Tuesday, October 13, 2009

கேணி இலக்கிய சந்திப்பு - கி ராஜ நாராயணன்

கன்று பசுவினைத் தேடி பால் குடிக்க ஓடுவதைப் போல துள்ளலுடன் கேணி இலக்கிய சந்திப்புச் சென்றிருந்தேன். பல வருடங்களாகவே கி ரா-வைப் பார்த்துப் பேசவேண்டும், "கதை சொல்லுங்கள் ஐயா" என்று உரிமையுடன் கேட்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கேணி இலக்கிய சந்திப்பின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் முதல் வரிசையில் உட்கார்ந்தேன். ஒரு பெண் 'உன்னதம்' இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள். நியூசிலாந்து பதிவரான 'துளசி கோபால்' என்று பிறகு தெரியவந்தது. வாயைத் திறந்தால் ஹாஸ்யம் தான். அவருடைய பதிவைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவரின் மூலம் 'நாச்சியார்' அறிமுகமானார்.இவர்களைத் தவிர வேறு சில பரிட்சயமான பதிவர்களையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக "அமித்துவின் அம்மா" வந்திருந்தார்கள். அமித்துவைப் பிரிந்து வந்த பதட்டம் அவர்களுடைய முகத்தில் தெரிந்தது.

ஞானியுடன் கி.ரா தம்பதியர் வருவதைப் பார்த்து அசந்துவிட்டேன். அவ்வளவு அழகான ஜோடி. குழந்தைகளின் குதூகல மகிழ்ச்சி அவர்களுடைய முகத்தில் தெரிந்தது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்கின்றனர். கூட்டத்தினரைப் பார்த்து புன்னகைத்தவாறே தெரிந்தவர்களின் ஷேம நலன்களை விசாரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்.

"கரிசல் தந்தை புதுச்சேரியில் எப்படி இருக்கிறார், எந்த சூழலில் வாழ்கிறார், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்" என்று சொல்லி ஞானி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

"பிரியமான அன்பர்களே... கேணி இலக்கிய சந்திப்பைப் பற்றி ஞானி என்னிடம் சொல்லியவுடன், இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சென்னையில் இப்படி ஒரு சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. இந்தத் தோட்டம், சூழல் மற்றும் அமைப்பு கருதியே பார்க்க வந்தேன். மேலும் இந்தச் சந்திப்பை ஒரு கலந்துரையாடல் மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒரு திருப்தி இருக்கும்" என்று உரையை ஆரம்பித்தார்.

அறிமுக உரையில் ஞானி ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டார். 'நான் என்ன தலைப்பில் பேசப்போகிறேன்' என்ற தகவல் தான் அது. எனக்கு எந்தத் தலைப்பும் ஒத்து வராது. அதனால் நாட்டுப்புறக் கதைகள் பற்றிப் பேச விரும்புகிறேன். என்னுடைய கதைகளை விட நாட்டுப்புறக் கதைகள் தான் என்னை வசீகரம் செய்தது.

ஆனால் 'மணிக்கொடி' முதல் எல்லோரும் நாட்டுப்புறக் கதைகளை ஒதுக்கித்தான் இருக்கிறார்கள்.

40 எழுத்தாளர்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவித்த புத்தகம் ஒன்று வெளிவரப் போகிறது.அதில் "ஏன் இன்னும் கிராமியக் கதைகளைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்? அதைத் தாண்டி ஏன் எழுதவில்லை" என்று என்னிடம் கேட்கிறார்கள்.

கரிசல் இலக்கியம் என்பது ஒரு சமுத்திரம் மாதிரி. சமுத்திரத்தில் ஏராளமாக மீன்கள் இருப்பது போல கிராமியக் கதைகளும் நிறையவே நம்மிடம் இருக்கிறது. தேடல் தான் நம்மிடம் இல்லை. ஆரம்பத்தில் கிராமியக் கதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டேன். அதைப் பார்த்து வேறு சிலர் தாமாக முன்வந்து சில கதைகளைக் கொடுத்தார்கள்.

நாட்டுப்புறக் கதையை சொல்ல ஆரம்பித்தால் எங்கோ கேட்டது போலவே இருக்கும். ஒரு பாகவதர் 25 ராகங்களை வைத்துக் கொண்டு வாழ் நாள் முழுவதும் கச்சேரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏன் அந்த ராகங்களையே அவர் திரும்பத் திரும்பப் பாடுகிறார் என்று கேட்கிறோமா? விருப்பம் இருக்கிறது என்பதால் கேட்கிறோம். அவரும் பாடுகிறார். அது போலதான் கிராமியக் கதைகளும்.

மறுபடியும் மறுபடியும் ஒரே கதைகளை வேறுவேறு கற்பனைகளில் கேட்கும் பழக்கம் இன்றுள்ள குழந்தைகளுக்கு இல்லை. ஏனெனில் அவர்களை அவசரமா பழக்கிட்டோம். "தூங்க சொல்ல எழுப்பி வெளிக்கி(கக்கூஸ்) இருக்க வக்கிறோம், குளிக்க வைக்கிறோம், பள்ளிக்கு அனுப்புறோம். புதுப்புது விஷயங்களை அவர்கள் தெரிஞ்சிக்க வேக வேகமா பழக்கறோம். அதெல்லாம் தப்பு. முன்னடிஎல்லாம் அப்படி இல்ல.

இந்தக் கூட்டத்தை "ராகுகாலக் கூட்டம்"னு சொல்லலாம். ஏன்னா ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகுகாலம். சரியா அந்த நேரத்துல இந்தக் கூட்டத்தை ஞானி ஏற்பாடு பண்ணியிருக்காரு. ராகு போல கொடுக்கரவனும் இல்லை, கேது போல கெடுப்பவனும் இல்லைன்னு சொல்லுவாங்க உங்களுக்குத் தெரியுமா?

இந்த இடத்தில் ஜோசியம் மற்றும் சகுனம் சமந்தமான இரண்டு கதைகளைச் சொன்னார். (ஜோசியரிடம், வியாழன் அவருடைய மகனுக்கு ஜாதகம் கணித்தது மற்றும் நாய் ஒன்று சகுனம் பார்த்து வெளியில் செல்ல நினைக்கும் கதை). 'கிராமியக் கதைகள்- கி. ரா' என்ற புத்தகத்தில் அந்தக் கதைகளைப் படித்த ஞாபகம்.

"இப்படி பேசிக்கிட்டே போனா வெறுப்பா இருக்குதோ?. வேறுமாதிரி வேணும்னா பேசலாமா" என்று சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். அந்த நேரம் பார்த்து கிராவிடம் ஞானி ஒரு கேள்வி கேட்டார்.

"ஆரம்பத்தில் இடது சாரியில் இருந்த நீங்கள் பிறகு வேறு திசையில் பயணித்தது எப்படி? உங்களுடைய நம்பிக்கையில் எதனால் மாற்றம் வந்தது?"

"அதாவது ஆரம்பத்துல கம்யுனிஸ்டா இருந்தவனுக்கு, இப்ப கடவுள் நம்பிக்கை எப்படி வந்துச்சுன்னு கேக்குறீங்க(எல்லோரும் சிரிக்கிறார்கள்) அப்படிதானே?" - என்று பேச்சைத் தொடங்கினார்.

ஆங்கில மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் சமந்தமான ஆராய்ச்சியை தொடர்புபடுத்தி அழகான கதை ஒன்றைச் சொல்லி ஞானியின் கேள்விக்குப் பதிலளித்தார்.

மேலும் பெரியார் ஒரு முறை பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மின்சாரம் (ஜெனரேட்டர்) தடைப்பட்டு, ஒலிபெருக்கியில் அவர் குரல் வெளிவரவே இல்லையாம். பின்னர் சரி செய்யப்பட்டு மீண்டும் பேசத் தொடங்கினாராம். சில விநாடிகளில் மீண்டும் ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டதாம். இதுபோல் பல முறை நடந்ததாம். பெரியார் சலித்துப் போய், ‘அட ராமா!’ என்று உரக்கச் சொல்லிவிட்டாராம். அவரே தன்னை மறந்த நிலையில் மனதின் ஆழத்திலிருந்து அப்படி சொல்லி இருக்கிறார். இது எல்லோருக்கும் நேர்வது தானே என்று கூறினார்.

இறுதியில் "கி ராவிற்கு ஒரு விஷயத்தில் நம்பிக்கை இருந்தது. இப்பொழுது அது மாறி இருக்கிறது அவ்வளவுதான்" என்று முடித்தார்.

பிறகு எதைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் இருக்கிறது என்று பேசத் தொடங்கினார்.

கடவுள் தொடங்கி, ராஜாக்கள் (ஊர்சுற்றி ராஜாக்கள், நாடாளும் ராஜாக்கள்), பிச்சைக்காரர்கள், பரதேசி, சாதுக்கள், துறவிகள், தேவர்கள், சபைக்கு முன்னாள் சொல்ல முடியாத சில கதைகள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்), பேய், பிசாசு, பூதம், தாழ்வு மனப்பான்மை, திமிர், கர்வம், கோபம், சோகம், இது போன்ற உணர்வுகள், வதந்திகள், அது பரவும் விதம், அறிவாளிகள் பற்றி, மாமியார்-மருமகள் பிரச்சனை, தகப்பன்-மகன், கணவன் மனைவி, பொறாமை, லஞ்சம், வீரம், காதல், நட்பு, பாலியல், ஞாய தீர்ப்பு என எவற்றைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் வந்திருக்கிறது என்று விளக்கினார்.

லஞ்சம், ஞாய தீர்ப்பு, சகுனம், தாழ்வு மனப்பானை பற்றி அவர் கூறிய உதாரணக் கதைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றிருந்தது.

கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பெரும்பாலும் கதைகளிலேயே பதில் கூறினார். ஒருவர் ஹாரி பார்ட்டர் கதைகளை முன்வைத்து கேட்டக் கேள்விக்கு, சுவாரஸ்யமான மாயக் கதை (பெருவிரல் குள்ளன் கதை) ஒன்றைக் கூறினார். நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். நேரம் 7 மணியைத் தாண்டிச் சென்றதனால் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் 'உன்னதம்' , 'அகநாழிகை' சிற்றிதழ்களை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியாய் இருந்தது. விஷ்ணு அசோகமித்ரனின் நாவலை எனக்காக வாங்கி வந்திருந்தான். அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு திரும்புவதற்கு மனமில்லாமல் கி. ராவின் நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.

இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:

ரவிபிரகாஷ் - ராகு காலக் கூட்டம்!
கி.ராவுடன் 'கேணி’யில்...

பி.கு:-
1.இந்தப் பதிவை கி ரா-வின் இயல்பான மொழியில் பதிய வேண்டும் என்று தான் நினைத்தேன். அவருடைய மொழியை என்னை மறந்து கேட்டது என்னமோ உண்மைதான். ஆனால் எழுத வரவில்லை. அவர் பேசியதில் 5 சதவீதம் கூட இங்கு பதியவில்லை. அவர் பேசியதின் Outline -என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
2. அனைவருடைய வசதிக்கும் ஏற்றவாறு, அடுத்த மாதம் முதல் கேணி இலக்கிய சந்திப்பு மாலை 3.30 மணிக்கு நடக்கும் என்று அறிவித்தார்கள்.

18 comments:

  1. Good one Krishna. Thank you for sharing ur experience. I couldnt come for it. In fact I have never been there before. I was in Yugamayiniyin Ilakkiyakkoodal at the same time. Will write abt it in my blog soon ;)

    -Priyamudan
    sEral

    ReplyDelete
  2. பிரேம்கிட்ட ஒரு நாவல் படிக்க சஜெஸ்ட் பண்ண சொன்னப்ப இவரோட கோபல்ல கிராமம் (சரியா?) படிக்கச் சொன்னார்.. படிக்கணும்.. ரொம்ப நல்ல பதிவு கிருஷ்ணா.. :)

    ReplyDelete
  3. 'கேணி' - பலம் பெற்றதொரு சந்திப்பாக மாறிவருவதில் மகிழ்ச்சி. எழுத்துலகிலிருக்கும் எல்லோரும் கலந்துகொள்வது அவர்களது எழுத்தை மென்மேலும் மேம்படுத்தும். இந்தியா வரும்போது நிச்சயம் நானும் முயற்சிக்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  4. நீங்கள் அந்தக் கூட்டத்தில் நடந்தது அத்தனையும் ஒரு வரி விடாமல் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பதிவெழுதும்போது, எனக்கு அத்தனை ஞாபகம் இருப்பதில்லை. அப்போதைக்கு என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே பதிவிடுகிறேன். ஓர் இனிமையான சக பதிவரின் அறிமுகம் கிடைத்தமைக்காக ஞாநியின் கேணிக் கூட்டத்துக்கு நன்றி!

    ReplyDelete
  5. பென்சிலைக் கூர் தீட்டுனப்பவே நினைச்சேன்:-)

    ஒன்னும் விடமாட்டீங்கன்னு.

    அன்னைக்கு கிராவின் 'பாட்டி போட்ட ஆம்லெட்' நல்லாத்தான் இருந்துச்சு!

    //வாயைத் திறந்தாள்//

    ஆஹா ஒன்னு புள்ளி விட்டுப்போச்சு இல்லேன்னா 'ல்' போடணும்:-)))))

    ReplyDelete
  6. நல்லதொரு சந்திப்பு..
    கடைசில விலாசம் வாங்கி இருக்கலாம்..
    நான் புதுவையில் என் நண்பன் ஒருவனிடம் சொல்லி இருந்தேன்..இன்னொரு முறை கேட்டு பார்கிறேன்..

    ReplyDelete
  7. நீங்கள் அனுபவங்களை எழுதுவது மிக அழகாக இருக்கிறது. சில நாட்களாக ஆளை காண முடிவதில்லையே

    ReplyDelete
  8. Krishna,
    hi. thank you for mentioning abt us.
    really appreciate your narration of the events.

    It has come out well and you have not missed out anything.
    VAAZTHTHUKAL.
    my e-kalappai failed me today:))))

    ReplyDelete
  9. கிருஷ்ணா எப்ப்டி இருக்கீங்க? வாழ்த்துக்கள். நான் எப்படியும் சந்தித்துவிட வேண்டுமென நினைக்கும் இன்னுமொரு மனிதர், கி.ரா. இப்படி எதையாவது எழுதி என்னுடைய பொறாமையை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். ம்ம்.. :-)

    ReplyDelete
  10. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  11. @ சேரல்
    புரிகிறது சேரல்... நீ தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள். அகநாழிகையில் உனது கவிதையை வாசிக்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    @ கார்த்திக்
    நீ சொல்வது சரிதான். ஆனால் நீ மார்டன் பையன் உனக்கு 'கோபல்ல கிராமம்' சரிவருமா என்று தெரியவில்லை. 'மறைவாய் சொன்ன கதைகள்' வாங்கிப் படி. :-)))
    இளசுகளுக்கு ஏற்றார் போல் இருக்கும்.

    @ எம்.ரிஷான் ஷெரீப்
    நீங்கள் சொல்வது சரிதான். இதுவரை வாசகர்களாகவே இருக்கும் என் போன்ற ஆர்வலர்களுக்கும் நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது.

    ReplyDelete
  12. ஹை கிருஷ்ணா, படம் பார்க்க ஆரம்பிச்சிடுவிங்க போல இருக்கு.... ஹா ஹாஹா, எல்ல புகழும் சூர்யாவிற்கே...

    ReplyDelete
  13. @ ரவிபிரகாஷ்
    எனக்கும் உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே. ஒளிவு மறைவில்லாமல் நீங்கள் எழுதும் பதிவுகள் அருமை ரவி. கருத்துக்கு நன்றி.

    @ துளசி கோபால்
    'பாட்டி போட்ட ஆம்லெட்' - பெருவிரல் குள்ளன் கதைக்கு பொருத்தமான தலைப்பு. என்னால் மறக்க முடியாத தலைப்பும் கூட. கேணியில் உங்களுடன் உரையாடியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    @ வினோத்கெளதம்
    நன்றி வினோத். கண்டிப்பாக அவருடைய முகவரியை வாங்கி விடலாம். பின்னூட்டத்திற்கு நன்றி...

    ReplyDelete
  14. @ பப்பு
    நான் தேர்ந்தெடுத்த சந்திப்புகளுக்கு மட்டுமே செல்வதால் அடிக்கடி பதிவிட முடிவதில்லை. வேலையும் சரியாக இருக்கிறது. இருந்தாலும் என்னால் முடிந்தவரை பதிவிட முயற்சிக்கிறேன். வந்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி பப்பு.

    @ வல்லிசிம்ஹன்
    நன்றி நாச்சியார்... உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. கடைசியாக கணபதி அம்மாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், அதற்கு கி. ரா ஐயா அவர்களும், அம்மாவும் குறும்புடன் பதில் கூறியதையும் பதிவில் அளிக்கவில்லை. லேகாவிற்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தேன். அந்த பகுதி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

    ReplyDelete
  15. @ முரளிகுமார் பத்மநாபன்
    நல்லா இருக்கேன் முரளி. உங்களுடைய பொறாமை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய முகவரி கேட்டு சிலரிடம் விசாரித்து இருக்கிறேன். கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். திருப்பூரிலும் இது போல் இலக்கியக் கூட்டம் நடத்தலாமே. பரிசல் போன்றவர்களிடம் பேசிப் பாருங்கள்.

    @ butterfly Surya
    கருத்துக்கு நன்றி சூர்யா...

    @ அமித்துவின் அம்மா
    /-- பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா... நன்றாக எழுதியிருக்கிறீர்கள்--/
    தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி சாரதா. உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வாருங்கள்.

    ReplyDelete
  16. /-- ஹை கிருஷ்ணா, படம் பார்க்க ஆரம்பிச்சிடுவிங்க போல இருக்கு.... --/
    சம்சாரா - பற்றி சொல்கிறீர்களா முரளி... சூர்யாவின் பதிவினைத் தொடர்ந்து படிப்பேன். விருது பெரும் படங்கள் எனக்கு மகவும் பிடிக்கும்.

    /--ஹா ஹாஹா, எல்ல புகழும் சூர்யாவிற்கே...--/
    நிச்சயமாக. அவரின் ஆலோசனையில் சில படங்களையும் பார்த்து இருக்கிறேன். இனிமையான நண்பர்.

    ReplyDelete
  17. கி.ரா

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளார்!

    மறைவாய் சொன்ன கதைகள் உலக பிரசித்தம்!

    (நேற்று உங்கள் பின்னூட்ட பெட்டி வேலை செய்யவில்லை)

    ReplyDelete
  18. நேரில் பார்த்ததுபோல் இருந்தது உங்களின் பதிவு
    பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா
    அடுத்த மாதம் எப்பொழுது

    ReplyDelete