Wednesday, October 8, 2014

பெருமாள்முருகன் - கேவலமான எழுத்தாளர்

பொக்கிஷம் புத்தக அங்காடியில் ஏற்பாடாகியிருந்த பெருமாள்முருகனின் மூன்று நாவல்களான “மாதொருபாகன், ஆளண்டாப் பட்சி, பூக்குழி” - மூன்று நாவல்களின் கலந்துரையாடல் நிகழ்வைத் தொகுத்து வழங்க மட்டுமே முதலில் நண்பர் தமிழ்மகன் கேட்டிருந்தார். போலவே, சில நிமிட வரவேற்புரையும் கொடுக்கலாம் என்று யோசித்து வைத்திருந்தோம். எதிர்பாராத விதமாக, “பூக்குழி” பற்றிப் பேச ஒத்துக்கொண்டிருந்த கவிஞர் ஒருவரால் நிகழ்விற்கு வரமுடியாத சூழ்நிலை. ஆகவே, அது பற்றியும் நானே பேச வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

“மாதொருபாகன்” குறித்துப் பேச வந்திருந்த எழுத்தாளர் சுரேஷ் கண்ணனுடனும், “ஆளண்டாப் பட்சி” பற்றி பேச வந்திருந்த கவிஞர் வேல் கண்ணனுடனும் அளவலாவிக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயமோகனைப் பற்றிய பேச்சு வந்தது.

“அது ஏன்னே தெரியல... ஜெயமோகன எல்லாரும் அசால்ட் பண்றதுக்குத் தயங்கறதே இல்ல... எதுக்கெடுத்தாலும் அவரைத் திட்றாங்க...” என்றார்.

“ஏங்க... அவர திட்டாம இருந்தாத் தான் ஆச்சர்யம்... நானும் கூட அப்பப்ப ஜெயமோகன திட்டி எதையாச்சும் ஸ்டேடஸ் போடுறேன்... அவர் பேசுகிற விஷயங்களும் அப்படி இருக்கிறது.” என்றேன்.

“அதெல்லாம் தப்புங்க கிருஷ்ணா... இது என்ன மாதிரியான மனநிலை...?” என்று சுக கேட்டார்.

ஞாயமான கேள்விதான். கொஞ்சம் போல சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். முதலில் “ஆளண்டாப் பட்சி”யைக் குறித்து வேல்கண்ணன் பேசும் பொழுது “கேவலம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இந்நாவலுக்குச் சமந்தமில்லாத வார்த்தை தான், இருப்பினும் கேவலம் என்ற வார்த்தையைத் தவறாகவே நிறைய இடங்களில் பயன்படுத்துகிறோம் என்கிற தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதற்கடுத்து பேச வந்த சுரேஷ்கண்ணன் “பெருமாள்முருகனை தொடர்ந்து மார்கெட்டிங் செய்கிறார் கிருஷ்ணபிரபு” என்று ஆரம்பித்தார். “ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தெவ்யெஸ்கி” என்று எஸ்ரா மூன்று மணிநேரம் உரையாற்றினால் – அது இலக்கிய சிறப்புரை. அதையே சாமானியன் செய்தால் “மார்கெட்டிங்கா?” எனக்குப் புரியவில்லை நண்பர்களே!.

இடைமறித்து நான் சொன்னேன்: “மார்கெட்டிங்னு மட்டுமே சொல்லாதீங்க... பி.ஆர்.ஓ-ன்னும் சேர்த்துச் சொல்லுங்க. ஒரு கௌறதையா இருக்குமில்ல.”

எனினும் மாதொருபாகன் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சுக, “இந்தப் புத்தகத்தை எல்லோரும் அவசியம் படிக்கணும். நாவலின் உள்ளடக்கத்தைப் பற்றிய விவாதத்தையும் நம் இலக்கிய சூழலில் முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் பற்றிப் பேசாமல் இருப்பது ஞாயமே இல்லை.” என்று, சில சினிமாக்களைத் தொடர்புபடுத்தியும், ஒப்புமை செய்தும் சுவாரஸ்யமாகவே தந்து கருத்துக்களை முன்வைத்துப் பேசினார்.


ஒரு கவிஞரின் அளவிற்கோ, ஓர் எழுத்தாளரின் அளவிற்கோ இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசுவதற்கு வேண்டிய சரக்கு நம்மிடம் (என்னிடம்) இல்லை என்பது ஒரு விஷயம். அடிப்படையில் “மார்கெட்டிங் ப்ரஃபஷனல்” என்பதால் எதைப் பேசினாலும் உரையானது வியாபாரத் தன்மையில் அமைந்துவிடுவது இரண்டாவது விஷயம். மூன்றாவதாக நான் எங்கிருந்தாலும் – அதில் எனக்கும் பங்கிருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் “கேணி கிருஷ்ண பிரபு” என்றும், சிலர் “காலச்சுவடு கிருஷ்ணபிரபு” என்றும் அழைப்பதைக் கேட்கும்பொழுது திகிலடைந்துப் போகிறேன். “நம்ம காத்து மாதிரி எல்லா எடத்துலயும் இருக்கறதுண்டு...” என்றாலும் யார் கேட்கிறார்கள்?

சினிமாவில் நிகில்முருகனைப் போல, இலக்கியத்தில் நாமும் ஒரு பொசிஷனை அடையவேண்டும் என்பதுதான் நம்முடைய (என்னுடைய) திட்டம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். பெருமாள்முருகனிடமிருந்து நிகில்முருகனுக்கு என்பதாக எமது (எனது) இலக்கியப் பயணம் அமைய வேண்டும். அதுபோல அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய (எம்முடைய) திட்டமும் கூட. சரி போகட்டும்...

“பூக்குழி”யைக் குறித்துப் பேச எழுந்தபோது இப்படித்தான் எனது பேச்சை ஆரம்பித்தேன்:

“நான் பெருமள்முருகனைப் பற்றி நிறைய பேசுவதாகவும், மார்கெட்டிங் செய்வதாகவும் குறைபட்டுக் கொள்கிறார்கள். முருகன் எழுத ஆரம்பித்து – எழுதிக் கொண்டிருக்கும் இந்த இருபது வருடத்தில் நிறையவே அவரைப் பற்றிப் பேசி இருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. (காலச்சுவடு பதிப்பகத்தாரின் புத்தக வெளியீடு தவிர்த்த) பெருமாள் முருகனின் நாவல்கள் குறித்து சென்னையில் நடக்கும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முருகன் குறித்து நான் நிறையவே பேசுவதாகச் சொல்கிறார்கள். ‘பெருமாள்முருகன் ஒரு கேவலமான எழுத்தாளர்’ என்பதால் அவரைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? நடிகர் திலகம் சிவாஜியைப் பற்றியும், நாட்டியப் பேரொளி பத்மினியைப் பற்றியும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தனது கட்டுரையொன்றில் எழுதியிருந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, பூக்குழி நாவலைப் பற்றிக் குறைந்த தகவகளைப் பகிர்வதுடன், ஃபேன்ட்றி என்ற வட இந்தியத் திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி ஒருசில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு திரும்பிச் செல்லலாம்” என்று நினைக்கிறன். (இந்த விஷயங்களை மிகச் சுருக்கமாகவே பேசினேன்.)

கடைசியாக “பூக்குழி, ஃபேன்ட்றி” போன்ற படைப்புகள் சாதிய அடுக்குகளின் கட்டுமான நிழலில், சாதிய வட்டத்தில் மௌனித்து வாழக் கூடிய என் போன்றவர்களின் மீது எறியப்படும் கற்கள். படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் வீசி எறியக்கூடிய இதுபோன்ற கலாப்பூர்வமான கற்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் முற்போக்கானவர்களைக் காட்டிலும், சாதிய அடுக்கில் விருப்பமில்லாமல் வாழும் நம் போன்றவர்களிடம் (என் போன்றவர்களிடம்) நிச்சயமாக இருக்க வேண்டும்.

சிவாஜி – பத்மினி காதல் விவகாரத்தையும், உரையில் தொட்டுப்பேசிய இதர விஷயங்களையும் விரிவாக ஏதேனும் இதழுக்கு எழுதலாம் என்றிருப்பதால், இந்தப் பதிவில் பூசி மொழுகி எழுதியிருக்கிறேன். ஆகவே, முழுப் பதிவிற்கும் கொஞ்சம் காத்திருங்கள்.

பெருமாள்முருகனைக் “கேவலமான எழுத்தாளர்” என்று சொல்லியிருந்தேன் இல்லையா? “கேவலம்” என்றால் “முழுமை” என்று அர்த்தமாம். கவிஞர் வேல்கண்ணன் இதனைத் தன் பேச்சில் பகிர்ந்துகொண்டர். “கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, அகராதிப் பதிப்பு, ஆய்வுக் கட்டுரைகள், தொகுப்புகள், பதிப்புகள்” எனக் கிளைவிரித்து – எழுத்தின் எல்லா அம்சங்களையும் தொட்டுப் பயணிக்கும் எழுத்தாளனை – “முழுமையான எழுத்தாளார்” என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வதாம்!. இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆகணும்:

“பெருமாள்முருகன் கேவலமான மனிதரும் கூட”

குறிப்பு: பெருமாள்முருகனின் படைப்புகளைத் தொடர்ந்து கிருஷ்ணபிரபு பேசிக் கொண்டிருக்கிறான் என்கிறார்கள். வரலாறு முக்கியம் நண்பர்களே...! எழுத்தாளர் கண்மணி குணசேகரன் – தான் பங்கேற்கும் எல்லா கூட்டங்களிலும் “பெருமாள்முருகன்” என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருந்ததில்லை நண்பர்களே. ஆக, எனக்கு முன்னோடி “கண்மணி குணசேகரன்” என்பது குறிப்பிடத்தக்கது. கண்மணியின் குரல் என்னுடைய குரலிலிருந்து நிச்சயம் வித்தியாசப்படும். ஏனெனில் நானொரு “மார்கெட்டிங் ப்ரொபஷனல்”.

2 comments: