Wednesday, December 25, 2013

ரஜினிக்கு ஒரு கடிதம்

ரஜினிக்கு,

நலம் தானே நண்பரே? நீங்கள் “இவன் வேற மாதிரி” படத்துக்கு எழுதியிருந்த கடிதத்தை, பிரபல தமிழ் நாளிதழ்களின் திரைப்பட விளம்பரப் பகுதியில் பார்க்க நேர்ந்தது. (22/12/2013 – தினகரன் & தினத்தந்தி நாளிதழ்). தனிப்பட்ட மடல்களில் ஆயிரம் பிழைகள் இருக்கலாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

எழுத்துப் பிழைகள், ஒற்றுப் பிழைகள், வார்தை மற்றும் வாக்கியப் பிழைகளும் கூட இருக்கலாம். கடித எழுத்தில் இதெல்லாம் இயல்புதான். ஆனால், உங்களுடைய கடிதமானது பலகோடி ரசிகர்களின் கவனத்திற்குச் செல்லக் கூடிய ஒன்று. சமீப ஆண்டுகளில் திரைப்படங்களைப் பற்றி தாங்கள் எழுதிய பாராட்டுக் கடிதங்களை நாளிதழ் விளம்பரங்களிலும், திரைப்பட சுவரொட்டிகளிலும் நிறையவே பார்க்க முடிகிறது. எனினும் கவனம் கொண்டு வாசித்ததில்லை. ஆனால் மேற்படி குறிப்பிட்டுள்ள பிரபல நாளிதழ்களில் வெளியாகியிருந்த, “இவன் வேற மாதிரி” படத்தின் மடலை வாசிக்க நேர்ந்தது. அதில் சில விஷயங்கள் கண்ணில் பட்டன.

உதாரணமாக,

1. /-- படத்தை பார்த்தேன்--/ - என்ற வார்த்தைகளுக்கு இடையில் “ப்” சேர்ந்து “படத்தைப் பார்த்தேன்” என்பதாக வரவேண்டும்.

2. /--உட்ச்சகட்ட காட்ச்சிகள் பிரமிக்க வைக்கிறது--/ - என்ற வாக்கியத்திலும் பிழைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. உச்சகட்ட காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது என்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் “பிரம்மிக்க வைக்கின்றன” என்றிருந்தால் இன்னும் கூட நன்றாக இருக்குமோ என்ற எண்ணமும் எழுகிறது.

3. போலவே, /-- இந்த படம் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்--/ என்ற வாக்கியமும் தங்களது மடலின் கடைசி வரியாக அமைகிறது. இதுவும் கொஞ்சம் போல உதைக்கக் கூடிய வாக்கிய அமைப்புதான். “இந்தப் படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்” அல்லது “இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்பது போல வாக்கியத்தை அமைத்திருந்தால் கோர்வையாகவும் அழகாகவும் இருந்திருக்கும்.

“இவன் இலக்கிய மாணவனாக இருப்பானோ?”, “மொழி ஆர்வலனோ?” என்பது போன்ற எண்ணங்கள் உங்களுக்கு எழலாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வாசிப்பதில் மிகுந்த நாட்டம் உள்ளவன். அந்த வகையில் தான் தங்களின் கடிதத்தையும் வாசித்தேன். அதிலுள்ள ஒன்றிரண்டு அபிப்ராயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அவ்வளவே.

உங்களுடைய “Letter Pad” –ல் கைப்பட எழுதித் தரும் திரைப்படங்களைப் பற்றிய பாராட்டு வாசகங்கள் - ஸ்லோகங்கள் போல நாளிதழ்களிலும், திரைப்பட சுவரொட்டிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே கொஞ்சம் போல கவனம் எடுத்து எச்சரிக்கையுடன் எழுதித் தரலாமே. முடிந்தால் ஓர் உதவியாளரின் துணைகொண்டு, கடிதத்திலுள்ள பிழைகளைத் திருத்தி உரிய நபர்களுக்கு அனுப்பி வைக்கலாமே. ஓர் அரங்கக் கலைஞனாக இருந்தவருக்கு, மேடை நாடக நடிகராக இருந்தவருக்கு பிழையற்ற மொழியின் முக்கியத்துவம் பற்றி சொல்லித் தெறிய வேண்டியது இல்லையே.

மடலின் வழியே உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே. இக்கடிதத்தை நேர்மறையாக அணுகி, நட்புடன் சகித்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடனும் நட்புடனும்,
கிருஷ்ணபிரபு

7 comments:

  1. தமிழராக இருந்தால் தமிழ் மொழியின் பெருமை தெரியும்.............

    ReplyDelete
  2. வணக்கம் கி.பி.

    'பிரமிக்க' என்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்போது சிறிது கவனமாக செயல்படவும்.

    தாங்களும் இதை நேர்மறையாக அணுகுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

    ReplyDelete
  3. @Karthikeyan L:

    You are not right. Language is not anyone's property.

    ReplyDelete
  4. @kaarthikeyan krishnan:

    You are absolutely right karthi... I note it down... Thanks a lot...

    ReplyDelete
  5. "தெறிய" _ -"தெரிய"
    நீங்களும் கொஞ்சம் கவனமாயிருந்திருக்கலாம்

    ReplyDelete
  6. " முக்கியத்துவம் பற்றி சொல்லித் தெறிய வேண்டியது இல்லையே." என்பதில் கூட ""தெரிய"" என்பது தான் சரி என்று நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  7. மொழியின் முக்கியத்துவம் பற்றி சொல்லித் ""தெறிய"" வேண்டியது இல்லையே. என்பதில் கூட ''தெரிய'' என்பது தான் சரி என்று நான் கருதுகிறேன்.

    ReplyDelete