய உதடசைவில் மீசை கூட பறக்கத் துடிக்கும் பட்டாம் பூச்சி போலவே இருந்தது.

'இருட்டு என்பதே குறைந்த வெளிச்சம்' என்று எங்கோ படித்த ஞாபகம். குறைந்த வெளிச்சத்தையும் காண முடியாத நிலையிலுள்ள ஓர் ஓவியனை சந்திக்க இருப்பது பரிதாபத்திற்குரியது என்ற எண்ணங்களுடனே மனோகரை சந்திக்க கேணிக்குச் சென்றிருந்தேன். திரும்பும் பொழுது மனோகரின் 'எனது மதுரை நினைவுகள்' நாவலில் வரும் ஜித்தன் சாட்டர்ஜியின் மனநிலையுடன் எனது மனநிலை ஒத்திருந்தது. நாவலில் சாட்டர்ஜி சொல்லியவை...

"மிஸ்டர் மனோகர், நான் உங்களைப் பார்த்துப் பரிதாபப் படவே இல்லே. ஒரு விதத்தில் உங்களைக் கண்டு பொறாமைப் படறேன்னு சொல்லலாம்."

நீங்கள் கூட மனோகருடன் உரையாட நேர்ந்தால் நிச்சயம் பொறாமைப்படுவீர்கள். பொறாமை என்பது இத்தனை சந்தோஷத்தைத் தரக்கூடிய சிறந்த, அழகான விஷயம் என்பதை முதன் முறையாக, அந்த அழகான மாலையில் உணர்ந்தேன். அப்பொழுது ஹெலன் கெல்லரின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன்.

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." - Helen Keller

மனோகர் தேவதாசைப் பற்றிய இதர பதிவுகள்:
1. வாழ்க்கையல்ல... வேதம்! - எழுத்தாளர் ரவிபிரகாஷ்
3. எனது மதுரை நினைவுகள் - மனோகர் தேவதாஸ்
4.
கேணி சந்திப்பு - பிரபாகரன்

கேணியின் அடுத்தடுத்த சந்திப்புகள் பற்றிய விவரம்:

டிசம்பர் - எழுத்தாளர் வண்ணதாசன்.
ஜனவரி - தமிழிசை மற்றும் தமிழிசை மரபு பற்றி
பிப்ரவரி - கர்னாடக சங்கீதக் கலைஞர் TM கிருஷ்ணா

பின் குறிப்பு:
1. நீண்ட நாள் கழித்து எழுதுவதால் ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.,
2. Multiple Facets Of My Madurai, Green Well Years, A Poem To Courage, Dreams, Seasons And Promises, எனது மதுரை நினைவுகள் போன்ற புத்தகங்கள் விலைக்குக் கிடைக்கிறது.
3. புத்தக விற்பனையில் கிடைக்கும் பணம் கண்மருத்துவ மனைகளுக்கு நன்கொடையாக அளிக்கப் படுகிறது.
4. East West Books (madras) Pvt Ltd மற்றும் கண்ணதாசன் பதிப்பகத்தில் இவருடைய புத்தகங்கள் கிடைக்கிறது.

5 comments:

  1. நன்றி கிருஷ்ண பிரபு. உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதா...தெரியவில்லை.
    அற்புதமான ஒரு சந்திப்பை இவ்வளவு அழகாக வடித்துக் கொடுத்திருக்கிறீர்கள்.
    தனியாகக் கேணீ கூட்டங்களுக்கு வர முடியவில்லை. அதனால் முடிந்தவரை நீங்கள் ஒவ்வொரு சந்திப்பையும் பதிவிட வேண்டுகிறேன். இந்தச் சுட்டியே ஒரு தோழியின் உதவியால் கிடைத்தது. மிகவும் நன்றி கிருஷ்ண பிரபு. புத்தகங்கள் கிடைக்கும் விலாசத்துக்கும் நன்றி. நான் இன்று சிறிய அளவிலாவது வளர்ந்திருப்பேன் என்று நம்புகிறேன்.அற்புதம்.

    ReplyDelete
  2. உங்களை பதிவர் துளசியுடன் நீண்ட நாட்களுக்கு முன்பு கேணியில் சந்தித்திருக்கிறேன். உங்களை எப்படி மறக்க முடியும் நாச்சியார்? அந்த சட்டி பானை சொப்பு சாமான் அருமை. எங்கு கிடைக்கிறது...?

    ReplyDelete
  3. நானும் ஒரு சிறிய அளவில் இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு குறிப்பு எழுதி இருக்கிறேன்.
    http://ezhuththuppizhai.blogspot.com/2010/10/blog-post_24.html

    ReplyDelete
  4. அவை நம் ஊரில் தான் கிடைக்கின்றன.
    கிழக்குக் கடற்கரைச் சாலையில்
    தக்ஷின் சித்ரா என்கிற தென் இந்தியக் கலைகள் எல்லாவற்றையும் விளக்கிப் பட்டறைகள் போல வைத்திருக்கிறார்கள். அதில் குயவர்கள் பட்டறையும் உண்டு. அங்கே வாங்கிய சொப்புகள்தான் இவை. நினைவில் வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி கிருஷ்ணபிரபு.

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி... நிச்சயம் அங்கு சென்று பார்க்க வேண்டும் நாச்சியார்.

    ReplyDelete