Monday, August 17, 2015

பித்தர்களுடன் திசைமாறிய பயணம்


பாப்பா அக்கா மதிய உணவு பரிமாறிவிட்டுச் சிறுதுயில் கொள்ளச் சென்றபோதும் முடிவாகவில்லை. முன்மாலை நேரத்தில் அருண்மொழித்தேவனுடன் பேசி, விளையாடிக் கொண்டிருக்கும் போதும் முடிவாகவில்லை. கணையாழி மாதாந்திரக் கூட்டம் முடிந்த முன்னிரவு நேரத்திலும் முடிவாகவில்லை. பிறவிச் சைவனான ஜீவ கரிகாலனை அந்தப் பிரசித்தி பெற்ற அசைவ ஹோட்டலுக்கு வரும்படி சீனி மாம்சும், வேல்கண்ணன் ப்ரோவும் அழைத்தார்கள். அப்போதும் கூட எந்தத் திட்டமும் இல்லை. அசைவ உணவை ஒரு வெட்டு வெட்டிவிட்டு, அவரவர் வீட்டுக்குக் கிளம்பலாம் என்பதுதான் எண்ணமாக இருந்தது. ஜீவ கரிகாலன் தான் சொன்னான் “மகாபலிபுரம் போயிட்டு வரலாமே... ஒரு லாங் டிரைவ் போயி ரொம்ப நாள் ஆகுதே...!” என்றான்.

சீனிவாசனுக்கு இதுபோலப் பக்கத்திலிருந்து குத்திவிட ஒரு ஆள் இருந்தால் போதும். மணலைக் கூடக் கயிராகத் திரித்து விடுவார். “ரொம்பச் சரியா சொன்னிங்க கரிகாலன்...” என்றவாறு சனியின் பார்வை உச்சம் பெற்றதுபோல என்னைத் திரும்பிப் பார்த்தார். “அப்பிடியெல்லாம் என்னை பார்க்காதீங்க... வேல் கண்ணனின் சம்மதம் தான் முக்கியம்...” என்றேன்.

மகாபலிபுரம் என்றதால்தான் வேல் கண்ணனும் உடன் வருவதற்குச் சம்மதித்தார். மகாபலிபுரத்தை நோக்கித் தான் சென்றுகொண்டிருந்தோம். தேவையில்லாமல் எங்களுக்கு ரமேஷ் ரக்ஷ்னின் ஞாபகம் வந்தது. “ஏ... மக்கா எங்குட்டு இருக்க...” என்றதற்கு, “என்னோட ரூம்புல ஒருத்தரு போன் பன்றன்னாரு... அவரோட காலுக்காண்டி வெயிட் பண்றேன்...” என்றான்.

“தூக்கி அடிச்சா தூரப் போயி விழுவ... நீ ஒடனே கெளம்பி வாடா மக்கா...” என்றோம்.

அடுத்த ஒரு மணிநேரம் ரக்சனுக்காக ஒரு கால்வாயின் மேம்பாலத்திற்கு அருகில் காத்திருந்தோம். குளிர்காற்று தேகத்தில் உரச, தஞ்சாவூர் கலெக்டர் ஆபீஸ் வாய்மொழிக் கதைகள்தான் எங்களது பேசுபொருளாக இருந்தது. பேசப் பேசச் சலிக்காத கதைகள். தஞ்சை பிரகாஷ், வேல ராமமூர்த்தி என கதைசொல்லிகளின் அருமை பெருமைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். கதைசொல்லிகள் அத்துவானக் காட்டிலும் “நம்மோடு பேசுகிறார்கள்”. கதைசொல்லிகள் காலம் கடந்தும் ‘நம்மோடுதான் பேசுகிறார்கள்’... அவர்களைப் பற்றி நாமும் பேசிக்கொண்டே இருக்கிறோம். பதிவு செய்யப்படாத அவர்களது குரல்கள் - மனிதர்கள் விட்டு மனிதர்கள் என கூடுவிட்டுக் கூடுபாய்ந்து – வெவ்வேறு குரல்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இறகுகளைப் போல, கைகளை அகல விரித்துப் பறப்பதற்கு எத்தனிக்கும் பறவையைப் போன்ற வேல ராமமூர்த்தியின் அந்த பிரசித்திபெற்ற உடல்மொழியைக் கடன்பெற்று ”இந்த அட்மாஸ்பியர் நல்லா இருக்கு இல்ல... சூப்பர் ஜீவ கரிகாலன்...” என்று சீனிவாசன் சொல்ல ரக்சனின் அழைப்பு வந்தது. நிலப்பரப்பை இருள் போர்த்திய அந்தப் பொழுதில் மணி 11 அடித்தது. தூரத்து மின்விளக்குகள் வெளிச்சத்தைக் கசிந்து கொண்டிருந்தன. 


“சார்... உத்தரமேரூர் போகலாமே...” என்றான் ஜீவ கரிகாலன்.

“ஹே... சூப்பர்... ரொம்பச் சரியா சொன்னிங்க கரிகாலன்” – சீனிவாசனேதான்.

நானும், வேல்கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

“நீங்க மகாபலிபுரம் போறதா தானே சொன்னீங்க... மகாபலிபுரம் போகலாமே...” - இது வேல்கண்ணன்.

“மகாபலிபுரம் எப்பன்னாலும் போகலாம். பக்கத்துல தானே இருக்கு... உத்தரமேரூர், காஞ்சிபுரம்... அந்த ரூட் நல்லா இருக்குங்க சார்... அந்த ரோடு எல்லாம் சூப்பரா இருக்குங்க சார்.” –ஜீவ கரிகாலன்.

“ஹே... சூப்பர்... ரொம்பச் சரியா சொன்னிங்க கரிகாலன்” – சீனிவாசனேதான்.

“இன்னொருவாட்டி இந்த டயலாக் சொன்னீங்க... தூக்கி அடிச்சேன்னு வச்சிகொங்க சீனி... அங்குட்டு போயி விழுவிங்க...” என்றேன்.

“சார் எங்குட்டாவது போவன்ஜா(சா)ர்...” – இது ரக்சன்.

திசை மாறி வாகனம் வேகமெடுக்கத் துவங்கியது. “ஊதாரிங்க... ஊதாரிங்க... திருந்தாதுங்க...” என்று வேல்கண்ணன் முணுமுணுத்தது எல்லோருக்கும் தெளிவாகவே கேட்டது. “எனர்ஜிய வேஸ்ட் ஆக்காதீங்க வேல்கண்ணன். திட்டுகளை நேஷனல் அவர்டாக நினைக்கும் ஜந்துக்கள் இதுகள்...” என்றேன்.

இருளைக் கிழித்துக்கொண்டு ஹெட்லைட் வெளிச்சம் செல்ல, வாகனம் ஒளியைப் பின்தொடர, நாங்கள் மகாபலிபுரத்தை மறந்து இலக்கற்று நகர்ந்துகொண்டிருந்தோம். 

வேல்கண்ணன் காதில் சொன்னேன்: “இவங்க உத்தரமேரூர் தான் போறாங்கன்னு என்ன நிச்சயம். நாம வீடு திரும்புவோம் என்ற நிச்சயமில்லை.”

பார்வையால் குத்தி விடுவதுபோல கண்ணன் பார்த்தார். இருமறுங்கிலும் மரங்களடர்ந்த நிலப்பரப்பில், மலைகள் தென்பட்ட சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஓரிடத்தில் மலையின் அழகு ஸ்தம்பிக்க வைத்தது. நிலவற்ற, நட்சத்திரங்களற்ற இருளைப் போர்ர்த்திய மலை கருஞ்சாம்பல் போன்ற ஒளியைக் கசிந்து கொண்டிருந்தது.

வளைவான திருப்பத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடுரோட்டில் இறங்கி நின்றோம். ஒன்றிரண்டு லேசான தூறல் எங்கள் மீது விழுந்தது. ஆர்வத்தில் ஒரு சிகரெட்டை சீனிவாசன் பற்ற வைத்தார். பனியின் புகைபோல அவரது மூச்சு வெளியில் சென்றுகொண்டிருந்தது. கடந்து சென்ற ஒன்றிரண்டு வாகனங்களின் ஹெட் லைட் வெளிச்சம் கண் கூசச் செய்தது. ஒரு வாகனம் வேகத்தைக் குறைத்து, நாங்கள் ஏதேனும் சிக்கலில் இருக்கிறோமா என்று பார்த்துவிட்டு வேகமெடுத்தது. “இந்த ஏரியாவுல தான் எஸ்.ரா பங்கேற்ற சிறுகதை முகாமை டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள்” என்றான் ஜீவ கரிகாலன்.இலக்கியம் பற்றிப் பேசத் தகுந்த சூழல்தான். மின் விளக்குகள் ஒளிராத இயற்கையின் ஒளி மட்டுமே கசிந்துகொண்டிருந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் வாகனத்தைக் கிளப்பினோம்.

தூசி என்ற ஊரில் சாலை இரண்டாகப் பிரிந்தது. உத்தரமேரூர் செல்லும் பாதை இதுவாகத்தான் இருக்கும் என்று ஒரு திசையைத் தேர்ந்தெடுத்தோம். சாலையின் ஒரு பக்கத்தில் நாடகக் கூத்து நடந்து கொண்டிருந்தது. ஒன்றிரண்டு தூறல்கள் விழ கலைஞர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். படுத்துக்கொண்டும், உட்கார்ந்துகொண்டும் ஊர் மக்கள் ரசித்துக் கொண்டிருந்தனர். நாங்களும் சென்று உதிரி மனிதர்களாக ஆங்காங்கு நின்று கொண்டோம். தூறல் வலுக்கத் தொடங்கியது. காவலுக்கு நின்றிருந்த போலீசிடம் உடன் வந்த நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 


“நீங்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள்” என்று அவர்தான் சொல்லியிருக்கக் கூடும். வாகனம் வந்த வழியிலேயே திரும்பி வேறொரு சாலையில் நகரத் துவங்கியது.

பத்தாண்டுகளுக்கு முன்பு (ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்த சமயம் என்று நினைக்கிறேன்.) தூசு ஊரின் காவல்நிலையம், அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மக்களால் அடித்து நொறுக்கி சூறையாடப் பட்டதாம். ஒன்றரை மாதம் காவல் துறைக்கும், பொது மக்களுக்கும் இடையில் போராட்டம் வெடித்ததாம். தமிழக பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தியாக ஊர் இது. அதனைக் கடந்து செல்கிறோம். எல்லா ஊருக்கும் இதுபோன்ற கதை இருக்கிறது தானே! நாங்கள் தூசைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம்.

நடுநிசி நேரத்தில் உத்தரமேரூர் சென்று சேர்ந்தோம். சென்னையிலிருந்து திசைமாறி புறப்பட்ட போது குடவோலை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கிராமத்திற்குச் செல்கிறோம் என்றுதான் பேசிக்கொண்டார்கள். இரும்புக் கம்பிகளால் பூட்டி, பகல் நேரத்திலும் உள்ளே செல்ல அனுமதியற்ற கல்வெட்டுக்களை தூரத்திலிருந்து சீனிவாசனும், ரமேஷ் ரக்சனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஊரே ஓய்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பித்தர்கள் போல இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இரவு 2 மணிக்கு அங்கிருந்து எங்குச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், ஏதோ ஒரு விதமான இட்டிலி காஞ்சிபுரத்தில் கிடைக்குமென்று வாகனத்தை காஞ்சிபுரம் நோக்கி விட்டார்கள். வாய்விட்டே கூவினேன்: “அட பேமானிங்களா... ஒரு இட்டிலிய துன்றதுக்கா அவ்வளோ தொலவு போறீங்க...!?”

“யாரு சார் இந்தாளு... அங்குட்டு டோர தொறந்து வெளியில தூக்கி வீசுங்க...” என்றான் ரமேஷ் ரக்சன்.

உள்ளூர எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. என்றாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. வேல் கண்ணன் முன்னந்தலையை என்னுடைய தோள்களில் முட்டிக்கொண்டர். ஒன்றும் அறியாத பூனைபோலச் சாப்பாடு விஷயத்தில் ரசனையுள்ள ஜீவ கரிகாலன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். காஞ்சிபுரம் போய்ச் சேர்ந்தபோது அதிகாலை நான்கு மணி. ஊரெல்லாம் தூறிக்கொண்டிருந்தது. அதுவே அடர்த்தியான மழையாக மாறியது. ஏறக்குறைய ஒருவருடம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரில் ஓர் அறையெடுத்து டிப்ளமோ படிக்கும் சமயத்தில் தங்கி இருக்கிறேன். காலாற நடந்த இடங்கள் ஞாபகங்களைக் கிளறி விட்டது. மழை பெய்து கொண்டிருந்ததால் கீழே இறங்க முடியவில்லை. யாருமற்ற அதிகாலைச் சாலையில் ஏகாம்பரநாதர், காஞ்சி மடம், அம்மன் கோவில் என வாகனத்தில் சுற்றிக் கொண்டிருந்தோம். பேப்பர் போடும் சிறுவர்கள் வேலையில் மும்முரமாக இருந்தனர். வாகனத்திலேயே தூங்கலாம் என்று தான் நினைத்தோம். சாலையோரத்து நடைபாதையில் கூடத் தூங்குவதற்குப் பழக்கப்பட்டவர்கள் தான். மழையால் அறை எடுத்துத் தங்கவேண்டிய சூழல் அமைந்தது. தூங்கிக் கொண்டிருந்த விடுதியின் பணியாளரை எழுப்பி அறை எடுத்துத் தங்கினோம். பிரம்ம முகூர்த்தத்தில்தான் தூங்கச் சென்றோம்.

மாற்றுடை கூட இல்லை. கண்விழித்து முகம் கழுவிக்கொண்டு சீனிவாசனும், ஜீவ கரிகாலனும் அடுத்தகட்டத் திட்டம் தீட்ட உட்கார்ந்தார்கள். "அந்த ஸ்பெஷல் இட்டிலி அவ்வளோ சுலபமா கெடைக்காது. முன்னாடியே ஆர்டர் பண்ணனும்... இப்போ என்ன செய்யலாம்..." என்று பேசிக்கொண்டார்கள்.

"ஹூம்... ஒரு நல்ல கூரப் பொடவ எடுக்கலாம்... என்னோட முகூர்த்தத்துக்கு உதவும்..." என்றேன்.

"இப்பவே எடுத்தா பொடவ மக்கிப் போயிடும் சார்... அதுக்காண்டி இன்னொரு வாட்டி வரலாஞ்சார்..." என்றான் ரமேஷ் ரக்ஷன்.

வேல்கண்ணன் தலையில் அடித்துக் கொண்டார். நான்தான் பக்கத்திலிருந்து கண்ணனைத் தடவிக் கொடுத்தேன். ஜி. குப்புசாமியிடமிருந்து சீனிவாசனுக்கு செல்பேசியில் அழைப்பு வந்தது. திருவண்ணாமலை சென்றிருந்த போதே அவரைச் சென்று சந்தித்திருக்க வேண்டும். முடியாமல் போனது.

"உங்கள பாக்குறதுக்குத் தான் வந்துட்டு இருந்தோம்... வழியில கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சி அதான் காஞ்சிபுரத்தில் ரூம் எடுத்துத் தங்கினோம்... உங்கள பாக்குறதுக்கு வந்தாலே எதாச்சும் பிரச்னையில மாட்டிக்கிறோம்..." என்று சீனிவாசன் சொல்ல, குழந்தை மனம் படைத்த குப்புசாமி "ஐயையோ..." என்று எதிர்முனையில் அலறினார்.

"அய்யோ... குப்புசாமி... இந்த ஃபிராடுங்கள நீங்க நம்பாதிங்க... வாயத் தொறந்தா புளுகு தான்... இன்டர்நேஷனல் லிட்டரேச்சர் படிக்குற உங்கக்கிட்டையே - இன்டர்நேஷால் கிரிமினல்தனம் பண்ணுவாங்க... நீங்க நம்பாதிங்க ப்ளீஸ்... நேத்து ராத்திரில இருந்து ஒண்ணு சொல்லிட்டு ஒண்ணு செஞ்சிட்டு இருக்காங்க... நீங்க வேணும்னா பாருங்க, உங்கள பார்க்க வரேன்னு சொல்லிட்டு திருப்பதி - திருத்தனின்னு எங்கயாச்சும் போயிடுவாங்க..." என்றேன்.

"வேல் கண்ணன், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி செம ஸ்பெஷல்... சாப்புட்டுட்டு சென்னைக்குப் போயிடுவோம்..." என்றார் சீனிவாசன்.

"காஞ்சிபுரம் இட்டிலி மாதிரியா..." என்றார் வேல்கண்ணன்.

“சிறப்பான கேள்வி கேட்டிங்க... வேற யாராச்சும் இருந்தா நான்டுக்குட்டு சாவாங்க...” என்றேன் மும்மூத்ர்திகளான ஜீவச் சீனி ரக்சனைப் பார்த்து.

"ஜார்...ஊம்-னு சொல்லுங்க சார் இவங்கள கொன்டு(னு) போட்டுடுதேன்..."

"சீனிவாசன் ஊம்(பு)ன்னு சொல்லுதெக்கு, எங்கள ஏம்ப்ளே கொல்லுதே..." என்றேன்.

"சார்... உங்களுக்காண்டி தான்ஜர் பாக்குதேன்..." - ரக்ஷன்.

"நீ மூட்றா எங் கூரப்பொடவ... கொல்லுதானாம் கொல்லுதான்... நீ ரைட்டர்னு சொல்லுதெக்கு ரைட் ஹேன்ட் இருக்காது பாத்துக்குடும்..." என்றதும் முஷ்டியை நெருக்கிக்கொண்டு என்னை அடிக்க வந்தான் ரக்ஷன்.

"சரி சரி... வாங்க சீக்கிரமா எங்கயாச்சும் டிபன் சாப்ட்டுட்டு மதியத்துக்குள்ள ஸ்டார் பிரியாணி சாப்பிட ஆம்பூர் ரீச் பண்ணிடலாம்" என்றார் சீனிவாசன். "ஆமாம் சார்... கண்டிப்பா... செம...ச்சே... சார்..." என்றான் ஜீவ கரிகாலன்.

பத்துமணி வாக்கில் இவர்களது மாஸ்டர் ப்ளான் படி - டிபனை முடித்துவிட்டு - வாகனத்தைக் கிளப்பினார்கள். வேலூர் நெடுஞ்சாலையைக் கேட்டுக்கொண்டே கிளம்பினார்கள். ஜி.குப்புசாமி மறுபடியும் அழைத்தார். "உங்கள பாக்குறதுக்கு அப்பவே கெளம்பிட்டோம்... டயர் பஞ்சர்... பக்கதுல பஞ்சர் கடை எதுவும் இல்லை..." என்று சீனிவாசன் புளுகிக் கொண்டிருந்தார். என்னுடைய வாயை ரமேஷ் ரக்ஷன் அழுத்திப் பிடிக்க, பேச முடியாதபடி ஜீவ கரிகாலன் பார்த்துக்கொண்டான். "கிருஷ்ண பிரபு எங்க... அவர்கிட்ட ஃபோனக் கொடுங்க..." என்று குப்புசாமி கேட்டிருக்க வேண்டும்.

"கிபி-க்கு நைட் எல்லாம் தூக்கம் இல்ல... அதனால அசந்து கார்ல தூங்கிட்டு இருக்காரு. ஏசி போட்டுட்டு நாங்க வெளிய நின்னுட்டு பேசுறோம்..." என்று சீனிவாசன் சொன்னது என்னுடைய காதில் தெளிவாகக் கேட்டது.

குப்புசாமியும் சமாதானம் ஆகியிருக்க வேண்டும். செல்போனை அணைத்துவிட்டு சீனிவாசன் கேட்டார்: "மதியத்துக்குள்ள ஸ்டார் பிரியாணி சாப்பிட ஆம்பூர் ரீச் பண்ணிடலாம் இல்ல..."

"கண்டிப்பாங்க சார்... செம...ச்சே... சார்... ஐடியா சார்" என்றான் ஜீவ கரிகாலன்.

"ங்கெப்பா... இவன் நான்வெஜ்ஜே சாப்பிடமாட்டான். இவன் ஏன் இவ்வளோ ஆர்வமா இருக்குறான் கண்ணன்..." என்றேன்.

ஆற்றாமையுடன் வேறுபக்கதிற்கு முகத்தைத் திருப்பிக்கொண்டார் வேல்கண்ணன். "சீனிவாசன் நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்க... ஒரு ரகசியப் பயணமாவே இருக்குதே." என்றேன்.

"சார்... காலைல இட்லி சாப்புட்டது உப்புசமாவே இருக்குது." என்றான் ரக்சன். "எனக்கும் தான்" என்றான் ஜீவ கரிகாலன். "எனக்குக்கூட அப்படித்தான் இருக்குது, மதியம் சாப்பிட வேண்டாம். நேரா வீட்டுக்குப் போயிடலாம்" என்றார் சீனிவாசன்.

எனக்குத் தலையே சுற்றியது. "கரிகாலன், காஞ்சிபுரத்துல ஒரு ஆர்டிஸ்ட் இருக்காரு. ஏறக்குறைய 10, 0000 பெயிண்டிங்க்ஸ் அவர்கிட்ட இருக்கு... பார்க்கப் போகலாமா... ஆனா, சீக்கிரம் எல்லாம் திரும்ப முடியாது." என்று கேட்டார் சீனிவாசன்.

"சரிங்க சார்..." என்று கரிகாலன் சொன்னதற்கு, "சார் இன்டரஸ்டிங்கா எதாச்சும் பண்ணலாம் சார்..." என்று ரக்ஷன் சொல்ல, அதுபாட்டுக்கு வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

திருவண்ணாமலை - ஆரணி சாலையில் ஓடிக்கொண்டிருந்த வண்டி பெரியார் நகர் மேம்பாலத்தைக் கடந்து ஒரு தெருவில் திரும்பியது. வலப்புறம், இடப்புறம் என்று திரும்பி ஒரு வீதியில் திரும்பும் சமயம் ஜி. குப்புசாமி தெருவில் நின்றுகொண்டிருந்தார். மணி சரியாக 12 அடித்தது. "உங்கள பாக்குறதுக்கு வரணும்னா எவ்வளோ கஷ்டப்பட வேண்டியிருக்குது... பஞ்சர் போட்டுட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிட்டு..." என்று அலுத்துக்கொண்டார் சீனிவாசன்.

"சரி சரி... ரெஸ்ட் எடுத்துட்டு நிதானமா போங்க..." என்று குப்புசாமி சொல்லவும், "ஐயையோ பத்து நிமிஷத்துக்கு மேல நாங்க இங்க இருக்க முடியாது. இப்பக் கெளம்பனாதான் மெட்ராஸ் போக முடியும்... நெறைய வேளை இருக்கு... அதனால வெறும் டீ போதும்." என்றார் சீனிவாசன்.

"ஒரு அரைமணி நேரம் கொடுங்க... பிரியாணி ரெடி பண்ணிட்றேன்." என்றார் மிசர்ஸ் குப்புசாமி.

எல்லோரும் வேண்டாம் என்றார்கள். "மிசர்ஸ் குப்புசாமி... நீங்க ஒன் அவர் கூட எடுத்துக்கோங்க... நான் பிரியாணி சப்டுட்டுத்தான் இங்கிருந்து கெளம்பலாம்னு இருக்கேன்" என்றதும், அவர் மகிழ்வுடன் சமையலறை நோக்கிச் சென்றார். பழிவாங்கிய திருப்தியில் இழுத்து இழுத்து நெஞ்சுக்கூட்டை உயர்த்தி மும்மூர்த்திகளைப் பார்த்து நான் மூச்சு விட்டுக்கொண்டிருந்தேன். அதுவரை காலச்சுவடு வெளியீட்டில் வர இருக்கும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வர இருக்கும் ஓரான் பாமுக்கின் 'வெண்ணிறக் கோட்டை'பற்றியும், இன்னும் ஓரிரு வருடங்களில் நோபல் பரிசு இவருக்குத்தான் என்று குப்புசாமி ஆரூடம் சொல்லும் ஒரு எழுத்தாளரின் அடுத்த மொழியாக்க முயற்சி பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு குப்புசாமிக்கு டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பினோம். பழைய ஹிந்திப் பாடல்களை செல்பேசியில் ஒலிக்கவிட்டவாறு பயணம் சென்று கொண்டிருந்தது. சென்னைக்கு வந்து சேரும் வரை "இலக்கிய படைப்பின் மீது வாசகப் பார்வை" என்ற தலைப்பில் ஒருவருக்கொருவர் சண்டைக்கு இழுத்துக்கொண்டே வந்து சேர்ந்தோம்.

இடையிடையே "ஜார்...ஊம்-னு சொல்லுங்க சார் இவங்கள கொன்டு(னு) போட்டுடுதேன்..." என்று சொல்லிக் கொண்டிருந்தான் ரமேஷ் ரக்சன்.

"சீனிவாசன் ஊம்(பு)ன்னு சொல்லுதெக்கு, எங்கள ஏம்ப்ளே கொல்லுதே..." என்று நானும் சளைக்காமல் சொல்லிக்கொண்டு வந்தேன். 

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்த இடமென்று எதுவும் இல்லை. அந்த வரிசையில் பித்தர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். மனிதர்கள் கடக்கத்தானே சாலைகள் முடிவில்லாமல் நீண்டு கிடக்கிறது. நிலப்பரப்பின் நீட்சியில் காலம் உருண்டோடிக்கொண்டே இருக்கிறது. பொழுதுகளுக்கு ஏற்பப் பாதைகளும் உரு மாறிக்கொண்டே இருக்கிறது. பார்த்துச் சளிக்கக் கண்கள் தான் போதுமற்றதாக இருக்கிறது. காலத்தின் ரேகைகளில் பித்தர்களுக்கும் இடமுண்டு அல்லவா. இவர்கள் காரியக் கிறுக்குகள். திசையற்ற பயணத்தைக் கூட ஏதேனும் திசைநோக்கி நகர்த்தத் தெரிந்தவர்கள். அந்த நம்பிக்கையில்தான் இவர்களுடன் சேர்ந்து பயணிக்கிறேன்.

சென்னைப் புறநகரின் ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கிக்கொண்டு நண்பர்களுக்கு "டா.... டா...." காண்பித்தேன்.

1..2..3..4.. நண்பர்கள் உட்கார்ந்திருந்த வெள்ளைநிறக் கார் சென்னை சாலையின் நெருக்கடியில் மெதுவாக ஊர்ந்தது. பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இரு திசைகளிலும் வாகனங்கள் இரைச்சலுடன் நகர்ந்து கொண்டிருந்தன. அதில் ஒருசிலர் திசைமாறித்தானே சென்றுகொண்டிருப்பர்கள் என்று தோன்றியது. நண்பர்களின் முகங்கள் எண்ணத்தில் நிழலாடின. உள்ளூர மகிழ்ந்து எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன்.

புகைப்பட உதவி: அன்புத் தம்பிகள் - ரமேஷ் ரக்ஷன் மற்றும் பிரசன்னா (குப்புசாமியின் மகன்)

1 comment:

  1. " ஜார்..... பொறாமையா இருக்குன் ஜார் !.

    விடிய விடிய சுத்திரிக்கிய....அத

    ரசனையா சொல்லிருக்கீய...

    இப்படி ஒரு கூட்டளிகளோட போக

    கொடுத்துவச்சிருக்குனும் ஜார்!"

    ReplyDelete