Monday, February 15, 2010

கேணி சந்திப்பு - ஜெயமோகன்

புத்தக வெளியீட்டிற்காக திருப்பூரிலிருந்து முரளியும், வெயிலானும் வந்திருந்ததால் அவர்களைச் சந்திக்க ஒரு மணி நேரம் முன்பாகவே கேணிக்குச் சென்றிருந்தேன். கேணியின் அருகில் ஞானியின் நாடக நண்பர்கள் கூட்டுவதும் பெருக்குவதுமாக இருந்தார்கள். ஜன்னலின் வழியாக உள்ளே பார்த்தேன். பரவலாக அடுக்கப்பட்ட புத்தக அட்டைகளின் வண்ணங்கள் தெறித்தன. ஓர் ஓரத்தில் ஜெயமோகன் சாய்வு நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தார். உள்ளே சென்று புத்தகங்களைக் கையிலெடுத்துப் புரட்டிக்கெண்டே ஓரக்கண்ணால் ஜெயமோகனைப் பார்த்தேன். கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தூக்கம் வரவும் உள்ளே சென்று வசதியாகப் படுத்துக்கொண்டார். நானும் வெளியில் சென்று ஓரமாக அமர்ந்துகொண்டேன்.

நாடக நடிகர் பாரதி மணி, எழுத்தாளர் திலீப்குமார், பிரசன்னா என்று பலரும் வந்திருந்தார்கள். ஜெயமோகனும் ஞானியும் சரியான நேரத்தில் வந்து கூட்டத்தைத் தொடங்கினார்கள். சிறுகதை, நாவல், புனைவு என்று இலக்கியம் சார்ந்து ஜெயமோகன் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 'நம்மால் ஏன் விவாதிக்க முடிவதில்லை?' என்ற தலைப்பில் ஜெயமோகன் பேச இருப்பதாக ஞாநி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நேரடியாக ஜெயமோகன் உரையாடத் தொடங்கினார்.

பதினைந்து நிமிடங்களுக்கு முன்புதான் இந்த தலைப்பைப் பற்றி பேசலாம் என்று முடிவுசெய்தேன். நான் எழுத்தத் தொடங்கி ஏறக்குறைய இருபது வருடங்கள் ஆகிறது. ஆரம்ப நாட்களில் ஆர்வமுடன் பழகிய பலரும் வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பழகிய நண்பர்களும் ஆர்வமுடன் வந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

விவாதம் என்பது படைப்பாளியை முன்னகர்த்தக் கூடிய முக்கியமான விஷயம். தமிழ் சூழலில் விவாதங்கள் சரியான முறையில் நடக்கிறதா என்றால், திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய சூழலிலும் சரி, இதற்கு முன்பிருந்த வெங்கட் சுவாமிநாதன்-பிரமிள் சூழலிலும் சரி, அதற்கு முன்பும் சரி விவாதங்கள் சரியாக நடக்கவில்லை. விவாதம் என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதல்கள் தான் அதிகமாக நடந்திருக்கிறது.

மலையாள இலக்கியத்தில் இருப்பது போன்ற விமர்சனங்களின் மீதான மிதமான சூழல் இங்கு இல்லை. பாலச்சந்திரன் சுள்ளிக்காடை - கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையாக விமர்சிக்கிறேன். ஆனாலும் அவருடைய இளைய சகோதரனாகத் தான் என்னைப் பாவிக்கிறார். ஒரு முறை இந்தியா டுடே-ல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடை அடக்கம் செய்தால் தான் மலையாள நவீனக் கவிதை பிழைக்கும் என்று எழுதியிருந்தேன். சுள்ளிக்காடான் எனக்கு ஃபோன் செய்து "மோகன், நான் நாகர்கோவில் வரலாம் என்றிருந்தேன். நீ அடக்கம் செய்திடுவியோன்னு பயமா இருந்தது. அதனால ட்ரிப் கேன்சல் பண்ணிட்டேன்"னு சொன்னாரு.

அதே மாதிரி ஷாஜி எழுதிய இளைய ராஜா பற்றிய கட்டுரையை மொழி பெயர்த்திருந்தேன். அதைப் பற்றிய விமர்சனக் கட்டுரையையும் நானே எழுதியிருந்தேன்.ஷாஜிக்கு ஃபோன் செய்து ஜெயமோகனை விடக் கூடாதுன்னு சிலர் சொன்னார்களாம். என்னுடைய பக்கம் சில பேரு இருக்காங்க. ஷாஜியை விடக் கூடாதுன்னு சொல்றாங்க. விவாதம் இளையராஜாவின் பங்களிப்பைப் பற்றியது. அது சமந்தமாக யாருமே பேசவில்லை.

இளைய ராஜாவின் ரீ-ரெகார்டிங் பங்களிப்பு மகத்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. 'சரத்பாபு Below Emotion நடிகர்' என்று இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார். அவர் தலையைத் தொங்கப் போட்டால் இளைய ராஜாவின் வயலின் தான் சோகமா இருக்காருன்னு சொல்லும். சினிமா என்பது கூட்டு முயற்சி, unit work. இளையராஜாவிற்கு முன்பு படப்பிடிப்பு பெரும்பாலும் உள்-அரங்கிலேயே நடக்கும். அவருடைய காலத்தில் வெளிப்புற படப்பிடிப்பு எளிமையானது. அந்தத் தொழில் நுட்பமும் இளையராஜாவின் இசைக்கு வலு சேர்த்திருக்கலாம் இல்லையா?. இதை ஒருவர் கூட சொல்லவில்லை. ஒரு நிலையில் நானே எனக்கு இந்த Point-ஐ பின்னூட்டம் அளித்துக் கொள்ளலாமா என்று நினைத்தேன்.

விவாதம் செய்ய சில புரிதல்கள் தேவை.
ஒரு படைப்பாளியின் Frame of reference என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதற்குள் விவாதிக்க வேண்டும். அதற்கு வெளியிலுள்ள விஷயங்களை விவாதிக்கக் கூடாது. உதாரணமாக, சிவராமனின் (பைத்தியக்காரன்) பதிவை விவாதிக்கும் போது பதிவிற்கு பின்னூட்டம் அளித்தவரின் பதிவினை விவாதிக்கக் கூடாது. நிறைய பேர் அப்படித்தான் செய்கிறார்கள். ஒரு படைப்பின் எல்லைகள் எந்த Frame of reference-ல் இருக்கிறதோ, அவற்றிலுள்ள விஷயங்களை விவாதிப்பது ஆரோக்கியமானது. அதில் சொல்லப்படாத விஷயங்களை 'ஏன் சொல்லவில்லை?' என்று விவாதிப்பதில்அர்த்தம் இல்லை.

விவாதங்களில் மிகச்சிறந்த விவாதத்திற்கு பதில் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாம் செழுமைப் படுத்திக்கொள்ள முடியும். மேலை நாடுகளில் பள்ளி நாட்களிலேயே விவாதங்களைத் தொடங்குகிறார்கள். அதனால் தான் அவர்கள் பள்ளி முடித்து வெளிவரும் போது தன்னம்பிக்கையுடன் வெளிவருகிறார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு கோனார் உரைக்கு அடுத்து எதுவும் தெரிவதில்லை. சமீபத்தில் என்னுடைய நண்பர் கல்லூரிகளில் வகுப்பெடுத்தார். அதைப்பற்றிய எதிர்வினையை எல்லோரையும் எழுதச்சொல்லி இருக்கிறார். மாணவர்களின் கருத்துக்களைப் படிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். படித்து அதிர்ந்துவிட்டேன். முப்பது பேரில் ஒருவர் தான் ஓரளவிற்குப் பரவாயில்லை என்று எழுதியிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் காலம் கடந்து நிற்கும் ஆக்கங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். நம்மில் யாராவது 'ஆதி சங்கரின்' வரிகளை மேற்கோள் காட்டுகிறோமா?... 16-ஆம் நூற்றாண்டு வரை நம்மிடமும் செழுமையான விவாதங்கள் நடந்துள்ளது. உபநிஷத்துகள் கூட விவாத நடையில் தான் இருக்கிறது. விவாதத்தில் இரண்டு முறைகள் இருக்கிறது...

1. சந்தஸ் -
கொள்கையை முன்பே வகுத்துக் கொண்டு விவாதிப்பது.
2.
நியாயம் - ஒரு விஷயம் சரியான முறையில் பொய்ப்பிக்கப்பட்டு நியாயத்தை நிலைநாட்டுவது.

மேலைச் சிந்தனை, வேத சித்தாந்தங்கள் போன்ற Professional விவாதங்களில் நான் கலந்து கொள்வதுண்டு. ஆரம்பித்த பத்து நிமிடங்களில் விவாதம் சூடுபிடித்துவிடும். ஒவ்வொருவரும் அவர்களுக்கான நிலையிலுள்ள தன்மையான கருத்திக்களை முன்வைப்பார்கள். அதுபோன்ற விவாதங்களின் மூலம் தான் நம்மைக் கண்டடைய முடியும். அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்த முடியும்.

சரியான அர்த்தத்தில் ஒரு விஷயம் மறுக்கப்படும் பொழுதுதான் அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்துக் கொண்டு செல்ல முடியும். இல்லையெனில் தேங்கிவிடுவோம்.
ஆகவே ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்வது அவசியம் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

கேள்வி நேரத்தின்போது பல நண்பர்களும் ஆர்வமுடன் கேள்வி கேட்டார்கள். சிலர் 'உங்களைக் காயப்படுத்துவதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. வாசகன் என்ற முறையில் கேட்கிறேன்' என்று தயங்கித் தயங்கி கேள்வி கேட்டார்கள். 'நீங்க அப்படி நினைக்கவே வேண்டாம். நான் மன வருத்தமே அடையமாட்டேன். தாராளமா கேளுங்க' என்று தட்டிக் கொடுத்து கேள்விகளை எதிர்கொண்டார். அதைப்பற்றி டோண்டு ராகவன் வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது.

கேணி சந்திப்பு - 14.02.2010

நிகழ்ச்சி முடிந்து ஞானி பேசும்போது 'ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகவும் 10 சதவீத விற்பனைக் கழிவு உண்டு' என்றும் அறிவித்தார். கேணிக்கு வந்துவிட்டு எழுத்தாள நண்பரிடம் பேசாமலோ, கேள்வி கேட்காமலோ போனால் எப்படின்னு ரெண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஜெயமோகனிடம் சென்றேன்.

உங்களுடைய பெயர் என்ன?- ன்னு அவர் முந்திக்கொண்டார்.

கிருஷ்ண பிரபு... (புத்தகத்தில் என்னுடைய பெயரெழுதி அவருடைய கையொப்பத்தை இட்டுக்கொண்டிருந்தார்.)

"ஜெயமோகன்" என்றேன்.

"ம்...!?" என்று திரும்பிப் பார்த்தார்.

உங்களுடைய படைப்புகளிலேயே உங்களுக்கு பிடித்த படைப்பு எது?

புனைவா?... புனைவல்லாத புத்தகமா?...

எதாச்சும் மனசில் பட்டதை சொல்லுங்க...

"கொற்றவை" என்றார்.

என்னிடம் அந்தப் புத்தகமில்லை. ஆகவே இவ்வளவு நேரம் பேசியதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற திருப்தியுடன் கேணியிலிருந்து திரும்பினேன்.


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2.
கேணி சந்திப்பை வீடியோ எடுத்தார்கள். அதை வாங்க ஞானியிடம் கேட்டுப்பார்க்கலாம்.
3.
பிக்காசாவில் கேணி புகைப்படங்களைக் காண அழுத்தவும்.


10 comments:

  1. வேறு சிலரைச் சந்தித்து விட்டு கேணிக்கு தாமதமாகத் தான் வரமுடிந்தது.

    முரளியிடம் மற்ற விபரங்கள் கேட்டறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  2. ஏப்ரல் மாதத்தில் சிவராமன் கவிதைப் பட்டறை ஏற்பாடு செய்யப்போவதாக பேச்சு அடிபடுகிறது. அங்கு சந்திக்கலாம்.

    நீங்க சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்ததை கூட்டத்தின் நடுவிலிருந்து பார்த்தேன் வெயிலான்.

    :-)

    ReplyDelete
  3. ம்... சந்திக்கலாம் பிரபு!

    :)

    ReplyDelete
  4. கிருஷ்ணா, வண்ணதாசனின் எல்லா புத்தகத்தையும் வாங்கிவிட்டேன்றே நினைக்கிறேன். :-)

    ReplyDelete
  5. ரமேஷ் வைத்யா வரவில்லை.பாஸ்கர் சக்தி இருந்தார்.

    ReplyDelete
  6. நல்லபதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள் ..

    தேவரஜ் விட்டலன்
    http://vittalankavithaigal.blogspot.com

    ReplyDelete
  7. ஜெயமோகனின் பேச்சு அருமையிலும் அருமை. விசயங்கள் கோர்வையாக கொட்டிக்கொண்டேயிருந்தார். சரியாக ஒரு மணிநேரம் பேசினார், அலுப்புத்தட்டாமல். அதுமட்டுமல்லாமல், அவர் கேள்விகளை எதிர்கொண்ட விதம் chanceless. Prepare பண்ணாமல், கேள்விகளை ஆணித்தரமாக எதிர்கொள்ளவதற்கு அவருக்கு எவ்வளவு Input இருந்துருக்க வேண்டும் என்பதை நினைத்தால் ஆச்சரியாமாயிருக்கு. ஜெயமோகன் ஒரு (ஞான)அரக்கன்.

    ReplyDelete
  8. @ முரளிகுமார்
    ஒரு வருஷம் அங்கஇங்க போகாம படிச்சாதான் நீ வாங்கிய புத்தகங்களை படித்து முடிக்க முடியும்.

    :-)

    @ தண்டோரா
    பிரசன்னா என்பதற்கு பதிலாக ரமேஷ்வைத்யா என்று குறிப்பிட்டது தவறுதான். தவறை சுட்டியதற்கு நன்றி... சரி செய்துவிடுகிறேன்...

    @ vittalan
    பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...

    @ ராம்
    நிச்சயமாக அவருடைய உரையாடலும், கேள்வியை எதிர்கொண்ட விதமும் ஆச்சர்யமாக இருந்தது. உங்களை நேரில் சந்தித்ததிலும் மகிழ்ச்சி ராம்...

    ReplyDelete
  9. ஆம், தமிழில் ஆக்கமான எதிர்வினைகள் இல்லாதது வருத்தம் தான். ஆக்கப்பூர்வமான விவாதங்களும் தேவை.

    ReplyDelete