Friday, January 25, 2013

தி மியூசிக் ஸ்கூல் – சென்னை


சாதரணமாகத் தான் உள்ளே நுழைந்தேன். வெளியில் வரும்பொழுது ஸ்டாலில் அமர்ந்திருந்த பெண்மணி சிரித்தார். ஒரு எதிர் சிரிப்பு சிரித்தேன். அப்படியே, நைசாகக் கழண்டு கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன்.
“நீங்க என்ன பண்றிங்க?” என்றார்.

“என்ன செய்யறதுன்னு தெரியாமத் தானே இங்க சுத்திட்டு இருக்கேன்!” என்பதாக மனதில் நினைத்துக் கொண்டு, “எப்பவாச்சும் டயம் கெடச்சா ஆன்லைன் மேகசின்ல எழுதுவேன்...” என்றேன். (பெருமைக்கு பீத்திக்கின கதையாக...)


“எங்க ஊட்டுக்காரரும் ரைட்டர் தான்...” என்றார் அந்தப் பெண்மணி.


“(அடிசக்க...) இன்னாத்தபத்தி எழுதுவாரு உங்க ஊட்டுக்காறாரு?” என்றேன்.


“சினிமாவ பத்தி விகடன்ல எழுதுவாரு” என்றதும், அப்படியா என்று புருவத்தை உயர்த்தினேன். (சினிமா விமர்சனம் பத்தி நம்ம ஏன் படிக்கப் போறோம்? அதுவும் விகடன்ல...) 


“பாருங்க சிஸ்டர் எனக்கு சினிமா அறிவே கெடையாது. அதப்பத்தி அதிகமா தெரிஞ்சிக்கவும் பிரியம் காட்டினது இல்ல... அதனால உங்க ஊட்டுக்காறாரு பேர சொல்லுங்க... தெரியுதான்னு பாக்குறேன்...” என்றேன். (‘அவரு பேற என் வாயால எப்படி சொல்றது’ ன்னு அந்த சிஸ்டர் கேட்பார் என்றுதான் நினைத்தேன்.)


“செழியன்...” என்றார். தலையில் கொட்டியதுபோல தடவிக் கொண்டேன்.


“யாரு...? பரதேசி படத்துல கேமரா புடிக்கிறாரே அவரா?” என்றேன்.


“உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.


“NFSC-ல அமுதனின் டாக்குமெட்ரி பற்றி பேசிய போதும், அய்யப்ப மாதவனின் கவிதை நூல் குறித்து ஒரு முறை பேசிய பொழுதும் அவரை கடைசி இருக்கையில் இருந்தவாறு பார்த்திருக்கிறேன்.” என்றேன்.


“அடடே... உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சேன்...” என்றார் சுவாரஸ்யம் குறைந்தவராக.


“சரி போகட்டும்... அவரு கேமரா புடிக்கிறாரு... நீங்க மியூசிக்கா?” என்றேன்.


“அவரு கீ-போர்டுல 8th கிரேடு முடிச்சி இருக்காரு... அவரோடது தான் இந்த மியூசிக் ஸ்கூல். நானும் கூட இருக்கேன்...” என்றார். ஒரு வாழ்க்கைத் துணை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதற்கு மேல் திருமதி செழியனே பேசுகிறார்:


இருந்த இடத்தில் இருந்தபடியே தொலைதூர வகுப்பில் மேற்கத்திய இசையைப் படிக்க எங்களுடைய நிறுவனம் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஏறக்குறைய தொலைதூர இசைப் பயிற்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதற்கென தனியாக சிலபஸ் எல்லாம் இருக்கிறது. கற்றுக்கொள்ள ஆர்வம் தான் வேண்டும். 


“The Music School” - ஒரு முழுமையான மேற்கத்திய இசை பள்ளி. நம் எல்லோருக்கும் இசையைக் கற்றுக்கொள்ளும் விருப்பம் இருக்கிறது. ஆனால் எத்தனை பேருக்கு விரும்பியவுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது? எனவே விரும்பியவுடன் உங்கள் வீட்டில் இருந்தே இசையின் அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான பாடத்திட்டங்களுடன் “The Music School” துவங்கப்பட்டுள்ளது.


மேற்கத்திய இசைக்குறிப்புகளை ( Notations) படிக்கவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்வதற்கு வசதியாக இதன் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இசைப்பயிற்சியில் நீங்கள் மாணவராகச் சேர்வதன் மூலம் மேற்கத்திய இசையின் அடிப்படைகளை முழுமையாகக் கற்றுக்கொண்டு keyboard வாசிக்கும் திறமையைப் பெற முடியும். நீங்களோ உங்கள் குழந்தைகளோ அல்லது உங்கள் நண்பர்களோ இசை கற்க விரும்பினால் The Music School உங்களின் அற்புதமான தேர்வாக இருக்கும். 


திருமதி செழியன் சொல்லுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இணையம் வந்த பிறகு, இருந்த இடத்தில் இருந்தவாறு எல்லாவற்றையும் வரவழைக்க முடியும் என்னும் பொழுது இசையை மட்டும் வரவழைக்க இயலாதா என்ன? விருப்பம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். 


ஆனால் ஒன்று, இசையைக் கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று செழியனிடம் சேர்ந்துவிட்டு அசிஸ்டன்ட் கேமராமேனாக போஸ்டிங் கேட்கக் கூடாது. போலவே அவருடைய கேமரா கண்களால் படம் பிடிக்கப்பட்டு திரைக்கு வரும் புதுப்படங்களின் ஓசி டிக்கட்டையும் கேட்கக்கூடாது. இசைப்பள்ளியானது விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்க. மேலும் விவரங்களுக்கு:


The Music School
19/9, 
பிருந்தாவன் தெரு, 
மேற்கு மாம்பலம், 
சென்னை 600 033.
மின்னஞ்சல் : master@themusicschool.co.in
 தொலைபேசி : +91 - 94457 62191
http://www.themusicschool.co.in
FaceBook: The Music School

 ஸ்டாலை விட்டுப் புறப்படும் பொழுது வருகைப் பதிவேட்டில் பெயரையும், மின்னஞ்சலையும் எழுதச் சொன்னார். போலவே எழுதினேன்.

“எங்க வீட்டுக்காரருக்கும் உங்களுக்கும் தெரிஞ்ச பொது நண்பர் யாராச்சும் இருக்கணுமே?” என்றார்.

“சினிமாத் துறையில எனக்கு யாரையும் தெரியாதுங்களே சிஸ்டர்! அதுவுமில்லாம... அவங்க கூட பத்து நிமிஷம் பேசினா ஒரு சின்ன சிரிப்பு மட்டும் தான் பதிலா இருக்கும். பின்ன எப்படி தெரிஞ்சி வச்சிக்கிறது” என்றேன்.  


“நீங்க சொல்றதும் கரெக்ட் தான்...” என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. 

கவிஞர் அய்யப்பமாதவனும் செழியனும் ஒரே ஊர்க்காரர்கள் என்பது திடீரென ஞாபகம் வந்தது. ஆகவே கவிஞரின் பெயரைச் சொன்னேன். அவரும் குறித்துக் கொண்டார். ‘கவிஞருக்கு என்னை ஞாபகம் இருக்க வேண்டுமே!’ என்ற யோசனையில் அங்கிருந்து கிளம்பினேன்.

“செழியன் கூடத்தானே லக்ஷ்மன ராஜா இருக்காரு... அவரு பேர சொல்லி இருக்கணுமோ!” என்ற யோசனையும் வந்தது. ‘க்கும்... யாருக்கும் என்னைத் தெரியாது. இதுல யாரு பேரைச் சொல்லி எமாத்துனா என்ன வந்தது?’ என்று திருப்திப்படுத்திக் கொண்டு விசிலடித்தவாறு அடுத்த ஸ்டாலை நோக்கி நடந்து சென்றேன்.  

1 comment:

  1. திரைப்பட இசை கலைஞர் திரு செழியன் அறிமுகம் சிறப்பு.

    ReplyDelete