ஞானியின் வீட்டில் நுழைந்தவுடன் நாஞ்சில் நாடன் இருக்கிறாரா என்று தேடினேன். உள் அறையில் பாரதி மணி மற்றும் ஞானியுடன் பேசிக் கொண்டிருந்தார். வெளி அறையில் அவருடைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படத்தின் ஆதாரக் கதை என்று நண்பர்கள் சொல்லியிருந்ததால் 'தலைகீழ் விகிதங்கள்' வாங்கிக் கொண்டு கேணிக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.
3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். "சுதந்திரமாக பேசலாமா?" என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் அவர் என்ன பேசப்போகிறார் என்பது கூட எனக்குத் தெரியாது. படைப்புகளுக்கு வித்தியாசமான தலைப்புகளை பெயராக சூட்டுவதில் நாஞ்சில் நாடன் என்னை மிகவும் கவர்ந்தவர். எட்டுத் திக்கும் மதயானை, மாமிசப்படைப்பு என்று யோசிக்கும் போதெல்லாம் அவரது பெயரும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன் பேச்சைத் துவக்கினார். தலைப்பாக எதையும் வைத்துக் கொள்ளாமல் மொழியின் கூறுகளைப் பற்றி பேசத் தொடங்கினார்
தேவை கருதியே சொற்கள் உருவாகிறது. அப்படி உருவாகும் சொற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஒரு படைப்பில் சமுதாயக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்வதைப் போலவே மொழியின் கூறுகளையும் பதிவு செய்வது முக்கியம். 4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச் சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் (லெக்சிகன்) அகராதி. இதிலுள்ள வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே தமிழில் இல்லையா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாக சொற்களே தோன்றி இருக்காதா? கணினி, பின்னூட்டம் போன்ற வார்த்தைகள் எப்பொழுது தோன்றியது. இவற்றையெல்லாம் அவனப்படுத்த வேண்டாமா?
ஒரு படைப்பாளிக்கு பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. அதுமட்டுமே பலவிதமான மனிதர்களை, கலாச்சாரங்களை, வார்த்தைகளை, அனுபவங்களை படைப்பாளிக்கு வழங்கும். நான் விற்பனைப் பிரதிநிதியாக பல மாநிலங்களுக்கும் பயணம் செய்தவன். அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளைநேசிக்கிறேன். என்னுடைய மொழி தமிழ் தான் என்றாலும் காளிதாசரையோ, காண்டேகரையோ எப்படி நான் வெறுக்க முடியும். அவர்களெல்லாம் மொழியின் கொடைகள் இல்லையா!
ஒரு அறையின் மூலையில் சிகப்பு வண்ண பெயிட்டையும், இன்னொரு மூலையில் பச்சை வண்ண பெயிட்டையும் கொட்டிக் கவிழ்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வண்ணங்களும் பயணம் செய்து ஒன்றோடொன்று கலந்து மையத்தில் துல்லியமான நீல நிறம் கிடைக்கிறது. ஓரங்களில் மெல்லிய நிறமாற்றங்கள் கிடைக்கிறது இல்லையா? அது போலவே ஒரு மொழி இன்னொரு மொழியுடன் சேரும் பொழுது வேறு பல சொற்கள் மொழிக்குக் கிடைக்கிறது. அது மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். களிறு என்ற சுத்த தமிழ் வார்த்தை நம்மிடம் இன்று புழக்கத்தில் இல்லை. மலையாள மொழியில் இருக்கிறது. இந்த வார்த்தையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதுபோல நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.
சமீபத்தில் நான் வாசித்த டாக்டர் கு. சீனிவாசன் எழுதிய தாவரங்களைப் பற்றிய புத்தகம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. அதுபோலவே "அக பெருமாள், பெருமாள் முருகன், கிரா, பா சுப்பிரமணியம், கண்மணி குணசேகரன்" போன்றவர்கள் வேலை மெனக்கெட்டு வார்த்தைகளைத் தொகுக்கிறார்கள். "இதை யார் செய்ய வேண்டும்?". ஆராய்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் கல்லூரியில் என்னதான் செய்கிறார்கள். "மாணவர்களை கிராமங்கள் நோக்கித் துரத்துங்கள். புதுசா வார்த்தைகளையோ, இதிகாச துணைக் கதைகளையோ கண்டுபுடிச்சிட்டு வந்தா, அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுங்க" என்று கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலின் பொழுது துறைத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். இந்த வேலையை படைப்பாளிகள் உட்கார்ந்து செய்துக்கிட்டு இருக்காங்க.
சென்னையிலிருந்து தமிழ் நாட்டின் கோயபுத்தூர், நெல்லை, கன்யாகுமரி போன்ற உட்புற கிராமங்களுக்கு செல்லும் பொழுது தமிழுக்கு தமிழே மாறுபடுகிறது. அங்கெல்லாம் எவ்வளவு புதிய சொற்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் தொகுக்க வேண்டாமா? ஒரு மண்வெட்டியின் பத்து பாகங்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். அதையெல்லாம் தொகுக்க வேண்டாமா? சந்தியா பதிப்பகத்தின் எதுகை அகராதியை சமீபத்தில் வாசித்தேன். எதுகையில இவ்வளவு விதம் இருக்கானு ஆச்சர்யமா இருந்தது. சினிமாவுக்கு பாட்டெழுதறவன் கையில கிடைக்கனும்னு நெனச்சிக்கினேன்.
இன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது. வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.
"டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள்...அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீஸ்-கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப்போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா?" என்று கூறியதும் பலத்த கரவொலி எழுந்தது. எனக்குப் பக்கத்தில் கவிஞர் உழவனும் கைதட்டிக் கொண்டிருந்தார்.
அடிப்படையில் நான் மொழி வல்லுநர் இல்லை. என்னுடைய ஆர்வமெல்லாம் வார்த்தைகளைப் பற்றியது. வார்த்தைகள் தானே மொழியை செம்மையாக்குகிறது. ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு 'தெரிவை' என்ற கதையை எழுதி அனுப்பியிருந்தேன். அவர்கள் 'நீலவேணி டீச்சர்' என்று தலைப்பை மாற்றி இருந்தார்கள். ஜனரஞ்சக பத்திரிகையில் இதெல்லாம் சகஜம் தான். நான் சொல்ல வருவது, தெரிவை என்பது பெண்களின் பருவ நிலைகளில் ஒன்று. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பருவ நிலைகள் இருக்கிறது என்று பின் குறிப்பில் எழுதியிருந்தேன். வேடிக்கை என்னவெனில் விகடனுக்கு சந்தேகம் வந்து, செம்மொழி மாநாடு நடத்தும் குழுவிலுள்ள முக்கியமானவருக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார்கள். அவருக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாராம். உடனே அவங்க எனக்கு ஃபோன் செய்தாங்க. அந்த நேரம் பார்த்து நான் ஒரு எழவு வீட்டில் இருந்ததால் சரியான தகவல்களை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை.
தமிழின் சமகால 10 சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை சொல்கிறேன். அவர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பு சென்றிருக்குமா என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவருக்கும் சென்றிருக்காது. மொழியை அடுத்த இடத்திற்கு நகர்த்துவது படைப்பாளிகள் தான். அவர்களுக்கான கவனிப்பை சரியாகக் கொடுப்பதில்லை. கேரளாவில் வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வாங்கினால், மத்திய அமைச்சர் அந்தோணி வாசுதேவனின் வீட்டு வாசலில் காலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை வாழ்த்திவிட்டு அமைச்சர் சென்றுவிடுவார். வாசுதேவனும் அவருடைய வேலையைப் பார்க்க சென்றுவிடுவார். தமிழ்நாட்டில் அப்படிநடக்குமா? எழுத்தாளனே ஒரு சால்வையை வாங்கிக்கொண்டு, புகைப்படக்காரனையும் அழைத்துக் கொண்டு பீடத்தில் இருப்பவர்களை சென்று பார்க்க வேண்டும். மறுநாள் அவனே அதை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் தானே இருக்கிறோம். மூத்த படைப்பாளிகள் அவர்களால் முடிந்த வரை மொழியைத் தாங்கிப் பிடித்தார்கள். அதை முடிந்த வரை பிடித்துக் கொண்டு நாங்கள் ஓடினோம். இனி இளம் படைப்பாளிகள் தான் அதற்கு முன்வர வேண்டும். அதற்க்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று தனது உரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து சில தேவையிலாத கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சூடான விவாதத்துடன் கேணி சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது.
இணைய தமிழ் அகராதி - http://wiki.senthamil.org
கேணி சந்திப்பு பற்றி நண்பர் பிரபாகரன் எழுதிய பதிவு: (http://tprabakaran.blogspot.com)
)()()()()()()()(
பெரியவரிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஞானியின் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு செல்லும் முக்குச்சந்தை கடக்கும் பொழுது "ங்கோத்தா எனக்கு குடுக்க வேண்டிய பணத்தை என் ஊட்டாண்ட வந்து இன்னிக்குள்ள குடுக்குல நடக்கறதே வேற" - என்று ஓர் ஆட்டோக்காரன், எதிரில் இருப்பவனை கோபமாக திட்டிக் கொண்டிருந்தான். அந்த 'ங்' வார்த்தை என்னுள் ஓங்காரமாக ஒரு காலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னுடைய சிறு வயதில் வீட்டிற்குத் தெரியாமல் எத்தனை முறை சொல்லியிருப்பேன். வீட்டுக்குள் சென்ற பிறகு சாகடிச்சாலும் இந்த வார்த்தை என் வாயிலிருந்து வராது. இப்பொழுது அந்த வார்த்தை என்னுள் அடையாளமின்றி எங்கோ இருக்கிறது. அதுபோல இன்னும் எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ! முடிந்தால் எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து மீட்டெடுக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையும் சேர்த்துத்தான்...
)()()()()()()()(
பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுத்தின் வடிவத்தைப் பற்றியோ, ஒலி வடிவத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை.
3. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
4. அடுத்த மாதம் கேணிக்கு எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வனும், அதையடுத்து எழுத்தாளர் பாமாவும் வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கிட்டத்தட்ட எல்லாவற்றையும் கொண்டுவந்திருகிரீர்கள். நாஞ்சிலாரின் இந்த சந்திப்பு நிச்சயம் "எனக்கு" பயனுள்ளதாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் நாஞ்சில் நாடனுடன் இருந்த கணங்கள் என் ஊரில் இருந்த அனுபவத்தை கொடுதததை மறக்க (தவிர்க்க ) முடியாதது.
ReplyDeleteஅருமையான பகிர்வு கிருஷ்ணா.
ReplyDeleteநீங்க சொன்ன “ங்” எழுத்து வார்த்தைகள் பேசாத ஆண்கள் சென்னையில் குறைவு. ஆட்டோக்காரர்கள் தான் என்றில்லை அதிகபட்சம் நான்கு ஆண்கள் ஒன்றாக இருந்தால், அதில் குறைந்தபட்சம் ஒருவர் வாயில் இருந்தாவது இந்த வார்த்தை வந்து விழும்.
:(((((
@ ராம்.
ReplyDeleteமீண்டும் கேணியில் சந்திக்கலாம். பின்னூட்டத்திற்கு நன்றி
@ சாரதா
எந்த வார்த்தையும் கெட்ட வார்த்தை இல்லை என்பது நஞ்சிலாரின் பேச்சின் மூலம் தெரிந்துகொண்டேன். எல்லா வார்த்தைகளுமே அகராதியில் குறிப்பிடப் படவேண்டும்.ஆங்கிலத்தில் வசைச் சொற்களுக்கு [vulgar]என்று குறிப்பிட்டு விடுவார்கள். நாமும் அப்படிச் செய்யலாம்.
இப்பொழுதெல்லாம் அந்த மாதிரி “ங்” வார்த்தையை பயன்படுத்துவதில்லை. கோவம் வந்தால் மிகமிக மிகமிக நெருங்கிய நண்பர்களை மட்டும் “ங்” சேர்த்து திட்டுவேன். அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
:-(
ReplyDeleteநாஞ்சில் நாடனின் பேச்சின் சாரம்சத்தை பெரும்பாலும் எழுத்தில் நீங்கள் கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய வலைப்பக்கத்துக்கான இணைப்பை உங்கள் பதிவில் கொடுத்தமைக்கு என்னுடைய நன்றிகள் Prabhu.
ReplyDelete//நஞ்சிலாரின் பேச்சின் மூலம் தெரிந்துகொண்டேன்//
ReplyDelete"நஞ்சிலார்" என்பது தவறு "நஞ்சுடையார்" என்றிருந்தால் கூட தவறில்லை . "நாஞ்சில் நாட்டு " காரர்களுக்கு புரியும் :)
Just kidding
அற்புதமான பதிவு. கேணி சந்திப்புகளுக்கு செல்கிற அனுபவம் கிட்டுகிறது. நாஞ்சில் நாடனின் கருத்துகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. தாங்கள் பகிர்ந்து இணைய அகராதி மிகவும் உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி.
ReplyDeleteThanks a lot for your comments
ReplyDelete