Tuesday, January 31, 2012

தரையில் இறங்கும் விமானங்கள்

“உங்கண்ணா ரொம்ப உயர்ந்த மனுஷர். அவர் மாதிரி ஒருத்தரைப் பார்க்கவே முடியாதோன்னு சில சமயம் எனக்குத் தோணும். இந்த மாதிரி ஒரு மனுஷனான்னு ஆச்சர்யமாக் கூட இருக்கும். அந்த மனசுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு அடிக்கடி கேட்டுப்பேன்”.

சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான் விஸ்வம். மனசை உலுக்கிவிட்ட மாதிரி இருந்தது. உடம்பு ஒரு தரம் சிலிர்த்தது. ‘என்ன இது! இதில் யார் உயரம் அதிகம்! இந்த மாதிரி பொறுக்கிப் பார்த்து ஸ்வாமி எப்படி ஒன்றாய்ப் போட்டது!’

“என்ன அப்படிப் பாக்கிறீங்க? நான் உண்மையைத் தான் சொல்றேன். அந்த மாதிரி ஒரு மனசு உங்கண்ணாவுக்கு. தப்பா எதையும் நினைக்கத் தெரியாது. யாரையும் தப்பா பார்க்கத் தெரியாது, கோபப்படத் தெரியாது, பிறத்தியார் கஷ்டத்தைப் பார்த்துண்டிருக்கத் தெரியாது. தன் கஷ்டத்தை வெளியே சொல்லிக்கத் தெரியாது. கல்மிஷமில்லாமல் அப்படி ஒரு மனசு யாருக்கும் இருக்க முடியாது. அந்த மாதிரி ஆயிரத்துல ஒருத்தர், லட்சத்துல ஒருத்தராவது இருப்பாரான்றது கூடச் சந்தேகம்தான்.

“ஆனா அவரென்னவோ நான் இடம் மாறி வந்துட்ட மாதிரி நினைச்சுக்கிறார். எங்கயோ கோபுரத்துல இருக்க வேண்டியள்ங்கிற மாதிரி பழகறார். அதுதான் எனக்குக் கஷ்டமா இருக்கு. அழகா இருந்துட்டா அதுக்கு இன்னொரு அழகுதான் சொந்தமாகனும்னு தானா நினைச்சுண்டு அவஸ்த்தைப்பட்டா என்ன பண்றது?”

தலையைக் குனிந்து கொண்டான் விஸ்வம். “ருக்மணி, பேசாதேயேன். என்னால் தாங்க முடியலையே?” என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால், பேசாமல் இருந்தான்.

“உங்காத்லேர்ந்து பெண் பார்த்துட்டுப் போனதுக்கப்புறம் எங்கப்பா வந்து எங்கிட்ட பேசினார். ‘அம்மா, பையன் கொஞ்சம் கருப்புதான். எஸ்.எஸ்.எல்.ஸி தான் படிச்சிருக்கான். சம்பளமும் அவ்வளவா இல்லே. ஆனா குணம் இருக்கே, அது ஒண்ணு போறும். நான் பார்த்து வளர்ந்த பையன். நீ என்ன சொல்றே?” ன்னு கேட்டார். ‘ஏம்பா? நிறம், படிப்பு, சம்பளம் இதெல்லாந்தான் தகுதியா? மனுஷா – மனுஷாளா? இருக்கறது பெரிய தகுதி இல்லையான்?’னு கேட்டேன். ஒரு தரம் அசந்து போன மாதிரி என்னைப் பார்த்தார். அப்புறம் பேசாமல் போயிட்டார்.”

“என்ன சொன்னீங்க? திருப்பிச் சொல்லுங்க” என்று குரல் நடுங்கக் கேட்டான் விஸ்வம்.

“ஆமாம் விஸ்வம். நமக்கு மனுஷத்தனம் மட்டும் இருந்தாப் போறும்னு நினைக்கிறேன். வேற என்ன தெரியணும்? மீதி எல்லாத்தையும் தெரிஞ்சுண்டு இது தெரியாமப் போனா என்ன பிரயோஜனம்? அன்னிக்கி ஒருநாள் நீங்க உங்க ஜமுனாவைப் பத்தி பேசினபோதே சொல்லனும்னு நினைச்சேன். ‘என்னால அவகூடச் சந்தோஷமா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு’ன்னு நீங்க சொன்னதைக் கேட்டபோதே சொல்லனும்னு நினைச்சேன். ஆனா அப்பா சொல்லியிருந்த அது அவ்வளவு சரியா இருந்திருக்காது. இப்ப சொல்றேன். நமக்கு யார் கூடவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்; சந்தோஷமா இருக்கத்தான் நாமெல்லாம் பிறந்திருக்கோம்னு. சிரிச்சுண்டே இருந்துட்டா சந்தோஷமா இருந்துடலாம்பார். அந்தச் சிரிப்பு மூஞ்சிலேயும், மனசுலேயும் வந்துட்டா சந்தோஷத்துக்குக் குறைச்சலே இல்லேம்பார். அவர்தான் எனக்குச் சிரிக்கக் கத்துக் கொடுத்தார். எதுக்கும் – எப்போதும் சிரிக்கனும்னு சொல்லிச் சொல்லிப் பயிற்சியாகவே மாத்திட்டார். உங்ககிட்ட அன்னிக்கி பேசிண்டிருந்த போது, இதையெல்லாம் சொல்லிடம்னு தோணித்து. ஆனா ஒரு சந்தர்ப்பம் வரும். சொல்லிக்கலாம்னு இருந்துட்டேன்.

“இப்ப அந்தச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. சொல்லிடறேன். நீங்களா ஒரு கனமான குண்டைத் தூக்கி வச்சுண்டு அவஸ்தைப் படறதைப் பார்த்தா கஷ்டமா இருக்கு. எதுக்கு இந்த அவஸ்தையெல்லாம்? கொஞ்சம் ஈஸியா இருந்துட்டுப் போனால் தான் என்ன? சாதாரணமா இருக்கறதுலே என்ன தப்பு சொல்லுங்கோ?” என்று கேட்டு நிறுத்தினாள் ருக்மணி.

அவன் பதில் சொல்லவில்லை. தலை குனிந்து மௌனமாய் நடந்து கொண்டிருந்தான். அவனிடமிருந்து பதில் வராது என்று புரிந்துகொண்ட ருக்மணி, மீண்டும் தானே பேசினாள்:

“எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறது நல்ல நினைப்புதான். ஆனா தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறோம்?. தெரிஞ்சுண்டவாள்லாம் என்ன பண்றா? நாம பண்ணறதைத்தான் பண்றா. அதுக்காக தெரிஞ்சுக்கறதே அவசியம் இல்லைன்னு சொல்லலை. தெரியாததனால தப்பு ஒன்னுமில்லேன்னுதான் சொல்ல வரேன். ‘அபத்தமா பேசறா’ன்னு அன்னிக்கி நீங்க ஜமுனாவைப் பத்தி சொன்னீங்களே, அதுக்குத்தான் சொல்றேன். அவளுக்கு உங்கள மாதிரி பேசத் தெரியாம இருக்கலாம். உங்களை மாதிரி அத்தனை படிச்சவளா இல்லாம இருக்கலாம். ஆனா அவளுக்கு உங்கமேல ஒரு பிரியம் இருக்கு. அளவு கடந்த பிரியம். அந்த அன்பைத் தவிர வேற என்ன வேணும் உங்களுக்கு? அது எவ்வளவு பெரிய விஷயம். மனுஷ உறவுகளை விட அதெல்லாம் பெருசா என்ன? உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சி எல்லாரையும் துருவிப் பாக்கிறதை நீங்க விட்டுடனும். ஒவ்வொருத்தரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துண்டு சந்தோஷமா இருக்கத் தெரியணும். அவாளையும் சந்தோஷப்படுத்தத் தெரியணும்...”

விஸ்வம் மனசு உருக மேலே நடக்காமல் அப்படியே நின்றான். எது எதுவோ புரிந்த மாதிரி இருந்தது. திடீரென்று எல்லாமே சந்தோஷமாகத் தெரிந்தது. தாங்க முடியாமல் கண் கலங்கிற்று. பேச்சு வராமல் அடைத்துக் கொண்டது.

“மன்னி...” என்ற ஒரே வார்த்தைதான் வெளியில் வந்தது.

தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி (அத்தியாயம் 22 - கடைசி மூன்று பக்கங்கள்)

1 comment:

  1. தரையில் இறங்கும் விமானங்கள்' நாவல் வாசித்ததும் அதைத் திருப்பிக் கொடுக்கும் முன் இந்த மூன்று பக்கங்களை நகலெடுத்துவிட்டு கொடுத்தது ஞாபகம் வந்தது.
    உலகில் அன்பைவிடப் பெரியவிசயம் ஒன்றுமில்லை என்பதை எளிமையாகச் சொல்லும் உரையாடல். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete